2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

மஹிந்த மீண்டும் வருவாரா?

Kanagaraj   / 2015 ஏப்ரல் 12 , பி.ப. 09:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம். ஐயூப்

அரசியலமைப்பில் 19ஆவது திருத்தம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தேவைக்காக முன்வைக்கப்படுகிறதா அல்லது பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் தேவைக்காக முன்வைக்கப்படுகிறதா என்று கேட்குமளவுக்கு சம்பவங்கள் இடம்பெற்று வருகின்றன.
நிறைவேற்று ஜனாதிபதி முறையை இரத்துச் செய்வது என்பது ஜனாதிபதியின் தேர்தல் வாக்குறுதிகளில் முதன்மையானதாகும். அந்த வாக்குறுதியை முன்வைத்து அவர் தேர்தலில் போட்டியிட்ட போது அவரை ஆதரித்த கட்சிகளில் பிரதான கட்சி விக்கிரமசிங்கவின் ஐக்கிய தேசிய கட்சியே. அந்த வகையில் பார்க்கும் போது இந்த திருத்தம் இருவரது தேவைக்காகவும் முன்வைக்கப்படுகிறது என்று கூறலாம்.

ஆனால், இந்த திருத்தம் தொடர்பான சகல விமர்சனங்களும் பிரதமர் விக்கிரமசிங்கவுக்கு எதிராகவே முன்வைக்கப்படுகின்றன. நிறைவேற்று ஜனாதிபதி முறையை இரத்துச் செய்ய வந்த மைத்திரிபாலவின் தேர்தல் பிரசார நடவடிக்கைகளின் போது முக்கிய பங்கை ஆற்றிய ஜாதிக ஹெல உறுமயவும் இந்தத் திருத்தத்தின் மூலம் ஜனாதிபதியின் அதிகாரங்கள் அளவுக்கு அதிகமாக குறைக்கப்படுகின்றன என விக்கிரமசிங்கவையே சாடுகிறது.

ஹெல உறுமய அது தொடர்பாக ஜனாதிபதியை விமர்சிக்கவில்லை. அதேவேளை,  ஜனாதிபதி தலைமை தாங்கும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் ஏனைய தலைவர்கள் 19ஆவது அரசியலமைப்புத் திருத்தத்திற்கு தாம் அதரவளிக்க வேண்டும் என்றால் தேர்தல் முறையை மாற்றுவதற்கான திருத்தங்களையும் கொண்டு வர வேண்டும் என நிபந்தனை விதித்திருக்கிறது.

இந்த நிபந்தனை யாருடையது? ஸ்ரீ.ல.சு.க.வின் தலைவரான ஜனாதிபதி உட்பட முழுக் கட்சியின் நிபந்தனையா? அல்லது ஜனாதிபதி இந்த நிபந்தனையை ஆதரிக்க வில்லையா? இது ஒன்றும் தெளிவில்லை. இந்த திருத்தம் ஜனாதிபதியின் தேவைக்காக முன்வைக்க்படுகிறதா அல்லது பிரதமரின் தேவைக்காக முன்வைக்கப்படுகிறதா என்று ஆரம்பத்திலேயே அதனால் தான் கேள்வி எழுப்பினோம்.

ஜனாதிபதிக்கு மட்டுமே இந்தப் பிரச்சினையை தீர்க்க முடியும். அதாவது அவர் ஸ்ரீ.ல.சு.க தலைவர்கள் முன்வைக்கும் நிபந்தனையைப் பற்றிய தமது நிலைப்பாட்டை வெளிப்படுத்த வேண்டும். அவ்வாறு அவர் செய்யாததனால் தான் இந்த நிபந்தனையின் பின்னாலும் ஹெல உறுமயவின் பொதுச் செயலாளர் அமைச்சர் சம்பிக்க ரணவக்கவின் எதிர்ப்புக்கு பின்னாலும் ஜனாதிகதியே செயற்படுகிறார் என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுர குமார திஸாநாயக்க கூறுகிறார்.

சில வேளைகளில் பிரதமர், ஜனாதிபதியை புறக்கணித்து செயற்படுகிறார் என்றும் மற்றும் சில வேளைகளில் ஸ்ரீ.ல.சு.க., ஜனாதிபதியை புறக்கணித்து செயற்படுகிறது என்றும் சந்தேகங்கள் எழுகின்றன. ஜனாதிபதி முறைமையிலும் தேர்தல் முறையிலும் மாற்றங்களைக் கொண்டுவருவதாக ஜனாதிபதி நாட்டுக்கு வாக்குறுதியளித்துள்ள நிலையில் ஜனாதிபதி முறையில் மட்டும் மாற்றங்களைக் கொண்டுவர பிரதமர், 19ஆவது திருத்தத்தின் மூலம் ஏன் நடவடிக்கை எடுத்தார்.? தமது கட்சி நிபந்தனைகளை விதிக்கும் போது ஜனாதிபதி மௌனமாக இருப்பதன் அர்த்தம் அதுவா?

இல்லாவிட்டால் ஜனாதிபதியின் இணக்கத்துடன் பிரதமர் இந்த திருத்தத்தை முன்வைத்த போதிலும் ஜனாதிபதிக்கு இப்போது தமது கட்சியை கட்டுப்படுத்திக் கொள்ள முடியாததினால் அக் கட்சி நிபந்தனைகளை விதித்துக் கொண்டு இடைஞ்சல்களை உருவாக்குகிறதா?

மக்கள் மத்தியில் எழும் இவ்வாறான சந்தேகங்களை ஜனாதிபதியினால் மட்டுமே நீக்க முடியும். அவர், ஸ்ரீ.ல.சு.க.வின் நிபந்தனைகளைப் பற்றிய தமது நிலைப்பாட்டை வெளியிட வேண்டும். அல்லது அவர், அந் நிபந்தனையை விரும்பாவிட்டால் ஸ்ரீ.ல.சு.க மத்திய குழுவைக் கூட்டி கட்சிக்கு தமது நிலைப்பாட்டை உணர்த்த வேண்டும்.

இருந்த போதிலும் ஸ்ரீ.ல.சு.க.வின் நிபந்தனை நியாயமற்றதல்ல. தற்போதைய விகிதாசார தேர்தல் முறையில் பல சிக்கல்கள் உள்ளன. சிறு கட்சிகள் மற்றும் சிறுபான்மை கட்சிகள் இதனால் பயனடைந்த போதிலும் விருப்பு வாக்கு முறை போன்ற மோசமான அம்சங்கள் இதில் உள்ளன. பணம் படைத்தவர்கள் மட்டுமே இம் முறையில் வெற்றி பெறலாம். எனவே, இம் முறையில் மாற்றங்கள் கொண்டு வரத் தான் வேண்டும். அதனை நிறைவேற்று ஜனாதிபதி முறையோடே மாற்றுவது தான் நல்லது.

ஆனால், சர்வாதிகார நிறைவேற்று ஜனாதிபதி முறையில் மட்டுமாவது மாற்றங்கள் கொண்டுவருவது பயனுள்ளதாகும். அதற்கு நிபந்தனைகளை விதித்துக் கொண்டு தடைகளை போடுவது நியாயமில்லை.

தேர்தல் முறையில் மாற்றம் கொண்டுவருவது முக்கியமல்ல என்று ஐ.தே.க. கூற முடியாது. ஏனெனில்,  அது ஜனாதிபதியின் தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்று என்பது மட்டுமல்லாமல் ஐ.தே.க.வும் அந்த வாக்குறுதியையும் முன்வைத்தே ஜனாதிபதிக்காக மக்களிடம் வாக்குகளை கேட்டது. ஆனால், இப்போது ஐ.தே.க. அந்த விடயத்தில் அவ்வளவு அக்கறை காட்டுவதாக தெரியவில்லை.

விகிதாசார மற்றும் தொகுதிவாரி தேர்தல் முறைகளின் கலப்பு முறையொன்றே தற்போது உத்தேசிக்கப்படுள்ளது. அதன் பிரகாரம் புதிதாக தேர்தல் தொகுதிகளை உருவாக்குவற்கான தொகுதி எல்லை நிர்ணயிப்பதற்கு நீண்ட காலம் தேவைப்படும் என்றும் அரசாங்கத்தின் நூறு நாட்கள் வேலைத் திட்டத்தின் படி ஏப்ரல் மாதத்திலோ அல்லது மே மாதத்திலோ நாடாளுமன்றத்தை கலைத்து பொதுத் தேர்தலை நடத்துவதற்குள் அதனை பூர்த்தி செய்ய முடியாது என்றும் எனவே, தேர்தல் முறையின் மாற்றம் இப்போதைக்கு தேவையில்லை என்றும் வாதிடப்படுகிறது.

ஆனால், அவசியமானால் இம் முறை பொதுத் தேர்தலை மட்டும் தற்போதைய முறைப்படி நடத்தும் வகையில் ஏற்பாடுகளை உள்ளடக்கி தேர்தல் முறையில் மாற்றங்களை கொண்டு வர முடியும்.

எனினும், அவ்வாறானதோர் இணக்கப்பாட்டுக்குப் பதிலாக சவால்களும் மிரட்டல்களுமே கேட்கின்றன. தேர்தல் முறையில் மாற்றம் இல்லாவிட்டால் 19ஆவது திருத்தத்துக்கு ஆதரவளிக்க மாட்டோம் என ஜனாதிபதி தவிர்ந்த ஏனைய ஸ்ரீ.ல.சு.க தலைவர்கள் மிரட்டுகிறார்கள். 19ஆவது திருத்தம் தோல்வியடைந்தால் உடனடியாகவே நாடாளுமன்றம் கலைக்கப்படும் என ஐ.தே.க. மிரட்டுகிறது.

ஸ்ரீ.ல.சு.க தலைவர்கள் நாடாளுமன்றத்தை கலைப்பதென்ற மிரட்டலுக்கு அஞ்சுகிறார்கள் போலும். எனவே, அவர்கள் இந்த மிரட்டலை சவாலாக ஏற்கத் தயாராக இல்லை. அவர்கள் அது விடயமாக மௌனமாக இருக்கிறார்கள். எப்படியோ இந்த மாதம் அல்லது அடுத்த மாதம் நாடாளுமன்றம் கலைக்கப்படப் போகிறது. அவ்வாறாயின் அரசாங்கம் நாடாளுமன்றத்தை கலைப்போம் என்று மிரட்டும் போது ஸ்ரீ.ல.சு.க அஞ்சத் தேவையில்லை. ஆனால், அவர்கள் அந்தச் சவாலை ஏற்கத் தயாராக இல்லை.

19 ஆவது திருத்தம் ஜனாதிபதியின் வாக்குறுதிக்கேற்ப முன்வைக்கப்படுமாயின் ஸ்ரீ.ல.சு.க நிபந்தனைகளை விதித்துக் கொண்டு அதனை தடுக்க முற்படுவது மடமை என்றே கூற வேண்டும். ஸ்ரீ.ல.சு.க இத் திருத்தத்தை தோற்கடித்தால் அது அக் கட்சி ஜனாதிபதி மைத்திரிபல சிறிசேனவுக்கு செய்யும் இரண்டாவது துரோகமாகும். ஜனாதிபதித் தேர்தலின் போது ஜனாதிபதியை அவமதித்து அவரை தோற்கடிக்க முற்பட்டமை முதலாவது துரோகமாகும்.

எனவே, 19 ஆவது திருத்தம் தோல்வியடைந்தால் மஹிந்த ராஜபக்ஷ போன்றதோர் நிறைவேற்று ஜனாதிபதி தொடர்ந்தும் இருப்பார். தாம் இரண்டு முறை துரோகமிழைத்த இந்த ஜனாதிபதியுடனேயே ஸ்ரீ.ல.சு.க தலைவர்கள் அதன் பின்னர் செயற்பட வேண்டியிருக்கும். தேர்தலின் போது எதனைக் கூறினாலும் மைத்திரிபாலவும் மஹிந்தவைப் போல் நிறைவேற்று அதிகாரங்களை பாவிக்க மாட்டார் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. அரசியல்வாதிகள் என்றால் அரசியல்வாதிகளே தான். தேர்தல் வாக்குறுதிகள் என்பன நிறைவேற்றவே வேண்டியவை அல்ல என்பதை ஸ்ரீ.ல.சு.க தமது வரலாற்றைப் புரட்டிப் பார்த்தாலேயே விளங்கிக் கொள்ள முடியும்.

அதேவேளை, சிறுபான்மை மக்களும் சற்று அச்சம் கொள்ளக்க கூடிய ஒரு நிலைமையும் உருவாகி வருகிறது. ஸ்ரீ.ல.சு.க.வுக்குள் மஹிந்த ராஜபக்ஷவின் செல்வாக்கு மீண்டும் வேகமாக வளர்ந்து வருவதே அந்த அபாயமாகும்.

கடந்த வாரம் 40,000 கோடி ரூபா பெறுமதியான திறைசேரி உண்டியல்களுக்கான அரசாங்கத்தின் பிரேரணை நாடாளுமன்றத்தில் தோல்வியடைந்தமையும் மஹிந்தவை மீண்டும் அரசியலுக்கு கொண்டுவர முயற்சிக்கும் தினேஷ் குணவர்தனவை எதிர்க் கட்சித் தலைவராக்க வேண்டும் என்று ஸ்ரீ.ல.சு.க உறுப்பினர்கள் உட்பட 60 நாடாளுமன்ற உறுப்பினர்கள் சபாநாயகரிடம் சத்தியக் கடதாசிகளை கையளித்தமையும் இந்த அபாயத்தையே காட்டுகிறது.

மஹிந்தவின் இந்தச் செல்வாக்கு எதிர்க் காலத்தில் அதிகரிக்கலாம். கடந்த ஜனவரி மாதம் வரை ஸ்ரீ.ல.சு.க கட்சிக்காரர்கள் விசுவாசத்தின் காரணமாகவோ அல்லது பயத்தின் காரணமாகவோ மஹிந்தவை ஏறத்தாழ வணங்கிக் கொண்டே இருந்தார்கள். மஹிந்த ஜனாதிபதித் தேர்தலில் தோல்வியடைந்ததனால் அந்த 'பக்தி' சுதந்திரக் கட்சி காரர்;களின் மனதிலிருந்து முற்றாக அகன்றுவிட்டது என்று முடிவெடுக்கத் தேவையில்லை.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு சுதந்திரக் கட்சி காரர்;கள்  எவரும் மஹிந்தவுக்குப் பயந்ததைப் போல் பயப்படுவதில்லை. அவர்கள், ஐ.தே.க ஆட்சியின் கீழ் இருக்க விரும்புவதுமில்லை. விரைவில் பொதுத் தேர்தல் நடைபெறவிருப்பதால் அவர்களிடையே புதிய எதிர்ப்பார்ப்புக்களும் உருவாகியிருக்கலாம். அந்தக் காரணங்களினால் அந்த 'மஹிந்த பக்தி' மேலோங்கி வருகிறது போலும்.
புதிய அரசாங்கம் பதவிக்கு வந்தவுடன் ஊழல் குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக விரைவாக செயற்பட்டு சுதந்திரக்கட்சியின்  ஓரிரு தலைவராவது கைது செய்யப்பட்டு இருந்தால் புதிய ஜனாதிபதி விடயத்திலும் சுதந்திரக் கட்சி காரர்;களின் மனதில் அச்சம் உருவாகியிருக்கும். அவ்வாறாயின் மஹிந்தவின் செல்வாக்கு இவ்வாறு வளர்ந்திருக்காது.

ஆனால், ஸ்ரீ.ல.சு.க முழுமையாக இனி மஹிந்தவின் செல்வாக்குக்குற்படாது. ராஜபக்ஷ ஆட்சியின் கீழ் தாம் எதிர்பார்த்த சிறப்புரிமைகளை பெறாதவர்கள், அதிகாரம் தற்போது எங்கேயோ அங்கேயே ஒட்டிக் கொண்டிருப்போர் மற்றும் ராஜபக்ஷ இனி வர மாட்டார் என்று நினைப்போர் மைத்திரிபாலவுடனேயே இருப்பார்கள்.

ராஜபக்ஷவின் கை ஓங்குவதை முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவும் ஜனாதிபதி மைத்திரிபாலவும் விரும்ப மாட்டார்கள் அவர்கள், அதனை விட ஐ.தே.க. பதவிக்கு வருவதையே விரும்புவார்கள். விரைவில் தேர்தல் நடைபெற்றால் மஹிந்தவுக்கு ஸ்ரீ.ல.சு.க.வுக்குள் பெரிதாக இடம் பிடித்துக் கொள்ள முடியாமல் போய்விடும். சிலவேளை அவருக்கு ஸ்ரீ.ல.சு.க.வின் கீழ் போட்டியிடவும் வாய்ப்பு கிடைக்காமல் போகலாம். அவ்வாறாயின் அவர், தேசிய சுதந்திர முன்னணி போன்ற அவரை ஆதரிக்கும் கட்சியொன்றின் கீழேயே போட்டியிட வேண்டியிருக்கும்.

அவருக்கு நாட்டில் சிங்கள மக்கள் மத்தியில் பெரும் ஆதரவு இருக்கிறது. எனவே, அவர் மற்றொரு கட்சியின் கீழ் போட்டியிட்டால் ஸ்ரீ.ல.சு.க வாக்குகள் இரண்டாகப் பிரிந்துவிடும். இது ஐ.தே.க.வுக்கு சாதகமாகவே அமையும்.  ஸ்ரீ.ல.சு.க பிளவுபடாமல் போட்டியிட்டால் அது ஐ.தே.கவுக்கு பெரும் சவாலாகவே அமையும். எனவே, மஹிந்தவின் களமிறங்கல் ஐ.தே.கவுக்கே சாதகமாகும்.
தற்போதைய நிலையில் மஹிந்த அரசியலில் இருந்து ஒதுங்கி நிற்க முடியாது. தமக்கும் தமது குடும்பத்தினருக்கும் எதிராக ஊழல் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படும் நிலையில் தம்மிடமும் சற்றேனும் அரசியல் அதிகாரம் இருப்பதே பாதுகாப்பானதாகும் என்று அவர் நினைக்கிறார் போலும். 'தாக்குதலே சிறந்த பாதுகாப்பாகும்' என்ற சித்தாந்தத்தை அவர் அறியாமல் இருக்க முடியாது. ஆனால், அது ஸ்ரீ.ல.சு.க.வை பிளவுபடுத்தும். ஆனால், ஜனாதிபதி மைத்திரிபாலவை அவரது பதவிக் காலம் முடியும் வரை அசைக்கவும் முடியாது. மஹிந்தவின் முயற்சி மைத்திரிபாலவை பலப்படுத்தி ஸ்ரீ.ல.சு.க.வை பலவீனப்படுத்தலாம்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .