2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

சுக்குநூறாகிய மஹிந்தவின் கனவு

Thipaan   / 2015 மே 03 , பி.ப. 10:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

கடந்த வாரம் 19ஆவது அரசியலமைப்புத் திருத்தம் நிறைவேறியதால் தமிழர்களின் கையோங்கும் என மஹிந்த ராஜபக்ஷவை ஆதரிக்கும் சில அமைப்பினர் கூறி வருகின்றனர். நாட்டுப் பிரிவினைக்கு இது காரணமாகும் எனவும் அக்குழுவைச் சேர்ந்த சில பௌத்த பிக்குகள் அத் திருத்தம் நிறைவேறிய உடன் ஊடகவியலாளர் மாநாடொன்றை நடத்திக் கூறினர். சிங்களவர்களின் நலனுக்காக நிறைவேற்று ஜனாதிபதி முறையை பாதுகாக்க வேண்டும் என்ற கருத்துப் பட அவர்கள் அங்கு உரையாற்றினர்.

இது தாம் விரும்பாத சகலவற்றையும் தமிழர்களுக்கும் புலிகளுக்கும் சாதகமானதாக எடுத்துக் காட்டி, சிங்கள மக்களை பயமுறுத்தி அவர்களது ஆதரவை திரட்டும் முயற்சியே தவிர வேறொன்றும் அல்ல.

19ஆவது அரசியலமைப்புத் திருத்தத்துக்கு தமிழ் கட்சிகளும் முஸ்லிம் கட்சிகளும் ஆதரவு வழங்கியமை உண்மை தான். ஆனால், அத் திருத்தத்துக்கும் இனப் பிரச்சினைக்கும் இடையே எவ்விதத் தொடர்பும் இல்லை. உண்மை என்னவென்றால் நிறைவேற்று ஜனாதிபதிகள் இனவாதிகளாக இல்லாவிட்டால் இந்த ஜனாதிபதி முறையே சிறுபான்மை மக்களுக்கு சாதகமானதாக இருக்கும்.

ஏனெனில் முழு நாட்டிலும் மக்களின் வாக்குகளை எதிர்பார்க்கும் ஜனாதிபதி, சிறுபான்மை மக்களின் ஆதரவையும் மனதில் வைத்தே செயற்பட வேண்டும்.

ஆனால், ஒருவகையில் 19ஆவது அரசியலமைப்புத் திருத்தம் குறிப்பாகவே சிறுபான்மை மக்களுக்கு சாதகமானது தான். ஏனெனில் அத் திருத்தம் நிறைவேறியதை அடுத்து இனி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஜனாதிபதியாக வர முடியாது. ஒருவர் இரண்டு முறை தான் ஜனாதிபதியாகலாம் என்ற நிலை அத் திருத்தத்தின் மூலம் மீண்டும் அறிமுகப்படுத்தப்பட்டமையே அதற்குக் காரணமாகும்.

மஹிந்த மட்டுமல்ல, இரட்டை குடியுரிமையுள்ள பசில் ராஜபக்ஷ மற்றும் கோட்டாபய ராஜபக்ஷ ஆகியோருக்கும் இனி இந் நாட்டில் தேர்தல்களில் போட்டியிடவும் முடியாது. ஏனெனில் இலங்கை உட்பட இரண்டு நாடுகளில் குடியுரிமையுள்ளவர்களுக்கு இலங்கையில் தேர்தல்களில் போட்டியிட முடியாது என 19ஆவது திருத்தம் தடை விதிக்கிறது. பசில் மற்றும் கோட்டாபய ஆகிய இருவருக்கும் அமெரிக்க பிரஜா உரிமை இருக்கிறது. சட்டம் சரியோ பிழையே இதற்கும் சிறுபான்மையினர் சந்தோஷப்பட்டு இருப்பார்கள்.  

பொதுவாக பார்ப்பதாயின் 19ஆவது திருத்தம் நிறைவேறியமை பெரும் வெற்றியாகும் என ஒருவர் வாதிடும் அதேவேளை அலட்டிக் கொள்ளும் அளவுக்கு அதில் ஒன்றும் இல்லை என்றும் மற்றொருவர் வாதிடலாம். உண்மையில் சதாகாலம் தாம் பதவியில் இருக்கும் வகையில் மஹிந்த ராஜபக்ஷ அறிமுகப்படுத்திய 18ஆவது அரசியலமைப்புத் திருத்தம் நிறைவேறு முன் இருந்த நிலைமைக்கே நாடு இப்போது வந்துள்ளது.

18ஆவது திருத்தம் நிறைவேறு முன்னரும் நாட்டில் சர்வாதிகார நிறைவேற்று ஜனாதிபதி முறையே இருந்தது. அக் காலத்திலும் பலர் நிறைவேற்று ஜனாதிபதி முறையை ரத்துச் செய்யுமாறு கோரிக்கை விடுத்து வந்தனர்.

சந்திரிகா குமாரதுங்க மற்றும் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர் அக் காலத்தில் தான் நிறைவேற்று ஜனாதிபதி முறையை ரத்துச் செய்வதாக வாக்குறுதியளித்து பதவிக்கு வந்தனர். அக் காலத்தில் நிறைவேற்று ஜனாதிபதிகள் செய்த அத்தனையையும் இன்றும் ஜனாதிபதிகளால் செய்ய முடியும்.

ஜே.ஆர். ஜயவர்தன 1978ஆம் ஆண்டு சர்வாதிகார ஜனாதிபதி முறையொன்றை அறிமுகப்படுத்தினார். 2001ஆம் ஆண்டு மக்கள் விடுதலை முன்னணியானது சந்திரிகாவின் அரசாங்கத்தை தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து 17ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை கொண்டு வரச் செய்தது.

அதன் மூலம் ஜயவர்தன அறிமுகப்படுத்திய நிறைவேற்று ஜனாதிபதியின் அதிகாரங்களை ஓரளவு கட்டுப்படுத்தக்கூடிய சுதந்திர ஆணைக்குழுக்கள் அறிமுகப்படுத்தப்பட்டன.

2010ஆம் ஆண்டு மஹிந்த ராஜபக்ஷ 18ஆவது திருத்தத்தின் மூலம் அந்த கட்டுப்பாடுகளையும் சுதந்திர ஆணைக்குழுக்களையும் ரத்துச் செய்தார். 19ஆவது திருத்தமானது 18ஆவது திருத்தத்தை ரத்துச் செய்து மீண்டும் மேற்படி கட்டுப்பாடுகளையும் ஆணைக்குழுக்களையும் கொண்டு வந்துள்ளது.

19ஆவது திருத்தத்தின் பின்னர் நிலைமை உலக அரசியலில் பழைய சம்பவமொன்றை நினைவூட்டுகிறது. 1987ஆம் ஆண்டு அமெரிக்க ஜனாதிபதி ரொனல்ட் ரேகனும் சோவியத் ஒன்றியத்தின் ஜனாதிபதி மிகாயில் கொர்பசேவும் தத்தமது நாடுகளில் உள்ள அணு ஆயுதங்களில் அரைவாசியை அழிக்க ஒப்பந்தம் ஒன்றை செய்து கொண்டனர்.

அப்போது அதைப் பற்றி கருத்துத் தெரிவித்த அப்போதைய சீன ஜனாதிபதி டெங் ஷியாஓபிங், அவ் வொப்பந்தத்தை வரவேற்பதாகவும் ஆனால், அவ்விரண்டு நாடுகள் தமது அணு ஆயுதங்களை அரைவாசியாக குறைத்துக் கொண்டாலும் அந் நாடுகளில் எஞ்சியுள்ள அணு ஆயுதங்களால் உலகை ஐந்து முறை அழிக்க முடியும் எனவும் குறிப்பிட்டார்.

அதேபோல் 19ஆவது திருத்தம் நல்லதாக இருந்த போதிலும் அது நிறைவேற்றப்பட்ட பின்னரும் ஜனாதிபதிக்குள்ள அதிகாரங்களின் படி நாட்டில் இன்னமும் சர்வாதிகாரமே நிலைத்திருக்கிறது.

இன்னொரு வகையில் 'பிச்சை வேண்டாம், நாயைப் பிடித்தால் போதும்' என்று தான் இப்போது நாடு நடந்து கொண்டுள்ளது. நிறைவேற்று ஜனாதிபதி முறையை அகற்றுமாறு பிச்சை கேட்ட இந்நாட்டு மக்கள் மீது 2010ஆம் ஆண்டு மஹிந்த ராஜபக்ஷவின் 18ஆவது திருத்தம் என்ற கொடிய நாய் பாய்ந்தது. நிறைவேற்று ஜனாதிபதி முறையை ரத்துச் செய்யுமாறு கோரியோர் 19ஆவது திருத்தத்தின் மூலம் மஹிந்தவின் நாயை மட்டும் கட்டிப் போட்டுவிட்டு திருப்தியடைந்துள்ளார்கள். இன்னமும் பிச்சை போடப்படவில்லை.

எவ்வாறாயினும் 19 ஆவது திருத்தத்தின் மூலம் மக்கள் அடைந்த நன்மைகளை எவராலும் மறுக்க முடியாது. அரசியலமைப்புச் சபை மற்றும் சுதந்திர ஆணைக்குழுக்கள் மூலம் ஜனாதிபதியின் சர்வாதிகார அதிகாரங்கள் இப்போது ஓரளவுக்கு கட்டுப்படுத்தப்பட்டுள்ளன.

ஜனாதிபதி நினைத்தவாறு அரச சேவையிலும் நீதித்துறையிலும் உயர் பதவிகளுக்கு ஆட்களை நியமிப்பதன் மூலம் அத்துறைகள் அவரது அடியாட்களால் நிரம்பிவிடுகின்றன.

அதன் பின்னர் அவர் நினைத்தது தான் சட்டம் என்ற நிலை உருவாகிறது. அவரும் அவரது கையாட்களும் நாட்டை சுரண்டி வாழ்வார்கள். எதிர்த்து பேச எவரும் இருக்க மாட்டார்கள். மஹிந்தவின் ஆட்சி காலத்தில் அது தான் நடந்தது.  

இப்போது ஜனாதிபதியால் அவ்வாறு செய்ய முடியாது. ஜனாதிபதியின் அங்கிகாரத்தைப் பெற்று அரசியலமைப்புச் சபை சுதந்திர ஆணைக்குழுக்களை நியமிக்கும். மறுபுறத்தில் ஆரசியலமைப்புச் சபையின் அங்கிகாரத்தோடு ஜனாதிபதி, உயர் நீதி மன்ற மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்கள், சட்ட மா அதிபர், கணக்காய்வாளர் நாயகம் போன்றவர்களை நியமிப்பார்.

ஏனைய முக்கிய பதவிகளுக்கு அந்தந்த துறையை சார்ந்த சுதந்திர ஆணைக்குழுக்கள் ஆட்களை நியமிக்கும். எனவே, ஜனாதிபதியின் கையாட்கள் முக்கிய பதவிகளுக்கோ நீதியரசர்களாகவோ நியமிக்கப்படும் வாய்ப்பு மிகவும் குறைவாகவே இருக்கிறது.

கடந்த வாரம் வரை நாட்டின் ஜனாதிபதி உத்தியோகபூர்வமாகவோ தனிப்பட்ட முறையிலோ எதை செய்தாலும் அவருக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்ய முடியாது இருந்தது. 19ஆவது திருத்தம் அந்த நிலையை மாற்றியிருக்கிறது. இப்போது ஜனாதிபதியின் செயற்பாடுகள் தொடர்பாக சட்ட மா அதிபருக்கு எதிராக அடிப்படை உரிமை மீறல் வழக்குகளை தாக்கல் செய்யலாம். இது மக்கள் பெற்ற மாபெரும் வெற்றியாகும்.  

ஒருவர் இருமுறை தான் ஜனாதிபதியாகலாம் என்று இப்போது அரசியலமைப்பு மாற்றப்பட்டுள்ளது. ஒரு கொடுங்கோலன் ஜனாதிபதி பதவிக்கு வந்தால் குறைந்த பட்சம் 10 ஆண்டுகளிலாவது நாடு அந்த ஜனாதிபதியிடம் இருந்து விடுதலை பெறும் வாய்ப்பு இப்போது ஏற்பட்டுள்ளது.

நாட்டின் அமைச்சர்களின் எண்ணிக்கையும் 19ஆவது திருத்தத்தின் மூலம் 30 ஆக வரையறுக்கப்பட்டுள்ளது. பிரதி மற்றும் ராஜாங்க அமைச்சர்களின் எண்ணிக்கை 40 ஆகும். இதுவும் அதிகம் தான். ஆனால், இப்போது அதற்கு ஒரு எல்லை இருக்கிறது.

ஆனால், இரு பிரதான கட்சிகள் ஒன்று சேர்;நது ஆட்சி அமைத்தால் இந்த எல்லை இல்லாமல் போகிறது. அது நாகரிகமற்றதாகவே தெரிகிறது. இரு கட்சிகள் ஒன்று சேரும் அளவுக்கு நாட்டில் நெருக்கடி நிலை இருந்தால் கட்சிகளுக்கு அமைச்சர் பதவிகளை லஞ்சமாக கொடுத்து, அவற்றை ஒன்று சேர்க்கத் தேவையில்லை.

அதேவேளை அரசியல் கட்சிகள் ஒன்று சேர்ந்தாலும் நாட்டில் அமைச்சுக்களுக்கான துறைகளின் எண்ணிக்கை அதிகரிப்பதில்லை. எனவே, அமைச்சர்களின் எண்ணிக்கை அதிகரிக்கத் தேவையில்லை.

19ஆவது திருத்தத்தின் மூலம் இந்த அளவுக்காவது ஜனாதிபதியின் அதிகாரங்களை கட்டுப்படுத்திக் கொண்டதன் பெருமையின் பெரும் பகுதி கோட்டே நாக விகாராதிபதி மாதுளுவாவே சோபித்த தேரருக்கே வழங்கப்பட வேண்டும்.

அரசியல் கட்சிகள் வேறு பிரச்சினைகளை தூக்கிப் பிடித்துக் கொண்டு இருக்கும் போது, தனி நபராக நிறைவேற்று ஜனாதிபதி முறைக்கு எதிராக போர்க் கொடி தூக்கியவர் அவரே. பின்னர் தமிழ், முஸ்லிம் கட்சிகள் உட்பட அரசியல் கட்சிகள் அவரது போராட்டத்தில் இணைந்து கொண்டன.

அடுத்ததாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் மக்கள் விடுதலை முன்னணிக்கும் ஐக்கிய தேசிய கட்சிக்கும் பெருமை வழங்கப்பட வேண்டும். தமது சொந்தப் பிரச்சினைகளின் காரணமாக இந்தப் போராட்டத்தில் இணைந்து கொண்டாலும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தமது அதிகாரங்களை குறைக்கும் விடயத்தில் காட்டிய அர்ப்பணிப்பு தனிச் சிறப்பானது.

இந்த விடயத்தில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கடசியும் மஹிந்த ராஜபக்ஷவின் கையாட்களும் செய்த இடையூறுகளை காட்டி வேண்டுமென்றால் அவர் தமது அதிகாரங்களை இந்தளவாவது குறைக்காமல் இருந்திருக்கலாம்.

19 ஆவது திருத்தத்தை நிறைவேற்றிக் கொள்ள மிகக் கூடுதலான வாக்குகளை வழங்கிய ஸ்ரீலசுக இந்த விடயத்தில் மிகக் குறைந்த பெருமைக்குரியதாகிவிட்டது. ஏனெனில் விமல் வீரவன்சவின் உவமையொன்றை பாவித்துக் கூறுவதாயின் நாயை குளிப்பாட்ட இழுத்துச் செல்வதைப் போல் ஜனாதிபதியானவர் ஸ்ரீலசுகவை இழுத்துச் சென்றே வாக்களிக்க வைத்தார்.

சந்திரிகா குமாரதுங்கவினதும் மஹிந்த ராஜபக்ஷவினதும் நடவடிக்கைகளோடு ஒப்பிடுகையில் மைத்திரிபாலவின் தியாகம் மிகப் பாரதூரமானது. நிறைவேற்று ஜனாதிபதி முறையை ரத்துச் செய்வதாக வாக்குறுதியளித்த பதவிக்கு வந்தும் அதற்காக ஆதரவளிக்க ஐக்கிய தேசிய கட்சி முன்வந்த நிலையிலும்; சந்திரிகா தமது வாக்குறுதியை நிறைவேற்றவில்லை. இனப் பிரச்சினைக்கான தீர்வோடு தான் அதனை செய்வேன் என அவர் அந்த சந்தர்ப்பத்தை கைவிட்டார்.

அவ்வாறே வாக்குறுதியளித்து பதவிக்குவந்த மஹிந்த, மூன்றில் இரண்டு வாக்குப் பலத்தை திரட்டிக் கொண்டு அதன் மூலம் தமது அதிகாரங்களை மேலும் அதிகரித்துக் கொண்டு தாம் சதாகாலம் பதவியில் இருக்கும் வகையிலும் சட்டத்தை மாற்றிக் கொண்டார். அவர்களோடு ஒப்பிடும் போது மைத்திரிபாலவை பரராட்டாமல் இருக்க முடியாது.  

19ஆவது திருத்தம் நிறைவேற்றப்பட்டமையினால் தேற்கடிக்கப்பட்டவர் மஹிந்த ராஜபக்ஷவே. மீண்டும் ஜனாதிபதியாகும் அவரது கனவு இனி நனவாகப் போவதில்லை.

அவர் இனி அரசியலுக்கு வருவதாக இருந்தால் பெறக்கூடிய மிக உயர்ந்த பதவி பிரதமர் பதவியே. அப்போதும்; மற்றொரு ஜனாதிபதியின் கீழ் தான் அவர் செயற்பட வேண்டும். அரச தலைவராக இருந்த ஒருவர் அவ்வாறு செயற்படுவது எவ்வளவு உகந்தது என்பது கேள்விக்குறியே.

நிறைவேற்று ஜனாதிபதி முறை முற்றாக ரத்துச் செய்யப்பட்டால் மீண்டும் பிரதமராக அரச தலைவராகும் வாய்ப்பு மஹிந்தவுக்கு கிடைக்கும். அதற்கு தடையாக இருந்தவர்கள் அவரை ஆதரிப்பவர்களே.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .