Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை
Kanagaraj / 2015 மார்ச் 10 , மு.ப. 05:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
இது மாதிரி சூழ்நிலையில் மார்ச் 13 ஆம் திகதி தொடங்கும் இந்திய பிரதமரின் பயணத்தில் தமிழர்களுக்கான அதிகாரப் பகிர்வு, இரு நாட்டு மீனவர் பிரச்சினைகள், இந்தியாவின் நிதியுதவியில் நடக்கும் தமிழர்கள் நலத் திட்டங்கள் எல்லாவற்றிலும் ஒரு திருப்பு முனை ஏற்படும் என்று கருதுகிறார்கள்.
இலங்கை ஜனாதிபதி தேர்தலில் ராஜபக்ஷ தோல்வியடைந்ததற்கு பின்னர் தமிழகத்தில் இலங்கை அரசின் மீதோ, இலங்கை அரசியல்வாதிகள் மீதோ 'உணர்வு பூர்வ' எதிர்ப்புகள் தமிழகத்தில் குறைந்தே வருகின்றன. ஆனால், இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே அளித்த 'மீனவர்கள் கரை கடந்தால் சுடுவோம்' என்ற பேச்சு மீண்டும் இலங்கை அரசியல்வாதிகள் மீதான எதிர்ப்புக்கு தமிழகத்தில் அச்சாரம் போட்டிருக்கிறது.
இலங்கையின் புதிய ஜனாதிபதியாக சிறிசேன பொறுப்பேற்ற பிறகு பாரதப் பிரதமர் நரேந்திரமோடிக்கும் அவருக்கும் இடையே ஏற்பட்டு வரும் புதிய நட்பு தமிழர் பிரச்சினைக்கு தீர்வு காண உதவும் என்ற நம்பிக்கை தமிழக மக்கள் மத்தியில் நிலவுகிறது.
குறிப்பாக வெற்றி பெற்றவுடன் இலங்கை ஜனாதிபதி சிறிசேன இந்தியா வந்தது, சீனாவின் திட்டத்தை நிறுத்தி வைத்தது, மோடி இலங்கைக்குச் செல்வது எல்லாம் ஏற்கெனவே உருவாகிய சுமூக சூழ்நிலைக்கு மேலும் வலு சேர்ப்பதாக அமைந்திருந்தது.
அதில் 'கல் வீசி' கலாட்டா செய்தது திடீரென்று வெளிவந்த இலங்கை பிரதமரின் பேட்டிதான். இத்தனைக்கும் ரணில், தமிழர்களின் நண்பர் என்று தமிழ்நாட்டில் கருதப்படும் அரசியல் தலைவர். அவரிடமிருந்து இப்படியொரு பேட்டியை தமிழக மக்களோ, மீனவர்களோ சற்றும் எதிர்பார்க்கவில்லை.
'இலங்கை அரசியல்வாதிகளைக் குறை கூறும் நிலைப்பாட்டிலிருந்து' பெருவாரியான கட்சிகள் விலகிச் சென்று கொண்டிருந்த நேரத்தில் வெளிவந்த ரணில் பேட்டி, மீண்டும் தமிழக அரசியல் கட்சிகளை இலங்கை அரசியல்வாதிகளை குறை கூறும் நிலைக்குத் தள்ளி விட்டது.
இது ஒரு புறமிருக்க, தமிழக கட்சிகளின் முக்கியக் குறி இப்போது பா.ஜ.க.தான். 'காங்கிரஸ§ம் ஒன்றும் செய்யவில்லை. பா.ஜ.க.வும் ஒன்றும் செய்யவில்லை' என்று கருதும் பல அரசியல் கட்சி தலைவர்கள் முன்பு பெருந்தலைவர் காமராஜ் தி.மு.க., அ.தி.மு.க. பற்றிக் கூறியதுபோல், பா.ஜ.க.வும், காங்கிரஸ§ம் இலங்கை தமிழர் விவகாரத்தில் 'ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்' போன்றவைதான் என்ற எண்ணம் தமிழக மக்கள் மத்தியில் விதைக்கப்படுகிறது.
தமிழக மீனவர்கள் ஐவரின் தூக்குத் தண்டனையை இரத்து செய்தது, தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்படும் போது அவர்களை உடனுக்குடன் மீட்டது போன்ற நல்லெண்ண நடவடிக்கைகளை பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசு சாதித்த போதிலும், தமிழக மீனவர்களின் படகுகளை திரும்ப ஒப்படைக்காத சூழ்நிலையும், தமிழக மீனவர்களின் கைது நிற்காததும், பிரதமரின் சுற்றுப்பயணத்திற்கு முன்பு வெளிவந்த ரணில் பேட்டியும் தமிழகத்தில் உள்ள கட்சிகளை பா.ஜ.க. மீதும் கோபம் கொள்ள வைக்கிறது.
இந்தக் கோபத்துக்கு இலங்கை தமிழர் பிரச்சினை தவிர இன்னொரு முக்கியக் காரணமும் உண்டு. பா.ஜ.க. தமிழகத்தில் அரசியல் ரீதியாக மூன்றாவது சக்தியாக உருவாக எடுக்கும் முயற்சிகள் இங்குள்ள கட்சிகளை மிரள வைக்கிறது. சமீபத்தில் கூட மூன்றாவது முறையாக பா.ஜ.க. தலைவர் அமித்ஷா தமிழ்நாடு வந்து சென்றுள்ளார். இந்த முறை 'தேர்தல் முறைகேட்டில் தமிழகம் முதலிடத்தில் இருக்கிறது' என்று இடித்துரைத்துவிட்டுச் சென்றுள்ளார்.
இந்த சூழ்நிலையில் பா.ஜ.க. தமிழக அரசியலில் முழு வீச்சில் வந்தால் அப்போது அந்தக் கட்சியை சமாளிக்க 'இலங்கை தமிழர் பிரச்சினை' உதவும் என்ற நினைப்பில் இப்பிரச்சினையை அப்படியே வைத்திருக்கிறார்கள். தி.மு.க.வின் செயற்குழுக் கூட்டம் கடந்த மார்ச் 5ஆம் திகதி நடைபெற்றது. அதில் ஒரு தீர்மானத்தில், 'இலங்கை தமிழர் பிரச்சினை பற்றிய தன் நிலைப்பாட்டை பா.ஜ.க. அரசு வெளிப்படுத்த வேண்டும்' என்றும், இலங்கை செல்லும் பிரதமர் மோடி தமிழ்நாட்டு மீனவர்கள் தாக்கப்படுவது குறித்து நிரந்தர தீர்வு காண பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்றும், அந்த பேச்சுவார்த்தை முடிவுக்கு வரும் வரை தற்காலிகமாக 'தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையின் தாக்குதல் நிறுத்தி வைக்கப்பட வேண்டும்' என்றும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
பிரதமர் மோடியின் சுற்றுப்பயணத்துக்கு முன்னோட்டமாக இலங்கை வந்த வெளியுறவுத்துறை அமைச்சர் சுஸ்மா சுவராஜ், 'இரு நாட்டு மீனவர்கள் பிரச்சினை மனித நேயத்துடன் அணுக வேண்டிய பிரச்சினை' என்று இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கேவிடமே கூறியிருப்பது இங்கே கூர்ந்து கவனிக்கத்தக்கது.
இது மட்டுமல்ல இன்னொரு முக்கியக் கட்சியான, அதுவும் தமிழகத்தை ஆளுங்கட்சியான அ.தி.மு.க.வும் இப்பிரச்சினையில் தன் கருத்தை இந்திய நாடாளுமன்றத்திலேயே பதிவு செய்திருக்கிறது. அதன் நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர். சுந்தரம், 'தமிழக மீனவர்கள் தாக்கப்படுவது' 'இலங்கை தமிழர்களுக்கு சுயாட்சி அமைக்க வழி அமைத்துக் கொடுப்பது' 'கச்சதீவை மீட்பது' உள்ளிட்ட கோரிக்கைகளை முன் வைத்து நாடாளுமன்றத்தில் உரையாற்றியிருக்கிறார். அதை விட இன்னொரு மூத்த ராஜ்யசபை உறுப்பினரான டாக்டர் மைத்ரேயன் ராஜ்ய சபையில் பேசும் போது, 'தமிழக மீனவர்கள் பிரச்சினை பற்றியோ, ஈழத் தமிழர்களுக்கு நீதி கிடைப்பது பற்றியோ குடியரசுத் தலைவர் உரையில் இல்லாதது மிகவும் துரதிருஷ்டவசமானது.
பிரதமர் மோடி கூட்டாட்சித் தத்துவத்தில் ஆர்வம் உடையவர். அந்த கூட்டாட்சித் தத்துவத்தின் நோக்கத்தின் அடிப்படையில் இலங்கைத் தமிழர் பிரச்சினையில் தமிழக மக்களின் எண்ணங்களையும், விருப்பங்களையும் தெரிந்து கொள்வது மிகவும் அவசியம். அண்டை நாடுகள் உறவில் பிரதமருக்கு எவ்வளவு அக்கறை இருக்கிறதோ, அதே போல் ஈழத் தமிழர்களுக்கு நீதி வழங்கப்பட வேண்டும்.
சமத்துவம் வழங்கப்பட வேண்டும் என்பதில் தமிழக மக்கள் கவலை கொண்டவர்களாக இருக்கிறார்கள். அதனால் எங்கள் மக்கள் முதல்வரை (முன்னால் முதல்வர் ஜெயலலிதாவை) கலந்து ஆலோசித்து விட்டு பிரதமர் மோடி, இலங்கைக்குச் செல்வார் என்று நான் நம்புகிறேன்' என்று பேசிய அவர், 'நீதி என்று நான் இங்கே குறிப்பிடுவது இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக நடைபெற்ற இனப்படுகொலை மற்றும் போர்க்குற்றங்கள் குறித்து சுதந்திரமான பன்னாட்டு விசாரணை நடைபெற இந்தியா இலங்கை அரசை வலியுறுத்த வேண்டும்' என்றும் குறிப்பிட்டுள்ளார்.
ஆனாலும் இப்படியெல்லாம் பேசி விட்டு குடியரசுத் தலைவர் உரை மீதான நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில் 'கருப்புப் பண விவகாரத்தில் அரசை குறை கூறி எதிர்கட்சிகள் கொண்டு வந்த திருத்த தீர்மானத்துக்கு' எதிராக வாக்களித்து, பா.ஜ.க.வுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்தது அ.தி.மு.க. இதற்கு தி.மு.க.வும் சற்றும் சளைத்தல்ல. இலங்கை தமிழர் பிரச்சினையில் தி.மு.க. ராஜ்ய சபை உறுப்பினர் திருச்சி சிவாவும் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவது, அவர்களுக்கான நிரந்தர தீர்வு குறித்து குடியரசுத் தலைவருக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்தின் போது ஒரு திருத்தம் கொடுத்திருந்தார்.
ஆனால், நாடாளுமன்றத்தில் பேசிய பிரதமர் மோடி 'அண்டை நாடுகளுடன் நட்புறவாக இருக்க விரும்பும் அதே நேரத்தில் நம் உரிமைகள் எதையும் சரண்டர் செய்ய மாட்டோம்' என்று கூறினார். பிறகு இந்த திருத்த தீர்மானம் வாக்கெடுப்புக்கு விடுவதா வேண்டாமா என்று பேச்சு எழுந்த போது 'பிரதமரின் பேச்சில் நம்பிக்கை வைத்து என் திருத்தத்தை வாபஸ் பெற்றுக் கொள்கிறேன்' என்று அறிவித்தார் திருச்சி சிவா. இப்படி அ.தி.மு.க., தி.மு.க. இரண்டுமே இலங்கை தமிழர் பிரச்சினையை முன் வைத்து பா.ஜ.க.வுடன் முட்டி மோதினாலும், ஒரு கட்டத்தில் இரு கட்சிகளுமே 'கடும் எதிர்ப்பு' தெரிவிப்பதிலிருந்து விலகியே நிற்கின்றன.
இதற்கிடையில் இலங்கையில் ராஜீவ்- ஜெயவர்த்தன ஒப்பந்தத்தின் படி வந்த 13ஆவது அரசியல் சட்ட திருத்தத்தின் படி தமிழர்களுக்கு அதிகாரம் வழங்கப்படுவதில் எங்களுக்கு சம்மதமே என்று நாடாளுமன்ற விவகாரக் குழு அமைச்சர் வெங்கைய்யா நாயுடு பேட்டி அளித்திருப்பது பிரதமர் மோடியின் இலங்கை மற்றும் யாழ்ப்பாண விஜயம் பற்றிய நம்பிக்கையை தமிழகத்தில் ஏற்படுத்தியிருக்கிறது.
தமிழகத்தில் உள்ள கட்சிகளும் 'தமிழக அரசியலை' மனதில் வைத்து களம் காணும் பாரதீய ஜனதாக் கட்சி இலங்கை தமிழர்களுக்கு எது மாதிரியான நிவாரணத்துக்கு வழி அமைத்துக் கொடுத்து, தமிழக வாக்காளர்களை கவரப் போகிறது என்ற கவலையில் இருக்கின்றன என்பதுதான் தற்போதையை நிலைமை! வழக்கம் போல் இலங்கையில் உள்ள தமிழர்களும், தமிழகத்தில் உள்ள மீனவர்களும் 'இந்திய பிரதமரின் விஜயத்தால் கிடைக்கப் போகும்' நன்மைகளை வழி மேல் விழி வைத்து பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
17 May 2025
17 May 2025