Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை
Suganthini Ratnam / 2015 மார்ச் 27 , மு.ப. 04:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
-கே.சஞ்சயன்
தெளிவானதொரு இலக்குடன் பயணத்தை ஆரம்பித்திருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அரசாங்கம், இப்போது எந்த வழியில் செல்வது என்று தெரியாமல் தடுமாறி நிற்பதாக தோன்றுகிறது.
ஜனவரி 8ஆம் திகதி நடந்த ஜனாதிபதி தேர்தலில் மைத்திரிபால சிறிசேன வெற்றி பெற்ற பின்னர், இலங்கை அரசியலில் பல அற்புதங்கள் நிகழ்ந்தன. கீரியும் பாம்புமாக இருந்தவர்கள், ஒன்றிணைந்து புதிய அரசாங்கம் ஒன்றை அமைத்தனர்.
நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பலத்தை கொண்டிருந்தபோதிலும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி, வாலை சுருட்டிக்கொண்டு போய் எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்துகொண்டது. நாடாளுமன்றத்தின் மொத்த ஆசனங்களில், ஆறில் ஒரு பங்கு ஆசனங்களை மட்டுமே கொண்டிருந்த ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க பிரதமராக நியமிக்கப்பட்டார்.
இப்போது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 26 நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரசாங்கத்தில் இணைந்து அமைச்சர் பதவிகளை பெற்றிருக்கின்றனர். தேசிய ஒற்றுமை அரசாங்கம் என்று இதனை கூறுகின்றனர். ஆனாலும், அரசாங்கத்திலும் இருந்துகொண்டே எதிர்க்கட்சியாகவும் இருக்கப்போவதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி கூறுகிறது. இவை எல்லாவற்றையும் இலங்கை அரசியலில் இதுவரை நிகழ்ந்திராத அற்புதங்கள் என்றே குறிப்பிடவேண்டும்.
ஜனநாயக ஆட்சி முறை நிலவும் உலகின் ஏனைய நாடுகளில் கூட, இத்தகைய முரண்பாடான நடைமுறைகள் இருந்திருக்குமா என்பது சந்தேகமே.
இலங்கையில் இதற்கு முன்னரும் தேசிய அரசாங்கம் அமைக்கப்பட்டிருக்கிறது. 1960 இல் தேசிய அரசாங்கம் அமைக்கப்பட்டபோது, தமிழரசுக் கட்சியும் அதில் இடம்பெற்றிருந்தது. ஆனால், இப்போது அமைக்கப்பட்டிருப்பது தேசிய அரசாங்கம் அல்ல.
தேசிய அரசாங்கம் என்றால், நாடாளுமன்றத்தில் உள்ள கட்சிகள் அனைத்தும் இடம்பெறவேண்டும். இப்போதைய அரசாங்கத்தில் அத்தகைய நிலை இல்லை. எதிர்க்கட்சியும் ஆளும் கட்சியும் இணைந்து அமைத்த ஒரு விதமான கூட்டணி அரசாங்கமே இது.
இந்த தேசிய ஒற்றுமை அரசாங்கத்துக்கு வெளியே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.), தேசிய சுதந்திர முன்னணி, மக்கள் ஐக்கிய முன்னணி, மேலும் இடதுசாரிக் கட்சிகள் என்பன இன்னமும் இருக்கின்றன.
எனவே, அனைத்துக் கட்சிகளையும் உள்ளடக்கிய தேசிய அரசாங்கமாக இதனை எடுத்துக்கொள்ள முடியாது. என்றாலும், தேசிய ஒற்றுமை அரசாங்கம் ஒன்றை அமைக்கவேண்டிய நிலை ஏற்பட்டது, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் முக்கியமான சறுக்கலாகவே பார்க்கப்படுகிறது.
கடும் அரசியல் அழுத்தங்கள் காரணமாக அவரால், இலங்கையின் அரசியல் பாரம்பரியங்களை மீற முடியாத நிலை ஏற்பட்டது. தேசிய அரசாங்கம் ஒன்றை நிறுவுவது தேர்தல் வாக்குறுதியாக இருந்தாலும், இத்தகையதொரு அரசாங்கத்தை அமைக்கவேண்டிய நிலை அவருக்கு ஏற்பட்டது துரதிஷ்டமானது என்றே கூறவேண்டும்.
சுதந்திரக் கட்சியை சேர்ந்தவர்களையும் அரசாங்கத்தில் இணைத்துக்கொண்டதன் மூலம், அதுவும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் விசுவாசிகளான பலரையும் உள்வாங்கியதன் மூலம், சுத்தமான கைகள் என்ற அரசாங்கத்தின் இமேஜ் உடைந்துவிட்டது.
முன்னைய ஆட்சியில் ஊழல் மோசடி செய்தவர்கள் என்று குற்றஞ்சாட்டியவர்களையும் கூட, தனது அமைச்சரவையிலேயே சேர்த்துக்கொள்ள வேண்டிய நிலை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு ஏற்பட்டிருக்கிறது.
கடந்த ஆட்சியில் மோசமான அமைச்சர்கள் என்று பெயர் எடுத்தவர்களை கூட, இப்போது தன்னுடன் வைத்துக்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது.
நல்லாட்சியை அமைப்பதாக கொடுத்த வாக்குறுதி ஒரு புறம், அரசியலமைப்பில் - ஆட்சி முறையில் மாற்றங்களை கொண்டுவருவதாக அளித்த வாக்குறுதி மறுபுறம். இந்த இரண்டையும் ஒருசேர நிறைவேற்றுவது என்பது கடினமான காரியம். இதுவே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு வந்திருக்கின்ற சோதனை.
இந்த தேசிய ஒற்றுமை அரசாங்கத்தை அமைத்துக்கொள்ள வேண்டிய நிலை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு மட்டுமன்றி, ஐ.தே.க. வுக்கும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும் கூட ஒரு அவசியமான தேவையாகவே இருக்கிறது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முக்கியமான தனது தேர்தல் வாக்குறுதிகளை குறிப்பாக, 100 நாட்களுக்குள் நிறைவேற்றவேண்டும் என்று எதிர்பார்க்கிறார். ஏனென்றால், அந்த விடயத்தில் தாம் தோல்வியடைந்தால், மக்களின் எதிர்பார்ப்பு பொய்யாகிவிடும். எனவே, எப்படியாவது 100 நாட்களுக்குள் அரசியலமைப்பு மாற்றம் குறித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவேண்டிய நிலையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இருக்கிறார். ஆனால், ஜனாதிபதியின் நிறைவேற்று அதிகாரங்களை குறைத்தல் உள்ளிட்ட அரசியலமைப்புத் திருத்தங்களை நிறைவேற்றுவதற்கு, அவரே ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராகவே இருந்தாலும், சிக்கலாக உள்ளது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை பொறுத்தவரையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராகவே இருந்தாலும், அதன் பெரும்பான்மையான நாடாளுமன்ற உறுப்பினர்கள் முன்னைய ஆட்சிக்கு – இன்னமும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு விசுவாசமானவர்களாகவே இருக்கின்றனர்.
அவர்கள், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எடுக்கின்ற முடிவுகள் அனைத்தையும் ஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லை.
அவரது முடிவுகளை நிறைவேற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் தயாராக இருந்தால், அவர் இந்தளவுக்கு வளைந்து கொடுக்கவேண்டிய நிலை ஏற்பட்டிருக்காது. ஆனால், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்குள் இன்னமும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் நிழல் தான் ஆட்சி செய்கிறது என்பது அனைவருக்கும் தெரிந்த இரகசியம். மஹிந்த ராஜபக்ஷவின் நிழலிலிருந்து, சுதந்திரக் கட்சியை வெளியே கொண்டுவருவதற்காகவும் ஜனாதிபதி தேர்தலின்போது, தான் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுவதற்காகவுமே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பல விடயங்களில் சமரசம் செய்துகொள்ள வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார்.
அரசியலமைப்புத் திருத்தங்களை நாடாளுமன்றத்தில் சட்டமாக்குவதற்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலம் தேவை.
அதற்கு 128 உறுப்பினர்களை கொண்ட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஆதரவு முக்கியம். அதற்காகவே, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சுதந்திரக் கட்சியை தேசிய ஒற்றுமை அரசாங்கத்துக்குள் கொண்டுவரவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது. அமைச்சர் பதவிகளை கொடுத்து அரசியலமைப்புத் திருத்தங்களுக்கு அவர்களின் ஆதரவை பெற முற்பட்டுள்ளார்.
அதேவேளை, அரசியலமைப்புத் திருத்த வாக்குறுதியை நிறைவேற்றுவதற்காக அவர், நல்லாட்சி என்ற விடயத்தில் சமரசம் செய்துகொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. நல்லாட்சியும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் முக்கியமானதொரு வாக்குறுதி.
முன்னைய அரசாங்கத்தில் இருந்தவர்கள் எவ்வாறு ஆட்சி செய்தனர் என்பது அனைவருக்கும் தெரிந்த விடயம்.
அது நல்லாட்சியாக இல்லாததாலேயே, மோசமான ஆட்சியாக இருந்ததாலேயே, நல்லாட்சியை அமைப்போம் என்ற வாக்குறுதி அளிக்கவேண்டிய நிலை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு ஏற்பட்டது.
ஆரம்பத்தில் அவரது நல்லாட்சி குறித்த வாக்குறுதி மீதான நடவடிக்கைகள் திருப்திகரமான ஒன்றாக இருந்தாலும், தற்போது அந்த திருப்தி நிலை இல்லை என்றே கூறவேண்டும். இதுவா நல்லாட்சி என்று மைத்திரிபால சிறிசேனவை அதிகாரத்துக்கு கொண்டுவருவதில் முன்னின்று செயற்பட்ட ஜே.வி.பி. போன்ற கட்சிகளே இப்போது கேள்வி எழுப்புகின்ற நிலை ஏற்பட்டிருக்கிறது. அதிலும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 26 பேரை அமைச்சர்களாக நியமித்தமை நல்லாட்சி குறித்த வாக்குறுதிக்கு உச்சக்கட்ட சவாலாகவே அமைந்துள்ளது.
முன்னைய மோசமான ஆட்சியில் அமைச்சர்களாக இருந்தவர்களை கொண்டு நல்லாட்சியை எப்படி வழங்கப்போகிறார் என்ற கேள்வி துளிர்த்திருக்கிறது. இந்தச் சந்தேகம் எல்லா மட்டங்களிலுமே வியாபித்திருக்கிறது. அரசியலமைப்புத் திருத்தம் பற்றிய வாக்குறுதிக்காக அவர் நல்லாட்சி பற்றிய வாக்குறுதி விடயத்தில் சமரசம் செய்துகொள்ள வேண்டி ஏற்பட்டிருக்கிறது.
அதேவேளை, ஐ.தே.க. வுக்கும் எப்படியாவது அரசியலமைப்பை திருத்தியாக வேண்டும். இல்லாவிட்டால், மஹிந்த ராஜபக்ஷ மீண்டும் சுதந்திரக் கட்சிக்குள் நுழைந்து மேலாதிக்கம் பெற்று விடக்கூடிய ஆபத்து உள்ளது.
மஹிந்த ராஜபக்ஷ என்ற மிகப்பெரிய அச்சுறுத்தலை நிரந்தரமாகவே இல்லாமல் செய்யவேண்டுமானால், அரசியலமைப்புத் திருத்தம் உள்ளிட்ட பல விடயங்களை நிறைவேற்றவேண்டும். அதற்காகவே, அவசரப்பட்டு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினரையும் அமைச்சரவைக்குள் கொண்டுவர ஒப்புதல் கொடுக்கவேண்டிய நிலை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஏற்பட்டிருக்கிறது.
அதேவேளை, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை பொறுத்தவரையில் ஐ.தே.க. தேர்தல் வாக்குறுதியின் படி நாடாளுமன்றத்தை கலைத்துவிட்டால், தமக்கு ஆபத்தாகிவிடும் என்று பார்க்கிறது. இப்போது தேர்தலை எதிர்கொள்வதற்கு சுதந்திரக் கட்சி தயாராக இல்லை.
அதைவிட, நிறைவேற்று அதிகாரம் ஜனாதிபதியிடம் இருந்து பிரதமருக்கு செல்வதையும் சுதந்திரக் கட்சி விரும்பவில்லை.
எனவே, எப்படியாவது அரசாங்கத்துக்குள் நுழைந்து அதன் பிரதான நோக்கங்களை திசைதிருப்பி விட முனைந்திருக்கிறது சுதந்திரக் கட்சி.
இப்போது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் இணைந்து உருவாக்கப்பட்டுள்ள தேசிய ஒற்றுமை அரசாங்கமானது தற்போதைய ஆட்சியில் எல்லா செயற்பாடுகளுக்கும் பொறுப்புக்கூற வேண்டிய நிலையில் இருக்கிறது.
அதேவேளை, நல்லாட்சிக்கான நடவடிக்கைகளை எடுப்பதிலும், அரசாங்கம் இனிச் சிக்கலை எதிர்கொள்ளும்.இந்த நிலை, சுதந்திரக் கட்சியை பொறுத்தவரையில் குறிப்பாக, மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவான சுதந்திரக் கட்சியினருக்கு வாய்ப்பை ஏற்படுத்தும்.
தற்போதைய அரசாங்கம் செயற்றிறன் அற்றது என்பது எந்தளவுக்கு வெளிப்படுத்தப்படுகிறதோ, அந்தளவுக்கு சுதந்திரக் கட்சிக்கும் மஹிந்த ராஜபக்ஷவுக்கும் சாதகமான சூழல் ஏற்படும். இது பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க போன்றவர்களுக்கும் தெரியும். ஆனால், அவர்களால் இப்போதைய நிலையை தவிர்க்க முடியவில்லை.
தேசிய ஒற்றுமை அரசாங்கத்தை அமைப்பதன் ஊடாக மட்டுமே, தமது இலக்குகளை அடைய முடியும் என்று அவர்கள் நினைக்கின்றனர். இப்போதைய நாடாளுமன்றம், அரசியலமைப்பில் திருத்தங்களை மேற்கொள்ளத் தவறினால், நிறைவேற்று அதிகார ஆட்சி முறையை பலவீனப்படுத்தத் தவறினால், அடுத்த நாடாளுமன்றத்தில் அதற்கான வாய்ப்புக் கிடைப்பது அரிது. எனவே, இந்த விடயத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உள்ளிட்ட அனைவருமே மென்போக்கை கடைப்பிடிக்கத் தொடங்கியுள்ளனர். எதுவாயினும், இது புதிய அரசாங்கத்துக்கு சவாலானதும் சிக்கல் நிறைந்ததுமான காரியமாகும்.
அரசியல் அழுத்தங்களுக்காக விட்டுக்கொடுத்து செயற்படவேண்டிய நிலையிலேயே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் இருக்கிறார் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஆளுமையையும் அர்ப்பணிப்பையும் கூட கேள்விக்குள்ளாக்கியிருக்கிறது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அரசாங்கத்தின் 100 நாள் செயற்றிட்ட இலக்கு, முடிவுக் கட்டத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கின்றது. இந்த நிலையில், குறிப்பிட்ட காலப்பகுதிக்குள் அரசியலமைப்புத் திருத்தங்கள் உள்ளிட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றிவிட்டு அடுத்த தேர்தலுக்கு செல்வதே புத்திசாலித்தனமானது என்பது அரசாங்கத்துக்கு தெரியும். ஆனாலும், சூழ்நிலைக் கைதியாக மாறிவிட்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால், அவ்வாறு எதிர்வரும் ஏப்ரல் 23ஆம் திகதி நாடாளுமன்றத்தை கலைக்க முடியுமா என்ற சந்தேகம் இருக்கிறது. ஏனென்றால், இதுவரையில் வெளியிலிருந்து நாடாளுமன்றக் கலைப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்த சுதந்திரக் கட்சியினர், இப்போது அரசாங்கத்துக்குள்ளேயே வந்துவிட்டனர்.
முன்னைய அரசாங்கத்தில் என்றால், மஹிந்த ராஜபக்ஷவின் பேச்சுக்கு யாரும் மறு பேச்சுப் பேசுவதில்லை. அமைச்சரவை அந்தளவுக்கு அவரது சொல்லுக்கு கட்டுப்பட்டு செயற்படும். ஆனால், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் நிலை அவ்வாறானதல்ல.
அவர் அதிகாரங்களை பயன்படுத்தி அடக்கியாளும் போக்குடைய ஒருவரல்ல. அவரது இந்த இயல்பான குணாதிசயத்தை வைத்தே, சுதந்திரக் கட்சியில் உள்ள மஹிந்த தரப்பினர், இந்த அரசாங்கத்தை நெருக்கடிக்குள் தள்ள முயற்சிக்கின்றனர்.
அமைச்சர் பதவிகளை விட்டுக்கொடுப்பதன் மூலம் அவர்களின் ஆதரவை பெறமுடியும் என்பது தற்போதைய அரசாங்கத்தின் கணிப்பாக இருந்தாலும், அது எந்தளவுக்கு சரியானது என்பதை அரசியலமைப்புத் திருத்த யோசனைகள் நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்புக்கு வரும்போதே தெரிந்துகொள்ள முடியும்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
17 May 2025
17 May 2025