Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை
Thipaan / 2015 ஏப்ரல் 05 , பி.ப. 10:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
நிறைவேற்று ஜனாதிபதி முறை, சிறுபான்மை மக்களுக்கு சாதகமானதோர் ஆட்சி முறையென அம்முறை அறிமுகப்படுத்தப்பட்டு சில காலங்களின் பின்னர் கருதப்பட்டது. இந்த வாதத்தை முன்வைத்தவர்களில் முதன்மையானவர்,
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவர் காலஞ்சென்ற எம்.எச்.எம். அஷ்ரபே.
ஆனால், இப்போது நிலைமை மாறியிருக்கிறது. தற்போது நிறைவேற்று ஜனாதிபதி முறையைப் பற்றி நாட்டில் ஒரு விவாதம் ஆரம்பிக்கப்பட்டு இருக்கும் நிலையில், எந்தவொரு சிறுபான்மையினத் தலைவரும் அம் முறைக்காக பரிந்து பேச முன்வருவதில்லை.
சிங்கள இனவாதிகளாக உலகமே அறிந்த சிலர் தான் அம்முறையைப் பாதுகாப்பதற்காக முன்வந்துள்ளனர்.
நிறைவேற்று ஜனாதிபதி முறை, சிறுபான்மை சமூகங்களுக்கு சாதகமானது என்று கூறுவதற்கு அன்று அஷ்ரபிடம் பலமானதோர் வாதம் இருந்தது. இம் முறையின் கீழ் நாடே ஒரு தேர்தல் தொகுதியாகிறது. பெரும்பான்மை மக்கள் பிரிந்து பல ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு ஆதரவு வழங்க முற்படும் நிலையில், அவ் வேட்பாளர்கள் அனைத்து சமூகங்களினதும் ஆதரவை நாடுவர்.
குறிப்பாக சிறுபான்மை சமூகங்கள் ஓரணியில் நின்று வாக்களிக்கும் நிலை ஏற்படும் போது வேட்பாளர்களுக்கு, அவர்களை புறக்கணிக்கவே முடியாது என அஷ்ரப் வாதாடினார்.
பதவிக்கு வந்த ஜனாதிபதி, அடுத்த முறையும் ஜனாதிபதியாக பதவிக்கு வரவே முயற்சிப்பார். எனவே, அவர் சிறுபான்மையினரை தமது பதவிக் காலத்திலும் புறக்கணிக்க முடியாது.
இதன் காரணமாக அரச அதிகாரிகள் தமக்கு அநீதி இழைக்கும் போது சிறுபான்மையினர் அதைப் பற்றி ஜனாதிபதியிடம் மேன்முறையீடு செய்யலாம் என்றும் அம் முறை சிறுபான்மையினருக்கு மேன்முறையீட்டு நீதிமன்றமாக செயற்படும் என்றும் சட்டத்தரணியான அஷ்ரப் மேலும் வாதாடினார்.
அவர், அதனை நடைமுறையிலும் நிரூபித்துக் காட்டினார். 1978ஆம் ஆண்டு இரண்டாவது குடியரசு அரசியலமைப்பு அறிமுகப்படுத்தப்பட்ட போது, அதனோடு விகிதாசார தேர்தல் முறையும் அறிமுகப்படுத்தப்பட்டது. அதன் கீழ் ஒரு கட்சி அல்லது சுயேட்சைக் குழு ஆசனங்களைப் பெற தகுதி பெறுவதற்காக ஒரு மாவட்டத்தில் இருந்து பெற வேண்டிய குறைந்தபட்ச வாக்கு வீதம் (வெட்டுப் புள்ளி) 12 ஆக அப்போது இருந்தது.
அந்த நிலையில், தேர்தல்கள் நடைபெற்றால் முஸ்லிம் காங்கிரஸ், மக்கள் விடுதலை முன்னணி, மலையக மக்கள் முன்னணி, ஜனநாயக மக்கள் முன்னணி போன்ற கட்சிகளுக்கு பல மாவட்டங்களில் ஆசனங்களே கிடைக்காது.
மக்கள் விடுதலை முன்னணிக்கு எங்குமே ஆசனங்கள் கிடைக்காது. மு.கா.வுக்கு கிழக்கு மாகாணத்துக்கு வெளியே எந்த மாவட்டத்திலும் ஆசனங்கள் கிடைக்காது.
1988 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில், ஐக்கிய தேசிய கட்சியின் சார்பில் ரணசிங்க பிரேமதாசவும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் சார்பில் சிறிமாவோ பண்டாரநாயக்கவும் போட்டியிட்டனர். தேர்தல் பிரசாரத்தின் ஆரம்ப கட்டத்தில் மு.கா., சிறிமா பண்டாரநாயக்கவுடன் இணைந்து செயற்பட்டது.
ஆனால், அக் கட்சிகளிடையேயான தேர்தல் ஒப்பந்தத்தை ஸ்ரீ.ல.சு.க. தமக்குத் தெரியாமலே மாற்றியதாகக் குற்றஞ்சாட்டி அஷ்ரப் அந்தக் கூட்டிலிருந்து விலகினார்.
பின்னர் அவர், பிரேமதாசவுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். ஒருநாள் பேச்சுவார்த்தை அதிகாலை 2 மணிவரையிலும் நீடித்தது. அப்போது அஷ்ரப் இந்த வெட்டுப்புள்ளி விடயத்தை ஒரு நிபந்தனையாக முன்வைத்தார். சிறிமாவோ பண்டாரநாயக்கவிடம் தமக்கு வந்துள்ள சவாலின் பாரதூரத்தை அறிந்திருந்த பிரேமதாச, அஷ்ரபின் கோரிக்கையை ஏற்று வெட்டுப்புள்ளியை 12 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாக குறைக்க உடன்பட்டார்.
அந்த நள்ளிரவிலேயே பிரேமதாச அதிகாரிகளை எழுப்பி அதற்கான ஆலோசனைகளை வழங்கியதாக அக் காலத்தில் ஊடகங்கள் தெரிவித்திருந்தன.
அஷ்ரபின் இந்த பேரத்தின் காரணமாக, வெட்டுப்புள்ளி குறைக்கப்பட்டு நாடாளுமன்ற, மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களின் போது கிழக்கு மாகாணத்துக்கு வெளியிலும் மு.கா., மக்கள் விடுதலை முன்னணி மற்றும் ஜனநாயக மக்கள் முன்னணி போன்ற சிறு மற்றும் சிறுபான்மையினக் கட்சிகள் ஆசனங்களைப் பெற முடிந்தது.
இது தான் சிறுபான்மையினருக்கு நிறைவேற்று ஜனாதிபதி முறை, மேன்முறையீட்டு நீதிமன்றமாகிறது என்பதற்கு அஷ்ரப் காட்டிய உதாரணமாகும்.
ஆனால், அந்த குறைந்த வெட்டுப் புள்ளியே பிற்காலத்தில் மு.கா. பல கூறுகளாக பிரிந்து பிளவுபடவும் ஒரு காரணமாக அமைந்தது. அந்தப் பிளவுகளின் காரணமாக ஜனாதிபதிகள், முஸ்லிம்களை புறக்கணிக்கும் நிலையும் ஏற்பட்டது.
பிளவு மட்டும் தான் நிறைவேற்று ஜனாதிபதிகள், சிறுபான்மையினரை புறக்கணிக்க ஏதுவான ஒரே காரணம் அல்ல. மஹிந்த ராஜபக்ஷ போன்ற ஜனாதிபதிகளின் இனவாதமும் அதற்குக் காரணமாகியது.
போரின் முடிவை அடுத்து 2010 ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலின் போது ராஜபக்ஷ, சிறுபான்மையினர்களின் வாக்குகளே தேவையில்லை என்று நினைக்கும் அளவுக்கு பெரும்பான்மை வாக்குகளை பெற்றார். இந்த நிலை தொடரும் எனவும் அவரும் பேரினவாதிகளும் நினைத்தனர்.
இனி தமிழர்களும் முஸ்லிம்களும் தமது வாக்கு வங்கியை ஏலத்தில் விட்டு தமது காரியங்களை சாதித்துக் கொள்ள முடியாது என அமைச்சர் சம்பிக்க ரணவக்கவும் அக் காலத்தில் கூறி வந்தார்.
இந்த நிலையும் ராஜபக்ஷகளின் இனவாதமும் காரணமாக அஷ்ரப் கூறியதைப் போல் நிறைவேற்று ஜனாதிபதி முறை சிறுபான்மையினருக்கு தொடர்ந்தும் மேன்முறையீட்டு நீதிமன்றமாகாது போய்விட்டது.
இந்த நிலையில், இனவாத மதவாத கும்பல்கள், பள்ளிவாசல்கள், தேவாலயங்கள் மற்றும் கோயில்களை உடைத்து தகர்க்கும் போதும் அரசாங்கம் கைகட்டி கண்மூடி நின்றது. நிலைமை மோசமாகிவிட்டது, சிறுபான்மையினர், ஜனாதிபதியை தீர்மானிக்கப் போகிறார்கள் என ராஜபக்ஷ குடும்பம் உணரும் போது காலம் தாமதித்து இருந்தது.
கடைசி கட்டத்தில் தான் ராஜபக்ஷ அரசாங்கம், தமிழர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் சொந்தமானதாக இருந்து படையினரினரால் கைப்பற்றிக் கொண்டிருந்த சில காணிகளையாவது கைவிட நினைத்தது. அப்போது தமிழர்களும் முஸ்லிம்களும், ராஜபக்ஷவை தோற்கடிக்க மொத்தமாகவும் உறுதியாகவும் முடிவு செய்திருந்ததால் அது அவர்களுக்கு பயனற்றுப் போய்விட்டது.
நிறைவேற்று ஜனாதிபதி ஒருவருக்கு சிறுபான்மை வாக்குகள் எவ்வளவு பெறுமதியானது என்பதை கடந்த ஜனாதிபதித் தேர்தலே நன்றாக நாட்டுக்கு எடுத்துக் காட்டியது. உண்மையில் சிறுபான்மையினரே, மைத்திரிபால சிறிசேனவை ஜனாதிபதி ஆசனத்தில் அமர்த்தினர்.
எதிர்காலத்தில் ஜனாதிபதியாக வர முயற்சிப்பதாகத் தெரியும் சம்பிக்க ரணவக்கவும் அதனை உணர்ந்து இருக்கிறார் போலும்.
தற்போது இராணுவக் கட்டுப்பாட்டில் உள்ள வடக்கில் 1,000 ஏக்கர் காணிகளை அவற்றின் உரிமையாளர்களுக்கு வழங்கப் போவதாக அரசாங்கம் அறிவித்த போதும், புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் மீது விதிக்கப்பட்ட தடையை நீக்கப் போவதாக வெளிநாட்டு அமைச்சர் மங்கள் சமரவீர கூறிய போதும் 13 ஆவது அரசியலமைப்புக்கு அப்பால் செல்ல வேண்டும் என இந்திய பிரதமர் நரேந்திர மோடி, இலங்கை நாடாளுமன்றத்தில் கூறிய போதும் தேசிய கீதத்தை தமிழில் பாடலாம் என ஜனாதிபதி கூறியதாக மனோ கணேசன் கூறிய போதும் சம்பிக்கவோ அவரது கட்சியான ஜாதிக ஹெல உறுமயவோ முன்னர் போல் துள்ளிக் குதிக்கவில்லை.
2010 ஆம் ஆண்டு தேசிய கீதம் தொடர்பான சர்ச்சை எழுந்த போது தேசிய கீதத்தை சிங்களத்தில் மட்டுமே பாட வேண்டும் என்று அடித்துக் கூறிய ஹெல உறுமய இப்போது அதை தமிழ் பகுதிகளில் தமிழில் பாடலாம் தமிழில் பாடினால் தான் தமிழர்களது மனதிலும் தேசப்பற்று வளரும் என்கிற அளவுக்கு வந்துள்ளனர். கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது சிறுபான்மையினர் வழங்கிய செய்தியே இந்த மாற்றத்துக்குக் காரணமாக இருக்கலாம்.
நிறைவேற்று ஜனாதிபதி பதவியை மனதில் வைத்துக் கொண்டு ஹெல உறுமய இவ்வாறு சிறுபான்மையினர் விடயத்தில் மாறும் போது சிறுபான்மையினர், நிறைவேற்று ஜனாதிபதி முறையைப் பற்றிய தமது நிலைப்பாட்டையே மாற்றிக் கொண்டுள்ளார்கள்.
அவர்கள் அதனை இப்போது விரும்புவதில்லை. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, முஸ்லிம் காங்கிரஸ், ஜனநாயக மக்கள் முன்னணி, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் போன்ற சிறுபான்மையினக் கட்சிகள் நிறைவேற்று ஜனாதிபதி முறையை இரத்துச் செய்யவோ அல்லது ஜனாதிபதியின் அதிகாரங்களை குறைக்கவோ அரசாங்கத்துக்கு ஆதரவு வழங்கத் தயாராக இருக்கின்றனர்.
கம்மன்பிலவின் பிவிதுரு ஹெல உறுமய, விமல் வீரவன்சவின் தேசிய சுதந்திர முன்னணி போன்ற பேரினவாத கட்சிகளும் மஹிந்த ராஜபக்ஷவை மீண்டும் பதவிக்கு கொண்டு வர வேண்டும் எனறு கூச்சலிடுவோரும் மட்டுமே இப்போது நிறைவேற்று ஜனாதிபதி முறையை ஆதரிக்கிறார்கள். அவர்கள் யார் என்பது சிறுபான்மை மக்களுக்குத் தெரியும்.
எதிர்காலத்தில் ஜனாதிபதியாக வர ஆசைப்படும் சம்பிக்கவின் ஹெல உறுமயவும் அம் முறையை ஆதரித்த போதிலும் கடந்த காலத்தில் அவர் தமது நிலைப்பாட்டை சற்று மாற்றிக் கொள்ள நிர்ப்பந்திக்கப்பட்டார். குறிப்பாக கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது, ராஜபக்ஷவின் ஆட்சியை எதிர்த்தவர்கள் எல்லோரும் நிறைவேற்று ஜனாதிபதி முறையை எதிர்த்த நிலையில், ஹெல உறுமய அம் முறையை பூரணமாக ஆதரிக்க முடியாத நிலை ஏற்பட்டது.
தமது விருப்பப்படி செயற்பட முடியாததனால் அல்லது தாம் எதிர்பார்க்கும் உயர் பதவிகளுக்கு வர முடியாத நிலை ஏற்பட்டதனாலேயே மைத்திரிபால, சம்பிக்க போன்ற பலர், ராஜபக்ஷ ஆட்சியை வெறுத்தனர்.
அதேவேளை, அப்போது ராஜபக்ஷவின் எதேச்சாதிகார நடவடிக்கைகளின் காரணமாக நிறைவேற்று ஜனாதிபதி முறைக்கு எதிரான அபிப்பிராயம் வலுப்பெற்றுக் கொண்டிருந்தது. ராஜபக்ஷ, கடந்த வருடம் ஜனாதிபதித் தேர்தலை அறிவித்த போது நிறைவேற்று ஜனாதிபதி முறையை இரத்துச் செய்ய வேண்டும் என்பது ராஜபக்ஷ ஆட்சிக்கு எதிரான பிரதான சுலோகமாகியது.
எனவே, சம்பிக்கவும் நிறைவேற்று ஜனாதிபதியின் அதிகாரங்களை குறைக்க வேண்டும் என்று கூறினார்.
ஜனாதிபதித் தேர்தலின் போது மைத்திரிபாலவை ஆதரித்தவர்களில் ஹெல உறுமய தவிர்ந்த சகல கட்சிகள் மற்றும் அமைப்புக்களும் நிறைவேற்று ஜனாதிபதி முறையை இரத்துச் செய்ய வேண்டும் என்றே கூறின. மைத்திரிபாலவின் தேர்தல் விஞ்ஞாபனத்திலும் 100 நாட்கள் வேலைத் திட்டத்திலும் அது குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆனால், தற்போது முன்வைக்கப்பட்டுள்ள 19ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தில் அம்முறையை இரத்துச்செய்வதற்குப் பதிலாக, ஜனாதிபதியின் அதிகாரங்களை குறைக்கவே ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இப்போது அது தொடர்பாகவும் மைத்திரிபாலவின் அணியிலேயே கருத்து வேறுபாடுகள் உருவாகியுள்ளன. மக்கள் விடுதலை முன்னணி மற்றும் மாதுளுவாவே சோபித்த தேரின் நீதியான சமூகத்துக்கான தேசிய அமைப்பு போன்றவை நிறைவேற்று ஜனாதிபதி முறையை இரத்துச் செய்யத்தான் வேண்டும்,
ஆனால், இந்தளவுக்காவது ஜனாதிபதியின் அதிகாரங்களை குறைப்பதையும் தாம் எதிர்க்க போவதில்லை என்று வாதாடுகின்றன.
நேரடியாகக கூறாவிட்டாலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் அதனைத் தான் கூறுகிறது. எனவே தான் ஹெல உறுமய போன்ற அமைப்புக்கள் 19 ஆவது அரசியலமைப்புத் திருத்தம் ஜனாதிபதியின் அதிகாரங்களை பறித்துள்ளது என்று கூறி, நீதிமன்றம் சென்ற போது அத் திருத்தத்தை பாதுகாக்க கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரான எம்; ஏ. சுமந்திரன், நீதிமன்றத்தில் வாதாட முன்வந்துள்ளார்.
கடந்த காலங்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, நிறைவேற்று ஜனாதிபதி முறை விடயத்தில் உதாசீனமாகவே இருந்துள்ளது. இவ்வாட்சி முறை இருந்தால் என்ன இல்லாவிட்டால் என்ன என்பதைப் போல் தான் அக் கட்சி நடந்து கொண்டது.
ஆனால், ஓர் இனவாதி, நிறைவேற்று ஜனாதிபதியானால் அது சிறுபான்மை மக்களை பாதிக்கும் என்பதை கடந்த காலத்தில் உணர்ந்ததாலோ என்னவோ இப்போது கூட்டமைப்பும் அவ்வாட்சி முறைக்கு எதிரான போராட்டத்தில் நேரடியாகவே குதித்துள்ளது போலும்.
இம் முறை முற்றாக ஒழிக்கப்பட்டு நாடாளுமன்றத்துக்கு சகல நிறைவேற்று அதிகாரங்களை வழங்கினாலும் சிறுபான்மை சமூகங்கள் தமக்கிடையே பிளவுபட்டு இருந்தால் அவர்களை பிரதமர்களும் மதிக்கப் போவதில்லை.
கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது நடந்து கொண்டதைப் போல் சிறுபான்மை சமூகங்கள் ஒற்றுமையாக இருந்தால் எந்த ஆட்சி முறை வந்தாலும் அவர்களை நாட்டுத் தலைவர்கள் மதிக்க வேண்டிய நிலை ஏற்படும். ஆனால், சிறுபான்மையினத் தலைவர்களின் பதவி ஆசை அதற்கு எதிர்காலத்தில் இடம் கொடுக்குமா என்பது சந்தேகமே.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
17 May 2025
17 May 2025