Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை
Thipaan / 2015 ஏப்ரல் 29 , பி.ப. 10:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
நீண்ட இழுபறிகளுக்குப் பின், 174 திருத்தங்களுடன் 19ஆவது திருத்தச் சட்டம் நேற்றுமுன்தினம் செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 28, 2015) நிறைவேற்றப்பட்டிருக்கின்றது. இலங்கை நாடாளுமன்ற வரலாற்றில் அரசியலமைப்புத் திருத்தமொன்று 211 மேலதிக வாக்குகளினால் நிறைவேற்றப்பட்ட முதலாவது சந்தர்ப்பமாக இதனைக் கொள்ள முடியும்.
நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியின் அதிகார எல்லைகளை மட்டுப்படுத்தி நாடளுமன்றத்துக்கும் அமைச்சரவைக்கும் அதிகாரங்களைப் பகிரும் முகமாகவே, 19ஆவது திருத்தச் சட்டம், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான தேசிய அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்டது. ஆனால், குறித்த அரசியலமைப்புத் திருத்தத்தை, எதிர்க்கட்சியினால் முன்வைக்கப்பட்ட பெருமளவான (111) மாற்றங்களைச் செய்த பின்னரே நிறைவேற்ற முடிந்திருக்கின்றது.
இது, தேசிய அரசாங்கத்தின் தோல்வியாகவே கருதப்படுகின்றது. ஆனால், அந்தத் தோல்வியைத் தாண்டிய வெற்றியொன்றை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் பெற்றிருக்கின்றார்கள் என்றும் கொள்ள முடியும்.
மைத்திரிபால சிறிசேனவின் அரசியல் வாழ்வில் கடந்த ஜனவரி மாதம் 08ஆம் திகதி பெற்றுக் கொள்ளப்பட்ட ஜனாதிபதி தேர்தல் வெற்றி, அவர் என்றைக்குமே எதிர்பார்க்காத ஒன்று. ஆனால், அந்த வெற்றியைத் தாண்டி தன்னுடைய பெயரை வரலாற்றில் பதிவு செய்வதற்கான சந்தர்ப்பத்தை 19ஆவது திருத்தச் சட்டத்தை நிறைவேற்றியதனூடு செய்திருக்கின்றார்.
ஜனாதிபதி பதவியை அடைவதற்கு ரணசிங்க பிரேமதாஸ, சந்திரிகா குமாரதுங்க, மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர் மேற்கொண்ட பிரயத்தனங்களில் குறைந்தளவைக் கூட மைத்திரிபால சிறிசேன செய்திருக்கவில்லை. ஜனாதிபதி வேட்பாளராக தன்னை முன்னிறுத்த ஒப்புக்கொண்டது மட்டுமே அவர் மேற்கொண்ட கத்தி முனைத் தீர்மானம். மற்றப்படி, அவருக்கான வெற்றியை பொது எதிரணியும் இளைஞர்களும் வெளிநாடுகளும் ஊடகங்களும் இணைந்து பெற்றுக் கொடுத்தன.
எனினும், தனக்குக் கிடைத்த வெற்றியை வைத்துக் கொண்டு அதிகாரங்களைப் பெருக்கிக் கொள்ளும் சந்தர்ப்பம் மைத்திரிபால சிறிசேனவுக்கும் வாய்த்தது. அவர் அதனைச் செய்யாமல், ஜனநாயக விழுமியங்கள் மீது தான் கொண்ட நம்பிக்கையை வெளிப்படுத்தியிருக்கின்றார். இதனை மக்கள் ஜனநாயகத்தின் குறிப்பிட்டளவான வெற்றியாகக் கொள்ள முடியும்.
ஜே.ஆர்.ஜெயவர்த்தன அரசாங்கம், 1978ஆம் ஆண்டு அறிமுகப்படுத்திய அரசியலமைப்புத் திருத்தங்களுக்கு அமைய நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை இலங்கைக்கு அறிமுகப்படுத்தப்பட்டது. சுமார் 37 வருடங்களாக அந்த முறையின் கீழே இலங்கை ஆளப்பட்டிருக்கின்றது.
நாடாளுமன்றம் மற்றும் நீதிமன்றங்களின் சுயாதீனங்களில் தலையீடு செய்யுமளவுக்கான தனிநபர் ஆளுகையை நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறை வழங்கியிருந்தது.
அதனை, மாற்றுவது நாட்டு ஜனநாயகத்தை பாதுகாப்பதாகக் கொள்ள முடியும். கடந்த காலங்களில் ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிக்கும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் எமக்கான (மக்களின்) ஜனநாயக உரிமையைக் கொண்டு சர்வாதிகாரத்தை தேர்வு செய்கின்றோம் என்கிற எண்ணப்பாடு எழுந்திருக்கின்றது.
நிறைவேற்று அதிகாரத்தை அறிமுகப்படுத்திய ஐக்கிய தேசியக் கட்சியே, அந்த அதிகாரத்தினால் அதிகம் பழிவாங்கப்பட்ட கட்சியாகும். என்றைக்குமே இலங்கை அரசியலில் தன்னை (ஐ.தே.க.வை) தோற்கடிக்க முடியாத சூழ்நிலையை உருவாக்க வேண்டும் என்று முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்த்தன கொண்டுவந்த அரசியலமைப்புத் திருத்தம், அவரது மருமகனான ரணில் விக்கிரமசிங்கவை இரண்டு தசாப்தங்களாக அலைக்கழித்திருக்கின்றது. அதுதான், ஐக்கிய தேசியக் கட்சி, 19ஆவது திருத்தச் சட்டத்தினை உறுதியாக முன்மொழிய வைத்தமைக்கான காரணம். மாறாக, ஜனநாயகத்தின் மீது ஐக்கிய தேசியக் கட்சி பாரிய அக்கறை கொண்டிருக்கின்றது என்று நம்புவதற்கான சூழல் இன்னமும் அமையவில்லை.
நாடாளுமன்றத்தில் அறுதிப்பெரும்பான்மையுள்ள ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமைத்துவத்தை தவிர்க்க முடியாமல் ஏற்றாலும், மஹிந்த அபிமானிகளினாலும் ரணில் வெறுப்பாளர்களினாலும் நிறைந்திருக்கின்றது.
இந்த விடயங்களை சரியாக கையாண்டாலேயன்றி தன்னால் எதனையும் செய்ய முடியாத சூழல் இருக்கின்றது என்பதை மைத்திரிபால சிறிசேன உணர்ந்து வைத்திருக்கின்றார். அதுதான், நீண்ட விட்டுக் கொடுப்புகளுக்குப் பின்னர் 19ஆவது திருத்தச் சட்டம் நிறைவேற்றப்பட வேண்டியும் வந்திருக்கின்றது.
எவ்வளவு விட்டுக்கொடுப்பைச் செய்தாவது, 19ஆவது திருத்தச் சட்டத்தை நிறைவேற்றுவதே மக்களின் நம்பிக்கையை மீண்டும் வெற்றி கொள்ள உதவும் என்பதில் மைத்திரிபால சிறிசேனவும் ரணில் விக்கிரமசிங்கவும் தெளிவாக இருந்தார்கள். அதுதான், வரவுள்ள பொதுத் தேர்தலை மஹிந்த ராஜபக்ஷ பூச்சாண்டிகளைத் தாண்டி வெற்றி கொள்வதற்கான வழி என்றும் நம்புகின்றார்கள். அந்த நம்பிக்கையில் பெருமளவு உண்மையும் இருக்கின்றது.
கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது பொது எதிரணி (மைத்திரி- ரணில்- எதிர்க்கட்சிகள் கூட்டு), நாட்டு மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளில் மிக முக்கியமானது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை ஒழிப்பு (அல்லது அதிகாரங்களின் மட்டுறுத்தல்). ஆக, அதனை செய்யாது பொதுத் தேர்தலை எதிர்கொள்வது என்பது முன்னாள் ஜனாதிபதிகள் செய்த அதே தவறினைச் செய்வதற்கு ஒப்பானது.
அதாவது, முன்னாள் ஜனாதிபதிகளும் நிறைவேற்று அதிகாரத்தை ஒழிப்பதாக ஒவ்வொரு தேர்தலிலும் வாக்குறுதியளித்து அதனைக் காற்றில் பறக்க விட்டிருக்கின்றார்கள். அந்த வகையில், மைத்திரிபால சிறிசேன- ரணில் விக்ரமசிங்க கூட்டினால் வாக்குறுதியை பகுதியளவேனும் நிறைவேற்ற முடிந்திருக்கின்றது என்பது வெற்றி. அதனை மக்களிடம் வெற்றிக்கான காரணமாகவும் முன்வைக்க முடியும். அதுபோக, வாக்குறுதியை முழுமையாக நிறைவேற்ற முடியாமைக்கான காரணமாக, மஹிந்த பூச்சாண்டியையும் கடந்த அரசாங்கத்தின் ஊழல்வாதிகளையும் இலகுவாக கைநீட்டவும் முடியும்.
இன்னொரு பக்கம், நாம் எதிர்பார்த்த திருத்தங்களுடன் 19ஆவது திருத்தச் சட்டம் அமையவில்லை என்பதில் ஐக்கிய தேசியக் கட்சி ஆழ்ந்த அதிருப்தியுடன் இருக்கின்றது. பொதுத் தேர்தலின் பின்னர் புதிய திருத்தங்களைச் செய்வதற்கான உத்தேசங்களுடன் இருப்பதாக அந்தக் கட்சியின் முக்கியஸ்தரான அமைச்சர் மங்கள சமரவீர ஏற்கெனவே குறிப்பிட்டிருக்கின்றார்.
ஐக்கிய தேசியக் கட்சி, ஜனாதிபதியிடம் இருந்து அதிகாரங்களை பெற்றுக் கொள்வதில் எந்த விட்டுக் கொடுப்பையும் செய்வதற்கு தயாராகவில்லை. மாறாக, பிரதமரிடம் (ரணிலிடம்) அதிகாரங்களைக் குவிப்பதற்கான வாய்ப்புக்களை உருவாக்குவதிலேயே குறியாக இருக்கின்றது.
19ஆவது திருத்தச் சட்டத்தை நிறைவேற்றுவதற்கு தவிர்க்க முடியாமல் தலையாட்டியிருக்கின்ற ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பெரும்பான்மையான உறுப்பினர்கள், தேர்தல் முறை மாற்றங்களை உள்ளடக்கிய 20ஆவது திருத்தச் சட்டத்தை தமது வெற்றிக்கருவியாக முன்வைத்திருக்கின்றன.
தேர்தல் முறை மாற்றத்தை செய்யாது பொதுத் தேர்தலொன்றுக்கு ஜனாதிபதியோ, பிரதமரோ சென்றால், அதனை வைத்துக் கொண்டு பொதுத் தேர்தலில் களமாடுவார்கள். இதுதான், ரணில் விக்கிரமசிங்கவுக்கான இப்போதைய பெரும் சிக்கல். இந்தச் சிக்கலை அவர் எப்படித் தாண்டப்போகின்றார் என்பதே பொதுத் தேர்தலில் அவரின் வெற்றி வீதத்தின் அளவை தீர்மானிக்கும் ஒன்றாகவும் மாறும்.
ஜனாதிபதித் தேர்தலில் மைத்திரிபால சிறிசேனவை முன்னிறுத்தி ஆட்சி மாற்றமொன்றை உருவாக்குவதே ஐக்கிய தேசியக் கட்சியின் அடிப்படை நோக்கமாக இருந்தது. அதனூடு, தோல்வியின் போக்கிலிருந்த கட்சியை மீளவும் வெற்றிப்படிகளில் ஏற்றுவதற்கான சூழ்நிலைகளை உருவாக்குவதும், ஆட்சியைக் கைப்பற்றுவதும் ஆகும்.
அந்த முயற்சி ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்றாலும் மிகவும் சிக்கல் நிறைந்தது என்று தெரிந்ததுதான். ஆனால், அவற்றை கையாள்வது தொடர்பில் மறைமுகமான வெற்றியை ரணில் விக்கிரமசிங்க ஒவ்வொரு தருணத்திலும் பெற்று வந்திருக்கின்றார். அதனை, அவர் நாடாளுமன்றத்துக்குள்ளும் நிரூபித்து வந்திருக்கின்றார்.
கடந்த கால ஆட்சியில் இடம்பெற்ற ஊழல்கள் தொடர்பில் விசாரணைகளை துரிதப்படுத்துவதற்கான காலத்தைக் கணித்து ரணில் விக்கிரமசிங்க களமாற்றுகின்றார். 19ஆவது திருத்தச் சட்டம் நிறைவேற்றத்துக்;குப் பின்னரான காலத்தை அவர் அதற்காக தெரிவு செய்து வைத்திருக்கின்றார்.
அதுதான், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புக்குள் பாரிய குழப்பங்களை ஏற்படுத்தி நாடாளுமன்றத்தை ஸ்தம்பிக்க வைக்கும். அதனூடு மக்களிடம் நேரடியாக தேர்தலுக்குச் செல்ல முடியும். அப்படியான சூழ்நிலைகளை உருவாக்குவதே, ஐக்கிய தேசியக் கட்சிக்கு தற்போதைக்கு பாதிப்பை வழங்கும் 20ஆவது திருத்தச் சட்டத்தை நிறைவேற்றுவதிலிருந்து தப்புவதற்கான ஒரே வழி. அந்த வழியினை நடைமுறைப்படுத்துவதில் ரணில் விக்கிரமசிங்க எந்த விட்டுக் கொடுப்பையும் செய்யவில்லை என்று கொள்ள முடியும்.
இன்னொரு பக்கம் மஹிந்த பூச்சாண்டியைக் காட்டி, மைத்திரிபால சிறிசேனவை ஓரளவுக்கு தமது கட்டுக்குள் வைத்துக் கொள்ளலாம் என்று நினைத்த ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் ஊழல் குற்றச்சாட்டுக்களை எதிர்கொண்டிருக்கின்றவர்கள், அடுத்த திட்டம் தொடர்பில் சிந்திக்க வேண்டியேற்பட்டிருக்கின்றது.
ஏனெனில், மஹிந்த ராஜபக்ஷவினை மீண்டும் அரசியல் தளத்துக்கு கொண்டு வருவது என்பது அவ்வளவு இலகுவானது அல்ல. மாறாக, கொண்டுவந்தாலும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பினூடு அதனை சாத்தியமாக்குவது என்பது முடியாதது. ஆக, மஹிந்த பூச்சாண்டி என்பது மறைமுகமாக ஐக்கிய தேசியக் கட்சிக்கு வெற்றியைத் தேடிக் கொடுக்கும் சூத்திராமாகவே இருக்கின்றது.
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பிரதான கட்சியான ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பெரும்பான்மை உறுப்பினர்கள், மஹிந்த ராஜபக்ஷவின் மீள்வருகை தொடர்பில் அவ்வளவு ஆர்வம் கொள்ளவில்லை.
மாறாக, தமது ஆளுகையுள்ள அரசாங்கம் அமைய வேண்டும் என்பதே அவர்களின் தற்போதைய நோக்கம். ஏனெனில், பொதுத் தேர்தலின் பின்னர் தேசிய அரசாங்கம் அமைந்தாலும் அது, ரணில் விக்கிரமசிங்கவின் திட்டங்களின் கீழான ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கமாகவே செயற்படும் என்பது வெளிப்படையானது. அதனை, எப்படித் தகர்ப்பது என்றே சுதந்திரக் கட்சியின் முக்கியஸ்தர்கள் இப்போது யோசிக்கின்றார்கள். ஆனால், அதற்கான வழிகள் அவ்வளவு இலகுவாக திறந்துவிடாது.
ஏனெனில், ரணில் விக்கிரமசிங்க அனைத்துப் பக்கத்திலும் பொறிகளை வைத்திருக்கின்றார்.
19ஆவது திருத்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டதினூடு, நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியின் அதிகாரங்கள் முழுமையாக ஒழிக்கப்பட்டிருக்கின்றது என்று யாரும் நம்ப வேண்டியதில்லை. அது உண்மையும் இல்லை.
ஆனால், நிறைவேற்று அதிகாரத்தின் காரங்கள் ஜனநாயகத்தின் வேரை அசைக்குமளவுக்கு இனி நீள்வதற்கான வாய்ப்புக்கள் குறைவு. ஆனால், இவற்றையெல்லாம் தாண்டி, 19ஆவது திருத்தச் சட்டத்தின் நிறைவேற்றம் ரணில் விக்கிரமசிங்கவின் எதிர்கால அரசியல் இருத்தலை தீர்மானிப்பதற்கான கருவியாகவே கொள்ள முடியும். அதனை, அவர் மைத்திரிபால சிறிசேனவின் ஒத்தாசையோடு வெற்றி கொண்டிருக்கின்றார். வரும் நாட்கள் அதற்கான செய்தியை இன்னும் அழுத்தமாகப் பதிவு செய்யும்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
7 hours ago
7 hours ago