2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

தமிழகத்தில் தீவிரமாகும் ஊழல் பிரசாரம்?

Thipaan   / 2015 மே 05 , மு.ப. 09:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஊழல் புகார்கள் இப்போது தமிழக ஆளுநர் ரோசய்யா தங்கியிருக்கும் ராஜ்பவனைத் தட்டத் தொடங்கி விட்டன.

பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டு, அ.தி.மு.க. அமைச்சர்களின் ஊழல் புகார் குறித்து விசாரிக்க ஆளுநருக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து, காங்கிரஸ் கட்சியின் சார்பில் அதன் தமிழக தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் பேரணி ஒன்றை நடத்தி 'அ.தி.மு.க. ஆட்சியில் 25 துறைகளில் ஊழல். இது பற்றி விசாரிக்க வேண்டும்' என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்த பேரணியில் முன்னாள் மத்திய நிதி அமைச்சர்  ப. சிதம்பரமே கலந்து கொண்டிருக்கிறார்.
சென்னை உயர்நீதிமன்றத்தில் ஊழல் புகார் பற்றி விசாரிக்க கோரும் வழக்கு நிலுவையில் இருக்கும் நேரத்தில் பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் டாக்டர் ராமதாஸ் 'உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை கமிஷன் அமைக்க வேண்டும்' என்று அறிக்கை விடுத்துள்ளார்.

ஆனால், முக்கிய எதிர்க்கட்சியான தி.மு.க.வோ இது பற்றி வாய் திறக்காமல் இருக்கிறது. மக்கள் மன்றத்தில் அ.தி.மு.க.வினரின் ஊழல் பற்றி பேசுகிறார்கள். பிரசாரம் செய்கிறார்கள். ஆனால், ஆளுநரிடம் ஊழல் புகார் கொடுப்போம் என்று அறிவித்துவிட்டு சுமார் மூன்று மாதங்களாக அமைதியாக இருக்கிறது தி.மு.க.

மற்ற கட்சிகள் ஊழல் புகார் கொடுத்து அ.தி.மு.க.வுக்;கு கெட்ட பெயர் ஏற்படுத்தட்டும். இறுதி ரவுண்டில் நாம் களத்துக்;கு வரலாம் என்று காத்திருக்கிறதா அல்லது அக்கட்சியை மிரட்டிக் கொண்டிருக்கும் 2ஜி வழக்கு இப்படியொரு பிரசாரம் மேற்கொள்வதற்கு தடையாக இருக்கிறதா என்பது தெரியவில்லை.

ஏனென்றால், 2ஜி விவகாரத்தில் இதுவரை இரு வழக்குகள் தி.மு.க.வுக்கு எதிராக நடைபெற்றுக் கொண்டிருக்க இப்போது மூன்றாவதாக ஒரு எப்.ஐ.ஆர். போட வேண்டும் என்று உச்சநீதிமன்றத்திடம் சி.பி.ஐ. கோரிக்கை வைத்து, அந்த விவகாரம் ஜூலை மாதத்துக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

அதில் எப்.ஐ.ஆர். போடுவதற்கு உச்சநீதிமன்றம் அனுமதி அளித்தால் 2ஜியில் தி.மு.க. சந்திக்கும் மூன்றாவது வழக்காக வந்துவிடும்.

2ஜி சாட்சியங்களை அழிக்க தி.மு.க.வில் உள்ளவர்களும் அப்போது இருந்த சில அதிகாரிகளும் பேசிய உரையாடல்தான் மூன்றாவது வழக்குக்;கு அஸ்திவாரம்.

இதற்கு முன்பு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல்கள் 'ஊழல் புகாரை' முன் வைத்து வெற்றி, தோல்விகளை நிர்ணயித்தது. 1977ல் தி.மு.க. தோற்றதற்கும் பின்னர் 1996ல் அ.தி.மு.க. தோற்றதற்கும் மாநில அரசு நிர்வாகத்தில் இரு கட்சிகள் மீதும் அப்போது சுமத்தப்பட்ட ஊழல் குற்றச்சாட்டுகள் முக்கியக் காரணம்.

ஆனால், 2011ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க. தோல்விக்கு அந்தக் கட்சி மத்திய அரசில் பங்கேற்ற போது நடைபெற்றதாக கூறப்பட்ட '2ஜி ஊழல்' தீர்மானிக்கும் சக்தியாக இருந்தது.

இப்போது மீண்டும் அ.தி.மு.க.வுக்கு மாநில அரசு நிர்வாகத்தில் தலை தூக்கியுள்ள ஊழல் குற்றச்சாட்டுகள் அக்கட்சியின் வெற்றிக்கு வேட்டு வைப்பதாக அமைந்து விடும் போலிருக்கிறது.
இதற்கு காரணம் அ.தி.மு.க. மற்றும் தி.மு.க. ஆகிய இரு கட்சிகளுமே 'ஊழல் குற்றச்சாட்டு' வளையத்தில் சிக்கிக் கொண்டிருப்பதுதான்.

தி.மு.க. எதிர்கட்சியாக இருப்பதால், 2ஜி ஊழல் புகார் தாக்கம் 2011இல் அக்கட்சியின் வெற்றியைப் பாதித்தது போல் இந்த முறை பாதிக்காது என்றே தெரிகிறது. ஏனென்றால் எதிர்கட்சியில் இருப்பவர்கள் மீது என்ன புகார் சொல்லப்பட்டாலும் அதை தமிழக மக்கள் ஏற்றுக் கொள்வதில்லை.

இது கடந்த கால தேர்தல் வரலாறு. இப்போது தி.மு.க. தமிழகத்திலும் ஆட்சியில் இல்லை. மத்தியிலும் ஆட்சி அதிகாரத்தில் இல்லை. அதனால் அவர்களுக்கு 'ஊழல் பிரசாரத்தால்' பெரும் தொல்லை வந்து விடும் என்று தோற்றம் ஏதுமில்லை.

அதை மனதில் வைத்துத்தான் தி.மு.க. சார்பில் மதுரையில் பிரமாண்டமான மாநாடு ஒன்றை மே மாத இறுதி வாரத்தில் கூட்டுகிறார்கள். அதில் மு.க. ஸ்டாலின் பங்கேற்கிறார்.

அது மட்டுமின்றி, மாவட்ட செயலாளர்களை அழைத்துப் பேசி வரும் ஸ்டாலின், சட்டமன்றத் தேர்தலுக்குத் தயாராக வேண்டும் என்று கூறி அதற்கான வியூகங்களையும் சொல்லி அனுப்புகிறார்.

தி.மு.க. தலைவர் கருணாநிதியை முதன் முறையாக பல வருடங்களுக்குப் பிறகு விஜயகாந்த் வந்து சந்தித்தார். அதே போல் மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதிய பொதுச் செயலாளர் சீத்தாராம் எச்சூரி தி.மு.க. தலைவர் கடிதம் மூலம் தெரிவித்த வாழ்த்துக்கு தொலைபேசியின் மூலம் நன்றி சொன்னார்.

விஜயகாந்த் சந்திப்பு, சீத்தாராம் எச்சூரி நன்றி தெரிவித்தது ஆகிய இரண்டும் தி.மு.க. தலைமையில் மாற்று அணி உருவாகும் வாய்ப்பு இருப்பதற்கான அடையாளங்களை உருவாக்கிக் கொடுத்துள்ளது.
ஆனால், அ.தி.மு.க.வைப் பொறுத்தவரை மத்தியில் 37 லோக் சபா எம்.பி.க்களுடன் பலமான மூன்றாவது கட்சியாக இருக்கிறது. அக்கட்சிக்கு மத்திய அரசிலும் மரியாதை இருக்கிறது.

பல மத்திய அமைச்சர்களும் பாராட்டுகிறார்கள். அதே போல் மாநில அரசு பல்வேறு சாதனைகளைச் செய்ததாக மத்திய அரசும் அடுத்தடுத்து விருதுகளைக் கொடுக்கிறது.

மத்திய அரசு கொண்டு வரும் முக்கிய மசோதாக்களுக்கு அ.தி.மு.க. ஆதரவு கொடுக்கிறது. இந்நிலையில் மத்திய அரசுக்கு நெருக்கமான கட்சி அ.தி.மு.க. என்ற தோற்றம் தமிழகத்தில் அழுத்தமாக உருவாகி விட்டது.

அதே போல் அக்கட்சி மாநிலத்தில் ஆட்சியில் இருக்கிறது. அதனால் அக்கட்சிக்கு எதிராகக் கூறப்படும் ஊழல் புகார் அவர்களுக்கு தேர்தலில் சோதனையாக இருக்கும் என்றே அரசியல் பார்வையாளர்கள் கருதுகிறார்கள்.

முன்னால் முதல்வர் ஜெயலலிதாவுக்கு எதிரான சொத்துக் குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் தீர்ப்பு வந்து, அதில் அவர் விடுவிக்கப்பட்டிருந்தால் இந்நேரம் தமிழகத்தில் தேர்தல் அறிவிப்பே கூட வந்திருக்கலாம்.

ஆனால், அந்த வழக்கு தள்ளிப் போவது, ஊழல் வழக்கில் எப்படி ஒரு நீதிபதி தீர்ப்பு கொடுக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் வகுப்பு எடுத்திருப்பது எல்லாம் அ.தி.மு.க. வட்டாரத்தில் 'கிலி'யை ஏற்படுத்தியிருக்கிறது.

அதனால்தான் முன்கூட்டியே சட்டமன்றத் தேர்தல் நடந்தால் அதை சந்திக்க அ.தி.மு.க.வினர் தயாராக இருக்க வேண்டும் என்று நாடாளுமன்ற துணை சபாநாயகர் தம்பித்துரையே அறிவித்த பின்னரும் இப்போது முன்கூட்டியே தேர்தல் குறித்து யார் மட்டத்திலும் பேச்சு மூச்சு இல்லாமல் இருக்கிறது.

முன்கூட்டியே தேர்தல் வைத்தால் பாதிப்பு வந்து விடுமோ என்ற தயக்கம் இருப்பதால்தான் கோயில்களில் பூஜை, காவடி எடுப்பு என்ற போர்வையில் பல்வேறு நலத்திட்டங்கள் மக்களுக்கு வழங்கப்படுகிறது.

பால்குடம் எடுத்தால் குடம் இலவசம் என்பன போன்ற மக்களைக் கவரும் தீவிர பிரசாரத்தில் அ.தி.மு.க. அமைச்சர்கள் ஈடுபட்டுள்ளார்கள்.

2006 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பு வந்த சுனாமிப் பேரழிவிற்கு அ.தி.மு.க. அரசு வழங்கிய நிதியுதவிதான் தேர்தல் பிரசாரத்துக்கு அப்போது பெரும் கை கொடுத்தது.

அதே போல் இப்போது பெங்களூர் சொத்துக் குவிப்பு வழக்கில் கொடுத்த தண்டனையிலிருந்து ஜெயலலிதா விடுபட்டு முதலமைச்சராக வேண்டும் என்ற பிரார்த்தனைகள் 2016ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தேர்தல் பிரசாரத்துக்கு அ.தி.மு.க.வுக்கு பயன்படும் போலிருக்கிறது.

இப்படி அ.தி.மு.க. மீதான ஊழல் புகார்கள் இப்போது தமிழகத்தில் விஸ்வரூபம் எடுத்து வருகிறது.
மற்ற எதிர்கட்சிகள் இதுபற்றி பிரசாரத்தில் குதித்து விட்டாலும் இறுதி ரவுண்டில் தி.மு.க.வும் இதே மாதிரி பிரசாரத்தில் குதிக்கும்.

அப்போது தேர்தல் சூழ்நிலைகள், அதற்கான முன்னோட்டங்கள் எல்லாம் தமிழகத்தில் முற்றிலும் மாறுபட்டு நிற்கும் என்றே தெரிகிறது.

பா.ஜ.க.வின் சார்பில் உள்ள மத்திய அமைச்சர்கள் அனைவரும் தமிழகத்தில் உள்ள 32 மாவட்டங்களுக்கும் திடீர் விஸிட் அடித்து 'மக்களுடன் மத்திய அரசு' என்ற திட்டத்தை அறிமுகப்படுத்துகிறார்கள்.

'நாங்கள் நாற்பது லட்சம் உறுப்பினர்கள் சேர்த்து விட்டோம்' என்று கூறியிருக்கும் தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை சவுந்திரராஜன், 'அரசு நிர்வாகம் முடங்கிக் கிடக்கிறது.

விரைவில் தேர்தல் வந்தால்தான் தமிழகம் தப்பிக்கும்' என்று அடித்துப் பேசி வருகிறார்.
இந்த தருணத்தில், ஊழல் புகார் பிரசாரத்தின் உச்சத்தில் தமிழக சட்டமன்றத் தேர்தல் நடக்கும் என்பதுதான் இப்போதைக்கு தமிழக அரசியலில் ஏற்பட்டுள்ள புதிய நிலைமை!

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .