Thipaan / 2015 ஜனவரி 21 , பி.ப. 09:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
மஹிந்த ராஜபக்ஷ என்கிற சர்வாதிகாரத்துக்கு எதிராக வட மாகாண சபைத் தேர்தலிலும், ஜனாதிபதித் தேர்தலிலும் தீர்க்கமான முடிவுகளோடு செயற்பட்ட தமிழ் மக்கள், ஜனநாயக ரீதியிலான அரசியல் போராட்டங்களில் அடுத்த கட்டம் நோக்கி நகர வேண்டிய தருணம் இது.
மஹிந்த ராஜபக்ஷவின் வீழ்ச்சியோடு அரசியல் ரீதியிலான போராட்டங்கள் முடிந்துவிட்டதாகவோ, புதிதாக பதவியேற்றுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான தேசிய அரசாங்கம் தமிழ் மக்கள் எதிர்பார்க்கும் தீர்வினை உடனடியாக தந்துவிடும் என்றோ கொள்ள முடியாது.
தொடர்ச்சியான அழுத்தங்களை வழங்கக் கூடிய அரசியலை எந்தவித விட்டுக் கொடுப்புமின்றி தமிழ் மக்கள் தொடர்ந்தும் முன்னெடுக்க வேண்டும். இப்போது கிடைத்திருக்கின்ற ஜனநாயக இடைவெளியை குறிப்பாக, தமிழ் அரசியல் தலைமைகளும், கட்சிகளும், இளைஞர்களும் சரியாகக் கையாள வேண்டும்.
ஆயுதப் போராட்டங்களின் வீழ்ச்சிக்குப் பின்னரான சிறுகாலம் தமிழ் இளைஞர்கள் மத்தியில் வெறுமையை மாத்திரமே விட்டு வைத்திருந்தது.
ஆனால், மெல்ல நகர்ந்த காலம் யதார்த்தப் போராட்டக் களத்தை உணர வைத்தது. அதுதான், தமிழ் இளைஞர்கள் மத்தியில் போராட்ட குணம் இன்னமும் அதே ஆக்ரோசத்தோடு இருக்கின்றது என்பதையும் வெளிப்படுத்த வைத்தது.
வட மாகாண சபைத் தேர்தலும், ஜனாதிபதித் தேர்தலும் பெரும் அச்சுறுத்தலான ஆட்சிக் காலத்திலேயே நடைபெற்றது. ஆனாலும், அவ்வாறான காலங்களிலும் கூட தம்முடைய கருத்துக்களினூடு அடுத்த கட்ட அரசியல் நகர்வு குறித்து அக்கறையோடு செயலாற்றினார்கள்.
இரண்டு தேர்தல்களிலும் தமிழ் மக்களின் பெரும் அர்ப்பணிப்பான வாக்களிப்பு என்பது இளைஞர்களின் குறிப்பிட்டளவான முயற்சியினாலேயே சாத்தியப்பட்டது.
தமிழ் அரசியல் உரிமைப் போராட்டங்களில் இளைஞர்களது பங்களிப்பு என்பது காலம் காலமாக பெரும் வகிபாகத்தைக் கொண்டது. அது, ஆயுத ரீதியிலான போராட்டங்களின் போக்கிலும் கோலொச்சிக் காணப்பட்டது. சில நம்பிக்கைகள், கொள்கைகள் பொய்த்துப் போனாலும் கூட புதிய நம்பிக்கைகளைக் கொள்வதும், உரிமைகளை இழந்துவிடாது தக்க வைப்பதற்காக போராட்டத்தை முன்னெடுப்பதையும் தமிழ் இளைஞர்கள் என்றைக்குமே கைவிட்டதில்லை.
வேணுமென்றால் சிறிய இடைவெளியை எடுத்துக் கொண்டிருக்கின்றார்கள் என்று கொள்ள முடியும்.
இளைஞர்களும், தொழிலாளர்களுமே ஜனநாயக அரசியலின் பெரும் சக்தி. அவர்களே நாட்டு மக்களின் அபிப்பிராயங்களை அதிகம் பிரதிபலிக்கின்றனர்.
அப்படிப்பட்ட நிலையில், வட - கிழக்கு தமிழ் இளைஞர்கள் தமது அரசியல் உரிமைப் போராட்டங்களின் பங்களித்தல் நிலையில் அடுத்த கட்டம் நோக்கி செல்ல வேண்டும். அதுவே, ஒட்டுமொத்த தமிழ் மக்களையும் அடுத்த கட்டம் நோக்கி அழைத்துச் செல்ல உதவும்.
தமிழ் இளைஞர்கள் மத்தியில் 'அரசியல் போராட்டங்களில் நம்பிக்கை கொண்டவர்கள், தவிர்க்க முடியாமல் இணைந்திருப்பவர்கள், விரக்தி மனநிலையில் இருப்பவர்கள்' என்று மூன்று தரப்பினரைக் காண முடியும்.
இந்த மூன்று தரப்பும் தேர்தல் மற்றும் வாக்களிப்பு உள்ளிட்ட விடயங்களில் ஒரே புள்ளியில் இணைக்கின்றார்கள். வாக்களிப்பு என்பது தமிழ் மக்களிடம் இருக்கின்ற இறுதி ஆயுதம் என்ற நிலையில் பெருமளவான வாக்களிப்பை உறுதி செய்கின்றார்கள்.
ஆனால், தேர்தலும், வாக்களிப்பும் மட்டுமே அரசியல் போராட்டங்களின் பங்களிப்பாகக் கொள்ள முடியாது. அதனைத் தாண்டி அரசியல் ரீதியிலான தீர்மானங்களை மேற்கொள்ளும் சக்தியாக தமிழ் இளைஞர்கள் மாற வேண்டும்.
சர்வதேச பொறிமுறை என்னவென்பதைப் புரிந்து கொண்டு, அதனைக் கையாளும் அளவுக்கு தம்முடைய அரசியல் அறிவினை வளர்த்துக் கொண்டு நகர வேண்டும். அதுதான், தமிழ் மக்களை தொடர்ச்சியாக தக்க வைக்க உதவும்.
தமிழ்த் தேசிய அரசியலைப் பொறுத்த வரையில் தலைமைகள் மீது பெருமளவான இளைஞர்கள் அதிருப்தியில் இருக்கின்றார்கள். இதனை தமிழ் அரசியல் தலைமைகளும் புரிந்து கொண்டிருக்கின்றன. அதிக தருணங்களில் தமிழ் அரசியல் தலைமைகள் இளைஞர்களின் பங்களிப்பு என்பது தேர்தல் மற்றும் வாக்களிப்போடு நிறுத்தப்பட வேண்டும் என்று எதிர்பார்க்கின்றன. ஆனால், அது, நியாயமான அரசியலில் சரியான அணுகுமுறையாக இருக்க முடியாது.
இளைஞர்களிடம் உணர்ச்சி வேகம் அதிகம் தான், எனினும் தீர்மானங்களை மேற்கொள்ளும் போது யதார்த்தப் புரிதல் இல்லை என்று அர்த்தம் கொள்ள முடியாது.
தனி ஈழம் இனி சாத்தியமில்லை என்பதை பெரும்பான்மையான தமிழ் இளைஞர்கள் ஏற்றுக் கொண்டுவிட்டார்கள். அப்படியிருக்கின்ற நிலையில் தான் ஜனநாயக ரீதியிலான அரசியல் போராட்டங்களில் நம்பிக்கை கொள்ள ஆரம்பித்திருக்கின்றார்கள்.
ஆனால், நேரடியாக செயற்பாட்டு அரசியல் தளத்துக்குள் நுழைவது தொடர்பில் அவர்களுக்கு பெரும் சந்தேகம் இருக்கின்றது. அதற்கு தமிழ் அரசியல் தலைமைகளும் காரணமாக இருக்கின்றன.
தமது அரசில் இருப்பு காணாமற்போய்விடும் என்ற காரணத்தினாலும் தமிழ் அரசியல் தலைமைகள் இளைஞர்களை உள்வாங்குவது தொடர்பில் அச்சம் கொண்டிருக்கின்றன. இது, நியாயமான அரசியலின் அடுத்த கட்டம் நோக்கிய நகர்வுக்கு பெரும் இடையூறாகும். தவிர்க்க முடியாமல் தமிழ் மக்களின் அடுத்த கட்டங்களை தமது தோள்களில் இளைஞர்களே சுமந்தாக வேண்டும் என்கிற சூழ்நிலையில் அதனைத் புரிந்து கொண்டு இளைஞர்களை உள்வாங்குவது தொடர்பில் அரசியல் தலைமைகள் அக்கறை கொள்ள வேண்டும்.
மாறாக, தமது பதவிகளுக்கு அச்சுறுத்தலானவர்கள் என்று புறந்தள்ளும் போது அது, தமிழ் சமூகத்துக்கு ஆற்றும் துரோகமாக மாறும். இதனை நாம் தொடர்ச்சியாக எதிர்கொண்டே வந்திருக்கின்றோம்.
தமிழ் அரசியல் தலைமைகள் மீது அதிருப்தியிலுள்ள இளைஞர்கள் தமது தெளிவான அரசியல் குறித்தும் நிறையவே செயலாற்ற வேண்டியிருக்கின்றது. ஏனெனில், பரவலாக சிதறடிக்கப்பட்டிருக்கும் கருத்தியலை ஒரே புள்ளியில் இணைத்துக் கொள்ள வேண்டும்.
அதுபோல, விரக்தி மனநிலையிலிருக்கும் இளைஞர்களையும் நம்பிக்கையுள்ளவர்களாக மாற்ற வேண்டும். இந்த இரண்டு செயற்பாடும் தமிழ் அரசியல் தலைமைகளுக்கு பெரும் அழுத்தங்களை வழங்கி தமிழ் அரசியலில் தீர்மானங்களை மேற்கொள்ளும் சக்தியாக மாற்றும்.
தமிழ் இளைஞர்களின் அரசியல் முழு முனைப்பு என்பது புதியதொரு அமைப்பினூடாக முன்னெடுக்கப்பட வேண்டும் என்று அர்த்தம் கொள்ள வேண்டியதில்லை. மாறாக, எம்மிடையே இருக்கின்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்கிற அமைப்புக்குள் உள்நுழைந்தும் கூட ஆரம்பிக்கக் கூடியதாக இருக்கும்.
தமிழ் அரசியல் உரிமைப் போராட்டங்களைச் சீர்குலைப்பதற்காக தொடர்ச்சியாக பினாமிக்குழுக்களையும், முகவர்களையும் சிங்கள பௌத்த தேசியவாத அரசாங்கங்கள் தமிழ் மக்கள் மத்தியில் ஏவி வந்திருக்கின்றன.
அப்படிப்பட்ட நிலையில், தமிழ் மக்கள் மத்தியில் பலமான அரசியல் அமைப்பாக இருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினைப் முழுமையாகப் புறக்கணித்து புதிய அரசியல் அமைப்பினை தோற்றுவிக்க வேண்டிய அவசியம் இல்லை. ஏனெனில், பலமான கட்டமைப்பொன்றுக்குள் புதிய வழிகளைத் திறப்பதுதான் தமிழ் இளைஞர்களின் முன்னாலுள்ள இப்போதைய கடமை.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தவிர்த்து வடக்கு கிழக்கு தமிழ் மக்கள் மத்தியில் பலமான அரசியல் அமைப்பொன்று இல்லை என்கிற நிலையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினை தமிழ் இளைஞர்கள் மேற்கொள்ளும் அரசியல் முடிவுகள் சிதறடித்துவிடக்கூடாது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்கள், கட்சிகள் மீதான விமர்சனங்களை கூட்டமைப்பின் செயற்பாட்டு அரசியலுக்குள் நுழைந்து வெளிப்படுத்த வேண்டும். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களோ, முக்கியஸ்தர்களோ இளைஞர்களின் பலமான கோரிக்கைகளை அல்லது செயற்பாட்டு அரசியலை புறந்தள்ள முடியாத சூழல் இருக்கின்றது.
அப்படியான நிலையில், இரண்டு தரப்பும் ஒன்றையொன்று பற்றி தமிழ் மக்களின் அரசியலை சரியாக நகர்த்த வேண்டும்.
தேர்தல்கள் உள்ளிட்ட முக்கிய அரசியல் நிகழ்வுகளின் போது அதிக அக்கறையோடு இருக்கும் தமிழ் இளைஞர்களில் குறிப்பிட்டளவானவர்கள் மற்றைய காலங்களில் ஆழ் உறக்க நிலைக்கு சென்றுவிடுகின்றார்கள்.
அது, தமிழ் மக்கள் மத்தியில் தொடர்ச்சியாக அரசியல் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டிய கடமையை இல்லாமற் செய்து விடுகின்றது.
வடக்கு, கிழக்கில் தமிழ் அரசியல் பிரதிநிதித்துவங்களை எவ்வாறு பேணுவது, அதற்கான தயார்ப்படுத்தல்கள், தெளிவூட்டல்கள் என்ன?, என்பதையெல்லாம் அதிகம் கவனத்தில் கொள்ளாது விடுகின்றது.
ஆயுதப் போராட்டம் வடக்கு, கிழக்கிலுள்ள தமிழ் மக்களில் ஒரு தொகையானவர்களை பலிவாங்கிவிட்டது. அதுபோல, குறிப்பிட்டளவானவர்களை வெளிநாடுகளை நோக்கி புலம்பெயர வைத்துவிட்டது.
அப்படியான நிலையில், எஞ்சியுள்ள தமிழ் மக்களின் பிரதிநிதித்துவத்தைக் காப்பது எப்படி, அதற்கான முனைப்புக்கள் எவ்வாறு அமைய வேண்டும் என்றெல்லாம் சிந்திக்க வேண்டியிருக்கின்றது.
பல்லின நாடான இலங்கை இனவாத அரசியலினால் ஆட்சியைத் தக்க வைத்து வரும் நாடு. எப்போதாவது அதிசயம் நிகழ்ந்து மாற்றங்களும் ஏற்படுதுண்டு.
இலங்கை தேர்தல் முறையின் பிரகாரம் சிறுபான்மையினமான தமிழ் மக்களின் ஒரு பிரதிநிதித்துவம் இழப்பும் கூட பெரும் இழப்பாகவே கொள்ள வேண்டும்.
தேர்தல் காலங்களில் வாக்குகளைப் பிரிக்கும் சதித்திட்டங்களை முறியடிப்பது போல, வடக்கு, கிழக்கிலுள்ள தமிழ் மக்களின் தொகைக்கு ஏற்ப எத்தனை நாடாளுமன்ற பிரதிநிதித்துவம், மாகாண சபைப் பிரதிநிதித்துவம் கிடைக்க வேண்டும் என்பதில் கவனமாக இருக்க வேண்டும்.
தமிழ் மக்களின் வாக்குகளைப் பிரிந்தாழும் சக்திகள் அந்த வாக்குகளைக் கொண்டு தம்மை அரசியல் அரங்கில் தக்க வைக்க முயல்கின்றன. இந்த விடயம் தொடர்பில் தமிழ் இளைஞர்கள் முழு அக்கறையோடு இருக்க வேண்டும்.
வடக்கில் வன்னித் தேர்தல் மாவட்டமும், கிழக்கு மாகாணத்திலுள்ள அனைத்து மாவட்டங்கள் தொடர்பிலும் தமிழ் மக்கள் மத்தியில் முழுமையான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.
அந்த மாவட்டங்களில் வாக்களிப்பு என்பது ஏன் முழு முனைப்போடு முன்னெடுக்கப்பட வேண்டும் என்பதுவும், மாறாக அக்கறையற்ற வாக்களிப்பு என்பது இன சமநிலையை கேள்விக்குள்ளாக்கும் வகையிலான பிரதிநிதித்துவத் தெரிவை ஏற்படுத்தி விடும் என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும்.
இலங்கையில் இப்போது ஏற்பட்டிருக்கின்ற ஆட்சி மாற்றம் தமிழ் அரசியலை சீர்ப்படுத்துவதற்கும், இளைஞர்களை சரியான புள்ளியில் ஒருங்கிணைப்பதற்கும் உதவக் கூடியது. ஆனால், இந்த ஆட்சி மாற்றம் வழங்கியிருக்கும் ஜனநாயக இடைவெளி எவ்வளவு காலத்துக்கு நீளும் என்பது கேள்விக்குறி.
அப்படியான நிலையில், தமிழ் இளைஞர்கள் ஆழ் உறக்க நிலைக்கு செல்லாது அரசியல் போராட்டத்தின் அடுத்த கட்டத்துக்கு விரைவிலேயே நகர வேண்டும். முதல் அடியை யார் எடுத்து வைப்பது என்ற சந்தேகம் அனைவர் மத்தியிலும் இருக்கின்றது.
ஏன், தனித்த ஒருவர் முதல் அடியை எடுத்து வைக்க வேண்டும். அனைவரும் இணைந்தே முதல் அடியை எடுத்து வைக்கலாம். அதுதான், தமிழ் அரசியல் உரிமைப் போராட்டத்திற்கு மிகவும் அவசியமானது!
21 minute ago
4 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 minute ago
4 hours ago
4 hours ago