2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

குழம்பிப் போன தேசப்பற்றும் அரசியலும்

Thipaan   / 2015 மே 27 , மு.ப. 03:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

வட மாகாணத்தில் இடம்பெற்ற இரண்டு முக்கிய சம்பவங்களால் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் அவரை மீண்டும் பதவியில் அமர்த்த வேண்டும் எனக் கூச்சலிடும் சில பேரினவாதிகளும் வெகுவாக மகிழ்ச்சியுற்றிருப்பதை காண முடிகிறது.

வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் உட்பட சிலர், கடந்த
19ஆம் திகதி முள்ளிவாய்க்காலுக்குச் சென்று போரின் போது உயிர்நீத்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தியமையும் புங்குடுதீவு மாணவி வித்தியா சிவலோகநாதனின் கொலையை அடுத்து கடந்த வாரம் யாழ்ப்பாண நீதிமன்றம் தாக்கப்பட்டமையுமே அந்த இரண்டு சம்பவங்களாகும்.

மஹிந்த ராஜபக்ஷ பதவியல் இருக்கும் போது இதுபோன்ற சம்பவங்களுக்கு இடமளிக்கவில்லை என்றும் ஜனாதிபதி மைத்திரிபாலவின் ஆட்சியின் கீழ் புலிகள் மீண்டும் புத்துயிர் பெற்றிருப்பதையே இச் சம்பவங்கள் காட்டுகின்றன என்றும் மஹிந்தவின் ஆதரவாளர்கள் கூறி வருகின்றனர்.

அவர்களது நோக்கம் மிகத் தெளிவாக இருக்கிறது. தமிழர்களின் நடவடிக்கைகளை காட்டி சிங்கள மக்கள் மனதில் அச்சத்தை ஊட்டி அதனுடாக தமிழ் எதிர்ப்பையும் தூண்டி அதன் மூலமாக அரசியல் லாபமடைவதே அவர்களது நோக்கமாகும்.

அதேவேளை, இராணுவத்தின் போர் வெற்றியை ஏதோ தாம் சாதித்த ஒன்றாக எடுத்துக் காட்டி அதன் மூலமும் சிங்கள மக்கள் மனதில் இடம் பிடித்துக் கொண்டு அரசியல் இலாபம் அடையவும் மஹிந்த முயற்சிக்கிறார். அதற்காக அவர், போர் வெற்றியை கொண்டாடும் அரசாங்கத்தின் வைபவங்களுக்குப் புறம்பாக தாமும் விகாரைகள் தோறும் வைபவங்களை நடத்தி இராணுவ வெற்றியை அரசியலாக்கிக் கொண்டு திரிகிறார்.

போர் வெற்றியை பாவித்து தாமே இந் நாட்டில் வாழும் சிறந்த தேசப்பற்றாளர் என்று காட்டுவதே மஹிந்தவின் நோக்கமாக இருக்கிறது.

அதற்காக மாத்தறையில் கடந்த 19ஆம் திகதி அரசாங்கம் போர் வெற்றியை நினைவு கூரும் வைபவத்தை நடத்துவதற்கு முதல் நாள் அவரது குழுவினர் கொழும்பு விகாரமகாதேவி பூங்காவில் தமது பிரதான போர் வெற்றி விழாவை நடத்தினார். அது வெறுமனே இனவாதத்தை தூண்டும் கூட்டமாகவே அமைந்தது.

படை வீரர்கள் உயிர் தியாகம் செய்து பாதுகாகத்த நாட்டை புலிகளுக்கு மீண்டும் தாரைவார்துவிட வேண்டாம் என மஹிந்த அந்த கூட்டத்தின் போது அரசாங்கத்திடம் கேட்டுக் கொண்டார்.

போர் முடிவடைந்தமையினால் நாட்டில் ஒரு சாரார் மட்டும் பயனடைந்ததாக கூற முடியாது. போரினால் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு நியாயம் வழங்குவதில் பல சிக்கல்கள் இருந்த போதிலும் இன்று நாட்டில் தமிழ், சிங்கள மற்றும் முஸ்லிம் மக்கள் உயிரச்சம் இல்லாமல் வாழ்கிறார்கள் என்பது உண்மை.

புலிகள், பஸ்களில் குண்டு வைப்பார்கள் என தெற்கே மக்கள் அஞ்சுவதில்லை. அதேபோல் புலிகள் தமது பிள்ளைகளை பிடித்துக் கொண்டு போவார்கள் என்றோ அல்லது விமானப் படையினர் விமானக் குண்டு போடுவார்கள் என்றோ வடக்கு, கிழக்கில் வாழும் தமிழ் மக்கள் அஞ்சுவதுமில்லை.

எனவே, சகல இன மக்களும் போர் முடிவினால் பயனடைகிறார்கள். ஆனால் அந்த மக்கள் அனைவருக்கும் ஓரிடத்தில் இருந்து இதனை ஒரு வெற்றியாக கொண்டாட முடியாத நிலையே காணப்படுகிறது.

குறைந்த பட்சம் ஆளும் கட்சிக்கும் எதிர்க் கட்சிக்குமாவது அதனை ஒற்றுமையாக கொண்டாட முடியாது.

அதேவேளை, போர் வெற்றியென்பது தமிழர்களும் பயன் பெறக்கூடியதே என்பதை அம் மக்களுக்கு உணர்த்த அரசாங்கங்களால் முடியாமல் போயுள்ளது.

இன்று இந்த ஞாபகார்த்தங்கள் மிக மோசமான முறையில் அரசியலாக்கப்பட்டுள்ளமையே இதற்குக் காரணமாகும்.

போர் வெற்றிக்கு அடிப்படை காரணம் தமது திறமையே என மஹிந்த நாட்டுக்குக் கூற முயற்சிக்கிறார். அதேபோல், அவர் போர் வெற்றிக்கான அரசியல் தலைமைத்துவத்தை வழங்கினார் என்பதே பரவலாக ஏற்றுக் கொள்ளப்பட்ட கருத்தாகும்.

ஆனால், 2005 ஆம் ஆண்டிலிருந்து கடந்த வருடம் நவம்பர் மாதம் வரை மஹிந்தவின் நன்பர்களாக இருந்து நவம்பர் மாதம் அவரை விட்டுப் பிரிந்த ஜாதிக ஹெல உறுமய அதனை இப்போது ஏற்றுக் கொள்வதில்லை.

தமது கட்சி உட்பட பல சக்திகளால், மஹிந்த போருக்கு அரசியல் தலைமை வழங்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது என ஹெல உறுமய கூறுகிறது. இதனை மஹிந்தவின் ஆதரவாளர்கள் இன்னமும் நிராகரிக்கவில்லை.

பண்டைக் கால மன்னர்களைப் போல் மஹிந்த போருக்காக களத்தில் இறங்கவில்லை. போர் தந்திரோபாயங்களைவகுக்கவும் இல்லை.

ஆனால், அவர் 'நாட்டைக் காப்பாற்றிய தலைவர்' என தெற்கே பலரால் அழைக்கப்படுகிறார். எதிர்க்கட்சியினரும் ஏறத்தாழ அதனை ஏற்றுக் கொள்கிறார்கள்.

ஆயினும் வடக்கைப்; போலவே தெற்கிலும் நினைவஞ்சலிகள் அரசியலாக்கப்பட்டு உள்ள நிலையில், அரசாங்கத்தின் நினைவஞ்சலி நிகழ்ச்சிகளுக்கு மஹிந்த அழைக்கப்படவில்லை.

இராணுவ சேவா வனிதா பிரிவினர் 20ஆம் திகதி தனியானதோர் நினைவஞ்சலி நிகழ்ச்சியை நடத்தினர். அதிலும் 'நாட்டைக் காப்பாற்றிய தலைவர்' இல்லை. மஹிந்தவின் நினைவஞ்சலி நிகழ்ச்சிகளில் இராணுவத் தளபதிகள் இல்லை.  

இந்த விடயத்தில் இவர்கள் அனைவரும் கூறும் தேசப்பற்றை விட அரசியல் நோக்கங்களுக்காக பொது மக்களின் தேசப்பற்றை அவர்கள் பாவிக்கிறார்கள் என்பதே அவற்றால் தெளிவாகிறது.

அரசாங்கத்தின் நிகழ்ச்சிகளில் அரசியல் அவ்வளவாக தெளிவாக தெரியவில்லை.

ஆனால், மஹிந்தவின் நிகழ்ச்சிகள் அவரது அரசியல் நோக்கங்களுக்காக பாவிக்கப்படுவதை தெளிவாக காணக்ககூடியதாக இருந்தது.

தாம் பதவி நீக்கம் செய்யப்பட்டதை அடுத்து வடக்கில் புலிகளின் கொடி பறப்பதாக அவர் வெளியிட்ட கருத்து அதற்கு சிறந்த உதாரணமாகும்.

அவரது கூற்றை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் பாதுகாப்பு ராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தனவும் மறுத்திருந்தனர். அவ்வாறு புலிக்கொடி காணப்பட்டாலும் அது ஆச்சரியப்படக் கூடிய விடயம் அல்ல. வடக்கில் புலிகளின் ஆதரவாளர்கள் இருக்கிறார்கள் என்பது ஒன்றும் இரகசியம் அல்ல.

மஹிந்தவின் ஆட்சிக் காலத்தலும் பல நிகழ்ச்சிகளின் போது புலிக்கொடி காணப்பட்டது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினதும் எதிர்க்கட்சிகளினதும் நிகழ்ச்சிகளின் போதே அன்று அவ்வாறு புலிக் கொடி காணப்பட்டது.

இது புலிகளின் ஆதரவாளர்களை ஊக்குவிக்கக் கூடிய விடயம் என்பதையும் பாராது, அன்று மஹிந்தவின் கீழ் இயங்கிய அரச ஊடகங்கள் அதனை ஊதிப் பெருக்கின. அப்போதும் மஹிந்தவின் ஆதரவாளர்கள் தாமே நாட்டில் சிறந்த தேசப்பற்றாளர்கள் எனக் கூறிக் கொண்டனர்.

ஆனால், தமிழ்த் தலைவர்கள் அப்போது இந்தப் புலிக்கொடிகள் தொடர்பாக மஹிந்தவின் அரசாங்கத்தையே குறைகூறினர்.

இராணுவ புலனாய்வுப் பிரிவினரே இந்தக் கொடிகளை ஏந்திக் கொண்டு தமது கூட்டங்களுக்குள் புகுந்தனர் என்றும் அவர்கள் அக் கொடிகளுடன் ஊடகக் கமராக்களின் முன் தோன்றிவிட்டு மறைந்துவிட்டனர் என்றும் தமிழ் தலைவர்கள் குற்றஞ்சாட்டினர்.

தெற்கே அரசியல்வாதிகளின் தேசப்பற்றினதும் புலி எதிர்பினதும் அளவை புரிந்து கொள்வதற்காக ஒரு கேள்வியை முன்வைக்கலாம். மஹிந்த பதவியில் இருந்து தூக்கியெறியப்பட்ட ஜனவரி 8ஆம் திகதிக்குப் பின்னர் உண்மையிலேயே புலிகள் மீண்டும் பலம் பெற்று இருந்தால், மஹிந்தவும் அவரது ஆதரவாளர்களும் மகிழ்ச்சியடைய மாட்டார்களா? இதற்கு ஒருவர் அளிக்கும் பதிலைக் கொண்டு புலிகளைக் காட்டி இனவாதத்தை தூண்ட முயற்சிக்கும் மஹிந்தவினதும் அவரது குழுவினதும் தேசப்பற்றின் சுபாவத்தை உணர முடிகிறது.

வடக்கில் நிலைமையும் ஏறத்தாழ இதைப் போன்றதாகவே இருக்கிறது. வடக்கில் கடந்த 19ஆம் திகதி போரில் இறந்தவர்களுக்காக அஞ்சலி செலுத்தப்பட்டது. புலிகளுக்காக நினைவஞ்சலி செலுத்தக் கூடாது என்று நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்த நிலையிலேயே இந்த நிகழ்ச்சிகள் இடம்பெற்றன.
 
இந்த நிகழ்ச்சிகளின் போது தாம் போரில் இறந்த தமது உறவினர்களையே நினைவு கூறியதாக தமிழ்த் தலைவர்கள் கூறினர். அவ்வாறாயின் புலிகளுக்கு நினைவஞ்சலி செலுத்துவது பிழையானது என்ற அரசாங்கத்தின் நிலைப்பாட்டை அத் தலைவர்கள் ஏற்றுக் கொள்கிறார்களா என்ற கேள்வியை ஒருவர் எழுப்பலாம்.

இரண்டு முறை கிளர்ச்சிகளை நடத்திய மக்கள் விடுதலை முன்னணி அக் கிளர்ச்சிகளின் போது உயிரிழந்த தமது போராளிகளை நினைவு கூர முடியும் எனறால், வட பகுதி மக்கள் போரில் இறந்த போராளிகளை நினைவு கூருவதில் என்ன தவறு இருக்கிறது எனவும் தமிழ்த் தலைவர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

இது பலமான வாதமாக இருந்த போதிலும் தாம் அஞ்சலி செலுத்துவது புலிப் போராளிகளுக்கு அல்ல, உறவினர்களுக்கே என்ற வாதத்துக்கு இது முரணாக இருப்பதாக தெரிகிறது.

ஒரு வகையில் இந்த விடயத்தில் தமிழ் தலைவர்களுக்கு மக்கள் விடுதலை முன்னணியை உதாரணமாக எடுக்க முடியாது. ஏனெனில், அக் கட்சி தடை செய்யப்பட்டிருந்த காலத்தில் அக் கட்சியினருக்கும் அவர்களது உயிரிழந்த சகாக்களை நினைவு கூர அரசாங்கம் இடமளிக்கவில்லை.

எனவே, தடை செய்யப்பட்ட ஓர் அமைப்பின செயற்பாடுகளோடு தடை செய்யப்படாத மற்றொரு அமைப்பின் செயற்பாடுகளை ஒப்பிட முடியாது.

வட பகுதியல், வருடத்துக்கு இரண்டு முறை போரில் இறந்தவர்கள் நினைவு கூரப்படுகிறார்கள். ஒன்று பிரபாகரன் மரணமடைந்து போர் முடிவடைந்த மே 19 ஆகும். மற்றைய தினம் நவம்பர் மாதம் 27ஆம் திகதியாகும். இது புலிகள் ஆயுதப் போராட்டத்தின் போது கொல்லப்பட்ட தமது முதலாவது உறுப்பினரை நினைவு கூரும் நாளாகும்.

அன்றும் தமிழ் மக்கள் புலிகளை நினைவு கூரவில்லை, தமது உறவினர்களையே நினைவு கூர்கிறார்கள் என தமிழ்த் தலைவர்கள் கூறுகிறார்கள். ஆனால், அன்றைய தினம் புலிகளால் தமது சகாக்களுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக குறிக்கப்பட்ட நாளாகும்.

எனவே, தமிழ் மக்கள் புலிகளுக்குத் தான் இந்நாட்களில் அஞ்சலி செலுத்துகிறார்கள் என தெற்கில் எவரும் வாதிட்டாலும் அதில் பிழை ஏதும் இல்லை. மறுபுறத்தில் உண்மையிலேயே தமிழ் மக்கள் புலிகளுக்குத் தான் அஞ்சலி செலுத்தினாலும் அதில் நியாயம் இல்லாமலும் இல்லை.

புலிகளின் லட்சியமான தமிழீழம் என்பது தற்போதைய பூகோள அரசியல் சூழலில் அடைய முடியாத ஒன்றாகும். வேறு வார்த்தைகளில் கூறுவதாக இருந்தால் இந்தியா ஒரு போதும் தமிழ் ஈழம் உருவாக இடமளிக்கப் போவதில்லை.

ஆனால், அந்த நோக்கத்தை மனதில் வைத்தே பெரும்பாலான புலி உறுப்பினர்கள் உயிர் தியாகம்செய்தார்கள்.

தாம் தமிழ் மக்களுக்காக உயிர் தியாகம் செய்வதாக மனதில் வைத்துக் கொண்டே அவர்கள் படைகளின் குண்டுகளையும் ரவைகளையும் எதிர்கொண்டனர்.

எனவே, அவ்வாறு தமது பெயரில் உயிரை விட்டவர்களுக்கு தமிழ் மக்கள் அஞ்சலி செலுத்துவது நியாயம் தான். ஆனால், அந்த அஞ்சலியில் அரசியல் கலந்து விடுமா என்பதும் அடக்கு முறைக்கான அழைப்பாக அது அமையுமா என்பது பாரதூமான கேள்வியாகும்.

புங்குடுதீவு மாணவி வித்தியாவின் படுகொலையை அடுத்து இடம்பெற்ற சமபவங்களிலும் அரசியல் கலக்கப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது. இது கவலைக்குரிய விடயமாகும்.

ஜாதிக ஹெல உறுமய கட்சியின் தவிசாளர் அத்துரலியே ரத்தன தேர் அரசாங்கம் போர் வெற்றியை கொண்டாடிய மாத்தறை வைபவத்தில் கலந்து கொள்ளவில்லை.

அன்றே தனியார் தொலைக்காட்சியொன்றுக்கு வழங்கிய பேட்டியொன்றின் போது அவர் தெற்கிலும் வடக்கிலும் நடைபெறும் இது போன்ற நினைவஞ்சலிக் கூட்டங்கள் தற்போதைய நிலையில் அர்த்தமற்றவை என்றார்.

இவை மெம்மேலும் மக்களை பிரித்துவிடும் என்று கூறிய அவர் இன்று செய்ய வேண்டியது இரு தரப்பிலும் இறந்தவர்களின் ஆத்ம சாந்திக்காக இரு சாராரும் கூட்டாக பிரார்திப்பதும் இரு சாராருக்குமிடையே ஐக்கியத்தை ஏற்படுத்துவதற்கான வழிவகைகளை கண்டு பிடிப்பதுமே என்றும் கூறினார்.

வடக்கிலும் தெற்கிலும் நினைவஞ்சலிகள் அரசியலாக்கப்பட்டுள்ள நிலைமையை பார்க்கும் போது தேரர் கூறுவது உண்மை என்றே தோன்றுகிறது.

 

 

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .