2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

இருபது தமிழர்கள் சுட்டுக் கொலை; இரு மாநில உறவுக்கு சோதனையா?

A.P.Mathan   / 2015 ஏப்ரல் 15 , மு.ப. 03:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழகத்தைச் சேர்ந்த 20 பேர் ஆந்திர மாநில பொலிஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்கள். செம்மரக் கடத்தலில் ஈடுபட்டார்கள் என்று குற்றம் சாட்டி நடத்தப்பட்டிருக்கும் இந்த என்கவுன்டர் இரு மாநில உறவுகளில் பெரும் பிரளயத்தை ஏற்படுத்தியிருக்கிறது. ஆந்திராவும், தமிழகமும் ஒட்டிப் பிறந்த இரட்டைக் குழந்தைகள் போல் ஒன்று பட்ட சென்னை மாகாணத்தில் இருந்தது. அதன்பிறகு மொழி வாரி மாநிலங்கள் பிரிவினையின் போது தமிழகப் பகுதிகள் ஆந்திர மாநில எல்லையாக மாறி விட்டாலும், இரு மாநில மக்களும் நல்லுறவுடன் வாழ்ந்து வருகிறார்கள். 

அந்த உறவிற்கு வேட்டு வைப்பது போல் இந்த காவல்துறை என்கவுன்டர் அரங்கேறி விட்டது. ஆந்திர மாநிலம் திருப்பதில் வனப்பகுதியில் உள்ள சேஷசாசலம் காட்டில் காஸ்ட்லி செம்மரங்கள் இருக்கின்றன. அந்த செம்மரக்கட்டைகளை வெட்டுவதற்கு திருவண்ணாமலை, வேலூர், கிருஷ்ணகிரி மாவட்டங்களில் இருந்து கூலித் தொழிலாளர்களை அழைத்துச் சென்று “சந்தனமரக் கடத்தல்” முதலைகள் பலிகடா ஆக்கி விடுகிறார்கள் என்ற குற்றச்சாட்டு கிளம்பியிருக்கிறது. இது போன்று கூலித் தொழிலாளர்கள் மரம் வெட்ட ஆந்திராவிற்கு வருவதை தடுத்து நிறுத்த வேண்டும் என்று ஆந்திர காவல்துறைக்கும், தமிழக காவல்துறைக்கும் கடிதப் போக்குவரத்துகள் நடைபெற்றதாக இப்போது ஆந்திர மாநில வழக்கறிஞர் ஒருவர் தேசிய மனித உரிமை ஆணையத்தில் வழக்குப் போட்டிருக்கிறார். அவருடையை அபிடவிட்டின் படி “இதுவரை 12300 வழக்குகள் போடப்பட்டுள்ளன. 3460 பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள். ஏறக்குறைய 836 மெட்ரிக் டன் செம்மரக் கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன” என்று மனித உரிமை ஆணையத்தின் முன்பு கூறியிருக்கிறார்.

20 பேர் என்கவுன்டர் வழக்கில் முதலில் தமிழகத்தின் சார்பில் பல கட்சிகள் குரல் எழுப்பினாலும், முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவிற்கு கடிதம் எழுதினாலும், ஆந்திர மாநில அரசின் சார்பில் இவ்வளவு மோசமான என்கவுன்டருக்கு, அதுவும் குறிப்பாக 20 தமிழக கூலித் தொழிலாளிகளைக் கொன்றதற்கு எந்த விதமான வருத்தமும் தெரிவிக்கவில்லை. ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு கூட முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வத்திற்கு கடிதம் எழுதினார். அதில் கூட “உங்கள் கவலைகளை நானும் பகிர்ந்து கொள்ளுகிறேன்” என்று ஒரு வார்த்தை கூட குறிப்பிடவில்லை. இந்த நிலையில் தமிழகத்தில் உள்ள மற்ற கட்சிகள் இப்பிரச்சினையை பெரிய அளவில் போராட்டக் களத்திற்கு கொண்டு சென்றன. தி.மு.க. சார்பில் “பதவியிருக்கும் உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில் என்கவுன்டர் பற்றி விசாரணை நடத்த வேண்டும்” என்று கோரிக்கை வைக்கப்பட்டது. பா.ம.க. சார்பில் “சி.பி.ஐ. விசாரணை கோரப்பட்டது”. தே.மு.தி.க. சார்பில் துப்பாக்கிச் சூட்டில் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 50,000 ரூபாய் வழங்கப்பட்டது. அதன்பிறகு அ.தி.மு.க. தரப்பிலிருந்து ஒவ்வொரு குடும்பத்திற்கும் தலா 2 லட்சம் ரூபாய் கொடுக்கப்பட்டது. இறுதியில் தி.மு.க. சார்பில் தலா ஒரு லட்சம் ரூபாய் வழங்கப்பட்டது. இப்படி அரசியல் கட்சிகள் நிதியளித்தாலும், என்கவுன்டர் பற்றி சி.பி.ஐ. விசாரணையோ அல்லது உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணையோ தேவை என்பதை தொடர்ந்து கோரிக்கையாக வைத்து வருகிறார்கள்.

இதற்காக தமிழகத்தில் ஆங்காங்கே போராட்டங்கள் நடக்கின்றன. வருகிற 28ம் தேதி தமிழர் வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ ஆகியோர் தலைமையில் “தமிழர் நீதி பேரணி” கவர்னர் மாளிகைக்குப் போகிறது. அங்கே “சிபிஐ விசாரணை வேண்டும்” என்ற கோரிக்கை மனுவை கொடுக்கப் போகிறார்கள். இதற்கிடையில் ஆந்திர மாநில உயர்நீதிமன்றம் இந்த என்கவுன்டர் பற்றி தொடரப்பட்ட வழக்கில் “என்கவுன்டர் நடத்திய காவல்துறையினர் மீது கொலை வழக்கு பதிவு செய்யாதது ஏன்” என்று கேள்வி எழுப்பியிருக்கிறது. அது மட்டுமின்றி “ இது இரு மாநில பிரச்சினை. அதில் ஆந்திர காவல்துறை டி.ஜி.பி. கொடுக்கும் அறிக்கையை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்” என்றும் கேட்டுள்ளது. உச்சநீதிமன்றத்திலும் இந்த என்கவுன்டர் பற்றி விசாரணை கோரி வழக்குப் போட்டிருக்கிறார் தமிழக வழக்கறிஞர் கிருஷ்ணமூர்த்தி. எல்லாவற்றிற்கும் மேலாக தேசிய மனித உரிமைகள் ஆணையம் தாமாகவே முன்வந்து ஆந்திர மாநில அரசிடமிருந்து அறிக்கை கேட்டிருக்கிறது. மத்திய உள்துறை அமைச்சரும் அறிக்கை கேட்டார்.

ஒரு மாநிலத்தில் நடைபெற்ற என்கவுன்டர் இப்போது இரு மாநில பிரச்சினையாகி, மத்திய அரசும் தலையிடும் அளவிற்கு வந்து, உச்சநீதிமன்றம் மற்றும் தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் முன்பு சென்று நிற்கிறது.
போதாக்குறைக்கு மனித உரிமை அமைப்புகளும் களத்தில் இறங்கியுள்ளன. ஆந்திரம் மற்றும் தமிழகத்தில் உள்ள பல்வேறு மனித உரிமைகள் அமைப்புகள் இது பற்றி ஆந்திர உயர்நீதிமன்றத்திலும், உச்சநீதிமன்றத்திலும் வழக்குத் தொடர்ந்துள்ளன. ஆந்திர வனப்பகுதியில் என்கவுன்டர் செய்யப்பட்ட இடத்தை பார்வையிட்ட மனித உரிமை அமைப்புகள் மீது ஆந்திர மாநில அரசு வழக்குப் போட்டிருக்கிறது.

இதுவரை நதி நீர் பிரச்சினை இரு மாநிலங்களின் உறவில் தமிழகத்திற்கு தலைவலி கொடுத்தது. காவிரிப் பிரச்சினையில் கர்நாடகத்துடன் தலைவலி. முல்லைப் பெரியாறு பிரச்சினையில் கேரளாவுடன் திருகுவலி. இப்போது என்கவுன்டர் பிரச்சினையால் ஆந்திர மாநிலத்துடன் தலைவலி ஏற்பட்டிருக்கிறது. ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் உருவப் பொம்மைகள் தமிழகத்தில் ஆங்காங்கே தீயிட்டு கொளுத்தப்படுகின்றன. அதை விட அவருக்கு நெருங்கிய தொடர்புடையது என்று கருதப்படும் பால் விற்பனை நிறுவனம் ஒன்றின் அலுவலகங்கள் மீதும் தமிழகத்தில் தாக்குதல் நடத்தப்படுகிறது. இதனால் ஆந்திர வழக்கறிஞர் ஒருவரே தேசிய மனித உரிமை ஆணையத்தில் ஆந்திர மாநிலத்தவரின் சொத்துக்கள் மீது தாக்குதல் நடத்துவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ மீது வழக்குப் போட வேண்டும் என்றும் உத்தரவு கேட்கிறார்.

மனித உரிமை மீறல் என்பது பல வடிவில் வந்தாலும், போலீஸ் என்கவுன்டர் நடக்கும் போதெல்லாம் இது போன்ற மனித உரிமை மீறல் குரல்கள் எங்கும் கேட்கிறது. அதற்கு தமிழகமும் விதிவிலக்கல்ல. அதனால்தான் கடந்த 2014 செப்டம்பர் 23ம் தேதி இந்திய உச்சநீதிமன்றம் என்கவுன்டர் நடந்தால் மேற்கொள்ள வேண்டிய விசாரணை நடைமுறைகள் பற்றி சில வழிகாட்டுதல்களை வழங்கியது. அப்போது உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த ஆர்.எம்.லோதா அவர்கள் தலைமையிலான பெஞ்ச் வழங்கிய 16 வழிகாட்டுதலில் முக்கியமான சில விஷயங்கள் உள்ளன. முதலாவது என்கவுன்டர் எந்த போலீஸ் ஸ்டேஷன் லிமிட்டில் நடைபெற்றதோ அங்கு வழக்குப் பதிவு செய்யாமல் வேறு ஒரு போலீஸ் ஸ்டேஷனில் அந்த என்கவுன்டர் குறித்து வழக்குப் பதிவு செய்ய வேண்டும். அப்படி பதிவு செய்யப்பட்ட வழக்கினை யார் விசாரிப்பது? அதற்கும் உச்சநீதிமன்றமே வழிகாட்டியிருக்கிறது. என்கவுன்டர் செய்த போலீஸ் அதிகாரிகளுக்கு கேப்டனாக இருந்த அதிகாரியை விட சீனியர் போலீஸ் அதிகாரி அந்த என்கவுன்டர் எப்.ஐ.ஆரை விசாரிக்க வேண்டும். அடுத்ததாக,என்கவுன்டரில் இறந்தவர்களின் உடலை போஸ்ட் மார்ட்டம் செய்வதை வீடியோ கிராப் செய்ய வேண்டும். மூன்றாவதாக மாஜிஸ்திரேட் விசாரணைக்கு உடனே உத்தரவிட வேண்டும். நான்காவதாக என்கவுன்டர் குறித்த தகவலை உடனடியாக தேசிய மனித உரிமை ஆணையத்திற்கோ அல்லது மாநில மனித உரிமை ஆணையத்திற்கோ காலதாமதம் இன்றி அனுப்ப வேண்டும். ஆனால் இதையெல்லாம் ஆந்திர மாநில அரசு தமிழர்கள் என்கவுன்டர் விஷயத்தில் கடைப்பிடித்தாக வெளிப்படையான தகவல்கள் இதுவரை வரவில்லை.

20 தமிழர்கள் என்கவுன்டர் தமிழகத்தை உலுக்கிப் போட்டிருக்கிறது. இனி வரும் காலங்களில் இது விஷயத்தில் உச்சநீதிமன்றம், தேசிய மனித உரிமை ஆணையம், ஆந்திர உயர்நீதிமன்றம் போன்றவை சொல்லப் போகும் முடிவுகள் ஆந்திர- தமிழக மாநிலங்களுக்கு இடையிலான நல்லுறவை பலவீனப்படுத்துமா அல்லது பலப்படுத்துமா என்பது தெரிந்து விடும். ஆகவே இதை வெறும் என்கவுன்டர் பிரச்சினை என்ற ரீதியிலோ, ஒரு மனித உரிமை மீறல் பிரச்சினை என்ற நோக்கிலோ பார்க்காமல் இரு மாநில உறவுகள் சம்பந்தப்பட்டது என்ற கோணத்தில் இரு மாநில அரசுகளும்- ஏன் மத்திய அரசும் கூட உன்னிப்பாக கவனிக்க வேண்டிய விஷயம் இது என்பதே அரசியல் பார்வையாளர்களின் எண்ணமாக இருக்கிறது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .