2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

அனல்பறக்கும் தமிழக அரசியல் களம்!

Thipaan   / 2015 ஏப்ரல் 06 , மு.ப. 10:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழக அமைச்சர் ஒருவர் அதிரடியாக தற்கொலை வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்டுள்ளார். தமிழக அமைச்சரவையில் விவசாயத்துறை அமைச்சராக இருந்தவர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி.

இவர் தனது துறையில் பணியாற்றும் உதவி நிர்வாகப் பொறியாளர் முத்துக்குமாரசாமிக்கு நெருக்கடி கொடுத்து தற்கொலைக்குத் தூண்டினார் என்ற வழக்கில் ஏப்ரல் 5ஆம் திகதி கைது செய்யப்பட்டார்.

தன் அமைச்சரவையில் இருந்த அமைச்சர் ஒருவரை கிரிமினல் குற்றச்சாட்டில் கைது செய்திருக்கிறார் முதலமைச்சர்

ஓ. பன்னீர்செல்வம். இவர்தான் முன்பு அக்ரி கிருஷ்ணமூர்த்தியை அமைச்சர் பதவியிலிருந்து நீக்க பரிந்துரை செய்தவரும் ஆகும்.

'முத்துக்குமாரசாமி தற்கொலை வழக்கு' கடந்த இரு மாதங்களாக தமிழகத்தை உலுக்கி வருகிறது. திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள விவசாயத்துறையில் சாரதிகளை நியமனம் செய்ய வேண்டிய பொறுப்பில் இருந்தார் பொறியியலாளர் முத்துக்குமாரசாமி. நேர்மையான முறையில் அந்த நியமனத்தை செய்வதற்கு அவரும், திருநெல்வேலி மாவட்ட ஆட்சித் தலைவர் கருணாகரனும் முயற்சிகள் மேற்கொண்டிருந்தனர்.

அந்த நேரத்தில் அக்ரி தலைமைப் பொறியாளர் செந்திலும் அமைச்சராக இருந்த கிருஷ்ணமூர்த்தியும் முத்துக்குமாராசாமிக்கு தொல்லை கொடுத்தார்கள். 'தாங்கள் கொடுக்கும் பட்டியல்படி சாரதிளை நியமனம் செய்ய வேண்டும்' என்று கெடுபிடி செய்தார்கள்.
இதைத் தாங்க முடியாமல் முத்துக்குமாரசாமி ரயில் முன்பு பாய்ந்து கடந்த பெப்ரவரி மாதம் 20ஆம் திகதி தற்கொலை செய்து கொண்டார்.

முதலில் உள்ளூர் பொலிஜார் விசாரித்த இந்த வழக்கு, எதிர்கட்சிகள் 'சி.பி.ஐ. விசாரணை வேண்டும்' என்று கோரிக்கை வைக்கவே, தமிழக அரசின் கட்டுப்பாட்டில் உள்ள சி.பி.சி.ஐ.டி. என்ற பொலிஸ் அமைப்புக்கு மாற்றப்பட்டது.

இதை தமிழகத்தில் க்ரைம் பிராஞ்ச் பொலிஸ் என்பார்கள். முக்கிய வழக்குகளை கையாளும் பக்குவம் பெற்ற பொலிஸ் பிரிவு இது. இவர்கள் வழக்கு விசாரணையை கையில் எடுத்து தீவிர விசாரணை மேற்கொண்டார்கள்.

திருநெல்வேலி சென்று தற்கொலை செய்து கொண்ட பொறியியலாளரின் குடும்பத்தினர் மற்றும் விவசாயத்துறை அலுவலகத்தில் விசாரணை மேற்கொண்டார்கள். அமைச்சராக இருந்த அக்ரி கிருஷ்ணமூர்த்தியின் நேர்முக உதவியாளர்களை அழைத்து விசாரித்தார்கள்.

இந்த விசாரணை போய்க் கொண்டிருந்த நேரத்தில் ஆங்கில சேனலான 'டைம்ஸ் நவ்' தொலைக்காட்சிக்குப் பேட்டியளித்த அக்ரி கிருஷ்ணமூர்த்தி, 'நான் அப்பாவி. எந்தத் தவறும் செய்யவில்லை. எல்லாம் அம்மாவுக்குத் (முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா) தெரியும்' என்று ஏப்ரல் 2ஆம் திகதி பேட்டி கொடுத்தார்.

இந்தப் பேட்டி தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 'அம்மாவுக்குத் தெரியும்' என்று இது போன்ற சர்ச்சைக்குரிய வழக்கில் ஏன் அக்ரி கிருஷ்ணமூர்த்தி பேட்டி கொடுத்தார் என்ற கேள்வி பல முனைகளிலும் கேட்கப்பட்டது.

குறிப்பாக அ.தி.மு.க. அமைச்சர்கள் மத்தியிலேயே இந்தப் பேட்டி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த பரபரப்பான சூழ்நிலையில் ஏப்ரல் 5ஆம் திகதி முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி கைது செய்யப்பட்டார். 15 நாள் நீதிமன்றக் காவலில் அடைக்கப்பட்ட அவர் தற்போது பாளையங்கோட்டை சிறையில் இருக்கிறார்.

முன்னாள் அமைச்சரின் கைது மற்ற அமைச்சர்களுக்கு 'கிலி' ஏற்படுத்தியிருக்கிறது.  ஆனால், எதிர்கட்சிகளோ இந்தக் கைது 'கண்துடைப்பு நாடகம்' என்கிறது. 'யாரைக் காப்பாற்ற இந்தக் கைது நடவடிக்கை' என்று தி.மு.க. பொருளாளர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

'உயர்பதவியில் இருப்போரைக் காப்பாற்ற நடந்த கைது இது. சி.பி.ஐ. விசாரணை வேண்டும்' என்கிறார் பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் டாக்டர் ராமதாஸ்.

இதே கோரிக்கையை தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் இளங்கோவனும் கூறியிருக்கிறார். பா.ஜ.க.வின் மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்திரராஜன், 'இந்தக் கைது மற்ற அமைச்சர்களுக்கு பாடமாக இருக்கும்' என்று பேட்டி அளித்துள்ளார்.

அதனால் அக்ரி கிருஷ்ணமூர்த்தி கைதுடன் இப்பிரச்சினை முடிவதற்கு வாய்ப்பில்லை. இனி இந்த விசாரணை சி.பி.ஐ. போகும் வரை தமிழக எதிர்கட்சிகள் விட மாட்டார்கள் என்பதே இந்த பேட்டிகள், கைதுக்குப் பிறகு வெளிவரும் கருத்துக்கள் எல்லாம் எடுத்துரைக்கின்றன.

ஏனென்றால், சட்டமன்றத் தேர்தல் வரப் போகின்ற சூழ்நிலையில், முன்னாள் அமைச்சர் ஒருவரே ஊழல் மற்றும் கிரிமினல் புகாரில் கைது செய்யப்பட்டுள்ளது எதிர்கட்சிகளுக்கு 'அல்வா' சாப்பிட்டது போல் இருக்கிறது.

அ.தி.மு.க. ஆட்சியில் அனைத்திலும் ஊழல் என்ற ரீதியில் பிரசாரத்தை துவக்கி விட்டார்கள்.
நான்கு ஆண்டுகள் நல்லாட்சி புரிந்திருக்கிறோம் என்று கூறிய தி.மு.க.வினர் கடைசி நேரத்தில் 2ஜி ஊழல் புகாரில் சிக்கி மக்கள் செல்வாக்கை இழந்தார்கள்.

அதே போல் நான்கு வருடங்கள் நல்லாட்சி செய்திருக்கிறோம் என்று கூறும் அ.தி.மு.க.வினர் இப்போது இது போன்ற அரசு அதிகாரிகள் தற்கொலை விவகாரத்தில் சிக்கி மக்கள் செல்வாக்கை இழந்து வருகிறார்கள்.

முன்கூட்டியே சட்டமன்றத் தேர்தல் வரும் என்றெல்லாம் ஹேஸ்யங்கள் உலாவருகின்ற இந்த சூழ்நிலையில், அ.தி.மு.க. அமைச்சரவையில் இருந்த ஒருவரே ஊழல் புகாரில் கைது செய்யப்பட்டுள்ளமை மற்ற அமைச்சர்களை கலங்க வைத்துள்ளதோ இல்லையோ அ.தி.மு.க.வின் தேர்தல் பிரசாரத்துக்கு பெரும் சிம்ம சொப்பனமாக எழுந்து நிற்கிறது.

ஆனால், அ.தி.மு.க.வைப் பொறுத்தவரை அக்ரி கிருஷ்ணமூர்த்தி கைது தங்களுக்கு சாதகமாக இருக்கும் என்று நம்புகிறது.

குறிப்பாக ஊழல் புகார் என்றதும் சொந்த கட்சி அமைச்சர் என்று கூட பார்க்காமல் அவரை கட்சிப் பதவியிலிருந்து நீக்கினார். அமைச்சர் பதவியிலிருந்து நீக்கினார்.

இப்போது அந்த வழக்கில் அவரை கைதும் செய்து விட்டார்கள் என்ற இமேஜ் தங்கள் கட்சிக்கு தேர்தலில் வாக்குகளை அறுவடை செய்ய இயலும் என்று நம்புகிறது.

அதனால்தான் இந்த கைது பற்றி கருத்துத் தெரிவித்த அ.தி.மு.க. செய்தி தொடர்பாளர்களில் ஒருவரான சி.ஆர்.சரஸ்வதி,

'அ.தி.மு.க. அரசு நேர்மையான அரசு. அதனால் நடவடிக்கை எடுக்கிறது. இதைப் பொறுத்துக் கொள்ள முடியாத எதிர்கட்சிகள் வீண் பிரச்சினை எழுப்புகிறார்கள்' என்று பதிலடி கொடுத்துள்ளார்.
ஊழல் புகாருக்குள்ளானவர்களை நாங்கள் காப்பாற்றவில்லை என்ற இமேஜ் தேர்தலை சந்திக்க உதவும் என்பது அ.தி.மு.க. தலைமையின் வியூகமாக இருக்கிறது.

ஆனால், அக்ரி கிருஷ்ணமூர்த்தியின் கைது அதற்கும் மேல் இருக்கிறது என்பதே தமிழக அரசியல் வட்டாரச் செய்தி. குறிப்பாக 1991-96ல் அ.தி.மு.க. அமைச்சரவை இருந்த போது இப்படித்தான் முதன் முதலில் அக்கட்சியின் அமைச்சர் ஒருவர் சி.பி.ஐ. வழக்கில் சிக்கிக் கொண்டார்.

அவர் சுடுகாட்டுக் கூரை வழக்கில் சிக்கிய செல்வகணபதி. அந்த வழக்கில் இப்போது அவருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டு, மேன்முறையீடு செய்து விட்டு காத்திருக்கிறார்.

அன்றைக்கு செல்வகணபதி மீது போடப்பட்ட வழக்கு போல் இன்றைக்கு அமைச்சராக இருந்த அக்ரி கிருஷ்ணமூர்த்தி மீது போடப்படுள்ளது.

அதனால் இந்த கைது நடவடிக்கை அ.தி.மு.க.வின் இமேஜூக்கு பலம் சேர்ப்பதை விட பலவீனத்தை உருவாக்கும் என்பதே அரசியல் பார்வையாளர்களின் கருத்தாக இருக்கிறது.

அதனால்தான் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் கூட சேலத்தில் நடைபெற்ற அக்கட்சியின் மகளிர் அணி பொதுக்கூட்டத்தில், 'அ.தி.மு.க.வின் தலைவியிலிருந்து முன்னாள் அமைச்சர் வரை ஊழல் புகாரில் சிக்கியிருக்கிறார்கள்' என்று பேசியிருக்கிறார்.

எது எப்படியோ, தமிழக சட்டமன்றத் தேர்தலை நோக்கி களம் பரபரப்பாகி விட்டது. அ.தி.மு.க.வுக்கு எதிராக இந்த முத்துக்குமாரசாமி தற்கொலை, முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி கைது போன்ற விஷயங்களை முன்னிறுத்தி களத்தில் இறங்கி விட்டார்கள்.

எஞ்சியுள்ள மாதங்களில் அ.தி.மு.க.வுக்கு எதிரான இமேஜை இவர்கள் உருவாக்கி விட முடியும் என்று நம்புகிறார்கள். அதனால்தான் தி.மு.க. பொருளாளர் ஸ்டாலின் கூட, 'எல்லாம் அம்மாவுக்கு தெரியும் என்று அக்ரி கிருஷ்ணமூர்த்தி பேட்டியளித்துள்ளார்.

மாநில நிர்வாகத்தை வழிகாட்டுபவருக்கே (முன்னாள் முதல்வர் ஜெயலலிதா) அனைத்து விடயங்களும் தெரியும் என்கிற போது தமிழக காவல்துறை கட்டுப்பாட்டில் உள்ள பொலிஸ்; எப்படி உருப்படியாக இந்த வழக்கை விசாரிப்பார்கள். அதனால் சி.பி.ஐ. விசாரணை நிச்சயம் தேவை' என்ற ரீதியில் அவருடையை முகநூலில் பதிவு செய்திருக்கிறார்.

முன்னாள் அமைச்சரின் கைது அ.தி.மு.க.வுக்கு இமேஜைக் கொடுக்கிறதோ இல்லையோ எதிர்கட்சிகளுக்கு சரியான தீனியைக் கொடுத்து விட்டது. இனி அதை சந்து பொந்துகளில் எல்லாம் மேடை போட்டு பேசத்தான் போகிறார்கள்.

தேசிய அரசியலில் அ.தி.மு.க.வும் பா.ஜ.க.வும் கைகோர்த்து வருகின்ற நேரத்தில், இப்படி முத்துக்குமாரசாமி தற்கொலை வழக்கு போன்ற சர்ச்சைகள்  உள்ளூரிலும் அண்டை மாநிலத்தில் சொத்துக் குவிப்பு வழக்கின் மீதான மேல்முறையீடும் அ.தி.மு.க.வின் எதிர்காலத்துக்கு சவால் விட்டுக் கொண்டிருக்கிறது.

ஆனால், முதலமைச்சர் பன்னீர் செல்வம் சட்டமன்றத்தில் பட்ஜெட்டுக்கு பதிலுரை ஆற்றிய போது, 'சூது மதி கூட்டத்தின் சூழ்ச்சி அரசியலை தோற்கடித்து மீண்டும் தமிழ் மாநிலத்தின் முதல்வர் ஆவார் அம்மா' என்று ஆணித்தரமாகப் பேசியிருக்கிறார்.

என்ன நடக்கப் போகிறது? தமிழக மக்கள் ஆவலுடன் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்!

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .