2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

அதிகார துஷ்பிரயோகமா?

Thipaan   / 2014 ஒக்டோபர் 23 , பி.ப. 09:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கே. சஞ்சயன்

ஹெல்பிங் ஹம்பாந்தோட்டை – இது 2005ஆம் ஆண்டு மிகவும் பரபரப்பை ஏற்படுத்திய ஒரு வழக்கு. அப்போது பிரதமராக இருந்த, இப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அரசியல் எதிர்காலம் சூனியமாகி விடுமோ என்ற கேள்வியை ஏற்படுத்தியிருந்தது அந்த வழக்கு.
அந்த வழக்கின் தீர்ப்புக் குறித்து, பொதுமக்களிடம் பகிரங்க மேடையில் வைத்து அண்மையில் மன்னிப்புக் கோரியிருக்கிறார் முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என்.சில்வா.

உங்களிடமும் முழு நாட்டிடமும் மன்னிப்புக் கோருகிறேன், என்னை மன்னித்து விடுங்கள். நான் அந்த நேரத்தில் தவறு செய்யாமல், இந்த மனிதரை (ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ) சிறையில் அடைத்திருந்தால்;, தண்டனை கொடுத்திருந்தால் இந்த நாடு பாரிய அழிவில் இருந்து மீண்டிருக்கும். அந்த தவறை புரிந்தமைக்காக முழு நாட்டு மக்களும் என்னை மன்னித்து விடுங்கள். இவ்வாறு தெரிவித்திருந்தார் சரத் என்.சில்வா.

1999ஆம் ஆண்டு தொடக்கம், 2009ஆம் ஆண்டு வரை 10 ஆண்டுகள் பிரதம நீதியரசர் பதவியில் இருந்தவர் சரத் என்.சில்வா. இந்தக் காலகட்டத்தில் பல்வேறு சர்ச்சைக்குரிய தீர்ப்புகளையும் வழங்கியிருந்தார். இப்போது அவர், தானே அளித்த ஒரு தீர்ப்புக் குறித்து வருத்தம் தெரிவித்துள்ளார், பொதுமன்னிப்புக் கோரியிருக்கிறார்.

ஆனால், அவரது பொதுமன்னிப்பு பலரிடையே தவறாக விளங்கிக் கொள்ளப்பட்டுள்ளது. ஊடகங்கள் சிலவும் கூட சரத் என். சில்வாவின் உரையைத் தவறாகவே புரிந்து கொண்டுள்ளன.

அதாவது, சரத் என் சில்வா தவறான தீர்ப்பு ஒன்றைத் தான் வழங்கி விட்டேன் என்று சாரப்படும் வகையில் குறிப்பிடவில்லை என்பது முக்கியமான விடயம். அவ்வாறு தவறான தீர்ப்பை அளித்து விட்டேன் என்று அவர் பொது மன்னிப்புக் கோரியிருப்பாரேயானால், அது மிக முக்கியமான விடயம் அவ்வாறு கூறும் தைரியம் அவருக்கு வரமாட்டாது.

ஏனென்றால், அது அவரது நீதித்துறை செயற்பாடுகள் அனைத்தையுமே கேள்விக்குட்படுத்துவதாக அமைந்து விடும். அவரது மாண்பையும் அது கெடுத்து விடும். இது உயர்நீதிமன்ற நீதியரசராக இருந்த அவருக்குத் தெரியாத ஒன்றல்ல. ஆனால், அவர் கூற வந்த விடயம் வேறு.
அது என்னவென்று விளங்கிக் கொண்டால் தான், அவர் எதற்காக பொது மன்னிப்புக் கோரினார் என்பதை விளங்கிக் கொள்ள முடியும். அதற்கு ஹெல்பிங் ஹம்பாந்தோட்டை வழக்குப் பற்றிய ஒரு சுருக்கமான அறிமுகம் அவசியம்.

2004ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம் 26ஆம் திகதி, இலங்கை உள்ளிட்ட ஆசிய நாடுகளைப் புரட்டிப் போட்டிருந்தது சுனாமி பேரனர்த்தம். இலங்கையில் ஆயிரக்கணக்கான உயிர்களைப் பலியெடுத்தும் பல்லாயிரக்கணக்கானோரை வீடுகளின்றி நிர்க்கதியாக்கியும் இயற்கை ஆடிய கோரத் தாண்டவம் அது. அந்த அனர்த்தத்தை அடுத்து, பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ, உள்நாட்டில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் உதவிகள் குவிந்தன.

அரசாங்கமும் உதவியது, அரசசார்பற்ற நிறுவனங்களும் உதவின. தனியார் நிறுவனங்களும் தனிநபர்களும் உதவ முன்வந்தனர்.

இந்த அனர்த்த நிவாரணப் பணியை எந்த இலாப நோக்கமும் இன்றி முன்னெடுத்தவர்களும் முன்னெடுத்த நிறுவனங்களும் இருந்தன. தமது இலாபத்துக்காக பயன்படுத்திக் கொண்டு, தம்மை வளப்படுத்திக் கொண்டு கொழுத்தவர்களும் உண்டு. அரசாங்கத்தின் சார்பிலும் பல்வேறு நிதியங்களின் ஊடாக நிதி சேகரிக்கப்பட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிகள் வழங்கப்பட்டன.

இவ்வாறு பிரதமர் நிவாரண நிதிக்குத் திரட்டப்பட்ட நிதி, ஹெல்பிங் ஹம்பாந்தோட்டை என்ற பெயரில் திறக்கப்பட்ட, தனிநபர் ஒருவரின் வங்கிக் கணக்குக்;கு மாற்றப்பட்டது தான், இந்த வழக்கின் அடிப்படை. அப்போது பிரதமராக இருந்தவர் இப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ. அவரே அந்த நிதியத்துக்குப் பொறுப்பாக இருந்தவர். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் குடும்பத்தினரின் பெயருக்கே இந்த நிதி மாற்றப்பட்டதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.

ஹெல்பிங் அம்பாந்தோட்டை என்ற பெயரிலான வங்கிக் கணக்குக்;கு மாற்றப்பட்ட பிரதமர் நிதியத்தின் பணம் மோசடி செய்யப்பட்டதாக, ஐ.தே.க. நாடாளுமன்ற உறுப்பினர் கபீர் காசிம் உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார்.

2005ஆம் ஆண்டு சந்திரிகா குமாரதுங்க, அடுத்த ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதற்குத் தயாராகி வந்த போது தான், இந்த வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அதற்கு முன்னதாகவே, சந்திரிகா குமாரதுங்கவுக்கு அடுத்ததாக, ஜனாதிபதித் தேர்தலில் தம்மை முன்னிறுத்துவதற்கான முயற்சிகளை இப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மேற்கொண்டிருந்தார்.

சிறிமாவோ பண்டாரநாயக்கவின் மறைவுக்குப் பின்னர், அடுத்த பிரதமராக, மைத்திரிபால சிறிசேனவை நியமிக்க சந்திரிகா குமாரதுங்க திட்டமிட்டிருந்தார். ஆனால், மைத்திரிபால சிறிசேனவையும் ஏனைய சில சுதந்திரக் கட்சிப் பிரமுகர்களையும் தனது கைக்குள் போட்டுக் கொண்ட மஹிந்த ராஜபக்ஷ, ஒருவாறு பிரதமர் பதவியை பெற்றுக் கொண்டார்.

அப்போதே அவர் ஜனாதிபதிப் பதவியைக் கைப்பற்றுவதற்காக, சந்திரிகா குமாரதுங்கவுடன் ஒரு பனிப்போரைத் தொடங்கியிருந்தார். அதற்குப் பின்னர், சுதந்திரக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் யார் என்ற கேள்வி எழுந்த போது, மஹிந்த ராஜபக்ஷவை முன்னிலைப்படுத்த முயற்சிகள் நடந்தன.

அப்போது ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் அங்கம் வகித்த ஜே.வி.பி., ஜாதிக ஹெல உறுமய ஆகிய கட்சிகளும், புலிகளை எப்படியும் தோற்கடிக்க வேண்டும் என்று கருதின. அதற்கு மஹிந்த ராஜபக்ஷவே பொருத்தமானவர் என்று அந்தக் கட்சிகளும் முடிவு செய்தன. இது சந்திரிகாவை வேறு எவரையும் ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்த முடியாத நிலைக்கு கொண்டு சென்றது. அந்தக் கட்டத்தில் தான், ஹெல்பிங் ஹம்பாந்தோட்டை வழக்கு முக்கியத்துவம் பெற்றது.

அந்த வழக்கின் தீர்ப்பு, மஹிந்த ராஜபக்ஷவுக்கு பாதகமாக அமைந்தால், அவர் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட முடியாத நிலை ஏற்படும் என்று உறுதியாக நம்பப்பட்டது. ஆனால், உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு, மஹிந்த ராஜபக்ஷவுக்கு சாதகமாக அமைந்தது. அதனால், அவரை ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்க வேண்டிய கட்டாயத்துக்கு சந்திரிகா தள்ளப்பட்டார். அதன் பின்னர் தான், தேர்தலில் வெற்றி பெற்று மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியானார்.

இந்த ஹெல்பிங் ஹம்பாந்தோட்டை வழக்கில், தான் அளித்த தீர்ப்பு தவறானது என்று முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என் சில்வா கூறவும் இல்லை, கூற வரவும் இல்லை. தான் சட்டத்தின் அடிப்படையிலேயே தீர்ப்பளித்தேன் என்று தான் அவர் இன்றும் கூறுகிறார்.

அந்த வழக்கில் மஹிந்த ராஜபக்ஷவை சிறையில் அடைத்திருந்தால், இன்று அவரால் ஜனாதிபதியாகியிருக்க முடியாது என்றும் அந்த தவறைச் செய்யாமல் விட்டதற்காகவே தான் பொது மன்னிப்புக் கோருவதாகவும் அவர் கூறியிருக்கிறார்.

அதாவது, மஹிந்த ராஜபக்ஷவை அன்று சிறையில் அடைக்காமல் விட்டதற்காகவே அவர் பொது மன்னிப்புக் கோரியிருக்கிறார். அவ்வாறு சிறையில் அடைக்கும் அளவுக்கு அவர் குற்றமிழைத்தவர் என்று சரத் என் சில்வா கூறவும் இல்லை. குற்றமிழைத்திருந்தவரைத் தான் காப்பாற்றியதாகவும் அவர் குறிப்பிடவில்லை.

அதேவேளை, ஹெல்பிங் ஹம்பாந்தோட்டை வழக்கு தொடுக்கப்பட்ட சட்டப்பிரிவுகளின் அடிப்படையில் தான், மஹிந்த ராஜபக்ஷவுக்கு சாதகமான முறையில் தீர்ப்பளிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது என்பதையும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதாவது, பிரதம நீதியரசர் சரத் என் சில்வா மூன்று ஆண்டுகளுக்கு முன்னதாக, அளித்திருந்த செவ்வி ஒன்றில், எந்த அடிப்படையில் தான் அந்த தீர்ப்பை அளிக்க நேரிட்டது என்பதை விரிவாக விளக்கியிருந்தார்.

அந்த வழக்கில் சட்டத்தின் படியே நாம் செயற்பட்டோம்.  மஹிந்த ராஜபக்ஷவுக்கு சாதகமாகத் தீர்ப்பு வழங்கப்பட்டிருக்காவிட்டால், அன்றே அவர் அரசியலில் இருந்து ஒதுங்கியிருப்பார். ஏனெனில், தேர்தலுக்கு முன்னர் அவரைக் கைது செய்திருந்தால் அவரை ஜனாதிபதி வேட்பாளராக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி நியமித்திருக்காது. அவர் நேரே சிறைக்குப் போயிருப்பார். ஜனாதிபதித் தேர்தலில் இருந்தும் விலகியிருப்பார்.

ஹெல்பிங் ஹம்பாந்தோட்டை விவகாரத்தில் பணம் எடுத்ததற்கான அத்தாட்சிகள் உள்ளன. அந்தப் பணம் விசேட கணக்கு ஒன்றில் இருந்தது. ஆனால், நிதி மோசடி தொடர்பாக உரிய அதிகாரிகள் வழக்கைத் தாக்கல் செய்யவில்லை. நாடாளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாசிம் தான் வழக்கைத் தாக்கல் செய்திருந்தார்.

குற்றவியல் தண்டனைக் கோவையின் கீழ், நல்லெண்ண அடிப்படையில் செய்யும் முறைப்பாட்டையே விசாரணைக்குட்படுத்த முடியும். கபீர் ஹாசிம் வழக்குத் தாக்கல் செய்திருந்தாலும் இந்த விடயத்தில்  அவருக்கு எந்தத் தொடர்பும் கிடையாது.  அவர் கேகாலையைச் சேர்ந்தவர். சுனாமியைப் பற்றி அவருக்கு எதுவும் தெரியாது. நிவாரண நிதியைப் பற்றி எதுவும் தெரியாது.

இது நல்லெண்ணத்துக்;கு அப்பால் அரசியல் ரீதியாக தொடுக்கப்பட்ட வழக்கு என்பதால் தான் அதனை நிறுத்தினோம். நிதி மோசடி இருக்குமாயின் அந்த நிதி வழக்கில் தொடர்புடையவர்கள் முறையிட்டிருக்க வேண்டும். நிதி கொடுத்தவரோ அல்லது அரச அதிகாரிகள் எவருமோ இந்த முறைப்பாட்டைச் செய்யவில்லை.

வெளியில் இருந்த ஒருவர் அரசியற்; காரணங்களுக்காக முறைப்பாடு செய்தார். இதனைச் சட்டத்தின் வரையறைக்குள் கொண்டு வரமுடியாது என்பதால்தான், அப்போது அந்தச் சுதந்திரத்தை மஹிந்த ராஜபக்ஷவுக்குப் பெற்றுக் கொடுத்தோம்.

ஹெல்பிங் ஹம்பாந்தோட்டை விவகாரத்தில் மோசடி இல்லை என்று நான் கூறமாட்டேன். மோசடி நடந்ததா, இல்லையா என்று எனக்குத் தெரியாது. ஆனால், நல்லெண்ண ரீதியில் இந்த முறைப்பாடு இல்லையென்று தான் நான் கூறுகிறேன். சம்பந்தப்பட்டவர்கள் இதில் இருக்கவில்லை. பொலிஸாருக்கு எப்படிச் செயற்படுவது என்ற அடிப்படையும் இருக்கவில்லை. 82 மில்லியன் ரூபாய் நிதி வந்திருந்தது. அவர் அதனைப் பொறுப்பேற்று லலித் வீரதுங்கவிடம் கொடுத்தார்.

அவர்கள் இருவரும் தான் அதில் தொடர்புபட்டிருந்தனர். இப்போதும் அவர்கள் இருவரும் தானே இருக்கின்றனர். அப்போது வேறு கணக்கில் நிதி போடப்பட்டது.  தவறு என்னவெனில், அரச கணக்கில் அந்தப் பணம் போடப்படவில்லை. வேறொரு கணக்கில் போடப்பட்டு சில நாட்கள் இருந்தது.

அது குறித்து விசாரணைகள் இன்னும் நடத்தப்படவில்லை. அதற்குள் அவர் ஜனாதிபதியாகி விட்டார் என்று அந்தச் செவ்வியில் குறிப்பிட்டிருந்தார்.
இதன் ஊடாக சரத் என் சில்வா கூற வந்த விடயம், சட்டப்படியே தான் செயற்பட்டேன் என்பதைத் தான். அதேவேளை, ஹெல்பிங் ஹம்பாந்தோட்டை விவகாரத்தில் தவறுகள் நடந்ததற்கு அத்தாட்சிகள் உள்ளன என்பதையும் அவர் வெளிப்படுத்தியிருக்கிறார்.

அந்த வழக்கு விவகாரத்தை, சட்டப்படி அணுகாமல், விசாரணை செய்யவோ, தீர்ப்பளிக்கவோ முற்பட்டிருந்தால், மஹிந்த ராஜபக்ஷவின் அரசியல் சூனியமாகியிருக்கும் என்பதையே அவர் கூற வந்திருக்கிறார். இதன் மூலம், சரத் என் சில்வா இரண்டு விடயங்களை முன்னிறுத்துகிறார்.

முதலாவது, அவர் பிரதம நீதியரசராக இருந்த போது தவறு செய்து விட்டதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டுகள் தவறானவை என்றும் தான் தவறான தீர்ப்புகளை அளிக்கவில்லை என்றும் நியாயப்படுத்த முனைகிறார்.

வெளியில் செல்லும் போது. பலர் ஹெல்பிங் ஹம்பாந்தோட்டை வழக்கில் தவறான தீர்ப்பை அளித்து விட்டீர்கள் என்று தன்னிடம் நேரடியாக குற்றம்சாட்டுகின்றனர் என்பதை அவரே கூறியிருக்கிறார்.

அத்தகைய குற்றஉணர்ச்சி அவருக்கும் இருந்திருக்கலாம். அதனால், தான் சட்டத்தின் படியே செயற்பட்டேன், நீதி வழுவாமல் திருப்பளித்தேன் என்பதை நிலைநிறுத்த அவர் முனைகிறார்.

இரண்டாவது, ஜனாதிபதி  மஹிந்த ராஜபக்ஷ அந்த வழக்கில் நிரபராதி என்று விடுவிக்கப்படவில்லை என்பதைக் கூறவும் அவர் முனைந்திருக்கிறார்.

அதேவேளை, அன்றைய சூழ்நிலையில், மஹிந்த ராஜபக்ஷவைக் காப்பாற்றும் நோக்கில் அவர் செயற்பட்டார் என்ற தார்மீக குற்றச்சாட்டு ஒருபோதும் சரத் என் சில்வாவை விட்டு விலகப் போவதில்லை.

ஒரு வழக்குத் தொடுக்கப்பட்ட முறையை அடிப்படையாக வைத்து, அந்த வழக்கைத் தள்ளுபடி செய்யும் போது, அந்த வழக்கில் குற்றம் நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டால், உரிய வழிமுறைகளின் மூலம் வழக்குத் தொடுக்கும்படி சம்பந்தப்பட்டவர்களுக்கு உத்தரவிடும் அதிகாரம் நீதிபதிகளுக்கு உள்ளது.

அதுவும் பிரதம நீதியரசருக்கு இந்த விடயத்தில் கூடுதல் பொறுப்பு இருந்தது என்பதை மறுக்க முடியாது. ஆனால், அவ்வாறு எந்த உத்தரவையும் சரத் என் சில்வா அப்போது பிறப்பிக்கவில்லை. அது மஹிந்த ராஜபக்ஷவுக்கு சார்பான நடவடிக்கையே என்பதில் சந்தேகமில்லை. ஒருவேளை அதனை மனதில் நிறுத்தி, அவர் இப்போது பொதுமன்னிப்புக் கூறியிருக்கலாம்.


 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X