2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

தமிழக அரசியலை சூடாக்கிய 'மனம் திறந்த மடல்'

Thipaan   / 2015 மே 11 , பி.ப. 10:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலினுக்கும் பா.ம.க. முதல்வர் வேட்பாளர் டாக்டர் அன்புமணி ராமதாஸுக்கும் அறிக்கைப் போர் நடந்து முடிந்திருக்கிறது.

தமிழக முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வத்துக்;கு 'நான்கு வருட ஆட்சியில் என்ன சாதித்தீர்கள்' என்று கேள்வி எழுப்பி பகிரங்க கடிதம் ஒன்றை எழுதினார் மு.க. ஸ்டாலின். அக்கடிதத்துக்கு 'மனச்சாட்சி இருந்தால் பதில் சொல்லுங்கள்' என்றும் முதலமைச்சரிடம் கேட்டிருந்தார்.

ஆனால், முதலமைச்சரிடமிருந்து பதில் வரவில்லை. அதற்குப் பதில் பாட்டாளி மக்கள் கட்சி முதல்வர் வேட்பாளர் டாக்டர் அன்புமணியிடமிருந்து பதில் வந்தது.

அவர், ஒரு 'மனம் திறந்த மடலை' மு.க. ஸ்டாலினுக்கு எழுதி 'தமிழ்நாட்டில் நிர்வாகம் கெட்டுப் போனதற்கு தி.மு.க.வும்தானே காரணம். உங்களுக்கு இந்த கேள்வியை எழுப்ப தார்மிக உரிமை இருக்கிறதா' என்று கேட்டார்.

'மதுவிலக்கு, மணல் கொள்ளை, இலங்கை தமிழர் பிரச்சினை, காவிரி மற்றும் முல்லைப் பெரியாறு பிரச்சினை அனைத்திலும் தி.மு.க.வும்தானே தவறு செய்தது' என்ற ரீதியில் அக்கடிதம் அமைந்தது.

தமிழக தேர்தல் களத்தை தனக்கும், ஸ்டாலினுக்குமான போட்டியாக மாற்ற அன்புமணி இந்த கடிதம் மூலம் முயற்சி செய்தார். ஆனால், தி.மு.க. தரப்பில் அந்த யுக்தியைப் புரிந்து கொண்டார்கள். ஸ்டாலின் அன்புமணிக்கு பதில் கொடுக்கவில்லை. அதற்குப் பதில் அன்புமணி வெற்றி பெற்ற தர்மபுரி நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்டு தோற்ற தி.மு.க. வேட்பாளர் தாமரைச் செல்வனை விட்டு பதில் அளிக்க வைத்தார்.

அந்த பதிலில், 'வன்னியர் சமுதாயத்தை நம்ப வைத்து அரசியலுக்கு வந்தீர்கள். தேர்தல் திருடர் பாதை என்று கூறிவிட்டு எம்.எல்.ஏ, எம்.பி. ஆக வந்தீர்கள்.

ஊழல் செய்தால் முச்சந்தியில் நிற்க வைத்து சவுக்கால் அடியுங்கள் என்று கூறி அரசியலுக்கு வந்த நீங்கள், இப்போது மருத்துவக்கல்லூரி ஊழல் வழக்கில் மாட்டி டெல்லி நீதிமன்றத்தின் படிக்கட்டுகளை ஏறிக் கொண்டிருக்கிறீர்கள்.

வன்னியர் சமுதாயத்துக்;காக அரசியலுக்கு வந்த நீங்கள் அந்த சமுதாயத்துக்;கு என்ன சாதித்துக் கொடுத்தீர்கள்' என்று சூடாக கேள்வி எழுப்பினார்.

தாமரைச் செல்வன் முன்னாள் எம்.பி. மட்டுமல்ல வன்னியர் சமுதாயத்தைச் சேர்ந்தவர். தனக்கு தன் சமுதாயத்தைச் சேர்ந்தவர் மூலமாகவே பதிலடி கொடுக்க வைத்த தி.மு.க. மீது டாக்டர் அன்புமணிக்கு கடுங்கோபம் ஏற்பட்டது.

அதுவும் வன்னியர் சமுதாயத்துக்கு பாட்டாளி மக்கள் கட்சி என்ன செய்தது என்று தி.மு.க. தரப்பில் எழுப்பிய கேள்வி அன்புமணிக்கு தீ மிதித்தது போல் இருந்திருக்க வேண்டும்.

உடனே பதிலுக்கு ஸ்டாலினுக்கே மீண்டும் 'மனம் திறந்த மடல்' எழுதினார் டாக்டர் அன்புமணி. இந்த முறை, 'உங்களை தளபதி என்று அழைக்கிறார்கள். ஆனால், நீங்கள் எனக்குப் பதில் சொல்லியிருக்கலாமே. எதற்காக என்னிடம் தோற்றவரை வைத்து பதில் சொல்கிறீர்கள்.
 
இதுதான் அரசியல் நாகரிகமா' என்று கேள்வி எழுப்பி, 'தமிழகத்துக்கு தி.மு.க. செய்த சாதனைகள் பற்றி ஒரே மேடையில் என்னுடன் விவாதிக்கத் தயாரா' என்று சவால் விட்டார் அன்புமணி.

அப்போதும் கூட, அப்படியாவது ஸ்டாலினுக்கு இணையாக நாமும் அரசியல் செய்கிறோம் என்ற இமேஜ் தமிழகத்தில் வரட்டும் என்பதுதான் அன்புமணியின் நோக்கமாக இருந்திருக்க வேண்டும்.
 
ஏனென்றால், முதலமைச்சர் பன்னீர் செல்வத்துக்கு எழுதிய கடிதத்துக்கு 'சம்மன்' இல்லாமல் ஆஜராகி அன்புமணி ஸ்டாலினுக்கு பதில் கடிதம் எழுதியதிலேயே அரசியல் தொடங்கி விட்டது.

அதிலும் அன்புமணியின் கடிதங்களை அரசாங்கத்துக்கு வேண்டிய தினப் பத்திரிகைகள் கூட அதிக முக்கியத்துவம் கொடுத்து வெளியிட்டது மேலும் அன்புமணியின் நோக்கத்தை வெளிப்படுத்திவிட்டது.

நேருக்கு நேர் விவாதம், ஒரே மேடையில் விவாதிக்கத் தயாரா என்பதெல்லாம் தமிழக அரசியல் களத்தில் முக்கிய கட்சிகளாக இருக்கும் அ.தி.மு.க.வுக்கும், தி.மு.க.வுக்கும் இடையே நடக்கும் போட்டிகள்.

அது மாதிரி போட்டிகள் அதற்கு அடுத்த வரிசையில், ஏன் வாக்கு எண்ணிக்கை அடிப்படையில் ஆறாவது இடத்திலிருக்கும் பாட்டாளி மக்கள் கட்சி போன்றவை எழுப்பாத கேள்வி.
 
இந்த சூழ்நிலையில் ஸ்டாலின் ஏதாவது சொல்வார் என்று அன்புமணி நினைத்திருக்கக் கூடும். ஆனால், அவருக்கு இந்த முறையும் ஏமாற்றமே மிஞ்சியது. தன் தொகுதியில் நடக்கும் 'பேசலாம் வாங்க' நிகழ்ச்சியினை முடித்துவிட்டுக் கிளம்பிய ஸ்டாலினிடம் 'அன்புமணி மீண்டும் கடிதம் எழுதியிருக்கிறாரே' என்று கேட்க, ஸ்டாலினோ, 'நான் தகுதியானவர்களுக்கு மட்டுமே பதில் அளிப்பேன்.

மற்றவர்களின் கடிதங்களை பார்ப்பதும் இல்லை. படிப்பதும் இல்லை' என்று கறாராகக் கூறி விட்டார். இதில் அன்புமணி மேலும் கோபம் அடைந்தார். உடனே மூன்றாவதாக ஸ்டாலினுக்கு 'மனம் திறந் மடல்' எழுதினார்.

அதில் தன்னுடைய தகுதிகள் அனைத்தையும் பட்டியலிட்டு, 'எந்த மாதிரி தகுதிகள் இருந்தால் நீங்கள் என்னுடன் நேருக்கு நேர் விவாதிக்க வருவீர்கள். என் தகுதியைச் சொல்லி விட்டேன்.
உங்கள் தகுதிகளை வெளிப்படுத்த முடியுமா' என்று கேட்டார் அன்புமணி ராமதாஸ். இந்த முறையும் ஸ்டாலின் பதில் அளிக்கவில்லை. மீண்டும் தி.மு.க. சார்பில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தாமரைச் செல்வனே பதிலளித்தார்.

அவர், 'முதலில் கீழ்கோர்ட்டில் விசாரணை முடிந்துதான் மேல் கோர்ட்டுக்கு போக வேண்டும். ஆகவே, என்னுடன் விவாதம் நடத்துங்கள். பிறகு தளபதி ஸ்டாலினிடம் போங்கள்' என்று கூறி விட்டு 'விவாதத்தை எங்கே வைத்துக் கொள்ளலாம். தைலாபுரத்திலா (டாக்டர் ராமதாஸ் தோட்டம்)' என்று கிடுக்கிப்பிடி போட்டார்.

இப்படி ஸ்டாலினுக்கு டாக்டர் அன்புமணி ராமதாஸ் மாறி மாறி கடிதம் எழுதினாலும், கடைசி வரை அவருக்கு ஸ்டாலின் பதிலளிக்கவில்லை.

மாறாக அக்கட்சியில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் என்ற அந்தஸ்தில் உள்ள தாமரைச் செல்வன்தான் பதில் சொன்னார்.

போதாக் குறைக்கு கடலூர் மாவட்ட முன்னால் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வமும் பதிலளித்தார். தி.மு.க.வைப் பொறுத்தமட்டில் டாக்டர் அன்புமணி ராமதாஸை முதல்வர் வேட்பாளர் என்ற அந்தஸ்தில் பார்க்கக் கூடாது என்பதில் தெளிவாக இருக்கிறது.

அது மட்டுமல்ல- அன்புமணிக்கும், ஸ்டாலினுக்கும் போட்டி என்ற சூழலுக்கு நிச்சயம் வழி விடக்கூடாது என்பதில் தி.மு.க. உறுதியாக இருந்தது.

அதற்கு காரணம் இல்லாமல் இல்லை.  தி.மு.க. 67ல் இருந்து தமிழகத்தை ஆண்ட கட்சி. ஆனால், பாட்டாளி மக்கள் கட்சியோ இதுவரை எதிர்கட்சியாக கூட இல்லாத கட்சி. தி.மு.க.வைப் பொறுத்தமட்டில் மாநிலம் முழுவதும் வாக்கு வங்கியுள்ள கட்சி. பாட்டாளி மக்கள் கட்சியோ வட மாவட்டங்களில் மட்டும் அதுவும் ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தில் ஒரு பகுதி வாக்குகளை மட்டுமே கொண்ட கட்சி.

அதே போல் தமிழகத்தில் ஒரு வெற்றிக் கூட்டணியை அமைக்கும் சக்தி இரு கட்சிகளுக்குத்தான் உண்டு. அது ஒன்று அ.தி.மு.க. இன்னொன்று தி.மு.க. ஆனால், இதில் எந்த ரகத்திலும் பாட்டாளி மக்கள் கட்சி இடம்பெற முடியாது.

அ.தி.மு.க.வும், தி.மு.க.வும் அனைத்து சமுதாயங்களின் மத்தியிலும் பரவிக் கிடக்கும் கட்சி. ஆனால் பாட்டாளி மக்கள் கட்சியோ குறிப்பிட்ட சமுதாயத்தில் மட்டுமின்றி, பல சமுதாயங்களின் எதிர்ப்பை சம்பாதித்த கட்சி.
அதனால்தான் பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் 'அன்புமணி ராமதாஸ் முதல்வர் வேட்பாளர்' என்று அறிவித்த போது தி.மு.க.வோ அல்லது அ.தி.மு.க.வோ பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.

ஏன் பா.ம.க. சமீபத்தில் கூட்டணி வைத்த பாரதிய ஜனதா கட்சி கூட அவர்களது அறிவிப்பை சீரியஸாக எடுத்துக் கொள்ளவில்லை. 'எங்கள் தலைமையில் கூட்டணி அமைக்க வரும் கட்சிகளை வரவேற்கிறோம்' என்று டாக்டர் ராமதாஸ§ம், டாக்டர் அன்புமணி ராமதாஸ§ம் கிட்டத்தட்ட ஒருவருடமாக மாறி மாறி அறிவித்து வருகிறார்கள்.

ஆனால், இதுவரை எந்தக் கட்சியும் அவர்களிடம் போய் ,'நாங்கள் உங்கள் கூட்டணியில் சேருகிறோம்' என்று கூறவில்லை. இது போன்ற சூழ்நிலையில்தான் தனக்கு ஒரு முக்கியத்துவத்தை ஏற்படுத்திக் கொள்ள, தனது பாட்டாளி மக்கள் கட்சிக்கு ஒரு முக்கியத்துவத்தை ஏற்படுத்த மு.க. ஸ்டாலினை விமர்சித்தார்.

ஆனால், தி.மு.க.வோ அதை மிகவும் லாவகமாகக் கையாண்டு, அன்புமணியின் யுக்தியை முறியடித்து விட்டது.

இந்த ரவுண்டில் தோற்றுள்ள அன்புமணிக்கு சிம்ம சொப்பனமாக இருப்பது டெல்லி நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள ஊழல் வழக்கு. அந்த வழக்கை தொடுத்திருப்பது சி.பி.ஐ. இன்றைக்குப் பார்த்தால் அ.தி.மு.க., தி.மு.க., பா.ம.க. ஆகிய மூன்று கட்சிகளின் மீதுமே சி.பி.ஐ. வழக்குத் தொடுத்து அது நிலுவையில் இருக்கிறது.

அப்படியில்லையென்றால் நீதிமன்ற விசாரணையில் இருக்கிறது. இதில் குறிப்பாக முதல்வர் வேட்பாளராக நிறுத்தப்பட்டிருக்கும் அன்புமணி மீதுள்ள வழக்கு மிக முக்கியமானது.

ஒரு வேளை டெல்லி நீதிமன்றத்தின் தீர்ப்பு அன்புமணிக்கு பாதகமாக வருமேயானால் அவர் தன் எம்.பி. பதவியை இழக்க வேண்டிய சூழல் உருவாகும். அப்படியொரு சூழலில் அவர் தன்னை 'முதல்வர் வேட்பாளராக' முன்னிறுத்திக் கொள்ள முடியுமா என்ற கேள்வி நிச்சயம் எழும்.

ஆனால், இவற்றை எல்லாம் புறந்தள்ளி வைத்து விட்டு, தமிழகத்தில் 'தி.மு.க.வுக்கும், அ.தி.மு.க.வுக்கும் நாங்கள்தான் மாற்று அணி' என்றும், 'ஸ்டாலினுக்கு போட்டியாக நான் இருக்கிறேன்' என்றும், 'திராவிடக் கட்சிகள் தமிழகத்தைக் கெடுத்து விட்டன' என்றும் பிரசாரம் செய்யும் தைரியம் பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் டாக்டர் ராமதாஸ§க்கு இருக்கிறது.

அது உள்ளபடியே பாட்டாளி மக்கள் கட்சிக்கு கிடைத்த பெரும் அதிர்ஷ்டம். ஆனால், தேர்தல் அதிர்ஷ்டம் எந்த வித கூட்டணியும் இல்லாமல் அக்கட்சிக்கு வருமா என்பது கேள்விக்குறி.
அதனால் 'ஸ்டாலினுடன் அன்புமணி' நடத்திய கடிதப் போரைப் பொறுத்தமட்டில் ஒரு 'நிழல்யுத்தம்' போலவே தமிழக அரசியல் கட்சிகள் கருதுகின்றன.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .