2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

மனோ கணேசனின் தெரிவு!

Thipaan   / 2014 ஒக்டோபர் 28 , பி.ப. 08:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

-புருஜோத்தமன் தங்கமயில்

பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்தி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அரசாங்கத்தை வீழ்த்துவதே எதிர்க்கட்சிகளின் முக்கிய யுக்தியாக இருக்க வேண்டும் என்று ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்திருக்கின்றார்.
 
இதுதான், எதிர்த்தரப்பிலிருக்கும் அநேக கட்சிகள் மற்றும் சிவில் சமூக அமைப்புக்களின் பெரும் விருப்பமும் ஆகும். அடுத்த ஜனாதிபதித் தேர்தல் பற்றிய பேச்சுக்கள் ஆரம்பிக்கும் முன்னரேயே பொது வேட்பாளர் தொடர்பிலான பேச்சுக்கள் ஆரம்பித்து விட்டன.

அந்தப் பேச்சுக்களில், வெளிப்படையாக ஈடுபடும் ஒரே தமிழ் அரசியல்வாதி மனோ கணேசன் ஆவார்.
மனோ கணேசனை தனித்த ஒரு கட்சியின் தலைவராகவோ, மேல் மற்றும் மலையக மாகாணங்களிலுள்ள தமிழ் மக்களின் பிரதிநிதியாகவோ மட்டும் சொல்லிவிட முடியாது.

ஏனெனில், மனோ கணேசன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆசிர்வாதம் பெற்றவர். அதற்கு கடந்த மேல் மாகாண சபைத் தேர்தலே சாட்சி. ஐக்கிய தேசியக் கட்சியோடு எவ்வளவுக்கு நெருங்கிச் செயற்படுகின்றாரோ, அதேயளவுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்போடும் நெருங்கிச் செயற்படுகின்றவர். அதிக தருணங்களில் மனோ கணேசனின் பொது வேட்பாளர் தொடர்பிலான பேச்சுக்களும், அதற்கான முயற்சிகளும் ஐக்கிய தேசியக் கட்சி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆகியவற்றை ஒரே தளத்தில் இணைக்கும் கருவியாகவும் இருக்கும்.

வெளிப்படையாக இல்லாவிட்டாலும், அதன் உண்மைத் தன்மை அதுவாகத்தான் இருக்கின்றது.
மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்தை வீழ்த்துவது மட்டுமே பொது வேட்பாளர் நிறுத்தத்தின் இலக்கு என்ற அறிவிப்பு பற்றி கொஞ்சம் சிந்திக்க வேண்டியிருக்கிறது. ஏனெனில், அது ஏற்கனவே பிரயோகிக்கப்பட்டு தோற்றுப்போனதொரு கருவி தான்.

கடந்த ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளர் கோஷம் எதிர்க்கட்சிகளினால் முன்னிலைப்படுத்தப்பட்டு, முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவை பொது வேட்பாளராக நிறுத்தினார்கள்.

வடக்கில் மோதல்கள் முடிவுக்கு வந்து 10 மாதங்களுக்குள் இடம்பெற்ற அந்தத் தேர்தலில் போர் வெற்றிகளை முன்னிறுத்தியே தேர்தல் வாக்கு வேட்டை இரு தரப்பினாலும் முன்னெடுக்கப்பட்டது.

புலிகளுக்கு எதிரான போரின் இரண்டு வெற்றியாளர்கள் அந்த வெற்றியின் முழு உரிமையையும் தமக்கு வழங்குமாறு சிங்கள மக்களிடம் கோரி நின்ற தேர்தல் அது. அப்படியானதொரு தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சரத் பொன்சேகாவை ஆதரித்திருந்தது.

சரத் பொன்சேகாவை ஆதரித்த போது, அது தொடர்பில் தெளிவான கருத்துக்களை தமிழ் மக்களை நோக்கி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களினால் முன்வைக்க முடியாமல் போனது. அது, பெரும்பாலும் வடக்கில் கோர யுத்தத்தை நடத்திய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை தோற்கடிக்க வேண்டும் என்கிற வகையிலான உணர்வுபூர்வ விடயமாகவே இருந்தது. மற்றப்படி எந்தவொரு தூர நோக்கான எண்ணங்களையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் முன்வைக்க முடியவில்லை.

இன்னொரு பக்கம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் வேறு வழிகள் ஏதும் இருக்கவில்லை. அதுதான், சரத் பொன்சேகாவை ஆதரிக்க வேண்டிய வந்தது என்ற விடயமும் இருக்கின்றது.

ஆனால், மோதல்கள் முடிவுக்கு வந்து 5 வருடங்களைக் கடந்துவிட்ட நிலையிலும், இலங்கை தொடர்பிலான சர்வதேச அரசியலின் போக்கில் குறிப்பிட்டளவு மாற்றங்கள் வந்துவிட்ட நிலையிலும், மஹிந்த ராஜபக்ஷவை தோற்கடிப்பது என்கிற ஒரே இலக்கு மாத்திரம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட சிறுபான்மைச் சமூகங்களின் கட்சிகளை பொது வேட்பாளரை ஆதரிக்க கோருவதை அவ்வளவு சிறந்த யுக்தியாகக் கருத முடியாது.

ஏனெனில், சிங்களப் பெரும்பான்மை வாதம் மட்டுமே ஜனாதிபதித் தேர்தலை வெற்றி கொள்ள அத்தியாவசியமானது என்கிற கோஷமோ எப்போதும் முதன்மைப்படுத்தப்பட்டு வந்திருக்கிறது. இலங்கை அரசியல் சூழலில் அதுதான் பெருவாரியாக சரியாகவும் இருந்திருக்கிறது.

இப்படியானதொரு நிலையில், ஒரே இலக்கு மாத்திரம் இணைவதற்கான காரணமாக இருக்க முடியாது. அப்படியான சூழ்நிலைகள் ஒட்டுமொத்தமாக தேர்தல் கால கூட்டணிகள் போன்றதொரு தோற்றப்பாட்டை ஏற்படுத்தி, சிறுபான்மை மக்கள் இந்த நாட்டில் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பிலான எண்ணப்பாடுகளை இல்லாதொழித்து விடும்.

முஸ்லிம்கள் இன்று எதிர்நோக்கும் பிரச்சினைகள் என்பது பெரிது. ஆனால், முஸ்லிம் கட்சிகள் அனைத்தும் அரசாங்கத்தின் பங்காளிகளாக இருப்பதனால் அவற்றை வெளிப்படையாக பேசுவதில்லை. மாறாக, தமக்கிடையில் முணுமுணுப்பு மனநிலையிலேயே இருக்கின்றன. அப்படிப் பேசினாலும், அவற்றைக் காணும் மனநிலையில் அரசாங்கம் இல்லை என்கிற உண்மையும் இருக்கத்தான் செய்கின்றது.

அப்படியானதொரு நிலை, வடக்கு- கிழக்கு தமிழ் மக்களுக்கும் ஏற்படும் சூழல் என்றைக்கும் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதை அடிப்படையான கருத்தியலாகக் கொண்டே எந்தவொரு கூட்டிணைவும் அமைய வேண்டும். அது, பொது வேட்பாளர் என்கிற கருவியாக இருந்தாலும். இல்லையென்றால், அந்த இணைவினால் எந்தவொரு பயனும் இல்லை.

மனோ கணேசன் அவர்களே, இனவாத சிந்தனைகள் கூர்மைப்படுத்தப்பட்டிருக்கின்ற இன்றைய சூழ்நிலையில் பொது வேட்பாளர் என்ற கருவி தமிழ் மக்களின் பிரச்சினைகள் பற்றி அதிக அக்கறையை வெளிப்படுத்தாது. அப்படி வெளிப்படுத்திக் கொண்டு சிங்கள மக்களின் வாக்குகளைப் பெற்றுக் கொள்ள முடியாது என்ற விடயத்தை தெளிவாகக் குறிப்பிடுகின்றார்.

அரசாங்கம் மாற்றப்பட வேண்டும் என்கிற கோரிக்கை ஒவ்வொரு தேர்தல்களின் போதும் முன்வைக்கப்பட்டு வந்திருக்கிறது. ஐக்கிய தேசியக் கட்சிக்கு எதிரான மக்கள் அலை சந்திரிக்காவை ஜனாதிபதியாக்கியது. பின்னர் சந்திரிக்காவுக்கு எதிரான மக்கள் மனநிலை ரணிலை சிலகாலம் பிரதமராக்கியது.

அதன்பின், ரணிலை மறுத்த சிங்கள பெரும்பான்மை வாதம் மஹிந்த ராஜபக்ஷவை ஜனாதிபதியாக்கியது. (2005ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் போது தமிழ் மக்களின் தேர்தல் புறக்கணிப்பு என்பது ரணிலைத் தோற்கடித்தது என்ற உண்மை இருக்கின்றது.

ஆனால், சிங்கள மக்களின் அதிக வாக்குகள் ரணிலை விடவும், மஹிந்த ராஜபக்ஷவுக்கு கிடைத்தது என்பதுதானே வெளிப்படையானது) இதுதான், வழமையான தேர்தல் அரசியலின் போக்காக இருந்திருக்கிறது.

அரசாங்கத்தையும், ஜனாதிபதியையும் தோற்கடிப்பது மட்டுமே பிரச்சினைகளைத் தீர்த்துவிடும் என்ற கருத்தியல் பெரும் சிக்கலானது. அதில், பெரும் தெளிவுகள் ஏதும் இருப்பதில்லை. எது எப்படியாகினும் சிங்களப் பெரும்பான்மை வாதமே இங்கு ஆட்சியமைக்கப் போகின்றது.

அது, மஹிந்த ராஜபக்ஷவோ- ரணில் விக்ரமசிங்கவோ என்பதுதான் வித்தியாசம். அப்படியானதொரு சூழ்நிலையில், கொள்கை ரீதியிலான இணக்கப்பாடு தொடர்பில் சிறுபான்மைக் கட்சிகள் அக்கறை கொள்ள வேண்டும். அவற்றை, எழுத்தில் வைத்துக் கொள்ள வேண்டிய தேவையும் இருக்கின்றது.

வேறு வழிகள் ஏதும் இல்லை என்பதற்காக மட்டும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட சிறுபான்மைக் கட்சிகள் தெளிவில்லாத முடிவுகளை எடுத்துக் கொண்டிருக்க முடியாது.

அது, இன்னும் இன்னும் பலமற்ற அரசியல் சூழ்நிலைகளை உருவாக்கிவிடும். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பையும், தமிழ் மக்களையும் இன்னமும் ஈழக்கோரிக்கையாளர்களாக மட்டுமே முன்னிறுத்திக் கொண்டிருக்கும் சிங்களப் பெரும்பான்மை வாதத்தை மிகவும் தைரியமாகவும், இலாவகாகவும் கையாள வேண்டிய தேவையும் இருக்கின்றது. அது, எந்தவழியில் சாத்தியம் என்பதைத் தான் இப்போது சிந்திக்க வேண்டும்.

இன்னொரு பக்கம் முஸ்லிம் மக்களின் அரசியல் இருப்பு என்பது பரிதாபமான நிலைக்குச் சென்று கொண்டிருக்கின்றது. முஸ்லிம்களைப் பிரதிநிதுவப்படுத்தும் அனைத்துக் கட்சிகளும் இன்றைக்கு அரசாங்கத்தின் பங்காளிகள். (அஷாத் சாலி இன்றைக்கு எதிர்த்தரப்பில் இருக்கின்றார். அவரும் அரசாங்கத்தோடு ஒட்டுறவாடிவிட்டு வந்தவர் தான்) பிரதான கட்சியான சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அரசாங்கத்தின் வேண்டா விருந்தாளி.

எந்தவித அடிப்படை மரியாதையும் இன்றி அரசாங்கத்தோடு ஒட்டிக் கொண்டிருக்கும் கட்சியாக முஸ்லிம் காங்கிரஸைக் கொள்ள முடியும். ஏனெனில், அந்தக் கட்சி அரசாங்கத்தினாலும், அதன் முக்கியஸ்தர்களினால் நடத்தப்படும் விதமே அதனைப் பிரதிபலித்து வந்திருக்கிறது.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்திற்கு எதிரான மனநிலை முஸ்லிம்களில் அதிகளவானவர்களிடம் உண்டு. ஆனால், முஸ்லிம்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகள் மக்களின் எண்ணங்களை அதிகம் பிரதிபலிப்பதில்லை.

ஆட்சிகளைத் தீர்மானிக்கும் சத்தியாக தங்களை முன்னிறுத்தி வந்திருக்கும் முஸ்லிம் கட்சிகள் மக்களின் மனங்களை பிரதிபலிக்கவில்லை. அவர்களின் எண்ணங்களின் போக்கில் முடிவுகளை எடுக்கவில்லை என்கிற குற்றச்சாட்டு அண்மைய நாட்களில் அதிகமாக காண முடிகின்றது.

அதுவும், முஸ்லிம் மக்களுக்கு எதிரான பௌத்த அடிப்படை வாதத்தின் சிந்தனைப் போக்கு அதிகரித்துள்ள நிலையில், முஸ்லிம் கட்சிகள் தீர்க்கமான நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்கிற அதிருப்தி மக்களிடம் உண்டு. இவ்வாறானதொரு நிலையில், ஜனாதிபதித் தேர்தலில் முஸ்லிம் கட்சிகள் எவ்வாறான முடிவை எடுக்கும் என்கிற எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கின்றது.

முஸ்லிம் காங்கிரஸ் அரசாங்கத்திலிருந்து வெளியேறி எதிர்க்கட்சிகளின் கூட்டணியில் வரும் பொது வேட்பாளரை ஆதரிக்கும் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவே கூட நம்புகின்றார்.

ஆனால், முஸ்லிம் காங்கிரஸின் தலைவரான ரவூப் ஹக்கீம் அதுதொடர்பில் இன்னமும் இறுதி முடிவு எடுக்கவில்லை என்கிறார். இன்னும் சில தருணங்களில் குழப்பமான பதில்களைச் சொல்லிக் கொண்டிருக்கிறார். அஷ்ரப் காலத்தின் பின் முஸ்லிம்களின் ஸ்திரமான அரசியலின் வெற்றிடம் என்பது பெரும் வெளியாகி உருவாகி வருகின்றது என்பதை ஏற்றுக் கொள்ள வேண்டியிருக்கிறது.

மலையக மக்களின் பிரதான கட்சிகளான இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ், மலையக மக்கள் முன்னணி ஆகியன ஏற்கனவே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை ஆதரிக்கப் போவதாக அறிவித்துவிட்டன.

அப்படியானதொரு நிலையில், சிறுபான்மைக் கட்சிகளின் பிரதான கட்சிகளான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, (சிலவேளைகளில்) முஸ்லிம் காங்கிரஸ் ஆகியன ஜனாதிபதித் தேர்தல் தொடர்பிலான தமது முடிவுகளை அறிவிக்கும் போது தெளிவான பார்வையை மக்களிடமும் அறிவிக்க வேண்டும். மாறாக, குழப்பமான பதில்களை முன்வைப்பதோ, ஜனாதிபதித் தேர்தலை மட்டுமே முன்னிறுத்திய முடிவுகளோ அவ்வளவு பலன்களைத் தந்துவிடாது.

நாட்டு மக்களின் நலனில் அக்கறையின்றி இருக்கும் அரசாங்கத்தை வீழ்த்துவதற்கான இலக்கோடு எதிர்க்கட்சிகள் ஒன்றியை வேண்டும் அல்லது பொதுவேட்பாளரை ஆதரிக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை மனோ கணேசனும் தெரிவாக முன்வைப்பது சிறுபான்மைக் கட்சிகளுக்கு வேறுவழியின்றி இறுதித் தெரிவாக இருக்கலாம்.

ஆனால், அந்த ஒன்றிணைவை எப்படி சிறுபான்மைக் கட்சிகள் தமக்கான பலமான ஆதாரமாக முன்வைத்து கையாளப் போகின்றனவோ என்றுதான் கவனிக்க வேண்டியிருக்கிறது. மாறாக, சரத் பொன்சேகா காலத்து காட்சிகளே மீள வருமானால், அது அர்த்தமற்ற சூன்யமாகிவிடும்!


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X