Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை
Thipaan / 2015 ஜூன் 01 , பி.ப. 02:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் அமைந்த பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாரதிய ஜனதா அரசு தன்னுடைய முதல் வருட பதவிக் காலத்தை நிறைவு செய்திருக்கிறது.
பிரதமராக பொறுப்பேற்றவுடன் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற முதல் அமைச்சரவைக் கூட்டத்தில் 'கறுப்புப் பணத்தை' வெளியில் கொண்டு வருவதற்கு உச்சநீதிமன்றத்திலிருந்து ஓய்வு பெற்ற நீதிபதி எம்.பி. ஷா தலைமையில் 'சிறப்பு புலனாய்வுக்குழு' அமைக்கப்பட்டது.
கறுப்புப் பணத்தை வெளிக் கொண்டு வர உச்சநீதிமன்றம், பிரதமராக இருந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு ஆட்சியிலிருந்த போதே உத்தரவு பிறப்பித்தது.
ஆனால், அதுபற்றி நடவடிக்கை எதையும் அப்போது எடுக்கவில்லை. மோடியின் இந்த முதல் முடிவு இந்தியாவில் வெளிப்படையான நிர்வாகத்துக்கு மோடி முயற்சி செய்கிறார் என்ற செய்தியைப் பரப்பியது.
இதற்கு அடுத்தது போல் மத்திய அரசு நிர்வாகம் எதிர்பார்த்த வேகத்தில் செல்லவில்லை. ஏகப்பட்ட குழுக்கள் இருந்து கொண்டு அமைச்சர்களின் அதிகாரத்தை குறைக்கிறது. அல்லது அவர்களின் அதிகாரத்தில் குறுக்கீடு செய்கிறது என்ற குற்றச்சாட்டு இருந்தது.
அதை நீக்குவதற்காக ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் நியமிக்கப்பட்டிருந் 21 'அமைச்சர்கள் குழுவை' கலைத்தார் மோடி.
அது மட்டுமின்றி 9 'அதிகாரமளிக்கப்பட்ட அமைச்சரவைக் குழுக்களை'யும் கலைத்தார். இது அந்த நேரத்தில் விமர்சனத்துக்கு உள்ளாகியிருந்தாலும், அரசின் முடிவுகளை எடுப்பதில் மோடி அரசுக்கு இந்த நடவடிக்கை கைகொடுத்துள்ளது.
இந்த ஒரு வருடத்தில் சுமார் 141 அமைச்சரவை முடிவுகள் மோடி தலைமையிலான அமைச்சரவையால் எடுக்கப்பட்டிருக்கிறது. அவற்றுள் ஒரு சில 'இரங்கல்' தீர்மானம் என்றாலும், பெரும்பாலானவை நாட்டின் வளர்ச்சித் திட்டங்களுக்கான நடவடிக்கைகள் என்றே சொல்ல முடியும்.
உள்நாட்டில் இந்த இரு அதிரடி நடவடிக்கைகளும் அமைச்சரவையின் செயற்பாட்டில் வித்தியாசமான வேகத்தைக் கொடுத்தது மட்டுமின்றி, மத்தியில் ஒரு செயல்படும் அரசு வந்திருக்கிறது என்ற தோற்றத்தை உருவாக்கியது.
அதன் பின்னர், 65 வருடங்களுக்கும் மேலிருந்த திட்ட கமிஷனை கலைத்தார் மோடி. அதற்குப் பதில் 'இந்தியாவை மாற்றும் தேசிய நிறுவனம்' (National Institute for Transformation of India) என்ற அமைப்பை உருவாக்கினார். திட்டக்குழுவில் இருப்பது போல் மாநில முதல்வர்கள் இதிலும் இடம்பெறுவார்கள் என்ற நோக்கில் பார்த்தால், மோடி அரசின் 'கூட்டுறவு கூட்டாட்சி' (Co-operative Federalism) என்ற கொள்கைக் கோட்பாட்டின் வழி வந்தது.
இதற்கு பிரதமர்தான் தலைவராக இருப்பார் என்றும் நாட்டின் பொருளாதார வளர்ச்சித் திட்டங்களுக்கு உத்வேகம் கொடுப்பதற்கு இந்த அமைப்பு வழி வகுக்கும் என்றும் கொள்கை விளக்கம் கொடுக்கப்பட்டது.
'மைனாரிட்டி மக்களின் உரிமைகள்' பா.ஜ.க. அரசில் சவாலாக இருக்கும் என்ற பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது.
அந்த நோக்கில் சில இந்துத்துவா அமைப்புகள் பிரசாரத்தில் ஈடுபட்டாலும் அரசு ரீதியில் பிரதமர் நரேந்திரமோடி அப்படியொரு சூழ்நிலை ஏற்பட அனுமதிக்க விரும்பவில்லை என்றே தெரிகிறது.
குறிப்பாக இந்தியா வந்த அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவே, 'இந்திய அரசியல் சட்டத்தில் உள்ள மத சுதந்திரம் பேணிப் பாதுகாக்கப்பட வேண்டும்' என்று கூறியதற்கு, பிரதமர் நரேந்திரமோடி அதி முக்கியத்துவம் கொடுக்கவே விரும்புகிறார்.
அதனால்தான் சிறுபான்மை அமைப்புகளின் நிர்வாகிகளை அடிக்கடி சந்தித்துப் பேசுகிறார். 'அனைத்து மக்களும் சமம்' என்பதுதான் என் அரசின் இலக்கு என்பதை தெளிவுபடுத்துகிறார்.
எல்லாவற்றிற்கும் மேலாக சிறுபான்மையினரின் பொருளாதார மேம்பாட்டு நடவடிக்கைகளை அதிகரிக்க 'மைனாரிட்டி டெவலப்மென்ட் மற்றும் பைனான்ஸ் கார்ப்பரேஷனின்' மூலதனத்தை 1,500 கோடியிலிருந்து நூறு சதவீதம் அதிகரித்து 3,000 கோடியாக உயர்த்தியிருக்கிறார்.
'சிறுபான்மையினரின் நலனிலும் நான் அக்கறை கொண்டுள்ளேன்' என்பதை இதை விட தெளிவாக பா.ஜ.க. தலைமையில் உள்ள ஓர் அரசால் தெளிவுபடுத்த முடியாது என்றே நடுநிலையாளர்கள் கருதுகிறார்கள்.
பிரதமர் மோடியின், 'மேக் இன் இந்தியா' 'டிஜிட்டல் இந்தியா' 'ஜன்தன் யோஜனா' 'ஸ்வச் பாரத்' 'ஸ்கில் டெவலப்மென்ட்' 'ஸ்மார்ட் சிட்டி'- இப்படி மக்களைக் கவர்ந்துள்ள திட்டங்கள் ஏராளம்.
இவற்றில் குறிப்பாக 'மேக் இன் இந்தியா' கொள்கையின் அடிப்படையில் இந்தியாவில் தங்கள் நிறுவனங்களை ஏற்படுத்த பன்னாட்டு நிறுவனங்கள் போட்டி போடுகின்றன என்ற நற்செய்தி மோடி ஆட்சியின் ஓராண்டு கால சாதனை.
இந்தியாவில் முதன் முதலாக பிரதமர் ஒருவரே 'தூய்மை திட்டத்தை' துவக்கி வைத்ததன் தாக்கத்தை நாடு முழுவதும் பார்க்க முடிகிறது. வட மாநிலங்கள் சிலவற்றில் மாப்பிளையொருவர் 'எனக்கு வரதட்சனை வேண்டாம்.
பெண் வீட்டில் கழிப்பிட வசதிகள் செய்து வையுங்கள். அதுவே போதும்' என்று கூறும் அளவிற்கு பிரதமர் மோடியின் 'ஸ்வச் பாரத்' திட்டம் படு பிரபல்யமாகியிருக்கிறது.
'ஜன்தான் யோஜனா' – அதாவது வங்கிக் கணக்குகள் ஓப்பன் பண்ணுவது என்ற இந்த திட்டத்தின் கீழ் செய்யப்பட்ட பிரதமரின் பிரச்சாரம் கைமேல் பலன் கொடுத்தது.
இந்தியாவில் உள்ள 14.99 கோடி பேர் வங்கிக் கணக்குகளை துவக்கியிருக்கிறார்கள். அது மட்டுமின்றி இந்த வங்கிக் கணக்குகள் மூலம் 15,800 கோடி ரூபாய் அளவுக்கு சேமிப்பு வந்திருக்கிறது.
அரசின் வங்கிக் கணக்கு ஓப்பன் பண்ணும் திட்டத்தின் கீழ் இப்படி கணக்குகள் துவங்கப்பட்டு, சேமிப்பும் கிடைத்தது மோடி அரசின் ஓராண்டு கின்னஸ் சாதனையாக இருக்கிறது.
சென்ற ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் வெளிநாட்டு முதலீடுகளை அந்த அரசின் கடைசி கட்டத்தில் இரு விஷயங்கள் பாதித்தன.
ஒன்று 2-ஜி மற்றும் நிலக்கரி பேர முறைகேட்டுப் புகார்கள். இந்திய கணக்காயம் கொடுத்த 'லட்சம் கோடி நஷ்டம்' என்ற புள்ளிவிவரம் பா.ஜ.க. உள்ளிட்ட எதிர்கட்சிகளால் ஊழல் போலவே சித்தரிக்கப்பட்டது.
இதனால் இந்தியா மிகப்பெரிய ஊழல் நாடு போலிருக்கிறது என்ற சந்தேகத்தை உலக நாடுகள் குறிப்பாக இந்தியாவில் முதலீடு செய்ய விரும்பும் நாடுகள் மத்தியில் ஏற்படுத்தியது.
இன்னொன்று இந்திய உச்சநீதிமன்றத்தின் செயல்பாடு. ஸ்பெக்ட்ரம் லைசென்ஸுகள் ரத்து செய்தது, நிலக்கரி ஒதுக்கீடுகளை ரத்து செய்தது, வோடோபோன் வரி விதிப்பில் அளித்த தீர்ப்பு போன்றவற்றைப் பார்த்த உலக நாடுகளின் முதலீட்டாளர்கள் 'இந்தியாவில் அரசின் கொள்கை முடிவுகளை உச்சநீதிமன்றம் கேள்வி கேட்கிறது' என்ற தோற்றத்தை ஏற்படுத்தியது.
இந்த இரண்டிற்கும் விடை காண முயன்றார் பிரதமர் நரேந்திர மோடி. அதற்கு முதலில் அவர் மேற்கொண்டது வெளிநாட்டுப் பயணங்கள். முதலில் நேபாளத்தில் ஆரம்பித்து ஓராண்டு முடியும் தறுவாயில் சீனா சென்று திரும்பினார்.
18 நாடுகளில் அவர் மேற்கொண்ட அந்த சுற்றுப்பயணத்தின் போது 'இந்தியாவில் முதலீடு செய்ய நீங்கள் வரலாம். உங்களுக்கு அரசு துணை நிற்கும்' என்ற நம்பிக்கையை வெளிநாட்டில் வாழும் இந்தியர்கள் மத்தியிலும் சரி, வெளிநாட்டு முதலீட்டாளர்கள் மத்தியிலும் சரி உருவாக்கியிருக்கிறார் என்றால் அது மிகையாகாது.
ஜப்பான் நாடு மட்டும் அடுத்த ஐந்து வருடங்களில் 35 பில்லியன் அமெரிக்க டொலர்களில் இந்தியாவில் முதலீடு செய்யப் போகிறது என்பது அசாத்தியமான ஒப்பந்தம்.
அதேபோல், வர்த்தக ஒப்பந்தங்களில் பெரும்பாலானவை மின்சார உற்பத்தி சம்பந்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இதேபோல் காப்புறுதி, பாதுகாப்புத்துறை போன்றவற்றில் அந்நிய முதலீடு பெறும் சதவீதத்தை உயர்த்தினார்.
குறிப்பாக மருந்துகள், வீடு கட்டுதல் போன்றவற்றில் 100 சதவீத அந்நிய முதலீட்டுக்கு அனுமதித்திருக்கும் பா.ஜ.க. அரசின் போக்கு இந்தியாவின் வளர்ச்சிக்கு அச்சாரம் போடும் என்று பொருளாதார நிபுணர்கள் கருத்துத் தெரிவிக்கிறார்கள். இவற்றுக்கு எல்லாம் மேலாக 'நீதிபதிகள் நியமன ஆணையம்' கொண்டு வந்து நீதித்துறையில் நடைபெறும் நியமனங்களில் உயர்நீதிமன்றம் முதல் உச்சநீதிமன்றம் வரை மத்திய அரசின் கையும் இருக்கும் என்ற நிலையை பிரதமர் நரேந்திரமோடி உருவாக்கியிருக்கிறார்.
இந்த நியமனச் சட்டம் தற்போது உச்சநீதிமன்றத்தின் விசாரணையில் இருக்கிறது என்பது வேறு விஷயம்.
பொருளாதார ரீதியாக முன்னேற்றம், நாட்டின் மீது ஒரு மரியாதை, ஊழலற்ற அரசு அமைத்துள்ளோம் என்ற இமேஜ், நீதித்துறை அரசாங்கத்தின் திட்டங்களை ரத்து செய்யாது என்ற தோற்றம் போன்றவை வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்காக இந்த ஒரு வருட காலத்தில் பிரதமர் நரேந்திரமோடியின் தலைமையிலான அரசு உருவாக்கியது.
ஆனால், இந்த ஓராண்டு காலத்தில் மோடி அரசுக்கு சோதனை இல்லை என்றும் சொல்லி விட முடியாது. நிலம் கையகப்படுத்தும் மசோதாவில் மூன்றாவது முறையாக அவசரச்சட்டம் பிறப்பித்திருக்கிறது மோடி அரசு.
விவசாயிகளை பாதிக்கும் என்று எதிர்கட்சிகள் போராட்டத்தால் இந்த சட்டத்தைக் கொண்டு வருவதில் இன்னும் மோடி அரசுக்கு சங்கடங்கள் இருக்கிறது.
'விவசாயிகளுக்கான பாதுகாப்பு அம்சங்களை' அங்கீகரித்து இந்த சட்டத்தை நிறைவேற்ற பா.ஜ.க. அரசு இதுவரை முன்வரவில்லை என்பது இந்த அரசை நம்பி வாக்களித்த விவசாயிகளுக்கு பெருத்த ஏமாற்றமே.
முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் எதிர்கட்சிகளுடன் கலந்து பேசி, குறிப்பாக பிரதான எதிர்கட்சியாக இருந்த பா.ஜ.க.வின் ஒத்துழைப்பைப் பெற்று பல மசோதாக்களை சட்டமாக்கினார் பிரதராக இருந்த மன்மோகன்சிங்.
ஆனால், இந்த முறை 'அவசரச்சட்டம்' முதலில், பிறகு எதிர்கட்சிகள் எதிர்த்தால் பேச்சுவார்த்தை என்ற பாலிசியை கடைப்பிடிக்கிறார் இந்த பிரதமர்.
இது ஜனநாயக இந்தியாவில் நாடாளுமன்றத்துக்கு கொடுக்கப்பட வேண்டிய மகத்துவத்தைக் குறைக்கும் செயல் என்று எதிர்கட்சிகளை குரல் எழுப்புகின்றன.
பா.ஜ.க. அரசு ஒரு 'கார்ப்பரேட் அரசாக' இருக்கிறது என்ற குற்றச்சாட்டு கிளம்பியிருக்கிறது. அதை மறுக்க வருடத்துக்கு 12 ரூபாய் கட்டினால், இரண்டு லட்சம் விபத்துக் காப்பீடு, வருடத்துக்கு 330 ரூபாய் மட்டும் கட்டினால் 2 லட்சம் ரூபாய் உயிரிழப்புக் காப்பீடு, அமைப்புச்சாரா தொழிலாளர்கள் ஓய்வு பெறும் வயதை எட்டும் போது 1,000 ரூபாய் முதல் 5,000 ரூபாய் வரை மாதம் ஓய்வூதியம் கிடைக்க வழி செய்யும் 'அதல் பென்ஷன் யோஜனா' போன்ற சமூகப் பாதுகாப்புத் திட்டங்களைக் கொண்டு வந்திருக்கிறது மத்தியில் உள்ள பா.ஜ.க. அரசு.
ஆனாலும் 'நிலம் கையகப்படுத்துதல் மசோதாவை' நிறைவேற்றியே தீருவோம் என்று பிடிவாதமாக இருப்பதால், பா.ஜ.க. அரசு 'கார்ப்பரேட் அரசு' என்ற எதிர்கட்சிகளின் பிரச்சாரத்தை முறியடிக்க முடியாமல் திணறுகிறது என்றே கூற வேண்டும்.
இந்த வாக்குவாதத்தில் மோடி அரசை 'சூட், பூட் சர்க்கார்' என்று கூற, நரேந்திரமோடியோ, 'சூட் கேஸ் சர்க்காருக்கு சூட் பூட் சர்க்கார் மேல்' என்று திருப்பி பதிலடி கொடுத்திருக்கிறார்.
இதையெல்லாம் தவிர இதுவரை மோடி வெளிநாடுகளில் இந்தியா பற்றி உருவாக்கியிருக்கும் இமேஜ் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு எப்படி கை கொடுக்கப் போகிறது என்பது மிக முக்கியமான கேள்விக்குப் பதில் தேடினால், இந்த ஒரு வருடத்தில் அது பாஸிட்டிவ் அம்சமாகவே இருக்கிறது.
பணவீக்கம் கட்டுப்படுத்தப்பட்டு குறைந்திருக்கிறது. அந்நிய முதலீடுகள் அதிகரித்துள்ளது. ஏற்றுமதி அதிகமாகி, இறக்குமதி குறைந்திருக்கிறது.
அடிப்படை தொழில்கள் என்று உள்ள நிலக்கரி, மின்சாரம் போன்ற எட்டு தொழில்களில் நல்ல வளர்ச்சி தெரிகிறது. விவசாயமும் வளரும் சூழ்நிலை உருவாகியிருக்கிறது.
ஆனால், மோடி அரசுக்கு இருக்கும் மிகப்பெரிய சவால் 'மாட்டிறைச்சி சாப்பிட விரும்புவோர் பாகிஸ்தானுக்குச் செல்லலாம்' என்பது உள்ளிட்ட பா.ஜ.க. அமைச்சர்கள் சிலரின் கருத்துக்களை கட்டுப்படுத்த முடியாமல் திணறி நிற்பதுதான். அது மட்டுமின்றி, இந்துத்துவா அமைப்புகளும் 'வேற்றுமையில் ஒற்றுமை' என்ற இந்தியாவின் கோட்பாட்டுக்கு விரோதமாக 'ஆவேசப் பேச்சுக்களை' ஆங்காங்கே நிகழ்த்துவதுதான்.
இப்படிப்பட்ட பேச்சுக்களால் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கு சிக்கலாக இருக்கிறது என்று இந்திய நிதியமைச்சர் அருண்ஜேட்லியே வெளிப்படையாக பேசி விட்ட போதும், பிரதமர் நரேந்திரமோடியின் ஆக்கபூர்வமான திட்டங்களுக்கும், முயற்சிகளுக்கும் இந்துத்துவா அமைப்புகளின் 'ஆவேசப் பேச்சுக்கள்' முட்டுக்கட்டை போடுகின்றன என்பதுதான் இந்த முதல் வருடத்தில் பிரதமர் நரேந்திர மோடி சந்தித்துள்ள மிகப்பெரிய சவால்.
இந்த சவாலை முறியடித்து இனி வரும் அடுத்தடுத்த ஆண்டுகளில் நாட்டை வளர்ச்சிப் பாதைக்கு எப்படி அழைத்துப் போகப் போகிறார் நரேந்திரமோடி என்பதை தெரிந்து கொள்ளத்தான் இந்தியாவில் உள்ள 'திருவாளர் பொதுஜனம்' ஆர்வத்துடன் காத்துக் கொண்டிருக்கிறது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
17 May 2025
17 May 2025