2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

பா.ஜ.கவின் பலம்

Thipaan   / 2014 ஒக்டோபர் 23 , பி.ப. 02:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியாவில் இரு மாநில சட்டமன்றத் தேர்தல்கள் நடந்து முடிந்திருக்கின்றன. ஹரியானா மாநிலத்தில் இரு முறை ஆட்சிக்கு வந்த காங்கிரஸ் கட்சி இப்போது ஆட்சியை இழந்திருக்கிறது.

90 இடங்களில் 15 சட்டமன்ற உறுப்பினர்களை மட்டுமே பெற்றிருக்கிறது.  ஆனால், ஊழல் குற்றச்சாட்டுக்கு உள்ளான கட்சியான இந்திய தேசிய  லோக் தளம் 19 இடங்களைப் பெற்று பிரதான எதிர்கட்சியாகியிருக்கிறது. பா.ஜ.க. 47 இடங்களைப் பெற்று ஆட்சியமைக்கிறது.
மஹராஷ்டிராவில் தனித்தனியாக களம் கண்ட கட்சிகள் தங்களுக்கு ஏற்ற வாக்கு வங்கி அளவிலேயே வெற்றி பெற்றுள்ளன. தனிப்பெரும் கட்சியாக பா.ஜ.க. 122 இடங்களைப் பெற்றிருக்கிறது.

288 சட்டமன்றத் தொகுதிகள் உள்ள இம்மாநிலத்தில் இது ஆட்சி அமைக்கப் போதாது. ஆனால், தனிப்பெரும் கட்சி என்ற முறையில் ஆட்சி அமைக்க உரிமை கோரும். அது 63 சட்ட மன்ற உறுப்பினர்களைப் பெற்றுள்ள 'பழைய நண்பன்' சிவசேனாவின் உதவியை நாட வேண்டும் என்பது பா.ஜ.க. வின் மூத்த தலைவர்களில் ஒருவரான அத்வானியின் கோரிக்கை.

ஆனால், பா.ஜ.க.வின் அகில இந்திய தலைவர் அமித் ஷாவோ, 'கூட்டணியை முறித்தது சிவசேனாதான்' என்ற கருத்தை வலியுறுத்தி வருகிறார்.
தீபாவளிப் பண்டிகை முடிந்த கையோடு மஹாராஷ்டிராவில் பா.ஜ.க. தலைமையில் புதிய ஆட்சி அமையும் சாத்தியக்கூறுகள் நிரம்ப இருக்கின்றன.
இந்த மாநிலத்தைப் பொறுத்தமட்டில் காங்கிரஸ் கட்சி யாரையும் ஆதரிக்கவில்லை. 'சிவசேனாவை ஆதரிக்க காங்கிரஸ் தயார்' என்று வெளிவந்த செய்திகளில் உண்மையில்லை என்று அக்கட்சி மறுத்திருக்கிறது.

ஆனால், தேசிய வாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ப்ரபுல் பட்டேல், 'பா.ஜ.க. அரசை வெளியில் இருந்து ஆதரிக்கத் தயார்' என்று கூறிவிட்டார்.

அவர் கருத்தை கட்சித் தலைவர் சரத்பவார் கூட அங்கிகரிக்கும் விதத்தில் பேசியிருக்கிறார். வழியக்க வந்து ஆதரிக்கும் தேசிய வாத காங்கிரஸ் கட்சியின் 41 சட்டமன்ற உறுப்பினர்கள் உதவியுடன் 'புதிய நண்பனை' அணுகுவது பற்றி பா.ஜ.க.வுக்குள் பட்டிமன்றம் நடந்து கொண்டிருக்கிறது.

மாஹாராஷ்டிரா தேர்தல் பிரசாரத்தில் காங்கிரஸ் மற்றும் தேசிய வாத காங்கிரஸ் கட்சியின் ஊழலை எதிர்த்துத்தான் பிரதமர் நரேந்திரமோடி பிரசாரம் செய்தார். அதனால் 'விவசாய திட்டங்களில் ஊழல் செய்துள்ளது' என்று புகாருக்குள்ளான தேசிய வாத காங்கிரஸின் ஆதரவை பெறுவது பா.ஜ.க.வின் ஊழல் எதிர்ப்பு போராட்டத்துக்கு எதிராக போய் விடும் என்று அக்கட்சிக்குள் ஒரு தரப்பினர் கூறி வருகிறார்கள்.

சிவசேனாவா, தேசிய வாத காங்கிரஸ் கட்சியா என்ற நிலையில் பிரதமர் நரேந்திரமோடியை தொலைபேசியில் அழைத்து வெற்றி பெற்றதற்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார் சிவசேனா கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரே.

இது பா.ஜ.க.வுக்கும், சிவசேனாவுக்கும் இடையில் உறவில் புதிய இணைப்பை உருவாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தீபாவளி முடிந்ததும் ஆட்சி அமைக்கும் முடிவில் இருக்கும் பா.ஜ.க.வின் மூத்த தலைவரும், இராணுவம் மற்றும் நிதித்துறை அமைச்சருமான அருண்ஜேட்லி, 'சிவசேனா பா.ஜ.க.வின் இயற்கையான கூட்டாளி' என்று கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.

42 சட்ட மன்ற உறுப்பினர்களை மட்டும் பெற்று மூன்றாவது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ள காங்கிரஸ் கட்சி 'பொறுப்புள்ள எதிர்கட்சியாக செயல்படுவோம்' என்று அறிவித்து விட்டது.

அக்கட்சி இப்போதே பா.ஜ.க.வை ஆதரிக்கத் தயார் என்று அறிவித்த தேசிய வாத காங்கிரஸ் கட்சி மீது பாய்ந்திருக்கிறது. முன்னாள் முதல்வர் பிருதிவிராஜ் சவான் உள்ளிட்ட காங்கிரஸ் மூத்த தலைவர்கள், 'பா.ஜ.க.வுக்;கும் தேசிய வாத காங்கிரஸ் கட்சிக்கும் தேர்தலுக்கு முன்பே இரகசிய கூட்டணி இருந்திருக்கிறது.

அதனால்தான் தேர்தல் முடிவுகள் வெளிவந்த நிலையிலேயே பா.ஜ.க.வை ஆதரிக்கும் முடிவை அக்கட்சி வெளியிட்டது.
அது மட்டுமின்றி சிவசேனாவுடன் பா.ஜ.க. உறவை முறித்ததும் காங்கிரஸுடன் தேசிய வாத காங்கிரஸ் கட்சி உறவை முறித்ததும் இந்த பின்னணியில்தான்' என்று உரக்கப் பேசி வருகிறது.

இப்படி நடந்து முடிந்த தேர்தல்கள் பல பாடங்களை உணர்த்தியிருந்தாலும் ஒரு முக்கியமான பாடத்தை அனைத்து அரசியல்வாதிகளுக்கும் உணர்த்தியிருக்கிறது என்பது மறுப்பதற்கில்லை. ஏன் கட்சித் தலைவர்களுக்கு கோடிட்டுக் காட்டியிருக்கிறது என்று கூடச் சொல்லலாம்.

'ஊழல் பிரசாரம் இந்திய அரசியலில் இருந்து மெல்ல மெல்ல விலகிச் செல்கிறது. அதற்காக கொடுக்கப்பட்ட முக்கியத்துவத்துக்கும் மவுசு குறைந்து கொண்டிருக்கிறது' என்பதுதான் இத்தேர்தலின் மூலம் கிடைத்துள்ள அந்த முக்கியப் பாடம்.

இந்திய தலைநகர் டெல்லியில் ஊழலை மையமாக வைத்து பெரும் போராட்டங்கள் நடந்தன. ஆர்பாட்டங்கள் அரங்கேறின. உண்ணாவிரதங்கள், ஊர்வலங்கள் என்று வெளிநாட்டு பிரதிநிதிகள், தலைவர்கள் இந்தியாவுக்கு வந்திருந்த நேரத்தில் கூட கலக்கியது.

இளைஞர்களின் கதாநாயகனாக அன்னா ஹசாரே, அரவிந்த் கெஜ்ரிவால் போன்றோர் காட்சியளித்தனர். அனைத்துக் கட்சி தலைவர்களுமே ஊழல்வாதிகளுக்கு ஆதரவு கொடுப்பது என்றாலே சற்று ஒதுங்கினார்கள். எங்கே தங்கள் கட்சிக்கு செல்வாக்குப் போய் விடப் போகிறது என்று பயந்தார்கள்.

அது மாதிரி ஒரு பயத்தின் விளைவால் நீதிமன்றங்கள் தலையிடும் முன்பே 'நாங்கள் விசாரிக்கிறோம்' என்று உத்தரவுகளை போட்டார்கள்.
அதற்கு சற்றும் சளைக்காமல் இந்திய கணக்காயம் போன்ற அமைப்புகள் கூட அனுமான நஷ்டத்தை எல்லாம் லட்சக்கணக்கான நஷ்டக் கணக்குகளாகக் காட்டியது. ஆனால் அரசியல்வாதிகளோ அவற்றை ஊழல்களாகவே பிரச்சாரம் செய்தார்கள். அதுமாதிரிதான்
2-ஜி அலைக்கற்றை வழக்கு, நிலக்கரி ஒதுக்கீடு வழக்கு எல்லாம் லட்சம் கோடிக்கணக்கில் ஊழல் என்று பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது.

ஊழல் வழக்கு என்றாலே அதில் கொஞ்சம் கூட மறந்தும் சலுகை காட்டி விடக்கூடாது என்று விசாரணை நீதிமன்றங்களில் இருந்து, உச்சநீதிமன்றம் வரை கவனமாக உத்தரவுகளைப் பிறப்பித்தது. இதன் அடிப்படையில் ஊழல் விவகாரத்தில் நீதிபதிகள் கறாராக இருந்தார்கள்.

அதன் ஒரு பகுதியாக மத்திய அரசுக்கு ஆதரவு அளித்து வந்த கட்சிகள் மீது கூட அப்போது பிரதமராக இருந்த மன்மோகன்சிங் நடவடிக்கை எடுத்தார்.

இந்த வழக்குகளில் கைது செய்யப்படுவோர் ஆறு மாதம் ஒரு வருடம் என்று வழக்கு விசாரணைக்கு முன்பே சிறையில் அடைக்கப்பட்டார்கள்.
குறிப்பாக பீஹாரில் லாலு பிரசாத், ஹரியானாவில் ஓம் பிரகாஷ் சவுதாலா, ஆந்திராவில் ஜெகன்மோகன் ரெட்டி, தமிழகத்தில் அ.ராஜா, கனிமொழி என்று பட்டியல் நீண்டது.

கர்நாடகாவில் லோக் அயுக்தா போன்ற ஊழல் வழக்குகளை விசாரிக்கும் அமைப்பே அம்மாநில முதல்வராக இருந்த எடியூரப்பா மீதே எப்.ஐ.ஆர் பதிவு செய்தது.

அதனால் அவரும் பதவி விலகி, கைதாகி, சிறையிலிருக்க நேர்ந்தது. ஊழல் அந்த அளவுக்கு அரசியல்வாதிகளை ஆட்டிப்படைத்தது. ஊழலுக்கு எதிராக போராட்டம் நடத்திய அன்னா ஹசாரே, அரவிந்த் கெஜ்ரிவால், கிரன்பேடி போன்றவர்கள் நாட்டின் 'நம்பிக்கை நட்சத்திரங்களாக' பார்க்கப்பட்டனர். அதனை நம்பி அரவிந்த் கெஜ்ரிவால் 'ஆம் ஆத்மி கட்சி' என்ற ஒன்றையே உருவாக்கி தேர்தல் களத்திலும் குதித்தார்.

இந்த ஊழல் எதிர்ப்புப் பிரசாரங்களின் தாக்கம் உச்சநீதிமன்றத்திலும் எதிரொலித்தது. 2-ஜி அலைக்கற்றை விவகாரத்தில் 122 ஸ்பெக்ட்ரம் லைசென்ஸுகளை இரத்து செய்து உத்தரவிட்டது.

மத்திய அமைச்சராக இருந்த ராஜாவும் கனிமொழியும் கைது செய்யப்பட்டதும் இந்த போராட்டங்களின் ஒரு வெளிப்பாடுதான். அடுத்து பிரதமராக இருந்த மன்மோகன்சிங் மீதே 'குற்றப்பத்திரிக்கை' வாசிக்கப்பட்டது.

அந்த வழக்கிலும் 214 நிலக்கரி சுரங்க ஒதுக்கீடுகளை இரத்து செய்தது உச்ச நீதிமன்றம். 2-ஜி அலைக்கற்றை 1.76 லட்சம் கோடி ரூபாய் அனுமான நஷ்டக் கணக்கு என்றால், நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு 1.83 லட்சம் கோடி ரூபாய் அனுமான நஷ்டக்கணக்கு. இந்த இரு வழக்குகளையும் உச்சநீதிமன்றமே நேரடியாக கண்காணித்தது.

இது மட்டுமல்ல. சிட்டிங் எம்.எல்.ஏ. மற்றும் சிட்டிங் எம்.பி.க்களுக்கு மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தில் வழங்கப்பட்டிருந்த பாதுகாப்புகள் உச்சநீதிமன்றத்தால் இரத்து செய்யப்பட்டன.

அவற்றில் ஊழல் வழக்குகளில் தண்டனை பெறும் சிட்டிங் எம்.எல்.ஏ. மற்றும் எம்.பி.க்கள் அந்த வழக்குகளில் அப்பீல் செய்து விட்டார் அவர்களின் பதவி பறிபோகாது என்று இருந்த பாதுகாப்பு இரத்து செய்யப்பட்டது மிக முக்கியம். 'பப்ளிக் சர்வென்ட்ஸ்' மீது வழக்குப் போடுவதற்கு அவரை நியமித்தவர்களிடம் அனுமதி பெற வேண்டும். அந்த முன் அனுமதி பெற வேண்டியதில்லை என்று சில வழக்குகளிலும் அது மாதிரி முன் அனுமதி கேட்கும் போது மூன்று மாதங்களுக்குள் கொடுக்க  வேண்டும் என்று வேறு சில வழக்குகளிலும் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.

அரசியல்வாதிகள் தங்கள் மீது வழக்கு வந்து விடாமல் இருப்பதற்கு இந்த 'முன்அனுமதி' என்ற வழியை பயன்படுத்தி தப்பிப்பார்கள்.
அதையும் நீதிமன்றம் இரத்து செய்தது. ஊழல் வழக்குகளை ஒரு வருடத்துக்;குள் விசாரித்து முடிக்க வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.

ஏன் 2-ஜி போன்ற வழக்குகளில் 'மேல்முறையீடு' எதுவாக இருந்தாலும் உச்சநீதிமன்றத்துக்குத்தான் வர வேண்டும். வேறு நீதிமன்றங்கள் அதை பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளக் கூடாது என்றே 'தடா' போட்டது.

ஊழல் வழக்குகளில் உடனே ஜாமீன் கொடுப்பதை உச்சநீதிமன்றம் கண்டித்தது. ஊழல் அரசியல்வாதிகளை வெறுத்து ஒதுக்குவதற்குக் கூட உச்சநீதிமன்றம் வழிகாட்டியது. 'யாருக்கும் வாக்களிக்க விருப்பமில்லை' என்ற 'NOTA' வாக்களிக்கும் உரிமையை வாக்காளர்களுக்கு உச்சநீதிமன்றம் சட்டபூர்வ உரிமையாக்கியது. ஒரு தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் அனைவருமே வாக்காளர்களுக்கு பிடிக்கவில்லை என்றால் 'யாருக்கும் வாக்களிக்க விருப்பமில்லை' என்ற பொத்தானை அழுத்தி தங்கள் அதிருப்தியை தெரிவிக்கலாம்.

அதற்காக இலத்திரனியல் வாக்கு இயந்திரங்களில் தனி பொத்தான் பொருத்தப்பட்டது. இப்படி ஊழல் அரசியல் வாதிகளை ஓரங்கட்ட உசச் நீதிமன்றம் சொன்ன வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்ப்புகள் பல உண்டு.

பொது நல அமைப்புகளின் 'ஊழல் எதிர்ப்பு போராட்டங்கள்' 'உச்சநீதிமன்றத்தில் அதிரடி தீர்ப்புகள்' எல்லாம் இந்தியாவில் ஊழலுக்கு எதிரான மாபெரும் மக்கள் இயக்கம் உருவாகும் சூழ்நிலைக்கு தள்ளியது.

அந்த நேரத்தில்தான் 2014 நாடாளுமன்றத் தேர்தல் வந்தது. ஆட்சியிலிருந்த காங்கிரஸ் கட்சிக்கு எதிராகவே அந்த பிரசாரங்கள் எல்லாம் போனது.
'ஊழல் ஒழிப்பு' 'நாட்டின் வளர்ச்சி' என்ற முழக்கத்தை முன் வைத்து களத்துக்;கு வந்த நரேந்திர மோடி அமோக வெற்றி பெற்றார். அதுவும் எவ்வித கூட்டணியும் இல்லாமல் பா.ஜ.க. தலைமையில் தனித்தே ஆட்சி அமைத்தார்.

ஆனாலும் காங்கிரஸின் மீது இருந்த கோபத்தின் வெளிப்பாடாகவே இந்த தேர்தல் இருந்ததே தவிர, ஏதோ ஊழலை எதிர்த்து மக்கள் வாக்களித்து விட்டார்கள் என்ற நிலை இல்லை. இதை நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் வெளிப்படுத்தின.

கர்நாடக மாநிலத்தில் ஊழல் குற்றச்சாட்டுக்;கு உள்ளான எடியூரப்பா தனிக்கட்சி உருவாக்கினார். அவர் மீண்டும் நாடாளுமன்றத் தேர்தலின் போது பா.ஜ.க.வில் சேர்க்கப்பட்டார்.

அவர் பிரிந்த போது கர்நாடக மாநில சட்டமன்றத் தேர்தலில் தோற்ற பா.ஜ.க., அவர் இணைந்த பிறகு நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றது. ஆந்திர மாநிலத்தில் சொத்துக் குவிப்பு வழக்கில் சிறை பிடிக்கப்பட்டு ஏறக்குறைய ஒரு வருடத்துக்கு முன்பு விசாரணை காலத்திலேயே சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஜெகன் ரெட்டியின் கட்சி ஆந்திராவில் பிரதான எதிர்கட்சியாக வெற்றி பெற்றது.

தமிழகத்தில் கூட பெங்களூரில் சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணை உச்சகட்டத்தில் இருந்து, அது பற்றிய பிரச்சாரங்கள் எல்லாம் ஜெயலலிதாவுக்;கு எதிராக தேர்தல் களத்தில் செய்யப்பட்ட நிலையிலும் அ.தி.மு.க. தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்றத் தொகுதிகளில் 37 தொகுதிகளை தன்னந்தனியாக நின்று ஜெயித்தது. இந்தக் காட்சிகள் தேர்தல் களத்தில் 'ஊழல்' என்பதை விட, 'கட்சியின் பலம்' 'கூட்டணியின் பலம்' இதுதான் வெற்றிக்கு அளவுகோல் என்ற நிலை ஏற்பட்டது.

நாடாளுமன்றத் தேர்தல் முடிந்த பிறகு பீஹாரில் பல சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத் தேர்தல் நடைபெற்றது. அதில் மாட்டு தீவண ஊழல் வழக்கில் 5 வருடம் கடுங்காவல் பெற்ற லாலு பிரசாத் யாதவும் பா.ஜ.க. கூட்டணியிலிருந்து விலகிய நிதிஷ்குமாரும் கை கோர்த்தார்கள். அங்கு லாலு-நிதிஷ் கூட்டணிதான் அனேக இடைத் தேர்தல்களில் வெற்றி பெற்றது. அங்கு 'ஊழல்' ஒரு பிரச்சினையாக வாக்காளர்களுக்குத் தோன்றவில்லை.

அது முடிந்து இப்போது ஹரியானா மற்றும் மஹாராஷ்டிரா நாடாளுமன்றத் தேர்தல் நடந்து முடிந்திருக்கிறது. ஹரியானாவில் பா.ஜ.க. ஆட்சியை கைப்பற்றியுள்ளது. ஆனால் ஊழல் வழக்கில் சிறையிலிருக்கும் முன்னாள் முதல்வர் ஓம் பிரகாஷ் சவுதாலாவின் கட்சிதான் அங்கும் இரண்டாவது இடத்தைப் பிடித்திருக்கிறது.

சோனியாவின் மருமகன் வதேராவுக்;கு நிலப்பேரத்தில் உதவி செய்தார் என்று புகாருக்கு உள்ளான முன்னாள் முதல்வர் பூபேந்தர்சிங் ஹோடா வெற்றி பெற்றிருக்கிறார்.

இது ஹரியானாவின் நிலைமை என்றால் மஹாராஷ்டிரத்திலோ வேறு விதமாக இருக்கிறது. 'விவசாயத் திட்டங்களில்' ஊழல் செய்து விட்டார் என்று குற்றம் சாட்டப்பட்ட அஜித்பவார் (இவர் முன்னாள் மத்திய அமைச்சர் சரத்பவாரின் மகன்) அமோகமாக ஒரு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருக்கிறார்.

அவரது கட்சியான தேசிய வாத காங்கிரஸ் கட்சி மீது படு மோசமாக ஊழல் குற்றச்சாட்டுகளை தன் பிரச்சாரத்தில் முன் வைத்தார் பிரதமர் நரேந்திரமோடி. 'இந்த பாவார் அடிமைத்தனத்திலிருந்து விலகுங்கள்' என்றே வேண்டுகோள் விடுத்தார். ஆனால் தேசிய வாத காங்கிரஸ் கட்சியும் 41 எம்.எல்.ஏ.க்களை பெற்றிருக்கிறது.

அதன் வாக்கு வங்கியிலும் பெரும் சரிவை சந்திக்கவில்லை. அந்தக் கட்சியே இப்போது 'வெளியிலிருந்து ஆதரவு அளிக்கத் தயார்' என்று பா.ஜ.க.வுக்கு தூது விட்டுள்ளது. காங்கிரஸ் கட்சியின் சார்பில் கூட 'செய்திக்கு பணம்' (Paid News) கொடுத்த புகாரில் சிக்கிய முன்னாள் முதல்வர் அசோக் சவானின் மனைவி அமிதா தேர்தலில் வெற்றி பெற்றிருக்கிறார்.

இதன் அடிப்படையில் பார்த்தால் ஹரியானாவிலும், மஹாராஷ்டிராவிலும் ஊழல் குற்றச்சாட்டுக்;குள்ளானவர்கள் சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெறத்தான் செய்துள்ளார்கள்.

இதையெல்லாம் விட தமிழகத்தில் சொத்துக் குவிப்பு வழக்கில் தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதாவுக்;கு வழங்கப்பட்ட தண்டனையை எதிர்த்து மாநிலம் தழுவிய பெரும் போராட்டமே நடைபெற்றுவிட்டது.

எதிர்கட்சிகள் எல்லாம் இதை 'ஊழலுக்கு ஆதரவான போராட்டம்' என்றே முத்திரை குத்தி பிரச்சாரம் செய்தார்கள். இவை எல்லாவற்றையும் அலசினால் மிஞ்சுவது இதுதான்- ஊழல் எதிர்ப்பு நாட்டில் முனை மழுங்கி விட்டது.

அந்த பிரச்சாரமும் அடங்கி விட்டது. வாக்குச் சாவடிகளுக்குச் செல்லும் இந்திய வாக்காளர்கள் தங்களுக்கு பிடித்த தலைவருக்கு வாக்களிக்கிறார்கள். அல்லது ஒரு கட்சியை தேர்வு செய்கிறார்கள். ஊழலுக்காக ஒருவரை தோற்கடித்தார்கள். அல்லது ஊழலுக்காக ஒரு கட்சியைத் தோற்கடித்தார்கள் என்ற 'இமேஜ்' கொஞ்சம் கொஞ்சமாக விலகிச் சென்று கொண்டிருக்கிறது.

அதனால்தானோ என்னவோ 'கறுப்புப்பண' விவகாரத்தில் முன்பு பெயர்களை வெளியிட வற்புறுத்திய பா.ஜ.க. இப்போது முந்தைய காங்கிரஸ் கட்சி கொண்டு வந்த சட்டம் அதற்கு தடையாக இருக்கிறது என்று கூறியிருக்கிறது.

ஊழலுக்கு எதிராக பல அதிரடித் தீர்ப்புகளை அளித்துக் கொண்டிருந்த நேரத்தில், நீதித்துறையில் நீதிபதிகள் நியமனத்தில் அரசாங்கத்துக்கும் பங்கு இருக்கும் வகையில் ஜூடிஷியல் அப்பாயின்மென்ட் சட்டம் கொண்டு வரப்படுகிறது.

ஊழல் ஒழிப்புக்குப் பயன்படும் 'லோக்பால்' சட்டத்துக்காக போராடிய பா.ஜ.க. இன்னும் அதற்கு லோக்பால் தலைவரை நியமிக்காமல் இருக்கிறது.

இதுவரை நடந்த தேர்தல்களும் இப்போது நடந்து முடிந்துள்ள ஹரியானா மற்றும் மஹாராஷ்டிரா மாநில சட்டமன்றத் தேர்தல்களும் உணர்த்தும் ஒன் லைன் அஜெண்டா என்பது இந்தியாவில் அரசியல்வாதிகளின் 'ஊழல் பிரச்சாரம்' விஷயத்தில் மக்களின் மனநிலை வேகமாக மாறத் தொடங்கியிருக்கிறது என்பதுதான்! அதே நேரத்தில் தலைவர்களின் செல்வாக்கும், கட்சியின் செல்வாக்கும், கூட்டணியின் செல்வாக்கும் மட்டுமே தேர்தல் வெற்றியைக் கொடுக்கும் என்ற நிஜச் செய்தி இப்போதுதான் மெதுவாகப் பரவத் தொடங்கியிருக்கிறது.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X