2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

தமிழக அரசியலில் எட்டுக்கும் மேற்பட்ட முதலமைச்சர் வேட்பாளர்கள்?

Thipaan   / 2015 ஏப்ரல் 28 , பி.ப. 12:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழக தேர்தல் களம் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு சூடு பிடித்துள்ளது. எந்த காலகட்டத்திலும் இல்லாத அளவுக்கு பல முதலமைச்சர் வேட்பாளர்கள் 2016ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தேர்தலை குறி வைத்து போராடிக் கொண்டிருக்கிறார்கள்.

அந்த வரிசையில் லேட்டஸ்டாக வந்திருப்பவர் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன். மறைந்த மூப்பனாரின் பிள்ளையான இவர் காங்கிரஸிலிருந்து விலகி புதிய கட்சி தொடங்கினார்.
அவர் தனது முதல் பொதுக் குழுக் கூட்டத்தைக்கூட்டி தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டார்.

அதிக அளவில் உறுப்பினர்களை சேர்க்க இப்போதே அந்தக் கட்சிகள் கச்சை கட்டி நிற்கின்றன. தி.மு.க. சார்பில் உறுப்பினர்கள் சேர்க்கை ஏற்கனவே முடுக்கி விடப்பட்டுள்ளது.

பா.ஜ.க.வைப் பொறுத்தவரை 'மிஸ்டு கால்' கொடுத்து இந்தப் பணியில் ஈடுபட்டிருக்கிறது. பாட்டாளி மக்கள் கட்சியும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியும் அதே பணியில் இப்போது இறங்கி விட்டன.

எல்லோருமே 'உறுப்பினர்கள் சேர்க்கையில்' அதிக ஆர்வம் காட்டக் காரணம் அனைத்து கட்சி தலைவர்களுக்குமே இருக்கும் முதலமைச்சர் ஆசைதான்.

தி.மு.க.வின் சார்பில் இப்போதைக்கு முதலமைச்சர் வேட்பாளர் கலைஞர் மு.கருணாநிதியா அல்லது மு.க. ஸ்டாலினா என்ற கேள்வி.

அ.தி.மு.க.விலோ பெங்களூரில் நடக்கும் மேல்முறையீட்டு வழக்கில் வரும் தீர்ப்பை வைத்து முதலமைச்சர் வேட்பாளர் ஜெயலலிதாவா அல்லது வேறு யாருமா என்பது இன்னொரு கேள்வி.
தே.மு.தி.க.வின் சார்பில் விஜயகாந்த் முதலமைச்சர் பதவிக்கு ஆசைப்படுகிறார். தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் ஜி.கே.வாசன் முன்னிறுத்தப்படுகிறார்.

காங்கிரஸ் சார்பில் அனேகமாக முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் முன்னிறுத்தப்படலாம். ம.தி.மு.க.விலோ வைகோ முதலமைச்சர் வேட்பாளராக நிற்கிறார். எல்லாவற்றிற்கும் மேல் பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் அன்புமணி ராமதாஸ் முதல்வர் வேட்பாளர் என்று ஏற்கெனவே டிக்ளேர் செய்யப்பட்டு விட்டது.

அதை விட நாம் தமிழர் கட்சி நடத்தும் சீமானும் தன்னை முதலமைச்சர் வேட்பாளர் என்று சொல்லிக் கொள்ளத் துவங்கி விட்டார். இதன் அடிப்படையில் பார்த்தால், இப்போதே பார்த்தால் எட்டு முதலமைச்சர் வேட்பாளர்கள் தமிழக தேர்தல் களத்துக்கு தயாராகி விட்டார்கள்.

பா.ஜ.க.வின் சார்பில் மட்டும் தேர்தல் நேரத்தில் முதல்வர் வேட்பாளரை அறிவிப்போம் என்று சூட்சுமமாக அறிவித்துள்ளார்கள்.

எட்டுக்கும் மேற்பட்ட முதலமைச்சர் வேட்பாளர்கள் களத்தில் நிற்க தமிழக அரசியல் சூழ்நிலை மிகவும் போட்டி நிறைந்ததாத மாறக்கூடும் என்றே இப்போதைக்குத் தெரிகிறது.

ஏனென்றால், இரு கம்யூனிஸ்ட் கட்சிகள் வேறு இன்னும் தங்கள் முதலமைச்சர் வேட்பாளர் யார் என்று அறிவிக்கவில்லை.

அவர்களின் உட்கட்சி தேர்தல், உட்கட்சி கொள்கை முடிவு போன்றவற்றிலேயே கடந்த சில மாதங்களாக கவனம் செலுத்தி வருகிறார்கள் கம்யூனிஸ்ட் கட்சிகள்.

இப்படி எட்டு முதலமைச்சர் வேட்பாளர்கள் களத்தில் நின்றாலும் வாக்கு வங்கி அடிப்படையில் பார்த்தால் அந்தப் பதவிக்கு அருகில் இருக்கும் கட்சிகள் இரண்டே இரண்டுதான்.

ஒன்று அ.தி.மு.க. இன்னொன்று தி.மு.க. இந்த இரு கட்சிகள் தவிர மற்ற கட்சிகள் அனைத்துமே 'ஆசை இருக்கிறது.

ஆனால், அள்ளிக் கொடுக்க பாத்திரத்தில் ஒன்றுமில்லை' என்ற கதைதான். அதே நேரத்தில் இன்றைக்கு உள்ள சூழ்நிலையில் தமிழகத்தில் அ.தி.மு.க.வே பலம் வாய்ந்த கட்சி என்ற நிலை இருந்து வந்தது.

இப்போது திடீரென்று தின தந்தி டி.வி.யில் வெளிவந்துள்ள கருத்துக்கணிப்பில் தி.மு.க.வுக்கு 48 சதவீத மக்கள் ஆதரவு இருக்கிறது என்றும். அ.தி.மு.க.வுக்கு 34 சதவீத ஆதரவுதான் இருக்கிறது என்றும் அரங்கேறியுள்ளது.

இது அ.தி.மு.க.வின் செல்வாக்கு குறைந்து வருகிறதோ என்ற தோற்றத்தை மக்கள் மத்தியில் உருவாக்கியிருக்கிறது. இது போன்ற காலகட்டத்தில் மற்ற கட்சிகள் தங்களுக்கு உள்ள முதலமைச்சர் ஆசையை எப்படி நிறைவேற்றிக் கொள்ளப் போகின்றன என்பது கேள்விக்குறிதான்.

இதனால் அ.தி.மு.க. அல்லது தி.மு.க. தயவின்றி மற்ற கட்சிகளால் தங்கள் முதல்வர் பதவிக் கனவை நனவாக்க முடியாது. அதற்கு இந்த இரு திராவிடக் கட்சிகளும் இப்போதைக்கு இடமளிக்கப் போவதில்லை.

பிறகு எப்படி இந்த மாதிரி முதல்வர் பதவியை முன்னிறுத்தி மற்ற கட்சிகள் பிரசாரத்தில் குதித்து விட்டன. பாட்டாளி மக்கள் கட்சிக்கு எப்படியாவது வன்னியர் வாக்கு வங்கியை தங்கள் பக்கம் முழுமையாக திருப்ப வேண்டும்.

அதனால் அன்புமணி ராமதாஸை முதல்வர் வேட்பாளராக அறிவித்துள்ளது அக்கட்சி. அதே நேரத்தில் மற்ற கட்சிகளுக்கு இப்படியொரு நோக்கம் இல்லை. தே.மு.தி.க.விற்கோ தி.மு.க.வும் அ.தி.மு.க.வும் அக்கட்சியின் தயவை எதிர்நோக்கி காத்திருக்கும் சூழ்நிலை எழலாம். அது போன்ற நேரத்தில் மூன்றாவது பெரிய கட்சி நான்தான் என்ற நிலைப்பாட்டை எடுக்க இந்த முழக்கம் உதவும் என்று விஜயகாந்த் நினைத்திருக்கலாம்.

தமிழ் மாநில காங்கிரஸ், ம.தி.மு.க. போன்ற கட்சிகளுக்கு தேர்தல் நேரத்தில் தங்களுக்கு வேண்டிய தொகுதிகளை அ.தி.மு.க.வோ அல்லது தி.மு.க.வோ ஒதுக்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கிறது.
அதற்கு வழி அமைக்கும் விதத்தில் நம் வியூகம் இருக்க வேண்டும் என்று முடிவு செய்து 'முதலமைச்சர் பதவி' என்ற முழக்கத்தைக் கையில் எடுத்துள்ளன.

அ.தி.மு.க. வேண்டாம் என்று நினைக்கும் பட்சத்தில் தி.மு.க.வை தவிர்த்து விட்டு மற்ற கட்சிகளை தேர்வு செய்வோம் என்ற எண்ணம் மக்கள் மனதில் இதுவரை எழவில்லை.

சமீபத்தில் வெளிவந்துள்ள ஆன் லைன் சர்வேக்களும் அப்படிப்பட்ட சூழல் இருப்பதாக வெளிப்படுத்தவில்லை. இது வரை நடைபெற்ற தமிழக தேர்தல்களில் தி.மு.க.வுக்கு அ.தி.மு.க. மாற்று என்றும், அ.தி.மு.க.வுக்கு தி.மு.க. மாற்று என்றும் நிலைமை அப்படியே தொடர்ந்து வருகிறது.

குறிப்பாக சமீபத்தில் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. தோல்வி அடைந்து கூட அ.தி.மு.க.வுக்கு மோடி தலைமையில் நின்ற கூட்டணி கூட மாற்று என்ற சூழல் வரவில்லை.
தி.மு.க.தான் மாற்று என்பது நாடாளுமன்றத் தேர்தலிலும் சரி, அதன் பிறகு நடைபெற்ற திருவரங்கம் இடைத் தேர்தலிலும் சரி தொடருகிறது.

ஆகவே எத்தனை முதலமைச்சர் வேட்பாளர்கள் களத்தில் நின்றாலும் அ.தி.மு.க. மற்றும் தி.மு.க. சார்பில் யார் முதலமைச்சர் வேட்பாளர் என்பதே தமிழக தேர்தல் களத்தின் முடிவினை தீர்மானிக்கும் சக்திகளாக விளங்கப் போகிறது.

அந்த நிலைமையில் இது வரை மாற்றமில்லை. இப்போது மத்தியில் ஆட்சியிலிருக்கும் பா.ஜ.க.வின் மத்திய அமைச்சர்கள் எல்லாம் நாடாளுமன்றக் கூட்டத் தொடர் முடிந்தவுடன் தமிழகத்துக்கு படையெடுக்கப் போகிறார்கள்.

'அ.தி.மு.க.வும் தி.மு.க.வும் தமிழகத்தின் வளர்ச்சியை கெடுத்து விட்டார்கள்' என்ற பிரசாரத்தை மேற்கொள்ளப் போகிறார்கள்.

ஏன், பிரதமர் நரேந்திரமோடியே களத்துக்கு வந்து பிரசாரம் செய்யப் போகிறார் என்று பா.ஜ.க.வின் தமிழக  தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் அறிவித்திருக்கிறார்.

அதன் பின்னர்தான் இப்போது ரேஸில் இருக்கும் முதலமைச்சர் வேட்பாளர்களில் யாருக்கு வாய்ப்பு இருக்கிறது, முக்கியமாக தி.மு.க. மற்றும் அ.தி.மு.க.வின் முதல்வர் வேட்பாளர்கள் தவிர மற்ற கட்சிகளின் முதல்வர் வேட்பாளர்களுக்கு தமிழகத்தில் ஒரு வாய்ப்பு இருக்கிறதா என்பது தெரிய வரும்.

பா.ஜ.க.வின் பிரசாரத்தை எதிர்நோக்கி தி.மு.க.வும் அ.தி.மு.க.வும் கூட பதற்றத்துடன் உன்னிப்பாக கண்காணிப்புடன் இருக்கிறது என்பதே தமிழக அரசியல் நிலவரம்!

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .