2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

19ஆவது திருத்தமும் சிறுபான்மையினரும்

Thipaan   / 2015 மார்ச் 22 , பி.ப. 10:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

புதிய அரசாங்கம், வர்த்தமானி மூலம் அறிவித்துள்ள 19ஆவது அரசியலமைப்புத் திருத்த வரைவில் பல முக்கிய விடயங்களை ஏற்றுக் கொள்ளாவிட்டாலும் இந்நாட்டு தமிழ், முஸ்லிம் மக்கள் அதன் மூலம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இரண்டு கருத்துக்களை நிச்சயமாக ஏற்றுக் கொள்வார்கள். அவை நல்லிணக்கம் தொடர்பான கருத்துக்களாக இருப்பதே அதற்குக் காரணமாகும்.

அந்த அரசியலமைப்பு திருத்தத்தில், ஜனாதிபதியின் அதிகாரங்கள் மற்றும் கடமைகளை விவரிக்கும் பகுதியில் இந்த விடயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. அதன்படி, சமய மற்றும் இன ஐக்கியத்தை உறுதிப்படுத்துவதும் அவற்றை பாதுகாப்பதற்கான வசதிகளை வழங்குவதும் ஜனாதிபதியின் கடமைகளில் ஒன்றாகும்.

அதேபோல், ஜனாதிபதி, தேசிய நல்லிணக்கத்தையும் ஒருமைப்பாட்டையும் மேம்படுத்த வேண்டும் என அந்த நகல் திருத்தத்தின் மற்றொரு வாசகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இவை நல்ல விடயங்கள் தான். ஆனால், ஜனாதிபதி இதனை எவ்வாறு செய்ய வேண்டும் என்ற பொறிமுறை அதில் குறிப்பிடப்படாததால், இந்த திருத்தத்தின் மூலம் எதிர்காலத்தில், ஜனாதிபதி ஒருவர் நிச்சயமாக இன மற்றும் சமய நலலிணக்கத்துக்காக செயற்படுவார் என்பதற்கு எவ்வித உத்தரவாதமும் இல்லை.  

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் தற்போதைய அரசாங்கத்தின் ஏனைய தலைவர்களும் கடந்த ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் வாக்குறுதியளித்த பல முக்கிய விடயங்கள் புதிய திருத்த வரைவில் இல்லை. குறிப்பாக நிறைவேற்று ஜனாதிபதி முறையை இரத்துச் செய்வதற்கான ஏற்பாடுகள் இந்த வரைவில் இல்லை.

இந்த வரைவும் அரசாங்கத்தின் 100 நாட்கள் திட்டத்தின் பிரகாரம் குறித்த நாளில் சமர்ப்பிக்கப்படவும் இல்லை. அது இன்னமும் வர்த்தமானி என்ற நிலையிலேயே இருக்கிறது.

இந்த அரசியலமைப்பு திருத்தம் தமக்கு அவ்வளவு பொருத்தமான விடயம் அல்ல என்பதைப் போல், தமிழ் மற்றும் முஸ்லிம் அரசியல்வாதிகள் அக்கறையின்றி இருப்பதை இப்போது காணலாம். ஆனால், இந்த விடயம் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களுக்கு மிகவும் முக்கியமானதாகும்.

ஏனெனில், இந்த விடயத்தில் ஒரு தவறு நடந்தால் அதனைத் திருத்த மேலும் பல தசாப்தங்கள் காத்திருக்க வேண்டியிருக்கும். நிறைவேற்ற இருப்பது சாதாரண பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றக் கூடிய சாதாரண சட்டமல்ல. மூன்றில் இரண்டு பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றக் கூடிய அரசியலமைப்பு திருத்தமே.
எதிர்காலத்தில், இது பாதகமானது என்று உணர்ந்து அதனை மாற்ற முற்பட்டால் அதற்கும் மூன்றில் இரண்டு பெரும்பான்மை வாக்குப்பலம் தேவைப்படும்.

எதிர்காலத்தில் எந்தவொரு கட்சிக்கும் மூன்றில் இரண்டு வாக்குப்பலம் கிடைக்கும் என்று கூறுவது கடினமாக இருக்கிறது. எனவே, இது உதாசீனமாக இருக்க வேண்டிய விடயம் அல்ல.

உதாரணமாக, ஜனாதிபதியை நீதிமன்றத்துக்கு வகைசொல்லும் நிலைக்கு கொண்டு வருவோம் என தேர்தலுக்கு முன்னர் ஜனாதிபதியும் தற்போதைய அரசாங்கத்தின் தலைவர்களும் கூறினர். இது, தென் பகுதி அரசியல்வாதிகளுக்கு மட்டும் முக்கியமான விடயம் அல்ல. சிறுபான்மை மக்கள் தொடர்பாக ஜனாதிபதி எடுக்கும் ஒரு நடவடிக்கை, அம் மக்களுக்கு பாதகமானதாக இருந்து அம் மக்கள், ஜனாதிபதிக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கும் வாய்ப்பு இருந்தால் அது அம் மக்களை பாதுகாத்துக் கொள்ள உதவாதா?

ஆனால், வாக்குறுதியளித்த படி ஜனாதிபதி, நீதிமன்றத்துக்கு வகைசொல்லும் வகையிலான ஏற்பாடுகள் 19ஆவது அரசியலமைப்புத் திருத்த வரைவில் இல்லை. தற்போதைய அரசியலமைப்பில் உள்ள வாசகங்களே அதிலும் உள்ளன. தொழில் ரீதியாகவோ அல்லது தனிப்பட்ட முறையிலோ ஜனாதிபதி செய்த எந்தவொரு செயலுக்கு எதிராகவும் நீதிமன்றத்துக்குச் செல்ல முடியாது என்றே அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.  

எனினும் 19ஆவது அரசியலமைப்பு திருத்த வரைவின் மூலம், ஜனாதிபதித் தேர்தலின் போது மைத்திரிபால சிறிசேனவும் அவருக்கு உதவிய அப்போதைய எதிர்க்கட்சிகளும் வாக்குறுதியளித்த விடயங்களில் முக்கிய சில விடயங்கள் தொடர்பாக மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.

நிறைவேற்று ஜனாதிபதி முறை, 18ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தை இரத்துச் செய்தல், 17ஆவது அரசிலமைப்புத் திருத்தததின் மூலம் அறிமுகப்படுத்தப்பட்ட சுயாதீன ஆணைக்குழுக்களை மீண்டும் நடைமுறைப்படுத்தல் மற்றும் தகவல் அறியும் உரிமையை சட்டமாக்குதல் ஆகியவையே அவையாகும்.

ஆனால், அரசாங்கம் மிகவும் அழுத்தமாக வாக்குறுதியளித்த தேர்தல் முறை தொடர்பான மாற்றங்கள் இதில் குறிப்பிடப்படவிலலை. தற்போதைய விகிதாசார தேர்தல் முறையை இரத்துச் செய்வதை சிறு கட்சிகளும் வடக்கு, கிழக்கு பகுதிகளுக்கு வெளியே வாழும் சிறுபான்மை இனக்கட்சிகளும் விரும்புவதில்லை.

ஏனெனில், தொகுதிவாரி தேர்தல் முறை வந்தால் அம் மக்களின் பிரதிநிதிகள் நாடாளுமன்றத்துக்கோ அல்லது மாகாண சபைக்கோ அல்லது உள்ளூராட்சி மன்றங்களுக்கோ தெரிவு செய்யப்படும் வாய்ப்பு மிகவும் குறைந்து விடும்.

வடக்கு, கிழக்கு பகுதிகளில் வாழும் தமிழ் மற்றும் முஸ்லிம் கட்சிகளுக்கு விகிதாசார தேர்தல் முறையும் தொகுதிவாரி தேர்தல் முறையும் ஒன்று தான். எனவே, அவர்கள் தேர்தல் முறையை மாற்றுவது தொடர்பாக அவ்வளவு அக்கறை காட்டுவதில்லை.

சிறு கட்சிகளினதும் வடக்கு, கிழக்குக்கு வெளியே செயற்படும்  சிறுபான்மை இனக்கட்சிகளினதும் இந்த எதிர்ப்பின் காரணமாகவே விகிதாசார முறையினதும் தொகுதிவாரி முறையினதும் கலப்பு முறையொன்றை அறிமுகப்படுத்துவதாக அரசாங்கம் வாக்குறுதியளித்து இருந்தது.

ஏதோ ஒரு காரணத்தால் ஐக்கிய தேசியக் கட்சி அதற்கு இப்போது பின்வாங்குகிறது போலும். ஆனால், அதற்காகவும் அரசியலமைப்பை திருத்த வேண்டியிருக்கிறது. ஏனெனில், விகிதாசார தேர்தல் முறையானது சாதாரண சட்டமொன்றின் மூலமாகவன்றி அரசியலமைப்பின் மூலமாகவே அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இப்போது ஜனாதிபதி மைத்திரிபாலவுக்கு, ஐக்கிய தேசியக் கட்சியையும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியையும் கட்டுப்படுத்திக் கொள்ள முடிந்துள்ளது. எனவே, அரசியலமைப்பு மாற்றத்துக்கான மூன்றில் இரண்டு வாக்குகளைப் பெறுவதற்கு இதுவே சிறந்த சந்தர்ப்பமாகும்.

நிறைவேற்று ஜனாதிபதி முறை தொடர்பாகவும் அரசாங்கம் தாம் வாக்குறுதியளித்ததை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கவில்லை. நிறைவேற்று ஜனாதிபதியின் சில அதிகாரங்களை குறைக்கவே 19ஆவது அரசியலமைப்பு திருத்த வரைவு சிபாரிசு செய்கிறது. அதன் பிரகாரம், அமைச்சர்களை நியமிக்கவோ அல்லது அமைச்சர்களுக்குரிய விடயங்களை தீர்மானிக்கவோ ஜனாதிபதிக்கு அதிகாரம் இல்லை. இந்த வரைவின் மூலம் அந்த அதிகாரம் பிரதமருக்கு வழங்கப்பட்டுள்ளது.

அதவேளை, 17ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தின் மூலம் அறிமுகப்படுத்தப்பட்டு 18ஆவது திருத்தத்தின் மூலம் இல்லாதொழிக்கப்பட்ட சுயாதீன ஆணைக்குழுக்களும் அவற்றை நியமிக்கும் அரசியலமைப்புச் சபையும் 19ஆவது திருத்தத்தின் மூலம் மீண்டும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

அதன்படி, ஜனாதிபதி நினைத்தவாறு நாட்டின் பிரதான பதவிகளுக்கு ஆட்களை நியமிக்க முடியாது. அதற்காக அவர் அரசியலமைப்புச் சபையின் அங்கிகாரத்தை பெற வேண்டும். ஆனால், மாகாண ஆளுநர்களை நியமிப்பதில் ஜனாதிபதி சுயமாக இயங்க முடியும்.

மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சியை கவிழ்க்க முன்னணியில் நின்று செயற்பட்ட, மாதுளுவாவே சோபித தேரரின் நீதியான சமூகமொன்றுக்கான தேசிய இயக்கம், அத்துரலியே ரத்ன தேரரின் தலைமையிலான பிவிதுரு ஹெட்டக் தேசிய சபை, மக்கள் விடுதலை முன்னணி, ஜாதிக ஹெல உறுமய போன்ற அமைப்புக்களில் ஹெல உறுமய தவிர்ந்த ஏனைய சகல அமைப்புக்களும் நிறைவேற்று ஜனாதிபதி முறையை முற்றாகவே இரத்துச் செய்து நாடாளுமன்றத்துக்கு நிறைவேற்று  அதிகாரத்தை வழங்க வேண்டும் என்றே கூறி வந்தன. ஹெல உறுமய மட்டும் ஜனாதிபதியின் சில அதிகாரங்களை குறைத்தால் போதுமானது என்றது.

ஹெல உறுமயவின் பிரதான நபர், அமைச்சர் சம்பிக்க ரணவக்கவே. அவரது அழுத்தத்தினாலேயே அரசாங்கம், நிறைவேற்று ஜனாதிபதி முறையை இரத்துச் செய்யாது ஜனாதிபதியின் சில அதிகாரங்களை மட்டும் குறைக்கும் வகையில் 19ஆவது அரசியலமைப்புத் திருத்த வரைவை முன்வைத்துள்ளதாக சிலர் கூறுகின்றனர்.

சம்பிக்க ரணவக்க, எதிர்காலத்தில் ஜனாதிபதியாக வரும் நோக்கத்திலேயே நிறைவேற்று ஜனாதிபதி முறையை முற்றாக இரத்துச் செய்வதை விரும்பவில்லை என சோபித்த தேரர் தலைமை தாங்கும் நீதியான சமூகமொன்றுக்கான தேசிய அமைப்பின் முக்கியஸ்தர்களில் ஒருவரான கலாநிதி நிர்மால் ரஞ்சித் தேவசிறி கூறுகிறார். இது சிறுபான்மை மக்களுக்கு ஒரு திடுக்கிடும் தகவலாக அமையும் என்பதில் சந்தேகமே இல்லை.

நிறைவேற்று ஜனாதிபதி, சிறுபான்மை மக்களுக்கு மேன்முறையீட்டு நீதிமன்றமொன்றைப் போல் செயற்படுவார் என ஒரு காலத்தில் முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவர் காலஞ்சென்ற எம்.எச்.எம். அஷ்ரப் கூறி வந்தார். ஒருவர் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படுவதற்கு சிறுபான்மை மக்களின் வாக்குகள் நிச்சயமாக அவசியமாகும் என்பதால் அவர் கட்டாயம் அம் மக்களின் கோரிக்கைகளை கருத்திற் கொள்ள வேண்டியிருக்கும் என அஷ்ரப் அப்போது வாதாடினார்.

ஆனால், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, அஷ்ரபின் வாதத்தை பொய்யாக்கினார். ஒருவர் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படுவதற்கு சிறுபான்மை மக்களின் வாக்குகள் நிச்சயமாக அவசியமாகும் என்பது உண்மை தான். அது கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது தெட்டத் தெளிவாக இருந்தது.

உண்மையிலேயே கடந்த தேர்தலின் போது, மைத்திரிபாலவின் வெற்றியை நிர்ணயித்தவர்கள் சிறுபான்மை மக்களே. ஆனால், ஒரு கடும் இனவாதி ஜனாதிபதியானால் அவர் இந்த உண்மையை புறக்கணிக்கக் கூடும் என்பதை ராஜபக்ஷ புலப்படுத்திவிட்டுச் சென்றிருக்கிறார்.

அவர், அதன் விளைவுகளை இப்போது அனுபவிக்கிறார் என்பது வேறு விடயம். ஆனால், மற்றொரு கடும் இனவாதி ஜனாதிபதியானால் அவர் இந்த உண்மையை கருத்திற் கொண்டு செயற்படுவார் என்பதற்கும் உத்தரவாதம் இல்லை. எனவே நிறைவேற்று ஜனாதிபதி முறை தொடர்பாக தற்போது அரசியல் அரங்கில் காணப்படும் நகர்வுகள், சிறுபான்மை மக்கள் உதாசீனப்படுத்தக் கூடியவையல்ல.

ஜனாதிபதி, நாடாளுமன்றத்துக்கு வகைசொல்லும் வகையில் 19ஆவது அரசியலமைப்புத் திருத்தம் அமையும் என அரசாங்கத்தின் தலைவர்கள் கூறினார்கள். அத் திருத்தத்தில் அதைப் பற்றி ஒரு வாசகமும் இருக்கிறது.

ஆனால், அதன் மூலம் ஜனாதிபதி, நாடாளுமன்றத்துக்கு வகைசொல்லும் நிலை ஏற்படுமா என்பது சந்தேகமே. ஏனெனில், ஜனாதிபதி நாடாளுமன்றத்துக்கு வகை சொல்ல வேண்டும் என்று சம்பந்தப்பட்ட வாசகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதே தவிர அவர் எவ்வாறு வகை சொல்லப் போகிறார் என்பது பற்றி அதில் குறிப்பிடப்படவில்லை.

புதிய நகல் திருத்தத்தின் படி, முப்பது அமைச்சர்களே இருப்பர். பிரதி மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் மொத்தமாக 40 பேர் இருப்பர். ஆனால், தேசிய அரசாங்கம் ஒன்று உருவானால் 45 அமைச்சர்களும் 45 பிரதி அமைச்சர்களும் நியமிக்கப்படுவர். தேசிய அரசாங்கம் என்பது, உண்மையிலேயே தேசிய நெருக்கடி நிலையொன்றின் காரணமாகத் தான் உருவாக்கப்படுமாக இருந்தால், அதனை சமபந்தப்பட்ட கட்சிகள் உணர வேண்டும். அவ்வாறாயின் அவர்கள் மேலதிகமாக அமைச்சுப் பதவிகள் வேண்டும் என்று கேட்க மாட்டார்கள்.

அதேவேளை, தேசிய அரசாங்கம் என்று கூறிக் கொண்டு பிரதான கட்சிகள் ஒன்று சேரும் நிலை ஏற்பட்டால், சிறுபான்மை கட்சிகள் புறக்கணிக்கப்படும் நிலையும் ஏற்படலாம். எனவே தத்தமது நிலையை பலப்படுத்திக் கொள்வதற்காகத் தான் அரசாங்கத்தின் தலைவர்கள் அரசியலமைப்பை மாற்றப் போகிறார்களா என்ற சந்தேகமும் ஏற்படுகிறது.  
 
 
 
 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .