
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, மூன்றாவது முறையாகவும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட முடியும் என்று உயர்நீதிமன்றம் அறிவித்துவிட்டது. அரசியலமைப்பின் 18வது திருத்த சட்ட அமுலாக்கத்தின் முன்னரேயே தன்னுடைய இரண்டாவது பதவிக் காலத்துக்காக பதவியேற்றுவிட்ட ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, அப்போது செய்திருந்த சத்தியப்பிரமாணத்தின் படி மூன்றாவது முறையாகவும் ஜனாதிபதியாக போட்டியிட முடியாது என்று முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என் சில்வா உள்ளிட்ட சிரேஷ்ட சட்டத்தரணிகள் பலரும் முன்வைத்து வந்த கூற்றினை உயர்நீதிமன்றத்தின் அறிவிப்பு நிராகரித்துவிட்டது.
இந்த அறிவிப்பின் மூலம், ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புக்கும், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கும் இருந்த சின்ன ஐயப்பாடும் நீக்கப்பட்டுவிட்டது. இனி, தன்னுடைய அடுத்த தேர்தல் வெற்றி தொடர்பில் மஹிந்த ராஜபக்ஷ மேலும் முனைப்போடு செயற்படுவார். ஏற்கனவே ஜனாதிபதித் தேர்தலுக்கான அரசியல் களம் பரபரப்பாகிவிட்ட நிலையில், உயர்நீதிமன்றத்தின் அறிவித்தலும் அந்தக் களத்தினை இன்னும் பரபரப்பாக்கிவிட்டிருக்கிறது.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ எதிர் எதிரணிகளின் பொது வேட்பாளர் என்கிற போட்டி நிலைமையே நம்முன் விரிக்கப்பட்டிருக்கிறது. ஆளும் கட்சி மீதான மக்களின் அதிருப்தியை வைத்துக் கொண்டு தேர்தல் வெற்றி தொடர்பிலான தன்னுடைய நம்பிக்கையை எதிரணிகளின் கூட்டு அதிகமாக்கியிருக்கிறது. இந்த ஜனாதிபதித் தேர்தலின் நீட்சி நாட்டில் ஆட்சி மாற்றமொன்றினைக் கொண்டுவரும் என்பதில் எதிர்க்கட்சிகள் மட்டுமல்ல அரசியல் நோக்கர்கள், ஊடகங்கள், பொதுமக்களின் குறிப்பிட்டளவானர்களும் நம்புகிறார்கள். அந்த நம்பிக்கையின் பலன் அடுத்த பாராளுமன்றத் தேர்தலில் கிடைக்கலாம் என்பதும் அவர்களின் வாதமாகவும் இருக்கின்றது.
இப்படியானதொரு நிலையில், ஐக்கிய தேசியக் கட்சி, ஜனநாயகக் கட்சி, ஜனநாயக மக்கள் முன்னணி, முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க உள்ளிட்ட எதிரணியின் கூட்டிணைவு, ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பிற்கும், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கும் பெரும் நெருக்கடி நிலைமைகளை ஏற்படுத்தியிருக்கின்றது. எதிரணி இவ்வளவு கட்டத்தோடு இருந்து விடாது. எதிர்காலத்தில் மக்கள் விடுதலை முன்னணி(ஜே.வி.பி), அரசாங்கத்தின் பங்காளிக் கட்சியான ஜாதிக ஹெல உறுமய உள்ளிட்ட கட்சிகளினால் நிறைவதற்கான வாய்ப்புக்கள் உண்டு.
ஆக, ஜனாதிபதித் தேர்தல் களம் பலமான இரண்டு அணியினருக்கிடையிலானதாக இருக்கப் போகின்றது. இந்த இரு அணிகளிலும் இன்னும் தம்மை இணைத்துக் கொள்ளாத இரு கட்சிகள் வெளியில் நிற்கின்றன. ஜனாதிபதித் தேர்தலில் குறிப்பிட்டளவு தாக்கத்தைச் செலுத்தக் கூடிய வாக்கு வங்கியைக் கொண்டிருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆகிய கட்சிகளே அவை.
அரசாங்கத்தின் பங்காளியாக இருந்தாலும், ஜனாதிபதித் தேர்தலில் யாருக்கு ஆதரவளிப்பது என்பது தொடர்பில் இன்னமும் இறுதி முடிவை வெளியிடாத முஸ்லிம் காங்கிரஸ், பங்காளியாக இருந்து கொண்டே அரசாங்கத்தை விமர்சித்து வருகின்றது. முஸ்லிம் மக்களின் அரசாங்கத்தின் மீதான பெரும் அதிருப்தியை முஸ்லிம் காங்கிரஸ் பிரதிபலித்தாக வேண்டிய கட்டாயம் இருக்கின்றது. ஆக, ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிரான நிலைப்பாடுகளை அவர்கள் எடுப்பதற்கான வாய்ப்புக்கள் அதிகமுண்டு.
மறுபுறத்தில் ஜனாதிபதித் தேர்தலோடு தம்மை இப்போதைக்கு அதிகமாக சேர்த்துக் கொள்ளாத நாட்டின் மூன்றாவது பெரிய கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இருக்கின்றது. ஆனால், அந்தக் கட்சியின் தலைவர் இரா.சம்பந்தன் அண்மையில் வெளிப்படுத்திய செய்தியொன்று மிக முக்கியத்துவம் பெறுகின்றது. அது, இனவாத தூண்டல்களை முன்னிறுத்தி ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்படுவதை தடுக்க வேண்டும். அதற்கான வாய்ப்புக்களை பெரும்பான்மை தேசியவாதக் கட்சிகளுக்கு வழங்கக் கூடாது என்பதே அது.
இலங்கையின் தேர்தல் களங்கள் தமிழ் மக்களை பிரிவினைவாதிகளாகவும், புலிகளாகவும் சித்தரித்து வந்த வரலாறு எமக்குத் தெரியும். அப்படியானதொரு காட்சியை இந்த ஜனாதிபதித் தேர்தலிலும் அரங்கேற்றுவதற்கு ஆளும் ஐக்கிய சுதந்திரக் கூட்டமைப்பு தயாராகிவிட்டது. ஆளும் கட்சியின் இந்த நடவடிக்கைகளைக் கவனித்த பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியும் தன்னுடைய பங்கிற்கு புலி எதிர்ப்பு உள்ளிட்ட கோஷங்களைக் கையிலெடுத்திருக்கிறது.
நேற்றுமுன்தினம் ஊடகங்களில் வெளியான செய்தி இவ்வாறாக இருந்தது, தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பினை தடை செய்யுமாறு எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க ஐரோப்பிய ஒன்றியத்துக்கு எழுத்து மூலம் கோரிக்கை விடுத்துள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான தடையை ஐரோப்பிய ஒன்றியத்தின் நீதிமன்றம் நீக்கியமை தொடர்பில் இலங்கை அரசாங்கம் எந்த நடவடிக்கையையும் எடுக்காத காரணத்திலேயே தாம் எழுத்து மூலம் கோரிக்கை விடுத்திருப்பதாக ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்போ, எதிரணியின் பிரதான கட்சிகளோ சிங்களப் பெரும்பான்மை மக்களிடம் வாக்குகளைப் பெறுவதற்காக புலி எதிர்ப்பு விடயத்தையும், தமிழ் மக்கள் மீதான ஐயுறு நிலையையும் இம்முறையும் வெளிப்படுத்தப் போகின்றன. மறுபுறத்தில் தமிழ் மக்களின் வாக்குகள் ஜனாதிபதித் தேர்தலில் தீர்மானிக்கும் சக்தியாக அமையப்போகின்றது என்ற உண்மையை உணர்ந்து கொண்டு இரட்டை வேடதாரிகளாக வலம் வரப் போகின்றார்கள்.
மஹிந்த ராஜபக்ஷ, ரணில் விக்ரமசிங்க, சந்திரிக்கா குமாரதுங்க, சரத் பொன்சேகா உள்ளிட்ட அனைவரும் அடிப்படையில் ஒரே விடயத்தில் உறுதியாக இருக்கின்றார்கள். இலங்கை பௌத்த- சிங்களவாத நாடு. அதற்குப் பின்னர் தான் எதுவும் என்பது. இந்த அடிப்படை மனநிலையிலிருந்து அவர்கள் வெளியில் வருவது இல்லை. வேணுமென்றால் தமது மேடை மொழிகளில் வர்ணங்களைப் பூசிக் கொண்டு ஜாலம் காட்டுவார்கள். அந்த ஜாலத்தினுள் சிறுபான்மை மக்கள் மூழ்கிக் கொள்ள வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள்.
நாட்டில் தற்போதுள்ள ஆட்சி தொடர்ந்தாலும், மாற்றம் ஏற்பட்டாலும் தமிழ், முஸ்லிம் சிறுபான்மை மக்கள் எதிர்நோக்கப் போகும் அரசியல் உரிமைப் பிரச்சினைகள் ஒரேநாளில் தீரப்போவதில்லை. அதற்காக போராட்டம் என்பது காலங்கள் கடந்து இன்னும் இன்னும் நீண்டு செல்லும் சூழலே இருக்கின்றது. அப்படியான நிலையில், அதிகாரங்களின் பகிர்வையோ- அரசியல் உரிமைகளையோ முற்றுமுழுதாக எதிர்பார்த்து ஜனாதிபதித் தேர்தலுக்கான நிலைப்பாட்டியை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், முஸ்லிம் காங்கிரஸூம் எடுத்துக் கொள்ள முடியாது.
ஆனால், தவிர்க்க முடியாமல் ஏதோவொரு முடிவை எடுக்க வேண்டிய பொறிக்குள் இலங்கையின் தேர்தல் களம் தள்ளிவிட்டிருக்கின்றது. அப்படியானதொரு நிலையில் தாம் எடுக்கப் போகும் தேர்தல் நிலைப்பாடுகள் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், முஸ்லிம் காங்கிரஸூம் மக்களிடம் தெளிவாக விளக்கங்களைக் கொடுக்க வேண்டிய தேவை இருக்கின்றது. அது, தாம் சார்ந்த மக்களிடம் மட்டுமல்லாமல், நாட்டில் பெரும்பான்மை மக்களான சிங்கள மக்களிடமும் கூட.
ஏனெனில், தமிழ்- முஸ்லிம் மக்களின் நிலைப்பாடு என்பது சிங்களப் பெரும்பான்மை மக்களுக்கு எதிரானது என்கிற தோற்றப்பாடு ஏற்கனவே பெரும்பான்மை தேசியவாத தலைவர்களினாலும், ஊடகங்களினாலும் கட்டமைக்கப்பட்டு வளர்க்கப்பட்டிருக்கிறது. அவ்வாறானதொரு நிலையில், என்ன நிலைப்பாட்டினை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு – முஸ்லிம் காங்கிரஸ் எடுத்தாலும் அது தென்னிலங்கை அரசியலரங்கில் பெரும் பேசுபொருளாகவும், அதனைத் திரித்து சிங்கள வாக்குகளை குறிவைக்கும் நிகழ்வுகளும் அரங்கேற்றப்படும். இவ்வாறானதொரு நிலைமை சிங்கள மக்களை வேறுமாதிரியான முடிவுகளை எடுக்க வைக்கும்.
நாட்டின் ஆட்சியதிகாரத்தினை தீர்மானிக்கப் போகும் தேர்தலொன்றுக்கான வாக்களிப்பு என்பது மக்களின் பொருளாதார அடிப்படைகள், சமூக முன்னேற்றம், நாட்டின் அமைதி உள்ளிட்ட விடயங்களைக் கருத்தில் கொண்டு இடம்பெற வேண்டும். அதனைவிடுத்து, இனமான- மதவாத தூண்டல்களின் பிரகாரம் இடம்பெற்றால் அது, தொடர்ந்தும் முரண்பாடான அரசியல் வியாபாரத்தினால் தோற்கடிக்கப்பட்டு வந்திருக்கின்ற அழகிய இலங்கைத் தீவின் மற்றொரு தோல்வியாகவே அமையும்.
ஆளும் கட்சி அல்லது எதிரணி என்கிற இரண்டு தெரிவுகள் மாத்திரமே சிறுபான்மைக் கட்சிகளுக்கும், சிறுபான்மை மக்களும் ஜனாதிபதித் தேர்தலில் இருக்கின்றன. மாற்றுத் தெரிவொன்று என்பது அவ்வளவுக்கு சாத்தியமில்லை. மாற்றுத் தெரிவாக தேர்தல் பகிஷ்கரிப்பு என்கிற கருவியைக் கொள்ள இப்போதைக்கு யாரும் தயாராக மாட்டார்கள். 2005ஆம் ஆண்டு வடக்கு, கிழக்கு தமிழ் மக்கள் ஜனாதிபதித் தேர்தலைப் புறக்கணித்ததன் பின்னாலான கொடும் சோகம் 2009களில் நிகழ்தேறிய வரலாறு இருக்கின்றது. அப்படியானநிலையில், பகிஷ்கரிப்பு எனும் கருவி இப்போதைக்கு அவசியமானதும் அல்ல. அது, அடிப்படையும் அற்றது. ஆக, ஏதொவொரு தெரிவுக்கு வந்தாக வேண்டும்.
தமது தேர்தல் நிலைப்பாடுகள் இன்ன இன்ன காரணங்களுக்காக மட்டுமே எடுக்கப் பட்டிருக்கின்றது என்ற தெளிவூட்டல் என்பதை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், முஸ்லிம் காங்கிரஸூம் வெளிப்படுத்த வேண்டும். அது, எப்படியிருக்க வேண்டுமென்றால் தமிழ், முஸ்லிம் மக்களின் கடைநிலை மனிதன் வரை கொண்டு செல்லப்பட வேண்டும். அதுபோலவே, சிங்கள ஊடகங்களையும், சிங்கள தலைவர்களையும் நம்பாது நேரடியாக சிங்கள மக்களின் கடைநிலை மனிதன் வரை கொண்டு செல்லப்பட வேண்டும். அது, இந்தத் தேர்தலில் அல்லது எதிர்கால தேர்தல்களின் மாற்றங்களை வழங்குவதற்காக வாய்ப்புக்களை ஏற்படுத்தலாம். அல்லது தொடரும் ஆட்சிக்கு சில அழுத்தங்களை வழங்கலாம்.
தமிழ்- முஸ்லிம் சிறுபான்மை மக்களுக்கு எதிராக நாட்டின் இருபிரதான பெரும்பான்மை தேசியவாதக் கட்சிகளும் செயற்பட்டிருக்கின்றன. அரசியல் உரிமைப் பிரச்சினைகளின் பெரும் தோற்றுவிப்பாளர்களாக பெரும்பான்மை தேசியவாதக் கட்சிகளும், அதன் தலைவர்களும் இருந்திருக்கிறார்கள். அப்படியிருக்க சிறுபான்மைக் கட்சிகளின் போக்கில் இங்கு இரண்டு தரப்புமே குற்றமிழைத்தவர்களே. அப்படியானதொரு நிலையில் எதிர்கால தேர்தல்கள் அல்லது போக்கு என்னமாதிரியான விடயங்களை முன்வைக்கும் என்ற தீர்க்கமான பார்வை கொண்டு தேர்தல் நிலைப்பாட்டினை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், முஸ்லிம் காங்கிரஸூம் எடுக்க வேண்டும்.
ஏன், இங்கே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பையும், முஸ்லிம் காங்கிரஸையும் திருப்பத் திருப்ப சுட்டிக்காட்டப்படுகின்றது என்றால், சிறுபான்மைக் கட்சிகளின் இன்னொரு பிரதான காட்சியான இலங்கைத் தோட்டத் தொழிலாளர் காங்கிரஸ் ஏற்கனவே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவளிப்பதாக அறிவித்துவிட்டது. ஆக, தேர்தல் நிலைப்பாட்டினை அறிவித்துவிட்டவர்கள் பற்றி இங்கு பேசமுடியாது.
ஜனாதிபதித் தேர்தலின் போது தமக்கு ஆதரவளிக்க வேண்டும் என்று ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்தால் அது தொடர்பில் ஆழமாகப் பரிசீலிப்பதற்கு தயாராக இருப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் நேற்றுமுன்தினம் செவ்வாய்க்கிழமை ஊடகமொன்றிடம் தெரிவித்திருக்கின்றார். மறுபுறத்தில், சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் நாயகமான ஹசன் அலி, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்தின் மீது நம்பிக்கை கொள்ள முடியாது என்றும், முஸ்லிம் மக்களின் மனநிலையைப் பிரதிபலிக்கும் முடிவினை முஸ்லிம் காங்கிரஸ் எடுக்க வேண்டியிருப்பதாகவும் குறிப்பிட்டிருந்தார்.
இந்தக் கூற்றுக்கள் ஊடகங்களின் கேள்விகளுக்கு முன்வைக்கப்பட்ட பதில்கள். ஆனால், இந்த பதில்களைத் தாண்டி ஜனாதிபதித் தேர்தலுக்கான நிலைப்பாட்டினை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், முஸ்லிம் காங்கிரஸூம் கூட விரைந்து எடுக்க வேண்டிய தேவையுள்ளது. ஏனெனில், 50 நாட்களுக்கும் குறைவான காலப்பகுதியே ஜனாதிபதித் தேர்தலுக்கு இருக்கின்றது. ஆளும் கூட்டணி, எதிரணியின் கூட்டணி, தமிழ்- முஸ்லிம் மக்கள், ஊடகங்கள் மாத்திரமல்ல சிங்கள பெரும்பான்மை மக்களும் இரண்டு கட்சிகளின் தேர்தல் நிலைப்பாட்டினை எதிர்பார்த்துக் காத்திருக்கின்றன. அந்த நிலைப்பாடு தேர்தல் களத்தினை இன்னும் இன்னும் சூடு பிடிக்க வைக்கும் என்று நம்பலாம்!