2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

எதிர்க்கட்சி தலைமை கூட்டமைப்புக்கே உரியது

Thipaan   / 2015 மார்ச் 29 , பி.ப. 10:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

தேசிய அரசாங்கம் என்ற பெயரில் கடந்த வாரம் மேலும் சில ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக் காரர்களுக்கு, அரசாங்கம் அமைச்சுப் பதவிகளை வழங்கியதை அடுத்து எதிர்க்கட்சித் தலைமையைப் பற்றி தற்போது சர்ச்சை ஒன்று கிளம்பியுள்ளது.

தற்போதைய நிலையில், எதிர்க்கட்சித் தலைமை தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கே வழங்கப்பட வேண்டும் என ஜாதிக ஹெல உறுமயவிலிருந்து விலகி பிவிதுரு ஹெல உறுமய என்ற அமைப்பை ஆரம்பித்துள்ள, அந்த உறுமயவின் பொதுச்செயலாளர் உதய கம்மன்பில கூறுகிறார். சில தமிழ் அரசியல்வாதிகளும் அக் கருத்தையே கூறி வருகின்றனர்.

எதிர்க்கட்சித் தலைமையை தமிழ்த்; தேசியக் கூட்டமைப்புக்கு வழங்க வேண்டிய 'அபாயம்' ஏற்பட்டு இருப்பதாக எடுத்துக் கூறுவதே கம்மன்பிலவின் நோக்கமாகும். சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதே மேற்கண்டவாறு கூறும் தமிழ் அரசியல் வாதிகளின் நோக்கமாகும்.

ஐக்கிய தேசியக் கட்சியும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியும் ஏனைய கட்சிகளும் ஒன்று சேர்ந்து சர்வ கட்சி அரசாங்கம் ஒன்றை உருவாக்குவது என்பது, ஜனாதிபதி மைத்திரிபாலவின் நூறு நாட்கள் வேலைத்திட்டத்தின் ஓர் அம்சமாகும்.

ஆனால், அது அடுத்த பொதுத் தேர்தலை அடுத்தே உருவாக்கப்படவிருந்தது. தற்போது உருவாக்கப்பட்டுள்ளது அவ்வாறானதோர் சர்வ கட்சி அரசாங்கம் அல்ல என்றும் வாதிடலாம். ஆனால், பிரதான இரு கட்சிகளும் ஒன்று சேர்ந்துள்ளதால் ஏறத்தாழ அது தான் நடந்துள்ளது.

அரசாங்கம், தமது 100 நாட்கள் திட்டத்தில் உள்ள நிறைவேற்று ஜனாதிபதி முறையை ஒழித்தல் போன்ற முக்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற இதுவரை தவறிவிட்டது.

அதற்காக 19ஆவது அரசியலமைப்புத் திருத்தம் முன்வைக்கப்பட்டாலும் அதில் நிறைவேற்று ஜனாதிபதி முறையை முற்றாக இரத்துச் செய்வதற்கான ஏற்பாடுகள் இல்லாததால் அதுவும் பெரும் சர்ச்சையை கிளப்பிக் கொண்டிருக்கிறது.

இதற்கிடையே தான் அரசாங்கம், ஏப்ரல் மாதத்தில் நாடாளுமன்றத்தை கலைத்து ஜூன் மாதமளவில் பொதுத் தேர்தலையும் நடத்திவிட்டு நிறைவேற்றவிருந்த சர்வக்கட்சி அரசாங்கம் தொடர்பான வாக்குறுதியை நிறைவேற்ற அவசரப்பட்டுள்ளது.

இதனால், இப்போது நாம் எங்கும் காணாத விதத்திலான கொள்கை ரீதியாகவோ, தர்க்க ரீதியாகவோ அமையாத ஒருவித நகைப்புக்குரிய உருவத்தைக் கொண்ட அரசாங்கத்தை காண்கிறோம்.

எங்கும் இல்லாதவாறு நாடாளுமன்றத்தில் மிகப் பெரும் கட்சியல்லாத கட்சியொன்றின் தலைவர் பிரதமராக இருக்கிறார். மிகப் பெரும் கட்சியான ஸ்ரீ.ல.சு.க அதற்கு எதிர்ப்பு தெரிவிப்பதும் இல்லை.

விந்தையான விடயம் என்னவென்றால், ஸ்ரீ.ல.சு.க.வின் உறுப்பினர்களில் சிலர் அரசாங்கத்தில் இணைந்து அமைச்சர்களாக இருக்கையில், எதிர்க்கட்சித் தலைமையும் அக் கட்சியிடமே இருக்கிறது என்பதே. ஸ்ரீ.ல.சு. கட்சிக் காரர்கள், எதிர்க் கட்சியிலுள்ள தமது கட்சியிலிருந்து பிரிந்து வந்து, ஐ.தே.க தலைவரான பிரதமரின் தலைமையிலான அமைச்சரவையில் சேரவில்லை.

அவர்கள் கட்சியின் அனுமதியுடனேயே அமைச்சரவையில் சேர்ந்துள்ளார்கள் என எதிர்க்கட்சித் தலைவர் நிமல் சிறிபால டி சில்வா கூறுகிறார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஸ்ரீ.ல.சு.க.வின் தலைவராவார். ஆனால், அவரை அப்பதவியில் அமர்த்த ஸ்ரீ.ல.சு.கட்சி காரர்கள் வாக்களிக்கவில்லை. ஐ.தே.கவைச் சேர்ந்த பெரும்பாலானோரே அவருக்கு வாக்களித்தனர்.

அவர், பெரும்பாலும் ஐ.தே.க தலைவரான பிரதமரின் கருத்துப் படியே செயற்படுகிறார். ஆனால், அவரது பேச்சைக் கேட்டு ஸ்ரீ.ல.சு.கட்சி காரர்கள், பிரதமரின் அமைச்சரவையில் இணைந்துள்ளனர்.

எனவே, இப்போது என்;ன நடந்துள்ளது என்றால், மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுர குமார திஸாநாயக்க கூறுவதைப் போல், சிறுவர்கள் விளையாடுவதைப் போல் அரசியல்வாதிகள் நடந்து கொள்வதே. சிறுவர்கள் தம்மில் ஒரு சிலரை பொலிஸ் என்றும் ஏனைய சிலரை திருடர்கள் என்றும் பிரித்துக் கொண்டு விளையாடுவார்கள்.

அதேபோல் ஸ்ரீ.ல.சு.க.வும் தம்மில் சிலரை எதிர்க்கட்சியென்றும் மற்றும் சிலரை அரசாங்கத்தில் அமைச்சர்கள் என்றும் பிரித்துக் கொண்டு அரசியலில் ஈடுபட்டுள்ளது என அநுரகுமார திஸாநாயக்க அண்மையில் கூறியிருந்தார்.

இந்த விடயத்தில் கொள்கைகளுக்கு இடமில்லை. கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது ஐ.தே.க.வினாலும் ஜனாதிபதி மைத்திரிபாலவினாலும் திருடர்கள், ஊழல் பேர்வழிகள் என்று அழைக்கப்பட்டவர்கள், தற்போது அதே ஜனாதிபதியின் கீழும் அதே ஐ.தே.க தலைமையின் கீழும் அமைச்சுப் பதவிகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.

அவர்களுள் இந்த அரசாங்கம் பதவியேற்றதன் பின் ஊழல் குற்றச்சாட்டுக்களின் பேரில் பொலிஸாரினால் விசாரிக்கப்பட்டவர்களும் உள்ளனர்.

அதேபோல் கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது, ஸ்ரீ.ல.சு.க. தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் தலைவர்கள் ஜனாதிபதியையும் ஐ.தே.க தலைவர்களையும் மேற்கத்தேய நாடுகளினதும் புலம் பெயர் தமிழர்களினதும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினதும் கையாட்கள் என்றனர். தமிழ் கூட்டமைப்பினருடன் சேர்ந்து நாட்டைப் பிரிக்க சதி செய்யும் சதிகாரர்கள் என்றனர்.
 
ஆனால், எவ்வித் வெட்கமோ தயக்கமோ இல்லாது அதே ஸ்ரீ.ல.சு.கட்சி காரர்கள் இப்போது அதே 'சதிகாரர்களின்' கீழ் அமைச்சுப் பதவிகளை பெற்றுக் கொண்டுள்ளனர்.

இந்த விடயத்தில் அரசாங்கத்தில் இணைந்து கொண்ட ஸ்ரீ.ல.சு.கட்சி காரர்களுக்கோ, அவர்களை அரசாங்கத்தில் இணைத்துக் கொண்ட அரசாங்கத்தின் தலைவர்களுக்கோ வெட்கம் என்பது எது என்று கூட தெரியாது என்றே கருத வேண்டியுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவை நிர்வாணமாக வீதியில் விரட்ட வேண்டும் என்று பகிரங்க மேடையில் கூறிய எஸ். பி. திஸாநாயக்கவும் இப்போது அரசாங்கத்தில் அமைச்சராக இருக்கிறார். குமாரதுங்கவும் அரசாங்கத்தை இயக்கும் பிரதான நபர்களில் ஒருவராக இருக்கிறார்.

மொத்தமாக எடுத்துக் கொண்டால் வெள்ளை உடுத்து பாரிய வாகனங்களில் பயணித்துக் கொண்டு கம்பீர தோற்றத்தை காட்ட முற்படும் இந் நாட்டு அரசியல்வாதிகளுக்குரிய முதன்மை தகைமை வெட்கமின்மையே என்று முடிவு செய்யலாம்.

தேர்தல்களின் போது பல இடங்களில் வன்முறைகள் வெடிப்பதுண்டு. ஆனால், சாதாரண மக்களே பெரும்பாலும் அவற்றில் நேரடியாக சம்பந்தப்படுவார்கள். அவர்கள் தான் தம்மிடையே பிரிந்து, ஒருவரை ஒருவர் கொலை செய்து கொள்கிறார்கள், உடைமைகளை அழித்துக் கொள்கிறார்கள்.

இப்போது அரசியல்வாதிகள் தாம் பறைசாற்றும் கொள்கைகளை உதறித் தள்ளிவிட்டு பட்டம் பதவிகளையும் அதிகாரத்தையும் நோக்கமாகக் கொண்டு செயற்படும் போது, அரசியல் என்ற பெயரில் தாம் என்ன செய்கிறோம் என்று சிந்தித்துப் பார்க்க சாதாரண மக்களுக்கு இது சிறந்த சந்தர்ப்பமாக இருக்கிறது.

அரசியல்வாதிகளுக்கு கொள்கைகளைப் பற்றிப் பேச தார்மிக உரிமை இல்லை என்பதையும் தற்போதைய அரசியல் நிலைமை சுட்டிக் காட்டுகிறது. பட்டம் பதவிகள் முன்னால் அரசியல் வாதிகள் இவ்வாறு செயற்பட முடியுமானால், அவர்கள் கொள்கை என்று எதனைக் குறிக்கிறார்கள் என்பதை சாதாரண மக்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

புதிய அரசியல் ஒழுங்கின் காரணமாக புதிய பல கேள்விகள் எழுகின்றன. நிமல் சிறிபால டி சில்வாவுக்கு எதிர்க்கட்சித் தலைமை பதவியில் இருக்க தார்மிக உரிமை இருக்கிறதா என்பது அவற்றில் முதன்மையான கேள்வியாகும்.

இப் பிரச்சினை கடந்த வாரம் நாடாளுமன்றத்திலும் எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த சபாநாயகர் சமல் ராஜபக்ஷ, தம்மாலும் அதற்கு பதிலளிக்க முடியாது என்று கூறியிருந்தார். இந்த நிலையில் தான், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பெயரும் அடிபடுகிறது.

உத்தேச அரசியலமைப்பு திருத்தங்களை நிறைவேற்றிக் கொள்வதற்காகவே பிரதான இரு கட்சிகளும் இவ்வாறு ஒன்று சேர்ந்து செயற்படுவதாக சிலர் வாதிடலாம். ஆனால், அதற்காக இரு சாராரிடையே இணக்கம் இருந்தால் அதற்காக அமைச்சுப் பதவிகளைப் பகிர்ந்து கொள்ளத் தேவையில்லை.

அவ்வாறு சேர்வதாக இருந்தாலும் ஸ்ரீ.ல.சு.க.வில் ஒரு பிரிவினர் மட்டும் அரசாங்கத்தில் சேர்வது எந்த அடிப்படையில் என்று கேள்வி எழுகிறது. இது ஸ்ரீ.ல.சு.க. அமைச்சுப் பதவிகளையும் வைத்துக் கொண்டு, எதிர்க்கட்சித் தலைமை பதவியையும் வைத்துக் கொள்ள வகுத்துக் கொண்டுள்ள திட்டம் என்பது தெளிவாகிறது.

ஸ்ரீ.ல.சு.க., இவ்வாறு மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் கூறுவதைப் போல், சிறு பிளிளைகள் விளையாடுவதைப் போல் செயற்படாது மொத்தமாக அரசாங்கத்துடன் இணைந்தால் நாடாளுமன்றத்தில் அடுத்த பெரிய கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடமே எதிர்க்கட்சித் தலைமை வழங்கப்பட வேண்டும்.

ஸ்ரீ.ல.சு.க.வின் நடவடிக்கைகளைப் பார்த்தால், தமிழ்த்; தேசியக் கூட்டமைப்பு, எதிர்க்கட்சித் தலைமை பதவியைப் பெறுவதை தடுப்பதற்காகவே ஆளும் கட்சியிலும் எதிர்க் கட்சியிலுமாக இரண்டாகப் பிரிந்து செயற்படுகிறது என்ற ஒரு கருத்து தமிழ் மக்கள் மத்தியிலும் தமிழ் அரசியல்வாதிகள் மத்தியிலும் உருவாகலாம்.

இது தமிழ் மக்களிடம் அனுப்பும் மிக மோசமான செய்தியாகும். எதிர்க்கட்சித் தலைமைப் பதவி தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு வழங்கப்படுவதனால் தமிழ் மக்கள் அடையப் போகும் நன்மை எதுவும் இல்லை. அது வெறும் அந்தஸ்த்து மட்டுமே.

ஆனால், அதனையும் தமிழ் கூட்டமைப்புக்கு வழங்காதிருக்க சிங்கள தலைவர்கள் கூட்டாகச் செயற்படுகிறார்கள் என்றதோர் அபிப்பிராயம் தமிழ் மக்களுக்கு வழங்குவது நல்லிணக்கத்தின் பார்வையில் மிக மோசமான நிலைமையாகும்.

எதிர்க்கட்சித் தலைவர் பதவி தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு வழங்கப்பட வேண்டும் என்பது தொடர்பாக, ஏற்கெனவே தமிழ் ஊடகங்களில் ஒரு கலந்துரையாடல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கதாகும். தற்போதைய நிலைமையினால், ஆறாவது அரசியலமைப்புத் திருத்தினால் தமிழ் அரசியல்வாதிகளை நாடாளுமன்றதத்திலிருந்து வெளியேற்றியதைப் போன்றதைப் போல் ஒரு நிலைமை உருவாகலாம்.

ஒரு காலத்தில் எதிர்க்கட்சித் தலைவர் பதவி தமிழர் விடுதலைக் கூட்டணியிடம் சென்றடைந்ததால் ஏற்பட்ட நிலைமையினால், சிங்கள தலைவர்கள் இப்போதும் அப் பதவி தமிழ் கட்சியொன்றுக்கு வழங்கப்படுவதை விரும்புகிறார்கள் இல்லை என்று சிலர் வாதிடலாம். அதுவும் சிந்திக்க வேண்டிய விடயம் தான்.

1977 ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில், ஐக்கிய தேசியக் கட்சி நாடாளுமன்றத்தில் உள்ள 168 ஆசனங்களில் 140 ஆசனங்களை வென்றது. தமிழர் விடுதலைக் கூட்டணி 18 ஆசனங்களை வென்றது. ஸ்ரீ.ல.சு.க 8 ஆசனங்களை மட்டுமே பெற்றுக் கொண்டது. எனவே, தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் அ. அமிர்த்தலிங்கம் எதிர்க்கட்சித் தலைவரானார்.

அப்போது தமிழ் குழுக்களின் ஆயுதப் போருக்கு அடித்தளம் இடப்பட்டு இருந்தது. தமிழர் விடுதலைக் கூட்டணியும் நாட்டுப் பிரிவினைக்கான வட்டுக்கோட்டை தீர்மானத்தை நிறைவேற்றி, அதற்கான ஆணையை தாருங்கள் என்றே 1977ஆம் ஆண்டு தேர்தலின் போது தமிழ் மக்களிடம் கேட்டிருந்தது.

இந்த நிலையில் பிரிவினைக்கான தமது போராட்டத்துக்கு உலக அரங்கில் ஆதரவு திரட்டுவதற்காக அமிர்த்தலிங்கம் தமது எதிர்க் கட்சித் தலைவர் பதவியை பாவித்தார்.

அதனால் தான், ஜனாதிபதி ஜே. ஆர். ஜயவர்தன,  தமிழர் விடுதலைக் கூட்டணியினரை கட்டுப்படுத்தும் நோக்கில் ஆறாவது அரசியலமைப்புத் திருத்தத்தை கொண்டுவந்தார்.

அதன் மூலம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மட்டுமன்றி அரச ஊழியர்களும் பிரிவினைக்கு எதிராக சத்திப் பிரமாணம் செய்ய நிர்ப்பந்திக்கப்பட்டனர். நாட்டுப் பிரிவினை கோரிக்கை என்பது  அப்போதும் சட்ட விரோதமானது. எனவே, ஆறாவது திருத்தம் அவசியமாக இருக்கவில்லை.

ஆனால், தமிழர் விடுதலைக் கூட்டணியினரை தமிழ் மக்கள் மத்தியில் அசௌகரியத்துக்கு உள்ளாக்கும் செயலாகவே அத் திருத்தம் அமைந்தது.

இதன் விளைவாக, 1983ஆம் ஆண்டு நடுப்பகுதி முதல் தமிழர் விடுதலைக் கூட்டணியினர் நாடாளுமன்றத்தை பகிஷ்கரித்தனர். 1989 ஆம் ஆண்டு வரை அவர்கள் நாடாளுமன்றத்துக்கு வரவில்லை. எனவே, எதிர்க்கட்சித் தலைமைப் பதவி ஸ்ரீ. ல.சு.க.வின் நாடாளுமன்றக் குழுத்தலைவராகவிருந்த அனுர பண்டாரநாயக்கவிடம் வழங்கப்பட்டது.

எனவே, ஆறாவது அரசியலமைப்புத் திருத்தம், தமிழர்களை அந்நியப்படுத்தியது எனலாம்.
அதேவேளை, அன்று தமிழர் விடுதலைக் கூட்டணி எதிர்க்கட்சித் தலைமைப் பதவியைப் பாவித்ததைப் போல் பாவிக்கலாம் என்ற  அச்சம் சிங்களத் தலைவர்களிடம் இருக்கலாம்.

ஆனால், தற்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு, எதிர்க்கட்சித் தலைவர் பதவியை வழங்காதிருக்க அது காரணமல்ல.

யதார்த்தத்தில் பிரதான இரு கட்சிகளும் ஒன்று சேர்ந்தால், எதிர்க்கட்சியில் பெரிய கட்சி கூட்டமைப்பே. எனவே எதிர்க்கட்சித் தலைமை கூட்டமைப்பிடமே வழங்கப்பட வேண்டும். அது தான் மரபு. அது ஏப்ரல் மாதம் நாடாளுமன்றம் கலைக்கப்படும் வரையிலாக இருந்தாலும் சரியே.

அடுத்ததாக, கூட்டமைப்பு இப்போது பிரிவினைக்காக போராடுவதில்லை. தாம் ஐக்கிய இலங்கைக்குள் இனப் பிரச்சினைக்கு தீர்வு தேடுவதாகவே அக் கட்சி கூறி வருகிறது.

ஆயினும், அக் கட்சியிடம் எதிர்க்கட்சித் தலைவர் பதவி வழங்கப்பட்டால், பிரிவினைக்காக இன்னமும் செயற்படும் சில தீவிரவாதிகள் அப் பதவியை தமக்கு சாதகமாக பாவிக்க வேண்டும் என்று நிச்சயமாக அழுத்தத்தை பிரயோகிப்பார்கள். அதுவும் கூட்டமைப்பிடம் அப்பதவியை வழங்காதிருக்க காரணமல்ல.

இதற்கிடையே, மக்கள் ஐக்கிய முன்னணியின் தலைவர் தினேஸ் குணவர்தனவுக்கு அப் பதவியை வழங்க வேண்டும் எனக் கூறி ஸ்ரீ.ல.சு.க.வில் சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்து வேட்டையில் ஈடுபட்டுள்ளார்கள். இதனையும் ஐ.தே.க. விரும்பலாம். ஏனெனில், இந்த முயற்சியின் காரணமாகவும் சுதந்திரக் கட்சி பிளவு படலாம்.

இந்த விடயத்தில் ஐ.தே.க நான்கு நன்மைகளை எதிர்பார்க்கிறது போலும். முதலாவதாக இந்த புதிய ஒழுங்கின் மூலம் 19 ஆவது அரசியலமைப்புத் திருத்தம் உட்பட தாம் எதிர்;பார்க்கும் அரசியலமைப்புத் திருத்தங்களுக்கு ஸ்ரீ.ல.சு.க.வின் ஆதரவை பெருவது ஒரு நோக்கமாகும்.

இரண்டாவதாக இந்தக் குழப்ப நிலை காரணமாக ஸ்ரீ.ல.சு.க பிளவு படக் கூடும். அது எதிர்வரும் பொதுத் தேர்தலின் போது ஐ.தே.க.வுக்கே சாதகமாக அமையும். மூன்றாவதாக எதிர்வரும் தேர்தலின் போது தமக்கு எதிராக பாவிக்க ஸ்ரீ.ல.சு.க.விடம் எந்த ஆயுதமும் இருக்காது.

நான்காவதாக மீண்டும் அரசியலில் குதிக்க முயற்சிக்கும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஸ்ரீ.ல.சு.க.விலிருந்து கிடைக்கக் கூடிய ஆதரவை குறைக்கவும் இந்த 'தேசிய அரசாங்கத் திட்டம்' உதவும்.

தேசிய அரசாங்கம் ஒன்று இப்போது தேவையா என்பதும் இப்போது அரசியல் அரங்கில் அலசப்படும் ஒரு தலைப்பாகும். போர், சுனாமி  போன்ற தேசிய அனர்த்தங்களின் போதே தேசிய அரசாங்கம் தேவையென்றும் இப்போது அவ்வாறான அனர்த்தம் எதுவும் இல்லாததால், அது தேலையில்லை என்றும் சில அரசியல் விமர்சகர்கள்; வாதிடுகிறார்கள்.

அதேவேளை, தற்போதைய நிறைவேற்று ஜனாதிபதி முறையோடுடனான அரசியலமைப்பே ஓர் அனர்த்தம் தான் என்றும் அதனால் தேசிய அரசாங்கம் அவசியம் என்றும் மற்றும் சிலர் கூறுகிறார்கள்.

அவ்வாறாயின் இந்த தேசிய அரசாங்கத்தின் மூலம் நிறைவேற்று ஜனாதிபதி முறை ஒழிக்கப்பட வேண்டும். ஆனால், தேசிய அரசாங்கம் அமைக்க முற்பட்டு இருக்கும் அரசாங்கம் முன்வைத்துள்ள 19 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தின் மூலம் நிறைவேற்று ஜனாதிபதி முறையை இரத்துச் செய்ய நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே கிடைத்தால் மஹிந்த ராஜபக்ஷவின் மீள் வருகையை தடுக்கும் பயன் மட்டுமே இந்த தேசிய அரசாங்கத்தால் கிடைக்கும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .