Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை
Thipaan / 2015 மார்ச் 08 , பி.ப. 10:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
'தற்போதுள்ள எதேச்சாதிகார நிறைவேற்று ஜனாதிபதி முறைக்கு பதிலாக அமைச்சரவையூடாக நாடாளுமன்றத்தோடு தொடர்புடைய நிறைவேற்று முறையொன்றை அறிமுகப்படுத்தல்' உள்ளிட்ட 19ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தின் நகலை ஜனவரி மாதம் 21ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பதாக, மைத்திரிபால சிறிசேன, தேர்தல் காலத்தில் எந்த அடிப்படையில் மக்களுக்கு வாக்குறுதியளித்தார் என்ற கேள்வி இப்போது எழுந்துள்ளது.
ஏனெனில், ஜனவரி மாதம் 21ஆம் திகதியிலிருந்து ஒன்றரை மாதம் சென்றுள்ள போதும் அந்த நகல் சட்டத் திருத்தம் எப்போது நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்பது இன்னமும் தெளிவாகவில்லை.
அந்த சட்ட வரைவு தயாராக இருப்பதாக பிரதமர் கடந்த சனிக்கிழமை கூறியிருந்த போதிலும் இந்தத் தாமதத்தை புரிந்து கொள்வது கடினமாகவே இருக்கிறது.
அதேவேளை, சமர்ப்பிக்கப்படவிருக்கும் சட்ட வரைவு நிறைவேற்று ஜனாதிபதி முறையை இரத்துச் செய்வதற்கான ஒன்றாக இருக்குமா என்பதும் இன்னமும் சரியான முறையில் தெளிவாகவில்லை. ஏனெனில் அரசாங்கத்தின் தலைவர்கள் இப்போது அதைப் பற்றி பல்வேறு கருத்துக்களை வெளியிட்டு வருகிறார்கள்.
நிறைவேற்று ஜளாதிபதி முறையை இரத்துச் செய்வதைப் பற்றியன்றி நிறைவேற்று ஜனாதிபதியின் அதிகாரங்களில் சிலவற்றை குறைப்பதைப் பற்றியே அரசாங்கத்தின் தலைவர்களில் பலர் இப்போது கருத்து வெளியிட்டு வருகிறார்கள்.
ஒரு சிலர் நிறைவேற்று ஜனாதிபதி முறையை இரத்துச் செய்வதாகவும் கூறுகிறார்கள்.
தற்போதைய ஜனாதிபதி முறையை முற்றாக இரத்துச் செய்யாவிட்டால் அது தெளிவாகவே ஜனாதிபதியும் அவரது தலைமையில் தேர்தல் காலத்தில் உருவாக்கிய புதிய ஜனநாயக முன்னணியின் தலைவர்களும் மக்களுக்கு அளித்த பிரதான வாக்குறுதியையே மீறியதாகும்.
குறைந்த பட்சம் நிறைவேற்று ஜனாதிபதி, நீதிமன்றத்துக்கும் நாடாளுமன்றத்துக்கும்; வகை சொல்லும் வகையிலாவது அரசியலமைப்பு திருத்தப்படாவிட்டால் அவ்வாறானதோர் சட்டத் திருத்தத்தால் எவ்வித பயனும் இல்லை.
அதேவேளை, ஜனாதிபதியின் கட்டுப்பாட்டில் இருந்து நீதிமன்றம் முற்றாகவே விடுபட்டால் மட்டுமே ஜனாதிபதி, நீதிமன்றத்துக்கு பொறுப்புக் கூறுதல் என்பது யதார்த்தமாகும்.
தாம் பதவிக்கு வந்து 12 நாட்களில் நிறைவேற்று ஜனாதிபதி முறையை இரத்துச் செய்வதற்கான சட்ட வரைவை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பதாக ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் வாக்குறுதியளிப்பதாக இருந்தால், அப்போதே அதற்கான சட்ட வரைவொன்று தயார் நிலையில் இருந்திருக்க வேண்டும். தேர்தலுக்குப் பின்னர் சட்ட வரைவு தயாராக இல்லை என்று கூறுவதற்கோ வேறு காரணங்களை முன்வைப்பதற்கோ ஜனாதிபதிக்கோ அல்லது புதிய அரசாங்கத்தின் ஏனைய தலைவர்களுக்கோ தார்மிக உரிமை இல்லை.
அதனை தாமதப்படுத்த அரசாங்கத்துக்கு தார்மிக உரிமை இல்லாமல் போவதற்கு மற்றொரு காரணம் என்னவென்றால், இந்த விடயத்தில் ஏறத்தாழ நாட்டில் சகல அரசியற் கட்சிகளும் இணக்கம் தெரிவித்துள்ளமையே.
நிறைவேற்று ஜனாதிபதி முறையை இரத்துச் செய்வதைப் பற்றி இல்லாவிட்டாலும் ஜனாதிபதி, நீதிமன்றத்துக்கும் நாடாளுமன்றத்துக்கும் பொறுப்புக்கூறச் செய்ய வேண்டும் என்பதில் அனேகமாக சகல அரசியல் கட்சிகளும் இணக்கம் தெரிவித்துள்ளன.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சி அவ்வாறானதோர் நிலைமையின் அவசியத்தை நாட்டுக்கு வலியுறுத்தியிருந்தது.
தேர்தலுக்கு முன்னர் நிறைவேற்று ஜனாதிபதி முறையை இரத்துச் செய்வதற்கான சட்ட வரைவு தயாராக இருக்காவிட்டால் பதவிக்கு வந்து 12 நாட்களில் அதனை இரத்துச் செய்வதாக தேர்தல் காலத்தில் வழங்கப்பட்ட வாக்குறுதி உண்மையான வாக்குறுதியா என்ற கேள்வி எழுகிறது.
அது நேர்மையாக முன்வைக்கப்பட்ட வாக்குறுதியாக இருந்தால் தேர்தல் முடிவடைந்து இரண்டு மாதங்கள் முடிவடைந்துள்ள இத்தருணத்திலாவது அது நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு இருக்க வேண்டும். அல்லது இப்போதாவது அதற்கான திகதி அறிவிக்கப்பட வேண்டும்.
தேர்தல் முறையை திருத்துவது தொடர்பான அரசாங்கத்தின் வாக்குறுதி சம்பந்தமாகவும் இந்த வாதம் பொருந்துகிறது. 'விருப்பு வாக்கு முறையை முற்றாக இரத்துச் செய்து சகல தேர்தல் தொகுதிகளுக்கும் எம்.பி. ஒருவர் கிடைக்கும் வகையில் தொகுதிவாரி முறையும் விகிதாசார முறையும் கலந்த தேர்தல் முறையொன்றை சிபார்சு செய்வதற்காக ஜனவரி மாதம் 28 ஆம் திகதி, சர்வக் கட்சி குழுவொன்றை நியமிப்பதாக' அரசாங்கம் தேர்தல் காலத்தில் வாக்குறுதியளித்து இருந்தது.
அரசாங்கத்தின் நூறு நாட்கள் வேலைத்திட்டத்தின் பிரகாரம் மேற்படி குழுவினால் சிபாரிசு செய்யப்பட்டும் தேர்தல் சட்ட திருத்தம் மார்ச் மாதம் 17ஆம் திகதியே நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்ட வேண்டும். ஆனால் அந்தக் குழுவாவது இன்னமும் நியமிக்கப்படவில்லை.
தகவல் அறியும் உரிமை தொடர்பான சட்டம் மற்றும் தேர்தல் சட்டத் திருத்தம் ஆகியவற்றுக்காக அரசாங்கம் புதிதாக குழுக்களை நியமித்துக் கொண்டு கஷ்டப்படத் தேவையில்லை.
ஏனெனில் இவ்விரண்டு வியடங்கள் தொடர்பாகவும் ஏற்கெனவே தயாரிக்கப்பட்ட ஆவணங்கள் இருக்கின்றன.
தகவல் அறியும் உரிமை தொடர்பான சட்ட மூலத்தை தயாரிப்பதற்காக குழுவொன்றை நியமிக்கவிருப்பதாக தகவல் மற்றும் ஊடகத்துறை அமைச்சர் சில வாரங்களுக்கு முன்னர் கூறியிருந்தார்.
பெப்ரவரி மாதம் 20 ஆம் திகதி அச்சட்ட மூலத்தை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பதாக ஜனாதிபதி தமது நூறு நாட்கள் வேலைத் திட்டத்தின் மூலம் வாக்குறுதியளித்து இருந்த நிலையிலேயே அவர் அவ்வாறு கூறியிருக்கிறார்.
அவ் வேலைத் திட்டத்தின் பிரகாரம் அச் சட்டமூலம் மார்ச் மாதம் 20ஆம் திகதி நிறைவேற்றப்படவும் வேண்டும்.
அந்த விடயமும் குறித்த காலத்தில் நிறைவேறுமா என்பது இப்போது சந்தேகமாகவே இருக்கிறது. இந்த வியடத்தில் சட்ட மூலம் தயாராக இல்லை என அரசாங்கம் கூற முடியாது.
அவ்வாறு சட்டமூலம் தயாராக இல்லாவிட்டால் திகதி குறிப்பிட்டு இது தொடர்பாக ஏன் வாக்குறுதித்தீர்கள் என் மக்கள் கேட்கலாம்.
அதேவேளை, தற்போதைய அரசாங்கத்தின் பிரதான கட்சியான ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர்களில் ஒருவரான பொது நிர்வாக அமைச்சர் கரு ஜயசூரிய, 2010ஆம் ஆண்டிலேயே தகவல் அறியும் உரிமை தொடர்பான சட்ட வரைவொன்றை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்து இருந்தார். அது இப்போது செல்லுபடியாகாது என எவரும் கூறவில்லை.
இதேபோல், தேர்தல் முறையை திருத்துவதற்காக முன்னாள் அமைச்சர் தினேஷ் குணவர்தனவின் தவைமையிலான குழுவொன்றினால் தயாரிக்கப்பட்டு சகல கட்சிகளும் அங்கிகரித்த அறிக்கை ஒன்று இருக்கிறது.
எனவே, தேர்தல் முறையை திருத்துவதற்கான ஆலோசனைகளை சிபாரிசு செய்வதற்காக புதிதாக குழுக்களை நியமித்து நேரத்தை வீணாக்கத் தேவையில்லை. அவசியம் எனக் கருதினால் அந்தக் குழுவின் அறிக்கையில் சில சிறு மாற்றங்களை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டதன் பின்னர் செய்து கொள்ளலாம்.
எனவே, நிறைவேற்று ஜனாதிபதி முறை, தேர்தல் முறை மற்றும் தகவல் அறியும் உரிமை தொடர்பான சட்டத் திருத்தங்களை தாமதப்படுத்த எந்த நியாயமும் இல்லை.
எதிர்க்காலத்தில் தாம் ஜனாதிபதியாக வர வேண்டும் என்று நினைக்கும் ஒருவர் மட்டுமே நிறைவேற்று ஜனாதிபதி முறையை விரும்புவார்.
அம் முறை இரத்துச் செய்யப்பட்டால் நாட்டின் ஸ்திரத்தன்மை பாதிக்கப்படும் என்றும் மாகாண சபைகள், மத்திய அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் இருந்து விடுபடும் என்றும் அவ்வாறான சிலர் வாதிடுகிறார்கள்.
அவர்கள், இந்தியாவை காணவில்லை போலும். அங்கு நிறைவேற்று ஜனாதிபதி முறை இல்லை. ஆனால், இந்தியாவின் ஸ்திரத்தன்மை இல்லாமல் போகவும் இல்லை.
ஈரான் மற்றொரு உதாரணமாகும். சிலவேளைகளில் இந்தியாவில் அரசாங்கம் பலவீனமாக இருக்கலாம். ஆனால் நாட்டில் ஸ்திரத்தன்மை இல்லாமல் போவதில்லை. வெளிநாடுகளினால் கட்டுப்படுத்தம் பொருளாதாரம் இருந்தால் அல்லது பலம் வாய்ந்த நாடுகளை சீண்டி வந்தால் தான் ஒரு நாட்டில் ஸ்திரத்தன்மை பாதிக்கப்படும்.
நிறைவேற்று ஜனாதிபதி முறை இல்லாவிட்டால் மாகாண சபைகளின் கைகள் ஓங்கும் என்பதும் ஏற்றுக் கொள்ள முடியாத கருத்தே.
இந்தியாவில் மாநிலங்கள் தமக்கு வேண்டியவாறு செயற்பட முடியாது. மாநிலங்களில் பதற்ற நிலைமை ஏற்பட்டால், அம் மாநில அரசாங்கத்தை கலைத்துவிடுமாறு பிரதமர், ஜனாதிபதிக்கு ஆலோசனை வழங்குவார். ஜனாதிபதி அதன் படி மாநில ஆட்சியை கலைத்துவிடுவார்.
எனவே, அந்த விடயத்தில் மத்தியில் இருப்பது நிறைவேற்று ஜனாதிபதி முறையா இல்லையா என்பதில் வித்தியாசம் இல்லை. இது பொது அறிவு.
எனினும், அரசியலமைப்பு திருத்தம் என்ற விடயத்தில் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி வேறு நோக்கங்களை மனதில் வைத்துக் கொண்டு செயற்படுவதாகவே தெரிகிறது.
தேர்தல் முறையும் திருத்தப்படாவிட்டால் நிறைவேற்று ஜனாதிபதி முறையை மட்டும் திருத்துவதற்காக தாம் ஒத்துழைப்பு வழங்குவதில்லை என அக்கட்சித் தலைவர்களில் ஒருவரும் எதிர்க்கட்சித் தலைவருமான நிமல் சிறிபால டி சில்வா கூறுகிறார்.
நிறைவேற்று ஜனாதிபதி முறையை இரத்துச் செய்வது என்பது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பிரதான தேர்தல் வாக்குறுதியாகும். ஜனாதிபதி, சு.க.வின் தலைவராவார். அவ்வாறாயின் தமது தரைலவரின் பிரதான தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றுவதை சுதந்திரக்கட்சி எதிர்க்கிறதா?
ஆயினும், இவ்விரண்டு விடயங்களும ஒரே வேளையில் நிறுத்த வேண்டும் என்று சு.க கொடுக்கும் நெருக்குதல் சரியானதே. ஆனால், அவற்றில் ஒன்றை நிறைவேற்றிக் கொள்ள முடியுமானால் அதனை எதிர்ப்பது உள் நோக்கம் கொண்ட செயலாகவே கருத வேண்டியுள்ளது.
நிறைவேற்று ஜனாதிபதி முறையை இரத்துச் செய்வதற்காக சர்வஜன வாக்கெடுப்பொன்றை நடத்த வேண்டியிருக்கும் என்றும் எனவே அதனை முற்றாக ஒழிப்பது கடினம் என்றும் சிலர் வாதிடுகிறார்கள்.
நாட்டில் சகல கட்சிகளும் இம் முறையை இரத்துச் செய்வதை விரும்புதாக இருந்தால் மிகக் குறைந்த செலவிலேயே இந்த சர்வஜன வாக்கொடுப்பை நடத்தலாம்.
எதிர்க் கட்சிகளின் பொது ஜனாதிபதி வேட்பாளராக தம்மை அறிமுகப்படுத்திக் கொண்ட முதலாவது ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இந்த விடயத்தில் அவசியமானால் சர்வஜன வாக்கெடுப்பொன்றை நடத்துவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறினார்.
தற்போது வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் ஏற்பட்டுள்ள தாமதத்தின் காரணமாக 100 நாட்கள் திட்டத்தின் படி நாடாளுமன்றத்தை கலைப்பதிலும் சிக்கல ஏற்பட்டுள்ளது.
தாம் 100 நாட்கள் என்று எதனையும் கேட்கவில்லை என்றும் மேற்படி அரசியலமைப்புத் திருத்தங்களையே தாம் கேட்டதாகவும் அரசாங்கத்தின் தலைவர்கள் தான் 100 நாட்களுக்குள் இவற்றை செய்வதாக கூறினார்கள் என்றும் மஹிந்த அரசாங்கத்தை கவிழ்ப்பதில் முன்னணியில் நின்று செயற்பட்ட மாதுலுவாவே சோபித தேரர் கூறுகிறார்.
தேர்தல் முறை திருத்தத்தோடு ஜனாதிபதி முறையையையும் மாற்றி அமைப்பதற்கு 100 நாட்கள் போதுமானதாக இல்லாவிட்டால் 200 நாட்களை எடுங்கள் என எதிர்க் கட்சித் தலைவர் கூறுகிறார்.
இரண்டு திருத்தங்களையும் நிறைவேற்றிக் கொள்வதாக இருந்தால் சிலவேளை நாடாளுமன்றத்தை ஏப்ரல் மாதத்திலன்றி மே மாதத்தில் தான் கலைக்க வேண்டியிருக்கும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, கடந்த புதன் கிழமை சு.க.வின் நாடாளுமன்ற குழுக் கூட்டத்தின் போது கூறியிருக்கிறார்.
அவ்வாறு தாமதித்து இந்த அரசியலமைப்பு திருத்தங்களை நிறைவேற்றப் போனால் சில வேளை மஹிந்த ராஜபக்ஷவின் தலையீட்டால் சு.க.வில் பலர் அதற்கு ஆதரவளிக்காமல் இருக்கலாம்.
இப்போது நாடாளுமன்றத்தை கலைப்பதாக மிரட்டியே ஜனாதிபதி, சு.க.வை தமது கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டு இருக்கிறார். ஏப்ரல் மாதம் 19 ஆம் திகதிக்கு முன்னர் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டால் சு.க.வைச்சேர்ந்த பல எம்.பி.க்கள் ஓய்வூதிய உரிமையை பெற மாட்டார்கள்.
எனவே அதற்குப் பின்னர் அரசியலமைப்புத் திருத்தத்தை கொண்டு வரப் போனால் மைத்திரிபால தலைமை தாங்கினாலும் சு.க. வில் பலர்அதற்கு முட்டுக்கட்டையாக அமையலாம்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
17 May 2025
17 May 2025