2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

அவசரமாக நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதன் பின்னணி

Suganthini Ratnam   / 2015 ஜூலை 02 , மு.ப. 08:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கே.சஞ்சயன்

20ஆவது திருத்தச்சட்டம் நிறைவேற்றப்படுவதற்கு முன்னர் நாடாளுமன்றம் கலைக்கப்படாது என்று கூறிவந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பிடிவாதம், கடந்த வெள்ளியன்று தகர்ந்துபோனது. நாடாளுமன்றத்தை கலைக்கும் வர்த்தமானிப் பிரகடனத்தில் கடந்த 26ஆம் திகதி அவர் ஒப்பமிட்டிருந்தார்.

அதற்கு முதல் நாள், நடந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் கூட, 20ஆவது திருத்தச்சட்டத்தை நிறைவேற்றாமல் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாடாளுமன்றத்தை கலைக்கமாட்டார் என்று திட்டவட்டமாக கூறியிருந்தார் அமைச்சர் ராஜித சேனாரத்ன.

ஏற்கெனவே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் இது பற்றிய வாக்குறுதிகளை பொது மேடைகளில் கொடுத்திருந்தார். ஆனால், கடந்த 26ஆம் திகதி மாலையில் அவரால் அந்த பிடிவாதத்தை தொடரமுடியாது போனது. எப்படியும் நாடாளுமன்றத்தை  கலைத்து தேர்தலை நடத்தியாக வேண்டிய கட்டாயம் அவருக்கு ஏற்பட்டது.

20ஆவது திருத்தச்சட்டத்தை நிறைவேற்ற முடியும் என்ற நம்பிக்கை தகர்ந்துபோனது மட்டும் அதற்கு காரணமல்ல. 20ஆவது திருத்தச்சட்டத்தை நிறைவேற்றும் விடயத்தில் பிரதான கட்சிகளான சிறிலங்கா சுதந்திரக் கட்சிக்கும் ஐக்கிய தேசியக் கட்சிக்கும் இடையில் இணக்கப்பாடு ஏற்படவில்லை என்பது உண்மை.

ஏற்கெனவே இதுபோலவே 19ஆவது திருத்தச்சட்டதை நிறைவேற்றும் விடயத்திலும் இழுபறிகளும் இணக்கப்பாடின்மையும் நீடித்திருந்தன. ஆனாலும், அதையெல்லாம் வெற்றிகரமாக சமாளித்து, மஹிந்த ராஜபக்ஷ தரப்பினரின் சூழ்ச்சிகளை எதிர்கொண்டு, 19ஆவது திருத்தச்சட்டத்தை நிறைவேற்றி காட்டினார் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன. ஆனால், 20ஆவது திருத்தச்சட்டத்தை நிறைவேற்றுவது ஒன்றும் அவருக்கு சுலபமான விடயமாக இருக்கவில்லை. இந்த விடயத்தில் பிரதான கட்சிகளுக்கிடையில் இணக்கப்பாட்டை ஏற்படுத்துவது மட்டுமன்றி, சிறு மற்றும் சிறுபான்மையினக் கட்சிகளை திருப்திப்படுத்துவதும் அவருக்கு முக்கியமான பிரச்சினையாக இருந்தது. இருந்தாலும், இந்தப் பிரச்சினையை தீர்த்துவைத்து, எப்படியும் 20ஆவது திருத்தச்சட்டத்தை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றிவிடலாம் என்று நம்பினார் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன. இந்த நிலையில், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க போன்றவர்களுக்கு எதிராக சமர்ப்பிக்கப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணைகள் அவரது கழுத்தை நெரித்துப் பிடிக்கத் தொடங்கியது.

ஜூலை 6ஆம் திகதி நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படுவது உறுதியானது. ஆனால், அதற்கு முன்னர் 20ஆவது திருத்தச்சட்டத்தை விவாதிக்க முடியாத நிலை ஏற்பட்டது.

20ஆவது திருத்தச்சட்டம் வர்த்தமானியில் வெளியிடப்பட்டாலும், இரண்டு வாரங்கள் கழித்தே நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கமுடியும். அதுவரை நம்பிக்கையில்லா பிரேரணையை ஒத்திவைக்க எதிர்க்கட்சியை இணங்கவைக்கும் முயற்சிகள் தோல்வியில் முடிந்தன. இந்த நிலையில்,  எப்படியும் நாடாளுமன்றம் கலைக்கப்படுவது உறுதியானது. ஆனால், எப்போது என்பதே குழப்பமான விடயமாக இருந்து வந்தது.

நாடாளுமன்றத்தை கலைக்கும் முடிவை எடுப்பதை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முடிந்தவரைக்கும் தாமதித்து பார்த்தார். எனினும், அவரால் ஒரு கட்டத்துக்கு மேல் தாக்குப்பிடிக்க முடியாத நிலை ஏற்பட்டது. அது உள்நாட்டு அழுத்தம் அல்ல. சர்வதேச அழுத்தம். அந்த அழுத்தமே நாடாளுமன்றக் கலைப்பு மற்றும் தேர்தல் திகதியை தீர்மானிப்பதில் தீர்க்கமான பங்கை வகித்தது.

இலங்கையில் அண்மைக்காலமாக சனிக்கிழமைகளில் தேர்தல் நடத்தும் ஒரு பாரம்பரியம் கடைப்பிடிக்கப்பட்டு வந்தது. அதனை மீறி,  திங்கட்கிழமை தேர்தலை நடத்தும் முடிவை எடுத்தமைக்கும் க.பொ.த. உயர்தரப் பரீட்சை காலத்தில் தேர்தலை நடத்த முடிவு எடுத்தமைக்கும் இந்த சர்வதேச அழுத்தமே காரணம். இந்த அழுத்தம் இல்லையென்றால், நிச்சயமாக நாடாளுமன்ற தேர்தல் ஒரு சனிக்கிழமையிலேயே  நடத்தப்பட்டிருக்கும். அதனையே தேர்தல்கள் ஆணையாளர் விரும்பியிருந்தார். அது குறித்து அரசாங்கத்துக்கும் அறிவித்திருந்தார்.

முன்னர், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனக்கு ராசியான நாள் பார்த்து தேர்தல் நடத்தியிருந்தார். ஆனால், ஜனாதிபதி  மைத்திரிபால சிறிசேன அவ்வாறு ராசி பார்த்து தேர்தலை நடத்தும் ஒருவர் அல்ல. இருந்தாலும், அவர் திங்கட்கிழமையை தெரிவுசெய்ய இந்த சர்வதேச அழுத்தமே காரணம்.

நாடாளுமன்ற தேர்தலை ஓகஸ்ட் மாத இறுதியில் நடத்தவே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எண்ணியிருந்தார். ஓகஸ்ட் இறுதி வாரத்தில் அல்லது செப்டெம்பர் முதல் வாரத்தில் தேர்தல் நடத்தினால், அது க.பொ.த. உயர்தரப் பரீட்சையை பாதிக்காது என்றும் கருதப்பட்டது.

நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை ஜூலை 6ஆம் திகதி விவாதிக்கப்படும் என்று முடிவான நிலையில், அதற்கு ஓரிரு நாட்கள் முன்னதாக நாடாளுமன்றம் கலைக்கப்பபடலாம் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டது. எனினும், ஜூன் 26ஆம் திகதி நள்ளிரவே ஜனாதிபதி நாடாளுமன்றத்தை கலைத்துவிட்டார். அவர் திட்டமிட்டதை விட சுமார் 10 நாட்களுக்கு முன்னரே நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமைக்கு சர்வதேச அழுத்தமே காரணம். அதற்கு ஜெனீவாவிலிருந்து கிடைத்த ஒரு தகவலே காரணம்.

போர்க்குற்றச்சாட்டுகள் தொடர்பாக ஐ.நா. நடத்திய விசாரணைகளின் அறிக்கை ஓகஸ்ட் 21ஆம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு அனுப்பிவைக்கப்படும் என்பதே அந்த செய்தி. இந்த அறிக்கை வெளியாக முன்னரே தேர்தல் நடத்தப்படவேண்டும் என்பதில் அரசாங்கம் உறுதியாக இருந்தது. காரணம், இந்த அறிக்கை வெளியானால்,  அது மஹிந்த ராஜபக்ஷ தரப்புக்கு சாதகமாகிவிடும் என்று கருதப்பட்டது.

ஓகஸ்ட் 21ஆம் திகதி ஜனாதிபதிக்கு அனுப்பிவைக்கப்படும் விசாரணை அறிக்கையின் பிரதி எந்த நேரத்திலும் வெளியில் கசிந்துவிடக்கூடும். எனவே, அதனை வைத்து மஹிந்த ராஜபக்ஷ தரப்பு ஆதாயம் அடைவதை தடுக்கவேண்டுமானால், ஓகஸ்ட் 21ஆம் திகதிக்குக்கு முன்னர் நாடாளுமன்ற தேர்தல் நடத்தப்பட்டாக வேண்டும்.

அதேவேளை, நாடாளுமன்ற தேர்தலை நடத்துவதற்கும் சில விதிமுறைகள் உள்ளன. நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு, தேர்தல் அறிவிப்பு வெளியிடப்பட்டு 52 தொடக்கம் 65 நாட்களுக்குள் தேர்தல் நடத்தப்படவேண்டும். ஓகஸ்ட் 17ஆம் திகதியே  தேர்தல் திகதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. அன்று தான், தேர்தல் அறிவிப்பு வெளியிடப்பட்டு 52ஆவது நாளாகும்.

இலங்கையில் இதுவரை நடந்த நாடாளுமன்ற தேர்தல்களிலேயே ஆகக்குறைந்த கால அவகாசத்துக்குள் நடத்தப்படும் தேர்தல் இதுவே. தேர்தல் நடத்தப்பட்டு நான்கு நாட்கள் கழித்து ஐ.நா. அறிக்கை ஜனாதிபதியின் கையில் கிடைக்கப்போகிறது. அதாவது, புதிய அரசாங்கம் பொறுப்பேற்கும் சூழலில், இந்த அறிக்கை கிடைக்கும்.

எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 14ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 30ஆவது கூட்டத்தொடரிலேயே  இந்த ஐ.நா. விசாரணை அறிக்கை அதிகாரபூர்வமாக வெளியிடப்படும். இந்தக் கூட்டத்தொடர் ஆரம்பமாவதற்கு முன்னதாக செப்டெம்பர் மாதம் புதிய அரசாங்கம் பதவியிலிருக்கும் என்று ஐ.நா. பொதுச்செயலர் பான் கீ மூனுக்கும், அமெரிக்க இராஜாங்க செயலர் ஜோன் கெரிக்கும் வாக்குறுதி கொடுத்திருந்தார், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன.

ஐ.நா. விசாரணை அறிக்கை தொடர்பான தெளிவான பதிலை புதிய அரசாங்கம் அளிக்கவேண்டும் என்பதை சர்வதேச சமூகம் எதிர்பார்க்கிறது. அதற்காகவே செப்டெம்;பரில் புதிய அரசாங்கம் பதவியிலிருக்க வேண்டும் என்று ஐ.நா. வும் அமெரிக்காவும் எதிர்பார்ப்பை வெளியிட்டிருந்தன. அந்த எதிர்பார்ப்பை நிறைவேற்றும் வகையிலேயே  நாடாளுமன்றத்தை கலைத்திருக்கிறார் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன.

அதேவேளை, ஜெனீவா கூட்டத்தொடர் செப்டெம்பர் 14ஆம் திகதியே ஆரம்பமாகவுள்ள நிலையில், மைத்திரிபால சிறிசேன நினைத்திருந்தால், கொஞ்சம் தாமதமாகவேனும் நாடாளுமன்றத்தை கலைத்திருக்கலாம். ஆனால், ஓகஸ்ட் 21ஆம் திகதி ஐ.நா. விசாரணை அறிக்கையின் ஒரு முன்னோட்டப் பிரதி கையளிக்கப்படும் என்ற தகவலே அவரை திக்குமுக்காட வைத்துவிட்டது.

திடீரென நாடாளுமன்றத்தை கலைத்து, தேர்தலுக்கு செல்லவேண்டிய நிலையை அவருக்கு ஏற்படுத்தியது. ஓகஸ்ட் 21ஆம் திகதி ஐ.நா. அறிக்கை வெளியாகும்போது, அதனை வெளிவராமல் கட்டுப்படுத்துவது கடினமாகும். ஏற்கெனவே அரசாங்கத்துக்கு அனுப்பிவைக்கப்பட்ட ஐ.நா. வின் சில அறிக்கைகள் முன்கூட்டியே ஊடகங்களில் கசிந்திருந்தன. எனவே, ஓகஸ்ட் 21ஆம் திகதிக்கு முன்னர் நாடாளுமன்ற தேர்தல் என்ற கண்டத்தை கடந்துவிடும் முடிவை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எடுக்க நேரிட்டது. அதன் விளைவே  இந்த நாடாளுமன்ற தேர்தல். இந்த தேர்தல், எத்தகைய ஆச்சரியமான முடிவுகளை தருகிறதோ, இல்லையோ அதற்கு பின்னர் வெளிவரப்போகும் ஐ.நா. அறிக்கை ஆச்சரியமான அதிர்ச்சிகரமான ஒன்றாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. இதனை ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் செயிட் ராட் அல் ஹுசேன் தான், தெரிவித்திருக்கிறார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .