2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

கருத்து சுதந்திரத்துக்கு போடப்பட்ட கைவிலங்கு

Thipaan   / 2015 மார்ச் 31 , மு.ப. 07:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

கருத்து சுதந்திரத்தை காப்பாற்றும் குரல் இந்த முறை இந்தியாவில் மீண்டும் ஒரு முறை உச்சநீதிமன்றத்திடமிருந்து வந்திருக்கிறது.

இந்திய தொழில் நுட்ப சட்ட பிரிவு 66-A சமூக வலைத்தளங்களில் கருத்துத் தெரிவிப்போருக்கு கடிவாளம் போடுவது மட்டுமின்றி கைவிலங்கு போடுவதாகவும் இருந்தது.

சாதாரண மக்கள் இதனால் பாதிக்கப்பட்டால் அவர்களுக்காக இந்தச் சட்டம் பாயாது. அதிகாரம் இல்லாத அரசியல்வாதிகள் பாதிக்கப்பட்டால், இந்த சட்டம் பாயாது. ஆனால், ஆளுங்கட்சியாக இருப்பவர்கள், அதிகாரத்தில் இருக்கும் அரசியல் பிரமுகர்கள் பற்றி ஏதாவது சமூக வலைதளங்களில் வந்து விட்டால் இந்த பிரிவைப் பயன்படுத்தி கைது செய்யப்படுவார்கள்.
 
மேற்குவங்கத்தில் முதலமைச்சர் மம்தா பானர்ஜி ஒரு பேராசிரியரையே கைது செய்தார். பால் தாக்ரே மறைந்தவுடன் சமூக வலைதளத்தில் விவகாரமான கருத்துக்கு 'லைக்' போட்டார்கள் என்பதற்காக இரு இளம்பெண்கள் கைது செய்யப்பட்டார்கள்.

உத்திரபிரதேச மாநிலத்தில் ஆளும் சமாஜ்வாதிக் கட்சி பிரமுகர் தொடர்பில் கருத்து தெரிவித்தான் என்பதற்காக மாணவ பருவத்தில் உள்ளவர் கைது செய்யப்பட்டார்.

ப.சிதம்பரம் நிதியமைச்சராக இருந்த போது அவரது மகன் கார்த்திக் சிதம்பரம் பற்றி சமூக வலைதளத்தில் கருத்துத் தெரிவித்தவர் கைது செய்யப்பட்டார்.

இப்படி ஆளும் வர்க்கததுக்கு எதிராக சமூக வலைத்தளங்களில் கருத்து தெரிவிப்போருக்கு கைவிலங்கு போடும் பிரிவாக 66யு அமைந்தது.

அதனால் இந்தப் பிரிவை எதிர்த்து இளம்பெண் ஸ்ரேயா சிங்கால், உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.

அந்த வழக்கில்தான் மார்ச் 24ஆம் திகதி உச்சநீதிமன்ற நீதிபதிகள் செல்லமேஸ்வர், ரோகிண்டன் நரிமன் (இவர் பிரபல வழக்கறிஞர் பாலி நரிமனின் மகன்) ஆகியோர் அடங்கிய அமர்வு 'இந்த 66யு என்ற பிரிவு செல்லாது' என்று அதிரடித் தீர்ப்பை வழங்கியது.

மத்தியில் இருக்கும் பிரதமர் மோடி தலைமையிலான அரசைத் தவிர, இந்த தீர்ப்பை அனைவரும் ஏகமனதாக வரவேற்று இருக்கிறார்கள்.

கருத்து சுதந்திரம் என்பது இந்திய அரசியல் சட்டம் 19ல் வழங்கப்பட்டுள்ளது. இந்த பிரிவின் கீழ் முக்கியமாக ஆறு சுதந்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன. பேச்சுரிமை மற்றும் கருத்துச் சுதந்திரம் முதல் உரிமை.

ஆயுதமின்றி எந்த இடத்திலும் கூடி நிற்கலாம் என்ற சுதந்திரம் இரண்டாவது உரிமை. சங்கங்கள் மற்றும் அசோஷியசேன்கள் ஆரம்பிக்கலாம் என்ற சுதந்திரம் மூன்றாவது உரிமை.

இந்திய எல்லைக்குள் எங்கு வேண்டுமானாலும் சுதந்திரமாக நடமாடும் சுதந்திரம் நான்காவது உரிமை. இந்தியாவின் எந்தப் பகுதியிலும் வாழ அங்கு குடியமரும் சுதந்திரம் ஐந்தாவது உரிமை.
எந்த வேலையும் வியாபாரமும் தொழிலும் செய்யும் சுதந்திரம் ஆறாவது உரிமை. இந்த ஆறு உரிமைகளும் முக்கியமாக ஒவ்வொரு இந்தியக் குடிமகனுக்கும் உண்டு.

ஆனால், இதற்கு சில நிபந்தனைகளும் உண்டு. அது அரசியல் சட்டப் பிரிவு 19(2)ல் இருக்கிறது. அதன்படி நாட்டின் பாதுகாப்பு சம்பந்தப்பட்ட எட்டு விஷயங்களுக்கு இந்த சுதந்திரம் கிடையாது.

அதில் முக்கியமானது நாட்டின் பாதுகாப்புக்கு குந்தகம் விளைவிக்கும் செயலில் ஈடுபடுவோர், வெளிநாடுகளுடன் உள்ள நட்புறவுக்கு பங்கம் ஏற்படுத்தும் வகையில் செயற்படுவோர், பொது அமைதி, நாகரிகம் மற்றும் தார்மீக ஒழுக்கமுறை களுக்கு எதிராக செயற்படுவோர், நீதிமன்றத்தை அவமதித்தல், அவதூறு செய்தல், குற்றம் செய்ய தூண்டுதல் போன்ற விஷயங்களில் ஈடுபடுவோர் தங்களுக்கு சுதந்திரம் இருக்கிறது என்று கூறமுடியாது. இது இந்திய அரசியல் சட்டம் வகுத்துள்ள விஷயங்கள்.

இந்த அடிப்படையில்தான் சமூகவலைத்தளங்களில் அவதூறு பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்க 66A பிரிவு கொண்டு வரப்பட்டது.

இதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் மத்திய அரசு சார்பில் 'இந்தப் பிரிவு செல்லும்' என்று முதலில் வாதிட்டது.

ஒரு கட்டத்தில் இந்தப் பிரிவை உச்சநீதிமன்றம் இரத்து செய்யப் போகிறது என்று தெரிந்தவுடன், 'இந்தப் பிரிவு தவறாக பயன்படுத்தப்பட மாட்டாது. நாங்கள் உறுதி தருகிறோம்' என்று உச்சநீதிமன்ற நீதிபதிகளிடம் சொன்னது.

ஆனால், நீதிபதிகளோ, 'அரசு வரும் போகும். இந்த அரசு கொடுக்கும் உறுதிமொழி இன்னொரு அரசுக்குப் பொருந்தாமல் போகும்.

அது மட்டுமல்ல அந்தப் பிரிவே செல்லாது என்று அறிவிக்கும் நேரத்தில் நீங்கள் கொடுக்கும் உறுதிமொழி இந்தப் பிரிவை பாதுகாக்காது' என்று தெளிவாக எடுத்துக் கூறி, இந்தப் பிரிவை ரத்து செய்து விட்டது உச்சநீதிமன்றம்.

ரத்துச் செய்வதற்கு முக்கியமாக சில விஷயங்களை உச்சநீதிமன்றத் தீர்ப்பு சுட்டிக்காட்டியிருக்கிறது. முதலில் கருத்துச் சுதந்திரம் அல்லது பேச்சுரிமை என்றால் என்ன என்று உச்சநீதிமன்றம் கூறியிருக்கிறது.

அதாவது 'முதலில் ஒரு கருத்து பற்றி விவாதிப்பது. பிறகு அந்தக் கருத்தை ஆதரித்துப் பரப்புவது. மூன்றாவதாக தூண்டுவது ' ஆகிய மூன்றும்தான் பேச்சுரிமையில் மிக முக்கியம் என்று சுட்டிகாட்டியிருக்கும் உச்சநீதிமன்றம் இந்த அடிப்படையில் அலசி ஆராய்ந்துதான் இந்த செக்ஷனை ரத்து செய்துள்ளது.

குறிப்பாக இந்த செக்ஷன் பொத்தாம் பொதுவாத தெளிவில்லாமல் இருக்கிறது, பொது அமைதியை ஏற்படுத்துவதற்கும் இந்த பிரிவுக்;கும் நெருக்கம் இருப்பதாகத் தெரியவில்லை.

இந்தப் பிரிவின் படி நடவடிக்கை எடுக்கும் போது எதெல்லாம் குற்றம் என்பது பற்றிய தெளிவான 'வரைமுறை'  செய்யப்படவில்லை என்று சுட்டிக்காட்டியிருக்கிறது.

இந்தத் தீர்ப்பின் விளைவாக சமூகவலைதளங்களில் கருத்துச் சுதந்திரம் இந்தியாவில் நிலைநாட்டப்பட்டுள்ளது. மூன்று வருடம் சிறைதண்டனை விதிக்கும் இந்தப் பிரிவு ரத்து செய்யப்பட்டதன் மூலம் சமூக வலைதள ஆர்வலர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கிறது.

குறிப்பாக ஒவ்வொரு மாநிலத்திலும் பேஸ்புக், டுவிட்டர், வட்ஸ் அப், எஸ்.எஸ்.எஸ்., இன்டர்நெட் போன்றவற்றில் எதைச் சொன்னால் குற்றம், எதற்காக கைது செய்யப்படுவோம் என்ற அச்சம் மட்டுமல்ல ஒரு வித பீதியே நிலவியது.

குறிப்பாக பிரதமர் நரேந்திரமோடியின் நாடாளுமன்றத் தேர்தல் பிரசாரத்துக்கு சமூகவலைதளங்கள் மிக முக்கியக் காரணம். அப்போது காங்கிரஸ் அரசு மீதும், அதன் கூட்டணிக் கட்சிகள் மீதும் சகட்டு மேனிக்கு பிரசாரங்கள் நடைபெற்றது.

இது போன்ற நிலையில் சமூக வலைத்தளங்களில் பதிவு செய்யப்படும் கருத்துக்கள் தொடர்பாக நடைபெற்ற திடீர் கைதுகள் இந்த பொது நல வழக்கைத் தொடுத்த ஸ்ரேயா சிங்காலுக்கு பெரும் கவலையை ஏற்படுத்தியது.

அதனால்தான் இந்த வழக்கை உச்சநீதிமன்றத்தில் தொடுத்தார். இந்த பீதியைப் போக்கும் வகையில் ஒரு தீர்ப்பை சுட்டிக்காட்டியுள்ள உச்சநீதிமன்றம், 'தெளிவாக வரையறுக்கப்படாத சட்டங்கள் முக்கிய உரிமைகளை பறித்து விடுகிறது.

சாதாரண குடிமகன் நாம் எதைச் செய்தால் தவறு என்பதை எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் சட்டங்கள் இருக்க வேண்டும்' என்றும் சுட்டிக்காட்டியிருக்கிறது.

இப்போது பா.ஜ.க. அரசுக்கு எதிராக நிலம் கையகப்படுத்துதல் விவகாரத்தில் பெரும் பிரசாரம் நடக்கிறது.

இது போன்ற சூழ்நிலையில் இந்த 66A பிரிவு ரத்து செய்யப்பட்டுள்ளது சமூக வலைதளங்களில் இனி அரசியல் தலைவர்களுக்கு எதிராகவும், அரசியல் கட்சிகளுக்கு எதிராகவும் தாராளமாக கருத்துக்கள் பதிவாகும் வாய்ப்பு உருவாகியிருக்கிறது.

உச்சநீதின்ற நீதிபதிகள் அளித்த தீர்ப்பு கருத்துச் சுதந்திரத்தை நிலைநாட்டுவதில் முக்கிய மைல்கல் என்றால் அதில் சந்தேகமில்லை.

அது மட்டுமின்றி இந்தப் பிரிவின் மூலம் போடப்பட்ட கைவிலங்கு அறுத்து எறியப்பட்டுள்ளது.  

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .