Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை
Suganthini Ratnam / 2015 ஏப்ரல் 17 , மு.ப. 08:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
-கே.சஞ்சயன்
இலங்கையில் போரின்போது இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்கள் தொடர்பான குற்றச்சாட்டுகள் தொடர்பாக உள்நாட்டு விசாரணை ஒன்றை மேற்கொள்வோம் என்ற அரசாங்கத்தின் வாக்குறுதி கொஞ்சம் கொஞ்சமாக வலுவிழக்கத் தொடங்கியுள்ளது.
உள்நாட்டு விசாரணைகளின் மூலம், இடம்பெற்றதாகக் கூறப்படும் போர்க்கால மீறல்களுக்கு பொறுப்புக் கூற நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னரே, மைத்திரிபால சிறிசேன - ரணில் விக்கிரமசிங்க கூட்டணியால் வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது.
ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளரான மைத்திரிபால சிறிசேன வெற்றி பெற்ற பின்னர், அந்த வாக்குறுதியை நிறைவேற்றுவதற்கு எந்தளவுக்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்பது கேள்விக்குரிய விடயமாகவே உள்ளது.
மைத்திரிபால சிறிசேன- ரணில் விக்கிரமசிங்க கூட்டணி அரசாங்கத்தின் 100 நாள் செயற்றிட்டத்துக்குள் உள்நாட்டு போர்க்குற்ற விசாரணையை ஆரம்பிக்கும் விவகாரம் இடம்பெற்றிருக்கவில்லை. எனினும், கிட்டத்தட்ட 100 நாட்களை எட்டும் நிலையை அடைந்துவிட்ட அரசாங்கம், உள்நாட்டு போர்க்குற்ற விசாரணை என்ற வாக்குறுதியை வைத்து சர்வதேச சமூகத்தை தன்வசப்படுத்திக் கொண்டுள்ளபோதிலும், உள்நாட்டு விசாரணையை ஆரம்பிக்கும் செயலுக்கு முன்னுரிமை கொடுக்கவில்லை.
ஐ.நா. மனித உரிமைகள் பேரவையிடம், இந்த அரசாங்கம் பதவிக்கு வந்து குறுகிய காலமே ஆகியுள்ளது என்றும் தாம் உள்நாட்டு விசாரணை ஒன்றை ஆரம்பிக்கவுள்ளதாகவும் அதற்கு கால அவகாசம் அளிக்கப்பட வேண்டும் என்றும் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர கோரிக்கை விடுத்திருந்தார்.
கடந்த மாதம் வெளியிடப்பட்டிருக்க வேண்டிய, ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் பணியகத்தின் விசாரணை அறிக்கையை பிற்போடும்படி கோருவதற்கே அவர் அந்த கால அவகாசத்தை கோரியிருந்தார். அதற்கமையவே, வரும் செப்டெம்பர் மாதம் நடைபெறவுள்ள ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடர் வரைக்கும்- விசாரணை அறிக்கை சமர்ப்பிக்கப்படுவது பிற்போடப்பட்டது.
உள்நாட்டு விசாரணையை நடத்தப்போகிறோம் என்று கூறிக் கால அவகாசம் கேட்ட இலங்கை அரசாங்கம், இந்த உள்நாட்டு விசாரணையை ஆரம்பிப்பதற்கான வழிமுறைகளை இதுவரைக்கும் தேடத் தொடங்கியிருக்க வேண்டும்.
இலங்கைக்கு கால அவகாசம் கொடுக்கப்பட்டு கிட்டத்தட்ட இரண்டு மாதங்களாகி விட்டபோதும், உள்நாட்டு விசாரணை ஒன்றை ஆரம்பிப்பதற்கான நகர்வுகள் ஓரடி கூட நகர்ந்ததாக தெரியவில்லை. கடந்த மாதம், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரித்தானியாவுக்கு மேற்கொண்டிருந்த பயணத்தின்போது, பி.பி.சி. க்கு அளித்திருந்த பேட்டியில், இன்னும் ஒரு மாத காலத்துக்குள் உள்நாட்டு போர்க்குற்ற விசாரணைகள் ஆரம்பிக்கப்படும் என்று உறுதியளித்திருந்தார்.
'போர்க்குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்வதற்கான உள்நாட்டு விசாரணைப் பொறிமுறையை இன்னும் ஒரு மாதத்துக்குள் நிறுவ முடியும் என்று நம்புகிறேன். சர்வதேச அழுத்தங்கள் இருந்தாலும், ஐ.நா. விசாரணையாளர்கள் இதில் தொடர்புபடமாட்டார்கள்.
மனித உரிமை மீறல்கள் தொடர்பாக விசாரிக்கும் இந்த உள்நாட்டு விசாரணைக்குழு, காத்திரமாகவும் சமமாகவும் சட்ட ரீதியாகவும் நடுநிலையாகவும் விசாரணைகளை மேற்கொள்ளும் என்று நம்புகிறேன்.
ஐ.நா. வின் ஆலோசனைகள் பெறப்படும். ஆனால், இந்த விசாரணையில் அவர்களின் தலையீடுகள் தேவையற்றது.' என்றும் அவர் கூறியிருந்தார். இந்தப் பேட்டி வெளியாகி ஒரு மாதத்துக்கும் மேலாகிவிட்டது. ஆனால், இன்னமும் உள்நாட்டு விசாரணை ஆரம்பிக்கப்படவோ, அதற்கான அறிவிப்பு ஏதும் வெளியிடப்படவோ இல்லை.
இதற்கு முன்னர், உள்நாட்டு போர்க்குற்ற விசாரணைக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன காலவரம்பு எதையும் அறிவிக்கவில்லை.
ஆனால், பி.பி.சி. பேட்டியின்போது, அவர் ஒரு மாதத்துக்குள் உள்நாட்டு விசாரணையை ஆரம்பிக்கப் போவதாக முதல்முறையாக ஒரு காலவரம்பை அறிவித்திருந்தார். ஆனால், அந்த ஒரு மாத காலவரம்பு ஏற்கெனவே முடிவடைந்து விட்டது.
இந்த நிலையில், அமெரிக்காவிலிருந்து வெளியாகும் உலகப்புகழ் பெற்ற ரைம் சஞ்சிகைக்கு அளித்திருந்த பேட்டியில், மற்றொரு கால அவகாசத்தை அறிவித்தார் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன.
போரின்போது இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பான குற்றச்சாட்டுகள் குறித்து விசாரிப்பதற்கான பொறிமுறை பற்றிய விபரங்களை வரும் ஜூன் மாத இறுதியிலேயே வெளியிடவுள்ளதாக அவர் அதில் குறிப்பிட்டிருந்தார்.
'இந்த விவகாரத்தை கையாள்வதற்கான மிகவும் வலுவான உள்நாட்டுப் பொறிமுறை ஒன்றை உருவாக்கவுள்ளோம் என்பதை ஐ.நா. வுக்கு நாம் அறிவித்துள்ளோம். ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் ஊடாக ஆலோசனைகளை நாம் கேட்டுள்ளோம்.' என்றும் அவர் அந்தப் பேட்டியில் குறிப்பிட்டிருந்தார்.
இந்த நிலையில், ரைம் சஞ்சிகைக்கு அளித்த பேட்டி பற்றிய விபரங்கள் வெளியாகிய ஒரு சில நாட்களிலேயே பிரதி வெளிவிவகார அமைச்சரான அஜித் பெரேரா, மற்றொரு காலஅவகாசத்தை அறிவித்திருக்கிறார். அது, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வழங்கிய இரண்டாவது காலவரம்பிலிருந்து மேலும் மூன்று மாதங்களுக்கு பின்தள்ளப்படும் வகையில் அமைந்திருந்தது.
அதாவது, ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் செப்டெம்பர் மாத அமர்வுக்கு முன்னதாக உள்நாட்டு விசாரணைக்குழு உருவாக்கப்படுவதற்கு வாய்ப்பில்லை என்பதை பிரதி வெளிவிவகார அமைச்சர் அஜித் பெரேரா எடுத்துக் கூறியிருக்கிறார்.
'போர்க்குற்றச்சாட்டுகள் மற்றும் மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகள் குறித்து விசாரிக்க நடுநிலையான உள்நாட்டு விசாரணை ஒன்றை நடத்துவதாக ஐ.நா. அதிகாரிகளுக்கு நாம் வலியுறுத்திக் கூறியுள்ளோம்.
சர்வதேச விசாரணை தேவையற்றது என்றும் எம்மிடம் சுதந்திரமான நீதித்துறை மற்றும் சுதந்திரமான பொதுச்சேவைகள் உள்ளன என்றும் ஐ.நா. விடம் தெரிவித்துள்ளோம்.
நீதி, காவல்துறை மற்றும் ஏனைய அமைப்புகளின் சுதந்திரத்தை உறுதிப்படுத்துமாறு ஐ.நா. எம்மிடம் கேட்டது. எனவே, உள்நாட்டு விசாரணையை நாம் மேற்கொள்வோம்.
இது ஒரு உள்நாட்டு விவகாரம். இதில் எந்தவொரு வெளிநாட்டு தலையீடுகளுக்கும் இடமளிக்கக்கூடாது என்பதால், நடுநிலையான உள்நாட்டு விசாரணைக்குத் தயாராக இருக்கிறோம். எவ்வாறு நாம் உள்நாட்டு விசாரணையை மேற்கொள்ளப் போகிறோம் என்பது குறித்த அறிக்கை ஒன்றை ஐ.நா. மனித உரிமைகள் பேரவையிடம் சமர்ப்பிக்க வேண்டியுள்ளது.
அதற்கு வரும் செப்டெம்பர் மாத அமர்வில் அனுமதி கிடைத்த பின்னரே, உள்நாட்டு விசாரணைகள் ஆரம்பிக்கப்படும்.' என்று அவர் தெரிவித்துள்ளார்.
இதிலிருந்து, அரசாங்கம் உள்நாட்டு விசாரணை விவகாரத்தை இப்போதைக்குத் தொடங்காமல் இழுத்தடிக்கத் தயாராகிவிட்டது என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளலாம். எதற்காக அரசாங்கம், உள்நாட்டு விசாரணையிலிருந்து பின்வாங்க முனைகிறது என்ற கேள்வி எழுகிறது.
தற்போது ஆட்சியில் உள்ள அரசாங்கம் ஜெனீவாவில் வைத்து, போரின்போது மீறல்கள் இடம்பெற்றிருக்கலாம் என்பதை ஏற்றுக்கொண்டிருந்தாலும், நம்பகமான- நடுநிலையான உள்நாட்டு விசாரணை ஒன்றை ஆரம்பித்து, குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்துவதற்கேற்ற தற்துணிவைக் கொண்டிருக்கிறதா என்ற சந்தேகம் இருக்கிறது.
ஏனென்றால், போர்க்குற்றச்சாட்டுகள் குறித்த விசாரணை என்றால், அதில் பிரதானமாக, முன்னைய அரசாங்கத்தில் இருந்து போரை நடத்தியவர்களும், போரில் ஈடுபட்ட படையினர் மற்றும் தளபதிகளும் பொறுப்புக்கூற வேண்டிய நிலை ஏற்படும்.
அத்தகையதொரு நிலை ஏற்படுவதை சிங்கள மக்கள் விரும்பமாட்டார்கள் என்பதில் சந்தேகமில்லை.
சிங்கள மக்களும் கூட உள்நாட்டு விசாரணைகளை ஏற்றுக்கொள்வார்கள் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கூறியிருந்தாலும், சிங்கள மக்களின் ஆதரவை இழக்க நேரிடலாம் என்ற கவலை அவருக்கு உள்ளதை மறுக்க முடியாது.
உதாரணத்துக்கு, வடக்கில் உள்ள இராணுவ முகாம்களைக் குறைத்து, அந்த முகாம்கள் அமைந்துள்ள காணிகளை உரிமையாளர்களிடம் ஒப்படைக்கும் விடயத்தில், சிங்கள மக்களின் ஆதரவு பறிபோய் விடும் என்ற அச்சத்தில் தான் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கடும்போக்கை கடைப்பிடிப்பதாக கூறப்படுகிறது.
போர்க்குற்ற விசாரணை விவகாரத்திலும், வெளிப்படையான எந்த முன்னகர்வையும் மேற்கொள்வதன் மூலம், நாடாளுமன்றத் தேர்தலில் தமது கட்சிக்குப் பாதகமான நிலை ஒன்றை ஏற்படுத்திக்கொள்வதற்கு ரணில் விக்கிரமசிங்க அரசாங்கம் தயாராக இல்லை. இதனால், உள்நாட்டுப் போர்க்குற்ற விசாரணை விவகாரத்தை கொஞ்சம் கொஞ்சமாக இழுத்தடிக்க அரசாங்கம் முயற்சித்திருக்கலாம்.
எவ்வாறாயினும், செப்டெம்பருக்கு பின்னர் தான், உள்நாட்டு விசாரணை உருவாக்கப்படும் என்ற பிரதி வெளிவிவகார அமைச்சர் அஜித் பெரேராவின் கருத்தில் பல முரண்பாடுகள் உள்ளதை அவதானிக்கலாம்.
உள்நாட்டு விசாரணையை எவ்வாறு நடத்தப் போகிறோம் என்ற திட்டத்தை ஐ.நா. மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தில் முன்வைத்து, அதன் அங்கிகாரத்தை பெற்ற பின்னரே, அந்த விசாரணை ஆரம்பிக்கப்படும் என்று அவர் கூறியிருக்கிறார்.
ஆனால், இலங்கை அரசாங்கத்தை நம்பகமான நடுநிலையான உள்நாட்டு விசாரணை ஒன்றை ஆரம்பிக்குமாறு தான் ஐ.நா. மனித உரிமைகள் பேரவை இலங்கை அரசாங்கத்திடம் கூறியுள்ளதே தவிர, அந்த விசாரணைக்குத் தமது ஒப்புதலைப் பெற வேண்டும் என்று ஒருபோதும் கூறவில்லை.
அதைவிட இது உள்நாட்டு விவகாரம், வெளியாரின் தலையீட்டுக்கு இடமில்லை என்று கூறும் அரசாங்கம், உள்நாட்டு விசாரணைக்கு எதற்காக சர்வதேச அரங்கு ஒன்றில் அனுமதியைப் பெற வேண்டும்? அது நாட்டின் இறைமையை அடகு வைக்கும் செயலாக அமையாதா?
இந்த இரண்டு கேள்விகளையும் வைத்து நோக்கும்போது, செப்டெம்பருக்குப் பின்னர் தான் உள்நாட்டு விசாரணை என்று தீர்மானித்துவிட்ட அரசாங்கம், அதற்குத் தேவையான ஒரு காரணத்தைத் தேடிப்பிடித்துள்ளதாகவே தெரிகிறது. அதாவது இலங்கையில் நாடாளுமன்றத் தேர்தல் நடந்து முடியும் வரையில் சர்ச்சைக்குரிய இந்த விவகாரத்துக்குள் நுழையாமல் தவிர்க்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாகவே தோன்றுகிறது.
அதேவேளை, வரும் செப்டெம்பருக்குப் பின்னர் தான், உள்நாட்டு விசாரணைப் பொறிமுறையை உருவாக்கப் போவதான அரசாங்கத்தின் கருத்துக்கு இன்னமும் சர்வதேச அரங்கில் இருந்து எந்தப் பதிலும் வரவில்லை. குறிப்பாக, ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் பணியகம் இந்த விவகாரத்தில், எத்தகைய கருத்தை வெளியிடும் என்று தெரியவில்லை.
ஆனால், சர்வதேச சமூகத்தைப் பொறுத்தவரையில், இலங்கை அரசாங்கம் இப்படியொரு முடிவை எடுத்தால், அதற்காக கவலை கொள்ளும், தாம் ஏமாற்றப்பட்டதாகவும் இலங்கை அரசு ஏமாற்ற முனைவதாகவும் ஒரு உணர்வு தோன்றும் என்பதிலும் சந்தேகமில்லை.
ஏனென்றால், ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் செயிட் ராட் அல் ஹுசேன், இலங்கைக்கு ஆறு மாத கால அவகாசத்தைக் கொடுத்து, விசாரணை அறிக்கையை வெளியிடுவதை பிற்போட்டபோதே, இந்தக் கால அவகாசத்துக்கள் உள்நாட்டு விசாரணைகளை ஆரம்பிக்குமாறு கூறியிருந்தார்.
அதுபோலவே, அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலக நாடுகளின் முக்கிய பிரமுகர்கள், பிரதிநிதிகள், இராஜதந்திரிகள் எல்லோருமே வரும் செப்டெம்பருக்குள் இலங்கை அரசாங்கம் உள்நாட்டு விசாரணையை ஆரம்பித்துவிடும் என்றே நம்பிக்கை வெளியிட்டிருந்தனர்.
இந்த நிலையில், குறிக்கப்பட்ட கால அவகாசத்துக்குள் தற்போதைய அரசாங்கம், உள்நாட்டு விசாரணையை ஆரம்பிக்கத் தவறினால், அது, சர்வதேச சமூகத்துக்குப் பெரும் ஏமாற்றத்தையே அளிக்கும்.
இது தொடர்பான அவர்களின் பிரதிபலிப்பு எவ்வாறாக இருக்கும் என்று கூற முடியாது போனாலும், தற்போதைய அரசாங்கம் குறித்த எதிர்பார்ப்புகளையும் மதிப்புகளையும் அது நிச்சயம் சீரழித்துவிடும்.
தற்போதைய அரசாங்கத்தைப் பற்றி மேற்குலக நாடுகளும் அவற்றின் தலைவர்களும் புகழ்ந்துரைத்து வருகின்ற நிலையில், உள்நாட்டு விசாரணை விவகாரத்தில், கொடுத்த வாக்கை காப்பாற்றத் தவறினால், மைத்திரிபால சிறிசேன அரசாங்கம் சர்வதேச அரங்கில் மதிப்பை இழந்து விடும்.
அது, எதிர்காலத்தில், இலங்கைக்கு பல சவால்களைக் கொண்டுவந்தாலும் ஆச்சரியமில்லை. அதற்காக மஹிந்த ராஜபக்ஷ காலத்து நிலைமை வரும் என்று கூற முடியாது போனாலும், தற்போதுள்ளதை விட கடினமானதொரு சூழலுக்குள் அரசாங்கம் பிரவேசிக்க நேரிடும்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
17 May 2025
17 May 2025