Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை
Princiya Dixci / 2015 மார்ச் 12 , மு.ப. 09:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
-புருஜோத்தமன் தங்கமயில்
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும், முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தலைமையிலான அரசாங்கத்துக்கும் இடையில் செய்து கொள்ளப்பட்ட சமாதானப் பேச்சுவார்த்தைகளை முன்னிறுத்திய மோதல் தவிர்ப்பு ஒப்பந்தம் 100 நாட்களின் பின்னர் அதாவது, ஏப்ரல் 19, 1995 அன்று அதிகாலை விடுதலைப் புலிகளினால் முறிக்கப்பட்டது.
திருகோணமலை கடற்படைத் தளத்தில் தரித்து நின்ற 'ரணசுரு, சூரையா' என்கிற இரண்டு கடற்படைக் கலன்களை கடற்கரும்புலித் தாக்குதலின் மூலம் தமிழீழ விடுதலைப் புலிகள் தாக்கியழித்தனர். அதுதான், ஈழப் போராட்டத்தின் மூன்றாவது கட்டத்துக்கான ஆரம்பம்.
அன்றைய தினம், வடக்கு- கிழக்கின் பல பகுதிகளிலும், அதாவது விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த பகுதிகளில் மிகவும் உணர்வு எழுச்சியோடு அன்னை பூபதி நினைவு நாள் அனுஷ்டிக்கப்பட்டு வந்தது. (அன்னை பூபதி, இந்திய அமைதி காக்கும் படைக்கு எதிராக கிழக்கில் உண்ணாவிரதம் இருந்து உயிர்நீத்தவர்.)
மோதல் தவிர்ப்பு ஒப்பந்தம் முறிக்கப்பட்டுவிட்டது என்ற தகவல் அவ்வளவாக பரவியிராத நிலையில் அன்று மாலை யாழ்ப்பாணத்தின் கடற்கரைக் கிராமங்களில் ஒன்றான தாளையடியிலிருந்து ஆழ்கடல் மீன்பிடிக்காக சென்ற இருவர் அன்றைய தினம் இரவு வடமராட்சிக் கிழக்கு கடலில் வைத்து இலங்கைக் கடற்படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
தனி ஈழத்துக்கான போராட்டங்கள் ஆயுத வடிவம் பெற்ற பின்னர் வடக்கு கடற்பரப்பு என்பது மிகவும் அச்சுறுத்தலான பகுதியாக மாறியது. வடக்கில் மீன்பிடியை பிரதானமாக கொண்ட 30 சதவீதமான மக்கள் தமது தொழில் நடவடிக்கைகளை முழுமையாக முன்னெடுக்க முடியாமல் சுமார் 20 ஆண்டுகளுக்கும் மேலாக தவிர்த்தனர். ஆழ்கடல் மீன்பிடி என்பது அவர்களின் வாழ்க்கையிலிருந்து முற்றுமுழுதாக பறிக்கப்பட்டது. அதையும் மீறி ஆழ்கடல் மீன்பிடிக்காகச் சென்றவர்களில் பலர் துப்பாக்கிகளினால் பலிவாங்கப்பட்டார்கள். அவர்களின் உடலங்கள் வடக்கு கடற்கரைகளில் கரையொதுங்கியிருக்கின்றன.
வடக்கில் ஆழ்கடல் மீன்பிடி 1990ஆம் ஆண்டின் ஆரம்பத்திலேயே முற்றுமுழுதாக இலங்கை அரசினால் தடை செய்யப்பட்டது. 1995ஆம் ஆண்டு சமாதானப் பேச்சுவார்த்தை காலத்திலும், 2002 ஆம் ஆண்டு விடுதலைப் புலிகளுக்கும், ரணில் விக்ரமசிங்க அரசாங்கத்துக்கும் இடையில் செய்துகொள்ளப்பட்ட மோதல் தவிர்ப்பு ஒப்பந்த காலத்தின் தொடர்ச்சியாக 2006 வரையான காலப்பகுதியிலும் வடக்கு மீனவர்கள் பகுதியளவான ஆழ்கடல் மீன்பிடிக்கு அனுமதிக்கப்பட்டனர். 2009ஆம் ஆண்டு மே மாதத்தில் இறுதி மோதல்கள் முடிவுக்கு வந்த பின்னரான காலப்பகுதியிலேயே ஆழ்கடல் மீன்பிடிக்கான தடை வடக்கில் முழுவதுமாக நீக்கப்பட்டது.
வடக்கில் ஆழ்கடல் மீன்பிடிக்கான தடை இலங்கை அரசினால் விதிக்கப்பட்டிருந்த காலத்தில் தென்னிலங்கை மீனவர்கள் அந்தக் கடற்பரப்புக்குள் தொழில் நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு அனுமதிக்கப்பட்டிருந்தனர். அதுபோல, இந்திய (தமிழக- ஆந்திர) மீனவர்களும் அந்தக் கடற்பரப்புக்குள் மீன்பிடி நடவடிக்கைகளை அத்துமீறி மேற்கொண்டு வந்திருக்கின்றார்கள். இந்த நிலையில், மீண்டும் வடக்கு மீனவர்கள் தமது ஆழ்கடல் மீன்பிடி நடவடிக்கைகளை ஆரம்பித்த போது பெரும் பிரச்சினைகளை தென்னிலங்கை மற்றும் இந்திய மீனவர்களினால் எதிர்கொண்டனர். தமது பாரம்பரியமான கடற்பரப்பில் எந்தவித நியாயத்தன்மைகளுமின்றி வெளியவர்கள் அத்துமீறுவதால் வடக்கு மீனவர்களின் வாழ்வாதாரம் முற்றாக முடக்கும் அளவுக்கு மாறியிருந்தது.
வடக்கு கடற்பரப்பினை மீன்களின் சுரங்கம் என்பார்கள். பாக்கு நீரிணையும், அதனால் அந்தப் பகுதியில் காணப்படும் கடல் வளங்களின் பெருக்கமும் மீன் விருத்திக்கு காரணமாக இருக்கின்றன. அதுதான், வெளியவர்களை அந்தப் பகுதிக்குள் தொடர்ந்தும் அத்துமீற வைத்திருக்கின்றது.
குறிப்பாக, இந்திய (தமிழக) மீனவர்களுக்கும், வடக்கு மீனவர்களுக்கும் இடையில் உறவுமுறையில் தொடர்புகள் சில இருந்தாலும், தொழில்முறையில் பெரும் வைரிகளாகவே தம்மைக் கருதிக் கொண்டிருக்கின்றனர். அது, தனி ஈழத்துக்கான போராட்டங்கள் ஆரம்பிப்பதற்கு முன்னராக காலப்பகுதியிலும் கூட. அதுதான், இன்றைக்கும் எந்தவித முடிவுகளும் இன்றித் தொடர்கின்றன.
வடக்கிலுள்ள மீனவர்கள் தமது பாரம்பரிய கடற்பகுதியின் வளத்தினைப் பாதுகாப்பது தொடர்பில் காலம் காலமாக மிகுந்த அக்கறையோடு செயற்பட்டு வருகின்றார்கள். பாரிய மடிகளைப் பயன்படுத்தி தொழில் செய்யும் ஆழ்கடல் இழுவைப்படகு முறை, இலை குழைகளைப் பயன்படுத்தி ஆழம் குறைந்த கடற்பரப்பில் கணவாய், இறால்களைப் பிடிக்கும் முறை, (பொருத்தமற்ற) தங்கூசி வலைகளைப் பயன்படுத்தி மீன்பிடிக்கும் முறை உள்ளிட்ட பல முறையற்ற மீன்பிடி முறைகளை தடை செய்திருக்கின்றார்கள். வடக்கு மீனவர்கள் தாமாகவே முன்வந்து தடைசெய்துள்ள (இலங்கை அரசும் ஒத்துழைத்திருக்கின்றது) இந்த முறைகளினால் அதிகளவான மீன்களைப் பிடிக்க முடியும். ஆனால், அந்த முறைகள், கடற்பாறைகள், கடற்பாசிகள், பிளாந்தன்கள் உள்ளிட்ட மீன் விருத்திக்கு அவசியமான வளங்களை அழித்துவிடும்.
அப்படியான நிலையில், ஆழ்கடல் இழுவைப்படகு முறையை பிரதானமாக கொண்டிருக்கின்ற இந்திய ரோலர்கள் இலங்கையின் வடக்கு கடற்பரப்புக்குள் அத்துமீறி மீன்பிடிப்பதை எந்தவித காரணங்களுக்காகவும் ஏற்றுக்கொள்ள முடியாது. அந்த நடவடிக்கைகளை வடக்கு மீனவர்கள் தமது எதிர்காலத்துக்கான பாரிய அச்சுறுத்தலாக காண்கின்றார்கள். இலங்கையில் மோதல்கள் முடிவுக்கு வந்த காலப்பகுதியில் இந்திய ரோலர்களை ஆயிரக்கணக்கில் வடக்கு கடற்பரப்புக்குள் காண முடியும். இன்றைக்கும் அது நூற்றுக்கணக்கில் தொடர்கின்றது.
தமது பாரம்பரிய கடற்பரப்பினை அத்துமீறுவது என்பது இலங்கையின் வடக்கு மீனவர்களினால் அதிகமாக செய்யப்படுவது அல்ல. ஆனால், இந்திய மீனவர்களின் அத்துமீறல் திட்டமிட்ட ரீதியில் முன்னெடுக்கப்படுவது. கடல் நீரோட்டம், சீரற்ற வானிலை, படகுகள் பழுதடைதல் உள்ளிட்ட காரணங்களினால் மீனவர்கள் எல்லை மீறுவது என்பது தற்செயலானது. அதனை, திட்டமிட்ட எல்லை மீறுதலாக கொள்ள முடியாது. ஆனால், தொழில் நடவடிக்கைகளை பிரதானமாக கொண்டு எல்லை மீறுதல் என்பது பாரிய குற்றமாகவே கருதப்பட வேண்டியது.
அண்மையில் கூட வடமராட்சிக் கிழக்கின் கடற்பரப்பில் வைத்து கட்டைக்காடு மீனவர்கள் பலர் இந்திய மீனவர்களினால் தாக்கப்பட்டிருக்கின்றார்கள். இவ்வாறான அத்துமீறல்களை தொப்புள் கொடி உறவுகள் என்கிற ரீதியில் பொறுத்துக் கொள்ளுமாறு தமிழக மக்கள் எதிர்பார்ப்பது எந்தவித அடிப்படைளும் அற்றது. இந்திய மீனவர்கள், குறிப்பாக தமிழக மீனவர்கள் தமது கடற்பரப்பிலுள்ள வளங்களை முறையற்ற மீன்பிடி முறைகளின் மூலம் ஏறக்குறைய முற்றாக அழித்துவிட்டார்கள். அப்படியான நிலையில், எமது எல்லைக்குள் எல்லை மீறுகின்றனர். இது, பெரும் கட்டப்பஞ்சாயத்து முறைக்கு ஒப்பானது.
50 ஆண்டுகளையும் தாண்டி நீளும் இந்திய- இலங்கை மீனவர் பிரச்சினை என்பது இப்போது பெரும் அரசியல். அது, தமிழக, இந்திய, இலங்கை அரசியல் சூழலில் பெரும் தாக்கம் செலுத்தி வருவது. அப்படியான நிலையில், இந்தப் பிரச்சினைகளை முன்னிறுத்திய பேச்சுவார்த்தைகள் எந்தவித முடிவுகளும் இன்றி இன்னமும் தொடர்கின்றன. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆட்சிக் காலத்திலும் சில தடவைகள் இந்திய- இலங்கை மீனவர்கள் தரப்புக்களுக்கிடையிலான பேச்சுவார்த்தைகள் டில்லி, தமிழகம், நீர்கொழும்பு என்று நீடித்து வந்தன. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அரசாங்கம் பதவியேற்றதும் நடைபெறவிருந்த பேச்சுக்கள் சில காரணங்களுக்கான ஒத்திவைக்கப்பட்டன.
இந்த நிலையில், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை விஜயத்தை முன்னிட்டு இந்திய- இலங்கை மீனவர்களுக்கு இடையிலான பேச்சுவார்த்தைகளை விரைவில் முன்னெடுப்பது தொடர்பில் இலங்கை அரசாங்கம் அக்கறை காட்டியது. அதற்கு தமிழக அரசாங்கம் ஒத்துழைக்கவில்லை. மாறாக, இரு நாட்டு மீனவர்களும் எல்லை தாண்டும் குற்றங்களுக்காக தொடர்ச்சியாக கைது செய்யப்படுகின்றார்கள். குறிப்பாக, எல்லை தாண்டும் குற்றங்களுக்காக கைது செய்யப்படுபவர்களில் இந்திய மீனவர்களே அதிகம். அவர்களை நல்லெண்ண அடிப்படையில் அவ்வப்போது இலங்கை அரசாங்கம் விடுத்து வந்தாலும், அவர்களின் படகுகளும், தொழில் உபகரணங்களும் மீளளிக்கப்படுவது ஒப்பீட்டளவில் குறைவு.
இந்திய- இலங்கை மீனவர் பிரச்சினைகளுக்கான பேச்சுவார்த்தைகள் கடும்போக்குடன் நடத்தப்படாமல் மனிதாபிமான ரீதியிலான கருத்தியலுடன் முன்னெடுக்கப்பட வேண்டும் என்று தமிழக மீனவர் தரப்புக்கள் எதிர்பார்க்கின்றன. வடக்கு மீனவர்களும் அதனை முற்றாக எதிர்க்கவில்லை. மாறாக, தமது வளத்தினை- கடற்பரப்பினை பாதுகாப்பது தொடர்பில் பெரும் அக்கறையோடு அணுகுகின்றார்கள். அதனை, விட்டுக்கொடுக்க வடக்கு மீனவர்கள் தயாராக இல்லை. தமது உரிமையை- வளத்தினைக் காப்பது மனிதாபிமானத்துக்கு விரோதமானது அல்ல.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அண்மையில் தமிழக தொலைக்காட்சியொன்றுக்கு வழங்கிய பேட்டியில் 'இந்திய மீனவர்கள் எல்லை மீறினால் சுடப்படுவார்கள்' என்ற தொனியில் வெளியிட்ட கருத்து பெரும் சர்ச்சைகளைத் தோற்றுவித்திருந்தது. அதுதொடர்பில், இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜ், ரணில் விக்கிரமசிங்கவிடம் நேரடியாகவே கேள்வி எழுப்பியதாக தெரிகின்றது. 'எல்லை தாண்டும் மீனவர்களை சுடுவதற்கான அதிகாரம் எமக்கு இருக்கின்றது. ஆனாலும், இந்தப் பிரச்சினையை மனிதாபிமான நோக்கோடு அணுகுவதற்கு எதிர்பார்க்கின்றோம்.' என்று இலங்கை அரசாங்கம் அண்மையில் அறிவித்திருக்கின்றது.
வடக்கு கடற்பரப்பில் தென்னிலங்கை மீனவர்களின் அத்துமீறல் ஓரளவுக்கு குறைந்திருக்கின்ற நிலையில், இந்திய மீனவர்களின் அத்துமீறல் மாத்திரம் தொடர்கின்றது. இதில், இன்னொரு விடயமும் சுட்டிக்காட்டப்பட வேண்டியது. அதாவது, எல்லை மீறும் இந்திய (தமிழக) மீனவர்களின் ரோலர்களில் அதிகமானவை தமிழக அரசியல்வாதிகளுக்கு சொந்தமானது என்றும், அவை பாரிய நிறுவனங்களின் கீழ் இயங்குவதாகவும் குற்றஞ்சாட்டப்படுகின்றது. இந்திய மீனவர்களின் நடுத்தரப்படகுகள் எல்லை தாண்டுவது குறைவு. இது மீனவர் சமூகங்களின் பிரச்சினை என்று முன்னிறுத்தப்பட்டாலும், அதனைத் தாண்டிய பாரிய நிறுவனங்களின் திட்டமிட்ட நடவடிக்கைகளின் நீட்சியாகவும் கருதப்படுகின்றது. ஆக, அவற்றின் அடிப்படைகள்- உண்மைகள் அறிந்து இந்திய- இலங்கை மீனவர் பிரச்சினை அணுகப்பட வேண்டும்.
வடக்கு கடற்பரப்பில் தொழில் நடவடிக்கைகளுக்கான நாட்களைப் பங்கிடுதலோ, அத்துமீறலை அனுமதிப்பதோ என்றைக்கு தீர்வாக அமையாது. அது, இரண்டு தசாப்த காலமாக தமது பாரம்பரிய தொழிலை முன்னெடுப்பது தடுக்கப்பட்ட சமூகத்துக்கு மீண்டும் இழைக்கப்படும் பாரிய அநீதியாக அமையும். அதுபோக, தமது வளத்தினை காத்து நிற்கும் சமூகத்தினை சுரண்ட அனுமதிப்பதற்கும் ஒப்பானது. மிகவும் நேர்த்தியான திட்டங்களுடன் இந்திய மீனவர்களின் எல்லை தாண்டுதலை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளோடு பிரச்சினை பேச்சுவார்த்தைகளினூடு தீர்க்கப்பட வேண்டும். இல்லையென்றால், இலங்கையின் மீன் சுரங்கமும் சூறையாடப்பட்டு வடக்கு மீனவர்கள் நடுக்கடலில் நாதியற்று நிற்பார்கள்!
சங்கர் Monday, 16 March 2015 10:26 AM
அருமையான அலசல் இருநாட்டு மீனவர்களும் புரிந்து நடந்தால் நல்லது
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
17 May 2025
17 May 2025