2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

தேன்நிலவின் முடிவு மைத்திரியின் ஆதங்கம்

Kanagaraj   / 2015 ஏப்ரல் 08 , பி.ப. 10:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

புருஜோத்தமன் தங்கமயில்
 
மைத்திரி அரசாங்கத்தின் தேன்நிலவுக்காலம் முடிவுக்கு வருகின்றது. நாட்டு மக்களுக்கும் அரசாங்கத்துக்கும் இடையில் ஏற்பட்டிருந்த இணக்கமும் பிணைப்பும் விரிசலாகி நம்பிக்கையீனங்களைத் தோற்றுவித்திருக்கின்றது. பெரும் காதலோடு, தாம் ஆட்சியில் அமர்த்திய அரசாங்கத்தின் மீதான அதிருப்தியை மக்கள்  வெளிப்படையாக வெளியிடாத போதிலும் அதன் அளவு நிச்சயமாக அதிர்ச்சியளிக்கக் கூடியது தான்.

பெரும் அடக்குமுறைக்கும் சுரண்டலுக்கும் உள்ளாகியிருந்த நாட்டு மக்களுக்கு,  மைத்திரிபால சிறிசேனவின் வருகை சிறு ஒளிக்கீற்றாகவே ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் தென்பட்டது. அந்த ஒளிக்கீற்றின் நீட்சிக்காலம் பற்றி மக்கள் அப்போது கவனத்திற் கொள்ளவில்லை. ஏனெனில், அதற்கான அவகாசமோ, மாற்று மீட்சிப் புள்ளிகளோ அப்போது இருக்கவில்லை.  

ஒளிக்கீற்றாக மக்களினால் கருதப்பட்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவே, தன்னுடைய அரசாங்கத்தின் வீழ்ச்சியை உணர்ந்து கொண்டுவிட்டார். அதுதான், அவரை 'அப்பி பஹினவா (நாங்கள் இறங்குவோம்)' என்கிற தொனியினூடு அரசாங்கத்தின் வீழ்ச்சி பற்றி தேசிய நிறைவேற்று சபைக் கூட்டத்தில் ஆதங்கம் வெளியிட வைத்திருக்கின்றது.  

எந்தவொரு இலக்கினை நோக்கிய பயணமும் சிரமம் நிறைந்ததுதான். ஆனால், ஆரம்ப கட்டப் பயணம் இலகுவானது போலவே தோன்றும். அப்படித்தான், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தேசிய அரசாங்கத்தை அமைத்த தருணத்திலும் நம்பினார். ஆனால், இரண்டாவது கட்டத்தை அடைவது தொடர்பில் அவர் சிந்தித்த போது, அனைத்து முட்டுக்கட்டைகளும் வழி மறித்தன. இப்போது, 'இலக்கு' எது என்பது தொடர்பில் அவருக்கே குழப்பம் ஏற்பட்டிருக்கின்றது. இப்போதுதான் அவர் உண்மையான சிக்கல்களையும் முடிச்சுக்களையும் அவிழ்க்க வேண்டியிருக்கின்றது.

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையில் மாற்றங்களைச் செய்து நாடாளுமன்றத்துக்கு அதிகாரத்தை வழங்குதல், தேர்தல் முறை மாற்றம், ஊழல் மோசடிகளுக்கு எதிரான விசாரணை, வெளிநாட்டு முதலீடுகளை கொண்டு வருதல், பிராந்திய நாடுகளுடனான நெருக்கத்தைப் பேணுதல், நம்பிக்கையீனங்களினால் சூழப்பட்டிருக்கும் மக்களை மீட்டெடுத்தல் என்று மைத்திரிபால சிறிசேனவின் முன்னால் பல இலக்குகள் உண்டு. ஒவ்வொரு இலக்கும் அவ்வளவு தடைகளைத் தாண்டியே அடையப்பட வேண்டியது.  

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையில் மாற்றம் செய்யும் 19ஆவது திருத்த சட்டமூலம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு, நீதிமன்ற வியாக்கியானத்துக்காக கையளிக்கப்பட்டிருக்கின்றது. ஆனால், 19ஆவது திருத்தச் சட்டத்தில் குறைபாடுகள் உள்ளதாக சுட்டிக்காட்டி  அரசாங்கத்தின் பங்காளிகளே நீதிமன்றத்தை நாடியிருக்கின்றார்கள். அதிலும், தேசிய அரசாங்கத்தில் வேண்டா வெறுப்பாக இணைந்திருக்கின்ற (அல்லது இணைத்துக் கொள்ளப்பட்ட) ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி, தேர்தல் முறை மாற்றத்தைச் செய்யாமல், 19ஆவது திருத்தச் சட்டத்தை ஆதரிக்கப் போவதில்லை என்கிற நிலையில் இருக்கின்றது.  

ஆனால், 19ஆவது திருத்தச் சட்டத்தில் ஜனாதிபதியின் நிறைவேற்று அதிகாரங்களைக் குறைத்து, நாடாளுமன்றத்துக்கு (பிரதமருக்கு) அதிகாரங்களை வழங்கும் திட்டத்தை மாத்திரமே நிறைவேற்ற வேண்டும் என்பதில் ஐக்கிய தேசியக் கட்சியும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் மிகவும் தீர்க்கமான முடிவோடு இருக்கின்றார்கள். எவ்வளவு எதிர்ப்புக்கள் வந்தாலும் அதனை காலப் போக்கில் கடந்துவிடலாம் என்கிற தோரணையில் ரணில் விக்கிரமசிங்க தன்னுடைய செயற்பாடுகளை முன்னெடுக்கின்றார். 19ஆவது திருத்த வரைவின் மீது பல தரப்பினரும் விமர்சனங்களை முன்வைத்தாலும் அதற்கான எதிர்வினைகளை பிரதமரோ, ஐக்கிய தேசியக் கட்சியோ வெளிப்படையாக முன்வைப்பதில்லை. மாறாக, அமைதிகாக்கின்றனர்.  

தேர்தல் முறை மாற்றத்தை ஆரம்பத்தில் விரும்பியது போல ஐக்கிய தேசியக் கட்சி  காட்டிக் கொண்டாலும் அதனை விரைவாக நிறைவேற்றுவதில் அவ்வளவு ஆர்வம் காட்டவில்லை. ஏனெனில், வரும் நாடாளுமன்றத் தேர்தல் விகிதாசார முறையில் இருந்தாலே தன்னுடைய வெற்றியை உறுதிப்படுத்த உதவும் என்று நம்புகின்றது. தொகுதிவாரியை அதிகம் முன்னிறுத்தும் தேர்தல் முறைமைக்கு உடனடியாகச் சென்றால் தென்னிலங்கையின் கிராமங்களை வெற்றி கொள்ள முடியாது என்பது அதற்கான காரணம். ஐக்கிய தேசியக் கட்சியின் வாக்கு வங்கி என்பது கடற்கரை ஓரங்களையும் நகரங்களையும் அண்மித்தே எப்போதும் இருந்து வந்திருக்கின்றது.  

அதுபோல, தொகுதிவாரி முறைமை சிறுபான்மைக் கட்சிகளையும் குறிப்பிட்டளவில் பாதிக்கும். அதுவும் கூட நாடாளுமன்றத்துக்குள் ஐக்கிய தேசியக் கட்சிக்கான ஆதரவினை இல்லாமற்செய்யும். இப்படியான நிலையில், அரசாங்கமொன்றை அமைத்தாலும் அது அறுதிப் பெரும்பான்மையின்றி அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் சூழல் உருவாகலாம். அதனையே, ரணில் விக்;கிரமசிங்க அதிகமாக கருத்திற் கொள்கின்றார்.  

தொகுதிவாரியை அதிகம் முன்னிறுத்தும் தேர்தல் முறை மாற்றத்தினால் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி, ஐக்கிய தேசியக் கட்சி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆகிய பிரதான கட்சிகளே அதிக நன்மையைப் பெறமுடியும். மற்றைய சிங்களப் பெரும்பான்மைக் கட்சிகளும் சிறுபான்மையினக் கட்சிகளும் பாரிய பாதிப்பை எதிர்கொள்ள நேரிடும். குறிப்பாக, ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ், அம்பாறையைத் தவிர மற்றைய மாவட்டங்களில் அச்சுறுத்தலை எதிர்கொள்ளும். மலையகக் கட்சிகளும் இப்போதுள்ள நிலையோடு ஒப்பிடுகின்றபோது நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சியைச் சந்திக்கும். அதுபோல, மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி) பாரிய பின்னடைவைச் சந்திக்கும். ஏனெனில், தனித்த ஒரு தொகுதியை வெற்றி கொள்ளும் அளவுக்கான வாக்கு வங்கி அந்தக் கட்சியிடம் இல்லை. அது, சேர்க்கப்படும் வாக்குகளின் போக்கில் வெற்றியைப் பெறும் கட்சியாகவே இருக்கின்றது.

தேர்தல் முறை மாற்றத்தின் பின்னணியில் இவ்வளவு விடயங்கள் இருக்கின்றன. அதுதான், அதனை உடனடியாக முன்னிறுத்துவதில், குறிப்பாக அடுத்த பொதுத் தேர்தலை அப்படி நடத்துவதை ஐக்கிய தேசியக் கட்சி விரும்பவில்லை. ஆனால், தேர்தல் முறை மாற்றமே தம்மைத் தக்க வைக்க உதவும் என்று சுதாகரித்துக் கொண்ட ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி அதனைப் பிடித்துக் கொண்டுள்ளது. 19ஆவது திருத்தச் சட்டத்தை நிறைவேற்றுவதற்கு முன்னால், தேர்தல் முறை மாற்றம் எனும் தடையை ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி ஏற்படுத்தியிருக்கின்றது. இந்த அல்லோலகல்லோல நிலைமை தொடர்ந்து வரும் நிலையில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வெளிப்படையான கருத்துக்கள் எதனையும் வெளியிடாமல் அமைதி காக்கின்றார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அமைதி காத்தலுக்குப் பின்னாலுள்ள விடயங்களை அவ்வளவுக்கு புரிந்து கொள்ள முடியவில்லை. ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக அவர் பதவியேற்றுக் கொண்டாலும், அவருக்கான ஆதரவு என்பது சிரேஷ்ட தலைவர்கள் மத்தியிலோ, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆதரவாளர்களின் மத்தியிலோ இல்லை. வேண்டா வெறுப்பாக கட்சியின் யாப்பின் பிரகாரம் தலைவராக ஏற்றுக் கொண்டிருக்கின்றார்கள். இந்த நிலையின் நீட்சியை அவர் விரும்பவில்லை என்கிற போதிலும், அவர்களின் வழியிலேயே சென்று கட்சியை முழுமையான கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர வேண்டும் என்பதில் குறியாக இருப்பதாகவோ கொள்ளவும் முடியும்.  

இன்னொரு பக்கம் ஜனாதிபதியின் அதிகாரங்கள் குறைக்கப்பட்டு, ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கம் ஆட்சியமைத்தால் தன்னுடைய கட்டுப்பாடுகளை மீறிய ஆட்சியொன்று நடைபெறும் சூழல் உருவாகும். அதனைத் தக்க வைப்பதற்காக தேர்தல் முறை மாற்றத்தினூடு பொதுத் தேர்தலை நடத்தி, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை நாடாளுமன்றத்துக்குள் பலமாக வைத்திருப்பதன் மூலம் தேசிய அரசாங்கத்தை மீண்டும் உருவாக்கலாம் என்றும் அதுவே தன்னுடைய அடுத்த கட்ட அரசியல் நகர்வுக்கு அதிக பங்காற்றும் என்றும் மைத்திரிபால சிறிசேன கருதுகின்றார். அதன்போக்கிலேயே 100 நாட்கள் வேலைத்திட்டத்தை முழுமையாக நிறைவேற்றிய பின்னர் பொதுத் தேர்தலுக்கு செல்லலாம் என்கிற நிலையை, அவர் எடுத்திருப்பதற்கு அல்லது அதனை தன் சார்பானவர்களினூடு (குறிப்பாக, ராஜித சேனாரத்ன) தொடர்ச்சியாக முன்மொழிந்து கொண்டிருப்பதற்கு காரணமாகும் என்றும் கொள்ள முடியும்.
 
