Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை
George / 2015 மே 29 , பி.ப. 01:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
மியார்மாரின் ராகைன் மாநிலத்தைச் சேர்ந்த ரோஹிஞ்சா முஸ்லிம்களுக்கெதிரான வன்முறைகளும், அதனால் ஏற்பட்ட சமூக, பொருளாதார, வாழ்வியல் பிரச்சினைகளும் தொடர்ந்த வண்ணமே உள்ளன. ராகைன் பகுதியைச் சேர்ந்த பெரும்பான்மையாக மக்கள் உட்பட ஏறத்தாழ 8,000 அகதிகள் நடுக்கடலில் காணப்படும் செய்தி, அவர்கள் மீதான கவனத்தை மீண்டும் ஈர்த்துள்ளது.
பங்களாதேஷ், இந்தியா, சீனா, லாவோஸ், தாய்லாந்து ஆகிய நாடுகளை தனது எல்லையாகக் கொண்டுள்ள தென்கிழக்கு ஆசிய நாடாகிய மியான்மார், 676,578 சதுர கிலோமீற்றர் பரப்பளவினைக் கொண்டது. அண்ணளவாக 54 மில்லியன் பேர் அங்கு வசிக்கிறார்கள். நாட்டின் மேற்குக் கரையோரத்தில் அமைந்துள்ள ராகைன் மாநிலம் 36,778 சதுர கிலோமீற்றர்; பரப்பளவினைக் கொண்டதோடு, அண்ணளவாக 3.34 மில்லியன் சனத்தொகையைக் கொண்டது. அதில் 69.9சதவீதம் பௌத்தர்களும், 29சதவீதம் முஸ்லிம்களும், 0.75சதவீதம் கிறிஸ்தவர்களும், 0.26சதவீதம் ஹிந்துக்களும், 0.09சதவீதம் ஆன்மவாதிகளும் காணப்படுகின்றனர்.
இதில், முஸ்லிம்களின் பெரும்பான்மையானோர் ரோஹிஞ்சா முஸ்லிம்களாகக் காணப்படுவதோடு, இவர்கள் ராகைன் மாநிலத்தின் பூர்வீகக் குடிகள் என்ற கருத்து சிலரிடம் நிலவுகின்றது. சில கல்விமான்களும் இதே கருத்தைக் கொண்டுள்ளனர். எனினும் இன்னும் சிலர், இவர்கள் ஆங்கிலேய ஆட்சியின்போதும், மியான்மாரின் சுதந்திரத்தின் பின்னரும், பங்களாதேஷின் விடுதலைப் போரின்போதும் வங்காளத்திலிருந்து மியான்மாருக்குக் குடிபுகுந்தவர்கள் எனவும் தெரிவிக்கின்றனர். ஆகவே இவர்களின் பூர்வீகம் தொடர்பான சர்ச்சை இன்னமும் தொடர்ந்தும் நீடிக்கிறது.
இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்திலிருந்தே இப்பகுதிகளில் சடுதியாக அதிகரித்துவரும் முஸ்லிம் சனத்தொகை தொடர்பான முறுகல்கள் ஏற்பட்டதோடு, ஆங்கிலேயரின் ஆட்சியில் அந்நிலைமை மோசமடைந்தது. ஆங்கிலேயரின் காலணித்துவ ஆட்சியில் காணி உரிமைகள் தொடர்பான கொள்கைகள் மாற்றப்பட்டதோடு, ராகைன் மாநிலத்தில் விவசாயம் செய்வதற்காக இந்தியர்களைக் குடியேற்றினர். தங்களைப் பூர்வீகக் குடிகள் என்றெண்ணிய ராகைன் மக்கள், சொந்த நாட்டவர்களை 'விருந்தாளிகளான' ரோஹிஞ்சா மக்கள் மதிக்க வேண்டும் என எதிர்பார்த்தனர். மறுபுறத்தில், கடுமையான உழைப்பை வெளிப்படுத்திய ரோஹிஞ்சா மக்கள், ஏனையோர் செய்யமறுத்த வேலைகளையும் செய்து உயிர் வாழ்ந்தனர். இதன் காரணமாக முறுகல் தீவிரமடைந்தது.
இந்த முறுகலின் குறிப்பிடத்தக்க வெடிப்பாக, 1942ஆம் ஆண்டு இடம்பெற்ற கலவரம் அமைந்தது. அதில், 20,000 வரையிலான பௌத்தர்கள் ஆரம்பத்தில் கொல்லப்பட, பதில் தாக்குதலில் 5,000 முஸ்லிம்கள கொல்லப்பட்டனர். இது மௌன்டோவ், புதிடௌங் நகரங்களில் இடம்பெற்றிருந்தது. இந்த நகரங்களை தாக்குதல்காரர்கள் கைப்பற்றியதாக ராகைன் மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து முஸ்லிம்கள் தொடர்ந்தும் தாக்குதலுக்குள்ளானதோடு, ஏராளமானோர் வங்காளத்துக்குச் தப்பிச் சென்றனர்.
இதனைத் தொடர்ந்து, ரோஹிஞ்சா மக்கள் தங்களை கிழக்கு பாகிஸ்தானுடன் (இப்போதைய பங்களாதேஷ்) இணைத்துக் கொள்வதற்கான போராட்டத்தை ஆரம்பித்தனர். ஆனால் பாகிஸ்தானின் நிறுவுநர் மொஹமது அலி ஜின்னா மறுப்புத் தெரிவிக்க, ஆயுதப் போராட்டமாக பிரிவினைப் போராட்டம் மாறியது.
ரோஹிஞ்சா மக்களின் சனத்தொகை அதிகரிப்பு சதவீதம் அதிகமாகக் காணப்பட்டதோடு, பங்களாதேஷின் சுதந்திரத்தின் பின்னர் பங்களாதேஷிலிருந்தும் குடியேற்றவாசிகள் மியன்;மாருக்கு வர, அவர்களின் சனத்தொகை அதிகரித்தது. இதனால், பௌத்தர்கள் மற்றும் ஏனையோரின் அழுத்தங்களைத் தொடர்ந்து, 1982ஆம் ஆண்டில் 'பர்மா குடியுரிமைச் சட்டம்' கொண்டுவரப்பட்டது. இதில் 3 வகையான குடியுரிமைகள் வழங்கப்பட்டதோடு, 135 வகையான இனங்கள் நாட்டின் சட்டரீதியாக அங்கிகரிக்கப்பட்ட இனக் குழுக்களாக அறிவிக்கப்பட்டன.
இதன்போது ரோஹிஞ்சா மக்களுக்குக் குடியுரிமை வழங்கப்படாததோடு, அங்கிகரிக்கப்பட்ட 135 இனக்குழுக்களில் அவர்கள் இடம்பெற்றிருக்கவில்லை. இதனால் அவர்கள் வெளிநாட்டுப் பிரஜைகள் எனக் கணிக்கப்பட்டனர். இதனால் அவர்களின் உரிமைகளனைத்தும் பறிக்கப்பட்டன.
இதனைத் தொடர்ந்து ரோஹிஞ்சா மக்களுக்கான உரிமைக் கோரிக்கைகள் தொடாந்தும் முன்னெடுக்கப்பட்டு வந்தன, எனினும் இரு தரப்புக்குமிடையில் உடைக்கப்பட்ட நம்பிக்கை மீளக் கட்டியெழுப்பப்பட்டிருக்கவில்லை.
இந்த முறுகலை அடுத்த கட்டததுக்கு எடுத்துச் செல்லும் சம்பவமாக 2012ஆம் ஆண்டு இடம்பெற்ற வன்புணர்வுச் சம்பவம் இடம்பெற்றது. அவ்வாண்டு மே மாதம் 28ஆம் திகதி, ராகைன் பெண் ஒருவர், முஸ்லிம் இளைஞர்கள் மூவரால் வன்புணர்வுக்கு உட்;படுத்தப்பட்டு, கொலை செய்யப்பட்டார். இருதரப்புக்குமிடையிலான முறுகல் நிலை தொடர்ந்தும் அதிகரித்து வந்த நிலையில், ஜூன் 3ஆம் திகதி, 10 முஸ்லிம் பயணிகளைச் சுமந்த சிறியரக பஸ் ஒன்று தாக்குதலுக்குள்ளானது. அங்கு தாக்குதல் நடத்தப்படலாம் என்பதால், அப்பாதையூடாகப் பயணிக்க வேண்டாமென்ற எச்சரிக்கை விடுக்கப்பட்ட போதிலும், அந்த சிறியரக பஸ் பயணித்திருந்தது. அந்த 10 முஸ்லிம்களும் வாகனத்துக்கு வெளியே இழுத்தெடுக்கப்பட்டு, தாக்கப்பட்டு, கத்தியால் குத்தப்பட்டுக் கொலை செய்யப்பட்டனர்.
இச்சம்பவத்தைத் தொடர்ந்து, மியான்மார் முஸ்லிம்களை இழிவுபடுத்தும் 'அந்நியநாட்டு முஸ்லிம்' முஸ்லிம் கல) என்ற வார்த்தைப் பிரயோகத்தை அரசாங்கப் பத்திரிகைகள் பயன்படுத்த, அது முஸ்லிம்களை மேலும் கோபமூட்டியது. அதனைத் தொடர்ந்து, ஜூன் 8ம் திகதி, மௌன்டோவ் நகர பள்ளிவாசலில் வெள்ளிக்கிழமை பிரார்த்தனைத் தொடர்ந்து ஒன்றுகூடிய முஸ்லிம்கள், 'முஸ்லிம்களுக்குப் பலம் கிடைக்கட்டும்! ராகைன் இனத்தவர்களுக்கு மரணம் ஏற்படட்டும்!' எனக் கோஷமிட்டனர். ஏற்கெனவே பாதிக்கப்பட்டிருந்த இருதரப்பு உறவுகள் மேலும் பாதிக்கப்பட்டன. இருதரப்பும் மாறி மாறி வன்முறைகளில் ஈடுபட்டனர்.
இந்த வன்முறைகளைக் கட்டுப்படுத்துவதற்காக ஜூன் 10ம் திகதி அரசாங்கம் அவசர நிலையைப் பிரகடனம் செய்ததோடு, இராணுவத்தையும் அங்கு அனுப்பியது. ஆனால், வன்முறையைக் கட்டுப்படுத்துவதற்கு இராணுவம் தவறிவிட்டது என்பதோடு, அரசாங்கத்துடன் இணைந்து, ரோஹிஞ்சா முஸ்லிம்கள் உட்பட எல்லா முஸ்லிம்கள் மீதும் வன்முறைகளைப் பரப்புவதற்கு இராணுவம் துணை புரிந்ததாகவும், அரச ஆதரவில் முஸ்லிம்களுக்கெதிரான வன்முறை இடம்பெறுவதாகவும் பல்வேறு சர்வதேச அரசசார்பற்ற நிறுவனங்களும், தொண்டு நிறுவனங்களும் குற்றஞ்சாட்டுகின்றன.
இவ்வாண்டில் சர்வதேச மன்னிப்புச் சபை வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, 139,00 மக்கள், பெரும்பாலும் ரோஹிஞ்சா இனத்தவர்கள், உள்ளக இடப்பெயர்விற்குள்ளாகியுள்ளதாகவும், தொண்டு அமைப்புக்கள் மீது ராகைன் மக்கள் தாக்குதல் நடாத்தியதால் அவை அப்பிரதேசங்களிலிருந்து பின்வாங்கியுள்ளதால், இடப்பெயர்விற்குள்ளாகியுள்ள மக்கள் மாபெரும் மனிதாபிமான நெருக்கடியை எதிர்கொள்வதாகவும் தெரிவிக்கின்றன.
மக்களுக்கெதிராக வன்முறைகளை மேற்கொண்ட அரசாங்க அதிகாரிகளுக்கும், பாதுகாப்புப் படைகளுக்கெதிராகவும் நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை எனவும், மனித உரிமை மீறல்களால் பாதிக்கப்பட்டோருக்கு நீதியோ, உண்மையோ, நஷ்ட ஈடோ அல்லது வேறு வகையான இழப்பீடுகளோ வழங்கப்படவில்லை எனக் குற்றஞ்சாட்டப்படுகிறது.
இடம்பெறும் வன்முறைகளுக்கெதிராகக் கருத்துத் தெரிவிப்பவர்கள் கைது செய்யப்படுவதோடு, ஊடகவியலாளர்களும் கைது செய்யப்பட்டும், அச்சுறுத்தலுக்கும் உள்ளாக்கப்பட்டுள்ளனர்.
தொடர்ந்துவரும் அடக்குமுறை காரணமாக, ரொகிஞ்சா மக்கள் மியார்மாரை விட்டு வெளியேறி வருகின்றனர். அவர்கள் சட்டரீதியற்று வெளியேறி, படகுகள் மூலமாக அவுஸ்திரேலியா, தாய்லாந்து, இந்தோனேசியா, மலேசியா ஆகிய நாடுகளை நோக்கிச் செல்லுகின்றனர். இதில் அவுஸ்திரேலியாவிற்குச் செல்வோர் எண்ணிக்கை தற்போது குறைவடைந்துள்ள நிலையில், ஏனைய மூன்று நாடுகளுக்கும் செல்வோர் தொகை அதிகரித்துள்ளது.
படகுகளில் கடத்தல்காரர்களால் அழைத்துச் செல்லப்படும் அவர்கள், நாடுகளுக்குள் செல்வதற்கு அனுமதியில்லாத நிலையில், நடுக்கடலில் வைத்து கைவிடப்படுகின்றனர். உறுதியான எண்ணிக்கை இதுவரை கிடைக்காத போதிலும், ஏறத்தாழ 8,000 பேர்வரை கடலில் தத்தளித்துக் கொண்டிருக்கலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது. உண்ணுவதற்கு உணவும், அருந்துவதற்கு சுத்தமான நீரும் இல்லாத நிலையில், படகிலிருப்போர் வயிற்றுப்போக்கு காரணமாக உயிரிழப்பதோடு, இன்னும் சிலர் மன ரீதியான உளைச்சல்கள் காரணமாக படகுகளிலிருந்து குதித்து உயிரிழப்பதாகவும் அறிவிக்கப்படுகிறது.
தாய்நாட்டிற்கும் திரும்பிச் செல்ல முடியாதுள்ள நிலையில், படகுகளில் காணப்படுவோரை அனுமதிக்க வேண்டுமென்றே மறுப்புத் தெரிவித்து வருவது மாபெரும் மனிதாபிமான நெருக்கடி நிலையைத் தோற்றுவிக்கும் என ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான ஆணையம் (யு.என்.எச்.சி.ஆர்) தெரிவித்துள்ளது. ஆசிய மனித உரிமைகள் கண்காணிப்பகம், சர்வதேச மன்னிப்புச் சபை உட்பட ஏனைய மனித உரிமைகள் அமைப்புக்களும் இந்நாடுகளுக்குத் தங்களது கண்டனங்களை வெளியிட்டுள்ளதுடன், கடலில் தத்தளிப்போரைக் காப்பாற்றுவதற்கு முன்வர வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளன. இக்கோரிக்கைகளைத் தொடர்ந்து இந்தோனேசியா, மலேசியா இரண்டும் இவ்வகதிகளை தங்கள் நாடுகளுக்குள் சேர்ப்பதற்கு அனுமதி வழங்கியுள்ளன.
ஆனால், பிரச்சினை இங்கோடு முடிந்து போவதில்லை. நாடுகளுக்குள் அனுமதிக்கப்படுவோர்கள் அகதி அந்தஸ்து வழங்கப்படுவதற்காக பரிசோதிக்கப்படுவர். அகதி அந்தஸ்து வழங்கப்படுவதற்கு பல வருடங்கள் வரை செல்லலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மலேசியாவில் 15 வருடங்கள் வரை அகதி அந்தஸ்தின்றி வாழ வேண்டியுள்ளவர்களும் இருக்கிறார்கள். அகதி அந்தஸ்து கிடைக்கும் வரை, அவர்களுக்கு அரசாங்க உதவியேதும் கிடைக்காது என்பதோடு, சட்ட ரீதியாக அவர்கள் தொழிலெதிலும் ஈடுபட முடியாது என்பது அவர்களின் பிரச்சினைகள் இலகுவில் தீர்ந்து போகப்போவதில்லை என்பதை எடுத்துக் காட்டுகிறது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
17 May 2025
17 May 2025