2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

விக்கி - மாவை மோதல்

Thipaan   / 2015 ஜூன் 24 , மு.ப. 08:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழ்த் தேசிய அரசியலின் வாக்குப் பெறுமதியாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பையே வடக்கு- கிழக்கு தமிழ் மக்கள் கொள்கின்றார்கள். அதுவே, பெருமளவான விமர்சனங்கள் மற்றும் அதிருப்திகளுக்கு அப்பால் நின்று தமிழ் மக்கள் தொடர்ந்தும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினை தேர்தல்களில் ஆதரிப்பதற்கு காரணமாக அமைகின்றது.

ஆயுதப் போராட்டத்துக்குப் பின்னரான தமிழ்த் தேசிய அரசியல் ஸ்திரத்தன்மையை தக்க வைப்பதற்கு தமிழ் மக்களின் இந்த நிலைப்பாடு பெருமளவுக்கு அவசியமானதாகவும் இருக்கின்றது.

ஆனால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் செயற்பாட்டு அரசியல் என்பது அறிக்கை மற்றும் தேர்தல் கால ஆர்ப்பரிப்புக்கள் என்கிற நிலைகளிலிருந்து அடுத்த கட்டம் நோக்கி நகர்வதற்கான அறிகுறிகளை காட்டுவதாக இல்லை. மாறாக, தேர்தல் அரசியலின் அழுக்கான பக்கங்களையும் பதவி நோக்கிய சதிராட்டத்தையும் அப்பட்டமாகக் காட்டத் தொடங்கியிருக்கின்றது.

ஆட்சி மாற்றத்துக்குப் பின்னரான சிறிய ஜனநாயக இடைவெளியை(!) அல்லது அப்படியான தோற்றப்பாட்டை, தமிழ் அரசியல் சூழலில் பெருமளவான வெற்றிகளைப் பெற்றுக் கொள்வதற்காக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

ஆனால், அப்படியான வெற்றிக்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்குப் பதில், தமிழ்த் தேசிய அரசியலின் சிதைப்புக்கான பக்கங்கள் திறந்துவிடப்பட்டிருக்கின்றதோ என்று அச்சம் கொள்ள வைக்கின்றது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்கள் உள்ளிட்ட தரப்புக்களுக்கிடையில் சரியான ஒருங்கிணைப்பு இல்லை.

அதுபோல, மக்களின் அரசியல் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆரம்பத்திலிருந்து ஆர்வம் கொள்வதில்லை. மாறாக, மக்களை வாக்களிக்கும் கருவிகளாக மட்டுமே கையாள்கின்றது.

இவ்வாறான நிலைகள் தொடர்ச்சியான பின்னடைவையே தமிழ்த் தேசிய அரசியலில் ஏற்படுத்தி வருகின்றன. அரசியல் – இராஜதந்திர நிலைப்பாடுகள் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்கள் விளக்கமளிப்பது குறைவு. பல நேரங்களில் பங்காளிக் கட்சிகளுக்கு இடையில் கூட அது நிகழ்த்தப்படுவதில்லை.

எவ்வளவு விமர்சனங்கள், அதிருப்திகளுக்குப் பின்னரும் கூட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை தங்களுடைய வாக்குப் பெறுமதியாக தமிழ் மக்கள் ஒருங்கிணைந்து முன்வைப்பதானது, சிங்கள பௌத்த தேசியவாதத்தினாலும் சர்வதேச சதிராடிகளினாலும் அவ்வளவு இரசிக்கப்படும் ஒன்றல்ல. மஹிந்த ராஜபக்ஷ என்கிற பொது எதிரியை வீழ்த்துவதற்கான புள்ளியில் சிங்கள பௌத்த தேசியவாதத்தின் ஒரு பிரிவும், சர்வதேச சதிராடிகளும், தமிழ் மக்களும் இணைந்தார்கள் என்பதை மறுக்க முடியாது.

அந்த நிகழ்ச்சி நிரல் குறிப்பிட்டளவில் முடிந்துவிட்டது (மஹிந்தவின் மீள் வருகைக் கோஷங்களை கட்டுப்படுத்துவது இந்தத் தரப்புக்கு முன்னாலுள்ள பெரும் சவால்). அப்படிப்பட்ட நிலையில் தமிழ்த் தேசியத்தினை சல்லடையாக்குவது என்கிற  பழைய நிலைப்பாட்டில் சிங்கள பௌத்த தேசியவாதமும் சர்வதேச சதிராடிகளும் எந்தவித விட்டுக் கொடுப்புமின்றி செயலாற்றுவார்கள். அப்படியான, கட்டங்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தற்போதும் எதிர்கொள்கின்றது.

 மைத்திரியின் ஆட்சி அரங்கேற்றப்பட்டு சில மாதங்களே ஆகின்ற போதிலும், அந்தக் காலத்துக்குள்ளேயே பலமான உள் உடைவுகளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெளிப்படுத்த ஆரம்பித்துவிட்டது.

அந்த உள் உடைவுகள் ஏற்கெனவே இருந்த ஒன்றுதான், பொது எதிரியாக மஹிந்த ராஜபக்ஷ இருந்த வரை அது அவ்வளவு வெளிக்காட்டப்படவில்லை அல்லது மக்களின் பார்வைக்கு வரவில்லை என்றும் கொள்ள முடியும். ஆனால், இப்போதுள்ள இடைவெளி அவற்றை இருக்கின்ற அளவைத் தாண்டியும் பெருப்பித்துக்  காட்டச் செய்கின்றன.

இப்படியான நிலையில்தான், எதிர்வரும் பொதுத் தேர்தலை நோக்காகக் கொண்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களை கூட்டி, பங்காளிக் கட்சிகளுக்கிடையில் வேட்பாளர்களை பங்கிடுவது தொடர்பில் ஆராய்கின்றது. முக்கிய அரசியல்- இராஜதந்திர விடயங்களை கையாள்வதற்காக அவ்வளவாக கூட்டப்படாத ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்கள் அல்லது பங்காளிக் கட்சித் தலைவர்களின் கூட்டங்கள் தேர்தல் என்றதும் எந்தவித கால தாமதமுமின்றி கூட்டப்படுகின்றன.

 இன்னொரு பக்கம் எந்தவித தார்மிகமும் இன்றி, ஒருவர் மீது மற்றவர் சேறுபூசும் அரசியலை கூச்சமின்ற முன்னெடுக்க ஆரம்பித்துவிட்டனர். அதற்கான களங்களை தமிழ் ஊடகச் சூழலும் (குறிப்பாக இணைய  ஊடகங்களும்) எந்தவித அடிப்படைகளும் இன்றி ஏற்படுத்திக் கொடுத்திருக்கின்றன. தமிழ்த் தேசிய அரசியலின் எழுச்சியிலும் வீழ்ச்சியிலும் தமிழ் ஊடகங்களின் பங்கு அளப்பரியது.

அதன்போக்கில், சேறு பூசும் அரசியலையும் அவை தமக்குள் உள்வாங்கி கையாள்கின்றன. அதன் பிரதிபலிப்புக்கள் இப்போதும் சொல்ல முடியாதளவுக்கு அதிகரித்திருக்கின்றது. இது, தமிழ்த் தேசிய அரசியலை வீழ்த்துவதற்கான சதிராடிகளுக்கு சாதகமான நிலையையும் ஏற்படுத்தியிருக்கின்றது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் செயலாளரும் தமிழரசுக் கட்சியின் தலைவருமான மாவை சேனாதிராஜா மற்றும் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் ஆகியோருக்கிடையில் கடந்த சில நாட்களாக இடம்பெற்று வருகின்ற கருத்து மோதல், ஊடகங்களினால் அதிகம் முன்னிறுத்தப்படுகின்றது. உட்கட்சி அரசியல் பிணக்குகள் என்கிற நிலையில் இருந்து அது, அடுத்த கட்டம் நோக்கி நகர்த்தப்படுவதற்கான காட்சிகளின் பிரதிபலிபையும் காட்டுகின்றது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடனான அண்மைய சந்திப்பொன்றின் போது 'வட மாகாண சபையை கருத்திற் கொள்ளாமல் கொழும்பு (மத்திய அரசாங்கம்) தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களை அழைத்து நேரடியாக பணம் வழங்குகின்றது. இது, கட்சியையும் வட மாகாண சபையையும் புறந்தள்ளும் நடவடிக்கையாக பார்க்கப்பட வேண்டியது' என்கிற  தொனியிலான கருத்தை முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் வெளியிட்டார் என்று ஊடகங்களில் செய்தி வெளியாகியிருந்தது.

குறித்த விடயம், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களே கூட வடக்கு மாகாண சபையை கருத்தில் கொள்வதில்லை என்கிற நிலைப்பாட்டை மக்களிடம் கொண்டு சேர்க்க பெருமளவு காரணமானது. முதலமைச்சரின் குறித்த கருத்து மாவை சேனாதிராஜாவை மறைமுகமாக குற்றஞ்சாட்டியிருந்ததாகவும் கொள்ளப்பட்டது. இதனையடுத்து, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் செயலாளர் என்கிற ரீதியில் மாவை சேனாதிராஜா, முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனிடம்  சம்பந்தப்பட்ட விடயம் தொடர்பில் விளக்கமளிக்க கோரியிருந்தார்.

அதற்குப் பதிலளித்த சி.வி.விக்னேஸ்வரன், மத்திய அரசாங்கத்திடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பணம் வாங்கிய விவகாரம் தொடர்பில் குறைபாடுள்ள விளக்கத்தை அளித்தார். அத்தோடு, 'தமிழ்த் தேசியத்துக்காக உழைக்க வேண்டும் என்ற நோக்கத்துக்காக உருவாக்கப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒற்றுமை உணர்வும் அர்ப்பணிப்பு தன்மையும் தேர்தல் காலங்களில் மட்டுமல்லாமல், என்றும் நீடித்து நிலைத்திருக்க வேண்டும் என்பதே எனது விருப்பம்' என்று தொனிப்படும் உறுதிப்பாட்டையும் வெளியிட்டார். இதற்குப் பின்னரும் கூட குறித்த விடயம் ஊடகங்களில் தொடர்ந்தும் இருபக்க- மூன்றாவதுபக்க கருத்துக்களின் பரவலாக்கத்துடன் கையாளப்படுகின்றது.

இரா.சம்பந்தனுக்குப் பின்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினை வழிநடத்துவது யார்? என்கிற கேள்வி காலத்தினால் முக்கியத்துவம் பெறுகின்றது (ஒருவரின் வயதை வைத்து அவரின் இறுதிக் காலம் குறித்த கேள்வியை முன்வைப்பது அபத்தமானது. ஆனால், அந்தக் கேள்வி மக்களின் பெரும் அரசியலுக்கு அவசியமானது என்கிற போது அதனைத் தவிர்ப்பது நல்லதல்ல).

சிரேஷ்ட அடிப்படையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமைத்துவத்துக்கான போட்டி நிலையில், மாவை சேனாதிராஜா முன்னிலையில் இருக்கின்றார். ஆனால், அவருக்கு பெரும் போட்டியாளராக முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கருதப்படுகின்றார். வட மாகாண சபைத் தேர்தலில் மாவை சேனாதிராஜாவைத் தாண்டி சி.வி.விக்னேஸ்வரன் முன்னிறுத்தப்பட்டது கருத்தில் கொள்ள வேண்டியது.

அப்படிப்பட்ட அரசியல் நிலை இப்போது இல்லை என்கிற போதிலும், வடக்கு மாகாண சபைத் தேர்தல் காலத்தில் மாவை சேனாதிராஜாவுக்கு ஆதரவாக இருந்த சில தரப்புக்கள், இப்போது சி.வி.விக்னேஸ்வரன் பக்கம் தாவியிருக்கின்றன. அதுபோல, தனிக்கட்சி அரசியல் என்கிற நிலைப்பாட்டில் தமிழரசுக் கட்சியினரால் தவிர்க்க முடியாமல் மாவை சேனாதிராஜா முன்னிறுத்தப்படுகின்றார்.

யதார்த்த அரசியல் மற்றும் இராஜதந்திர நிலைப்பாடுகளின் போக்கில் இரா.சம்பந்தனுக்கு பின்னரான தலைமைத்துவத்துக்கு மாவை சேனாதிராஜாவோ, சி.வி.விக்னேஸ்வரனோ அவ்வளவு பொருத்தமான தலைவர்களாக இல்லை என்பது வெளிப்படை. ஏனெனில், தமிழ்த் தேசிய அரசியல் நிலைப்பாட்டில் மாவை சேனாதிராஜாவுக்கும் சி.வி.விக்னேஸ்வரனுக்குமான பார்வையில் அவ்வளவு வித்தியாசங்கள் இல்லை.

அதுபோல, நீடித்த அரசியலின் போக்கில் சீக்கிரமாக பதற்றமான கருத்துக்களை வெளியிட்டு முரண்பாடுகளை அதிகரித்துக் கொள்ளும் தன்மை கொண்ட ஒரே நிலையிலேயே இருவரும் இருக்கின்றவர்கள் (தமிழ்த் தேசிய அரசியலின் தலைமைத்துவத்துக்கு இரா.சம்பந்தன் எவ்வளவு பொருத்தமானவர் என்கிற கேள்விக்கான தருணம் இன்னமும் முடிந்துவிடவில்லை என்பது வேறு விடயம்).

வயதை வைத்து, சிரேஷ்ட நிலையைக் கடந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமைத்துவம் மற்றவர்களிடம் கைமாறும் என்று எதிர்பார்க்க முடியாது. அடுத்த கட்டத்திலும் தலைமையேற்பதற்கு பொருத்தமான தலைவர்கள் வளர்தெடுக்கப்படவில்லை. அதை, தமிழ்த் தேசியச் சூழல் அனுமதித்து வந்திருக்கவில்லை.

அப்படிப்பட்ட நிலையில், மாவை சேனாதிராஜா மற்றும் சி.வி.விக்னேஸ்வரன் ஆகியோருக்கு இடையில் இப்போது எழுந்துள்ள சர்ச்சைகள், தமிழ்த் தேசிய அரசியலை சிதறடிப்பதற்கான தரப்புக்களினாலும் கையாளப்படுகின்றதோ என்று அச்சம் கொள்ள வேண்டியிருக்கின்றது. அதைத் தாண்டி, முறையான அரசியல் திட்டங்களுக்குள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு செல்ல வேண்டிய உண்மையையும் உணர்ந்தி நிற்கின்றது. அதுதான், நீடித்த தமிழ் தேசிய அரசியலுக்கு அவசியமானது!

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .