2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

மஹிந்தவாக மாறுமுன் மைத்திரியையும் கட்டுப்படுத்த வேண்டும்

Thipaan   / 2015 ஏப்ரல் 26 , பி.ப. 10:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

நிறைவேற்று ஜனாதிபதி முறையில் மாற்றங்களை கொண்டுவருவதற்காகவும் அமைச்சர்களின் எண்ணிக்கையை குறைப்பதற்காகவும் தகவல் அறியும் உரிமைக்;காகவும் அரசாங்கம் முன்வைத்துள்ள 19 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தின் மூலம் ஐக்கிய தேசியக் கட்சி மட்டுமே பயன்பெறப்போவதாகத் தான் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர்கள் நினைத்துக் கொண்டு இருக்கிறார்கள் போலும்.

அந்தத் திருத்தத்துக்கு ஆதரவு வழங்க ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி விதிக்கும் நிபந்தனைகளை பார்க்கும் போது, அவ்வாறு தான் எவரும் நினைப்பர். ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர்கள், தாம் அந்த திருத்தத்தை ஆதரித்து வாக்களிக்க வேண்டுமானால் தேர்தல் முறை தொடர்பான திருத்தத்தையும் சமர்ப்பிக்க வேண்டும் என நிபந்தனை விதித்துள்ளனர். அது பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் தேவைக்காக முன்வைக்கப்பட்ட திருத்தம் என்கிறார்கள்.

ஸ்ரீ.ல.சு.க.வின் உதவியைப் பெற்று இந்த திருத்தத்தை நிறைவேற்றிக் கொண்டு, தேர்தல் சீர்த்திருத்தத்தை முன்வைக்காமல் ஏமாற்றுவதற்கு பிரதமர் முயற்சி செய்வதாக எதிர்க் கட்சித் தலைவர் நிமல் சிறிபால டி சில்வா கடந்த வாரம் கூறியிருந்தார்.

இதனை நிறைவேற்றிக் கொள்வதில் ஸ்ரீ.ல.சு.க.வின் அக்கறையின்மையையே இவை காட்டுகின்றன. இத்தனைக்கும் அது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமை தாங்கும் கட்சியாகவும் இருக்கிறது.

ஆனால், 19 ஆவது திருத்தமானது அவ்வாறு புறக்கணிக்கக் கூடியதல்ல. இதில் முக்கிய நோக்கம் நிறைவேற்று ஜனாதிபதியின் அதிகாரங்களை ஓரளவுக்காவது குறைப்பதேயாகும்.

ஜனாதிபதி, தமது விருப்பத்தின் பிரகாரமே உயர் அரச அதிகாரிகளையும் உயர் மட்ட நீதியரசர்களையும் தற்போது நியமிக்கிறார். எனவே, அரசாங்கமும் நீதித்துறையும் அவருக்கு கட்டுப்பட்டு இருக்கின்றன. இதன் காரணமாக அவர் தமக்கு வேண்டியதை செய்யலாம்.

அதற்கு எதிராக எவரும் எதனையும் செய்ய முடியாது. ஜனாதிபதியே அரச அதிகாரிகளை நியமிப்பதால், அவரது சொல்லை மீறி  அவர்கள் செயற்படாதது மட்டுமல்லாமல், அவ்வாறு எவராவது செயற்பட நினைத்தால் அவர் பல பிரச்சினைகளை எதிர்நோக்க வேண்டி வரும். நீதியரசர்கள், ஜனாதிபதி விரும்பாத தீர்ப்பை வழங்கினால், முன்னாள் பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்கவுக்கு நடந்த கதியே அவர்களுக்கும் நேரும்.

திவிநெகும சட்டமூலத்துக்கு மாகாண சபைகளின் அங்கிகாரத்தை பெற வேண்டும் என தீர்ப்பு வழங்கியமையினாலேயே குற்றப் பிரேரணை மூலம் ஷிராணி பண்டாரநாயக்க பதவி நீக்கம் செய்யப்பட்டார்.

எனவே, இது ஒரு சர்வாதிகார முறையாகும். இந்த நிலையை மாற்றி அமைப்பதே 19ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தின் பிரதான நோக்கமாகும்.

அத் திருத்தத்தின் படி அரச அதிகாரிகளையும் நீதியரசர்களையும் நியமிக்க 2010ஆம் ஆண்டுக்கு முன்னர் போல் ஜனாதிபதி அரசியலமைப்புச் சபையின் அங்கிகாரத்தை பெற வேண்டும். அந்தச் சபையில் எதிர்க் கட்சிகளின் பிரதிநிதிகள் மட்டுமன்றி சிறு கட்சிகளின் பிரதிநிதிகளும் இருப்பர்.

அதன் படி ஜனாதிபதியின் அதிகாரங்களை கட்டுப்படுத்த, சிறிய மற்றும் சிறுபான்மை இனக் கட்சிகளினது பிரதிநிதிகளுக்கும் குரல் கொடுக்க முடியும்.  

இது, ஐ.தே.க.வின் தேவை என்று எவரும் கூற முடியாது. அதேவேளை அமைச்சர்களின் எண்ணிக்கையை 30 ஆக குறைப்பதும் 19ஆவது திருத்தத்தின் மற்றொரு நோக்கமாகும்.

அமைச்சர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதனால் நாட்டு மக்கள் மீதே பழு சுமத்தப்படுகிறது. எனவே, அமைச்சர்களின் எண்ணிக்கை குறைக்கப்படுமானால்; நாட்டு மக்களே பயனடைவர். இதனால் பயனடைவது ஐ.தே.க மட்டும் அல்ல.

தற்போதைய ஜனாதிபதிக்கு எதிராக எந்தக் காரணத்துக்;காகவும் வழக்குத் தாக்கல் செய்ய முடியாது. அவர் ஒரு கொலையையே செய்தாலும் அதற்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்ய முடியாது.

ஆனால், 19ஆவது திருத்தின் கீழ், ஜனாதிபதியின் நடவடிக்கைகளுக்கு எதிராக, சட்ட மா அதிபருக்கு எதிராக அடிப்படை உரிமை மீறல் தொடர்பான வழக்கை தாக்கல் செய்ய முடியும்.

இதனால் பயன் பெறப் போவது ஐ.தே.க அல்ல. எனவே, இந்தத் திருத்தத்துக்கு ஆதரவு வழங்குவதற்காக ஸ்ரீ.ல.சு.க நிபந்தனை விதிப்பது எவ்வகையிலும் நியாயமானதோ சரியானதோ அல்ல.

ஆனால், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் நிபந்தனை எவ்வகையிலும் பிழையான நிபந்தனையும் அல்ல. அக் கட்சியினர், 19ஆவது திருத்தத்தோடு தேர்தல் முறையும் திருத்தப்பட வேண்டும் என்கிறார்கள்.

இது நல்ல யோசனை. ஏனெனில், தற்போதைய விருப்ப வாக்கு முறையிலும் விகிதாசார முறையிலும் பல சிக்கல்கள் இருக்கின்றன. அதேவேளை, இதுவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றாகும்.

அத் தேர்தலின் போது, ஜனாதிபதியின் சார்பில் இந்த வாக்குறுதிகளை மக்களிடம் எடுத்துச் சென்றவர்கள் ஐ.தே.க.வினரே. எனவே, ஸ்ரீ.ல.சு.க.வினர் இந்த விடயத்தில் ஐ.தே.க.வை வற்புறுத்துவதில் தவறில்லை.

ஆனால், தேர்தல் முறையை திருத்தும் போது சிறுபான்மை மக்கள் பாதிக்கப்படும் அபாயம் இருக்கிறது. அதனால் அதற்காக அவசரப்படவும் கூடாது.

அதேபோல் அதனை 19ஆவது திருத்தத்துக்கு நிபந்தனையாக பாவிப்பது தர்க்க ரீதியானதல்ல. இந்த நிபந்தனையின் பின்னால் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இருக்கிறார் போலும்.

அவர், 19 ஆவது திருத்தம் நிறைவேறுவதை விரும்பவில்லை. ஏனெனில், அவர் மீண்டும் ஜனாதிபதியாக வர கனவு காண்பவர். 19ஆவது அரசியலமைப்புத் திருத்தம் நிறைவேறுவது அதற்குத் தடையாக இருக்கும். ஏனெனில் 19 ஆவது திருத்தத்தின் படி, ஒருவர் இரண்டு முறை மட்டுமே நாட்டில் ஜனாதிபதியாகலாம். மஹிந்த ஏற்கெனவே இரண்டு முறை ஜனாதிபதியாகியுள்ளார்.

மஹிந்த பதவிக்கு வருவதை பயங்கரமானதோர் நிலைமையாகவே சிறபான்மையினர் காண்பர். அவர், அதிகார பரவலாக்கலை தொடர்ந்தும் எதிர்த்தவர். வட மாகாணத்தில் ஓர் அதிகாரியை மாற்ற வேண்டும் என அம் மாகாண முதலமைச்சர் கேட்ட போது, அதற்காவது இணங்காதவர்.

இப்போது அவர் தமது தோல்விக்கு பொதுபல சேனா போன்ற அமைப்புக்களை குறைகூறிக் கொண்டு இருந்த போதிலும் பதவியில் இருக்கும் போது, பல சிறுபான்மையினத் தலைவர்கள் அச் சேனாவைப் பற்றி கூறிய எதனையும் அவர் ஏற்கவிலலை.

அதேவேளை, அவருக்கு எதிராகவும் அவரது சகோதரரான முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு எதிராகவும் இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு நடவடிக்கை எடுத்ததை கண்டித்து கடந்த வாரம் அவ்வாணைக்குழு முன் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பொது பல சேனா மற்றும் ராவணா பலய போன்ற மதவாத தீவிரவாத அமைப்புக்களும் கலந்து கொண்டன.

எனவே, அவர் இப்போது அந்த தீவிரவாத அமைப்புக்களுக்கு எதிராக கூறும் எதுவும் நேர்மையானவையல்ல.

அந்த அடிப்படையில், மஹிந்தவின் மீள்வருகையை சிறுபான்மையினர் பயங்கரமானதாக கருதுவதை புரிந்து கொள்ளலாம். அவரது மீள் வருகையை தடுக்கும் ஓர் உத்தியாகவும் அரசியலமைப்பின் 19 ஆவது  திருத்தம் அமைந்துள்ளது.

எனவே தான், தேர்தல் முறை மாற்றத்தை ஒரு நிபந்தனையாக பாவித்து 19 ஆவது திருத்தத்தை தடுக்கும் முயற்சியின் பின்னால் மஹிந்த ராஜபக்ஷ இருக்கலாம் என்று ஊகிக்க வேண்டியுள்ளது.

இருந்த போதிலும் தேர்தல் முறையை மாற்றி அமைப்பதை தாமதப்படுத்தவோ அல்லது அதனை செய்யாமல் இருக்கவோ ஐ.தே.க.வுக்கும் நியாயமான காரணங்கள் இல்லை.

இதற்கான சட்ட மூலத்தை ஜனவரி மாதம் 9 ஆம் திகதி, ஜனாதிபதி பதவிக்கு வந்து இரண்டு வாரங்களுக்குள் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பதாகவே ஜனாதிபதியின் 100 நாட்கள் வேலைத் திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த நூறு நாட்களும் போய்விட்டன.

 எனவே, சிறுபான்மையினரை பாதிக்காத வகையில் அரசாங்கம் அதனை இப்போதாவது முன்வைக்க வேண்டும்.

கடந்த திங்கட்கிழமை, 19 ஆவது திருத்தம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவிருந்தது. ஆனால், மஹிந்த ராஜபக்ஷவை இலஞ்ச மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு முன் ஆஜராகுமாறு அவ் ஆணைக்குழு அறிவித்திருந்ததை எதிர்த்து ஸ்ரீ.ல.சு.க. உறுப்பினர்கள் பலரும் மக்கள் ஐக்கிய முன்னணி மற்றும் தேசிய சுதந்திர முன்னணி போன்ற கட்சிகளின் உறுப்பினர்களும் நாடாளுமன்றத்துக்குள் ஆர்ப்பாட்டம் செய்து அதனை தடுத்தனர்.

இதனை அடுத்து,  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, கடந்த வியாழக்கிழமை இரவு தொலைக்காட்சி மூலம் நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அப்போது அவர், நிறைவேற்று ஜனாதிபதியின் சில அதிகாரங்களையாவது குறைப்பதை விரும்பாதவர்களை அமெரிக்க அடிமைகளுடன் ஒப்பிட்டார்.

ஆபிரகாம் லிங்கன், அமெரிக்காவில் அடிமை முறையை இரத்துச் செய்த போது அம் முறைiயில் ஊறிப் போன அடிமைகள் அம் முறையை மீண்டும் கொண்டு வருமாறு கோரிக்கை விடுத்ததாக அவர் தமது உரையில் குறிப்பிட்டார்.

தாம் நிறைவேற்று ஜனாதிபதி முறையின் அதிகாரங்களை பாவிக்காததால் பலர் தம்மை பலவீனமானவராக கருதுவதாகவும் ஆனால், தாம் அம் முறைக்கு எதிரானவர் என்பதனாலேயே அவ்வதிகாரங்களை பாவிக்காமல் இருப்பதாகவும் ஜனாதிபதி தனது உரையில் குறிப்பிட்டார்.

அத்தோடு, அவர் இவ்வாரம் 19 ஆவது திருத்தத்தை நிறைவேற்றிக் கொள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவை கோரினார். இது அவருக்கு எதிராக அவரது கட்சிக்குள் இருந்தே குழி பறிப்பவர்களுக்கு விடுத்த ஓர் எச்சரிக்கையாகும்.

உண்மையிலேயே, மைத்திரிபால சிறிசேன பலவீனமானவர் என கூற முடியாது. மஹிந்த ராஜபக்ஷவின் அடக்கு முறையினால் பாதிக்கப்பட்ட பல ஸ்ரீ.ல.சு.க. தலைவர்கள் ஒதுங்கி பதுங்கி இருக்கும் போது மைத்திரிபாலவே அவருக்கு சவால் விட்டு அவரை பதவியில் இருந்து வீழ்த்தினார். ஒரு பலவீனமானவரால் இதனை செய்ய முடியாது.

ராஜபக்ஷ போன்ற ஓர் இனவாத சர்வாதிகார போக்கில் செயற்பட்ட ஒருவரை வீழ்த்துவதில் அவரது தைரியம் நாட்டுக்கு பயனுள்ளதாக அமைந்த போதும் நிறைவேற்று ஜனாதிபதி முறை தொடர்ந்து இருந்தால் அவரது தைரியமே நாளை நாட்டு மக்களை வாட்டவும் கூடும்.

 'அதிகாரம் ஊழலுக்கு இட்டுச் செல்லும் மிகுந்த அதிகாரம் மிகுந்த ஊழலுக்கு இட்டுச் செல்லும்' என்று ஆங்கிலத்தில் ஒரு கூற்று இருக்கிறது. அதன் படி இந்த நூறு நாட்களில் ஊழலில் ஈடுபடாவிட்டாலும் நிறைவேற்று ஜனாதிபதியாக தொடரும் போது மைத்திரிபாலவும் மற்றொரு மஹிந்தவாக மாற மாட்டார் என்பதற்கு எந்தவித உத்தரவாதமும் இல்லை.

தம்மாலும் சட்டத்தை மதியாது நடந்து கொள்ள முடியும் என்பதை அவரும் ஏற்கெனவே காட்டியுள்ளார். மொஹான் பீரிஸை பிரதம நீதியரசர் பதவியில் இருந்து தூக்கியெறிவதற்காக அவர் சட்டத்தை மதியாது நிறைவேற்று ஜனாதிபதி முறையை பாவித்தார்.

மொஹான் பீரிஸ், முறைப்படி பிரதம நீதியரசர் பதவிக்கு நியமிக்கப்படவில்லை என்ற அடிப்படையிலேயே பதவி நீக்கம் செய்யப்பட்டார்.

ஆனால், அவர் முறைப்படி பதவிக்கு நியமிக்கப்படவில்லை என்பதை நீதிமன்றமோ அல்லது நீதித் துறையைச் சேர்ந்த வேறெந்த நிறுவனமோ முடிவு செய்யவில்லை. ஜனாதிபதி அவ்வாறு நினைத்தார். அதன் படி, நிறைவேற்று ஜனாதிபதி ஒருவருக்குரிய அதிகாரத்தை பாவித்து அவரை பதவி நீக்கம் செய்தார்.

பீரிஸ்,முறைப்படி பிரதம நீதியரசர் பதவிக்கு நியமிக்கப்படாதிருக்கலாம். அதேவேளை, அவர் மஹிந்தவின் கையாள் என்றே கூறப்படுகிறது. அந்த வகையில் அவர் பதவி நீக்கம் செய்யப்பட்டமை நாட்டுக்கு பயனுள்ளதாகவும் இருக்கலாம்.

ஆனால்,  நிறைவேற்று ஜனாதிபதி அதிகாரங்களைப் பாவித்தே  அவர் பதவி நீக்கம் செய்யப்பட்டார் என்பதும் உண்மை.

எனவே, எந்த வகையில் பார்த்தாலும் நிறைவேற்று ஜனாதிபதி முறையின் அதிகாரங்களில் சிலவற்றையாவது குறைக்கும் 19 ஆவது அரசியலமைப்புத் திருத்தம் நிறைவேறுவதே நல்லது.
 
 

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .