2025 மே 17, சனிக்கிழமை

புயலை கிளப்பி விட்டுள்ள அமெரிக்கா

Suganthini Ratnam   / 2015 ஜூன் 25 , மு.ப. 06:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கே.சஞ்சயன்

அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் தீவிரவாத முறியடிப்புக்கான பிரிவு கடந்த 19ஆம் திகதி வொஷிங்டனில் வெளியிட்ட அறிக்கை இலங்கையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

தீவிரவாதம் தொடர்பான இந்த அறிக்கை அமெரிக்காவினால் ஆண்டு தோறும் வெளியிடப்பட்டுவரும் ஒன்றாகும்.
ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதத்தில் வெளியிடப்படும் இந்த அறிக்கையில், உலகில் உள்ள நாடுகளில் தீவிரவாதம் தொடர்பான செயற்பாடுகள் குறித்தும் அமெரிக்காவினால் உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் தடைசெய்யப்பட்ட அமைப்புகளின் செயற்பாடுகள் குறித்தும் விபரிக்கப்படுவது வழக்கம்.

ஆண்டு தோறும் வெளியிடப்படும் இந்த அறிக்கையின் உள்ளடக்கங்கள் பெரும்பாலும் மாற்றப்படுவதில்லை.
பிந்திய நிலைமைகளை உள்ளடக்கிய சிறிய மாற்றங்கள் மட்டும் இதில் ஆண்டு தோறும் இடம்பெறும். மற்றெல்லா பகுதிகளும் வழக்கம் போலவே இருக்கும். இம்முறை அமெரிக்கா வெளியிட்ட அறிக்கையிலும் அவ்வாறே கூறப்பட்டுள்ளது. ஆனால், அமெரிக்காவினால் வெளிநாட்டு தீவிரவாத அமைப்பாக பட்டியலிடப்பட்ட விடுதலைப் புலிகள் பற்றிய அறிக்கையில் ஒரு சிறிய பந்தி மட்டும் சேர்க்கப்பட்டுள்ளது.

அதில் மலேசியாவில் 2014ஆம் ஆண்டு விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர்களில் பலர் இந்தியாவில் உள்ள அமெரிக்க, இஸ்ரேலிய இராஜதந்திர மையங்களை தாக்கத் திட்டமிட்டதாக குற்றஞ்;சாட்டப்பட்டுள்ளனர் என்று கூறப்பட்டுள்ளது.

அதை விட, கடந்த சில வருடங்களில் கூறப்பட்டது போன்றே  2014ஆம் ஆண்டு விடுதலைப் புலிகளின் நிதி வலையமைப்பு ஆதரவு தொடர்ந்து செயற்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது.

மற்றும்படி, அமெரிக்காவின் அறிக்கையில் சிறிலங்கா குறித்த பகுதியில் விடுதலைப் புலிகளால் அச்சுறுத்தல் இருப்பதான எந்தக் கருத்தும் இடம்பெறவில்லை. ஆனால், விடுதலைப் புலிகள் பற்றி அமெரிக்கா குறிப்பிட்ட பகுதிகளை வைத்து இலங்கையில் எதிர்க்கட்சிகள் பெரும் புயலை கிளப்பியிருக்கின்றன. இது அரசாங்கத்துக்கும் பெரும் சங்கடத்தையும் நெருக்கடியையும் ஏற்படுத்தியிருக்கிறது.

இலங்கை தேர்தல் ஒன்றுக்கு முகம் கொடுக்கவுள்ள சூழலில் விடுதலைப் புலிகளையும் இனவாதத்தையும் முன்னிறுத்தி முன்னாள் ஜனாதிபதி  மஹிந்த ராஜபக்ஷ மீண்டும்  தலையெடுக்க முயற்சிக்கும் சூழ்நிலையிலேயே அமெரிக்காவின் இந்த அறிக்கை வெளியானது.

இது போன்ற கருத்துக்கள் மஹிந்த ராஜபக்ஷ தரப்பை ஊக்கப்படுத்தும். அவர்கள் இதனை பூதாகாரப்படுத்துவார்கள் என்பதை அமெரிக்கா அறியாதிருக்கும் எனக் கருதமுடியாது. ஆனாலும், அமெரிக்கா இந்தக் கட்டத்தில் சர்ச்சைக்குரிய விடயங்களை ஏன் சேர்த்துக்கொண்டது என்ற கேள்வி எழுந்திருக்கிறது.

மலேசியாவில் 13 விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் கைதுசெய்யப்பட்டதான ஒரு தகவல் அமெரிக்க அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அது கடந்த ஆண்டு மே மாதம் மலேசியாவில் விடுதலைப் புலிகளின் உறுப்பினர்கள் என்று கைதுசெய்யப்பட்ட நால்வரையே குறிப்பிடுவதாக கருதப்படுகிறது. இவர்கள் பின்னர் இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டனர்.
ஆனால், 13 பேர் கைதுசெய்யப்பட்டதாக அமெரிக்க அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இது பற்றி இலங்கை அரசாங்கமோ, மலேசியாவோ எந்த தகவலையும் ஒருபோதும் வெளியிடவில்லை.

அடுத்து மலேசியாவில் கைதுசெய்யப்பட்ட புலிகள் அல்லது புலிகளின் ஆதரவாளர்களுக்கும் தென்னிந்தியாவில் உள்ள அமெரிக்க, இஸ்ரேலியத் தூதரகங்கள் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டவர்களுக்கும் தொடர்பு உள்ளதாக இதுவரை எந்த தகவலும் வெளியாகியிருக்கவில்லை.

சென்னையில் உள்ள அமெரிக்க தூதரகம், பெங்களூரில் உள்ள இஸ்ரேலியத் தூதரகம் ஆகியவற்றைத் தாக்கத் திட்டமிட்டதாக மலேசியாவில் கைதுசெய்யப்பட்டவர்கள் பாகிஸ்தான் உளவுப் பிரிவான ஐ.எஸ்.ஐ.  முகவர்களே தவிர, விடுதலைப் புலிகள் அல்ல.

இது தொடர்பாக விசாரணைகளை முன்னெடுக்கும் இந்தியப் புலனாய்வுப் பிரிவினர் ஒருபோதும் இந்த தாக்குதல் திட்டத்துடன் விடுதலைப் புலிகளைத் தொடர்புபடுத்தியிருக்கவில்லை. ஆனால், அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் அறிக்கையில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது சந்தேகங்களை எழுப்பியிருக்கிறது. இது, அமெரிக்கா வெளியிடும் அறிக்கைகளின் உண்மைத்தன்மைகள் மீதும் சந்தேகங்களை எழுப்பவைக்கும் என்பதில் சந்தேகம் உள்ளது.

அதேவேளை, விடுதலைப் புலிகளின் நிதி ஆதரவு வலையமைப்பு தொடர்ந்து செயற்படுவதாக அமெரிக்கா முன்னைய ஆண்டுகளில் வெளியிட்ட அறிக்கைகளிலும் கூறியிருந்தது. அது இந்த ஆண்டு அறிக்கையில் புதிதாக இடம்பெற்ற விடயம் அல்ல. எனினும், எதிர்க்கட்சியினர், விடுதலைப் புலிகள் இன்னமும் உயிர்ப்புடன் இருப்பதாக அமெரிக்காவே அறிவித்துவிட்டது என்று பிரசாரத்தை ஆரம்பித்துள்ளனர்.

முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ், இது குறித்து அவசரமாக அமைச்சரவை கூட்டப்பட்டிருக்க வேண்டும். ஆனால், அவ்வாறு நடக்கவில்லை என்று கூறியிருக்கிறார். அவ்வாறாயின், ஆறு மாதங்களுக்கு முன்னர்வரை வெளிவிவகார அமைச்சராக இருந்த அவருக்கு விடுதலைப் புலிகளின் சர்வதேச வலையமைப்புகள் இன்னமும் முற்றாக அழிந்துவிடவில்லை என்பது தெரியாமலா இருந்திருக்கும்? அதுபோலவே, முன்னாள் பாதுகாப்புச் செயலரான கோட்டாபய ராஜபக்ஷ, நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு ஆபத்து வந்திருப்பதாக அறிக்கை வெளியிட்டிருக்கிறார். அவரும் அமெரிக்க அறிக்கையை மேற்கொள்காட்டியிருக்கிறார்.

இதற்கு முன்னர் அமெரிக்கா வெளியிட்ட பல அறிக்கைகளை அவர் கேலி செய்திருந்தார். விடுதலைப் புலிகள் இயக்கம் அழிக்கப்பட்டிருந்தாலும், பொறுப்புக்கூறலும் நல்லிணக்கமும் ஏற்படுத்தப்படாவிட்டால் மீண்டும் ஐந்து அல்லது பத்து ஆண்டுகளில் இலங்கையில் போர் வெடிக்கும் என்று அமெரிக்கா கூறியபோது, அவ்வாறு நிகழாது என்று அடித்துக் கூறியவர் அவர்.

இனிமேல் புலிகள் தலையெடுப்பதற்கு வாய்ப்பில்லை என்று கூறிவந்த அவர், பின்னர் ஒரு கட்டத்தில் அரசியல் நலன்களுக்காக புலிகளால் ஆபத்து இருப்பதாக கூறத் தொடங்கினார். முன்னாள் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனுடன் அவரது ஈழக்கனவும் குழி தோண்டிப் புதைக்கப்பட்டு விட்டதாக மார் தட்டிய அவரே, இப்போது ஈழக்கனவை நிறைவேற்றுவதற்கு பலரும் வெளிநாடுகளில் காத்திருப்பதாக கூறியிருக்கிறார்.

சில நாட்களுக்கு முன்னர்வரை தனக்கு புலனாய்வு அறிக்கைகள் கிடைப்பதில்லை என்பதால் நாட்டின் பாதுகாப்பு நிலை குறித்து தனக்கு எதுவும் தெரியாது என்று செய்தியாளர்களிடம் கூறிய கோட்டாபய ராஜபக்ஷவே, அமெரிக்க அறிக்கையை மேற்கொள் காட்டி, பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக கூறியிருக்கிறார். அது மட்டுமன்றி, கேந்திர முக்கியத்துவமான இடங்களில் இருந்த இராணுவ முகாம்களை அரசாங்கம் அகற்றிவிட்டதாகவும் குற்றஞ்சாட்டியிருக்கிறார்.

இராணுவத் தலைமையகமோ, 2015ஆம் ஆண்டில் எந்தவொரு முகாமும் அகற்றப்படவில்லை என்று உறுதியாக கூறியிருக்கிறது. ஆனால்,  அதற்கு முரணாக கோட்டாபய ராஜபக்ஷ கருத்து வெளியிட்டுள்ளார். அவ்வாறாயின், இராணுவத் தலைமையகம் கூறுவது பொய் என்று கோட்டாபய ராஜபக்ஷ ஏற்றுக்கொள்வதாகிவிடும். எவ்வாறாயினும், தீவிரவாதம் தொடர்பான அமெரிக்காவின் அறிக்கை இலங்கை அரசியலில் பெரும் புயலைக் கிளப்பி விட்டிருப்பது உண்மை.
அதுவும் நாடாளுமன்றத் தேர்தல் வரப்போகின்ற சூழலில் புலிப் பூச்சாண்டி அரசியலுக்கு காத்திருந்த மஹிந்த ராஜபக்ஷ தரப்புக்கு இது எதிர்பாராமல் கிடைத்த 'ஜாக்பொட்'டாகவே கருதவேண்டும்.

அமெரிக்க அறிக்கையை வைத்தே மஹிந்த ராஜபக்ஷ அணி நாடாளுமன்றத் தேர்தல்வரை அரசியல் ஆதாயம் தேடப்போகிறது. மஹிந்த ராஜபக்ஷவை ஜனாதிபதி தேர்தலில் தோற்கடிப்பதில் அமெரிக்கா பெரும்பங்கு வகித்ததாக பரவலான கருத்து உள்ளது. எனவே, மஹிந்த ராஜபக்ஷவின் மீள் அரசியல் வருகையைத் தடுப்பதற்கும் அமெரிக்கா கவனம் செலுத்தும் என்றே எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அமெரிக்கா வெளியிட்ட தீவிரவாதம் குறித்த அறிக்கையே மஹிந்த ராஜபக்ஷவை மீண்டும் உயிர்ப்பிக்கப் போதுமான ஒன்றாக மாறியிருக்கிறது.

சிங்கள மக்கள் மத்தியில் இந்தப் புலிப்பூச்சாண்டிக்கு அதிகம் மதிப்பு உள்ளது. முன்னர், புலிகளைத் தோற்கடித்த பெருமையை வைத்து அரசியல் நடத்திய  முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு இனிமேல் புலிகள் வரப் போகிறார்கள், அதனைத் தடுக்க தம்மை ஆட்சியில் அமர்த்துங்கள் என்று கோரி அரசியல் நடத்தும் வாய்ப்புக் கிட்டியுள்ளது.
விடுதலைப் புலிகள் தான் கொழும்பு அரசியலில் மிகவும் பெறுமதியான அரசியல் மூலதனமாக மாறியிருக்கிறார்கள்.
2009ஆம் ஆண்டு மே மாதம் விடுதலைப் புலிகள் இயக்கம் முள்ளிவாய்க்காலில் தோற்கடிக்கப்பட்டிருந்தாலும், அவர்களை வைத்து அரசியல் நடத்தும் போக்கு மட்டும் மாறவில்லை.

அடுத்த 10, 20 ஆண்டுகளுக்கு பின்னரும் கூட விடுதலைப் புலிகளை வைத்து அரசியல் நடத்தும் போக்கு, மாற்றம் காணும் என்று எதிர்பார்க்க முடியாது. அமெரிக்கா போன்ற நாடுகளால் வெளியிடப்படும் அறிக்கைகளும் இந்த புலிப் பூச்சாண்டி அரசியலுக்கு ஒரு காரணம்.

அமெரிக்க அறிக்கை ஆண்டு தோறும் வழக்கமாக இந்தக் காலத்தில் வெளியிடப்படும் ஒன்றாக இருந்தாலும், தற்போதைய நிலையில் இந்த அறிக்கை புலிப் பூச்சாண்டி அரசியலுக்கு துணைபோவதாக அமைந்திருக்கிறது. இப்போது கொழும்பு அரசியலில் எங்கு பார்த்தாலும், அமெரிக்க அறிக்கையை மேற்கொள்காட்டி, புலிகள் வரப்போகிறார்கள் என்ற செய்தியே பரப்பப்பட்டுக் கொண்டிருக்கிறது.

இந்தக் கட்டத்தில் வடக்கிலிருந்து அரசாங்கம் இராணுவ முகாம்களை அகற்றி அவர்களின் மீள் எழுகைக்கு இடமளிக்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் சுமத்தப்படுகின்றன. இதனை அரசாங்கத்தினால் சமாளிக்க முடியாமல் திணறுவதையும் அவதானிக்க முடிகிறது. எனினும், அமெரிக்காவை பொறுத்தவரையில் இந்த ஆண்டுக்கான அறிக்கையில் புதிய உட்சேர்க்கைக்கு பலவீனமான தகவல்களை முன்வைத்திருக்கிறது.

எதற்காக அமெரிக்கா இவ்வாறு ஒரு அறிக்கையை வெளியிட்டது என்ற கேள்வி அரசியல் வட்டாரங்களில் உள்ளது.
புதிய அரசாங்கத்தின் மீது அதிகம் நம்பிக்கை கொண்ட நாடாக அமெரிக்காவே இருந்து வரும் நிலையில், அமெரிக்காவின் அறிக்கையில் புதிய அரசாங்கத்தை பலவீனப்படுத்தும் வகையில் தகவல்கள் சேர்க்கப்பட்டுள்ளன.

இது இலங்கை அரசியலில் குழப்பங்களை ஏற்படுத்தும் என்பதையும் விரைவில் நடக்கவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதையும் அமெரிக்கா அறிந்தேயிருக்கும். விரைவில் நடக்கவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் இந்த விவகாரம் கூடுதல் தாக்குதல் செலுத்தினால், தற்போது அமெரிக்கா தலையில் வைத்துக்கொண்டாடும் மைத்திரிபால சிறிசேன - ரணில் விக்கிரமசிங்க கூட்டு அரசாங்கம் தோற்கடிக்கப்பட்டு விடும் என்பதையும் அமெரிக்கா அறியும். இருந்தாலும், இந்த அறிக்கையை வெளியிட்டு புயலைக் கிளப்பி விட்டிருக்கிறது அமெரிக்கா.

இது திட்டமிட்டு வெளியிட்ட அறிக்கையல்ல என்றாலும், அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் கவனக்குறைவு என்று இலகுவாக எடுத்துக் கொள்ள முடியவில்லை. நாடாளுமன்றத் தேர்தலில் தற்போதைய அரசாங்கம் தோற்கடிக்கப்படுவதை அமெரிக்கா விரும்பாது என்ற கருத்தே இருந்து வந்த நிலையில், இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ள சில விடயங்கள் அந்த நிலைப்பாட்டை சந்தேகிக்க வைக்கின்றன.

எவ்வாறாயினும், விடுதலைப் புலிகள் தொடர்பாக அமெரிக்கா தனது அறிக்கையில் முன்வைத்திருக்கின்ற தகவல்களின் விளைவுகளை அமெரிக்காவும் அனுபவிக்க நேரிடலாம். ஏனென்றால், இந்த விவகாரம் இப்போதைக்கு ஓயப்போவதில்லை.
ஏற்கெனவே மஹிந்த ராஜபக்ஷ தரப்பு, விடுதலைப் புலிகள் மற்றும் இனவாதம் ஆகியவற்றை மூலதனமாக்கியே அரசியல் நடத்த தொடங்கியிருக்கிறது. இந்தச் சூழலில் அமெரிக்க அறிக்கை மஹிந்த ராஜபக்ஷ தரப்பை இன்னும் உசுப்பேற்றி விட்டிருக்கிறது.

பழம் நழுவிப் பாலில் விழுந்திருக்கின்ற நிலையில், மஹிந்த ராஜபக்ஷ தரப்பு அதனைப் பயன்படுத்திக் கொள்ளாமல் வேடிக்கை பார்க்கும் என்று கருத முடியாது. இது நாடாளுமன்றத் தேர்தல் பிரசாரத்தில் இடியாக இடிக்கப் போகிறது. அதன் விளைவு ஒருவேளை, தற்போதைய அரசாங்கத்தை வீழ்த்தவும் கூடும். அவ்வாறு நிகழ்ந்தால், அதன் தாக்கம் அமெரிக்காவிலும் எதிரொலிக்கும். ஏனென்றால் மஹிந்த ராஜபக்ஷ மீண்டும் அதிகாரத்தைக் கைப்பற்றும் நிலை ஒன்று உருவானால், அந்த அரசாங்கம் மேற்குலகத்தைச் சார்ந்து செயற்படும் ஒன்றாக இருக்காது, சீனாவைச் சார்ந்த ஒன்றாகவே இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .