Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை
A.P.Mathan / 2015 மார்ச் 25 , மு.ப. 10:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் சோதனையான காலகட்டத்தில் இருக்கிறது. அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயலலிதா மீது கர்நாடக உயர்நீதிமன்றத்தில் உள்ள மேல்முறையீட்டு வழக்கு சட்டப்பிரச்சினை என்பது ஒரு புறமிருக்க, அரசியல் ரீதியான பிரச்சினைக்குள் மாட்டிக் கொண்டு தவிக்கும் சூழ்நிலை அ.தி.மு.க.விற்கு வந்திருக்கிறது. தி.மு.க. மத்திய அரசில் பத்தாண்டு காலம் சென்ற ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் இடம்பெற்றிருந்தது. அதனால் தமிழகத்தில் நடக்கும் அத்தனை விவகாரங்களுக்கும் இந்த கூட்டணியின் தோல்விதான் காரணம் என்பதை தெருவோரம் வரை கொண்டு சென்று தி.மு.க.விற்கு மிகப்பெரும் “இமேஜ் சரிவை” ஏற்படுத்தினார் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா.
காவேரி பிரச்சினை, முல்லைப் பெரியாறு பிரச்சினை, சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீட்டுப் பிரச்சினை, மீத்தேன் திட்டம், உணவுப் பாதுகாப்பு சட்டம், நெய்வேலி அனல் மின் நிலையப் பிரச்சினை- எல்லாவற்றிற்கும் மேலாக இலங்கை தமிழர் பிரச்சினை, தமிழக மீனவர்கள் பிரச்சினை என்று எல்லாவற்றிலும் தி.மு.க. தமிழகத்தை வஞ்சித்து விட்டது என்று போர்க்கொடி தூக்கினார். பெட்ரோல், டீஸல் விலை உயர்வு ஏற்பட்டு விட்டால் காரணம் தி.மு.க. அங்கம் வகிக்கும் மத்திய அரசு என்று மாபெரும் பிரசாரத்தையே நடத்தி முடித்து விட்டது அ.தி.மு.க. இதனால் சென்ற நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸுடன் கூட்டணியே வேண்டாம் என்று பயந்து ஓடும் சூழ்நிலைக்கு தி.மு.க. தள்ளப்பட்டது.
தி.மு.க.வின் இமேஜூக்கு பங்கம் விளைவிக்க “மத்திய அரசு தமிழகத்தை வஞ்சிக்கிறது” என்ற அந்த ஆயுதத்தை இப்போது அ.தி.மு.க. இழந்து விட்டுத் தவிக்கிறது. ஆரம்ப காலகட்டத்தில் மத்திய அரசுக்கு எதிரான நிலைப்பாட்டை மாநிலத்தை ஆளும் அ.தி.மு.க. எடுத்தாலும், இன்றைக்கு வேறு வழியின்றி மத்திய அரசுடன் இணங்கிப் போக வேண்டிய தர்மசங்கடத்தில் அந்தக் கட்சி இருக்கிறது. பா.ஜ.க.விற்கு அ.தி.மு.க. வசம் இருக்கும் 48 (லோக்சபா, ராஜ்ய சபா) எம்.பி.க்களின் தயவு தேவை. அதேபோல் அ.தி.மு.க.விற்கு மத்திய அரசின் கடைக் கண் பார்வை தேவை. இந்த விஷயங்களால் மத்திய அரசை முழுவதுமாக எதிர்க்க முடியாமல் திண்டாடும் நிலை ஏற்பட்டு விட்டது.
அதன் முதல் முகம் இப்போது நிலம் கையகப்படுத்தும் சட்டத்தில் வெளியே தெரிந்திருக்கிறது. “விவசாயிகளின் ஒப்புதல் பெற வேண்டும் என்ற பிரிவை ரத்து செய்து விட்டு கொண்டு வரப்பட்டுள்ள நிலம் கையகப்படுத்துதல் சட்டத்தை” அ.தி.மு.க. எம்.பி.க்கள் பா.ஜ.க.வுடன் துணை நின்று ஆதரித்துள்ளார்கள். அதை உடனடியாக கையிலெடுத்த தி.மு.க. மாநிலம் முழுவதும் மாபெரும் ஆர்பாட்டத்தை நடத்தி முடித்து விட்டது. அது மட்டுமின்றி நிலம் கையகப்படுத்தும் மசோதாவிற்கு எதிராக போராடிக் கொண்டிருக்கும் அன்னா ஹசாரேவுக்கு தி.மு.க. தலைவர் கருணாநிதி கடிதம் எழுதி, “உங்கள் போராட்டத்திற்கு தி.மு.க. கடைசி வரை ஆதரிக்கும்” என்று வேறு வாக்குறுதி கொடுத்து விட்டார். நிலம் கையகப்படுத்துதல் சட்டம் போலவே நிலக்கரி சுரங்கங்கள் ஒதுக்கீடு குறித்து வெளிவந்துள்ள “சுரங்கச் சட்ட திருத்த” மசோதாவிற்கும் அ.தி.மு.க. அரசு கை கொடுத்துள்ளது. இத்தனைக்கும் நெய்வேலி அனல் மின் நிலையத்தின் பங்குகளை தனியாருக்கு விற்பனை செய்ய வேண்டும் என்று முந்தைய மன்மோகன்சிங் தலைமையிலான அரசு முடிவு செய்த போது அதை கடுமையாக எதிர்த்தவர் அப்போது முதல்வராக இருந்த ஜெயலலிதா. அதை விட அந்த பங்குகளை தமிழக அரசே வாங்கிக் கொள்ளும் என்று அறிவித்து, அதை வாங்கியும் கொண்டவர். ஆனால் இப்போது நிலக்கரிச் சுரங்கங்களை தனியார் மயமாக்கும் மசோதாவிற்கு ஆதரவு அளித்துள்ளது. “நிலக்கரி சுரங்க மசோதா” “நிலம் கையகப்படுத்தும் மசோதா” எல்லாம் அ.தி.மு.க. அரசுக்கு உருவான அரசியல் சோதனைகள்.
இந்த சோதனையில் இருந்து மீண்டு வர முயற்சி செய்கிறது அ.தி.மு.க. “மக்கள் நலன் கருதி” “விவசாயிகள் நலன் கருதி” நிலம் கையகப்படுத்தும் மசோதாவை ஆதரித்தோம் என்று அ.தி.மு.க. சொன்னாலும், மக்கள் மத்தியில் பா.ஜ.க.வும், அ.தி.மு.க.வும் ஒன்றாக கை கோர்த்து விவசாயிகளுக்கு எதிரான மசோதாவை நிறைவேற்றி விட்டன என்றே பிரச்சாரம் நிலைத்து விட்டது. “ஜெயலலிதா தேசிய நலனில் அக்கறையுள்ளவர்” என்று மத்திய பாராளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் வெங்கைய்யா நாயுடு சென்னைக்கு வந்து பேட்டி அளித்ததும், “மக்களால் நிராகரிக்கப்பட்ட காங்கிரஸ், தி.மு.க., கம்யூனிஸ்டுகள் தவிர மற்றவர்கள் எங்கள் மசோதாவை ஆதரித்தார்கள்” என்று மத்திய மின் துறை அமைச்சர் பியூஸ் கோயல் அறிவித்ததும் இந்த கூட்டணியை உறுதி செய்திருக்கிறது என்றே மக்கள் கருதுகிறார்கள். சென்ற பத்து வருடங்களில் “என்னதான் நாட்டு நலன்” “தமிழக நலன்” என்று கூறி மத்தியில் இருந்த காங்கிரஸ் அரசுடன் தி.மு.க. கை கோர்த்து நின்று விளக்க அறிக்கைகள் கொடுத்தாலும், அது மக்கள் மத்தியில் எடுபடவில்லை. அதே நிலைதான் இப்போது அ.தி.மு.க.விற்கும் உருவாகியிருக்கிறது. தேர்தலை சந்திக்க இன்னும் ஒரு வருடமே இருக்கும் நிலையில் மத்திய அரசு கொண்டு வரும் திட்டங்களுக்கு எல்லாம் ஆதரவு என்ற அ.தி.மு.க.வின் போக்கு பாதகமான சூழ்நிலையை அக்கட்சிக்கு ஏற்படுத்தும் என்றே தெரிகிறது.
இதே நிலையில் பா.ஜ.க.வும் சிக்கிக் கொண்டிருக்கிறது. நிலம் கையகப்படுத்தும் மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேறி விட்டது. ராஜ்ய சபையில் நிறைவேற வில்லை. ஆனால் இந்த மசோதாவிற்கு வட மாநிலங்களில் உள்ள விவசாயிகள் மத்தியில் பெரும் எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது. அதை காங்கிரஸும் அங்குள்ள எதிர்கட்சிகளும் கொம்பு சீவி விட்டுள்ளன. மஹாராஷ்டிராவில் உள்ள அன்னா ஹசாரே இதை எதிர்த்தவுடன் அதே மாநிலத்தைச் சேர்ந்த மத்திய அமைச்சர் நிதின் கட்கரியை களம் இறக்கி நிலம் கையகப்படுத்தும் மசோதாவிற்கு ஆதரவு திரட்ட வைக்கிறது பா.ஜ.க. அதே போல் ரேடியோவில் பேசிய பிரதமர் நரேந்திரமோடி “நிலம் கையகப்படுத்தும் மசோதா பற்றி எதிர்கட்சிகள் பொய் சொல்லுகின்றன” என்று கூறிய அடுத்த சில மணி நேரங்களில், “நிலம் கையகப்படுத்தும் மசோதா குறித்து மோடிதான் பொய் சொல்லுகிறார்” என்று அன்னா ஹசாரே பதிலடி கொடுத்து விட்டார்.
இந்த எதிர்பிரசாரத்தில் பிரதமர் நரேந்திரமோடி முதல் முறையாக மிரண்டு போயிருக்கிறார். வட மாநிலங்களில் உள்ள ஜாட், மற்றும் ராஜ் புட் கம்யூனிட்டியைச் சேர்ந்தவர்கள் நில உடமையாளர்களாகவும், விவசாயிகளாகவும் இருக்கிறார்கள். அவர்கள் தங்களுக்கு எதிரானது இந்த நிலம் கையகப்படுத்துதல் சட்டம் என்ற மனநிலையில் இருக்கிறார்கள். ஏற்கனவே தங்களுக்கு காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு வழங்கிய பிற்படுத்தப்பட்டோர் சலுகை பறிபோய் விட்டது என்ற கோபத்தில் “ஜாட்” வகுப்பினர் இருக்கிறார்கள். அது மட்டுமின்றி அவர்கள் சமுதாயத்திலிருந்து பா.ஜ.க. ஆட்சியில் வட மாநில முதல்வர்கள் யாரும் இல்லை என்ற கோபமும் இருக்கிறது. இப்படி அனைத்து கோபங்களும் பிரதமர் நரேந்திரமோடிக்கு எதிராக திரண்டு விட்டது. அதனால்தான் பாராளுமன்றத்தின் கூட்டுக் கூட்டத்தை கூட்டி நிலம் கையகப்படுத்தும் மசோதாவை நிறைவேற்றுவோம் என்று வீராவேசம் பேசிய பா.ஜ.க. அமைச்சர்கள் இப்போது வாயடைத்துப் போய் நிற்கிறார்கள். கூட்டுக் கூட்டத்தில் மசோதாவை சட்டமாக்கி விடலாம். ஆனால் வட மாநிலங்களில் விவசாயிகள் வாக்கு வங்கி பா.ஜ.க.விடமிருந்து அறவே விலகிப் போய் விடும் என்ற அச்சம் பா.ஜ.க. தலைவர்களுக்கு மட்டுமின்றி, பிரதமர் நரேந்திரமோடிக்கே வந்து விட்டது. இது போன்ற சூழ்நிலையில் கூட விவசாயிகளின் பிரதிநிதியாக வடமாநிலங்களில் உள்ள அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ள உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை “நிலம் கையகப்படுத்துதல் மசோதா” விவகாரத்தில் பதில் கொடுக்கவோ, ஆதரவு திரட்டவோ பிரதமர் மோடி பயன்படுத்தவில்லை. இது பா.ஜ.க.விற்கு பெரிய இழப்பு என்பதே உண்மை. ஆனால் இவற்றை எல்லாம் சமாளிக்க தன் உரை மட்டும் போதும் என்று கருதி, “விவசாயிகளுக்கு எதிரானவன் அல்ல நான்” என்று “மான் கி பாட்” ரேடியோ உரை நிகழ்த்தியிருக்கிறா் பிரதமர் மோடி.
தமிழக அளவில் பா.ஜ.க.வுடன் அ.தி.மு.க. நெருங்கிப் போவதால் தி.மு.க.விற்கு பிரசார ஆயுதம் கிடைத்து விட்டது. மத்திய அளவில் “நிலம் கையகப்படுத்தும்” மசோதாவால் காங்கிரஸ் கட்சிக்கு சுவாசம் கிடைத்திருக்கிறது. மத்தியில் இருக்கின்ற பா.ஜ.க. அரசும் சரி ஒரு வருடத்திற்குள் இப்படியொரு சவாலை சந்திக்கும் என்று யாரும் எதிர்பார்த்து இருக்க மாட்டார்கள். அதே போல் அ.தி.மு.க. அரசு தேர்தலுக்கு ஒரு வருடமே இருக்கின்ற நிலையில் இப்படியொரு சிக்கலில் மாட்டிக் கொள்ளும் என்றும் யாரும் கனவில் கூட நினைத்திருக்க மாட்டார்கள். ஆக மொத்தம் அரசியல் பிரச்சினைகள் “பிரதமர் நரேந்திரமோடியையும்” “அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதாவையும்” ஆட்டிப் படைக்கிறது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
17 May 2025
17 May 2025