2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

சிறுபான்மையினர் மத்தியில் ஆளும் கட்சியினர் மைத்திரிக்காக பிரசாரம்

Kanagaraj   / 2015 ஜனவரி 06 , மு.ப. 06:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம். ஐயூப்

ஜனவரி 8ஆம் திகதி நடைபெறவிருக்கும் ஜனாதிபதித் தேர்தலின் போது தாம் ஆதரவளிப்பது ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் வேட்பாளர் மஹிந்த ராஜபக்ஷவுக்கா அல்லது எதிர்க் கட்சிகளின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கா என்பதை முடிவு செய்யாது இழுத்தடித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸூம் இறுதியில் அந்த முடிவை எடுத்துள்ளன.
அக்கட்சிகளின் முடிவு ஏதும் ஆச்சரியத்துக்குரியது அல்ல. இது எதிர்ப்பார்க்கப்பட்டது தான். அவ்விரு கட்சிகளும் இறுதியில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளருக்கு தமது ஆதரவை தெரிவிக்கும் என நாடே எதிர்ப்பார்த்து.

அதற்குக் காரணம் ஐ.ம.சு.கூ தலைவர்கள் கூறுவதைப் போல் அக்கட்சிகளுக்கும் மைத்திரிபாலவுக்கும் இடையே இரகசிய ஒப்பந்தம் ஏதும் இருப்பதனால் அல்ல. அவர்கள் அந்த முடிவை எடுக்க தத்தமது சமூகங்களால் நிர்ப்பந்திக்கப்பட்டிருந்தனர்.

தாம், மைத்திரிபால சிறிசேனவை ஆதரிப்பதாக இவ்வாரம் அறிவிக்கும் வரை மு.கா. அரசாங்கத்தில் அங்கம் வகித்தது. அதன் தலைவர் ரவூப் ஹக்கீம் அரசாங்கத்தின் நீதி அமைச்சராகவிருந்தார். அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் ஒரு கட்சி ஜனாதிபதித் தேர்தலின் போது ஆளும் கட்சியை தானே ஆதரிக்க வேலண்டும்? அவ்வாறிருக்க தாம் என்ன செய்யப் போகிறோம் என்பதை முடிவு செய்யவில்லை என்று கூறுவதாக இருந்தால் அதுவே அவர்கள் எதிர்க்கட்சியை ஆதரிக்கப் போகிறார்கள் என்பதை கோடிட்டுக் காட்டும் சிறந்த அறிகுறியாகும்.

தமிழ்த்; தேசியக் கூட்டமைப்பு அரசாங்கத்தில் அங்கம் வகிக்காவிட்டாலும் அக் கட்சியின் முடிவும் இவ்வாறு தான் அமையும் என்பது நாடே அறிந்திருந்தது. அது எவ்வளவு தெளிவாக இருந்தது என்றால் கூட்டமைப்பு மைத்திரிபாலவுக்கே அதரவளிக்கும் என இரண்டு வாரங்களுக்கு முன்னர் அமைச்சர் டிலான் பெரேரா, ஊடகவியலாளர் மாநாடொன்றின் போது கூறியிருந்தார்.

கடந்த பல ஆண்டுகளாக தமிழ் ஊடகங்களின் நிலைப்பாட்டை அறிந்த எவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஆளும் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரான மஹிந்த ராஜபக்ஷவை ஆதரிக்கும் என கனவிலும் நினைப்பதில்லை. எனவே, தமிழ் மற்றும் முஸ்லிம் கட்சிகளின் பிரதான கட்சிகளான இவ்விரண்டு கட்சிகளின் முடிவானது திடீரென எடுக்கப்பட்டதல்ல.

ஆனால், இவ்விரண்டு கட்சிகளும் மைத்திரிபாலவை ஆதரிப்பதென்ற முடிவை வெளியிட்டதோடு தமக்கு தமிழ், முஸ்லிம் மக்கள் எவரும் வாக்களிக்க மாட்டார்கள் என்றோ அல்லது வாக்களிக்கத் தேவையில்லை என்றோ ஆளும் கட்சி நினைக்கிறது போலும். அதனால் தான் அவர்கள் தமிழ், முஸ்லிம் மக்களைப் பற்றிய எதிர்ப்பு மனப்பபான்மையை அல்லது தமிழ், முஸ்லிம் மக்களைப் பற்றியதோர் அச்சத்தை சிங்கள மக்கள் மத்தியில் ஏற்படுத்தும் வகையில் கருத்து வெளியிட்டு வருகின்றனர். தமிழர்களையும் முஸ்லிம்களையும் பற்றி அச்சத்தை ஏற்படுத்தி அதன் மூலம் சிங்கள மக்களின் ஆதரவை பெறுவதே அவர்களின் நோக்கமாக இருக்கிறது என்பது தெளிவாகிறது.

முஸ்லிம்களுக்காக கல்முனையை மையமாகக் கொண்ட புதிய மாவட்டமொன்றை உருவாக்க வேண்டும் என மு.கா. கோரியதாகவும் ஜனாதிபதி அதனை நிராகரித்ததாகவும் மைத்திரிபால அந்தக் கோரிக்கையை ஏற்றுக் கொண்டதனாலேயே மு.கா., அவரை ஆதரிக் முடிவு செய்துள்ளது எனவும் ஆளும் கட்சியினர் கூறுகின்றனர்.

மு.கா.வின் முடிவுக்கு காரணமான பல விடயங்கள் இருக்க மு.கா.வின் இந்தக் கோரிக்கையை மட்டும் அடிப்படையாகக் கொண்டு முன்வைக்கப்படும் இந்த வாதமானது அரசியல் வாதமல்ல, ஒரு வித எண் கணித தர்க்கமாகவே தெரிகிறது.

மு.காவின் முடிவுக்கு காரணமான ஏனைய விடயங்களை ஒரு புறம் வைத்துவிட்டு நாமும் மு.கா.வின் இந்த கோரிக்கையை மட்டும் கருத்திற் கொண்டாலும் மைத்திரிபால இந்தக் கோரிக்கையை ஏற்றுக் கொண்டார் என்று எவ்வாறு முடிவு செய்ய முடியும்? மஹிந்தவைப் போலவே மைத்திரிபாலவும் கல்முனை மாவட்டக் கோரிக்கையை நிராகரித்தால் மு.கா. என்ன செய்ய வேண்டும்? மஹிந்தவை ஆதரிப்பதா? அவ்வாறு செய்தால் மஹிந்த மு.கா.வின் கோரிக்கையை இரகசியமாக ஏற்றுக் கொண்டதாக எதிர்க் கட்சிகள் கூற முடியாதா? அரசாங்கத்தின் வாதமும் அது போன்றது தான்.

நிர்வாக மாவட்டம் என்பது மாகாண சபைகளைப் போல் அரசியல் அலகொன்றல்ல. மாவட்டம் என்பது நிர்வாக அலகொன்றாகும். அதன் பொறுப்பாளர் மாவட்டச் செயலாளரே. அவர் அரசியல்வாதி அல்ல. அவரை அரச வேவை ஆணைக்குழுவே நியமிக்கும். நடைமுறையில் ஜனாதிபதிக்கும் அந்த நியமனங்களில் பங்குண்டு. எனவே அதனைப் பற்றி ஏன் சிங்கள மக்கள் அச்சப்பட வேண்டும்?
இதற்கு முன்னரும் புதிய மாவட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. உதாரணமான கிளிநொச்சி மாவட்டம் பிற்காலத்தில் உருவாக்கப்பட்டதாகும். போர் காலத்திலும் புலிகள் கிளிநொச்சி மாவட்டத்தை நிரவகிக்கும் போதும் அம் மாவட்டச் செயலாளர் (அரசாங்க அதிபர்) ஜனாதிபதியினதும் அரச சேவை ஆணைக்குழுவினதும் பொது நிரவாக அமைச்சினதும் பணிப்புரைகளின் படியே செயற்பட்டார். எனவே, புதிய மாவட்டம் என்பது நாட்டை பிரித்துக் கொடுப்பதல்ல.

சிங்களம் தெரியாத கல்முனைப் பகுதி தமிழ் பேசும் மக்கள் தமது அலுவல்களை செய்து கொள்வதற்காக தனியானதோர் கச்சேரியையே மு.கா. கோருகிறது. இதனை கல்முனையில் திறக்க அரசாங்கம் அச்சப்படுவதாக இருந்தால் அதனை அம்பாறையிலேயே திறக்கலாம். அவ்வளவு தான். இதில் நாட்டுப் பிரிவினை போன்ற பெரிய பெரிய வார்த்தைகளை பாவிப்பதற்கு எந்த அவசியமும் இல்லை.

மைத்திரிபால, கல்முனை மாவட்டத்தை உருவாக்க விருப்பம் தெரிவித்ததனால் மு.கா. அவருடன் சேர்ந்ததாக அரசாங்கத் தலைவர்கள் கூறுகிறார்கள். அவ்வாறாயின் முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனின் அகில இலங்கை மக்கள் காங்கிரஸூம் பிரதி அமைச்சர் பைசர் முஸ்தபாவும் ஏன் எதிர்க் கட்சியில் இணைந்து கொண்டார்கள் என்பதை அவர்கள் விளக்க வேண்டும்.

மைத்திரிபால, கல்முனை மாவட்டத்தை அங்கிகரித்துள்ளதாக ஆளும் கட்சியினர் கூறுவது உண்மையாக இருந்தால் அது ஜனாதிபதித் தேர்தலின் போது முஸ்லிம்களின் ஆதரவை நிர்ணயிக்கும் அளவுக்கு முக்கியமானதாகவும் இருந்தால் கல்முனைப் பகுதி மக்கள் மைத்திரிபாலவுக்கே வாக்களிக் வேண்டும். அதைத் தான் ஆளும் கட்சியினர் கூறுகிறார்கள். மைத்திரிபால கல்முனை மாவட்டத்தை அங்கிகரித்துள்ளதாக ஆளும் கட்சியினர் கூறுவதன் மூலம் ஆளும் கட்சியினர் முஸ்லிம் வாக்குகளை கைவிட்டு விட்டுள்ளனர் என்று அதனால் தான் முதலில் கூறினோம்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சம்பந்தமான ஆளும் கட்சியின் வாதமும் இதை ஒத்ததே. தமது பிரச்சினைகளை தீர்க்கும் வேட்பாளருக்கு தாம் ஆதரவு வழங்குவதாக கூட்டமைப்பு முன்னர் கூறியதாகவும் இப்போது கூட்;டமைப்பு மைத்திரிபாலவை ஆதரிக்க முடிவு செய்ததன் மூலம் மைத்திரிபால அந்தப் பிரச்சினைகளை தீர்க்க உடன்பட்டுள்ளமை தெளிவாகிறது என்றும் அரசாங்கத்தின் அமைச்சர்கள் கூறுகிறார்கள். இதுவும் ஒருவித கணித தர்க்கம் போல் தான் தெரிகிறது.

மைத்திரிபால, தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்க்க உடன்பட்டு இருந்தால் அரசாங்கத்தின் கருத்துப் படி தமிழ் மக்கள் மைத்திரிபாலவுக்கே ஆதரவு வழங்க வேண்டும். இது ஆளும் கட்சியினரே மைத்திரிபாலவுக்காக பிரசாரத்தில் ஈடுபடுவதற்கு சமமாகும். இனிமேலும் தமிழ் மக்களின் ஆதரவை எதிர்ப்பார்ப்பதில் அர்த்தம் இல்லை என்ற நிலை வந்தால் மட்டுமே ஆளும் கட்சியினர் இது போன்ற பிரசாரத்தில் ஈடுபட வேண்டும்.

தமிழர்களும் முஸ்லிம்களும் ஜனாதிபதித் தேர்தலொன்றின் போது ஒரு வேட்பாளரை ஆதரிப்பதானது அவ்வாறு வெறும் வாதங்களின் அடிப்படையில் முடிவு செய்யக் கூடியதல்ல. அவர்களது பிரச்சினைகள் வெகுவாக சிக்களார்ந்தவையாகும். உதாரணமாக தமிழ்த் தலைவர்கள் நாட்டுக்கு பாதகமான கோரிக்கைகளை முன்வைத்ததாக வைத்துக் கொண்டாலும் அக் கோரிக்கைளை இரு பிரதான வேட்பாளர்களும் நிராகரித்தாலும் அவர்கள் தேர்தலில் இருந்து ஒதுங்கிக் கொள்ள முடியாது.

அப்போது அவர்கள் முன் மூன்று மாற்று ஆலேசனைகள் இருக்கும். ஒன்றில் அவர்கள் தேர்தலை பகிஷ்கரிக்க வேண்டும். அல்லது அவர்கள் தமது கோரிக்கைளுக்கு புறம்பான விடயங்களின் அடிப்படையில் ஆளும் கட்சி வேட்பாளரை ஆதரிக்க வேண்டும். அதுவும் இல்லாவிட்டால்  தமது கோரிக்கைளுக்கு புறம்பான விடயங்களின் அடிப்படையில் எதிர்க் கட்சி வேட்பாளரை ஆதரிக்க வேண்டும். அதை பாவித்து பிரதான வேட்பாளர்களில் ஒருவர் அவர்களது கோரிக்கைகளை ஏற்றுக் கொண்டிருப்பதாக கூறுவது அரசியல் நேர்மையற்றத்தன்மையே தவிர வேறொன்றும் அல்ல.

அனால், தமிழ் தலைவர்கள் எவரும் தமக்கு சாதகமாக நடந்து கொள்வதாக இருந்தால் இவர்கள் அதைப்பற்றி பேச மாட்டார்கள். உதாரணமாக தமிழ் மக்கள் இம் முறை தேர்தலை பகிஷ்கரிக்க வேண்டும் என அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் தலைவர் கஜேந்திர குமார் பொன்னமபலம் அண்மையில் கூறியிருந்தார். அந்த முடிவு மஹிந்த ராஜபக்ஷவுக்கு சாதகமாகவே அமையும். தமிழ் காங்கிரஸ், தமிழ் கூட்டமைப்பை விடவும் புலிகள் அமைப்பை போற்றிப் புகழும் கட்சியாகும். ஆனால், அக் கட்சியின் முடிவைப் பற்றி ஆளும் கட்சியினர் மௌனம் சாதித்து வருகிறார்கள்.

தீவிரவாதிகளான ஆனந்தி சசிதரன் மற்றும் சிவாஜிலிங்கம் போன்றோர்களும் இப்போது தேர்தலை பகிஷ்கரிக்கும் நிலைக்கு வந்திருக்கிறார்கள். அதுவும் ராஜபக்ஷவுக்கு சாதகமான முடிவாகும். ஆனால், தமது தீவிரவாதத்தினால் அதனை காண அவர்கள் தவறியிருக்கிறார்கள். அது ஒருபுறம் இருக்க, பொன்னம்பலமும். சசிதரனும் சிவாஜிலிங்கமும் மஹிந்த ராஜபக்ஷவுடன் உடன்பாடு செய்து கொண்டிருப்பதாக கூற முடியுமா?

2005 ஆம் ஆண்டு புலிகள் ஜனாதிபதித் தேர்தலை பகிஷ்கரிக்குமாறு தமிழ் மக்களை பணித்தனர். இதன் விளைவாகவே மஹிந்த ராஜபக்ஷ அந்தத் தேர்தலில் வெற்றி பெற்றார். அரசாங்கத்தின் தற்போதைய வாதங்களின் படி அதுவும் மஹிந்த ராஜபக்ஷவுக்கும் பிரபாகரனுக்கும் இடையிலான ஒப்பந்தமாகும். முப்பதாண்டு காலமாக போருக்காக புலிகளுக்கு ஆயுதங்களை கொள்வனவு செய்து வழங்கிய குமரன் பத்மநாதன் கைது செய்யப்பட்டது முதல் திடீரென ஐக்கிய இலங்கைக் கொள்கையையும் ஏற்றுக் கொண்டிருக்கிறார். இது என்ன அதிசயம்? அதுவும் இரகசிய ஒப்பந்தமா என எதிர்க்கட்சிகள் கேட்கலாம்.

ஆளும் கட்சியினர் அரசியல் அறிவிலிகள் என்று கூற முடியாது. அவர்கள் உண்மையிலேயே இங்கு சிங்கள மக்கள் மத்தியில் தமிழர்களைப் பற்றிய அச்சத்தை ஏற்படுத்தி அதனை தமிழ் எதிர்ப்பாக மாற்றி அந்த தமிழ் எதிர்ப்பை தமக்கான வாக்குகளாக மாற்றவே முயற்சிக்கிறார்கள். அதாவது அவர்கள் இனவாதத்தை தூண்டி வாக்கு வேட்டையில் ஈடுபட்டு இருக்கிறார்கள். இவர்களுக்கு நாட்டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதில் அக்கறை இல்லை என்பதையே இது காட்டுகிறது.

இரண்டும் மூன்றும் ஐந்து, எனவே ஐந்தில் மூன்றை கழித்தல் இரண்டு என்பதைப் போல் கணித தர்க்கங்களால் இது போன்ற அரசியல் பிரச்சினைகளை விளங்கிக் கொள்ள முயற்சிப்பது ஒன்றில் மடமை, அல்லது ஏமாற்று.

தமிழ் கூட்டமைப்பினதும் மு.கா.வினதும் முடிவுக்கு காரணமான நிலைமையை அரச தலைவர்களுக்குத் தெரியாமல் இல்லை. ஓரிரு வருடங்களுக்கு முன்னர் 'கிறீஸ் யக்கா' பிரச்சினை ஏற்பட்ட போதும் முஸ்லிம்களுக்கு எதிரான பிரசாரங்கள் மற்றும் வன்முறைகளின் போதும் அரசாங்கம் நடந்து கொண்ட முறையைப் பற்றி முஸ்லிம் மக்கள் திருப்தியடையவில்லை. எனவே, முஸ்லிம்கள் ஆளும் கட்சியை கைவிட்டு விட்டார்கள் அது கடந்த மத்திய, தென், மேல் மற்றும் ஊவா மாகாண சபைத் தேர்தல்களின் போது தெளிவாக தெரியவிருந்தது. இந்த ஜனாதிபதித் தேர்தலின் போதும் அவர்கள் ஐ.ம.சு.கூ.வை ஆதரிக்கத் தயாராக இல்லை.
மு.கா., மைத்திரிபாலவை ஆதரிக்க முடிவு செய்யு முன் முஸ்லிம்கள் அதனை முடிவு செய்து விட்டார்கள். முன்னர் கட்சி எடுத்த முடிவை மக்கள் ஏற்றுக் கொண்டதாகவும் இம் முறை மக்களின் முடிவை ஏற்க கட்சி நிர்ப்பந்திக்கபட்டுள்ளதாகவும் மு.கா. நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எச்.எம். ஹாரிஸ் அண்மையில் கூறியிருந்தார். அது தான் உண்மை.

மு.கா. இம் முறை இந்த முடிவை எடுக்காவிட்டால் அடுத்து வரும் பொதுத் தேர்தலின் போது பெரும்பாலான முஸ்லிம் வாக்காளர்கள் மு.கா.வை கைவிட்டுவிடும் நிலைமை ஏற்பட்டாலும் ஆச்சரியப்படுவதமற்கில்லை. அதேவேளை அந்த வாக்காளர்கள் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பக்கம் சாயும் சாத்தியக்கூறுகளும் அதிகம்.

தமிழ்த் தேசியய் கூட்டமைப்பின் நிலைமையும் இதுவே. அரசாங்கம் நீண்ட காலமாக தமிழ் மக்களுடன் மோதிக் கொண்டு தான் இருக்கிறது. எனவே, தமிழ் மக்கள் ஆளும் கட்சியை ஆதரிக்கத் தயாராக இல்லை. ஆளும் கட்சியை ஆதரிக்க தாராக இல்லை எனபதை விட அவர்கள் ஆளும் கட்சியை எதிர்க்க விரும்புகிறார்கள். அது எவ்வளவுக்கு என்றால் போர் முடிந்தவுடன் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலின் போது புலிகளுக்கு எதிரான போரின் போது படையினருக்கு தலைமை தாங்கிய இராணுவத் தளபதியையும் தமிழ் மக்கள் ஆதரித்தார்கள்.

எனவே, தமிழ் கூட்டமைப்பு தேர்தலை பகிஷ்கரிக்கவோ அல்லது மஹிந்த ராஜபக்ஷவை ஆதரிக்கவோ முடியாது. ஆனால் இதனை தெரிந்திருந்தும் ஆளும் கட்சியினர் அவர்களது முடிவை பாவித்து இனவாதத்தை தூண்டுகிறார்கள்.       

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .