Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை
Kanagaraj / 2015 மார்ச் 06 , மு.ப. 09:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
கடந்த சில ஆண்டுகளாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் மார்ச் மாத கூட்டத்தொடர் இலங்கை தொடர்பிலான பரபரப்புக் கட்சிகளினால் நிறைந்திருக்கும். தம்முடைய கட்டுக்குள் வர மறுத்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான இலங்கை அரசாங்கத்துக்கு பெரும் குடைச்சல் கொடுக்கும் களமாக மேற்குநாடுகள் அதனைப் பயன்படுத்தி வந்தன.
ஆனால், மஹிந்த ராஜபக்ஷ தோற்கடிக்கப்பட்டு மேற்குநாடுகளின் ஆசிர்வாதம் பெற்ற மைத்திரிபால சிறிசேன தலைமையிலான புதிய அரசாங்கம் பதவியேற்றதும், மனித உரிமைகள் பேரவைக் கூட்டத் தொடரில் இலங்கை மிக மென்மையாகவும், பெரும் பாசத்தோடும் அரவணைக்கப்பட்டு கையாளப்பட்டிருக்கின்றது.
இலங்கையின் மீது சர்வதேச ரீதியில் பெரும் அழுத்தங்களை வழங்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட 'இறுதி மோதல்களில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பிலான ஐக்கிய நாடுகளின் விசாரணை அறிக்கை' இந்தக் கூட்டத் தொடரில் சமர்ப்பிக்கப்படாமல் ஒத்திவைக்கப்பட்டு இலங்கையின் புதிய அரசாங்கத்துக்கு ஆதரவான நிலைப்பாடு எடுக்கப்பட்டிருக்கின்றது. விசாரணை அறிக்கை, ஆறு மாதங்களின் பின்னர் இடம்பெறும் செப்டம்பர் மாத கூட்டத் தொடரில் சமர்ப்பிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டாலும், அதன் இயங்குநிலை அல்லது உண்மையான விசாரணை நிலை தொடர்பில் தமிழ் மக்கள் அச்சம் கொள்ள வேண்டியிருக்கின்றது.
இறுதி மோதல்களின் போது பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் கருத்துக்களும், கோசங்களும், போராட்டங்களும் எந்தவொரு தரப்பினாலும் அவ்வளவு அக்கறை கொண்டு பார்க்கப்படவில்லை. காலம் காலமாக தமிழ் மக்கள் கருவிகளாக மட்டுமே கையாயப்பட்டு வந்த நிலையில், இம்முறை கருவிகளின் பாவனை அவசியமற்ற நிலையில் தூரத்தில் வைக்கப்பட்டிருக்கின்றார்கள். மேற்குநாடுகளுக்கும், இந்தியாவுக்கும் மீண்டும் இலங்கையை கையாள்வதற்கு எப்போது தமிழ் மக்கள் தேவையோ அப்போது மீண்டும் எடுத்துக் கொள்வார்கள். அப்போது, திடீர் பாசம் பிறக்கும். அநீதிகளுக்கான புதிய நீதி(?) என்கிற சோகத்தோடு வருவார்கள்.
ஆட்சி மாற்றத்துக்குப் பின்னரான கடந்த 50 நாட்களில் அமெரிக்காவின் உதவி இராஜாங்கச் செயலாளர் நிஷா தேசாய் பிஸ்வால், ஐக்கிய நாடுகளின் அரசியல் விவகாரங்களுக்கான உதவிச் செயலாளர் ஜெப்ரி பெல்ட்மன் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் இலங்கைக்கு வந்து சென்றிருக்கின்றார்கள். அதுபோல, இலங்கையின் வெளிவிவகார அமைச்சரான மங்கள சமரவீர அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் ஜோன் கெரி, ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் உள்ளிட்ட முக்கியஸ்தர்களைச் சந்தித்து பேசியுள்ளதுடன், இந்தியா, சீனா உள்ளிட்ட வெளிநாடுகளுக்கும் பயணம் செய்து முக்கிய கலந்துரையாடல்களில் ஈடுபட்டிருக்கின்றார். மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கம் மேற்குநாடுகளோடு கொண்டிருந்த வைரிக்கொள்கையை புதிய அரசாங்கம் மாற்றியிருக்கின்றது. அல்லது மாற்றத்துக்கு உட்பட்டு செயலாற்றி வருகின்றது.
மனித உரிமைகள் பேரவையின் மார்ச் மாதக் கூட்டத் தொடர்களின் போது இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை நிறைவேற்றுதல் என்பது கடந்த கால அரங்காற்றுகை. அதில், தமிழர் தரப்பு விரும்பியோ, விரும்பாமலோ பங்கெடுத்து வந்தது. அல்லது பங்கெடுப்பதற்கு நிர்ப்பந்திக்கப்பட்டது. குறிப்பாக, ஐக்கிய நாடுகளின் முன்னாள் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை இலங்கையை கடும்தொனியிலேயே கையாண்டு வந்தார் என்கிற குற்றச்சாட்டு முன்னைய மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தினால் வைக்கப்பட்டு வந்தது. ஆனால், அவர் கடந்த ஆண்டு ஓய்வு பெற்றுச் சென்றதும், இலங்கை மீதான பிடியைத் தளர்த்துவதற்கான காட்சி மாற்றம் ஆட்சி மாற்றத்துடன் இயல்பாக ஏற்பட்டிருக்கின்றது என்ற தோற்றப்பாடு காட்டப்பட்டிருக்கின்றது. ஆனால், உண்மை அதுவல்ல என்று அனைத்துத் தரப்பிற்கும் தெரியும்.
இலங்கையின் இறுதி மோதல்களில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பிலான ஐக்கிய நாடுகளின் விசாரணை அறிக்கை ஒரேயொரு தடவை மாத்திரமே ஒத்திவைக்கப்பட்டிருக்கின்றது. எதிர்காலத்தில் அதற்கான எந்தவொரு சந்தர்ப்பமும் வழங்கப்படாது என்று புதிய ஆணையாளர் சையத் அல் ஹூசைன் அறிவித்துள்ள போதிலும், அவரின் அணுகுமுறை கனிவானது என்பதுதான் பொதுவான பார்வை. இதில், சையத் அல் ஹூனைனின் தீர்மானங்கள் எதுவுமில்லை என்கிற போதிலும், செயற்பாட்டளவில் அவரே முன்னிறுத்தப்படுகின்றார் என்பதால் அவரை நாம் ஓப்புநோக்க வேண்டியிருக்கின்றது. அவ்வளவுதான்.
கடந்த காலத்தில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பில் நியாயமான உள்ளக விசாரணைகளை முன்னெடுப்பதாக மைத்திரிபால சிறிசேன அரசாங்கம் சர்வதேசத்திடம் அறிவித்துவிட்டது. ஆட்சி மாற்றம் ஏற்பட்டாலும் முக்கிய அதிகாரங்களும், அதன் நீட்சியுமுள்ள நிலையில் நீதியான விசாரணையொன்று நடத்தப்படும் என்ற நம்பிக்கையை தமிழ் மக்கள் கொள்ளவில்லை. அதிலும், குற்றமிழைத்தவர்களே குற்றங்களை விசாரிப்பது நீதி விசாரணைகளுக்கு முரணானது என்கிற நியாயமான விடயத்தையும் முன்வைக்கின்றார்கள். இறுதி மோதல்களின் போது நேரடியாக சம்பந்தப்பட்ட இலங்கை அரசு மற்றும் தமிழீழ விடுதலைப் புலிகள் விசாரிக்கப்பட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்துக்கள் யாரிடமும் இல்லை.
ஆனால், இறுதி மோதல்களில் விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டு அவர்கள் அழிக்கப்பட்டு விட்டார்கள். ஆக, குற்றமிழைத்த மற்றைய தரப்பினை நோக்கி விசாரணைகளுக்கான களம் திறப்பது இயல்பானது. அதை, எதிர்கொள்ள வேண்டியது அவசியமானது.
உள்ளக விசாரணைகள் என்கிற அறிவிப்பை அமெரிக்கா உள்ளிட்ட மேற்குநாடுகளின் அரவணைப்போடு வெளியிட்டிருக்கின்ற மைத்திரிபால சிறிசேன அரசாங்கம், அதற்கான ஒத்துழைப்புக்களை ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையிடமும், தென்னாபிரிக்காவிடமும் பெற்றுக் கொள்வதற்கும் முடிவெடுத்துள்ளதாக கூறியுள்ளது. கடந்த திங்கட்கிழமை ஆரம்பித்த ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 28வது கூட்டத்தொடரில் உரையாற்றிய வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவும் அதனைப் பிரதிபலித்திருக்கின்றார்.
அது கீழ் கண்டவாறு அமைந்திருந்தது, 'நாட்டின் சகல மக்களையும் உள்ளடக்கியதான நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறும் தன்மையுடனான பயணத்தின் மீது நாம் முழுமையான நம்பிக்கை வைத்துள்ளோம். அதனை திருப்திகரமாக முன்னெடுப்பதற்கான நுட்பங்கள் மற்றும் மனித வளங்களைத் தயார்படுத்தி வருகின்றோம். ஆனாலும், இந்தப் பயணத்திற்கு சர்வதேச சமூகத்தினரின் அனுபவம் மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு, ஆலோசனை என்பன அவசியம்.
எமது அரசாங்கம் உலகம் முழுவதிலுமுள்ள பல்வேறு சர்வதேச அமைப்புக்கள் மற்றும் நாடுகளுடன் ஒத்துழைப்புடன் செயற்படவே விரும்புகிறது. இதற்கான எமது அணுகுமுறை பேச்சுவார்த்தைகள், ஒத்துழைப்புக்கள், புரிந்துணர்வு மற்றும் கற்றல் மூலமாக அமையுமே தவிர முரண்பாடாக அமையாது.
இதன் அடிப்படையில், அரசாங்கம் தென்னாபிரிக்க அரசாங்கத்துடன் கடந்தவாரம் பேச்சுவார்த்தை நடத்தியிருப்பதுடன், ஐக்கிய நாடுகளின் விசேட அறிக்கையாளர் பப்லோவுக்கு இலங்கை வருமாறும் அழைப்பு விடுத்துள்ளோம். மனித உரிமை சமவாயத்தில் இலங்கை பங்குதாரர் என்ற ரீதியில் அனைத்து பரிந்துரைகளையும் நிறைவேற்றுவதற்கு ஒத்துழைப்புடன் செயற்படும்.
புதிய அரசாங்கம் பதவியேற்று குறுகிய காலத்துக்குள்ளேயே பல்வேறு தடைகளைத் தாண்ட வேண்டியுள்ளது. நிர்வாகக் கட்டுப்பாடு மற்றும் கடந்த அரசாங்கத்தின் இனவாதமான மனப்பான்மை உள்ளிட்ட விடயங்கள் நடைபெறவிருக்கும் பாராளுமன்றத் தேர்தலுக்கு பெரும் சவாலாகவே இருக்கின்றன. இந்த சவால்களை எதிர்கொண்டு வரலாற்று ரீதியான பயணத்தை அர்ப்பணிப்புடன் முன்னெடுப்பதற்கு அரசாங்கம் முன்னுரிமை அளித்துள்ளது.
அரசாங்கத்தின் இந்த முயற்சிக்கு இந்த சபை (மனித உரிமைகள் பேரவை), ஆணையாளர், பங்குதாரர்கள், சர்வதேச அமைப்புக்கள் மற்றும் இலங்கை டயஸ்போராக்கள் (புலம்பெயர் ஈழத்தமிழர்களும், அவர்கள் சார் அமைப்புக்களும்) எம்மீது நம்பிக்கைவைத்து எமது செயற்பாடுகளைப் பலப்படுத்துவதற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு கோரிக்கை விடுக்கின்றேன்.'
மனித உரிமைகள் பேரையில் மங்கள சமரவீர ஆற்றிய மேற்கண்ட உள்ளடக்கங்களைக் கொண்டிருந்த உரை, இலங்கை அரசாங்கத்தினால் மாத்திரம் தயார் செய்யப்பட்டிருக்கின்றது என்ற நிலையைத் தாண்டி அமெரிக்கா உள்ளிட்ட மேற்குநாடுகளில் கைகாட்டல்களுக்கு அமைய எழுதி வாசிக்கப்பட்டிருக்கின்றது. குறிப்பாக, சர்வதேசத்தோடு ஒத்துழைப்பது, ஐக்கிய நாடுகளின் விசேட அறிக்கையாளரை நாட்டுக்கு வருமாறு அழைத்தல் மற்றும் புலம்பெயர் தமிழ் மக்களுடன் இணக்கமாக செயற்பட விரும்புவது என்று அந்த உரையில் இனிப்புத் தடவிய பெரும்பகுதி காணப்பட்டது.
மஹிந்த ராஜபக்ஷ காலத்து அமைச்சர்கள் மேற்குநாடுகளையும், ஐக்கிய நாடுகளையும், புலம்பெயர் தமிழர்களையும் நோக்கி வைக்கும் குற்றச்சாட்டுக்கள் எதுவும் மங்கள சமரவீரவின் உரையில் இல்லை. இவ்வளவு இணக்கமான அரசாங்கமொன்று இலங்கையில் இருக்கின்றது. ஆகவே, அனைத்துப் பிரச்சினைகளையும் உள்நாட்டில் பேசித் தீர்ப்போம். அதற்கான அர்ப்பணிப்பு எம்மிடம் இருக்கின்றது என்கிற அறிவித்தலை அந்த உரை பிரதிபலித்திருக்கின்றது.
உண்மையிலேயே மஹிந்த ராஜபக்ஷ காலத்து உரைகளை விட மங்கள சமரவீரவின் இந்த உரையை தமிழ் மக்கள் பெரும் அச்சுறுத்தலாக உணர வேண்டியுள்ளது. ஏனெனில், இறுதி மோதல்களின் போது விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டதை 'பயங்கரவாதம் முற்றாக ஒழிக்கப்பட்டமை சிறப்பான விடயம்' என்று குறிப்பிட்ட மங்கள சமரவீர, எந்தவொரு இடத்திலும் போர்க்குற்றங்கள் அல்லது மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றது என்ற விடயங்களை குறிப்பிடவில்லை. அதனை, மிக இலாவகமாகத் தவிர்த்திருந்தார். அந்த உரையினை வெளிப்படையாகப் பார்த்தால் காணப்படும் இனிப்புத் தடவிய பகுதிகளுக்குப் பின்னால் பெரும் விஷமுள்ள பகுதிகள் ஒழித்திருக்கின்றன.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் முன்னணி அரசியல் தலைவரொருவர் பேஸ்புக் நிலைத்தகவலில் சில விடயங்களை எழுதியிருந்தார். அது, மேற்கு நாடொன்றின் தூதுவருடனான உரையாடல். 'இலங்கையில் ஆட்சிமாற்றமொன்று ஏற்பட்டு புதிய அரசாங்கம் பதவியேற்றிருக்கின்றது. ஆக, அதனை ஓரளவுக்கு விட்டுக் பிடிக்க வேண்டிய தேவை எமக்கு (மேற்கு நாடுகளுக்கு) உள்ளது. ஆனால், தமிழ் மக்கள் தொடர்ந்தும் போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும். அதனை தமிழ்த் தலைமைகள் முன்னின்று நடத்த வேண்டும்...' என்றிருக்கின்றார் அந்த தூதுவர். தமிழ் மக்கள் போராடிக் கொண்டிருக்க வேண்டும் என்கிற விடயத்துக்குப் பின்னால் நியாயமான காரணங்கள் இல்லாமல் தமிழ் மக்களை கருவிகளாக கையாளும் தந்திரம் முன்வைக்கப்பட்டிருக்கின்றது. அந்த அரசியல் தலைவரின் இறுதி வரிகளும் அதையே வெளிக்காட்டியிருந்தது.
ஆட்சி மாற்றமொன்று ஏற்பட்டு தமக்குச் சார்பான அரசாங்கம் இலங்கையில் இருந்தாலும், அந்த அரசாங்கம் தன்னுடைய கட்டுப்பாட்டுக்குள் இருந்து மீறும் தருணங்கள் வரலாம். அதனைக் கையாள்வதற்கான மீண்டும் தமிழ் மக்களின் பிரச்சினைகளை முன்வைக்கலாம் என்பது மேற்குநாடுகளின் காலம் காலமான உத்தி. அப்படிப்பட்டவர்கள் எமக்கான தீர்வினைப் பெற்றுத் தந்துவிடுவார்கள் என்று நம்புவது எவ்வளவு அபத்தமானது.
அதனையே, ஐக்கிய நாடுகளும், மனித உரிமைகள் பேரவை அமர்வுகளும் தொடர்ந்தும் பிரதிபலித்து வருகின்றன. இப்படியான போக்குள்ள அனைத்துத் தரப்புக்களையும் எதிர்கொண்டு வெற்றிகரமாக கையாள்வது தொடர்பில் பெரும் அக்கறையோடு இருக்க வேண்டியது தமிழ் மக்களின் அவசியம். இல்லையென்றால், சர்வதேச அரங்காற்றுகைக்குள் அடிபட்டு ஆணி வேர் பிடுக்கப்பட்டு தமிழ் மக்கள் ஒட்டுமொத்தமாக தூக்கி எறியப்படுவார்கள்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
17 May 2025
17 May 2025