Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை
Thipaan / 2015 மார்ச் 18 , மு.ப. 08:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
பிரதமர் நரேந்திரமோடிக்கு அண்டை நாடுகளில் அன்பான வரவேற்பு கொடுக்கப்பட்டுவரும் நிலையில், உள்நாட்டில் உள்ள கட்சிகள் அவருக்கு எதிராக போர்க்கொடி தூக்கியிருக்கின்றன.
காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கிளப்பியிருக்கும் போர்க்குரல் நாடு முழுவதும் உள்ள எதிர்கட்சிகளின் போராட்டத்துக்கு வழி அமைத்துக் கொடுத்திருக்கிறது.
காரணமாக அமைந்திருப்பது டிசெம்பர் மாத இறுதி வாரத்தில் அவசரச்சட்டமாக வெளிவந்து. இந்த மாதம் (மார்ச்) 10ஆம் திகதி இந்திய நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டிருக்கும் நிலம் கையகப்படுத்துதல் திருத்த மசோதாவே! நிலம் கையகப்படுத்துதல் மசோதா புதிய திருத்தங்களுடன் சென்ற ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் கொண்டு வரப்பட்டது.
2013ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட இந்த சட்டத்துக்கு அப்போது பெரிய எதிர்ப்பு கிளம்பியிருந்தாலும், பின்னர் சமாதானம் செய்து அந்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டது.
அதில் முக்கியமான சில அம்சங்கள் இடம்பெற்று இருந்தது.
அதாவது அரசு நிலம் கையகப்படுத்தும் முயற்சியில் இறங்கும் போது, நிலம் உள்ள பகுதியில் இருக்கும் விவசாயிகளில் 80 சதவீத விவசாயிகளின் ஒப்புதலைப் பெற வேண்டும்.
இது விவசாயிகளின் விளை நிலங்கள் எடுத்து விடக்கூடாது என்பதற்காக போடப்பட்ட கடிவாளம்.
இது தவிர எந்த திட்டத்துக்காக நிலங்கள் எடுக்கப்படுகிறதோ அந்த நிலங்கள் ஐந்து வருடத்துக்குள் பயன்படுத்தப்படவில்லை என்றால், அவற்றை நில உரிமையாளர்களிடம் திரும்ப ஒப்படைத்து விட வேண்டும்.
அப்படி நிலம் எடுக்கும் போது 'சமூக மதிப்பீட்டு அறிக்கை' தயாரிக்க வேண்டும். இதன்படி பாதிக்கப்படுவோருக்கு நிவாரணம், மறுவாழ்வு போன்ற பணிகளை மேற்கொள்ள வசதியாக இருக்கும்.
இந்த விதிகள் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும் அரசின் முக்கிய திட்டங்களை நிறைவேற்றவும் தடையாக இருக்கிறது என்று பல மாநில முதல்வர்கள் பா.ஜ.க. தலைமையிலான மத்திய அரசு அமைந்தவுடன் கடிதம் எழுதினார்கள்.
அதன் விளைவாக வந்ததுதான் இப்போது நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள நில எடுப்பு மசோதா திருத்தம். ஏற்கெனவே 2013ஆம் வருட நில எடுப்புச் சட்டத்தில் உள்ள மேற்கண்ட நிபந்தனைகள் எல்லாம் பாதுகாப்புத்துறை, வீட்டு வசதி, கிராம உட்கட்டமைப்பு, சமூக அடித்தளத் திட்டங்கள், தொழில்துறை போன்றவற்றுக்காக எடுக்கப்படும் நிலங்களுக்கு பொருந்தாது என்பதுதான் புதிய திருத்தத்தில் மிக முக்கியமானது.
இதனால்தான் நாடு முழுவதும் விவசாயிகளும், எதிர்கட்சிகளும் எதிர்த்து குரல் கொடுத்து வருகின்றனர்.
குறிப்பாக இது 'கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு கதவை திறந்து விடும்' சட்டம் என்ற ரீதியில் குற்றச்சாட்டு கிளம்பியிருக்கிறது.
தமிழகத்தில் தி.மு.க. தலைவர் கருணாநிதி 'ஏதோ ஓர் உள்நோக்கத்தோடு இந்த நிலம் கையகப்படுத்தல் மசோதாவை ஜெயலலிதா தரப்பு எம்.பி.க்கள் நாடாளுமன்றத்தில் ஆதரித்துள்ளார்கள்' என்று கடிதம் எழுதி, தன் கட்சியின் சார்பில் இதை எதிர்த்து மார்ச் 20ஆம் திகதி தமிழகம் முழுவதும் கண்டன ஆர்பாட்டங்களை நடத்த உத்தரவிட்டிருக்கிறார் அவர்.
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், 'நாங்கள் தமிழக மக்கள் நலனுக்காகவே இந்த சட்டத்தை ஆதரித்து இருக்கிறோம்' என்று அறிவிக்கை விட்டு, 'கருணாநிதியின் கருத்துக்குள் அத்தனையும் பொய்' என்று கண்டித்துள்ளார் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா.
ஆகவே 'நிலம் எடுக்கும்' மசோதா தமிழகத்தில் மட்டுமல்ல, அகில இந்திய அளவில் பா.ஜ.க.வுக்கு ஒரு புதிய எதிர்ப்பை உருவாக்கி வைத்துள்ளது.
பிரதமரான நரேந்திரமோடி எடுக்கும் சில நல்ல முடிவுகளை 'அதிரடியாக' எடுப்பதால் இந்த சிக்கல் முளைத்துள்ளது.
மத்தியில் அமைந்த எந்த ஓர் அரசும் (காங்கிரஸோ அல்லது பா.ஜ.க அரசுகளோ) இதற்கு முன்பு இப்போது நரேந்திரமோடி அரசு சந்திப்பதைப் போன்ற நெருக்கடியை சந்திக்கவில்லை.
இவ்வளவு குறுகிய காலத்திலும் நாடு முழுமைக்குமான எதிர்கட்சிகள் ஒற்றுமையை உருவாக்கிக் கொடுத்ததில்லை. கூட இருந்த கூட்டணிக் கட்சிகள் இவ்வளவு குறுகிய காலத்தில் பா.ஜ.க.வுக்கு எதிராக கருத்தும் சொல்லும் சூழ்நிலை உருவாகியதில்லை.
நாடாளுமன்றத்தில் பா.ஜ.க.வுக்கு பெரும்பான்மை இருக்கிறது. ஆனால் ராஜ்ய சபையில் அந்த பெரும்பான்மை இல்லை.
அதனால்தான் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்தின் போது இறுதியில் 'கறுப்புப் பணம் மீட்பில் அரசின் நடவடிக்கை திருப்தியில்லை' என்ற திருத்தத்துடன் குடியரசு தலைவர் உரை ராஜ்ய சபையில் நிறைவேற்ற வேண்டிய சூழ்நிலை மட்டுமல்ல- மிகப்பெரிய தர்மசங்கடம் பிரதமர் நரேந்திர மோடி அரசுக்கு ஏற்பட்டது.
அதே நிலைதான் இப்போது நிலம் கையகப்படுத்துதல் சட்டத்திலும் ஏற்பட்டிருக்கிறது. நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட இந்த மசோதா இப்போது ராஜ்ய சபையில் நிறைவேற வேண்டும்.
எதிர்கட்சிகளின் ஒற்றுமையைப் பார்த்தால் அதற்கான வாய்ப்பு இல்லை. ஆகவே மீண்டும் 'இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தைக் கூட்டி இந்த மசோதாவை நிறைவேற்றுவதா' அல்லது இப்போதைக்கு மீண்டும் ஓர் அவசரச் சட்டம் கொண்டு வந்து 'நிலம் கையகப்படுத்தல்' திருத்த மசோதா 2015 நிறைவேற்றுவதா என்ற சிக்கலில் இருக்கிறது மத்திய அரசு.
அவசரம் சட்டம் கொண்டு வந்தால் மீண்டும் இரு அவைகளிலும் நிறைவேற்ற வேண்டிய கட்டாயம் வரும். அதனால் கூட்டுக் கூட்டம் மூலம் மசோதாவை நிறைவேற்றி விடலாமா என்பதுதான் மத்திய அரசின் எண்ணமாக இருக்கும் என்று தெரிகிறது.
மத்திய அரசு 'நிலம் கையகப்படுத்ததல்' சட்ட விவகாரத்தில் சமாதானமான கருத்துக்களைச் சொன்னாலும், 'அவசரச்சட்டம்' கொண்டு வந்தது எதிர்கட்சிகளை கோபமடைய வைத்துள்ளது.
இந்த மசோதாவுக்கு காங்கிரஸின் ஆதரவைக் கேட்டுக் கொண்டு இன்னொரு பக்கம் முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங்குக்கு நிலக்கரி முறைகேட்டுப் புகார் விவகாரத்தில் நீதிமன்ற சம்மன் வருமாறு மத்திய அரசு செயல்பட்டது என்ற குற்றச்சாட்டு கிளம்பியிருக்கிறது.
இதனால் காப்புறுதி மசோதாவுக்கு காங்கிரஸ் ஆதரவு கொடுத்தாலும், நிலம் கையகப்படுத்துதல் மசோதாவிற்கு ராஜ்ய சபையில் காங்கிரஸ் கை கொடுக்காது என்ற நிலையே இருக்கிறது.
ஏனென்றால் குடியரசுத் தலைவருக்கே இந்த மசோதா குறித்து அனைத்துக் கட்சிகளும் கோரிக்கை மனு கொடுக்கின்றன. அதில் காங்கிரஸ் கட்சியும் பங்கேற்கிறது.
இந்த சூழ்நிலையில் பா.ஜ.க. 'அதிரடி' அரசியலை ஒதுக்கி வைத்து விட்டு, 'அணுசரணையாக' எதிர்கட்சிகளின் கருத்திற்கும் முக்கிய விஷயங்களில் காது கொடுத்துக் கேட்டால் நாட்டின் வளர்ச்சிக்கான பல திட்டங்களை நிறைவேற்ற முடியும்.
காங்கிரஸ் போன்ற கட்சிகளின் ஆதரவினை ராஜ்ய சபையிலும் பெற முடியும் என்பதுதான் அரசியல் பார்வையாளர்களின் எண்ணமாக இருக்கிறது.
'மாநிலங்களுடன் கூட்டுறவு கூட்டாட்சிக்கு நான் தயார்' என்று கூறும் பிரதமர் மோடி இதே பாணியில் எதிர்கட்சிகளுடன் இணைந்து நாட்டின் வளர்ச்சித் திட்டங்களை நிறைவேற்றத் தயார் என்ற தன் நோக்கத்தை எதிர்கட்சி தலைவர்களுக்கு வெளிப்படுத்த வேண்டும் என்றும் எதிர்பார்க்கிறார்கள்.
மத்தியில் ஆட்சிக்கு வந்து ஒரு வருடத்தை இன்னும் இரு மாதங்களில் பிரதமர் எட்டி விடுவார். இந்த ஒரு வருடத்துக்குள் அவருக்கு முன்பு இருந்த செல்வாக்கை மேலும் அதிகப்படுத்தும் காரியங்களில் அவரது அரசு செயல்படவில்லை என்ற எண்ணம் வாக்களித்த மக்கள் மத்தியிலேயே தோன்றியிருக்கிறது.
'காங்கிரஸ்தான் அவசரச் சட்டங்களை அதிகமாக நிறைவேற்றியது' என்று நாடாளுமன்றத்தில் நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் வெங்கய்யா நாயுடு தனக்கே உரிய வாதத்திறமையுடன் புள்ளிவிவரங்களை அடுக்கினாலும், காங்கிரஸ் 50 வருடங்களுக்கு மேல் ஆட்சியில் இருந்த கட்சி என்பதையும், பிரதமர் நரேந்திரமோடி ஆட்சிக்கு வந்து ஒரு வருடம் கூட நிறைவடையவில்லை என்பதையும் உணர மறுக்கும் விதத்திலேயே அந்த வாதங்கள் இருக்கிறது.
ராஜ்ய சபையில் பி.ஜே.பி.க்கு தனியாக மெஜாரிட்டியோ அல்லது அவரது கூட்டணிக் கட்சிகளின் தயவுடன் மெஜாரிட்டியோ வரும் வரை பிரதமர் மோடி, 'எதிர்கட்சிகளுடன் கூட்டுறவு கூட்டாட்சி' நடத்துவதே சிறந்த வழி என்பதுதான் மக்களின் எண்ணம் மட்டுமல்ல, பொருளாதாரத் திட்டங்கள் 'உள்ளூர் அரசியலில்' சிக்கிவிடக்கூடாது என்ற எண்ணத்தில் உள்ளோர் மனதிலும் நிலவுகிறது.
அதே நேரத்தில் எதிர்கட்சிகளும் பிரதமர் மோடியின் முயற்சிக்கு கை கொடுத்தால் இந்தியப் பொருளாதாரத் திட்டங்கள், வளர்ச்சித் திட்டங்கள் புதிய உயரத்தை எட்டிப் பிடிக்கும்.
அதற்கு இப்போது 'ஸ்பீடு பிரேக்' போட்டு நிற்கும் நிலம் கையகப்படுத்துதல் மசோதாவை எதிர்கட்சிகளின் கோரிக்கையை மதித்து எப்படி திருத்தங்கள் கொண்டு வந்து பா.ஜ.க. அரசு நிறைவேற்றப் போகிறது என்பதை அனைவரும் ஆவலுடன் எதிர்பார்க்கிறார்கள்.
நாடாளுமன்றத்தில் எதிர்கட்சிகள் இந்த மசோதாவிற்கு எதிராக கொண்டு வந்த 52 திருத்தங்களை நிராகரித்தது போல் ராஜ்ய சபையில் செய்ய முடியாது.
அங்குதான் 'நிலம் கையகப்படுத்தல்' மசோதா அரசியலில் பா.ஜ.க. அரசு சிக்கிக் கொள்ளப் போகிறது. மற்ற கட்சிகளையும் கூட்டணிக் கட்சிகளையும் சமாதானப்படுத்தி காரியத்தை லாவகமாகச் சந்திக்க வாஜ்பாய் போன்றவர்கள் பிரதமர்களாக இல்லை.
அதே போல் முன்பு பிரதமர் மன்மோகன்சிங்கிற்கு எதிர்கட்சியினரை சமாதானம் செய்யும் சிறந்த 'தூதுவராக' இருந்த பிரணாப் முகர்ஜி போன்றவரும், வாஜ்பாய்க்கு துணையாக இருந்த அத்வானி போன்றவரும் இப்போது பிரதமர் நரேந்திரமோடிக்கு இல்லை என்பதே நிச்சயமான உண்மை!
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
17 May 2025
17 May 2025