Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை
Thipaan / 2015 மார்ச் 16 , மு.ப. 06:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இம்முறை மேற்கொண்ட இலங்கை விஜயத்துக்கும்; 27 ஆண்டுகளுக்கு முன்னர் அப்போதைய இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி மேற்கொண்ட இலங்கை விஜயத்துக்கும் இடையே பாரிய வித்தியாசங்கள் உள்ளன.
இருவரினதும் விஜயங்களில் ஒத்த தன்மைகள் இல்லாமல் அல்ல. இருவரும், இலங்கையின் இனப்பிரச்சினை விடயத்திலான அக்கறையுடன் இவ் விஜயங்களில் ஈடுபடுதல் அவ்வாறானதோர் ஒத்த தன்மையாகும்.
ராஜீவ் காந்தியின் அன்றைய விஜயத்தை, ஓர் ஆக்கிரமிப்பாளரின் விஜயமாகவே இலங்கையில் பலர் அன்று பார்த்தனர். அவ் விஜயத்துக்கு சில நாட்களுக்கு முன்னர் இந்தியப் படைகள், இலங்கையின் கடற் பரப்புக்குள்ளும் வான் பரப்புக்குள்ளும் பலாத்காரமாக பிரவேசித்து, இலங்கை அரசாங்கத்தை சீண்டியிருந்தமையும் இந் நாட்டில் பலரால் வெறுக்கப்பட்ட இலங்கை- இந்திய ஒப்பந்தத்தை கைச்சாத்திடுவதற்காகவே அவர், அன்று இலங்கைக்கு விஜயம் செய்தமையுமே பலர் அவ்வாறு நினைக்க காரணமாகியது.
இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையே அரசியல் பதற்ற நிலைமை அன்று ஏற்படுவதற்கு அப்போதைய சர்வதேச அரசியல் நிலைமையும் ஒரு முக்கிய காரணமாகியது. அக் காலத்தில் உலகம், அமெரிக்க சார்பு அணியாகவும் சோவியத் யூனியன் சார்பு அணியாகவும் இரண்டாகப் பிளவுபட்டு இருந்தது.
அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்தேய முதலாளித்துவ நாடுகள் ஓர் அணியில் முக்கிய நாடுகளாக இருந்தன. ரஷ்யா உள்ளிட்ட 15 குடியரசுகளைக் கொண்ட சோவியத் ஒன்றியம் மற்றும் பல சோஷலிஸ நாடுகள் மற்றைய அணியில் பிரதான நாடுகளாயின.
முதலாளித்துவ பொருளாதார முறைiமைகளைக் கொண்ட போதிலும் இலங்கை, இந்திய மற்றும் பாகிஸ்தான் போன்ற நாடுகள்; இவ்விரண்டு அணிகளில் ஒன்றை தெரிவு செய்து அதில் சேர்ந்து கொண்டன. இந்தியா சோவியத் அணியில் இருக்க பாகிஸ்தான், அமெரிக்க அணியில் சேர்ந்து இருந்தது.
1977ஆம் ஆண்டு இலங்கையின் பிரதமராகவும் 1978 ஆம் ஆண்டு ஜனாதிபதியாகவும் பதவியேற்ற ஜே. ஆர் ஜயவர்தனவும் மேற்கத்தேய ஏகாதிபத்திய நாடுகளின் நண்பராகவே செயற்பட்டார். அதன் பிரகாரம் அவர் அமெரிக்காவுடனும் பாகிஸ்தானுடனும் இஸ்ரேலுடனும் நெருங்கிய தொடர்பை வைத்திருந்தார். இந்தியா இந்த நிலைமையை ஓர் அச்சுறுத்தலாகவே கருதியது.
எனவே, அப்போதைய இந்தியப் பிரதமர் இந்திரா காந்தி, ஜே.ஆர் ஜயவர்தனவை தண்டிக்க நினைத்தார். இந்தப் பின்னணியிலேயே, 1983ஆம் ஆண்டு இலங்கை முழுவதிலும் தமிழர்களுக்கு எதிரான கலவரங்கள் வெடித்தன. இந்தியா இதனை பாவித்து இலங்கையின் உள் விவகாரங்களில் நேரடியாகவே தலையிட ஆரம்பித்தது.
இந்திய அரசாங்கம் இலங்கையின் தமிழ் ஆயுதக் குழுக்களுக்கு ஆயுதம், பணம் மற்றும் ஆயுதப் பயிற்சி ஆகியவற்றை வழங்கியது. இலங்கையில் அதிகார பரவலாக்கல் முறையொன்று அமுலாக்கப்பட வேண்டும் என வலியுறுத்தியது. 1984ஆம் ஆண்டு, ராஜீவ் காந்தி பதவிக்கு வந்த போதும் இந்த நிலை நீடித்தது.
இதனிடையே 1987ஆம் ஆண்டு, இலங்கையின் வட பகுதியில் புலிகள் அமைப்பினருக்கும் அரச படைகளுக்கும் இடையே மோதல் உக்கிரமடைந்தது. யாழ்ப்பாண மாவட்டத்தின் வடமராட்சிப் பகுதியில் புலிகளின் நடவடிக்கைகள் அதிகமாக காணப்பட்டன.
எனவே, அப் பகுதியில் இருந்து புலிகளை விரட்டியடிக்கவென அரச படைகள் ஒப்பரேஷன் லிபரேஷன் என்ற பெயரில் பாரிய படை நடவடிக்கையொன்றை ஆரம்பித்தன. இந்தியா தலையிட்டு அதனை இடை நடுவே தடுத்தது.
அதன் பின்னர், 1987ஆம் ஆண்டு ஜூன் மாதம் 2ஆம் திகதி போரினால் பாதிக்கப்பட்ட வட பகுதி மக்களுக்கு வழங்குவதற்கென இந்திய கடற்படையினர், உணவுத் தொகையொன்றை ஏற்றிக் கொண்ட சில கப்பல்களை இலங்கையின் அனுமதியின்றி வட பகுதி கடலுக்கு அனுப்பினர். இலங்கைக் கடற்படையினர் அதனை எதிர் கொண்டு தடுத்தனர்.
இந்திய கப்பல்கள் திரும்பிச் சென்றன. ஆனால் ஓரிரு நாட்களில் சில இந்திய விமானங்கள், இலங்கையின் வட பகுதி வான் பரப்புக்குள் அத்துமீறி நுழைந்து உணவுப் பொதிகளை யாழ்ப்பாண குடாநாட்டின் சில பகுதிகிளில் போட்டுவிட்டுப் பறந்;து சென்றன.
இவ்வாறு இலங்கை அரசாங்கத்தை மிரட்டி தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்த ராஜீவ் காந்தி தமது அதிகாரிகளால் தயாரிக்கப்பட்ட இலங்கை- இந்திய ஒப்பந்தத்தில் கைச்சாத்திடவும் ஜயவர்தனவை இணங்கச் செய்தார். இந்த ஒப்பந்தத்தை கைச்சாத்திடுவதற்காகவே 27 ஆண்டுகளுக்கு முன்னர் ராஜீவ் காந்தி, இலங்கைக்கு விஜயம் செய்தார். தென் பகுதியில் பலர் எதிர்த்த மாகாண சபை முறை அதன் மூலமே அறிமுகப்படுத்தப்பட்டது.
புலிகள் தவிர்ந்த ஏனைய தமிழக்; கட்சிகள் மற்றும் அமைப்புக்கள் அம் முறை இனப் பிரச்சினைக்கு தீர்வாகும் என்றே கூறின.
அப்போதைய பிரதான எதிர்க்கட்சியான ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியும் அப்போது தடை செய்யப்பட்டு இருந்த மக்கள் விடுதலை முன்னணியும் தலைமை தாங்கி, கொழும்பு உட்பட நாட்டின் பல இடங்களில் ஆர்ப்பாட்டங்களை நடத்தின. பல இடங்களில், ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையே ஏற்பட்ட மோதல்களின் காரணமாக 142 பேர் கொல்லப்பட்டதாக அக் காலத்தில் ஊடகங்கள் தெரிவித்திருந்தன.
நாட்டில் கடும் இந்திய எதிர்ப்பு நிலை காணப்பட்டது. அதன் வெளிப்பாடாக, இந் நாட்டை விட்டுச் செல்லுமுன் கடற்படை அணிவகுப்பொன்றை ஏற்கச் சென்ற ராஜீவ் காந்தியை அணிவகுப்பில் கலந்து கொண்ட கடற்படை வீரர் ஒருவர் தமது துப்பாக்கியால் தாக்கினார்.
ஆனால், அவ்வாறான எவ்வித பதற்ற நிலையும் இல்லாமலேயே மோடி, கடந்த வெள்ளிக்கிழமை இலங்கைக்கு வந்தார். அன்று போல் இரு நாடுகளுக்கிடையே அரசியல் பதற்ற நிலை இப்போது இல்லை. பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, இந்திய மீனவர்களைப் பற்றி வெளியிட்ட கருத்தொன்று இந்தியாவில் சற்று சர்ச்சையை கிளப்பிய போதிலும் மோடியின் விஜயத்துக்கு சில நாட்களுக்கு முன்னர் இலங்கைக்கு விஜயம் செய்த இந்திய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜுக்கும் பிரதமர் விக்கிரமசிங்கவுக்கும் இடையே இடம்பெற்ற பேச்சுவார்த்தைகளை அடுத்து அதுவும் தணிந்து விட்டது.
இந்தியாவில் அல்லது இலங்கையில் தமிழ் அரசியலில் கொந்தளிப்பு நிலை ஏற்பட்டாலேயே இரு நாடுகளிடையே பதற்ற நிலை ஏற்படுகிறது. ஆனால், இலங்கையிலோ அல்லது இந்தியாவிலோ தமிழ் அரசியலில் கொந்தளிப்போ பதற்றமோ இப்போது காண்பதற்கில்லை.
இலங்கையில், அரசாங்கத்துக்கும் தமிழ் அரசியல்வாதிகளுக்கும் இடையே மிக அரிதாக நல்லுறவு காணப்படுகிறது. கடந்த ஜனவரி மாதம் 8ஆம் திகதி நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் மைத்திரிபால சிறிசேன வெற்றி பெற்றதை அடுத்தே இந்த புதிய சுமுக நிலை ஏற்பட்டுள்ளது.
ஜனாதிபதித் தேர்தலின் போது இலங்கையின் பிரதான தமிழ்க் கூட்டமைப்பான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளரான மைத்திரிபால சிறிசேனவையே ஆதரித்தது. சிறிசேனவின் தலைமையில் அமைந்த தற்போதைய அரசாங்கமும் பதவிக்கு வந்தது. முதல் தமிழ் கட்சிகளுடன் சுமுக உறவை கருத்திற் கொண்டு பல நடவடிக்கைகளை எடுத்தது.
நாட்டில பல பகுதிகளில் இருந்த வீதித் தடைகள் அகற்றப்பட்டன. குறிப்பாக வட பகுதியை தனியான நாடொன்றைப் போல் காட்டிய ஓமந்தை சோதனைச் சாவடியையும் அகற்ற அரசாங்கம் நடவடிக்கை எடுத்தது. வட மாகாணத்துக்கு இராணுவ ஆளுநர் ஒருவருக்கு பதிலாக சிவில் ஆளுநர் ஒருவரை நியமிக்குமாறு தமிழ் அரசியல்வாதிகள் நீண்டகாலமாக கோரிக்கை விடுத்து வந்தனர். புதிய அரசாங்கம், வட மாகாணத்துக்கு மட்டுமல்லாது கிழக்கு மாகாணத்துக்கும் சிவில் ஆளுநர்களை நியமித்துள்ளது.
அத்தோடு வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரனுடன் மோதிக் கொண்டிருந்த வட மாகாண பிரதம செயலாளரையும் அரசாங்கம் மாற்றியுள்ளது.
வட பகுதியில் உயர் பாதுகாப்பு வலயங்களுக்காகவென பாதுகாப்புப் படையினர் கைப்பற்றிக் கொண்டிருந்த பல்லாயிரக்கணக்கான ஏக்கர் காணிகளில், 1,000 ஏக்கர் காணிகளை மீண்டும் அவற்றின் உரிமையாளர்களிடம் கையளிப்பதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.
மறுபுறத்தில் தமிழ் அரசியல்வாதிகளும் அதற்கு நல்ல முறையில் பதில் நடவடிக்கைகளை எடுத்துள்ளனர். 1972ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட முடிவொன்றின் பிரகாரம் இலங்கையின் சுதந்திர தின வைபவங்களில் கலந்து கொள்ளாமல் இருந்த இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர்கள் இம் முறை தேசிய சுதந்திர தின வைபவத்தில் கலந்து கொண்டனர். அதனால் இப்போது அவர்கள் சில தமிழ் தீவிரவாதிகளின் எதிர்ப்பையும் சந்திக்க வேண்டியுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் கடந்த வருடம் யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் நடைபெற்ற போது முதலமைச்சர் விக்னேஸ்வரன் அதனை பகிஷ்கரித்தார். இம் முறை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, வட மாகாண ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கலந்து கொள்ள சென்ற போது, முதலமைச்சரே அவரை வரவேற்று அவரும் கூட்டத்தில் கலந்துகொண்டுள்ளார். தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, ஆங்கில பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய பேட்டியொன்றில், அக் கூட்டத்தின் போது ஜனாதிபதி செயற்பட்ட முறையைப் பற்றி திருப்தியைத் தெரிவித்திருந்தார்.
ஆனால், இரு சாராருக்குமிடையே பிரச்சினைகள் ஏற்படாமலும் இல்லை. போரின் இறுதிக் கட்டத்தின் போது இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக, ஐ.நா. மனித உரிமை பேரவையின் குழுவொன்றினால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் அறிக்கையை வெளியிடாமல் தாமதப்படுத்துமாறு இலங்கை புதிய அரசாங்கம் அந்த பேரவையிடம் கோரிக்கை விடுத்திருந்தது. பேரவையும் அதனை ஏற்றுக் கொண்டு எதிர்வரும் செப்டெம்பர் மாதம் வரை அறிக்கை வெளியிடுவதை தாமதப்படுத்தியிருக்கிறது.
தமிழ் அரசியல்வாதிகள் இதைப் பற்றி அதிருப்தியை தெரிவித்தனர். ஆனால், இந்த விசாரணை புலிகள் மேற்கொண்ட நடவடிக்கைகளையும் உள்ளடக்கியது என்பதையும் இப்போது இந்த அறிக்கை தாமதப்படுத்தப்பட்டு இருக்கிறதே தவிர அது இரத்துச் செய்யப்படவில்லை என்பதையும் தமிழ் தலைவர்கள் கருத்திற்கொண்டார்களோ தெரியாது.
இதேபோல் தமிழ் அரசியல்வாதிகளும் ஒரு கட்டத்தில் அரசாங்கத்தின் தலைவர்களை அதிருப்தியடையச் செய்தார்கள். சுதந்திரத்தின் பின் இலங்கையில் தொடர்ந்தும் தமிழர்களுக்கு எதிரான இன அழிப்பு நடவடிக்கைகள் இடம்பெற்றுள்ளதாக வட மாகாண முதலமைச்சர் தாமாக முன்வந்து மாகாண சபையில் ஒரு பிரேரணையை முன்மொழிந்து நிறைவேற்றிக் கொண்டமை மூலமே இது இடம்பெற்றது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் இதைப் பற்றி தமது அதிருப்தியை தெரிவித்து இருந்தார்.
வட பகுதியில் இருந்து இராணுவத்தை வாபஸ் பெறுவதில்லை என பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கூறியதனாலேயே தாம் இந்தப் பிரேணையை கொண்டு வர நினைத்ததாக முதலமைச்சர் கூறியிருந்தார். ஐ.நா. அறிக்கை தாமதப்படுத்தப்பட்டதனால் இது கொண்டு வரப்பட்டதாகவும் கூறப்பட்டது.
இதனால் எழும் கேள்வி என்னவென்றால் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் அவ்வாறு கூறாவிட்டால் அல்லது ஐ.நா. அறிக்கை தாமதப்படுத்தாவிட்டால் இலங்கையில் இன அழிப்பு இடம்பெறவில்லை என்கிறதா!
1948ஆம் ஆண்டு ஐ.நா. பொதுச் சபையினால் நிறைவேற்றப்பட்டு 1950 ஆம் ஆண்டு இலங்கை அரசாங்கமும் ஏற்றுக் கொண்ட இன அழிப்பை தடுப்பதற்கும் அதற்காக தண்டனை வழங்குவதற்குமான சர்வதேச உடன்பாட்டின் அடிப்படையிலேயே முதலமைச்சர் இந்தப் பிரேரணையை முன்வைத்துள்ளார்.
அந்த உடன்பாட்டின் பிரகாரம் ஓர் இனத்தின் சிறு பிரிவினருக்காவது உடல் ரீதியாகவோ அல்லது உள ரீதியாகவோ சேதம் விளைவித்தல் இன அழிப்பாகும். அந்த அடிப்படையில் முதலமைச்சரின் பிரேரணை சரியானதே.
ஆனால், அந்த அளவுகோலின் படியே சிங்களவர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் எதிரான புலிகளின் செயற்பாடுகளை கவனித்தால் அவையும் அச் சமூகங்களின் சிறு பிரிவினருக்காவது உடல் ரீதியாகவோ அல்லது உள ரீதியாகவோ சேதம் விளைவித்ததாகவே முடிவு செய்ய வேண்டியிருக்கும். அந்த வகையில் அச் செயற்பாடுகளையும் இன அழிப்பு நடவடிக்கைகளாகவே கருத வேண்டியிருக்கும்.
புலிகளின் செயற்பாடுகளை ஆதாரமாக வைத்து தென் பகுதியில் மாகாண சபையொன்றும் புலிகளுக்கு எதிராக இது போன்றதோர் பிரேரணையை நிறைவேற்ற முடியும்.
இவ்வாறூன சிக்கல்கள் இருந்த போதிலும் தமிழ் கூட்டமைப்புக்கும் அரசாங்கத்துக்கும் இடையே பொதுவாக சுமுக நிலையே நிலவி வருகிறது. எனவே, இலங்கை அரசாங்கத்தின் மீது மோடி அழுத்தம் பிரயோகிப்பதற்கான ஒரு காரணம் இப்போதைக்கு இல்லாமல் போயுள்ளது.
மறுபுறத்தில் தமிழக நிலைமையும் மோடிக்கு நெருக்குதலை கொடுப்பதாக தெரியவில்லை. இதற்கு முக்கிய காரணம் முன்னைய காங்கிரஸ் அரசாங்கத்தைப் போல், மோடியின் அரசாங்கம் தமிழகம் உட்பட மாநில கட்சிகளின் தயவில் இயங்காததேயாகும். இதன் காரணமாகவே மோடி பதவிக்கு வந்ததன் பின்னர் இலங்கை விடயத்தில் தமிழகத்தில் பதற்ற நிலைமைகள் ஏற்படவில்லை.
ரணில் விக்கிரமசிங்கவின் மேற்படி கூற்று மட்டுமே ஓரளவுக்காவது சர்ச்சையை கிளப்பியது. சில நாட்களுக்கு முன்னர் இந்திய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜ் இலங்கைக்கு விஜயம் செய்த போது இந்திய ஊடகவியலாளர்களும் இங்கு வந்தனர். அவர்களில், தந்தி தொலைக்காட்சியின் ஊடகவியலாளர் ஒருவர், விக்கிரமசிங்கவை பேட்டி கண்டார்.
அதில் ஒரு கட்டத்தில் இந்திய மீனவர்கள் இலங்கை கடல் பகுதியில் மீன்பிடித்தல் பற்றிய விடயம் வந்தது. அப்போது விக்கிரமசிங்க எனது வீட்டுக்குள் எவராவது அத்துமீறி உட்புகுந்தால் துப்பாக்கி பிரயோகம் செய்யும் உரிமை எனக்கு இருக்கிறது என்றார்.
இந்திய மீனவர்களை சுடுவதாக விக்கிரமசிங்க மிரட்டினாரென அப்போது இந்திய ஊடகங்கள் கூறலாயின. தமிழகத்தில் சிலர், இந்தக் கூற்றினால் மோடி தமது இலங்கை விஜயத்தை இரத்துச் செய்ய வேண்டும் என்றும் கூறினர். ஆனால், அந்த பேட்டியை நன்றாக கவனித்தால் இந்திய ஊடகவியலாளர் மிகக் கஷ்டப்பட்டு விக்கிரமசிங்கவை அது போன்றதோர் இடத்துக்கு இழுத்துச் செல்வதை அவதானிக்க முடிகிறது.
மீனவர்களின் செயற்பாடுகளை தொடர்ந்து அவர் நியாயப்படுத்த முயற்சிக்கிறார். ஊடகவியலாளர்கள் சர்ச்சைக்குரிய செய்திகளை தேடிக் கொள்வதற்காக அவ்வாறு செய்வதுண்டு.
ஆனால், உண்மையிலேயே கடற்படையினர், இந்திய மீனவர்களை சுடுவார்கள் என்று விக்கிரமசிங்க மிரட்டவில்லை. அவர் சட்ட நிலைமையையே கூறியிருக்கிறார். வேண்டுமென்றால் அதனை ஒரு மிரட்டலாகவும் எடுத்துக் கொள்ளலாம். இருந்த போதிலும் இந்தப் பிரச்சினையும் இரண்டு நாடுகளிடையே பதற்ற நிலையை ஏற்படுத்தவில்லை. எனவே, தமிழகத்தில் இருந்தும் இலங்கை விடயத்தில் மோடிக்கு இப்போது எவ்வித அழுத்தமும் இல்லை.
வட பகுதிக்கு விஜயம் செய்த முதலாவது இந்திய பிரதமர் மோடியே. இரு நாடுகளுக்கும் இடையே பதற்ற நிலை இருந்தால் அவரது யாழ்ப்பாண விஜயம் இலங்கையில் சர்ச்சையை கிளப்பியிருக்கும். தென் பகுதியில் வாழும் 'தேசபக்தர்கள்' கூச்சலிட்டு இருப்பார்கள். அவர்களது 'தேசபக்தியும்' இறந்து அல்லது உறக்கத்தில் உள்ளதால் அதுவும் இம் முறை காணப்படவில்லை. எனவே, மோடியின் இலங்கை விஜயம் ராஜீவ் காந்தியின் இலங்கை விஜயத்தைப் போல் எவ்வித தடயத்தையும் வைத்துவிடாமல் முடிவடைந்து விட்டது என்றே கூற முடியும்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
17 May 2025
17 May 2025