Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை
Suganthini Ratnam / 2015 ஏப்ரல் 24 , மு.ப. 06:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
-கே.சஞ்சயன்
கடந்த ஜனவரி மாதம் 8ஆம் திகதி நடந்த ஜனாதிபதி தேர்தலுக்குப் பின்னர், இலங்கையில் எதிர்பாராத பல மாற்றங்கள் இடம்பெற்றன. அத்தகைய மாற்றங்கள் அனைத்தும் அப்போதைய எதிர்க்கட்சிக் கூட்டணியால் திட்டமிடப்பட்டதற்கமையவே நடந்தேறின.
அதாவது, ஜனாதிபதித் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளராகப் போட்டியிட்ட மைத்திரிபால சிறிசேன வெற்றி பெற்றதும், நாடாளுமன்றத்தில் குறைந்தபட்ச பெரும்பான்மை பலத்தில் பாதியைக் கூடக் கொண்டிராத ஐ.தே.க. வின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க பிரதமராக நியமிக்கப்பட்டார்.
ஐ.தே.க. வும் ஆளும் கட்சியில் இருந்து பிரிந்து வந்தவர்களும் இணைந்து அமைச்சரவையில் இடம்பிடித்துக் கொண்டனர்.
அதற்குப் பின்னரும், மைத்திரிபால சிறிசேன - ரணில் விக்கிரமசிங்க கூட்டணி எதிர்பார்த்தவாறே நகர்வுகள் முன்னெடுக்கப்பட்டன.
அவற்றில் பல இலங்கை அரசியலுக்குப் புதிய அனுபவங்களாகவே இருந்தன.ஏனென்றால், நடைமுறைச் சாத்தியமற்றதாக கருதப்பட்ட பல விடயங்கள், ஜனாதிபதித் தேர்தலுக்குப் பின்னர் நடந்தேறியிருந்தன.
புதிய அரசாங்கத்தின் 100 நாள் செயற்றிட்டம் கடந்த புதன்கிழமையுடன் முடிவடைந்துள்ள நிலையில், இப்போது கொழும்பு அரசியல் களத்தில் இடம்பெறும் நிகழ்வுகள் அனைத்துமே, அரசாங்கத்தின் கைகளை மீறியதாகவே உள்ளன.
கடந்த ஜனவரி மாதம் எப்படி ரணில் விக்கிரமசிங்க - மைத்திரிபால சிறிசேன கூட்டுக்கு சாதகமாக இருந்ததோ, இப்போது அதற்கு நேர்மாறாக - தற்போதைய எதிர்க்கட்சிக்கு சார்பானதாக மாறியிருக்கிறது. அதாவது, முன்னர் ரணில் விக்கிரமசிங்கவும் மைத்திரிபால சிறிசேனவும் திட்டமிட்டவை தான் நடந்தேறின. ஆனால், இப்போது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் நிற்கும் தரப்புகள் எதனைத் திட்டமிட்டனவோ அதுவே நிகழ்ந்தேறி வருகிறது.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி ஆகியவற்றின் தலைவராக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இருந்தாலும் கூட, அவரது கையை மீறியே எல்லாம் நடந்து வருகிறது. உண்மையில் இந்தக் கட்சிகளின் தலைவர் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் வெறும் பெயரளவுக்குத் தான் கூறிக் கொள்ள முடிகிறது.
இந்தக் கட்சிகளின் நாடாளுமன்ற மாகாணசபை உறுப்பினர்களில் பலரும், மஹிந்த ராஜபக்ஷவின் கைப்பொம்மையாகவே இருக்கின்றனர். அங்கிருந்து கொடுக்கப்படும் கட்டளைகளுக்கு அமையவே அவர்கள் ஆட்டம் போடுகின்றனர்.
எனவே தான், 100 நாள் செயற்றிட்டத்தின் முற்பகுதி எவ்வாறு அரசாங்கத்துக்கு சார்பானதாக - அதன் நிகழ்ச்சி நிரலுக்கேற்றவாறு அமைந்திருந்ததோ, 100 நாள் செயற்றிட்டத்தின் இறுதிப் பகுதி எதிர்க்கட்சியின் நிகழ்ச்சி நிரலுக்கமையவே இடம்பெற்றது என்பதில் எவ்வித சந்தேகமும் கொள்ள வேண்டியதில்லை.
100 நாள் செயற்றிட்டத்தின் முற்பகுதி மிக முக்கியமான மாற்றங்கள் எதையும் கொண்டதாக அமைந்திருக்கவில்லை.
இலகுவாக நடைமுறைப்படுத்தக்கூடியதும் குறுகிய காலத்துக்குள் செயற்படுத்தக்கூடியதுமான விடயங்களைத் தான் முற்பகுதி கொண்டிருந்தது.
அவற்றை நிறைவேற்றிக் கொள்வதில் அரசாங்கம் சிக்கல்களையோ, பிரச்சினைகளையோ அதிகம் எதிர்நோக்கியிருக்கவில்லை. ஆனால், மிக முக்கியமான மாற்றங்களைக் கொண்ட- 100 நாள் செயற்றிட்டத்தின் இறுதிப் பகுதியை நிறைவேற்றுவதில் தற்போதைய அரசாங்கம் இதுவரையில் தோல்வி கண்டுள்ளது என்பதே உண்மை.
குறிப்பாக, சுதந்திரமான நீதிச்சேவை, பொதுச்சேவை, ஆணைக்குழுக்களை அமைத்தல், தேர்தல் முறை மாற்றம், ஜனாதிபதியின் நிறைவேற்று அதிகாரங்களைக் குறைத்தல், அரசியலமைப்புத் திருத்தம் உள்ளிட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் அரசாங்கம் இதுவரையில் வெற்றியைப் பெறவில்லை.
19ஆவது திருத்தச்சட்ட மூலத்தை அரசாங்கம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்தபோதிலும், அது நிறைவேற்றப்படுமா என்ற கேள்வி இருந்து வருகிறது.
இந்த அரசாங்கம் பதவியேற்றபோது, கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளில் 19ஆவது திருத்தச்சட்டத்தை நிறைவேற்றி விட்டு நாடாளுமன்றத்தை 100 நாட்களின் முடிவில் கலைத்து தேர்தல் நடத்துவோம் என்பது முக்கியமானது. ஆனால், கடந்த புதன்கிழமையுடன் 100 நாட்களை நிறைவு செய்து விட்ட அரசாங்கம், 19ஆவது திருத்தத்தை நிறைவேற்ற முடியாத நிலையில் இருக்கிறது.
நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பலத்தைக் கொண்டிராத ஓர் அரசாங்கம், மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்துடன் ஒரு சட்டத்தை நிறைவேற்றுவது என்பது குதிரைக் கொம்பான விடயமே. ஆனாலும், 19ஆவது திருத்தச்சட்டத்தை எதிர்க்கட்சியின் துணையுடன் நிறைவேற்ற முடியும் என்றே அரசாங்கம் நம்பியிருந்தது.
குறிப்பாக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமைத்துவமும் சந்திரிகா குமாரதுங்கவின் பின்புலமும் இதற்குத் துணையாக இருக்கும் என்று கணக்கும் போட்டிருந்தது ஐ.தே.க.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி ஆகியவற்றின் தலைமைப் பொறுப்புகளைக் கொண்டிருந்தாலும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால், தனது கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கட்டுப்படுத்தவோ, வழிநடத்தவோ முடியாத நிலைதான் உள்ளது.
இது ஐ.தே.க. – மைத்திரிபால சிறிசேன கூட்டு அரசாங்கத்தின் எதிர்பார்ப்புகள் தவறிப் போவதற்கு முக்கியமான காரணமாகும்.
மஹிந்த ராஜபக்ஷ என்ற வலுவானதொரு சக்தி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்குள்ளேயும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்குள்ளேயும் ஆதிக்கம் செலுத்தி வருவது, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு உள்ள முக்கியமான சவாலாக இருக்கிறது.
மஹிந்த ராஜபக்ஷவின் நிழல்தான் இப்போது அரசாங்கத்துக்குப் பெரிதும் நெருக்கடியைக் கொடுத்துக் கொண்டிருக்கிறது.
இந்த நிழல், அரசாங்கத்தைச் செயற்பட விடாமல் ஒரு செயலற்ற நிலைக்குள் தள்ளிவிட்டதாகவே உணரப்படுகிறது.
கடந்த 20ஆம் திகதியும் 21ஆம் திகதியும் நாடாளுமன்றத்தில் 19ஆவது திருத்தச்சட்டத்தை விவாதத்ததுக்கு எடுத்துக்கொள்வது என்று கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் இணக்கம் காணப்பட்டபோதிலும், அரசாங்கம் எதிர்பார்த்தது போன்று அதனைச் செய்ய முடியாது போனது.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை இலஞ்ச ஊழல் ஆணைக்குழு விசாரணைக்கு அழைத்த விவகாரத்தை முன்னிலைப்படுத்தி நடத்தப்பட்ட போராட்டங்கள், 19ஆவது திருத்தச்சட்டத்தை விவாதிக்க முடியாத நிலைக்குக் கொண்டு சென்றது.
எங்கே சந்தர்ப்பம் கிடைக்கும் என்று காத்திருந்த மஹிந்த ராஜபக்ஷ தரப்பு, இந்த விசாரணை விவகாரத்தை வைத்து, 19ஆவது திருத்தச்சட்டத்தை நிறைவேற்ற விடாமல் தடுத்து விட்டது.
முன்னதாக, 19ஆவது திருத்தச்சட்டத்தை இரண்டு நாட்களும் விவாதித்து, வாக்கெடுப்பை பிற்போடுவது என்றும் குறுகிய காலத்துக்குள் 20ஆவது திருத்தச் சட்டமூலமாக தேர்தல் முறை மாற்றத்தை கொண்டு வந்து நிறைவேற்றுவது என்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நடத்திய அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.
அதன் பின்னரே நாடாளுமன்றத்தைக் கலைத்து தேர்தலை நடத்துவதாகவும் ஜனாதிபதி உறுதியளித்திருந்தார்.
ஆனால், அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் கொடுக்கப்பட்ட வாக்குறுதிக்கமைய, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியோ, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியோ செயற்படவில்லை.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்களை அவ்வாறு செயற்பட விடாமல் தடுத்திருப்பது மஹிந்த ராஜபக்ஷவின் நிழல் தான் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.
19ஆவது திருத்தச்சட்டம் நிறைவேற்றப்பட்டு விட்டால் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு தேர்தல் நடத்தப்படுமோ என்ற கவலை எதிர்க்கட்சிக்கு உள்ளது,
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியோ, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியோ இப்போது நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு தேர்தல் நடத்தப்படுவதை விரும்பவில்லை.
ஏனென்றால், இப்போதைய நிலையில் தேர்தல் நடந்தால், சுதந்திரக் கட்சி அல்லது ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி நிச்சயமாக பிளவு படும்.
மஹிந்த ராஜபக்ஷவின் பக்கத்தில் ஒரு தரப்பும், மைத்திரிபால சிறிசேனவின் பக்கம் இன்னொரு தரப்புமாக எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள், பிரிந்து போய் நிற்கின்றனர்.
அதைவிட, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் பிரதமர் வேட்பாளராகப் போட்டியிட மஹிந்த ராஜபக்ஷவுக்கு இடமளிக்கப்படாது போனால், வேறொரு கட்சியின் மூலம் தான் அவர் போட்டியிட நேரிடும். அவ்வாறு போட்டியிட்டால், பிரதமர் பதவியைக் கைப்பற்ற முடியாது.
ஏனென்றால், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் வாக்குகள் பிளவுபடும் நிலையில், தற்போதைய விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறையில் தேர்தல் நடத்தப்பட்டால், குறைந்தளவு ஆசனங்களையே அவரது அணியால் பெற முடியும். இதனால் தான், மீண்டும் தொகுதி வாரி தேர்தல் முறையுடன் இணைந்த புதிய கலப்பு தேர்தல் முறை ஒன்றை அறிமுகப்படுத்தி விட்டு தேர்தலை நடத்தலாம் என்று எதிர்பார்க்கிறது சுதந்திரக் கட்சி - ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி கூட்டு.
19ஆவது திருத்தச்சட்டத்துடன், தேர்தல் முறை மாற்றத்தையும் கொண்டு வந்தால் அதனை ஆதரிக்கத் தயார் என்று கூறியது எதிர்க்கட்சி.
தேர்தல் முறை மாற்றத்துக்கு பொது இணக்கப்பாடு எட்டப்படாத நிலையிலும், அது குறித்து ஆராய போதிய காலஅவகாசம் தேவைப்படுகின்ற நிலையிலும், 19ஆவது திருத்தச்சட்டத்தை நிறைவேற்ற விடாமல் தடுப்பது எதிர்க்கட்சியின் உத்தியாக உள்ளது.
19ஆவது திருத்தச்சட்டம் நிறைவேற்றப்பட்டதும் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு தேர்தல் நடத்தப்பட்டால், அது ஐ.தே.க. வுக்கு சாதகமாகவும் தமக்குப் பாதகமாகவும் அமைந்து விடலாம் என்று எதிர்க்கட்சி கருதுகிறது.
அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் வரை, தற்போதைய நாடாளுமன்றத்தின் ஆயுள்காலம் இருக்கின்ற நிலையில், அதுவரை இந்த அரசாங்கத்தை செயலற்ற நிலைக்குள் வைத்திருப்பதன் மூலம் நிறையவே சாதிக்கலாம் என்பதே மஹிந்த ராஜபக்ஷ தரப்பின் முக்கிய இலக்காக தெரிகிறது,
அதாவது இந்த அரசாங்கம், மூன்று மாத காலத்துக்குள் பல எதிர்பார்ப்புகளை நிரறைவேற்றத் தவறியுள்ளது. சில பொருளாதாரச் சலுகைகள் மற்றும் ஜனநாயக சுதந்திரங்களை தற்போதைய அரசாங்கம் மக்களுக்கு அளித்திருந்தாலும் பிரதான வாக்குறுகளை நிறைவேற்றும் விடயத்தில் மக்களின் ஏமாற்றத்தையே சம்பாதித்துள்ளது.
இந்த அரசாங்கம் பதவிக்கு வந்த போது இருந்த கவர்ச்சியை இப்போதே இழந்து விட்டுள்ளது. இதேநிலை அடுத்த ஆண்டு வரை நீடித்தால். அரசாங்கத்துக்கு எதிரான அதிருப்தி அலை ஒன்று உருவாகும். முக்கியமாக, தற்போது திறைசேரியில் போதிய நிதி கையிருப்பில் இல்லை.
இதற்கு மேலதிக நிதியை திரட்டுவதற்கு அரசாங்கம் எடுத்த முயற்சியையும், எதிர்க்கட்சியான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி நாடாளுமன்றத்தில் தோற்கடித்து விட்டது.
இந்தநிலையில், தற்போதைய அரசாங்கத்தினால், நாட்டை சிறப்பாக கொண்டு நடத்த முடியாத நிலை ஒன்று விரைவில் உருவாகும்.
நாடு கிட்டத்தட்ட செயலற்ற நிலைக்குத் தள்ளப்படும் போது, மக்கள் தாமாகவே அரசாங்கத்தை எதிர்க்கத் தொடங்குவர்.
அத்தகையதொருநிலை ஏற்படுவதை எதிர்க்கட்சி விரும்புகிறது. அதற்கு, அடுத்த ஆண்டுவரை பொறுத்திருக்க வேண்டும்.
அதற்கிடையில், மஹிந்த ராஜபக்ஷவும் தனது அரசியல் துறவறத்தை முடித்துக் கொண்டு திரும்ப முடியும்.
அப்போது, கடுமையானதொரு போட்டியைக் கொடுத்து ஆட்சியைப் பிடிக்கலாம் என்பதே, மஹிந்த ராஜபக்ஷ தரப்பினரின் எதிர்பார்ப்பாக உள்ளது.
இந்த அரசாங்கத்தை விழவும் விடாமல், அதேவேளை, முன்நோக்கி நகரவும் விடாமல், முடக்கி வைத்திருப்பது தான் இவர்களின் திட்டம். அந்த திட்டம் கிட்டத்தட்ட வெற்றிகரமாகவே முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
19ஆவது திருத்தச்சட்டம் மீதான விவாதம் பிற்போடப்பட்டது, நாடாளுமன்றம் வரும் 27ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டது எல்லாமே அதனைத் தான் எடுத்துக் காட்டியுள்ளது. இந்த நிலையில், 19ஆவது திருத்தச்சட்டத்தை நிறைவேற்ற எதிர்க்கட்சி விடப் போவதில்லை என்பது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் நன்றாகவே புரிந்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
இந்த நிலையில், அவர்கள், நாடாளுமன்றத்தைக் கலைத்து தேர்தலை நடத்தப் போகின்றரா அல்லது மீண்டும் எதிர்க்கட்சியின் தயவுக்காக அதன் பின்னால் இழுபடப் பார்க்கின்றனரா என்று தெரியவில்லை.
தற்போதைய அரசாங்கம் என்னதான், எதிர்க்கட்சியின் காலில் விழுந்தாலும் கூட, தற்போதைய அரசாங்கத்தின் இலக்குகள் நிறைவேற்றப்படுவதை மஹிந்த ராஜபக்ஷவின் நிழல் ஒருபோதும் அனுமதிக்கப் போவதில்லை என்பதை மட்டும் உறுதியாக கூறிக் கொள்ள முடியும்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
17 May 2025
17 May 2025