Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை
Suganthini Ratnam / 2015 மார்ச் 20 , மு.ப. 05:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
-கே.சஞ்சயன்
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் வருகைக்கு பின்னர், திருகோணமலை மீதான முக்கியத்துவம் மீண்டும் உச்சத்துக்கு வந்துள்ளது. ஹம்பாந்தோட்டை, கொழும்பு துறைமுகங்கள் சீனாவின் செல்வாக்குக்குள் அகப்பட்டுக்கொள்வது தொடர்பில் பேசப்பட்டுக்கொண்டிருந்த சூழலில், திருகோணமலைத் துறைமுகம் தனது கையை விட்டுச் செல்லாதிருப்பதை இந்தியா மீண்டும் உறுதிப்படுத்தியிருக்கிறது.
திருகோணமலைத் துறைமுகத்திலுள்ள எண்ணெய்க் குதங்களை, இந்தியாவின் அரசுத்துறை நிறுவனமான இந்தியன் ஓயில் கோப்பரேசன் அபிவிருத்தி செய்ய முன்வந்துள்ளது. இதற்கான உடன்பாடு, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி கொழும்பு வந்திருந்தபோது, கடந்த 14ஆம் திகதி கைச்சாத்திடப்பட்டது. இந்த நிகழ்வில் உரையாற்றிய நரேந்திர மோடி, திருகோணமலையை இந்தப் பிராந்தியத்தின் எரிபொருள் வலயமாக அபிவிருத்தி செய்வதற்கு இந்தியா உதவத் தயாராக இருப்பதாக குறிப்பிட்டிருந்தார்.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அண்மையில் மொறிசியஸ், சீஷெல்ஸ், இலங்கை ஆகிய நாடுகளுக்கு மேற்கொண்ட பயணத்தின்போது, இந்தியாவின் பாதுகாப்பை முன்னுரிமைப்படுத்துவதற்கான உடன்பாடுகள், அல்லது கட்டமைப்புகளை ஏற்படுத்திக்கொள்வதிலேயே முக்கிய கவனம் செலுத்தியிருந்தார்.
மொறிசியஸுக்கு பரக்குடா என்ற இந்தியாவில் கட்டப்பட்ட ரோந்துக் கப்பலை கையளித்தார். சீஷெல்ஸுக்கு கண்காணிப்பு விமானத்தை வழங்கியதுடன், அங்கு அமைக்கப்பட்டிருந்த இந்திய கடற்படையின் கண்காணிப்பு ரேடரையும் திறந்துவைத்திருந்தார். மேலும், இந்த இரண்டு நாடுகளிலும் இரண்டு தீவுகளை இந்தியாவின் பொறுப்பில் எடுத்து அவற்றை அபிவிருத்தி செய்யவும் நரேந்திர மோடி உடன்பாடு செய்திருந்தார். ஆனால், இலங்கையில் அவர் செய்துகொண்ட உடன்பாடுகளில் முக்கியமானது திருகோணமலை எண்ணெய்க் குதங்களை அபிவிருத்தி செய்வதற்காக செய்துகொண்ட ஒப்பந்தம்.
திருகோணமலைத் துறைமுகம் எப்போதுமே வல்லரசு நாடுகளின் கவனத்துக்குரிய ஒரு இடமாகவே இருந்துவந்துள்ளது.
திருகோணமலைக்காக இராணுவ ரீதியான போரும் இராஜதந்திர ரீதியான போரும் வெளிப்படையாகவும் இரகசியமாகவும் கடந்த ஒரு நூற்றாண்டாகவே நடந்துவருகிறது.
இலங்கைத்தீவு, பிரித்தானிய ஆதிக்கத்திலிருந்தபோது, திருகோணமலைத் துறைமுகத்தையும் அதன் முக்கியத்துவத்தையும் புரிந்துகொண்டு, அங்கு பாரிய எண்ணெய்க் குதங்கள் அமைக்கப்பட்டன. பிரித்தானியர்களால், சீனன்குடாவில் அமைக்கப்பட்ட அந்த எண்ணெய்க் குதங்களுக்கான போர் இப்போதும் நடந்துகொண்டே இருக்கிறது.
சீனன்குடாவில் 1930ஆம் ஆண்டுகளில் அமைக்கப்பட்ட 101 எண்ணெய்க் குதங்களில் தற்போது 99 குதங்கள் நல்ல நிலையில் பயன்பாட்டுக்கு உகந்ததாக உள்ளன. சுமார் ஓர் அங்குலத் தடிப்புள்ள உருக்கினால் அந்த எண்ணெய்க் குதங்கள் அமைக்கப்பட்டு, வலுவான கொங்கிறீட் தளங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
மரங்கள் அடர்ந்து வளர்ந்த, காடுகள் சார்ந்த, சிறிய மலைகளால் மறைக்கப்பட்ட அந்தப் பகுதியிலேயே, தலா 12,100 மெட்ரிக்தொன் கொள்ளளவுடைய 99 எண்ணெய்த் தாங்கிகளும் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றை வானத்திலிருந்து பார்த்தாலும் தெரியாத வகையில், பிரித்தானியர்கள் அப்போது அமைத்திருந்தனர்.
கிழக்கு மேற்கு கடற்பாதையில் சுயஸ் கால்வாய்க்கும் மலாக்கா நீரிணைக்கும் இடையில் முக்கியமான கேந்திர மையத்தில், இயற்கையான துறைமுகத்தின் அருகேயே இந்த சீனன்குடா எண்ணெய்க் களஞ்சியங்கள் அமைந்துள்ளன. இந்த எண்ணெய்க் குதங்கள், இரண்டாம் உலகப் போரின்போது, பிரித்தானிய மற்றும் அதன் தோழமை நாடுகளின் கடற்படைகளுக்கான முக்கியமான எரிபொருள் கேந்திரமாக விளங்கியிருந்தது. இதனை மோப்பம் பிடித்த ஜப்பான், திருகோணமலைத் துறைமுகத்தின் மீது விமானத் தாக்குதலை நடத்தியது.
இரண்டாம் உலகப் போரின்போது, 1942ஆம் ஆண்டு ஏப்ரல் 9ஆம் திகதி அதிகாலையில் ஜப்பானியப் போர் விமானங்கள் திருகோணமலையின் மீது தாக்குதல் நடத்தியிருந்தன. கமிகாசி எனப்படும் தற்கொலைப் படையினரால் இயக்கப்பட்ட ஜப்பானிய போர் விமானம் ஒன்று, 91ஆவது இலக்க எரிபொருள் தாங்கி மீது மோதி வெடித்தது. அதை அடுத்து பற்றிய தீ, ஏழு நாட்களாக தொடர்ந்து எரிந்துகொண்டிருந்தாக பதிவுகள் உள்ளன. அதற்கு நான்கு நாட்கள் முன்னதாகவே, ஜப்பானிய விமானந்தாங்கியிலிருந்து புறப்பட்ட விமானங்கள் கொழும்பின் மீது தாக்குதல் நடத்தியிருந்தன.
திருகோணமலைத் துறைமுகம் மீது நடத்தப்பட்ட தாக்குதலின்போது, மட்டக்களப்பு கடலில் வைத்து பிரித்தானியக் கடற்படையால் வடிவமைக்கப்பட்ட முதலாவது விமானம் தாங்கி கப்பலான எச்.எம்.எஸ். ஹேமெஸ் மூழ்கடிக்கப்பட்டது. அதற்குத் துணையாக சென்ற அவுஸ்திரேலிய போர்க்கப்பலும் மூழ்கடிக்கப்பட்டது. எனினும், திருகோணமலைத் துறைமுகம் மற்றும் எண்ணெய்க் குதங்களை அழிக்கும் தாக்குதல் ஜப்பானுக்கு வெற்றியளிக்கவில்லை.
1960 களில் றோயல் சிலோன் விமானப்படை விமானம் ஒன்று, விபத்துக்குள்ளாகியதில் மற்றொரு எண்ணெய்க் குதம் அழிந்துபோனது. எஞ்சிய 99 எண்ணெய்க் குதங்களுக்கான போர், இலங்கை சுதந்திரம் பெற்ற பின்னரும் பல்வேறு காலகட்டங்களில் நடந்துவந்தது.
1962ஆம் ஆண்டு இந்திய - சீனப் போர் நடந்தபோது, அப்போது இலங்கையில் பிரதமராக இருந்த சிறிமாவோ அம்மையார் அந்தப் போரை நிறுத்தும் சமாதான முயற்சியில் ஈடுபட முயற்சித்தார். அவர் தன்னை நடுநிலையாளராக காட்டிக்கொண்டாலும், அவர் சீனாவையே சார்ந்து செயற்பட்டிருந்தார்.
இந்திய - சீனப் போரின்போது அவர் சீனன்குடா எரிபொருள் குதங்களை சீனாவுக்கு வழங்க முற்பட்டபோதும், எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்;சியின் எதிர்ப்பினால் அந்த முயற்சி கைவிடப்பட்டது. அதற்கு பின்னர், எப்போதுமே திருகோணமலை மீது இந்தியாவின் கவனம் குவிந்திருந்தது.
1980களின் தொடக்கத்தில் திருகோணமலை மீது அமெரிக்காவின் கவனம் திரும்பியது. அது தமிழ் போராளி அமைப்புகளுடனான போர் தீவிரமடையத் தொடங்கியிருந்த காலப்பகுதி. அந்தச் சந்தர்ப்பத்தில், தமிழ் அமைப்புகளுக்கு இந்தியாவின் பின்புல ஆதரவு இருந்தது. அதைப் பயன்படுத்தி, அமெரிக்காவின் இராணுவ உதவிகளை பெற்றது இலங்கை.
அது அமெரிக்காவுக்கும் ரஷ்யாவுக்கும் பனிப்போர் நடந்த காலம். ரஷ்யா அணியில் இந்தியா இருந்தது. அமெரிக்கா பக்கம் இலங்கை சார்ந்து நின்றது.
இந்த நிலையில், திருகோணமலைத் துறைமுகத்தில் அமெரிக்கா கால் வைத்துவிடுமோ என்ற அச்சத்தின் விளைவாக, 1987ஆம் ஆண்டு இந்தியப் படைகளை இலங்கைக்கு அனுப்பியது இந்தியா. இதன் மூலம் திருகோணமலைக்குள் யாரும் கால் வைக்கமுடியாமல் தனது கட்டுப்பாட்டை அங்கு விரிவாக்கிக்கொண்டது.
1990ஆம் ஆண்டு அங்கிருந்தது இந்தியப் படைகள் வெளியேறிய பின்னர், மீண்டும் இந்தியாவுக்கு திருகோணமலைத் துறைமுகம் தொடர்பான கவலை தோன்றியது.
விடுதலைப் புலிகளை தோற்கடிப்பதற்கு இந்தியா இறுதிக்கட்டப் போரில் உதவி செய்தமைக்கு ஒரு காரணம், திருகோணமலைத் துறைமுகம் ஆகும். ஏனென்றால், 2003ஆம் ஆண்டு ரணில் விக்கிரமசிங்கவின் அரசாங்கம் பதவியிலிருந்தபோது, சீனக்குடா எண்ணெய்க் குதங்களை இந்தியா 35 ஆண்டு குத்தகைக்கு எடுத்திருந்தது. ஆண்டுக்கு ஒரு இலட்சம் டொலர் கொடுப்பனவே அதற்காக வழங்க இணக்கம் காணப்பட்டது.
இதையடுத்து, 15 எண்ணெய்க் குதங்களை மட்டும் 15 மில்லியன் டொலர் செலவில் புனரமைத்துவிட்டு, இலங்கையில் இந்தியன் ஓயில் நிறுவனம் எரிபொருள் விநியோகத்தில் இறங்கியது.
ரணிலின் ஆட்சிக்காலத்தில், விடுதலைப் புலிகளுடன் செய்துகொள்ளப்பட்ட அமைதி உடன்பாடு பின்னர், சண்டையாக மாறத் தொடங்கியது. அப்போது விடுதலைப் புலிகள், கிழக்கில் குறிப்பாக சம்பூரை அண்டிய பகுதிகளில் ஆட்டிலறிகளை நிறுத்தி தம்மை பலப்படுத்தியிருந்தனர்.
அது தமது எண்ணெய்க் குதங்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலானதென இந்தியா கருதியமைக்கு முதல் காரணம்.
அடுத்து, திருகோணமலைத் துறைமுகம் மீது வான்புலிகள் நடத்திய தாக்குதலும் புலிகள் விடயத்தில் இந்தியா கடும்போக்கை கடைப்பிடித்தமைக்கு மற்றொரு காரணமாகியது. அதாவது, தமது பாதுகாப்பு நலனுக்கு குறுக்கே வரும் எவரையும், அவர்களை முற்றாகவே அழித்தொழிப்பதில் இந்தியா தீவிரம் காட்டியது.
விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் முடிவுக்கு வந்த பின்னர், இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் மீண்டும் முரண்பாடுகள் ஏற்பட்டன.
சீனாவுடன் நெருங்கிச் செயற்பட்ட மஹிந்;த ராஜபக்ஷ அரசாங்கம் மீது இந்தியாவுக்கு சந்தேகம் வலுக்கத் தொடங்கியது. அப்போது, 2013ஆம் ஆண்டு சீனன்குடா எண்ணெய்க் குதங்களை மேலும் 17 பில்லியன் செலவிட்டு புனரமைக்கும் திட்டத்தை இந்தியா முன்வைத்தது. ஆனால், அதற்கு மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கம் இணங்க மறுத்துவிட்டது.
முன்னைய ரணில் விக்கிரமசிங்க அரசாங்கத்தினால் முறைகேடான வகையில் இந்தியன் ஓயில் நிறுவனத்துக்கு சீனன்குடா எண்ணெய்க் குதங்களை கையளிக்கப்பட்டுள்ளதாகவும் முறையான நடைமுறைகள் பின்பற்றப்படவில்லை என்றும் கூறி, இந்தியாவிடமிருந்து எண்ணெய்க் குதங்களை மீளப் பறிக்கப்போவதாகவும் மிரட்டியது.
எண்ணெய்க் குதங்களை மீளப்பறிக்கும் திட்டத்தை அரசாங்கம் நிறைவேற்றவில்லை என்றாலும், கடைசி வரையில் அவற்றை புனரமைப்பதற்காக இந்தியாவுடன் உடன்பாட்டில் கையெழுத்திடவும் இல்லை. இது ராஜபக்ஷ அரசாங்கத்தின் மீதான இந்தியாவின் சந்தேகத்தை வலுப்படுத்தியது. இந்த நிலையில், கடந்த ஆண்டு மே மாதம், சீன வான் பொறியியல் நிறுவனத்துக்கு விமானப் பராமரிப்பு நிலையம் ஒன்றை அமைப்பதற்கு சீனன்குடாவில் இடமளிக்க இணங்கியது இலங்கை அரசாங்கம்.
இதற்கான அமைச்சரவை ஒப்புதல் பெறப்பட்ட நிலையில், அந்த விவகாரம் இந்தியாவின் காதுகளுக்குச் சென்றது. அதைக் கேட்ட இந்தியாவுக்கு கடும் அதிர்ச்சி. உடனடியாகவே, சீனன்குடாவில் சீன நிறுவனம், விமானப் பராமரிப்பு நிலையத்தை அமைக்கும் திட்டத்தை இடைநிறுத்தவைத்தது.
இது மஹிந்த ராஜபக்ஷ அரசுக்கு எதிராக இந்தியா நகர்வுகளை மேற்கொள்ள எடுத்த முடிவுக்கு மற்றொரு காரணம்.
தன்னை தோற்கடிப்பதற்காக எதிரணியை பலப்படுத்தியதில் இந்தியப் புலனாய்வு அமைப்பான றோ பணியாற்றியது என்பதை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவே ஒப்புக்கொண்டிருக்கிறார். அவரை எதற்காக றோ தோற்கடிக்க முயன்றது என்பதற்கு திருகோணமலையும் ஒரு காரணம்.
இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக திருகோணமலையில் யார் கைவைக்க முனைகிறார்களோ, அவர்கள் ஆபத்தில் சிக்கிக்கொள்வது வழக்கமாக உள்ளது. இந்தியா தனது மறைமுக கவனிப்புக்குரிய இடமாக அதனை வைத்துள்ளது,
இப்போது, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அதனை ஒரு வெளிப்படையான இந்திய பாதுகாப்பு வலயமாக மாற்றியிருக்கிறார்.
சீனன்குடா எண்ணெய்க் குதங்களை அபிவிருத்தி செய்து ஆசியாவின் முதன்மை பெற்றோலிய கேந்திரமாக மாற்றவுள்ளதாக அவர் கூறியிருக்கிறார். இதன் மூலம், அவர் சீனா கட்டிய ஹம்பாந்தோட்டைத் துறைமுகத்தை செயலிழக்கச் செய்ய முயற்சிப்பதாகத் தெரிகிறது.
அதேவேளை, எரிபொருள் விநியோகம் இந்தியாவின் கைகளுக்குச் செல்வது ஆபத்தானது என்றும் இதனால், நாடு பேரழிவை சந்திக்கும் என்றும் முன்னாள் அமைச்சர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண கூறியிருக்கிறார். ஆனால், இந்தியாவை பொறுத்தவரையில், திருகோணமலையில் தனது நலன்களை உறுதிப்படுத்துவதில் மீண்டும் வெற்றி கண்டிருக்கிறது.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கைப் பயணத்தில் திருகோணமலை முக்கியமானதொரு விவகாரமாக இருந்திருந்தாலும், அவர் அங்கு செல்லவில்லை. அவ்வாறு செல்வது, சிங்கள மக்களிடையே இந்தியாவுக்கு எதிரான நிலையை தீவிரப்படுத்திவிடும் என்ற அச்சமும் அதற்கான ஒரு காரணமாக இருக்கலாம்.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கைப் பயணத்தின் மூலம் திருகோணமலைக்கான இன்னொரு போர் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. இதில் இந்தியா தனது நலன்களை பாதுகாப்பதில் வெற்றியை பெற்றிருக்கிறது. என்றாலும், திருகோணமலைக்கான போர் இத்துடன் முடியப்போவதில்லை. இரகசியமாகவோ, வெளிப்படையாகவோ தொடரப்போகிறது. காலத்துக்குக் காலம் நடந்துவரும் இந்தப் போரில் எதிர்காலத்தில் மேலும் பல திருப்பங்கள் நேரலாம். அது இந்தியாவுக்கு சாதகமாக அமையுமா என்பதை அப்போதைய அரசியல், பாதுகாப்பு சூழல்களே தீர்மானிக்கும்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
17 May 2025
17 May 2025