Thipaan / 2015 ஜூன் 22 , மு.ப. 06:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
'அவசரகால நிலையை அமுல்படுத்துவது பற்றி முதலில் அமைச்சரவையை கூட்டி முடிவு எடுத்திருப்பேன். துரதிர்ஷ்டவசமாக அதற்கு இன்று இரவு நேரம் இல்லை. ஆனால், நாளை காலை முதல் வேளையாக அமைச்சரவை கூட்டத்துக்கு தெரிவித்துவிடுவேன்'- இது இந்திய ஜனாதிபதியாக இருந்த பக்ருதீன் அலி அகமதுவுக்கு அன்று பிரதமராக இருந்த இந்திரா காந்தி எழுதிய 'இரகசிய கடிதத்தின்' வாசகம்.
குடியரசுத் தலைவருக்கு இந்தக் கடிதத்தை அனுப்பிய அன்றைய உள்துறை அமைச்சர் பிரமாணந்த ரெட்டி, தனது உள்துறை அமைச்சர் கடிதத்தில் ஹெட்டில் அந்தக் கடிதத்தை அனுப்பாமல், சாதாரண வெள்ளைத்தாளில் அனுப்பினார் என்பது ஷா கமிஷன் விசாரணையில் வெளிவந்த பிரத்தியேக விடயம்.
இக்கடிதத்தின் அடிப்படையில்தான் இந்தியாவில் 1975ஆம் ஆண்டு ஜூன் 25-26 நள்ளிரவில் நெருக்கடி நிலைமை பிரகடனப்படுத்தப்பட்டது. அதற்கு இந்திய குடியரசுத் தலைவரும் அன்று ஒப்புதல் அளித்தார்.
அரசியல் தலைவர்கள் எல்லாம் கைது செய்யப்பட்டார்கள். மிசா, டிபென்ஸ் ஆப் இந்தியா ரூல்ஸ் போன்றவற்றின் அடிப்படையில் எல்லாம் நாடு முழுவதும் உள்ள 'எதிர்ப்பாளர்கள்' 'அதிருப்தியாளர்கள்' கைது செய்யப்பட்டார்கள்.
அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டதிலிருந்து பார்த்தால் வருகின்ற ஜூன் 26ஆம் திகதி மிக முக்கிய மான நாள். இந்திய ஜனநாயகத்தின் கறுப்பு நாள் என்று இன்றும் பேசப்படும் நாள். 'கருத்துச் சுதந்திரத்துக்கு' 'தனி மனித உரிமைக்கு'- ஏன் மொத்தத்தில் 'சுதந்திரக் காற்றை' சுவாசிப்பதற்கு எல்லாம் 'கைவிலங்கு' போட்ட நாள் முடிந்து நாற்பது ஆண்டுகள் இந்த 2015ல் நிறைவு பெறுகிறது.
நாட்டில் அவசரகால நிலை பிறப்பிக்கப்பட்ட போது இந்தியாவில் பணவீக்கம் 33 சதவீதம். இதனால் விலை வாசி விண்ணை முட்டி நின்றது. வங்க தேசப் போரின் தாக்கம் வேறு பொருளாதாரத்துக்கு சவால் விட்டிருந்தது.
போதாக்குறைக்கு 'ஒயில் நெருக்கடி' காரணமாக இந்தியாவின் பொருளாதாரம் மிகப் பெரிய கேள்விக்குறியாக இருந்த வேளை. பதுக்கலும், கடத்தலும் கொடிகட்டி ஆண்ட வருடம் மட்டுமின்றி ரயில்வே வேலைநிறுத்த போராட்டம் நடைபெற்று நாட்டின் போக்குவரத்தும், பொருளாதாரமும் ஸ்தம்பித்து நின்ற நேரம். இப்படியொரு நேரத்தில்தான் 'இந்தியாவுக்கு அதிர்ச்சி வைத்தியம் தேவை' என்று தனக்கு வேண்டிய அமைச்சர்களிடம் பேசினார் இந்திரா காந்தி.
எல்லாவற்றுக்கும் மேலாக ஜெயப்பிரகாஷ் நாராயணனின் போராட்டம், அதையொட்டு மாணவர்கள் அவர் பின் திரண்டனர். பீஹார், குஜராத்தில் தொடங்கிய மாணவர் கிளர்ச்சி நாடு முழுவதும் பரவும் என்ற எண்ணம் மேலோங்கியது.
இதற்கெல்லாம் முத்தாய்ப்பு வைத்தாற்போல் இந்திரா காந்தி, நாடாளுமன்றத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்டமை செல்லாது என்று ராஜ் நாராயணன் தொடர்ந்த வழக்கில் அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதி சின்ஹா தீர்ப்பளித்தார்.
அந்த அவசரத்தில், அவசரகால நிலையை அமைச்சரவையின் ஒப்புதலின்றியே அறிவித்தார் பிரதமராக இருந்த இந்திரா காந்தி.
முதலில் இப்போராட்டங்களை சமாளிக்க என்ன செய்வது என்று இந்திரா காந்தி யோசித்துக் கொண்டிருந்த நேரத்தில் 'உள்நாட்டு கலவரங்களை அடக்கவும் நெருக்கடி நிலைமை கொண்டு வரலாம்' என்ற அதிகாரம் அரசியல் சட்டத்தில் இருக்கிறது என்பதை இந்திராகாந்திக்கு நினைவூட்டியவர் அப்போது மேற்குவங்க முதலமைச்சராகவும், இந்திரா காந்திக்கும் மிகவும் நெருக்கமாகவும் இருந்த சித்தார்த்த சங்கர் ரே என்ற தகவல் அதிகார வட்டத்தில் உண்டு.
இந்த நெருக்கடி நிலையின்போது அடக்குமுறை அளவு கடந்து போனது. பொலிஸாரின் அத்துமீறல்கள் இமய மலை உயரத்துக்கு உயர்ந்து நின்றன.
110,806 பேர் கைது செய்யப்பட்டார்கள். மத்திய, மாநில அரசு ஊழியர்கள் 25,962 பேர் கட்டாய ஓய்வு கொடுத்து வீட்டுக்கு அனுப்பப்பட்டார்கள்.
டெல்லியில் 150,105 பேரின் வீடுகள் புல்டோசர்கள் மூலம் இடிக்கப்பட்டு அவர்கள் எல்லாம் வேறு தங்குமிடம் கொடுக்கப்படாமல் விரட்டப்பட்டார்கள்.
சஞ்சய் காந்தியின் ஐந்து அம்சத் திட்டத்தின் கீழ், 1975-76ஆம் ஆண்டுகளில் 2,624,755 பேருக்கும், 1976-77ஆம் ஆண்டு 8,132,209 பேருக்கும் கட்டாயக் குடும்பக் கட்டுப்பாடு செய்யப்பட்டது.
பத்திரிகை அலுவலகங்களுக்கு மின்சார விநியோகம் நிறுத்தப்பட்டது. நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற நடவடிக்கை குறிப்புகளே தணிக்கைக்குப் பிறகுதான் வெளியிட முடியும் என்ற நிலைமை உருவானது.
டெல்லி உயர்நீதிமன்றத்தில் இருந்த நீதிபதி ஆர்.என். அகர்வால் பதவியறக்கம் செய்யப்பட்டு செசன்ஸ் நீதிபதியாக்கப் பட்டார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தவிர மொத்தம் 10 அரசியல் கட்சிகள் (காங்கிரஸ் (ஓ), பாரதிய ஜன சங்கம், தி.மு.க. உள்ளிட்ட) நெருக்கடி நிலைமையை கடுமையாக எதிர்த்தன.
தமிழகத்தில் ஆட்சியிலிருந்து கொண்டே நெருக்கடி நிலையை எதிர்த்து தீர்மானம் போட்ட ஒரே கட்சி தி.மு.க. என்பதுதான் நெருக்கடி நிலை பற்றிய கடந்த கால வரலாறு.
இப்படி வந்த நெருக்கடி நிலைமைக்குப் பிறகு நடைபெற்ற பொதுத் தேர்தலில் இந்திரா காங்கிரஸ் படு தோல்வியடைந்தது. ஜனநாயகம் திரும்பவும் வென்றது.
இந்த நெருக்கடி நிலை என்றால் மூன்று பேரின் பெயர்களை மறக்க முடியாது. ஒன்று ஊழலுக்கு எதிராக இந்திய மக்களை ஒன்று திரட்டிய ஜெயப்பிரகாஷ் நாராயணன். நெருக்கடி நிலைமை அமல்படுத்தப்பட்ட நள்ளிரவே கைது செய்யப்பட்டவர் இவர்.
இரண்டாவதாக இந்திரா காந்தியின் தேர்தலை இரத்து செய்த அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதி சின்ஹா. மூன்றாவதாக உச்சநீதிமன்ற நீதிபதி எஸ்.சி. ஷா. நெருக்கடி நிலைமையின் அத்துமீறல்கள் குறித்து விசாரித்து அறிக்கை கொடுத்தவர் இவர்தான்.
ஆனால், அன்றைக்கு ஒரு மாதத்துக்;கு அவர் எவ்வளவு சம்பளம் வாங்கினார் தெரியுமா? வெறும் ஒரு ரூபாய். இந்திய ஜனநாயகத்தை மீட்கும் தன் பணிக்கு சம்பளம் எதற்கு என்று நினைத்த அவர் அடையாளமாக ஒரேயொரு ரூபாய் சம்பளத்தை வாங்கிக் கொண்டு விசாரணை அறிக்கையைக் கொடுத்தார்.
அந்த அளவுக்கு 'ஷா கமிஷன்' விசாரணை இந்தியாவில் பிரபலமானது. 1977ல் தேர்தலுக்குப் பிறகு வந்த மொரார்ஜி தேசாய் தலைமையிலான ஜனதா அரசு மே 1977ல் இந்த ஆணையத்தை அமைத்தது. அதன் அறிக்கை ஜூன் 1978ல் கொடுக்கப்பட்டது.
ஆனால், அதன் பின்னர் ஆட்சிக்கு வந்த இந்திரா காந்தி ' வெளியிடப்பட்ட அறிக்கை, விற்பனைக்கு வைத்திருந்த அறிக்கை என்று எல்லா ஷா கமிஷன் அறிக்கைகளையும் திரும்பப் பெற்று அத்தனை அறிக்கைகளையும் அழித்து விட்டார்' என்றே குற்றச்சாட்டு எழுந்தது.
இன்றைக்கு, ஷா கமிஷன் அறிக்கையின் நகல் இந்தியாவில் ஒன்று கூட இல்லை என்பதுதான் அன்றைய தினம் பத்திரிகைகள் அனைத்திலும் வந்த தலைப்புச் செய்திகள். ஆனால் நெருக்கடி நிலைமை குறித்து விசாரித்து வெளியிடப்பட்ட ஷா கமிஷன் அறிக்கையை ஆங்காங்கே திரட்டி ,'ஷா கமிஷன் அறிக்கை- தொலைந்ததும், மீட்டதும்' என்று புத்தகம் வெளியிட்டவர் தமிழகத்தைச் சேர்ந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் இரா. செழியன்தான்.
அதுவும் அவசரகால நிலை முடிந்து 30 வருடம் கழித்துத்தான் அதை அவரால் செய்ய முடிந்தது.
இந்த நெருக்கடி நிலையைத்தான் இப்போது பா.ஜ.க.வின் மூத்த தலைவரும் முன்னாள் துணை பிரதமருமான எல்.கே. அத்வானி நினைவூட்டியிருக்கிறார்.
பிரதமர் மோடி பதவிக்கு வந்த பிறகு அமைதியாக இருக்கும் அவர் சமீபத்தில் திடீரென்று, 'இனியொரு முறை இந்தியாவில் அவசரகால நிi வராது என்பதற்கு உத்தரவாதம் இல்லை' என்ற ரீதியில் பேட்டி கொடுத்தார்.
இப்பேட்டி மக்கள் மத்தியில் பீதியைக் கிளப்பியது. எதிர்கட்சிகள் எல்லாம் 'நரேந்திரமோடியின் ஆட்சி பற்றித்தான் இப்படிக் கூறுகிறார் அத்வானி' என்று கருத்துத் தெரிவித்தன.
ஆனால், கொடுத்த பேட்டியை 24 மணி நேரத்துக்குள் மாற்றிக் கொண்ட அத்வானி, 'சோனியாவும், ராகுல் காந்தியும் அவசரகால நிலைக்காக இதுவரை மன்னிப்புக் கேட்கவில்லை. அவர்களை மனதில் வைத்துத்தான் அந்தக் கருத்தை சொன்னேன்' என்று கூறிவிட்டார்.
அத்வானி போன்ற மூத்த தலைவர், அதுவும் அவசரகாலநிலையில், 19 மாதம் சிறையில் அடைக்கப்பட்டிருந்த தலைவரிடமிருந்து இதை மற்ற அரசியல் கட்சித் தலைவர்கள் சற்றும் எதிர்பார்க்கவில்லை.
ஏனென்றால், அவசரகாலநிலைக்கும் அப்போது ஆட்சி அதிகாரத்தில் இல்லாத சோனியா, ராகுலுக்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது என்பதே மற்ற கட்சித் தலைவர்கள் கேட்கும் கேள்வி.
இந்திய அரசாங்கத்தில் 'எல்லாம் மோடி மயம்' என்ற இமேஜ் உருவாக்கப்படுகிறது. குறிப்பாக பல தலைவர்களும், 'மோடியின்றி அரசில் ஓர் அணுவும் அசையாது' என்று விமர்சித்து வருகிறார்கள்.
இந்த விமர்சனத்தின் எதிரொலியாகத்தான் அத்வானியின் கருத்து முதலில் இருந்தது. ஆனால், ஆர்.எஸ்.எஸ். இயக்கம் மற்றும் பா.ஜ.க.வில் உள்ள முக்கியத் தலைவர்கள் கொடுத்த அழுத்தத்தின் காரணமாக அத்வானி 'அவசரகால நிலை பற்றிய தன் கருத்திலிருந்து மாறி விட்டார்' என்பதுதான் டெல்லி வட்டாரச் செய்தி.
ஆனால், 'ஜனநாயகத்துக்கு மதிப்புக் கொடுக்கும் தலைவர்கள் இந்தியாவில் குறைந்து கொண்டே போகிறார்கள்' என்ற தன் கருத்தை அத்வானி திரும்பப் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
எது எப்படியோ 1975ல் இந்தியாவில் வந்த எமெர்ஜென்ஸி பற்றி இன்றைக்கு 2015ல் 'பசுமையானதொரு' விவாதத்துக்கு வழி வகுத்துக் கொடுத்து விட்டு அமைதியாகி விட்டார் அத்வானி.
இன்றைக்கும் திட்டக் கமிஷன் ஒழிக்கப்பட்டு விட்டது. நீதித்துறைக்கும்- அரசுக்கும் 'நீதிபதிகள் நியமனம்' தொடர்பான ஆணையத்தால் சர்ச்சை எழும்பி, இப்போது அது உச்சநீதிமன்றத்திலேயே வழக்காடப்பட்டு வருகிறது.
ராஜ்ய சபையில் ஆளுங்கட்சியாக இருக்கும் பா.ஜ.க.வுக்கு பெரும்பான்மை இல்லாததால் எந்த மசோதாவையும் தங்கள் இஷ்டத்துக்கு கொண்டு வந்து நிறைவேற்ற முடியவில்லை.
இப்படி பல்வேறு பிரச்சினைகள் நிர்வாக ரீதியாக ஆளவட்டம் போட்டுக் கொண்டுதான் இருக்கின்றன. இது போன்ற சூழலில் அத்வானியின் பேச்சை சற்று அச்சத்துடனையே மற்ற கட்சி தலைவர்கள் பார்த்தார்கள்.
ஆனால், அன்றைக்கு இருந்ததை விட இன்றைக்கு ஜனநாயகம் பன்மடங்கு முதிர்ச்சியடைந்து விட்டது. மக்கள் பெரும் விழிப்புணர்வு பெற்று இருக்கிறார்கள். ஆகவே இனியொரு முறை 'நெருக்கடி நிலை' என்பதெல்லாம் இந்தியாவில் நடக்காது என்றே அரசியல் தலைவர்கள் எண்ணுகிறார்கள்.
மக்கள் மத்தியிலும் கூட அந்த எண்ணமே மேலோங்கி நிற்கிறது. ஆனாலும் அத்வானி சார்ந்த ஆளுங்கட்சியே ஆட்சியிலிருப்பதால் 'அவசரகால நிலை பற்றிய அவரின் கருத்து' ஒரு எச்சரிக்கை மணி போலவே பார்க்கப்படுகிறது.
6 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
7 hours ago