Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை
Thipaan / 2015 ஜூலை 01 , மு.ப. 09:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் 'அரசியல் மீளெழுச்சி' பொதுத்
தேர்தலினூடு நிகழ்த்தப்பட்டுவிடும் என்று பௌத்த சிங்கள கடும்போக்கு தளமும் சிங்கள மக்களில் குறிப்பிட்டளவானவர்களும் நம்பிக்கை கொண்டிருக்கின்றார்கள்.
அந்த நம்பிக்கையின் அளவை பெருமளவாக அதிகரிப்பதினூடு, பிரதமர் கனவை அடைந்துவிடலாம் என்கிற எண்ணம் மஹிந்த ராஜபக்ஷவுக்கும் அவரது தரப்பினருக்கும் இருக்கின்றது. அதுதான், அவர்களின் அரசியல் நடவடிக்கைகளை விடாப்பிடியாக முன்னெடுக்கவும் வைத்திருக்கின்றது.
மஹிந்த ராஜபக்ஷவின் மேற்படியான அரசியல் நகர்வு, ஜனாதிபதித் தேர்தலில் ஆட்சிமாற்றத்துக்காக உழைத்த சிங்கள புத்திஜீவிகள், ஊடகவியலாளர்கள் மற்றும் செயற்பாட்டாளர்கள் உள்ளிட்ட தரப்பினரை பதற்றமான சூழலுக்குள் தள்ளிவிட்டுள்ளதாக அண்மைய உரையாடலொன்றின் போது சட்டத்துறை நண்பர் ஒருவர் குறிப்பிட்டார்.
அது, எதிர்கால அரசியல் ஸ்திரத்தன்மை தொடர்பிலான ஆதங்கத்தின் போக்கில் வெளிப்படுவது. இப்படியான நிலைப்பாடு சிங்கள மக்களில் ஒரு பகுதியினருக்கும் இருக்கின்றது. ஆனால். சிறுபான்மைச் சமூகங்களுக்கிடையில் அப்படியான ஓர் உணர்வு பெருமளவு காணப்படவில்லை. அல்லது அது தொடர்பில் அவ்வளவு அக்கறையின்றி இருக்கின்றார்கள்.
சிங்கள புத்திஜீவிகள், ஊடகவியலாளர்களிடம், மஹிந்த ராஜபக்ஷவின் மீள் வருகை தொடர்பில் காணப்படும் பதற்றமான சூழல் என்பது நியாயமானது. ஏனெனில், அரசியல் ஸ்திரத்தன்மையற்ற சூழல் எந்தவொரு நல்விளைவையும் ஏற்படுத்தி விடாது. குழம்பிய குட்டையில் மீன்பிடிக்கலாம் என்பது தேர்தல் அரசியலின் போக்கில் வெற்றிகளை தேடித்தரலாம்.
ஆனால், அது ஒருங்கிணைந்த மக்கள் கூட்டமொன்றில் அல்லது நாடொன்றின் நியாயமான வெற்றியையோ, முன்னோக்கிய பயணத்தையோ பெருமளவு சாத்தியமாக்குவதில்லை. மாறாக, தனி ஒரு மனிதனின் அல்லது குழுவின் வெற்றிகளையே உறுதிப்படுத்தி வந்திருக்கின்றது. அப்படியான சூழலைக்குள்ளேயே நாடு தொடர்ந்தும் அகப்பட்டுவிடும் என்கிற எண்ணப்பாடு தர்க்க ரீதியிலும் ஏற்புடையது.
மஹிந்த ராஜபக்ஷ பொதுத் தேர்தலில் போட்டியிட்டாலும், பிரதமராவதற்கான வாய்ப்புக்கள் உள்- வெளி அரசியல் சூழலின் போக்கில் இல்லை என்று கொள்ள முடியும். எனினும், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை பிளவுபடுத்தும் அச்சுறுத்தலை வழங்கி, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் பிரதமர் பதவியைப் பெற்றுக் கொள்ளலாம் என்கிற இறுதிக் கட்ட நகர்வினையும் மஹிந்த ராஜபக்ஷ தரப்பு மேற்கொண்டிருக்கின்றது. அது, சாத்தியப்படவில்லை எனில் மூன்றாவது அணியாக மஹிந்த ராஜபக்ஷ தரப்பு பொதுத் தேர்தலில் போட்டியிடும். அதுதான், கிட்டத்தட்ட இறுதியானதாகவும் கொள்ள முடியும். (இன்று அந்த அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கலாம்.)
மஹிந்த ராஜபக்ஷ தரப்பு மூன்றாவது அணியாக பொதுத் தேர்தலில் களம் காணுதல், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்கு பெரும் இழப்பை வழங்கும். அது, இயல்பாகவே சுதந்திரக் கட்சியின் வாக்குகளை பிளவுபடுத்தும். விகிதாசார தேர்தல் முறையில் இந்த நிலை, மற்றொரு பிரதான தரப்பான ஐக்கிய தேசியக் கட்சியின் வெற்றியை உறுதிப்படுத்துவதற்கான வாய்ப்புக்களை அதிகரிக்கும்.
அது, எதிர்கால ஆட்சியில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஆளுகையை பெருமளவு குறைக்கும் என்று கருதலாம். அதையும் தவிர்த்தாக வேண்டிய தேவை மைத்திரிபால சிறிசேனவுக்கு உண்டு.
அதேநேரம், மஹிந்த ராஜபக்ஷவை பிரதமர் வேட்பாளர் களத்திலிருந்து அகற்றவும் வேண்டும். ஏனெனில், மஹிந்த ராஜபக்ஷவோடு இணங்குதல் என்பது ஆட்சி மாற்றத்துக்காக வாக்களித்தவர்களையும் அதை வெளியிலிருந்து திட்டமிட்டவர்களையும் எதிர்க்கும் நிலையை உருவாக்கும்.
அது, மைத்திரிபால சிறிசேனவின் எதிர்கால ஆட்சிக்கு நெருக்கடிகளை வழங்கும். ஆக, இரு பக்கமும் அடி வாங்கும் மத்தளத்தின் நிலைக்கு மைத்திரிபால சிறிசேன இப்போது வந்திருக்கின்றார்.
இப்போதைய சூழலை மைத்திரிபால சிறிசேன வெற்றிகொள்வதற்கான வாய்ப்புக்கள் பெரிதாக இல்லை. ஆனால், சுதந்திரக் கட்சியை தூய்மைப்படுத்துவதற்கான(!) சந்தர்ப்பமாக கையாள முடியும். அதன் மூலம், ஐந்து வருடங்களுக்குப் பின்னரான அடுத்த தேர்தல்கள் தொடர்பில் அவர் நம்பிக்கையோடு களமாற்றலாம்.
மஹிந்த ராஜபக்ஷவின் பிரதமர் கனவு சாத்தியப்பட்டாலும் சாத்தியப்படாவிட்டாலும் பொதுத் தேர்தலினூடு அவர் நாடாளுமன்றத்துக்கு மீண்டும் நுழைவது என்பது ஒப்பீட்டளவில் அச்சுறுத்தலானது. மஹிந்த ராஜபக்ஷவின் மீள் வருகை என்பது மூன்று தளங்களில் விளைவுகளை ஏற்படுத்தும் என்று கருதலாம்.
1. பௌத்த சிங்கள கடும்போக்குத் தளத்தை தொடர்ந்தும் கொதிநிலையில் வைத்துக் கொள்ளும். 2. நாடாளுமன்ற அரசியலை- அரசாங்கத்தை பெரும் நெருக்கடிக்குள் தள்ளும். 3. தேசிய முரண்பாடுகள் தொடர்பிலான தீர்வுகள் அல்லது இணக்கப்பாடுகளை தாமதப்படுத்துவதற்கான வாய்ப்புக்களை தொடர்ந்தும் ஏற்படுத்தும்.
இலங்கை அரசியல் வரலாற்றில் பெரிய அரசியல் தோல்வியைச் சந்தித்த நபராக மஹிந்த ராஜபக்ஷவைக் கொள்ள முடியும். நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக இருந்த ஒருவர் இதற்கு முன்னர் ஜனாதிபதித் தேர்தலொன்றில் தோற்கடிக்கப்பட்ட வரலாறு இல்லை.
அதுபோல, நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக பதவி வகித்த ஒருவர், அந்த அதிகாரங்களைவிடக் குறைந்த பதவிக்கான ஆசையை வெளியிட்ட சந்தர்ப்பமும் இதுவரை இல்லை. மஹிந்த ராஜபக்ஷ, பல விடயங்களுக்கு முதலாவதான உதாரணமாக மாறுகின்றார். எனினும், அவர் அதை அரசியல் வைரித்தனத்துடன் கையாளுகின்றார் என்பதுதான் இன்னும் கவனிக்கப்பட வேண்டியது.
பொதுத் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷ பௌத்த சிங்கள கடும்போக்குத் தளத்தின் குறியீடாகவே தம்மை முன்னிறுத்துவார். அதனை பிரதிபலிப்பதனூடு அதிகாரம் நோக்கி நகர முடியும் என்று அவர் உறுதியாக நம்புகின்றார். அவரின் அரசியல் வாழ்க்கையின் இறுதித் தருணங்களில் இனவாதத்தையும் அடிப்படைவாதத்தையும் முழுமையாக நம்பினார்.
கடந்த முறை ஜனாதிபதித் தேர்தலில் தோற்கடிக்கப்பட்டாலும் அதுவே வெற்றிக்கான சூத்திரமென்று இன்னும் கருதுகின்றார். ஆக, பௌத்த சிங்கள கடும்போக்குத் தளத்தை தொடர்ந்தும் கொதிநிலையில் வைத்துக் கொள்ளும் வேலைத்திட்டங்களை மஹிந்த ராஜபக்ஷ முன்னெடுப்பார்.
அது, கொஞ்சம் நெகிழ்வுப் போக்கை காட்டும் தரப்பினை பௌத்த சிங்கள தேசியவாதத்திடம் இருந்து விலக்கி வைக்கும் சூழலை உருவாக்கும். ஆக, அது நெகிழ்வுப் போக்குக்கான அரசியல் தரப்பையும் கடும்போக்காளர்களாக மாற்றும். இது, சமூக இணக்கப்பாடு தொடர்பிலான நம்பிக்கையை கேள்விக்குள்ளாக்கும். (இதுதான் நாம் காலம் காலமாக எதிர்கொண்டு வந்த அரசியல்)
இன்னொரு பக்கம், மஹிந்த ராஜபக்ஷவின் நாடாளுமன்ற பிரவேசம் என்பது எதிர்க்கட்சித் தலைவர் என்கிற அடையாளத்தின் போக்கில் நிகழ்த்தப்பட்டாலும், அது நாடாளுமன்றத்துக்குள் பெரும் குழப்பங்களை ஏற்படுத்தும்.
அதுதான், மும்முனைப் போட்டியின் போக்கில் அதிகம் சாத்தியமாகும் என்று கருதலாம். மைத்திரி- ரணில் தலைமையிலான தேசிய அரசாங்கம் தொடர்பிலான அறிவிப்பு ஏற்கெனவே வெளியிடப்பட்டுள்ள நிலையில், அவர்களோடு சிறுபான்மைக் கட்சிகளும் இணைந்து கொண்டு ஆட்சியமைத்துவிடும்.
இந்த நிலையில், மஹிந்த ராஜபக்ஷ, பெரும்பான்மையைப் பெற்று ஆட்சியமைக்கும் சூழல் இல்லை. எதிர்க்கட்சியாக செயற்படுவதற்கான பெரும் வாய்ப்புக்கள் காணப்படுகின்றன. அது, ஜனாதிபதித் தேர்தலுக்குப் பின்னரான குழப்பமான நாடாளுமன்றத்தை ஒத்த தன்மையை மீண்டும் ஏற்படுத்தலாம். அது, அரசியல் ஸ்திரத்தன்மையை கேள்விக்குள்ளாக்கிக் கொண்டேயிருக்கும்.
நாட்டில் குழப்பங்கள், மோதல்கள், குரோதங்களற்ற நிலையில் தேசிய முரண்பாடுகள் தீர்த்துக் கொள்ளப்பட வேண்டிய அவசியம் தொடர்ந்தும் காணப்படுகின்றது. அதற்கான சந்தர்ப்பங்களை உருவாக்குதல் என்பது நெகிழ்வுப்போக்கு தரப்புக்களை மட்டுமே ஒருங்கிணைப்பதால் சாத்தியமாகாது.
ஒரு கட்டத்தில் கடும்போக்காளர்களையும் சரியான புள்ளியில் இணைத்துக் கொள்வதன் மூலமே சாத்தியப்படும். இல்லையென்றால், தேசிய முரண்பாடுகளை தீர்க்கவே முடியாது. ஆக, அந்தக் கட்டத்தை நோக்கி மைத்திரிபால சிறிசேன நகர வேண்டுமானால், குழப்பமற்ற நாடாளுமன்றம் அவசியம். கடும்போக்காளர்கள் இருந்தாலும், அவர்களிடமும் நெகிழ்வுப் போக்கு காணப்பட வேண்டும். ஆனால், மஹிந்த ராஜபக்ஷ தரப்பின் நாடாளுமன்ற மீள் பிரவேசம் அதை நிச்சயமாக இல்லாமற் செய்யும் என்று கொள்ள முடியும்.
அத்தோடு, இந்தப் பொதுத் தேர்தலை வெற்றிகொள்வது மாத்திரம் மஹிந்த ராஜபக்ஷவின் எதிர்பார்ப்பு அல்ல. மாறாக, ராஜபக்ஷ குடும்பத்தின் அரசியல் அதிகாரத்தை தக்க வைப்பதற்கான சூழ்நிலைகளை உருவாக்கிவிட்டுச் செல்வதும் அவரது நோக்கமாக தெரிகிறது.
குறிப்பாக, தன்னுடைய மகன் நாமல் ராஜபக்ஷவின் அரசியல் எதிர்காலம் தொடர்பில் அவர் நிறையவே கவலை கொண்டிருக்கின்றார். ஆக, அதற்கான திட்டமிடல்களையும் அவர் மேற்கொள்வார்.
அதற்கு அவர், பௌத்த சிங்கள கடும்போக்கு தளத்திலிருந்தே அதிகம் செயலாற்ற வேண்டியிருக்கும். ஏனெனில், அவர் தொடர்பில் பெரிய நம்பிக்கையை இனநல்லிணக்கத்துக்கான தரப்புக்கள் கொள்ளாது. ஆக, இனவாதத் தீயை மூட்டி வளர்த்து சிங்கள மக்களை வெற்றிகொள்ள வேண்டும் என்றும் அவர் கருதுகின்றார். அதற்கான காட்சிகளை அரங்கேற்ற முனைவார். ஆக, அது எதிர்கால அரசியலை ஸ்திரத்தன்மையற்றதாக்கும் வாய்ப்புக்களை உருவாக்கும்.
ஆட்சி மாற்றம் தொடர்பிலான நம்பிக்கை என்பது அனைத்து இன மக்களிடம் காணப்பட்டது. குறிப்பிட்டளவான ஜனநாயக இடைவெளியும்(?), சமூக இணக்கப்பாடும் சாத்தியப்படும் வாய்ப்புக்கள் தொடர்பில் நம்பிக்கையும் வெளிப்படுத்தப்பட்டது. அதற்கு அரசியல் ஸ்திரத்தன்மை என்பது அத்தியாவசியம். ஆனால், இந்தப் பொதுத் தேர்தலினூடு அது சாத்தியப்படும் என்று நம்பிக்கைகொள்வதற்கான சந்தர்ப்பங்கள் மிகவும் குறைவாகவே காணப்படுகின்றது. அது, வருத்தமான செய்திதான்!
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
7 hours ago
7 hours ago