2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

பா.ஜ.கட்சிக்கு 'மாற்று அணி'?

George   / 2014 நவம்பர் 25 , பி.ப. 08:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்திய நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத் தொடர் பரபரப்புக்கு  பஞ்சமில்லாமல் இருக்கப் போகிறது. இதற்கு முன்பு நடைபெற்ற கூட்டத் தொடரில் ஏறக்குறைய அனைத்து எதிர்கட்சிகளுமே ஏதாவது ஒரு வழியில் பிரதமர் நரேந்திரமோடி தலைமையிலான அரசுக்கு கை கொடுத்தன.

சில நேரங்களில் மாநிலத்தில் எதிரும் புதிருமாக இருக்கும் கட்சிகள் கூட நாடாளுமன்றத்தில் மசோதாக்களை ஒரே அணியில் நின்று ஆதரித்தன. பல காலம் விவாதங்களுக்குப் பிறகு கொண்டு வரப்பட்ட 'நேஷனல் ஜூடிஷியல் கமிஷன்' அமைக்கும் மசோதாவிற்கு பெரும்பாலான கட்சிகள் ஆதரவளித்தது குறிப்பிடத்தக்க அம்சம்.

அதற்கு முக்கியக் காரணம் தேர்தல் தோல்வியில் துவண்டு கிடந்த காங்கிரஸ் பக்கம் யாரும் அணி சேர்ந்து நிற்கத் தயாராக இல்லை. அதனால் மாநிலக் கட்சிகள் மற்றும் மற்ற தேசியக் கட்சிகள் மட்டத்தில் ஒரு ஒருங்கிணைப்பும் உருவாகவில்லை.

ஆனால் இந்த குளிர்காலக் கூட்டத்தொடர் அப்படியில்லை. முதல் கூட்டத் தொடருக்கும், குளிர்காலக் கூட்டத் தொடருக்கும் இடையில் பல்வேறு அதிரடி அரசியல் மாற்றங்கள் இந்தியாவில் உருவாகியிருக்கின்றன. நான்கு வருடம் தமிழக முதலமைச்சராக இருந்த ஜெயலலிதாவுக்கு பெங்களூர் சொத்துக் குவிப்பு வழக்கில் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அதனால் 'தேசிய அரசியல்' விருப்பத்தில் இருந்த அவர் முதலமைச்சர் பதவியில் இருந்தே விலக நேரிட்டது.

அதே மாதிரி மேற்குவங்க முதலமைச்சராக இருக்கும் மம்தா பானர்ஜியை சுற்றி 'சாரதா ஸ்கேம்' என்ற சிட்பன்ட் புகார் என்ற வலை விரிக்கப்பட்டுள்ளது.

அவரது கட்சியைச் சேர்ந்த இரு எம்.பி.க்கள் ஏற்கெனவே இந்த வழக்கில் இந்தியாவின் மத்திய புலனாய்வு அமைப்பான சி.பி.ஐ கைது செய்து விட்டது. அதன் விசாரணை ஓடிஸா முதலமைச்சர் நவீன் பட்நாயக் அலுவலக வாசல் வரை வந்து விட்டது. இந்த மூவருமே அகில இந்திய அரசியலில் அதிக கவனம் செலுத்தக் கூடியவர்கள் என்று எதிர்பார்க்கப்பட்டவர்கள். பா.ஜ.க. விற்கு அடுத்தபடியாக எம்.பி.க்களை வைத்திருப்பவர்கள்.

இது ஒரு புறமிருக்க ஹரியானா மற்றும் மஹாராஷ்டிரா மாநிலத் தேர்தல்கள் நடந்து முடிந்திருக்கின்றன. இப்போது ஜார்கன்ட் மற்றும் ஜம்மு காஷ்மீர் போன்ற மாநில சட்டமன்றத் தேர்தல்கள் நடைபெறப் போகின்றன. நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தல்களில் பா.ஜ.க.வின் அமோக வெற்றி மற்ற கட்சிகளை எல்லாம் மிரட்டியிருக்கிறது. அகில இந்திய அரசியலில் பா.ஜ.க. ஒரு 'நொன் ஸ்டொப்' வளர்ச்சியை நோக்கிப் போகிறது.

தேசிய அரசியல் பா.ஜ.க.வுக்கும், காங்கிரஸூக்கும் என்ற போட்டி விலகி, பா.ஜ.க.வுக்கும்- மாநிலக் கட்சிகளுக்குமான போட்டியாக உருவெடுத்து விடுமோ என்ற அச்சம் பா.ஜ.க. தவிர மற்ற கட்சிகளுக்கு எல்லாம் ஏற்பட்டிருக்கிறது. அது மட்டுமின்றி பிரதமர் நரேந்திரமோடிக்கு இருக்கும் மக்கள் செல்வாக்கு இந்த ஹரியானா, மஹாராஷ்டிரா மாநில சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு உயர்ந்து நிற்கிறது. ரொக்கெட் வேகத்தில் போகும் அவரது செல்வாக்கை வழி மறிக்க என்ன வழி என்பது தெரியாமல் திகைத்துக் கொண்டிருக்கிறார்கள் எதிர்க்கட்சி தலைவர்கள்.

இது போன்ற நேரத்தில் தேசிய அரசியலில் இரு நிகழ்வுகள் முக்கியமாக அரங்கேறின. முதலில் பழைய ஜனதா கட்சித் தலைவர்கள் எல்லாம் ஒருங்கிணைந்து 'ஜனதா பரிவார்' என்ற அமைப்பு உருவாக்குவதற்கான  முயற்சி. அதற்காக லாலு பிரசாத் யாதவ், நிதிஷ் குமார், முலயாம் சிங் யாதவ், சரத்யாதவ் உள்ளிட்டோர் சந்தித்துப் பேசினார்கள். பா.ஜ.க.விற்கு மாற்றாக காங்கிரஸ் நிற்க முடியாமல் தவிப்பதால் அந்த இடத்தை நாம் பிடிக்க வேண்டும் என்பதே 'ஜனதா பரிவார்' அமைப்பு புதுப்பிப்பின் முக்கிய நோக்கம். இதற்கான முதற்கட்டப் பணிகள் நடைபெற்று, அடுத்த கட்டப் பணிகள் நடைபெறப் போகின்றன.

அதே போல் காங்கிரஸ் கட்சியும் சும்மா இருக்கவில்லை. 'இனி நாம் மட்டும் தோள் தட்டினால் சரிப்பட்டு வராது' என்பதைப் புரிந்து கொண்ட சோனியா காந்தி, முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் 125ஆவது பிறந்த தின விழாவினை படு விமரிசையாகக் கொண்டாடினார். உலகத் தலைவர்கள் மட்டுமின்றி, இந்தியாவில் உள்ள பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களையும் அழைத்தார். அதில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி போன்றோரையும் கூட அழைத்தார். ஜனதா பரிவாரில் உள்ள தலைவர்களையும் அழைத்தார். போதாக்குறைக்கு கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்களையும் அழைத்தார். ஆனால் பா.ஜ.க. தலைவர்களுக்கு அழைப்பு இல்லை. இந்த விழாவில் 'மதசார்பற்ற தன்மையை இந்தியா ஒரு போதும் மறக்க முடியாது' என்று ஆணித்தரமாக சோனியாக் காந்தி பேசினார்.

மதச்சார்பற்ற விழா என்பதால் நாங்களும் கலந்து கொண்டோம் என்று மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் பிரகாஷ் கரத் பேசினார். நேரு விழாவில் கலந்து கொண்ட மம்தா பானர்ஜி பா.ஜ.க.வை கடுமையாக தாக்கிப் பேசினார். மொத்தத்தில் 'மதசார்பற்ற கட்சிகளை எங்கள் குடையின் கீழ் கொண்டு வர முடியும்' என்ற செய்தியை சோனியா பா.ஜ.க. தலைமைக்கு குறிப்பாக பிரதமர் நரேந்திரமோடிக்கு அனுப்பினார்.

நேரு விழாவில் மம்தா பானர்ஜி கலந்து கொண்டு திரும்பியதுமே மம்தா பானர்ஜியின் கட்சியைச் சேர்ந்த எம்.பி. ஒருவர் 'சாரதா ஸ்கேம்' வழக்கில் சி.பி.ஐ.யால் கைது செய்யப்பட்டார். உடனே மேற்குவங்க மாநிலத்தில் தன் கட்சியின் அவசரக் கூட்டத்தைப் போட்டு, 'எங்களை பா.ஜ.க. மிரட்ட வேண்டாம். நாங்களும் பதிலடி கொடுப்போம்' என்ற மம்தா பானர்ஜி முடிந்தால் என்னைக் கைது செய்து பாருங்கள் என்று சவால் விட்டார். இப்படி வேறுபட்ட சூழ்நிலையில் இந்த வித்தியாசமான நாடாளுமன்றக் கூட்டத் தொடர் நடைபெறுகிறது.

இக்கூட்டத் தொடருக்கு முன்பு அனைத்துக் கட்சி கூட்டம் பிரதமர் நரேந்திரமோடி தலைமையில் டெல்லியில் நடைபெற்றது. அதில் பேசிய நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் வெங்கய்யா நாயுடு 37 மசோதாக்கள் குளிர்காலக் கூட்டத்தொடரில் எடுத்துக் கொள்ளப்படுகிறது என்று கூறியிருக்கிறார்.

இவற்றுள் இன்சூரன்ஸ் மசோதா, நிலம் கையகப்படுத்துதல் மசோதா, குட்ஸ் அன்ட் சர்வீஸஸ் டேக்ஸ் மசோதா உள்ளிட்ட பல முக்கிய மசோதாக்கள் வரவிருக்கின்றன. நாடாளுமன்றத்தில் (அதாவது லோக்சபா) பா.ஜ.க.வுக்கு போதிய ஆதரவு இருந்தாலும், ராஜ்ய சபையில் மசோதா நிறைவேற்றுவதற்கு பா.ஜ.க.வும் அதன் கூட்டணிக் கட்சிகளிடமும் உள்ள வாக்குகள் மட்டுமே போதாது. ஆகவேதான் முதல்வர் மம்தா பானர்ஜி, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா போன்றவர்கள் பா.ஜ.க.வுடன் பனிப் போரில் ஈடுபட்டிருப்பது பா.ஜ.க.விற்கு இந்தக் கூட்டத்தொடரில் பெரும் சவாலாக அமையலாம்.

போதாக்குறைக்கு சென்ற கூட்டத்தொடரில் இருந்ததை விட காங்கிரஸ் கட்சியும், ஜனதா பரிவார் அமைப்புகளும் பெரிய அளவில் பா.ஜ.க.விற்கு கூட்டத் தொடரில் இடைஞ்சல் கொடுப்பதற்கான வாய்ப்புகள் இருக்கிறது. மகாத்மா காந்தி கிராமப் புற வேலை வாய்ப்புத் திட்டத்தை முடக்க நினைப்பது, நேருவின் புகழை குறைக்க விரும்புகிறது பா.ஜ.க. என்ற குற்றச்சாட்டு போன்றவற்றால் காங்கிரஸ் கட்சி ஆவேசமடையத் தொடங்கியிருக்கிறது.

'எதிர்க்கட்சிகளின் கருத்துக்களையும், ஆலோசனைகளையும் நாங்கள் எடுத்துக் கொள்வோம். அதற்காக நாங்கள் எக்ஸ்ட்ரா மைல் நடக்கத் தயார்' என்று நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் வெங்கைய்யா நாயுடு. சுருக்கமாக எதிர்க்கட்சிகளை மதிக்கத் தயார் என்பது போன்ற செய்தி இது.

ஆனால் இதற்கு மம்தாவின் திரினாமூல் காங்கிரஸ், ஜெயலலிதாவின் அ.தி.மு.க. மற்றும் சோனியாவின் காங்கிரஸ் கட்சி போன்றவற்றிடமிருந்து எந்த விதமான ஒத்துழைப்புக் கிடைக்கும் என்பதை பா.ஜ.க. புரிந்து கொண்டது மாதிரி தெரியவில்லை.

இது போன்ற நேரத்தில் மஹாராஷ்டிராவில் மிகப் பழமை வாய்ந்த பா.ஜ.க.வின் கூட்டணிக் கட்சி சிவசேனாவும் நல்லுறவில் இல்லை. 'மாநில அரசியல் வேறு. மத்திய அரசியல் வேறு' என்று இப்போதைக்கு அக்கட்சி தலைமை கருத்து தெரிவித்திருந்தாலும், மஹாராஷ்டிராவில் சிவசேனாவை பா.ஜ.க. மதிக்கவில்லை என்பது பிரதமர் நரேந்திரமோடிக்கு தலைவலியாகவே இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆகவே இந்த குளிர் காலக் கூட்டத் தொடர் பா.ஜ.க.வுக்கு எதிராக எந்த மாதிரியான மாற்று அணி உருவாகப் போகிறது என்பது வெளிச்சத்திற்கு வந்து விடும். அதற்கான யுக்திகள் இப்போதே பா.ஜ.க. தவிர்த்த மற்ற கட்சிகளிடம் தெரியத் தொடங்கி விட்டது. அதே சமயத்தில் 'பெரிய அண்ணன்' போக்கில் இன்னும் காங்கிரஸ் நடந்து கொள்ளப் போகிறதா அல்லது மாநிலக் கட்சிகளுடன் 'ஆக்கபூர்வமாக' கைகோர்த்துச் செல்லப் போகிறதா என்பதை வைத்தை அடுத்தகட்ட நிகழ்வுகள் அரங்கேறும். நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு மோடி தலைமையிலான பா.ஜ.க.வுக்கு மாற்று அணியை உருவாக்க வேண்டும் என்ற சிந்தனை இந்த கூட்டத் தொடர் ஆரம்பிக்கும் வேளையில் உருவாகியிருக்கிறது என்பது மட்டும் இப்போது நிச்சயமான செய்தி.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X