2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

சீனா பின்னும் வலை

George   / 2014 நவம்பர் 05 , பி.ப. 09:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஜோசப் அன்டன் ஜோர்ஜ்
 
இலங்கையில் சீன ஆதிக்கம் அதிகரித்துவருவதாக பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுவரும் நிலையில், தெற்காசிய பிராந்தியத்தில் சற்று கொந்தளிப்பான நிலைமை ஏற்பட்டுள்ளது என்றே கூறவேண்டும்.
 
இலங்கை மற்றும் சீனா ஆகிய இருநாடுகளும் இணைந்து மறைத்து வைத்து விளையாடிய நீர்மூழ்கி கப்பல்கள் தான் இந்த கொந்தளிப்புக்கு காரணமாக அமைந்துள்ளன.
 
தெற்காசிய பிராந்தியத்தில் இந்தியாவுக்கு அச்சுறுத்தலாக செயற்படக்கூடிய நாடான சீனா மீது இந்தியா தனது கண்ணை வைத்திருக்கும் வேளையில், சீனாவின் நீர்மூழ்கிக் கப்பல்கள் இரண்டு, அதுவும் யுத்தக் கப்பல்கள் இலங்கை கடற்பரப்பில் தரித்து நின்ற விவகாரம் இலங்கை மீதான இந்தியாவின் நிலைப்பாட்டை சற்று அசைத்து பார்த்துவிட்டது.
 
கடந்த மே மாதம் சீனாவுக்கு விஜயம் செய்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ 22ஆம் திகதி சீன ஜனாதிபதி ஜீ ஜீங் பிங்கை சந்தித்து இலங்கைக்கு வருமாறு அழைப்பு விடுத்ததையடுத்து செப்டெம்பர் மாதம் 16ஆம் திகதி சீன ஜனாதிபதி இலங்கைக்கு வந்திருந்தார்.
 
எயார் சைனா விசேட விமானத்தில் மூலமாக கட்டுநாயக்க பண்டார நாயக்க சர்வதேச விமான நிலையத்தை முற்பகல் 11.53க்கு வந்தடைந்த சீன ஜனாதிபதி ஜிங் பிங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, விமான நிலையத்துக்கே சென்று வரவேற்றமை அவரது வருகை மிக முக்கியமானது என்பதை அறிவுறுத்தியது.
 
சீன - இலங்கை உறவானது 1952இல் இறப்பர் - அரிசி வர்த்தக ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டதிலிருந்து ஆரம்பமாகிறது.
 
கிழக்கையும் மேற்கையும் இணைக்கும் கடற்பாதையில், பாதுகாப்பான, நிரந்தரமான பட்டுப்பாதையை அமைப்பதுதான் சீனாவின் மூலோபாயதிட்டம். 
 
ஆரம்பகாலம் முதல் பட்டுப்பாதையில் முக்கிய இடத்தை அல்லது கேந்திர நிலையமாக விளங்கும் இலங்கை மீது ஏனைய நாடுகள் ஆதிக்கம் செலுத்த தமக்குள் போட்டியிட்டமை தெரிந்ததே.
 
உலக வல்லரசுகளில் ஒன்றாக மாறியிருக்கும் சீனா, அதற்கென தன்னை பலப்படுத்தவும் இந்தியாவை பலவீனமாக்கவும் தேர்ந்தெடுத்த கேந்திர மையமாக இ லங்கை திகழ்கின்றது. இதற்கு முக்கிய காரணம் இலங்கை - இந்தியாவின் அண்டை நாடு மாத்திரமல்ல மேற்கு நோக்கிய கடற்படை நகர்வுகளின்போது இந்தியா அதற்கு தடையாக அமைந்து விடும் என்பதால் இலங்கையை தமது கைக்குள் போட்டுக்கொண்டால் இந்த தொல்லையிலிருந்து விடுபடலாம் என்பதுடன் தமது கப்பல் போக்குவரத்து நடவடிக்கைகளுக்கு இலங்கையின் இயற்கை துறைமுகங்கள் பெரிதும் பயன்படும் என்பது சீனாவின் நோக்கங்களில் ஒன்று.
 
இலங்கைக்கு பல்வேறு வழிகளில் உதவிகளை செய்து அதன்மூலம் அதனை தமது பிடியினை இறுக்க எண்ணியதாதோ என்னவோ இலங்கைக்கு தனது பொருளாதார உதவிகளை தாராளமாக சீனா வாரி வழங்கியது, வழங்கிவருகிறது.
 
அந்த வகையில் தான் சீன ஜனாதிபதியின் இலங்கை விஜயம் அமைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
 
இலங்கை வந்த சீன ஜனாதிபதி 20ற்கும் அதிகமான ஒப்பந்தங்களில் கைச்சாத்திட்டதாகவும் அன்றைய தினங்களில் பெரும்பாலான ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.
 
இந்த ஒப்பந்தங்களில் பல இரகசியமாக கையெழுத்திடப்பட்டிருந்ததுடன் அது பாதுகாப்புடன் தொடர்புடையது என தெரிவிக்கப்பட்டிருந்தமை கவனிக்கத்தக்கது.
 
அன்றைய தினம் சீன ஜனாதிபதி கையொப்பமிட்ட ஒப்பந்தங்களின் பெறுமதி 5 பில்லியன் அமெரிக்க டொலர் என அரசாங்க தகவல்கள் தெரிவித்தன.
 
இதில் காலி துறைணிகத்துக்கருகில் செயற்கை தீவினை அமைத்து துறைணிக நகரமொன்றை அமைப்பதற்கு சீனா ணின்னுரிமை வழங்கியிருந்தது.
 
இதற்காக 1.4 பில்லியன் அமெரிக்க டொலரை செலவளிக்கவுள்ளதுடன் 233 ஹெக்டேயர் அளவில் இது அமைக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட வெளிநாட்டு திட்டங்களில் இதுதான் மிகப்பெரியது ஆகும்.
 
இந்த பாரிய கடற்பரப்பை நிரப்பி அமைக்கப்படும் தீவில் மூன்றில் இரண்டு பகுதி மாத்திரமே இஷங்கைக்கு சொந்தமானது என்றும் மிகுதி பகுதி சீனாவுக்கு உரித்துடையது என இலங்கைக்கு முன்னதாக விஜயம் செய்திருந்த சீன தூதுவர் தெரவித்திருந்தார்.
 
எனினும் இதனை மறுத்த அரசாங்கம் 125 ஹெக்டேயர் இலங்கைக்கு சொந்தம் எனவும் 20 ஹெக்டேயர் மாத்திரமே சீனாவின் அரசாங்க கட்டடங்களை அமைப்பதற்கு வழங்கப்படும் என்று கூறியதுடன் மிகுதி நிஷப்பரப்பு குத்தகை அடிப்படையில் வழங்கப்படும் என்றது.
 
இந்த இடத்தில் கவனிக்கத்தக்கவிடயம் குத்தகைக்கு வழங்கப்படும் நிலப்பரப்பும் சீன நிறுவனத்துக்கு அதுவும் 99 வருட குத்தகைக்கு வழங்கப்படவுள்ளமை.
அந்த திட்டம் செயற்படுத்தப்படுமாக இருந்தால் இலங்கையில் தனது தளமொன்றை அமைக்கவேண்டும் என்ற சீனாவின் கனவு நிறைவேறும்.
 
இலங்கைக்கான சீனாவின் உதவி கடந்த ஆண்டுகளில் 50 சதவீதமாக அதிகரித்துள்ளதுடன் 2012ஆம் ஆண்டில் மாத்திரம் 490 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வழங்கப்பட்டுள்ளதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. இந்தளவான தொகை கடனா அல்லது அன்பளிப்புகளா என்பது கேள்விக்குரியது.
 
சீனா ஏற்கெனவே கொழும்பு துறைணிகத்தின் கொள்கலன் இறங்குதுறையை 500 மில்லியன் ரூபாய் செலவில் புனரமைத்து கொடுத்துள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.
 
கொழும்பில் மாத்திரமல்லாமல் ஹம்பாந்தோட்டை, திருகோணமலை ஆகிய துறைமுகங்களின் அபிவிருத்திக்கும் உதவிக்கரம் நீட்டவும் சீனா தயாராக உள்ளது.
 
மொத்தத்தில் இந்தியாவின் தென் பிராந்தியத்தை தனது முழுமையான கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் முயற்சியினை மேற்கொண்டுள்ள சீனா, இதனை வெளிப்படையாக கூறாமல் அபிவிருத்திக்கு நிதியுதவி வழங்கும் பாசாங்கில் செயற்படுத்த முனைகின்றது.
 
இலங்கைக்கு வருவதற்கு முன்னர் சீன ஜனாதிபதி, மாலைதீவுக்கும் சென்றிருந்ததுடன் அங்கும் தமது இன்முகத்தை காட்டி உதவிகளை வாரி வழங்க உடன்பட்டிருந்தார்.
 
இந்த நிலையில் கொழும்பு -ஹம்பாந்தோட்டை -திருகோணமலை -மாலைதீவு என இந்தியாவின் தென்பகுதி மூழுவதும் சீனா தனது வலையை மெதுவாக பின்ன தொடங்கியிருக்கின்றது.
 
சீனா தமக்கு எதிராக செயற்பட இலங்கையை களமாக பயன்படுத்தும் என்பது இந்தியாவுக்கு தெரியாத ஒன்றல்ல. ஆரம்பம் முதலே இலங்கை மீது சீனாவின் தலையீடுகள் அதிகரிப்புத் தொடர்பில் இந்தியா தனது அதிருப்தியை வெளியிட்டு வந்ததுடன் இலங்கை மீதான தனது அழுத்தத்தை பிரயோகிக்க இலங்கை மீதான குற்றபிரேரணையை பயன்படுத்தியிருந்தது.
 
இந்நிலையில் கடந்த செப்டெம்பர் மாதம் சீன நீர்மூழ்கி கப்பல் ஒன்று மறைவாக கொழும்பு துறைமுகத்தில் தரித்து நின்ற விவகாரம் இலங்கை - இந்திய உறவுகளின் மீது இலேசான அதிர்வலைகளை உண்டுபண்ணியது.
 
சீன ஜனாதிபதி, இலங்கைக்கு வருவதற்கு முன்னனரே இந்த சீன யுத்த நீர்மூழ்கி கப்பல் இலங்கையில் இருந்ததுடன் அது செப்டெம்பர் 7 தொடக்கம் 14ஆம் திகதிவரை இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
உண்மையில் இந்த விடயம் பூதாகரமாக வெடிப்பதற்கு முக்கிய காரணம் சீன நீர்மூழ்கி கப்பலின் வருகை தொடர்பில் இலங்கை அரசாங்கம் வாய் திறக்காமல் மௌனம் காத்ததுடன் இந்த விடயத்தை சீனா -இலங்கை அரசாங்கங்கள் மூடி மறைத்திருந்தன.
 
இந்த கப்பல் யாருக்கும் தெரியாமல் தரித்து நின்ற நிலையில் அது புறப்பட்டு செல்லும் சமயம் ஊடகங்களின் கண்ணில் மாட்டிக்கொண்டதுடன் இது தொடர்பில் அப்போது ஊடகங்கள் செய்தி வெளியிட்டாலும் உண்மை நிலையை நிரூபிக்க முடியவில்லை.
 
அதனையடுத்து இலங்கை பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவை உடனடியதாக அழைத்து பேச்சுக்களை இந்திய அரசாங்கம் மேற்கொண்டதுடன்
இலங்கை கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ஜயந்த பெரேராவை கடந்தவாரம் அழைத்து பேச்சுக்களை முன்னெடுத்திருந்தது.
 
இதன்போது சீன நீர்மூழ்கி கப்பல் சாதாரணமாகவே வருகை தந்தது எனவும் இலங்கையிள் மீது சீனா நட்புறவுடன் செயற்படுகின்றது என்றும் இது தம் மீதான ஆதிக்கம் அல்ல என்றும் கடற்படை தளபதி, இந்திய ஊடகங்களுக்கு கூறியிருந்தார்.
 
கொழும்பு துறைமுகத்துக்கு நல்லெண்ண அடிப்படையில்தான் சீன போர்க் கப்பல்கள் வந்ததாகவும், இது வழக்கமான நடவடிக்கைதான் என்றும் மேலும் இந்தியாவின் பாதுகாப்புக்கு ஊறு விளைவிக்க மாட்டோம் என்றும் உறுதியளித்த அவர், இலங்கையில் சீன இராணுவ வீரர்கள் யாரும் இல்லை என்றும் கூறியிருந்தார்.
 
2010ஆம் ஆண்டு முதல் 2014ஆம் ஆண்டு வரையான காலப்பகுதில் இலங்கைக்கு  வெளிநாட்டு போர்க் கப்பல்கள் 206 வந்துள்ளதாக கடற்படை பேச்சாளர் கொமாண்டர் கோசல வர்ணசூரியவும் தனது பங்குக்கு தெரிவித்திருந்தார்.
 
பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் ஊடக மையத்தில் 29ஆம் திகதி இடம்பெற்ற வாராந்த செய்தியாளர் சந்திப்பின்போது, சீன கப்பல்கள் வருகை தொடர்பில் செய்தியாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதலளிக்கையில் அவர் இதனை கூறியிருந்தார்.
 
சர்வதேச நாடுகளின் போர்க் கப்பல்கள் தமது பயணப்பாதையில் உள்ள நாடுகளுக்கு செல்வது சாதாரணமான ஒரு விடயம். இது அனைத்து நாடுகளிலும் நடைமுறையில் உள்ளது. 
 
இலங்கைக்கு சீன போர்க் கப்பல்கள் மாத்திரம் வருகை தரவில்லை. 2010ஆம் ஆண்டு தொடக்கம் 2014ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் வெளிநாட்டு போர்க் கப்பல்கள் 206 வந்துள்ளன. 
 
2010ஆம் ஆண்டு 36 போர்க் கப்பல்களும் 2011ஆம் ஆண்டு 49உம், 2012ஆம் ஆண்டு 34உம், 2013ஆம் ஆண்டு 48உம், 2014ஆம் ஆண்டு 39 போர்க் கப்பல்களும் வந்துள்ளன. 
 
2014ஆம் ஆண்டு இஷங்கைக்கு வந்த வெளிநாட்டு போர்க் கப்பல்களில் சீனா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், பாகிஸ்தான், ஜப்பான், பங்களாதேஷ், இந்தியா, ரஷ்யா, அவுஸ்திரேலியா உட்பட பல சர்வதேச நாடுகளின் போர்க் கப்பல்கள் அடங்கும் என அவர் மேலும் கூறினார்.
 
இதனையடுத்து இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் இது தொடர்பில் பாரியளவில் அரசியல்வாதிகள் எதிர்ப்புகளை வெளியிட்டிருந்தனர். இந்த நிலை சற்று தணிவதற்கு முன்னர் ஒக்டோபர் 31ஆம் திகதி வெள்ளிக்கிழமை சீன நீர்மூழ்கி கப்பல்கள் இரண்டு மீண்டும் வருகை தந்திருந்தன.
 
ஜெங்-2 மற்றும் போர்க் கப்பல் சாங் ஜிங்க் டாவோ என்ற இரண்டு நீர்மூழ்கி கப்பல்களும் வந்ததையடுத்து இந்த விடயம் மீண்டும் பாரியளவில் தலைதூக்கியுள்ளது.
 
இதனையடுத்து இலங்கையில் சீனாவினால் மேற்கொள்ளப்படுகின்ற பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் செயற்பாடுகள் தொடர்பில் இந்தியா, விசேட கவனம் செலுத்தியுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.
 
இந்தியாவுக்கு விஜயம் செய்திருந்த பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவுக்கும் இந்திய அதிகாரிகளுக்கும் இடையில் இடம்பெற்ற சந்திப்புகளின் போது மேற்படி விவகாரம் தொடர்பில் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக அந்த செய்திகள் தெரிவிக்கின்றன.
 
இலங்கை கடற்பரப்புக்குள் சீனாவின் நீர்மூழ்கி கப்பல் நுழைந்தமையானது இந்தியாவின் பாதுகாப்புக்கு பாரிய அச்சுறுத்தலாக அமைந்துள்ளது என்றும் அந்த அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளதாக அந்த செய்திகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
இந்தியாவின் சில எல்லைப் பகுதிகளில் சீன இராணுவம் கடந்த செப்டெம்பர் மாதம் ஊடுருவியிருந்தது. அதே நேரத்தில் இஷங்கையின் கொழும்பு துறைமுகத்தில் சீனாவின் 2 போர்க் கப்பல்களும், அணுசக்தியில் இயங்கும் நீர்மூழ்கி கப்பல் ஒன்றும் நிறுத்தப்பட்டிருந்தது.
 
இந்த கப்பல்கள் சாதாரண யுத்தக் கப்பல்கள் அல்ல. அதி சக்தி வாய்ந்த கனரக ஆயுதங்களை தன்னகத்தே கொண்ட கப்பல்கள். சீன தயாரிப்பான அதிசக்திவாய்ந்த வெடிபொருட்கள், ஆழ ஊடுருவித்தாக்கும் சக்திகொண்ட ஏவுகணைகள், விமான எதிர்ப்பு ஏவுகணைகள், யுத்த தாங்கிகளை அழிக்கக்கூடிய எறிகணைகள், இரவுநேர தாக்குதலுக்கான அதிசக்திவாய்ந்த பார்வைச் சாதனங்கள் மற்றும் பல்வேறுபட்ட எறிகணைகள் என ஓர் ஆயுத களசியமாக இந்த கப்பல்கள் திகழ்கின்றன.
 
இந்திய பகுதியில் சீன இராணுவம் ஊடுருவியிருந்த நேரத்தில், கொழும்பு துறைமுகத்தில் அந்த நாட்டு போர்க் கப்பல்கள் நிறுத்தப்பட்டிருந்த விவகாரம் இந்தியாவுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது என்பதில் எந்தவித ஐயமுமில்லை அத்துடன்  பாக் ஜலசந்தி பகுதியில் சமீபகாலமாக நடந்து வரும் சீன போர்க் கப்பல்களின் நடமாட்டம் தொடர்பாக இந்தியா தனது ஆழ்ந்த கவலையை வெளியிட்டிருந்த நிலையில் மற்றுமொரு கப்பல் இலங்கை கடற்பரப்பில் தரிக்க அனுமதியளிக்கப்பட்டமை தொடர்பிலும் இலங்கையின் இரட்டை வேடத்தன்மை இந்தியாவுக்கு கடும் ஆத்திரத்தை ஏற்படுத்தி உள்ளது. 
 
எனவே இது தொடர்பாக இலங்கை அரசை தொடர்பு கொண்டு, இந்தியா தனது கடும் அதிருப்தியை தெரிவித்துள்ளது.
 
இலங்கை அரசுடனான பாதுகாப்பு தொடர்புகளை இதற்குப் பின்னராவது இந்தியா துண்டித்துக் கொள்வது நல்லது எனவும் மத்திய அரசு இந்த போக்கினை தொடர்ந்தால் தமிழக இளைஞர்கள் அதை பொறுத்துக் கொள்ள மாட்டார்கள், இலங்கைக் கடல் பகுதியில் சீன நீர்மூழ்கிக் கப்பல் நிறுத்தப்பட்டுள்ளது தமிழகத்துக்கு நேரடி அச்சுறுத்தலாகும், இலங்கையுடனான மென்மையான போக்கை நிறுத்திக் கொள்ளாவிட்டால் மத்திய அரசு கடும் விளைவுகளை சந்திக்க நேரும் என ம.தி.மு.க பொதுச்செயஷhளர் வைகோ, செவ்வாய்கிழமை(04) எச்சரித்துள்ளார்.
 
தமிழகத்திலும் இந்திய அளவிலும், இலங்கை மீதான சீனாவின் தலையீடுகள் குறித்து பாரிய கொந்தளிப்பான நிலைய ஏற்பட்டுள்ளதுடன் இலங்கையின் இந்த நடவடிக்கை இலங்கை மீதான இந்தியாவின் பிடியை இறுக்குவதற்கும் ஒரு சந்தர்ப்பத்தை ஏற்படுத்தி கொடுத்துள்ளது.
 
ராஜீவ் காந்தியுடன் செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தத்தில் இலங்கை - இந்திய நாடுகள், இரு நாடுகளுக்கு அச்சுறுத்தல் ஏற்பட இடங்கொடுப்பதில்லை என்று கையெழுத்திடப்பட்டிருந்த நிலையில் இலங்கை இதனை மீறியுள்ளமை பாரிய பின்விளைவுகளை ஏற்படுத்தும் என்பது குறிப்பிடத்தக்கது.
 

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X