2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

இலண்டன் (ப)ரகசிய சந்திப்பு

Thipaan   / 2015 ஜூன் 17 , மு.ப. 10:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

தோல்வி மனநிலையிலிருந்து விடுபட்டு இராஜதந்திரக் களங்களை வெற்றிகரமாக எதிர்கொள்ள வேண்டிய கட்டத்தில் ஈழத்தமிழர்கள் இருக்கின்றார்கள்.  ஆயுதப் போராட்டத்தில் குறிப்பிடத்தக்க வெற்றிகளை பெற்றிருந்தாலும் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இராஜதந்திர களமாடுதலில் ஈழத்தமிழர்கள் வெற்றி பெற்றவர்களாக இருந்தது இல்லை. அதுதான், ஆயுதப் போராட்டத்தை(யும்) அடியோடு அழித்தது.

ஜனாதிபதித் தேர்தலின் பின் ஏற்பட்ட ஆட்சி மாற்றங்களின் போக்கில் தற்போது விரிந்துள்ள புதிய இராஜதந்திரக் களம், ஏற்கெனவே எதிர்பார்க்கப்பட்டதுதான். மஹிந்த ராஜபக்ஷவின் அகற்றத்தோடு அது, விரைவாக எம்மை நோக்கி நகர்த்தப்பட்டிருக்கின்றது.

இல்லாவிட்டாலும், சில காலத்துக்குப் பின்னர் நாம் அந்தக் களத்தை எதிர்கொள்ள வேண்டி வந்திருக்கும். ஆக, அந்த இராஜதந்திரக் களத்தை நாம் விரும்பியோ, விரும்பாமலோ எதிர்கொள்ள வேண்டியது அவசியமானது.

தென்னாபிரிக்க அரச சார்பற்ற நிறுவனமொன்றின் ஏற்பாட்டிலும் சுவிட்ஸர்லாந்து மற்றும் நோர்வே ஆகிய நாடுகளின் பங்களிப்போடும், புலம்பெயர் தமிழ்ப் பிரதிநிதிகள், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், இலங்கை வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர ஆகியோர் இலண்டனில் அண்மையில் சந்திப்பொன்றை நடத்தியிருந்தனர். இந்தச் சந்திப்பை புதிய இராஜதந்திரக் களத்தின் முக்கிய புள்ளியாகக் கொள்ள முடியும்.

இரகசியச் சந்திப்பாக திட்டமிடப்பட்டிருந்த இலண்டன் சந்திப்பு, தமிழ்த் தரப்புக்குள்ளிருந்து வெளிப்பட்ட சந்தேகங்களின் போக்கில் பரகசியமாக்கப்பட்டது.  இந்தச் சந்திப்பு, ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னும்- பின்னும் சிங்கப்பூரிலும் பிற இடங்களிலும் இடம்பெற்ற இரகசியச் சந்திப்புக்களின் தொடர்ச்சியே.

அதுபோல, இது இறுதியான சந்திப்பும் அல்ல. அந்த நிலையில், குறித்த சந்திப்புக்களின் மீதான சந்தேகங்கள் இயல்பானவை. (இந்தச் சந்திப்புக்களில் இலங்கைக்கான நோர்வேயின் முன்னாள் சமாதானத் தூதுவர் எரிக் சொல்ஹெய்ம் பங்குபற்றியிருந்தது கவனத்தில் கொள்ளப்பட வேண்டியது.)

ஈழத்தமிழர்கள் என்கிற பெரும் கருவியை இரண்டு தளங்களில் கூர்மையாக்கி மேற்குலகம் கையாளுகின்றது. புலத்திலுள்ளவர்களை, இலங்கையின் அரசாங்கங்களை மாற்றுவதற்கான அல்லது அரசியல் நெருக்கடிகளை வழங்குவதற்கான தரப்பாகவும் புலம்பெயர்ந்துள்ளவர்களை சர்வதேச ரீதியில் இலங்கைக்கு இராஜதந்திர நெருக்கடிகளை வழங்கும் தரப்பாகவும் கையாண்டு வந்திருக்கின்றது.

ஆயுத போராட்டத்தின் புள்ளியில் ஈழத்தமிழர்கள் ஒருமுகப்படுத்தப்பட்டிருந்தாலும், 2009ஆம் ஆண்டு மே மாதத்துக்குப் பின்னரான  கடந்த ஆறு வருட காலம், புலம்- புலம்பெயர் தளங்களுக்கிடையில் குறிப்பிட்டளவு இடைவெளியையும் ஏற்படுத்தியிருந்தது.

ஒருமுகப்படுத்தப்படும் புள்ளி அகற்றப்படும் போது இடைவெளி சாத்தியமானதுதான். ஆனால், அந்த இடைவெளியின் அளவு நாளுக்கு நாள் அதிகரிக்கும் வேகம் அச்சமூட்டுவதாக இருக்கின்றது. அது, இயல்பாகவே பெரும் பதற்றமான நிலையை ஈழத்தமிழர்களின் இரண்டு தரப்புக்குள்ளும் (புலம்- புலம்பெயர்) ஏற்படுத்தியிருக்கின்றது.

இலங்கையை தமது தாயகமாக கொண்டிருந்தாலும், மேற்குலகில் பரந்துள்ள ஈழத்தமிழர்களின் அடுத்த தலைமுறை, தவிர்க்க முடியாமல் எமது அரசியல் நெருக்கடிகளையும் போராட்டத்தையும் உணர்ந்து கொள்வதற்கான வாய்ப்புக்கள் அற்றுப்போவதற்கான சாத்தியங்கள் அதிகரித்துள்ளன.

ஏனெனில், அந்தத் தலைமுறை தன்னை அகதியாகவோ, புலம்பெயர்ந்தவனாவோ காட்டிக் கொள்வதிலுள்ள அடையாளச் சிக்கல் அந்த நிலையை ஏற்படுத்தியுள்ளது. அது, இயல்பானது. அதனால், அந்த நாட்டுப் பிரஜைகளாக மட்டுமே அவர்கள் தங்களை அடையாளப்படுத்தும் சூழலும் உருவாகிவிட்டது.

இதற்கு, கனடாவில் பரந்துள்ள எமது அடுத்த தலைமுறையை பெரும் உதாரணமாகக் கொள்ள முடியும். (இந்த விடயம் பற்றி பிறிதொரு தருணத்தில் பேசலாம்) ஆனால், இந்த நிலையை நாம் அவ்வளவு ரசிக்க முடியாவிட்டாலும் அதுதான் யதார்த்தம். இப்படியான நிலையிலும், எம்மை நோக்கி நகர்த்தப்பட்டிருக்கின்ற புதிய இராஜதந்திரக் களம் முக்கியத்துவம் பெறுகின்றது.

தமக்கு உவப்பில்லாத மஹிந்த ராஜபக்ஷ ஆட்சியை மாற்றுவதற்கான கருவியாக ஈழத்தமிழர்களை உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் மேற்கு நாடுகள் பலமாகக் கையாண்டன. புலம்பெயர் தமிழ்ச் சமூகத்துக்கு மேற்குலகம் கொடுத்த அங்கிகாரம் என்பது பலமுறை அளவுக்கு அதிகமாக இருந்திருக்கின்றது.

அது, உசுப்பேத்திவிட்டு உலையில் வீழ்த்தும் உத்திபோலவும் தெரிந்தது. மற்றொரு கோணத்தில், அது தமிழ் மக்களின் தார்மீகக் கோபத்தின் பெருமெழுச்சியை தமக்குச் சார்பாக மேற்குலகம் கையாண்டிருக்கின்றது என்றும் கொள்ள முடியும்.

ஆயுதப் போராட்டத்துக்குப் பின்னராக தமிழ்த் தேசிய அரசியல் என்பது மிகவும் பலவீனமான நிலையிலேயே இருக்கின்றது. வெளித்தோற்றத்தில் தமிழ்த் தேசிய அரசியல் உறுதிப்பாட்டோடு இருப்பது போல காட்டப்பாட்டாலும் அதன் அடிப்படை என்பது செல்லரிப்புக்களினால் ஆனது.

ஏனெனில், தேசியமொன்றை தக்கவைப்பதற்கு தேவையான பொருளாதாரம், கல்வி, பண்பாடு, மொழி உள்ளிட்ட அடிப்படைகளின் மீது பாரிய ஈட்டிகள் பாய்ச்சப்பட்டுவிட்டன.

ஆக, மீளெழுச்சி என்பது அடிப்படைகளை சீராக தக்க வைப்பதிலும், ஒழுங்கமைப்பதிலும் தங்கியிருக்கின்றது. அந்த வகையில், தாயகத்திலுள்ள தேவைகள் சிலவற்றை புலம்பெயர் தமிழ்ச் சமூகத்தைக் கொண்டு சீரமைக்க முடியும். அந்தப் புள்ளியின் போக்கில் தற்போதுள்ள புதிய இராஜதந்திரக் களத்தினை வெற்றிகரமான புள்ளியில் கையாள  முடியும். மாறாக, எதிர்ப்பு நிலையில் இருப்பது என்பது வெற்றியடையக் கூடிய சில புள்ளிகளையும் புறந்தள்ளும் சூழலை உருவாக்கும்.

மேற்குலகின் சதிராட்டத்துக்குள் நாம் சிக்கியிருந்தாலும் எமது அடிப்படைப் பிரச்சினைகளை சிங்கள பௌத்த தேசியவாத அரசாங்கங்களோடு பேசியாக வேண்டியது அவசியம். அதனைத் தவிர்ப்பது என்பது என்றைக்குமே பலன்களைத் தராது. பேச்சுக்களில் நம்பிக்கையில்லாவிட்டாலும் பேச்சுக்கள் எத்தனை தடவை தோல்வியடைந்தாலும், நாம் மீண்டும் மீண்டும் நேரடிப் பிணக்காளர்களோடு பேச வேண்டியிருக்கின்றது. அவர்களோடு பேசுவதைத் தவிர்ப்பது இராஜதந்திர ரீதியிலும் வெற்றிகளைப் பெறுவதற்கான வழிகளை அடைத்துவிடும்.

இலண்டன் சந்திப்புக்களின் பின்னரான பிரதிபலிப்புக்கள் சில தளங்களின் முன்னேற்றமான புள்ளிகளைக் காட்டியிருக்கின்றன. அல்லது, அதற்கான கட்டாயங்களை உருவாக்கியிருக்கின்றது.

ஆனால், இந்தச் சந்திப்புக் குறித்து சிங்கள பௌத்த தேசியத் தரப்புக்குள் மாத்திரமின்றி, தமிழ்த் தரப்புக்குள்ளும் பலமான சந்தேகங்கள் எழுந்திருக்கின்றன. அதனை, சந்திப்புக்களின் பங்காளிகள் தீர்த்து வைக்க முயன்றாலும், சந்தேகம் கொள்ளும் தரப்புக்களோ, படுகுழியின் வாசலில் நிறுத்தி வைத்து போதிக்கும் நிலையோடு ஒப்பிடுகின்றார்கள்.

'புலம்பெயர்ந்துள்ள தமிழர்கள் அனைவரும் பயங்கரவாதிகளோ, பிரிவினைவாதிகளோ அல்ல. அவர்கள் கொம்பு வைத்த பேய்களும் அல்ல. அவர்களையும் இணைத்துக் கொண்டு நாட்டினை அபிவிருத்தி செய்ய வேண்டும்.

அதனால், எதிர்க்கட்சிகள் தேவையற்ற சந்தேகங்களைக் கொள்ள வேண்டியதில்லை.' என்று இலண்டன் சந்திப்புக்கள் தொடர்பில் மங்கள சமரவீர அண்மையில் நாடாளுமன்றத்தில் விளக்கமளித்தார். அதுபோல, புலம்பெயர் தமிழ் அமைப்புக்களின் தடை மீதான மீளாய்வு மற்றும் புலம்பெயர் சமூகங்களை வரவேற்கும் நிகழ்வுகளை நடத்துவது தொடர்பிலும் அவர் அறிவித்திருக்கின்றார்.

இந்தச் சந்திப்புக்களின் இன்னொரு பங்காளியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், 'புலம்பெயர் தமிழர்கள் தொடர்பிலான இலங்கை அரசாங்கத்தின் அணுகுமுறை ஆரோக்கியமானது' என்றிருக்கின்றார்.

முக்கிய தரப்பான, புலம்பெயர் தமிழ்ப் பிரதிநிதிகளோ, 'தமிழர் பிரச்சினைகளுக்கான இறுதித் தீர்வு தொடர்பிலோ, ஐக்கிய நாடுகள் விசாரணை நிறுத்தம் பற்றியே குறித்த சந்திப்புக்களில் பேசப்படவில்லை. மாறாக, வடக்கு- கிழக்கின் அபிவிருத்தி தொடர்பிலேயே பேசப்பட்டது' என்றிருக்கின்றார்கள்.

இலண்டன் சந்திப்புக்களின் பங்காளிகள் அனைவரும் 'வடக்கு- கிழக்கின் உள்ளக அபிவிருத்தி, மீள் கட்டுமானம்' என்கிற விடயங்களையே ஒருங்கிணையும் புள்ளியாக வெளிப்படுத்தியிருக்கின்றார்கள்.

ஆனால், உள்ளக அபிவிருத்தி அல்லது மீள் கட்டுமானம் தொடர்பில் பேசப்பட வேண்டுமாக இருந்தால் ஏன், இந்தச் சந்திப்புக்கள் இரகசியமான முறையில் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டன என்பது தொடர்பில் எதிர்க்கேள்வி எழுவது இயல்பானது. அதற்கு,  தோல்வியடைந்துள்ள மஹிந்த ராஜபக்ஷ தரப்பு அதனை தம்முடைய இனவாத அரசியலுக்காக கையாளும் என்று வைத்துக் கொண்டாலும், இந்த மூன்று தரப்புக்களின் சந்திப்புக்களை எவ்வளவு காலத்துக்கு இரகசியமாக வைத்துக் கொள்ள முடியும் என்கிற அடிப்படைக் கேள்வியும் எழும்.

இராஜதந்திரப் பேச்சுக்கள் என்பதே இரகசியங்களினாலும். மறைமுக இணக்கப்பாடுகளினாலும் ஆனதுதான். வெளியில் சொல்லப்படுவதும், உண்மையாக பேசப்படுவதும் பல நேரங்களில் வேறு வேறாகவே இருக்கின்றன. இதுதான், உலக வழக்கம். இந்த யதார்த்தத்தின் போக்கில் இலண்டன் சந்திப்புக்களில் அதிர்வு நிலை காணப்படுவது சாத்தியமானதுதான்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்டவர்களுடன் மிக நெருக்கமான தொடர்புகளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் பேணுகின்றார் என்கிற கருத்தியலும், இந்த இலண்டன் சந்திப்பு தொடர்பில் நம்பிக்கை கொள்ளவதற்கான சாத்தியங்களை தமிழ்த் தளத்தில் இல்லாமற் செய்திருக்கின்றன.

தமிழ்த் தேசிய அரசியல் என்பது தேசிய ரீதியில் பேச்சுக்கள், தொடர்பாடல்களை மேற்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றது. அந்த இடத்தில் எம்.ஏ.சுமந்திரன் முக்கியமான கருவியாக கருதப்பட வேண்டியவர்.

ஆனால், அவர் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சக நாடாளுமன்ற உறுப்பினர்களே சந்தேகம் வெளியிடுவது மக்களை குழப்பமான கட்டத்துக்குள் கொண்டு சேர்த்துள்ளது. அல்லது, இரா.சம்பந்தனோ, எம்.ஏ.சுமந்திரனோ தங்களை நோக்கிய குற்றச்சாட்டுக்கள், ஐயப்பாடுகள் தொடர்பில் அவ்வளவு தெளிவுபடுத்தல்களைச் செய்வதில்லை. அது, முக்கியமான தருணங்களில் வேறு மாதிரியான விளைவுகளையும் ஏற்படுத்தி விடுகின்றது.

இலண்டன் சந்திப்பில் உண்மையிலேயே வடக்கு- கிழக்கின் அபிவிருத்தி, மீள் கட்டுமானம் தொடர்பிலேயே பேசப்பட்டது என்றால், அதை வரவேற்கலாம். ஏனென்றால் அது, காலத்தின் தேவை.

ஆனால், இந்த காரணங்களை முன்னிறுத்திவிட்டு, வேறு விடயங்களில் தமிழ் மக்கள் மீண்டும் அடகு வைக்கப்பட்டிருந்தால்,  சந்திப்புக்களில் பங்கெடுத்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், புலம்பெயர் தமிழ்ப் பிரதிநிதிகளும் பெரும் பொறுப்புக் கூறலுக்கு உள்ளாக வேண்டி வரும். ஆகவே, தமிழ் மக்களுக்கு இந்த இரு தரப்பும் உண்மையாக இருக்க வேண்டியது அவசியம்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .