2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

திறக்கும் பொதுத் தேர்தல் களம்

Thipaan   / 2015 மார்ச் 25 , பி.ப. 10:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆட்சியதிகாரத்தை தீர்மானிக்கும் தேர்தல் சதுரங்கத்தின் மற்றொரு ஆட்டத்துக்கான களம் பொதுத் தேர்தல் எனும் வடிவில் மெல்லத் திறக்கின்றது. ஜனாதிபதித் தேர்தல் முடிவடைந்து சில மாதங்கள் மாத்திரமே கடந்துள்ள நிலையில், மற்றொரு பிரதான தேர்தலை மக்கள் எதிர்கொள்ள வேண்டியிருக்கின்றது.  

ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷவை தோற்கடித்து ஜனாதிபதியான மைத்திரிபால சிறிசேன தேசிய அரசாங்கமொன்றை அமைத்தார்.

ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றும் முகமாக தேசிய அரசாங்கம், 100 நாட்கள் கொண்ட செயற்றிட்டமொன்றையும் முன்மொழிந்தது. அந்த செயற்றிட்டம் நிறைவுற்றதும் நாடாளுமன்றத்தைக் கலைத்து பொதுத் தேர்தலுக்கு செல்வதற்கான அறிவித்தலையும் ஏற்கெனவே விடுத்திருந்தது.

ஆனால், தேசிய அரசாங்கம் முன்மொழிந்த 100 நாட்கள் செயற்றிட்டத்தை குறித்த நாட்களுக்குள் முடிப்பதற்கான சாத்தியப்பாடுகள் இப்போதைக்கு இல்லை. இந்த நிலையில், நாடாளுமன்றத்தை கலைப்பது தொடர்பில் தேசிய அரசாங்கத்தின் பங்காளிக் கட்சிகளுக்குள்ளேயே மாற்றுக் கருத்துக்கள் எழுந்துள்ளன.

ஆனாலும், தேசிய அரசாங்கத்தின் பிரதான கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி, நாடாளுமன்றம் வரும் ஏப்ரல் 24ஆம் திகதி கலைக்கப்பட வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கின்றது. அதனை நோக்கிய நகர்வுகளையும் கச்சிதமான முன்னெடுக்கின்றது.
 
தேசிய அரசாங்கம் நாடாளுமன்றத்தில் தன்னுடைய பெரும்பான்மையை நிரூபிப்பதற்கான அழுத்தங்களை ஆரம்பத்தில் எதிர்கொண்டாலும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரானதும் அதற்கான சிக்கல்கள் நீங்கின. ஆனால், நீங்கிய சிக்கல்கள் புதிய வடிவில் எழுந்தன.

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை ஒழிப்பது எனும் விடயத்தை தேர்தல் முறை மாற்றத்தோடு சம்பந்தப்படுத்தி ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி அழுத்தங்களை வழங்க ஆரம்பித்தது.  ஆனாலும், ஓரளவுக்கு அவற்றை தன் சார்பில் கையாண்டு (குறைபாடுள்ள) 19ஆவது திருத்த சட்டமூலத்தினை கடந்த செவ்வாய்க்கிழமை தேசிய அரசாங்கம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்தது.

100 நாட்கள் செயற்றிட்டத்தில் முக்கிய விடயமாக கொள்ளப்பட்ட 19ஆவது திருத்த சட்டத்தினை நிறைவேற்றியதும், நாடாளுமன்றத்தை கலைப்பதற்கான சாத்தியங்கள் காணப்படுகின்றன. ஆக, ஏப்ரல் 24ஆம் திகதி இல்லையென்றாலும், அடுத்து வரும் ஒன்றிரண்டு மாதங்களில் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு பொதுத் தேர்தலொன்று நடத்தப்படும்.  

ஜனாதிபதித் தேர்தலில் பல தரப்புக்களோடு இணைந்து அமைத்த வியூகத்தினூடாக வெற்றி பெற்ற ஐக்கிய தேசியக் கட்சி, பொதுத் தேர்தலை பெரும் ஆர்ப்பரிப்போடு எதிர்கொள்கின்றது. ஜனாதிபதித் தேர்தல் முடிந்த தருணத்திலிருந்தே அதற்கான ஆயத்தங்களில் அந்தக் கட்சி ஈடுபடுகின்றது.

கடந்த காலங்களில் அந்தக் கட்சிக்குள் காணப்பட்ட தலைமைத்துவத்துக்கான பிரச்சினைகள் இப்போது இல்லை.

ரணில் விக்கிரமசிங்கவும், சஜித் பிரேமதாஸவும் ஒரே அணியில் கட்சியின் வெற்றி தொடர்பில் சிந்தித்து ஒன்றிணைந்து விட்டார்கள். மஹிந்த ராஜபக்ஷவை வீழ்த்தியாகிவிட்டது, இனி மற்றவர்களை இலகுவாக கையாளலாம் என்கிற எண்ணம் அவர்களை இன்னமும் உற்சாகம் கொள்ள வைத்திருக்கின்றது.  

பொதுத் தேர்தலின் பின்னரும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் தேசிய அரசாங்கமொன்று இரண்டு வருடங்களுக்கு பதவியிலிருக்கும் என்று அறிவிக்கப்பட்டிருக்கின்றது.

ஆனால், அந்த தேசிய அரசாங்கத்துக்குள் ஐக்கிய தேசியக் கட்சி தனிப்பெரும்பான்மையுடன் இருப்பதையே விரும்புகின்றது. அதுதான். அடுத்து வரப்போகும் ஐந்து, ஆறு வருடங்களுக்கான ஆட்சியதிகாரத்தை தீர்மானிக்கும் வல்லமை கொண்டது.

ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் சிறுபான்மை மக்களின் வாக்குகளைப் பெறுவது தொடர்பில் அக்கறை கொண்டு செயற்பட்ட ரணில் விக்;கிரமசிங்க, பொதுத் தேர்தலில் சிங்கள மக்களிடம் அதிக வாக்குகளை பெற்றுக் கொள்வது தொடர்பில் அதிக கரிசனையோடு இருக்கின்றார்.

எந்தவொரு தருணத்திலும் சிங்கள பௌத்த தேசியவாதிகள் ஐக்கிய தேசியக் கட்சி மீது அதிருப்தி கொண்டுவிடக் கூடாது என்பதில் கவனமாக இருக்கின்றார். தமிழ் மக்களின் பிரச்சினை தொடர்பில் தேசிய அரசாங்கம் முன்னெடுக்கும் விடயங்களை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கரங்களை கொண்டே செய்விக்கின்றார்.

எந்தவொரு தருணத்திலும் தமிழ் மக்களின் சிறிய பிரச்சினைகளைத் தீர்க்கும் விடயமும், பௌத்த தேசியவாதிகளை கோபப்படுத்தி, தேர்தல் வெற்றிகளை கேள்விக்குள்ளாக்கிவிடக் கூடாது என்பதில் கவனமாக இருக்கின்றார்.  

வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கும், பிரதமர் ரணில் விக்;கிரமசிங்கவும் அண்மைக்காலங்களில் எழுந்துள்ள பிரச்சினையும் அதன்போக்கிலேயே கையாளப்படுகின்றது. ரணில் விக்கிரமசிங்க தன்மீது சேற்றை வாரியிறைத்தவர்களையே தன்னுடைய நலனுக்கான சேர்த்துக் கொள்பவர்.

அதிகாரத்தினை அடையும் வழிமுறைகள் மாத்திரமே அவரின் இலக்கு. ஆனால், தன்னை நோக்கி வடக்கு மாகாண முதலமைச்சர் முன்வைத்த குற்றச்சாட்டுக்களை சிங்கள பௌத்த தேசியவாதிகளின் மனங்களை வெல்லும் முகமான சதுரங்க ஆட்டத்துக்காக பயன்படுத்துகின்றார். சி.வி.விக்னேஸ்வரனை 'மகா பொய்யர்' என்று இந்தியத் தொலைக்காட்சியொன்றிலேயே பகிரங்கமாக குற்றஞ்சாட்டுகின்றார்.

யாழ்ப்பாணத்தில் அண்மையில் நடைபெற்ற பொதுமக்களின் காணி மீளக்கையளிப்பு நிகழ்விலும் சி.வி.விக்னேஸ்வரனை எதிர்கொள்ளவதை தவிர்த்துக் கொண்டு தன்னுடைய கோபம் உண்மையானது போன்ற தோற்றப்பாட்டை ரணில் விக்கிரமசிங்க வெளிப்படுத்தினார்.

அதை நிரூபிக்கும் வகையில் சி.வி.விக்னேஸ்வரனும் நடந்து கொண்டார். அவர்கள் இருவரும் முகத்தை திரும்பிக்கொண்ட விடயம் முள்பள்ளி மாணவர்களின் கோபம் போல இருந்தாலும், ரணில் விக்;கிரமசிங்கவின் அந்த நடத்தை என்பது மிகவும் கச்சிதமாக கட்டமைக்கப்பட்டிருக்கின்றதோ என்று நாம் நம்ம வேண்டியிருக்கின்றது. எதுவும் அறியாமல், சி.வி.விக்னேஸ்வரன் பலிகடாவாகியிருக்கின்றார்.  

ரணில் விக்கிரமசிங்க தன்னுடைய அடுத்த கட்ட நடவடிக்கைகள் தொடர்பில் பெரும் திட்டமிடல்களும் செயற்பட்டுக் கொண்டிருக்கின்ற நிலையில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தான் தலைமை வகிக்கும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை எப்படிக் கட்டுக்குள் கொண்டு வருவது என்பது தொடர்பில் யோசித்துக் கொண்டிருக்கின்றார்.

மஹிந்த ராஜபக்ஷவிடமிருந்து கட்சித் தலைமைப் பதவியைப் பெற்றுக் கொண்டதும் கட்சியின் முக்கியஸ்தர்களை இலகுவாக கையாளலாம் என்று எதிர்பார்த்த மைத்திரிபால சிறிசேனவுக்கு அது அவ்வளவு இலகுவாக சாத்தியமாகவில்லை. மாறாக, அவருக்கு அடங்கா குதிரைகளின் ஆட்டம் பெருவளவில் அதிகரித்திருக்கின்றது.

அத்தோடு, இன்னமும் மஹிந்த ராஜபக்ஷ அபிமானிகள் கட்சிக்குள் இருப்பது அவரை தன்னுடைய திட்டங்கள் நோக்கி நகர்த்துவதற்கு தடையாக இருக்கின்றது. அதனை, கட்சியின் முக்கியஸ்தர்களுக்கிடையிலான அண்மைய கூட்டமொன்றிலேயே அவர் வெளிப்படையாக அறிவித்திருக்கின்றார்.

'கட்சித் தலைமைப் பதவியை எனக்கு வழங்கியிருக்கிறீர்கள் என்றால், என்னை செயற்படுவதற்கு அனுமதியுங்கள்' என்பது மாதிரியான விரக்தி வெளிப்பாட்டுடான கோரிக்கை அது. அதனை, சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட தலைவர்களை நோக்கி விடுத்ததாகவே கொள்ள முடியும்.  

எனினும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட தலைவர்களை கையாள்வது தொடர்பில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் மேற்கொண்ட நடவடிக்கையானது ஓரளவுக்கு வெற்றி பெற்றிருக்கின்றது.

அதனை, தேசிய அரசாங்கத்துக்குள் சுதந்திரக் கட்சியையும் முழுமையாக(?) இணைத்துக் கொண்டதினூடு சாத்தியமாக்கியிருக்கின்றார். எனினும், எதிர்வரும் பொதுத் தேர்தலில் கட்சியை முழுமையாக தன்னுடைய தலைமையின் கீழ் ஒருங்கிணைப்பது தொடர்பில் அவர் இன்னமும் சிக்கல்களை எதிர்கொள்கின்றார். அதைனைவிட இன்னொரு பெரும் சிக்கல் அவரைப் பின்தொடர்கின்றது.

அது, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மீண்டும் தேர்தல் அரசியல் களத்துக்குள் பிரவேசிப்பது தொடர்பிலான விடயம். சுதந்திரக் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தியே தன்னுடைய தேர்தல் அரசியல் பிரவேசம் மீண்டும் அமையும் என்று வெளிப்படையாக மஹிந்த ராஜபக்ஷ அறிவித்திருக்கின்றார். இந்த நிலையில், மஹிந்த ராஜபக்ஷவையும், அவர் சார்பானவர்களையும் எப்படி கையாள்வது என்பது தொடர்பிலான சிக்கலும் நீள்கிறது.

மஹிந்த ராஜபக்ஷவின் திட்டங்களை முறியடிப்பது தொடர்பில் இன்னொரு முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்கவின் ஒத்துழைப்புடன் மைத்திரிபால சிறிசேன செயற்பட்டாலும், அவர், சந்திரிக்கா குமாரதுங்க தொடர்பிலும் அதிகளவான பயத்தினைக் கொண்டிருக்கின்றார்.

ஜனாதிபதித் தேர்தல் வெற்றியின் பின்னர் அதனை அவர் தனக்கு நெருக்கமானவர்களிடம் வெளிப்படையாகவே  வெளியிட்டிருக்கின்றார். 'சுதந்திரக் கட்சியை ராஜபக்ஷக்களிடமிருந்து மீட்டெடுத்து

பண்டாரநாயக்கக்களிடம் வழங்குதல்' என்ற கோசத்தை தேர்தல் காலத்தில் மைத்திரிபால சிறிசேன முன்வைத்தாலும், தேர்தலின் பின்னரான காலத்தில் 'சிறிசேன'க்களின் கைகளிலும் சுதந்திரக் கட்சி இருந்தது என்ற வரலாற்றை பதிவு செய்வது தொடர்பில் அவர் விட்டுக்கொடுப்பின்றி செயற்படுகின்றார்.  

இன்னொரு மகா சிக்கல் இருக்கின்றது. அது, மஹிந்த ராஜபக்ஷ ஆட்சிக்காலத்தில் ஊழல் பெருச்சாளிகளாக இருந்தவர்களை இன்னமும் கட்சிக்குள் வைத்துக் கொண்டு பொதுத் தேர்தலை எதிர்கொண்டால் பாரிய வீழ்ச்சியை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்கிற உண்மை.

அப்படியான நிலையில், இந்தப் பொதுத் தேர்தலை தன்னுடைய வெற்றிக்கான பிரதான இலக்காகக் கொள்ளாமல் ஊழல் பெருச்சாளிகள் மற்றும் தனக்கு அடங்காமல் இருக்கும் முக்கியஸ்தர்களை வெட்டி வீழ்த்தும் களமாக கையாள மைத்திரிபால சிறிசேன முயற்சிக்கின்றார். அதன்போக்கில் தான், அவரும் நாடாளுமன்றத்தை ஏப்ரல் மாதத்தில் கலைப்பது தொடர்பில் குறிப்பிட்டளவு ஆர்வத்தைக் காட்டுகின்றார்.  

பௌத்த சிங்களப் பெரும்பான்மை மக்களின் சிறு கட்சிகளான ஜாதிக ஹெல உறுமய மற்றும் மக்கள் விடுதலை முன்னணி என்பன எதிர்நோக்கும் சிக்கல்கள் என்பன வேறு மாதிரியானவை. பொதுத் தேர்தலொன்று நடத்தப்பட்டால் அது, ஐக்கிய தேசியக் கட்சியை பெரும்பான்மையாக கொண்ட (தேசிய) அரசாங்கமொன்றை அமைக்கும் சூழலினை உருவாக்கும்.

அது, மேற்குநாடுகள் சார்ப்புள்ளதாக இருக்கும் என்பது. இது, ஜாதிக ஹெல உறுமயவுக்கும், மக்கள் விடுதலை முன்னணிக்கும் எரிச்சலூட்டக் கூடியது. ஆனால், மக்கள் விடுதலை முன்னணி பொதுத் தேர்தலொன்றின் அவசரத்தை குறிப்பிட்டளவு வலியுறுத்துகின்றது.

 அது, நாடாளுமன்றத்துக்குள் தன்னுடைய பலத்தினை இன்னும் அதிகப்படுத்திக் கொள்ள உதவும் என்பதன் போக்கிலாகும்.  

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் உள்ளிட்ட சிறுபான்மைக் கட்சிகளும் பொதுத் தேர்தலினை எதிர்கொள்வதற்கு தயாராக இருக்கின்றன.

தேர்தல் முறை மாற்றம் தங்களுக்கு இழப்புக்களை வழங்கிவிடுமோ என்கிற அச்சம் மாத்திரமே சிறுபான்மைக் கட்சிகள் பலவற்றுக்கு இருந்தது. ஆனால், அதற்கான சூழல் இப்போது இல்லை என்கிற நிலையில், பொதுத் தேர்தலை எதிர்கொள்வதற்கு தயாராகவே இருக்கின்றன.

அதற்கான வேலைத்திட்டங்களையும் முன்னெடுக்க ஆரம்பித்துவிட்டன. மக்கள் சந்திப்புக்கள், தேர்தல் காரியாலயங்களின் திறப்பு என்று பரபரப்பான தேர்தல் நடவடிக்கைகளை நோக்கி சிறுபான்மைக் கட்சிகள் செயற்பட ஆரம்பித்துவிட்டன.  

 ஜனாதிபதித் தேர்தல் எனும் சதுரங்க ஆட்டம் வழங்கிய களைப்பே மக்களுக்கு இன்னும் நீக்கியிராத நிலையில் இன்னொரு தேர்தலா என்கிற சலிப்பு ஏற்பட்டிருக்கின்றது.

 ஆனால், மக்களின் சலிப்பை அதிகாரத்துக்காக போட்டியிடுபவர்கள் அவ்வளவுக்கு கருத்தில் கொள்வதில்லை. வாக்குகளை மாத்திரம் வழங்கிவிட்டு நீங்கள் உறக்க நிலைக்கு செல்லுங்கள் எனும் வகையிலான மறைமுக ஆணையை தேர்தல்களினூடு வழங்குகின்றனர்.

வரப்போகும் பொதுத் தேர்தலையும் அதிகாரத்துக்கான போட்டியாளர்கள் அப்படித்தான் கையாளப் போகின்றார்கள். ஆட்சி மாற்றங்கள் சில நல் மாற்றங்களை மாத்திரமே சாத்தியமாக்கியிருக்கின்றன.

அந்த நல்மாற்றங்கள் காலப்போக்கில் கரைந்து மீண்டும் சதிராட்டக்காரர்கள் அதிகாரங்களை கையிலெடுக்கும் சூழல் உருவாகாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டியது மக்களின் பெரும் பொறுப்பு. அதை, கவனத்தில் கொண்டு சலிப்பு மனநிலையைத் தாண்டி  மக்கள் தேர்தல்களை எதிர்கொள்ள வேண்டியது அவசியமாகின்றது!
 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .