2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

100 நாட்களும் ஆட்டமும்

Thipaan   / 2015 ஏப்ரல் 22 , பி.ப. 10:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான தேசிய அரசாங்கம் பதவியேற்றதும் முன்மொழிந்த 100 நாட்கள் வேலைத்திட்டத்தின் இறுதி நாள் இன்று (23 ஏப்ரல், 2015). அதாவது, அந்த வேலைத்திட்டத்தின் பிரகாரம் இன்று நள்ளிரவோடு நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு, பொதுத் தேர்தலுக்கான அழைப்பு விடுக்கப்பட வேண்டும். ஆனால், 100 நாட்கள் வேலைத்திட்டத்தில் இன்னமும் 50 சதவீதத்துக்;கும் அதிகமான விடயங்கள் நிறைவேற்றப்படாமல் காத்திருப்பு பட்டியலிலேயே வைக்கப்பட்டிருக்கின்றன.

குறிப்பாக, நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியின் அதிகாரங்களை கட்டுப்படுத்தி அதிகாரங்களை நாடாளுமன்றத்துடன் பகிரும் முறைமையை முன்வைக்கும் அரசியலமைப்பின் 19ஆவது திருத்த சட்டமூலம் இந்த 100 நாட்களுக்குள் நிறைவேற்றப்பட்டிருக்க வேண்டும்.

அதுதான், அந்த வேலைத்திட்டத்தில் பிரதானமானது. ஆனால், அது முடியாமல் போயிருக்கின்றது. 19ஆவது திருத்த சட்டத்தை 100 நாட்களுக்குள் எப்படியாவது நிறைவேற்றிவிட வேண்டும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் கடும் பிரயத்தனம் எடுத்தனர். அது, நேற்றுமுன்தினம் (ஏப்ரல் 21, 2015) வரை நீண்டது.

ஜனாதிபதித் தேர்தல் காலத்தில், நல்ல மாற்றங்களைக் கோரியே மக்கள் வாக்களித்தனர்.  மைத்திரிபால சிறிசேனவும் அந்த மாற்றங்கள் குறித்து குறிப்பிட்டளவில் நம்பிக்கையோடு ஆட்சிபீடமேறினார்.

ஆனால், நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையற்ற நிலையில் அரசாங்கத்தைக் கொண்டு நடத்துவதோ, தேவையான அரசியல் திருத்தங்களைச் செய்வதோ அவ்வளவு இலகுவானது அல்ல என்பதை இந்த 100 நாட்கள் அவருக்கு உணர்த்தியிருக்கின்றன. கடந்த கால ஜனாதிபதிகளுடன் ஒப்பிடுகையில் சற்று மென்போக்குள்ளவரான மைத்திரிபால சிறிசேனவினால் இப்போதுள்ள சிக்கலான அரசியலை வெற்றி கொள்ள முடியவில்லை.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமைப் பதவியைப் பெற்றுக் கொண்ட பின்னரும் கட்சியின் கட்டுப்பாட்டை முழுமையாக எடுத்துக் கொள்ள முடியாமல் மைத்திரிபால சிறிசேன தவிக்கின்றார்.

தன்னுடைய அழுத்தங்கள் அதிகரித்தால் கட்சி உடையும் சாத்தியம் உண்டு என்பதை அவர், நன்றாகவே உணர்ந்து வைத்திருக்கின்றார்.

ஏனெனில், ஜனாதிபதித் தேர்தலில் தோற்கடிக்கப்பட்டாலும் மஹிந்த ராஜபக்ஷவுக்கு சிங்கள பௌத்த மக்களிடம் இருக்கும் ஆதரவு கொஞ்சம் அச்சமூட்டுவதாக இருக்கின்றது. எந்தவொரு தருணத்திலும் அந்த ஆதரவுத் தளம் இருக்கும் அளவைவிட பல்கிப் பெருகினால், அது தனக்கு அச்சுறுத்தலானது என்பதை மைத்திரிபால சிறிசேன உணராமல் இல்லை.

ஆனால், மைத்திரிபால சிறிசேனவின் இந்த அமைதியான நடவடிக்கையை தமக்குச் சாதகமாகக் கையாளும் மஹிந்த ராஜபக்ஷ தரப்பினர், எப்படியாவது நாடாளுமன்றத்தைக் கைப்பற்றிவிட வேண்டும் என்பதில் குறியாக இருக்கின்றனர்.

ஜனாதிபதித் தேர்தலில் தோல்வியடைந்ததும் தோல்வி கொடுத்த வலியினால் அதிகம் அரற்றிக் கொண்டிருந்த மஹிந்த ராஜபக்ஷவிடம், மீண்டும் ஆட்சி அதிகாரத்தில் ஏறிவிடலாம் என்கிற நம்பிக்கை பெருமளவு ஏற்பட்டிருக்கின்றது.

மஹிந்த ராஜபக்ஷவை மீண்டும் ஆட்சியதிகாரத்தில் அமர்த்த வேண்டும் என்று கோரும் தரப்பினர் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து பெரும்பாலும் ஓரங்கட்டப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படும் தரப்பினர்.

கடந்த கால அரசாங்கத்தில் பெரும் ஊழல்களைப் புரிந்தவர்கள் என்று தேசிய அரசாங்கத்தினால் குற்றஞ்சாட்டப்பட்டு இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவின் விசாரணைகளை எதிர்கொண்டிருப்பவர்கள்.

அவர்களில் பலர் தற்போதுள்ள நிலையோடு பொதுத் தேர்தலில் களம் கண்டால் தோல்வியடைய நேரிடலாம். அதுதான், சிங்கள பௌத்த தேசியவாத சிந்தனைகளை மீண்டும் பெருமளவாக உயிர்ப்பித்து அந்தத் தயவில் தப்பித்துக் கொள்ளலாம் என்று நினைக்கின்றனர். அவர்கள் தான், இப்போதைக்கு மஹிந்த ராஜபக்ஷவின் முதுகெலுப்பு போன்றவர்கள்.

மீளவும் அதிகாரத்துக்கு வரத்துடிக்கும் மஹிந்த ராஜபக்ஷ தரப்பினர் போரிட வேண்டியது, மைத்திரிபால சிறிசேன, சந்திரிக்கா குமாரதுங்க போன்றவர்களுடன் இல்லை. அவர்களையெல்லாம் தாண்டி ரணில் விக்ரமசிங்க என்கிற பெரும் அரசியல் தந்திரவாதியுடன். மஹிந்த ராஜபக்ஷவுக்கும் அது தெரியும்.

ஆனால், ரணில் விக்ரமசிங்க தன்னை நோக்கி வீசப்படும் கத்தி மைத்திரிபால சிறிசேன, சந்திரிக்கா குமாரதுங்க என்கிற இரண்டு பேரையும் தாண்டியே வர வேண்டும் என்கிற தைரியத்துடன் தன்னுடைய அடுத்த கட்ட நடவடிக்கைகளில் கவனமாக இருக்கின்றார்.

எப்படிப் பார்த்தாலும் மஹிந்த ராஜபக்ஷவின் மீள் எழுச்சி(!) ரணில் விக்ரமசிங்கவுக்கான அதீத பயன்களை எதிர்வரும் நாட்களில் வழங்கலாம். ஆனால், அந்த எழுச்சியின் வேகம் தன்னை வாரிச் சுருட்டாத அளவுக்கு பார்த்துக் கொள்ள வேண்டும் என்பதிலும் அவர் குறியாக இருக்கின்றார்.

இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு மஹிந்த ராஜபக்ஷவை விசாரணைகளுக்காக (வாக்குமூலம் பெறுவதற்காக) அழைத்த விவகாரம் என்பது சரியாக திட்டமிடப்பட்டு அரங்கேற்றப்பட்டிருக்கும் நாடகமோ என்று தோன்றுகின்றது. இதனை, ரணில் விக்ரமசிங்கவே திட்டமிட்டு அரங்கேற்றியிருக்கலாம் என்றும் தோன்றுகின்றது.

ஏனெனில், நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியின் அதிகாரங்களை மட்டுறுத்தும் 19ஆவது திருத்தச் சட்டத்தை நிறைவேற்றுவதில் குறியாக இருக்கும் ரணில் விக்ரமசிங்க, தேர்தல் முறை மாற்றத்தை செய்யக் கோரும் 20ஆவது திருத்த சட்டத்தின் நிறைவேற்றத்தை விரும்பவில்லை.

அந்தத் திருத்தம் ஐக்கிய தேசியக் கட்சிக்கு பாதகமானது. ஏனெனில், அது, தென்னிலங்கையின் கிராமங்களில் அதிக தோல்வியைச் சாத்தியமாக்கலாம் என்று அவர் அச்சம் கொள்கின்றார். அதில், குறிப்பிட்டளவு உண்மையும் இல்லாமல் இல்லை.

இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு, மஹிந்த ராஜபக்ஷவை விசாரணைகளுக்காக அழைத்த விடயத்தை தமது பலத்தை காட்டுவதற்கான சந்தர்ப்பமாக மஹிந்த தரப்பும் கையாண்டிருக்கின்றது.

அதுதான், நாடாளுமன்றத்துக்கும் 23 மணித்தியாலங்கள் வரை சத்தியாக்கிரகப் போராட்டம் என்கிற பேரில் அரங்கேறி முடிந்திருக்கின்றது. மஹிந்த தரப்பினர் நாடாளுமன்றத்துக்குள் செய்த சத்தியாக்கிரகப் போராட்டம் என்பது சிங்கள பௌத்த தேசியவாதிகளை நம்பிக்கை கொள்ள வைத்தாலும், நாட்டு மக்களிடம் அவ்வளவு வரவேற்பினைப் பெறவில்லை.

அது, குற்றவாளிகள் எல்லோரும் இணைந்து தம்மைப் பாதுகாக்க போராடும் நிகழ்வு என்றே சிங்கள மக்களில் பெரும்பான்மையினரும் கருத ஆரம்பித்திருக்கின்றனர்.

மஹிந்த ராஜபக்ஷவின் அரசியல் நடவடிக்கைகளின் போக்கினை, ஜனாதிபதி பதவியை அடைந்துவிடலாம் என்று கருதிய 2000ஆம் ஆண்டுகளுக்கு பின்னர் என்றும் முன்னர் என்றும் பிரிக்கலாம். அவரின், 2000ஆம் ஆண்டுக்கு முன்னரான அரசியல் நடவடிக்கை என்பது பருவ மழையை நம்பி விவசாயம் செய்யும் விவசாயியின் பொறுமையை ஒத்தது. அந்த 30 வருட அரசியலில் ஏற்றங்களும் இறக்கங்களும் மாறி மாறி இருந்திருக்கின்றன.

மழையை நம்பிக் காத்திருந்து ஏமாறும் விவசாயி, இன்னொரு தருணத்தில் பெரும்மழையினால் பயிர்களை இழந்துவிட்டு நஷ்டத்தில் வாடும் நிலை உருவாகும். அப்படித்தான் மஹிந்த ராஜபக்ஷவின் அரசியல் வாழ்வும் இருந்தது.

ஆனால், 2000 ஆம் ஆண்டுக்குப் பின்னர் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி பதவியை அடைந்துவிடலாம் என்று மஹிந்த ராஜபக்ஷ நம்பிய தருணத்தில் அவரின் அரசியல் நடவடிக்கைகள் அதிரடியாக மாற ஆரம்பித்தன.

இதுவரை காலமும் பொறுமையாக பயணித்த அவர், எல்லாத் தடைகளையும் முட்டி மோதி தகர்ந்துவிடுவதற்கான காலம் என்று கருதி வேகமான செயலாற்றினார். அதுதான், முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க எனும் பெரும் வைரியின் வல்லமைகளைத் தாண்டி, எதிர்க்கட்சித் தலைவராக, பிரதமராக அவரை உயர்த்தியது.

அதன்போக்கிலேயே 2005ஆம் ஆண்டில் ஜனாதிபதித் தேர்தலிலும் போட்டியிடுவதற்கான சூழலை உருவாக்கி வெற்றி கொண்டார்.

இப்போது, மஹிந்த ராஜபக்ஷ புதிய வடிவில் அரசியலை அணுக வேண்டியிருக்கின்றது. அதிகாரங்களை மீண்டும் அடைவது தொடர்பில் அவர் அவ்வளவு இலகுவான கனவினைக் காண முடியாது.

ஆனால், அவர் அதனைப் புரிந்து கொள்ள மறுத்து அவரை முன்வைத்து ஆடும் சதிராடிகளின் கைகளின் தன்னை ஒப்படைத்திருக்கின்றார். சதிராடிகளின் கைகள் நீண்ட காலத்துக்கு யாரையும் தாங்கிய வரலாறு இல்லை. அந்தக் கைகளுக்கு இன்னொரு ஆதாரம் கிடைத்தால் அங்கு  நீண்டுவிடும்.

மஹிந்த ராஜபக்ஷ, 2000ஆம் ஆண்டுகளுக்கு பின்னரான அரசியல் நடவடிக்கைகளைக் காட்டிலும் வேகமான நகர்தலை இப்போது செய்கின்றார். இந்த வேகம் வெற்றியை அடைவதற்கான வழிகளை காட்டும் என்று சொல்ல முடியாது.

ஆனால், தோல்வி கிடைத்தால் அது வழங்கப்போகும் அடி, நினைத்துப் பார்த்துக் கொள்ள முடியாதளவுக்கு இருக்கும். மஹாராஜாவாக வலம் வந்தவருள் இருக்கும் அதிகாரப் போதையை, மற்றவர்கள் பயன்படுத்திக் கொள்கின்றார்கள். அதுதான் விமல் வீரவங்ச உள்ளிட்ட தரப்பினரின் நடவடிக்கைகளில் தெரிகின்றது.

ரணில் விக்ரமசிங்க பாதுகாப்பான அரசியலாட்டத்தை ஆடுகின்றார். மஹிந்த ராஜபக்ஷவோ மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் ஆட்டத்துக்குள் தலையை வைத்திருக்கின்றார். இங்கு மைத்திரிபால சிறிசேன ஆட்டத்தை விலகியிருந்து பார்க்கும் நபராக இல்லாமல், ஆட்டத்தின் விரும்பா பங்காளியாக இழுத்து வரப்பட்டிருக்கின்றார்.

அது, இரண்டு பக்கங்களிலும் அடி வாங்கும் மத்தளத்தின் நிலைக்கு ஒப்பானது. எந்தவொரு தருணத்திலும் ரணில் விக்ரமசிங்கவின் அதிகார வளையத்துக்குள்ளும் சென்றுவிடவும் முடியாது. அதுபோல, மஹிந்த ராஜபக்ஷவின் மீள் எழுச்சி சுதந்திரக் கட்சியை தன்னிடமிருந்து நகர்த்திவிடும் சூழலையும் உருவாக்கவும் முடியாது.

மைத்திரிபால சிறிசேன தன்னுடைய வாழ்நாளில் ஜனாதிபதியாவேன் என்று என்றைக்குமே கனவு கண்டிருக்கமாட்டார். ஆனால், அவர் காணாத கனவொன்று நனவாகியிருக்கின்றது. ஆனால், அந்த நனவான கனவினை (ஜனாதிபதி பதவியினை) ஆற அமர அனுபவிப்பதற்குள் ஆயிரத்தெட்டு சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டி ஏற்பட்டிருக்கின்றது. அவர் தன்னுடைய அரசியல் வாழ்வில் வெற்றியின் கழிப்பையும், அமைதியற்ற இரவுகளையும் ஒருங்கே எதிர்கொண்டிருக்கின்றார்.

இவ்வாறான நிலையை அவர் நிச்சயமாக எதிர்பார்க்கவில்லை. ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷ என்கிற தடையை தாண்டிவிட்டால் எல்லாமும் சரியாகிவிடும் என்று மட்டுமே நம்பினார். ஆனால், பெரும் தடையைத் தாண்டினாலும் தடைக் கற்கள் புதிது புதிதாக முளைக்கின்றன.

இன்னொரு பக்கம் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு பொதுத் தேர்தலொன்று நடத்தப்பட்டு பெரும்பான்மையுள்ள அரசாங்கமொன்று அமையும் வரை, இப்போதுள்ள அரசியல் நெருக்கடியை தவிர்க்க முடியாது என்கிற நிலை உருவாகிவிட்டது. அப்படியான நிலையில் 19வது திருத்தத்தின் நிறைவேற்றம் சாத்தியமானாலும், சாத்தியமாகவிட்டாலும் நாடாளுமன்றத் தேர்லொன்றுக்குச் செல்வதே நாட்டை ஸ்திரத் தன்மையோடு வைத்துக் கொள்ள உதவும்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .