Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை
Suganthini Ratnam / 2015 ஜூன் 18 , மு.ப. 06:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
-கே.சஞ்சயன்
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, அனைவரும் எதிர்பார்த்தது போலவே இனவாதத்தை முன்னிலைப்படுத்தியவாறு தனது அரசியல் மறு பிரவேசத்தை மேற்கொள்ளத் தொடங்கியுள்ளார். மாத்தறையில் கடந்த 12ஆம் திகதி நடத்தப்பட்ட மஹிந்த ஆதரவு அணியினரின் கூட்டத்துக்கு சென்று உற்சாகப்படுத்தியிருந்த அவர், தாம் பிரதமர் வேட்பாளராக போட்டியிடவுள்ளதாக அறிவித்துள்ளார்.
இதே பத்தியில் இரண்டு வாரங்களுக்கு முன்னர் கூறியிருந்த பல விடயங்கள், அப்படியே மாத்தறை கூட்டத்துக்கு மஹிந்த ராஜபக்ஷ அனுப்பியிருந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.
'தாம் ஆட்சியில் இல்லாத காலத்தில் நாட்டில் நிலைமைகள் மோசமடைந்துள்ளதை சுட்டிக்காட்டுவார். வடக்கில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு நடத்தப்பட்டதையும் நீதிமன்றம் தாக்கப்பட்டதையும் சுட்டிக்காட்டுவார். இடைநிறுத்தப்பட்ட சீன அபிவிருத்தித்திட்டங்களால் நாட்டின் பொருளாதாரம் முடங்கிப் போயுள்ளதாக கூறுவார்.
உயர் பாதுகாப்பு வலயக் காணிகள் விடுவிக்கப்பட்டதால், பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளதாக புலம்புவார். இப்படி தற்போதைய அரசாங்கத்தின் நடவடிக்கைகளையெல்லாம் குறை கூறி, இவற்றினால் நாடு பேராபத்தில் சிக்கியுள்ளதாக கூறப்போகிறார்.
கடைசியாக, இந்த ஆபத்திலிருந்து நாட்டை பாதுகாக்க மீண்டும் அரசியலுக்கு வாருங்கள் என்று மக்களும் மகாசங்கத்தினரும் தன்னை கெஞ்சிக் கேட்டுக்கொண்டதன் பேரில், பிரதமர் வேட்பாளராக போட்டியிடத் தீர்மானித்துள்ளதாக கூறுவார்.' இவ்வாறு இரண்டு வாரங்களுக்கு முன்னர் குறிப்பிட்டிருந்தோம்.
மாத்தறையில் நடந்த கூட்டத்தில், மஹிந்த ராஜபக்ஷவினால் அனுப்பிவைக்கப்பட்டு, நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெருமவினால் வாசிக்கப்பட்ட செய்தியில், இந்த அம்சங்கள் பலவும் இடம்பெற்றிருந்ததை அவதானிக்கமுடிகின்றது.
அதில் அவர், 'அடுத்த நாடாளுமன்றத் தேர்தலில் பிரதமர் வேட்பாளராக போட்டியிட மக்கள் விடுத்துள்ள அழைப்பை ஏற்றுக்கொள்கிறேன்.
2009இல் எனது அரசாங்கத்தினால் தோற்கடிக்கப்பட்ட விடுதலைப் புலிகளுக்கு உயிர் கொடுக்கும் வகையில் புதிய அரசாங்கம் செயற்படுகிறது. யாழ். குடாநாட்டிலிருந்த 152 இராணுவ முகாம்களில் 59 முகாம்களை மூடியுள்ளனர். தற்போது தடுப்புக்காவலிலுள்ள புலிகளையும் விடுவிக்கும் முயற்சியில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளது.
தற்போதைய அரசாங்கத்தின் வெளியுறவுக்கொள்கை விடுதலைப் புலிகளுக்கு சார்பானது என்பதால் நாடு ஆபத்தில் சிக்கியுள்ளது. விடுதலைப் புலிகளை தோற்கடிக்க ரஷ்யாவும் சீனாவும் உதவியளித்தன. இப்போதைய அரசாங்கம் சீனாவின் உதவியுடன் முன்னெடுக்கப்பட்ட எல்லாத் திட்டங்களையும் நிறுத்தியுள்ளது. விடுதலைப் புலிகள் மீண்டும் தலையெடுப்பதை தடுப்பதற்கு மக்கள் முன்நோக்கிவரத் தயாராகவேண்டும்' என்று அவர் கூறியிருக்கிறார். அதாவது, நாடு விடுதலைப் புலிகளின் கைகளுக்குள் சென்றுகொண்டிருக்கிறது, பேராபத்து சூழ்கிறது, காப்பாற்ற வரப்போகிறேன் என்ற தொனியிலேயே மஹிந்த ராஜபக்ஷவின் செய்தி அமைந்திருக்கிறது.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விடுதலைப் புலிகளையும் இனவாதத்தையும் முன்னிறுத்தியே அடுத்தகட்ட அரசியலை ஆரம்பிக்கப்போகிறார் என்பது ஏற்கெனவே தெரிந்த விடயம். அதனாலேயே பல விடயங்களில் தற்போதைய அரசாங்கம், சில நடவடிக்கைகளை எடுக்கத் தயங்கியது. அல்லது பிற்போட்டது. அதுபோலவே, மஹிந்த ராஜபக்ஷவின் மீள்வருகைக்கு துணை போகக்கூடாது என்ற பயத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் ஒதுங்கி நின்றது. அடக்கி வாசித்தது.
இருந்தாலும், மஹிந்த ராஜபக்ஷ தனது அரசியல் தந்திரோபாயத்தை மாற்றிக்கொள்ளாமலேயே, தனது அரசியல் நகர்வை முன்னெடுக்கத் தொடங்கியுள்ளார். மஹிந்த ராஜபக்ஷவுக்கு இவற்றை விட்டால் வேறு வழியினூடாக அரசியலில் தலை எடுக்கமுடியாது. அவரால் விடுதலைப் புலிகள், இனவாதம் ஆகியவற்றை வைத்தே அரசியல் செய்யமுடியும்.
அதேவேளை, மஹிந்த ராஜபக்ஷவின் அரசியல் நகர்வுகளுக்கு பல சமயங்களில் தற்போதைய அரசாங்கமும் துணையாக மாறிவிட்டது. மாத்தறை கூட்டத்தில் மஹிந்த வைத்த முக்கியமான குற்றச்சாட்டுக்களில் ஒன்று, யாழ்ப்பாண குடாநாட்டிலிருந்த 152 இராணுவ முகாம்களில் 59 முகாம்களை புதிய அரசாங்கம் அகற்றிவிட்டது என்பதாகும்.
மஹிந்த ராஜபக்ஷவுக்கு இந்த புள்ளிவிரபங்களை கொடுத்தவர் யாழ். படைகளின் தலைமையகத் தளபதியான மேஜர் ஜெனரல் நந்தன உடவத்த. இது தனிப்பட்ட முறையில் கொடுக்கப்பட்ட புள்ளிவிபரம் அல்ல. அதுபோல, மஹிந்த ராஜபக்ஷ கூறியது போல சரியான புள்ளிவிபரமும் அல்ல.
அண்மையில் யாழ். படைகளின் தலைமையகத்தில் கொழும்பிலிருந்து அழைத்துச்செல்லப்பட்ட ஊடகவியலாளர்கள் பங்கேற்ற ஒரு செய்தியாளர் மாநாடு நடத்தப்பட்டது. அதில், வடக்கில் அதிகளவில் இராணுவம் நிலை நிறுத்தப்பட்டுள்ளதாக முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் சுமத்திய குற்றச்சாட்டை நிராகரிப்பதற்காகவே, ஒரு புள்ளிவிபரத்தை வெளியிட்டிருந்தார் மேஜர் ஜெனரல் நந்தன உடவத்த. அதன்படி, யாழ்ப்பாணத்தில் 152 இராணுவ முகாம்கள் இருந்ததாகவும் ஆனால், போர் முடிவுக்கு வந்த பின்னர் பாதுகாப்பு நிலைமைகளின் முன்னேற்றத்தை அடிப்படையாக கொண்டு 59 இராணுவ முகாம்கள் அகற்றப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியிருந்தார். தற்போது 93 இராணுவ முகாம்களே இருப்பதாகவும் எனினும், பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் ஏதும் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
மேஜர் ஜெனரல் நந்தன உடவத்த கூறிய புள்ளிவிபரங்களை வைத்து மஹிந்த ராஜபக்ஷ, புதிய அரசாங்கம் 59 இராணுவ முகாம்களை கடந்த ஜனவரிக்கு பின்னர் அகற்றிவிட்டதாக புலம்பியிருந்தார்.
மஹிந்த ராஜபக்ஷவுக்கு மேஜர் ஜெனரல் நந்தன உடவத்த கூறியதன் அடிப்படை அம்சங்கள் புரியவில்லை என்று எவரும் நினைத்தால் அது முட்டாள்த்தனம். அவருக்கு தாம் கூறும் செய்தி தவறானது என்று நிச்சயம் தெரிந்தேயிருக்கும். புதிய அரசாங்கம் 59 இராணுவ முகாம்களை யாழ்ப்பாணத்தில் அகற்றியிருக்கிறது என்ற பரபரப்பான செய்தி மக்களுக்கு சென்று சேரவேண்டும் என்று எதிர்பார்த்தே அவர் அந்த தகவலை தனது அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார். இது சிங்கள மக்கள் மத்தியில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை அவர் நன்கறிவார்.
அவர் எதிர்பார்த்தது போலவே சிங்கள மக்கள் மத்தியில் அந்தச் செய்தி பரபரப்பாக ஊடுருவியதுடன் ஊடகங்களும் அவ்வாறே செய்திகளைப் பரப்பின. இதனால், இராணுவத் தலைமையகத்தை வைத்து ஒரு மறுப்பு அறிக்கையை வெளியிடவேண்டிய நிலை அரசாங்கத்துக்கு ஏற்பட்டது.
இதையடுத்து, ஜனவரிக்கு பின்னர் யாழ்ப்பாணத்தில் 59 இராணுவ முகாம்களை மூடியுள்ளதாக வெளியான செய்தியில் உண்மையில்லை என்று கடந்த 16ஆம் திகதி இராணுவத் தலைமையகத்தினால் அறிக்கையொன்று வெளியிடப்பட்டது.
அதன்படி, 2009ஆம் ஆண்டுக்கு பின்னர் 59 இராணுவ முகாம்கள் மூடப்பட்டதாகவும் எனினும், இந்த ஆண்டில் எந்தவொரு முகாமும் மூடப்படவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.
2009இல் 7 முகாம்களும் 2010இல் 9 முகாம்களும் 2011இல் 4 முகாம்களும் 2013இல் 15 முகாம்களும் 2014இல் 24 முகாம்களும் மூடப்பட்டதான புள்ளிவிபரங்களை இராணுவத் தலைமையகம் வெளியிட்டுள்ளது. 2012இலும் 2015இலும் எந்தவொரு இராணுவ முகாமும் மூடப்படவில்லை என்பதை அந்த அறிக்கை தெளிவாக சுட்டிக்காட்டியிருக்கிறது. இருந்தாலும், சிங்கள மக்களிடையே, வடக்கில் இராணுவ முகாம்கள் மூடப்பட்டுள்ளதாக மஹிந்த ராஜபக்ஷ ஏற்படுத்தியுள்ள ஒரு விம்பத்தை இந்த மறுப்பு அறிக்கை அழித்துவிடும் என்று கருதுவதற்கில்லை.
அதேவேளை, மஹிந்த ராஜபக்ஷ, பொய்யானதும் போலியானதுமான பிரசாரங்களின் மூலம் சிங்கள மக்களை இலகுவாக ஏமாற்றி அரசியல் நடத்தவே எத்தனிக்கிறார் என்பது இதன் மூலம் உறுதியாகியிருக்கிறது.
வடக்கில் ஏற்பட்டுவருகின்ற இயல்பு நிலையை அவரால் சகித்துக்கொள்ளவோ, ஏற்றுக்கொள்ளவோ முடியாதிருக்கிறது. ஏனென்றால், அவர் வடக்கை இராணுவ ஆட்சியின் கீழ் தான் வைத்திருந்தார். அந்த நிலை இப்போது முற்றாக மாறிவிட்டது என்று கூறமுடியாவிடினும், ஒப்பீட்டளவில் முன்னேற்றங்கள் இருப்பதை மறுப்பதற்கில்லை.
வடக்கை மீண்டும் இராணுவ அடக்குமுறைகளுக்குள் அடக்கி வைத்திருப்பதற்காகவே அவர் விடுதலைப் புலிகள் என்ற பிரசாரத்தையும் கையில் எடுத்திருக்கிறார். விடுதலைப் புலிகள் மீண்டெழுவதற்கான சாத்தியங்கள் இல்லை என்று மஹிந்த ராஜபக்ஷவின் சகோதரரான முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோட்டாபய ராஜபக்ஷவே சான்றிதழ் கொடுத்திருந்தார். ஆனாலும், மஹிந்த ராஜபக்ஷ, விடுதலைப் புலிகள் என்ற இல்லாத ஒரு மாய விம்பத்தை இப்போதும் உருவாக்கப் பார்க்கிறார். இதன் மூலம் சிங்கள மக்களை பீதியூட்டி அவர்களின் வாக்குகளை கவர எத்தனிக்கிறார். மஹிந்த ராஜபக்ஷவின் இந்த அணுகுமுறையானது தற்போதைய அரசாங்கத்துக்கும் தமிழ்ச் சமூகத்துக்கும் அச்சத்தை கொடுத்திருக்கிறது. அதைவிட சர்வதேச சமூகமும் இதையிட்டு சற்று மிரளவே செய்கிறது. ஏனென்றால், மஹிந்த ராஜபக்ஷவின் இந்த அரசியல் நகர்வு இலங்கையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு ஆபத்தை ஏற்படுத்திவிடக்கூடியது.
ஒரு பக்கத்தில் இனங்களுக்கிடையில் பதற்றத்தை தணித்து, அமைதியை ஏற்படுத்தி, நல்லிணக்கத்துக்கான சூழலை உருவாக்கும் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டுக் கொண்டிருக்கும்போது, மஹிந்த ராஜபக்ஷவின் அறிக்கைகள், கருத்துக்கள் இனங்களுக்கிடையில் சந்தேகங்களையும் கோபத்தையும் தூண்டும் வகையில் அமைந்திருக்கிறது.
விடுதலைப் புலிகள் விவகாரம், பாதுகாப்பு விவகாரங்களில் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்த கருத்துக்கள், சிங்கள மக்களிடையே அரசாங்கத்தின் மீது மட்டும் கோபத்தை ஏற்படுத்தக் கூடியவையல்ல. அது தமிழ் மக்கள் மீதான சந்தேகத்தையும் சிங்கள மக்கள் மத்தியில் ஏற்படுத்தும். அதுபோலவே, மஹிந்த ராஜபக்ஷவின் இத்தகைய கருத்துக்கள் தமிழ் மக்களிடையே வெறுப்பையும் அதேநேரம், இன நல்லிணக்க முயற்சிகளின் மீதான நம்பிக்கையீனத்தையும் ஏற்படுத்தும்.
சிங்கள மக்களின் ஆதரவைப் பெறுவதற்கான அரசியல் போட்டியானது, இத்தகையதொரு அகன்ற பிளவை தோற்றுவித்து வருகிறது. உண்மையில் இப்போது விடுதலைப் புலிகளோ, நாட்டின் பாதுகாப்பு நிலைமையோ நாட்டின் முக்கியமான பிரச்சினை அல்ல. நாட்டை முன்னேற்றுவதற்கான கொள்கைகளை முன்னிறுத்தவேண்டியதே அவசியமானது. ஆனால், அதையிட்டு மஹிந்த ராஜபக்ஷ கவலைப்பட்டதாக தெரியவில்லை.
அவரது குறி எப்படி சிங்கள மக்களின் ஆதரவை குறுக்கு வழியில் பெற்றுக்கொள்ளலாம் என்பதாகவே இருக்கிறது. இனவாதத்தை தூண்டுவதன் மூலம் சிங்கள மக்களை இலகுவாக தன்பக்கம் திருப்பலாம் என்று அவர் வலுவாக நம்புவதால், இந்த வழியை தெரிவுசெய்திருக்கிறார். அவரது இந்த வழிமுறையை யாராலும் தடுக்க முடியாது. ஆனால், இதன் விளைவை ஒட்டுமொத்தமாக இலங்கைத்தீவு அனுபவிக்க நேரிடும்.
இலங்கையில் ஆயுத மோதல்கள் முடிந்து ஆறு ஆண்டுகளாகிள்ளன. ஆனாலும், அமைதி இன்னமும் தோன்றவில்லை என்பது எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு விடயமாகியுள்ளது. இலங்கையில் நிலையான அமைதியை தோற்றுவிக்க வேண்டுமானால், சிங்கள இனவாதம் வலுக்குன்றவேண்டும்.
மஹிந்த ராஜபக்ஷவின் மீள் அரசியல் பிரவேசம் என்பது அதற்கு மாறான விளைவையே கொடுக்கும். அதாவது, சிங்கள இனவாதத்தை மேலும் வலுப்படுத்தவே அவர் முனைகிறார்.
தெற்கில் இனவாதம் கூர்மைப்படுத்தப்படும்போது, இயல்பாகவே நல்லிணக்கச் சூழல் மறைந்துபோகும். அத்தகைய நிலையை நோக்கி நாட்டை நகர்த்துவதே மஹிந்த ராஜபக்ஷவின் இலக்ககாகத் தெரிகிறது. தாம் சிறுபான்மையின மக்களால் நிராகரிக்கப்பட்டவர் என்பதை மஹிந்த ராஜபக்ஷ மறந்துவிடவில்லை.
அத்துடன், இனிமேலும் சிறுபான்மையின மக்களின் ஆதரவை பெறமுடியும் என்ற நம்பிக்கையும் அவரிடத்தில் இல்லை. எனவே, அவர் சிங்கள இனவாதத்தை கூர்மைப்படுத்துவதன் மூலமே தனது அரசியல் அடித்தளத்தை உறுதிப்படுத்த முடியும் என்று கருதுகிறார். இது சிறுபான்மையின மக்களுக்கும் சர்வதேச சமூகத்துக்கும் ஒரு ஆபத்தான அறிகுறியாகவே இருக்கும். மஹிந்த ராஜபக்ஷவின் மீள்வருகை என்பது இலங்கையை மீண்டும் இருண்ட யுகத்துக்கு கொண்டுசெல்வதாகவே அமையலாம். அதனையே அவரது இப்போதைய நகர்வுகளிலிருந்து உய்த்துணரமுடிகிறது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
17 May 2025
17 May 2025