2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

சீனாவை கிலி கொள்ளவைத்த இலங்கை

Suganthini Ratnam   / 2015 மார்ச் 13 , மு.ப. 03:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கே.சஞ்சயன்

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கான உத்தியோகபூர்வ பயணத்தை இன்று ஆரம்பிக்கவுள்ள  சூழலில், இரு நாடுகளுக்கும் இடையிலான நெருக்கம் இன்னும் அதிகரிக்கும் என்ற எதிர்பார்ப்பு வலுத்துள்ளது.  

அதேவேளை, மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான முன்னைய அரசாங்கத்தின் காலத்தில், சீனாவுடன் இலங்கை கொண்டிருந்த நெருக்கமான நட்புறவில் விரிசல்கள் விழத்தொடங்கியுள்ளன.

இந்தியாவுடன் நெருக்கத்தை ஏற்படுத்திக்கொண்டுள்ள இலங்கையின் புதிய அரசாங்கம், தன்னை ஓரம்கட்ட முனைகிறதா என்ற சந்தேகம் சீன அரசாங்கத்துக்கு தோன்றியிருக்கிறது. 1.4 பில்லியன் டொலர் முதலீட்டில், சீன நிறுவனத்தினால் மேற்கொள்ளப்பட்டுவந்த கொழும்புத்துறைமுக நகரத்திட்டத்தை இடைநிறுத்துவதற்கு கடந்த 4ஆம் திகதி இலங்கை அரசாங்கம் எடுத்துள்ள முடிவு, சீனாவை பெரிதும் கவலையும் அச்சமும் கொள்ளவைத்திருக்கின்றது.

மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தினால் அமைச்சரவையின் முறைப்படியான அங்கிகாரம், சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் அனுமதிகள் போன்றவற்றை பெற்றுக்கொள்ளாமல் இந்தத் திட்டத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டது. சுற்றாடல் பாதிப்புகள் குறித்த ஆய்வு மற்றும் அது பற்றிய அனுமதிகள் ஏதும் பெறப்படாமையை சுட்டிக்காட்டியே, இந்தத் திட்டத்தை இடைநிறுத்தியிருக்கிறது அமைச்சரவை.

புதிய அரசாங்கம் பதவிக்கு வர முன்னர் தாம் இந்தத் திட்டத்தை இடைநிறுத்துவோம் என்று தற்போதைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கூறியிருந்தார். எனினும், புதிய அரசாங்கம் பதவிக்கு வந்த பின்னர், கொழும்புத் துறைமுக நகரத்திட்ட விவகாரத்தை சற்று மென்போக்குடனேயே கையாளத் தொடங்கியிருந்தது. ஆனால், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கு பயணம் மேற்கொள்ளவுள்ள சூழலில், திடீரென கடந்த வாரம் இந்தப் பணிகளை இடைநிறுத்தும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இது இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் வருகையையொட்டி, இலங்கை அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட ஓர் இராஜதந்திர நகர்வு என்றே கருதப்படுகிறது. அதைவிட, இலங்கையின் புதிய அரசாங்கம், சீனாவுக்கு எதிராக செயற்படுவதாகவும் அந்த நாடு சந்தேகம் கொள்கிறது.

அணிசேராக் கொள்கையை புதிய அரசாங்கம் கடைப்பிடிக்கும் என்றும் எந்த நாட்டையும் சார்ந்து செயற்படாது என்றும் புதிய அரசாங்கம், சீனாவையும் இந்தியாவையும் நம்பவைக்க முயற்சிக்கிறது. ஆனாலும், சீனா அதனை நம்பத் தயாராக இல்லை என்பதை அதன் அதிகாரபூர்வ கருத்துக்களிலிருந்து உணரமுடிகிறது.

இந்தியாவின் சார்பாக இலங்கை செயற்படுவதாகவே சீனா கருதுகிறது. அதனாலேயே, சீன வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் ஹுவா சுங்யிங், அண்மையில் மற்றைய நாடுகளின் அபிவிருத்தித் திட்டங்கள் குறித்தும் இலங்கை  மீளாய்வு செய்கிறதா என்பதை சீனா உன்னிப்பாக கவனிக்கும் என்றும் தெரிவித்திருந்தார்.

சீனாவின் திட்டங்களை மட்டுமன்றி, 400 மில்லியன் அமெரிக்க டொலர் செலவில் கொழும்பில் வீடமைப்புத்தொகுதியை நிர்மாணிக்கும் இந்தியாவினுடைய டாடா நிறுவனத்தின் உடன்பாட்டையும் மீளாய்வு செய்யப்போவதாக நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்திருக்கிறார். கொழும்புத் துறைமுக நகரத்திட்டத்தை இடைநிறுத்தியது சீனாவுக்கு எதிரான செயல் அல்ல என்றும் இது ஊழல் மோசடிக்கு எதிரான நடவடிக்கையே என்றும் அவர் கூறியிருக்கிறார்.

சீன ஜனாதிபதி ஜி ஜிங்பிங் பதவிக்கு வந்த பின்னர், ஊழலுக்கு எதிராக மேற்கொள்ளும் நடவடிக்கை போலவே நாங்களும் முன்னெடுக்கிறோம் என்று நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க கூறியுள்ளமை, சீனாவுக்கும் இலங்கைக்கும் இடையில் ஏற்பட்டுள்ள இடைவெளியை நன்றாகவே வெளிப்படுத்துகிறது.

ஜி ஜிங்பிங்கினால் சீனாவில் ஊழலுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைபோலவே, இலங்கையின் புதிய அரசாங்கமும் மேற்கொள்வதாக கூறப்படும் நியாயத்தை சீனா ஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லை. ஏனென்றால், இலங்கையில் நடைபெற்ற ஆட்சி மாற்றத்தை இயல்பானதொன்றாக சீனா கருதவில்லை.

முன்னைய மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்துடன் சீனா கொண்டிருந்த நெருக்கமான உறவுகளும் இலங்கையில் அதிகரித்துவந்த சீனாவின் தலையீடுகளுமே  இலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்படக் காரணம் என்ற கருத்து வலுவாகவுள்ளது.

அமெரிக்காவும் இந்தியாவும் இந்த ஆட்சி மாற்றத்தின் பின்னணியில் இருந்ததாக உறுதியாக நம்பப்படுகிறது. இத்தகைய நிலையில், இலங்கை அரசாங்கம் தமக்கு சார்பாகச் செயற்படும் என்று சீனாவினால் எந்த வகையிலும் நம்பமுடியவில்லை.
சீனாவை பொறுத்தவரையில், கொழும்புத் துறைமுக நகரத்திட்டம் இடைநிறுத்தப்படுவதால், ஏற்படக்கூடிய பொருளாதார நஷ்டங்களை அது பெரிதாக எடுத்துக்கொள்கிறது என்று எவரேனும் கருதினால் அது தவறானது.

சீனாவுக்கு 1.5 பில்லியன் அமெரிக்க  டொலர் என்பது ஒரு பெரிய தொகையல்ல. உலகின் மிகப்பெரிய பொருளாதாரத்தை கொண்ட நாடு என்ற இலக்கை மிக விரைவில் அடையும் நிலையிலிருக்கும் சீனாவை பொறுத்தவரையில், இந்த பொருளாதாரப் பாதிப்பு அதனை ஆட்டம் காணச் செய்துவிடாது. ஆனால், இந்தத் திட்டம் இடைநிறுத்தப்படுவதால், ஏற்படக்கூடிய மூலோபாய நலன் இழப்புகள் குறித்தே அது கவலைப்படுகிறது.

ஹம்பாந்தோட்டையில் சீனா துறைமுகத்தை அமைக்கத் தொடங்கியபோது கூட, இந்தியாவுக்கு அச்சம் இருந்தது. அது தனக்கு எதிராக பயன்படுத்தப்படக்கூடும் என்று இந்தியா வெளிப்படையாகவே கூறியது. அது வெறும் வர்த்தகத்திட்டமே என்றும் அதனால், இந்தியாவின் பாதுகாப்புக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது என்றும் இலங்கை அரசாங்கம் புதுடெல்லியை நம்பவைக்க முயன்றது.

இந்தியா அந்த விடயத்தில் சற்று கவனமாக இருந்தாலும், அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து இடைநிறுத்த முனையவில்லை.
அதுபோலவே, கொழும்புத் துறைமுகத்தின் தெற்குப் பகுதியில் கொள்கலன் முனையத்தை சீனா 500 மில்லியன் அமெரிக்க டொலர் செலவில் அமைத்தபோது கூட, இந்தியா அவ்வளவாக அச்சம் கொள்ளவில்லை. அந்த கொள்கலன் முனையத்தில் சீனாவுக்கு என்று தனியானதொரு பகுதி ஒதுக்கப்பட்டதையும் அங்கு சீன நீர்மூழ்கிகள் தரித்துநின்ற விவகாரத்தையும் விட, கொழும்புத் துறைமுக நகரத்திட்ட விவகாரத்தில்; இந்தியாவின் கரிசனை அதிகமாக உள்ளது.

கொழும்புத் துறைமுக நகரத்திட்டத்தின் மூலம் கடலை நிரவி உருவாக்கப்படவுள்ள 238 ஹெக்டேயர் நிலப்பரப்பில், 20 ஹெக்டேயர் சீனாவுக்கே உரிமையானதாக இருக்கப்போகிறது. அதைவிட, மேலும் 88 ஹெக்டேயர் நிலப்பரப்பு  99 வருட குத்தகைக்கு சீனாவே  வைத்திருக்கப்போகிறது. இதனை இந்தியாவினால் சகித்துக்கொள்ள முடியாதிருக்கிறது.
சீனா தனக்கு சொந்தமாக வைத்திருக்கக்கூடிய நிலப்பகுதியிலிருந்து, பெரும்பாலும் கொழும்புத் துறைமுகத்தையே பயன்படுத்தும் தமது கப்பல்களை சீனா இலகுவாக கண்காணிக்கும் என்பது இந்தியாவின் முக்கியமான கவலை. அதைவிட, சீன நீர்மூழ்கிகள் போன்றவை இந்தியாவுக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய பாதுகாப்புக் காரணிகளின் நடமாட்டங்களையும் இது ஊக்குவிக்கக்கூடும் என்று இந்தியா கவலை கொள்கிறது. இதனால்,  எப்படியாவது இந்தத் திட்டத்தை இடைநிறுத்தவேண்டும் என்று இந்தியா முயற்சிக்கிறது. அதேவேளை, இந்தத் திட்டத்தை எப்படியாவது நிறைவேற்றவேண்டும் என்பதில் சீனா குறியாக இருக்கிறது.

இந்த இரு நாடுகளுக்கும் இடையிலான அதிகாரப் போட்டிக்குள் இலங்கையை சிக்கவைத்திருக்கிறது கொழும்புத்துறைமுக நகரத்திட்டம். 'ஏறச் சொன்னால் எருதுக்கு கோபம், இறங்கச் சொன்னால் முடவனுக்கு கோபம்' என்ற பழமொழி போலவே  இலங்கையின் நிலை. தான் யாருக்கும் எதிரியல்ல, எல்லோருக்கும் நண்பன் என்று காண்பித்து இரண்டு நாடுகளையும் மடக்கப்பார்க்கிறது இலங்கையின் புதிய அரசாங்கம். இருந்தாலும், கொழும்புத் துறைமுக நகரத்திட்டத்தை இடைநிறுத்தியதன் மூலம் இலங்கையின் மீதான சீனாவின் நம்பிக்கை கணிசமாகவே தளர்ந்துபோயுள்ளது.

சீனாவிடம் கிட்டத்தட்ட 5 பில்லியன் அமெரிக்க டொலரை கடனாக பெற்றிருந்தாலும், இலங்கை அரசாங்கம் இந்த விவகாரத்தில் அதைப்பற்றியெல்லாம் கவலைப்படாமல் நடவடிக்கை எடுத்திருக்கிறது. இந்த நிலையில், இலங்கை அரசாங்கம் கொழும்புத் துறைமுக நகரத்திட்டத்தை என்ன செய்யப்போகிறது என்ற கேள்வி எழுந்திருக்கிறது. அதாவது, இப்படியே இந்தத் திட்டம் இடைநிறுத்தப்படுமா அல்லது தொடர அனுமதிக்கப்படுமா என்பதே முக்கியமான கேள்வியாக இருக்கிறது.

சீனாவின் முதலீட்டில் மேற்கொள்ளப்படும் இந்தத் திட்டத்தில் மூன்று முக்கியமான குற்றச்சாட்டுக்களை அரசாங்கம் முன்வைத்திருந்தது. முதலாவது, இந்தப் பாரிய திட்ட உடன்பாட்டு விவகாரத்தில் முன்னைய அரசாங்கத்தினால் ஊழல் செய்யப்பட்டிருக்கிறது என்பது. இரண்டாவது, இந்த உடன்பாட்டு விதிகள், இலங்கையின் இறைமைக்கு ஆபத்தை விளைவிக்கக்கூடியது என்பது. மூன்றாவது, தேவையான முன் அனுமதிகள் ஏதும் பெறப்படாமல், இந்தத் திட்டம் செயற்படுத்தப்பட்டிருக்கிறது.  இதனால், சுற்றுச்சூழலுக்கு ஆபத்து ஏற்படும் என்பது. இவ்வாறு மூன்று விதமான குற்றச்சாட்டுகளின் மூலம் கொழும்புத்துறைமுக நகர கட்டுமானத்தை இடைநிறுத்த அரசாங்கம் திட்டமிட்டிருந்தாலும், கடைசியான காரணத்தையே இப்போது கையில் எடுத்திருக்கிறது.

சுற்றுச்சூழலுக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடியது என்றும் தேவையான முன் அனுமதிகளின்றி இது ஆரம்பிக்கப்பட்டுள்ளது என்றும் கூறியே, இந்தத் திட்டம் இடைநிறுத்திவைக்கப்பட்டுள்ளது. அவ்வாறாயின், முதலிரண்டு காரணங்களையும் அரசாங்கம் முன்னிலைப்படுத்தாதது ஏன் என்ற கேள்வி எழுகிறது.

அரசாங்கத்தை பொறுத்தவரையில், இந்தத் திட்டத்தில் எந்த ஊழலும் இடம்பெறவில்லை என்பது உறுதிசெய்யப்பட்டால், இதனால், இலங்கையின் இறைமைக்கோ, இந்தியாவின் பாதுகாப்புக்கோ ஆபத்து ஏற்படாது என்று உத்தரவாதப்படுத்தப்பட்டால், சுற்றுச்சூழலுக்கும் ஆபத்தில்லை என்று உறுதியானால், நிச்சயம் திட்டத்தை தொடர அனுமதிக்கும்.

மூன்று விவகாரங்களில் இரண்டில், சாதகமாக இருந்தால் கூட அரசாங்கம் அதற்கு சாதகமான சமிக்ஞையை வெளிப்படுத்தும்.

பெரியதொரு முதலீடு, சீனாவை பகைக்கக்கூடாது என்பன போன்ற காரணங்களினால் இந்தத் திட்டத்தை மாற்று உடன்பாட்டின் கீழ் தொடர்வதற்கு அனுமதிக்க அரசாங்கம் தயாராகவே உள்ளதாகத் தெரிகிறது. ஆனால், அதற்கு சீனா உடன்பட வேண்டியது முக்கியமானது.

ஏற்கெனவே செய்யப்பட்ட உடன்பாடுகள் இரு நாடுகளுக்கும் நலன்களை தரக்கூடியது என்று சீனா கூறியிருக்கிறது. அதில், இலங்கை மட்டுமே அந்த உடன்பாட்டில் திருத்தம் செய்துகொள்ள வேண்டும் என்று வலியுறுத்துவதை சீனா ஏற்றுக்கொள்ளும் போலத் தெரியவில்லை. அவ்வாறு சீனா இறங்கிப்போகும் நிலை ஒன்று ஏற்பட்டால், அது சீனாவுக்கு தவறான முன்னுதாரணமாக அமைந்துவிடும்.

உலகின் பல நாடுகளில் சீனா முதலீடுகளை கொட்டத் தொடங்கியுள்ளது. குறிப்பாக, ஆபிரிக்க நாடுகளை அது வளைத்துப்போட்டு வருகிறது. இந்த நிலையில், இந்தத் திட்டத்தில் விட்டுக்கொடுத்து உடன்பாட்டை மாற்றியமைக்க இணங்கினால், ஏனைய நாடுகளும் அதே வழிமுறையை கடைப்பிடிக்க காரணமாகிவிடும் என்று சீனா கருதுகிறது. அதனால், இந்த உடன்பாட்டை மாற்றியமைப்பதற்கு சீனா அவ்வளவாக இடம்கொடுக்காது. ஏற்கெனவே சீனா இது பற்றிக் கூறியிருக்கிறது.

முன்னைய அரசாங்கத்தினால் செய்துகொள்ளப்பட்ட இரு தரப்பு உடன்பாடுகள், வர்த்தக உடன்பாடுகளை மதிக்கவேண்டியது புதிய அரசாங்கத்தின் கடமை. இது சர்வதேச நெறிமுறையும் கூட. இதனை இலங்கையின் புதிய அரசாங்கம் மீறாது என்று சீனா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது, இலங்கை அரசாங்கத்துக்கு நெருக்கடியை கொடுக்க சீனா  தயாராகிறது என்பதையே உணர்த்தியிருக்கிறது.
இந்தப் பிடியை சீனா இறுக்கத் தொடங்கினால், கொழும்புத் துறைமுக நகரத்திட்டத்துக்காக தான் செலவிட்ட நிதிக்காக சீனா நீதிமன்றப் படிக்கட்டுகளிலும் ஏறலாம்.

இலங்கை இந்த விடயத்தை சுமுகமாகவே தீர்க்க முனைந்தாலும், சீனா அதற்கு இடமளிக்குமா என்பதை பொறுத்திருந்து பார்க்கவேண்டியுள்ளது. இன்று கொழும்பு வரும் இந்தியப் பிரதமர், இலங்கையுடன் நெருக்கத்தை ஏற்படுத்திக்கொண்டாலும், சீனாவின் திட்டங்கள் விடயத்தில் இலங்கை அரசாங்கம் தீர்க்கமான முடிவை அறிவிக்காதிருப்பது, இந்தியாவுக்கும் கவலை தரும் விடயமாகவே இருக்கும்.

பாலுக்கும் காவல், பூனைக்கும் தோழனாக இலங்கை எவ்வளவு காலத்துக்குத்தான் நடிக்கமுடியும்?


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .