2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

முழிக்கும் மு.கா.

Thipaan   / 2014 நவம்பர் 09 , பி.ப. 09:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

அம்பாறை மாவட்டத்தில் முஸ்லிம் மக்கள் செறிவாக வாழும் கரையோர பகுதிகளை ஒன்றிணைத்து தனி மாவட்டம் ஒன்றை அமைக்க வேண்டும் என்ற ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் கோரிக்கை இந் நாட்களில் அரசியல் களத்தில், குறிப்பாக சிங்கள அரசியல்வாதிகள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

இம்முறை வரவு- செலவு திட்டத்தி;ன் கீழ், சட்டம் ஒழுங்கு அமைச்சுக்கான ஒதுக்கீடுகளைப்; பற்றிய விவாதத்தின் போது உரையாற்றிய, ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜேதாஸ ராஜபக்ஷ அக் கோரிக்கையை கடுமையாக விமர்சித்தார். அதே விவாதத்தின் போது உரையாற்றிய பிரதமர் டி.எம். ஜயரத்னவும் இனவாரியான மாவட்டங்கள் உருவாக்குவதில்லை எனக் கூறியிருந்தார்.

இக் கோரிக்கையானது, தனித் தமிழ் நாட்டுக்கான தமிழர் விடுதலைக் கூட்டணியினதும் தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பினதும் கோரிக்கைக்கு சமமானது என ராஜபக்ஷ கூறினார். இது போன்றதோர் விடயம் எப்போது வரும் என்று காத்திருக்கும் ஜாதிக ஹெல உறுமயவின் ஊடக பேச்சாளர் நிசாந்த ஸ்ரீ வர்ணசிங்ஹவும் அறிக்கையொன்றின் மூலம் அக் கோரிக்கையை விமர்சித்திருந்தார்.

இவற்றுக்கு பதிலளிப்தைப் போல், முஸ்லிம் காங்கிரஸின் பொதுச் செயலாளர் ஹசன் அலி, தமிழ் பத்திரிகையொன்றுக்கு கருத்து தெரிவிக்கையில், நாட்டில் உள்ள  மாவட்டங்களில் 18 மாவட்டங்கள் சிங்கள மாவட்டங்கள் என்றும் முஸ்லிம் மாவட்டங்கள் ஒன்றேனும் இல்லை என்றும் குறிப்பிட்டு இருந்தார்.

தற்போதைய அம்பாறை மாவட்டத்தின் கல்முனை, சம்மாந்துறை மற்றும் பொத்துவில் ஆகிய கரையோரப் பகுதிகளுக்காக தனி மாவட்டம் வேண்டும் என்ற முஸ்லிம் காங்கிரஸின் இந்தக் கோரிக்கையானது புதியதொன்றல்ல. அக் கட்சியின் ஸ்தாபகத் தலைவர் எம்.எச்.எம். அஷ்ரப் வாழ்ந்த காலத்தில் அதாவது 1990களில் இருந்தே அக் கட்சி இக் கோரிக்கையை விடுத்து வருகிறது.

கல்முனை, சம்மாந்துறை மற்றும் பொத்துவில் ஆகிய பிரதேசங்களில் தமிழ் பேசும் மக்களே வாழ்கின்றனர் என்பதும் அப் பிரதேசங்களில் வாழும் சிங்களம் தெரியாத பெரும்பாலான மக்கள், அம்பாறை கச்சேரிக்கு வந்து தமது அலுவல்களை செய்து கொள்ளும் போது, மொழிப் பிரச்சினையின் காரணமாக பெரும் கஷ்டங்களை எதிர்நோக்குகிறார்கள் என்பதும் அதற்குப் பரிகாரமாக இவ்வாறான மாவட்டம் ஒன்று உருவாக்க வேண்டும் என்பதுமே இக் கோரிக்கையின் அடிப்படையாக அப்போது அமைந்து இருந்தது. ஆனால், அப்போது அதனை ஒரு முஸ்லிம் மாவட்டமாக முஸ்லிம் காங்கிரஸ் ஒருபோதும் அழைக்கவில்லை.

அஷ்ரப், 2000ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 16ஆம் திகதி மாவனெல்லை அருகே இடம்பெற்ற ஹெலிகொப்டர் விபத்தொன்றில் உயிரிழந்தார். அதன் பின்னர் மு.கா. பிளவுபட்டு ரவூப் ஹக்கீம் அதன் தலைவரானார்.

அஷ்ரபின் மனைவி பேரியல் அஷ்ரபின் தலைமையில் இயங்கி வந்த மற்றொரு கட்சியான தேசிய ஐககிய முன்னணியின் (Nருயு) தலைவியானார். அவர், இன்று போலவே அன்றும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்கு நெருக்கமாக இருந்ததோடு, அப்போதைய ஜனாதிபதி சந்திரிகாவின் அரசாங்கத்தில் அமைச்சராகவும் இருந்தார். அமைச்சராக இருந்த காலத்தில் அவரும் இக் கோரிக்கையை ஆதரித்து வந்தார்.

ஆனால், இப்போது ஹசன் அலியின் கருத்துக்களை கேட்கும் போது,இக் கோரிக்கையின் அடிப்படை இப்போது மாறியிருக்கிறதா என்ற கேள்வி எழுகிறது. அம்பாறை கச்சேரியில், தமிழ் மொழியில் அலுவல்களை செய்து கொள்ள கஷ்டமாக இருப்பதனால் தான் இக் கோரிக்கை விடுக்கப்படுகிறதா அல்லது நாட்டில் ஒரு முஸ்லிம் மாவட்டமாவது இருக்க வேண்டும் என்பதற்காக இக் கோரிக்கை விடுக்கப்டுகிறதா என்ற கேள்வி அவரது கருக்களால் எழுகிறது.

எது எவ்வாறாயினும் இப்போது எழுந்துள்ள இச்சர்ச்சையால், அக் கோரிக்கையின் விமர்சகர்கள் மட்டுமன்றி முஸ்லிம் காங்கிரஸும் பயனடையப் போகிறது எனலாம். ஏனெனில், தேர்தல்களின் போது தத்தம் சமூகத்தினரிடம் மட்டுமே இப்போது பலர் வாக்குகளை எதிர்பார்கின்றனர். எனவே, இரு சாராரும் தத்தம் சமூகங்களின் உணர்வுகளை இதன் மூலம் தட்டி வாக்குகளை பெறலாம்.

ஒரு காலத்தில் மலையகத்தில் கிராமங்களில் எவரும் செய்யாத சேவையை இ.தொ.கா. தலைவர் காலஞ்சென்ற சௌமியமூர்த்தி தொண்டமான், மலையகத் தழிழ் மக்களுக்காக செய்கிறார் என்று சிங்களத் தலைவர்கள் கூச்சலிட்டுக் கொண்டிருந்தனர். அது உண்மையாக இருந்தாலும் இல்லாவிட்டாலும் அக்கூச்சலின் காரணமாக தொண்டமானும் பயனடைந்தார்.

ஆனால், நாட்டில் போஷாக்கின்மையும் தாய், சேய் மரணங்களும் வறுமையும் ஆகக் கூடுதலாக இருப்பது மலையகத்திலேயே என்பதை இந்த விமர்சகர்கள் கருத்திற் கொள்ளவில்லை.

கடந்த வட மாகாண சபைத் தேர்தலின் போது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழ் ஈழத்தை அடைய முயற்சிக்கிறது என விமல் வீரவன்ச போன்ற சிங்களத் தலைவர்கள் கூச்சலிட்டனர். அதன் மூலமும் பயனடைந்தது கூட்;டமைப்பே. அதேபோல், இப்போது மு.கா. மீதான இவ் விமர்சனங்கள் மு.காவுக்கே சாதகமாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.

முஸ்லிம் வாக்காளர்கள், மு.காவிடமிருந்து விலகிச் செல்லும் ஒருநிலை இப்போது இருக்கும் நிலையில், மு.காவுக்கு இந்த விமர்சனங்கள் பெரிதும் உதவியாகவே அமையும்.

குறிப்பிட்ட விடயங்களைப் பற்றிய கொள்கைப் பிரச்சினையால் முஸ்லிம் வாக்காளர்கள் மு.காவிடமிருந்து விலகிச் செல்லவில்லை. அக் கட்சி ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு அரசாங்கத்தில் தொற்றிக் கொண்டு இருப்பதனாலேயே, பெரும்பாலான முஸ்லிம் வாக்காளர்கள் மு.காவிடமிருந்து விலகிச் செல்கிறார்கள்.

கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது கனிசமான முஸ்லிம்கள் மஹிந்த ராஜபக்ஷவுக்க வாக்களித்தனர். ஆனால் இப்போது அவர்களில் மிகச் சிலரே ஐ.ம.சு.மு.வை ஆதிரிக்கின்றனர். இந்த நிலை இப்போது மு.காவின் இருப்பையும் பாதிக்கத் தொடங்கியுள்ளது.

முஸ்லிம்கள், ஐ.ம.சு.கூ.விடமிருந்து விலகியிருப்பதை, அண்மையில் நடைபெற்ற மத்திய, மேல், தென் மற்றும் ஊவா மாகாண சபைத் தேர்தல்களின் போது தெளிவாக காணக் கூடியதாக இருந்தது.

மத்திய மாகாண சபைத் தேர்தலின் போது கொழும்பிலிருந்து சென்று கண்டி மாவட்டத்தில் போட்டியிட்ட அசாத் சாலி, ஐக்கிய தேசி;யக் கட்சி வேட்பாளர்களில் ஆகக் கூடுதலான வாக்குகளை பெற்றுக் கொண்டார். இது முஸ்லிம் வாக்காளர்கள் ஐ.தே.க.வையே கூடுதலாக ஆதரித்துள்ளார்கள் என்பதை காட்டுகிறது.

இதனை, தென் மற்றும் மேல் மாகாண சபைத் தேர்தல்களின் போதும் காணக்கூடியதாக இருந்தது. அவ்விரு மாகாணங்களிலும் ராஜித சேனாரத்ன பிரதிநிதித்துவப்படுத்தும் பேருவளைத் தொகுதியிருந்தும் காலஞ்சென்ற பாரத லக்ஷ்மன் பிரேமசந்திர பிரதிநிதித்துவப்படுத்திய கொலன்னாவ தொகுதியிலிருந்தும் மட்டுமே ஐ.ம.சு.கூ. ஓரளவுக்காவது முஸ்லிம் வாக்குகளைப் பெற்றது. ஆனால், கடந்த ஜூன் மாதம் அளுத்கமை, பேருவளை மற்றும் வெலிபென்ன ஆகிய பகுதிகளில் முஸ்லிம்களுக்கு எதிராக இடம்பெற்ற வன்செயல்களை அடுத்து ஐ.ம.சு.கூ. அந்த ஆதரவையும் இழந்திருக்கிறது என்றே தெரிகிறது.

ஊவா மாகாண சபைத் தேர்தலின் போது ஐ.ம.சு.கூ. ஏனைய தொகுதிகளை வெற்றிபெறும் போது முஸ்லிம்கள் அதிகமாக உள்ள பதுளை, ஹாலிஎல மற்றும் வெலிமட ஆகிய தொகுதிகளை ஐ.தே.க. வென்றது.

ஆளும் கட்சியின் பங்காளிகளான மு.கா.வும் அகில இலங்கை தேசிய காங்கிரஸும் மற்றொரு முஸ்லிம் அமைப்பும் இணைந்து போட்டியில் நிறுத்திய முஸ்லிம் குழு, பதுளை மாவட்டத்தில் வாழும் 25 ஆயிரத்துக்கு மேற்பட்ட முஸ்லிம் வாக்காளர்களில் 5,000 வாக்குகளை மட்டுமே பெற்றது.

இந்தத் தேர்தல்களின் போது ஐ.ம.சு.கூ. சார்பில் போட்டியிட்ட எந்தவொரு முஸ்லிம் வேட்பாளரும் வெற்றி பெறவில்லை. இதுவும் முஸ்லிம்கள் ஐ.மு.சு.கூ. விடமிருந்தும் மு.கா.விடமிருந்தும் விலகியிருப்பதையே காட்டுகிறது.

தாம் இந்த அரசாங்கத்துடன் இருக்கும் வரை முஸ்லிம்கள் தமது கட்சிக்கு வாக்களிக்கப் போவதில்லை என ஊவா மாகாண சபைத் தேர்தலின் பின்னர் ஹசன் அலி கூறியிருந்தார்.

சில தினங்களுக்கு முன்னர் மு.கா.வின் அட்டாளைச்சேனை கிளையின் கூட்டமொன்றில் உரையாற்றும் போது, தமது வாக்கு வங்கியையும் இழந்து கொண்டு தாம் எதற்காக இந்த அரசாங்கத்தை ஆதரிக்க வேண்டும் என மு.கா. தலைவர் ஹக்கீம் கேள்வி எழுப்பியிருந்தார்.

இவ்வாறு அரசாங்கத்திடமிருந்தும் மு.கா.விடமிருந்தும் முஸ்லிம்கள் விலகியிருக்கும் நிலையில் தாம் முஸ்லிம்களின் சார்பில் குரல் எழுப்பியதால் சிங்கள அரசியல்வாதிகளின் விமர்சனத்துக்குள்ளாகியிருப்பதாக முஸ்லிம் வாக்காளர்களிடம் கூற மு.கா. தலைவர்கள் விரும்புவார்கள். இந்த கரையோர மாவட்டக் கோரிக்கை அதற்கு ஒரு வாய்ப்பை அவர்களுக்கு அளித்துள்ளது. 

தாம் இந்த அரசாங்கத்துடன் இருக்கும் வரை முஸ்லிம்கள் தமது கட்சிக்கு வாக்களிக்கப் போவதில்லை என ஹசன் அலி கூறினாலும் தமது வாக்கு வங்கியையும் இழந்து கொண்டு தாம் எதற்காக இந்த அரசாங்கத்தை ஆதரிக்க வேண்டும் என மு.கா. தலைவர் ஹக்கீம் கேள்வி எழுப்பினாலும் மு.காவுக்;கு இந்த அரசாங்கத்தில் இருந்து வெளியேறவும் முடியாது போல் தான் தெரிகிறது.

அரசாங்கத்தில் இருந்து வெளியேறினால் தமக்கு கிடைக்கும் சலுகைகளை இழக்க நேரிடும் என்பதனால், மு.கா தலைவர்கள் வெளியேறாமல் இருக்கிறார்கள் என்ற பிரபல்யம் வாய்ந்த கருத்தை இப்போது ஏற்க முடியாதிருக்கிறது.

ஏனெனில், சலுகைகளுக்காக அரசாங்கத்தில் தொற்றிக் கொண்டிருப்பதால் தமது வாக்கு வங்கியே கரைந்து செல்கிறது என்பதை மு.கா. தலைவர்களே விளங்கிக் கொண்டிருக்கிறார்கள். அதைத் தான் ஹசன் அலியும் ஹக்கீமும் கூறியிருக்கிறார்கள்.

அவ்வாறு அரசாங்கத்தில் தொற்றிக் கொண்டு இருப்பதனால் மு.கா.வின் வாக்கு வங்கி முற்றாக கரைந்துவிட்டால், மு.கா. தலைவர்கள் சலுகைகளை அனுபவிக்கும் காலமும் விரைவில் முடிவடைந்துவிடும். அடுத்த வருடம் ஜனாதிபதித் தேர்தல் முடிவடைந்தவுடன் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டால் வாக்கு வங்கியை இழந்த மு.கா., அந்தப் பொதுத் தேர்தலை எதிர்நோக்குவது கடினமானதாக அமைந்துவிடும்.

அப்போது சலுகைகள் மட்டுமன்றி எதிர்க்கட்சி எம்.பி. பதவியாவது அவர்களுக்கு இல்லாமல் போய்விடும். எனவே, சலுகைகள் தான் அவர்கள் அரசாங்கத்தை விட்டு வெளியேறுவதை தடுக்கிறது என்று கருத முடியாது.

அரசாங்கத்தில் இருந்து வெளியேறினால் கட்சி பிளவுபடும் என்பது இதற்கு முன்னர் மு.கா. தலைவருக்கு இருந்த ஒரு அச்சமாகும். ஏனெனில், அப்போது மு.கா. அரசாங்கத்தில் இருந்து வெளியேறும் போது கட்சியின் சில தலைவர்கள் அரசாங்கத்திலேயே தங்கியிருக்கலாம் என்றும் அத்தோடு கட்சி உறுப்பினர்களில் கனிசமான எண்ணிக்கையினரும் ஆளும் கட்சியிலேயே தங்கி இருக்கலாம் என்றும் கருதப்பட்டது. அதாவது கட்சி பிளவு படலாம்.

இந்த நிலை இதற்கு முன்னரும் மு.காவை மிரட்டிக் கொண்டு இருந்தது. 2005ஆம் ஆண்டு மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியானதன் பின்னர், மு.கா.வும் அந்த அரசாங்கத்தில் சேர்ந்து கொண்டது.

ஆனால், ஹக்கீமுக்கு அவ்வளவு தாக்கம் இல்லாத தபால் அமைச்சர் பதவியே வழங்கப்பட்டது. மு.காவை அரசாங்கம் அவ்வளவு கணக்கிலெடுக்கவும் இல்லை. இந்த அவமானததின் காரணமாக மு.கா. அரசாங்கத்தைவிட்டு வெளியேறியது.

கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவையே மு.கா. ஆதரித்தது. ஆனால், பின்னர் மு.கா.தலைவர்களில் சிலர் அரசாங்கத்தில் சேரப்போவதாக தகவல் கிடைக்கவே கட்சி பிளவு படாமல் இருப்பதற்காக மீண்டும் அரசாங்கத்தில் சேர மு.கா. நிர்ப்பந்திக்கப்பட்டது.

ஆனால், மீண்டும் பழைய படியே மு.கா., அரசாங்கத்துக்;குள் புறக்கணிக்கப்பட்டு வந்ததோடு முஸ்லிம்களுக்கு எதிரான பிரசாரங்களும் நாட்டில் அதிகரித்தது. அவற்றில் அரசாங்கத்தில் உள்ள சில பலம்வாய்ந்தவர்களின் கையும் தென்படுவதாக கூறப்பட்டது.
எனவே, அரசாங்கத்தில் இருந்து மு.கா. விலக வேண்டும் என்று முஸ்லிம்கள் சில காலமாக வலியுறுத்தி வந்த போதிலும் சூழ்நிலையின் கைதியாக அரசாங்கத்திலேயே மு.கா. தங்கியிருந்தது. 

இப்போது அரசாங்கத்தின் மீது முஸ்லிம்கள் கொண்டிருக்கும் வெறுப்பை கவனத்தில் கொள்ளும் போது, கட்சி உறுப்பினர்கள் அவ்வாறு அரசாங்கத்தில் தங்கியிருக்கப்ப போவதில்லை. கட்சி, அரசாங்கத்தில் இருந்து வெளியேறும் போது சில தலைவர்கள் அரசாங்கத்திலேயே தங்கினாலும் அவர்களை வாக்காளர்களில் மிகச் சிலரே ஆதரிப்பார்கள். எனவே அதை கட்சி பிளவு பட்டதாக கருத முடியாது.

ஆனால், அரசாங்கத்தில் ஒட்டிக் கொண்டு இருக்க மு.காவை ஏதோ இன்னமும் நிர்ப்பந்தித்துக் கொண்டு இருக்கிறது. சிலவேளை, ஜனாதிபதித் தேர்தலும் வரும் இந்த நிர்ணயகரமான அரசியல் சூழ்நிலையில் ஆளும் கட்சியின் தலைவர்களை ஆத்திரமூட்டுவதால், சரத் பொன்சேகாவுக்கு நேர்ந்த கதி தமக்கும் நேருமோ என மு.கா தலைவர்கள் சிந்திக்கிறார்களோ தெரியாது.

இது தேர்தல் காலமென்பதால், அரசாங்கம் இப்போது முஸ்லிம்களை கவர பல முயற்சிகளில் ஈடுபடுகிறது. ஏழை முஸ்லிம்களுக்கு ஹஜ் செய்வதற்காக பணம் வழங்குதாகவும் அண்மையில் ஜனாதிபதி கூறினார். ஆனால், அதனை முஸ்லிம்கள் அவ்வளவு பொருட்படுத்தியதாக தெரியவில்லை.

அரசாங்கத்துக்;கும் முஸ்லிம்களுக்கும் இடையிலான இந்த முறுகல் நிலை காரணமாக மு.கா.வின் அரசியல் எதிர்காலம் தான் பெரும் கேள்விக்குறியாகியுள்ளது.
   
   
 
 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X