பிராந்திய நாடுகளுடனான உறவை சீரமைக்கும் பயணங்கள் என்கிற பெயரில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, வெளிநாட்டுப் பயணங்களை தொடர்ச்சியாக மேற்கொண்டாலும் அந்தப் பயணங்களினூடு உள்நாட்டு அரசியலில் ஏற்பட்டிருக்கின்ற இழுபறிகளுக்குள் தான் இல்லை என்பதை மக்களுக்கு வெளிப்படுத்த வேண்டும் என்று கருதுகின்றாரோ என்று தெரியவில்லை. ஏனெனில், அரசாங்கத்தின் மீதான மக்கள் அதிருப்தியை அவர் நன்றாகவே உணர்ந்து கொண்டுவிட்டார். அதனைத்தான் அவர் அண்மையில் வெளியிட்டிருக்கின்றார்.  

அதுபோக, வரும் பொதுத்தேர்தல் தன்னுடைய நேரடிக் களமில்லை என்பதை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உணர்ந்து கொண்டிருக்கின்றார். என்ன இருந்தாலும், ஊழல் மோசடிகளினால் மக்களின் அதிருப்தியைப் பெற்ற முன்னாள் அரசாங்கத்தின் ஒட்டுமொத்த கூறும், தன் பின்னால் சேர்வதை அவர் விரும்பவில்லை. அதுதான்,
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியிலுள்ள மஹிந்த அபிமானிகளை எப்படியாவது வெளியேற்ற வேண்டும் என்று கருதுகின்றார். ஊழல் மோசடிகாரர்களை விசாரணைகளினூடு வெளியேற்ற வேண்டும் என்பதில் அவர் கவனமாக இருந்தாலும், அதற்காக எடுக்கும் காலம் என்பது நீண்டுகொண்டேயிருப்பது தொடர்பில் அவர் எரிச்சலடைந்திருக்கின்றார்.

மறுபுறத்தில், பிரதமர் ரணில் விக்;கிரமசிங்க, ஊழல் மோசடிகள் தொடர்பிலான விசாரணைகளின் மென்நகர்வினை ஐக்கிய தேசியக் கட்சியின் வெற்றிக்காக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதில் குறியாக இருக்கின்றார். அதுதான் மீண்டும் மக்களிடம் ஊழல் மோசடிக்காரர்கள் என்கிற தோரணையில், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி மீது விமர்சனங்களை வைத்து வாக்குகளைக் கோர முடியும்.  ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியிலுள்ள ஊழல் மோசடிக்காரர்களை அகற்றிவிட்டால் அது, ஐக்கிய தேசியக் கட்சியின் வெற்றியை பாதிக்கும் என்று அவர் கருதுகின்றார். இன்னொரு பக்கம், மஹிந்த ராஜபக்ஷக்கு ஆதரவான கூட்டங்களை ரணில் விக்கிரமசிங்க ரசிப்பதற்கும் அதுதான் காரணம்.

ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளில் 70 சதவீதமானவை இன்னமும் மீதமிருக்கின்றன. ஆனால், அந்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதை இரண்டாம் விடயமாக்கிவிட்டு, தன்னுடைய இருத்தலை தீர்மானிக்கும் 19ஆவது திருத்தச் சட்டத்தின் நிறைவேற்றத்தையும், பொதுத் தேர்தலையுமே பிரதான விடயங்களாக ஐக்கிய தேசியக் கட்சி முன்னிறுத்துகின்றது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவே இவ்வளவு குழப்பங்களையும் எவ்வாறு கையாள்வது என்று தெரியாமல், தன்னுடைய கடிவாளத்தின் கட்டுப்பாட்டை இழந்து கொண்டிருக்கின்றார். அது, நாட்டுக்கும், மக்களுக்கும் நல்லதல்ல.  

இலங்கை அரசியல் வரலாற்றில் நிறைவேற்று ஜனாதிபதியாக பதவியிலிருந்த ஒருவரை தோற்கடித்து அதே பதவியை கைப்பற்றியவர் என்கிற பெருமை மைத்திரிபால சிறிசேனவுக்கு உண்டு. அந்தப் பெருமை என்பது அவரினாலோ, அவர் சார்ப்புக் கட்சிகளினாலோ மட்டும் சாத்தியமானதல்ல. மக்களின் அபிமானம் மற்றும் அர்ப்பணிப்புக்களினாலும் ஆனது. அவ்வாறான நிலையில், மக்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றுவது தொடர்பில் மைத்திரிபால சிறிசேன துணிச்சலான முடிவுகளை எடுக்க வேண்டும். அதுதான், அவரை வரலாறு பூராவும் தக்க வைக்க உதவும்!


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .