2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

த.தே.ம.மு.வின் எதிர்க்கடை அரசியல்

Thipaan   / 2015 ஜூலை 07 , பி.ப. 09:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜனாதிபதித் தேர்தலைப் போன்று பொதுத் தேர்தலை முன்னிறுத்திய காட்சி மாற்றங்கள் மற்றும் பரபரப்புக்களினால் தென்னிலங்கை பௌத்த சிங்கள அரசியலரங்கு சூழப்பட்டிருக்கின்றது. அந்த பரபரப்புக்களை பெரிதாக உள்வாங்காமல் வடக்கு- கிழக்கு தமிழ்த் தேசிய அரசியலரங்கு சற்று புதிதான நகர்வினைக் காட்டுகின்றது. அல்லது, அப்படியொரு காட்சியினை வடிவமைக்க முயல்கின்றது.  

2009ஆம் ஆண்டு இடம்பெற்ற இறுதி மோதல்களின் பின்னர், ஒப்பீட்டளவில் பாரிய அச்சுறுத்தல்களின்றி(!) தமிழ்த் தேசிய அரசியல் சூழல் எதிர்கொள்ளப் போகும் பொதுத் தேர்தலாக எதிர்வரும் தேர்தலைக் கொள்ள முடியும்.

2010ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தல், பௌத்த சிங்கள தேசியவாதம் வெற்றி மனநிலையோடு, சிறுபான்மைச் சூழலை பெரும் அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் வைத்துக் கொண்டு நடத்திய தேர்தல். அந்தத் தேர்தலை தமிழ் மக்கள் அவ்வளவு தீர்க்கமான முடிவுகளோடு எதிர்கொள்ளவில்லை. அதற்கான மனோ நிலையும் அப்போது இல்லை.

ஆனால், தோல்வி மனநிலையிலிருந்து விடுபட்டு அடுத்த கட்டங்களை நோக்கி நகர்வது தொடர்பிலான நம்பிக்கையை, தமிழ் மக்கள் அடுத்து வந்த தேர்தல்களில் மெல்ல மெல்ல உறுதிப்படுத்தி வந்தனர். கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் ஒருங்கிணைந்த தமிழ் மக்கள், வடக்கு மாகாண சபைத் தேர்தலில் பாரிய வெற்றியை பதிவு செய்து முக்கிய செய்தியொன்றை சர்வதேசத்துக்கும், பௌத்த சிங்கள தேசியவாதத்துக்கும் சொன்னார்கள்.

அடுத்து, நாடே எதிர்நோக்கிய சர்வாதிகாரத்துக்கு எதிரான ஜனாதிபதித் தேர்தலில் ஜனநாயகப் போக்கில் நம்பிக்கை கொண்டு மாற்றத்துக்கான கோசத்தோடு ஒன்றிணைந்து வாக்களித்து பங்காற்றினர். (அந்த மாற்றம் கேள்விக்குறியாகியுள்ளது என்பது உறுத்தும் விடயம். அதுபற்றி பிறிதொரு சமயம் பேசலாம்.) ஆக, அடுத்த கட்டங்கள் நோக்கிய நகர்வின் போக்கில் வரும் பொதுத் தேர்தல் தமிழ்த் தேசிய அரசியலரங்கில் முக்கியமானது, தவிர்க்க முடியாதது.
 
இந்த நிலையில், வடக்கு- கிழக்கு தமிழ்த் தேசிய அரசியலரங்கு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி என்கிற இரண்டு தரப்புக்களுக்கிடையிலான 'மிகமெல்லிய' போட்டித் தன்மையை முன்னிறுத்தி நகர்கின்றது. அந்தப் போட்டித் தன்மை என்பது வீரியம் மிக்கதாக இருந்திருக்க வேண்டியது.

தமிழ் மக்களின் அரசியல், 'தேசியம்' என்கிற ஒருமுகப்படுத்தப்பட்ட புள்ளியில் ஒருங்கிணைய வேண்டிய தேவை இருந்தாலும், அதற்குள் (தேசியத்துக்;குள்) எதிர்த்தரப்பு அரசியலையும் தக்க வைக்க வேண்டிய தேவை இருக்கின்றது.

அதுதான், அதிக நேரங்களில் ஆரோக்கியமான முன்நகர்வுக்கு உதவும். அந்தச் சூழலை ஏற்படுத்த வேண்டிய தரப்பாக தன்னை வெளிப்படுத்திக் கொண்டிருக்க வேண்டிய தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, கடந்த காலங்களில் அந்த நடவடிக்கைகளில் சரியாக ஈடுபட்டிருந்ததா? என்கிற கேள்வி எழுகின்றது.  ஏனெனில், தமிழ் அரசியல் சூழலின் பிரதான தரப்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்னிறுத்தப்படுகின்ற போது, இயல்பாகவே, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி எதிர்த்தரப்பாக கொள்ளப்படக் கூடியது.  

2010ஆம் ஆண்டு இடம்பெற்ற பொதுத் தேர்தலின் போது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து பிரிந்து வந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் தலைவருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் செல்வராஜா கஜேந்திரன், பத்மினி சிதம்பரநாதன் உள்ளிட்டவர்களினால் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி உருவாக்கப்பட்டது.

'ஒரு நாடு இரண்டு தேசங்கள்' என்கிற அடிப்படை கோட்பாட்டை முன்னிறுத்தி தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி உருவாக்கப்பட்டு 5 ஆண்டுகளுக்கும் மேலாகிவிட்டது. ஆனால், தமிழ்த் தேசியத்தை முன்னிறுத்தும் கட்சியாக தோல்வி மனநிலையிலிருந்த தமிழ் மக்களை சரியாக வழிநடத்துதல் மற்றும் சர்வதேசத்தை எதிர்கொள்வது என்கிற விடயங்களில் வெற்றிகரமான தரப்பாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியால் குறிப்பிட்டுச் சொல்லும் அளவுக்கு செயற்பட முடியவில்லை.

ஆனால், புலம்பெயர் தேசங்களிலுள்ள தமிழ் மக்களிடமும் அமைப்புக்களிடமும் குறிப்பிட்டளவு அபிமானத்தை பெற்றுக்கொள்ள முடிந்திருக்கின்றது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்;கும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கும் கொள்கை, கோட்பாடு ரீதியில் பாரிய வேறுபாடுகள் கிடையாது. பல நேரங்களில் கொள்கை வரையறை தொடர்பில் இறுக்கமான சொற்பாவனை முன்னிறுத்துவது மற்றும் உள்ளக அரசியலை எதிர்கொள்வது தொடர்பில்தான் சில அணுகுமுறை வித்தியாசங்கள் உள்ளன.

மற்றப்படி, தமிழ்த் தேசிய அரசியல் சூழலில் தங்களை கடும்போக்காளர்களாக முன்னிறுத்தும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்காரர்களை ஒத்த கடும்போக்காளர்கள்(!) தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள்ளும் உள்ளனர்.  

கடந்த பொதுத் தேர்தலின் போது தமிழ் மக்கள் தங்களை புறக்கணித்துவிட்டார்கள் என்கிற எள்ளல் தனமான வாதமொன்றை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தொடர்ச்சியாக முன்வைத்து வந்திருக்கின்றார்.

யாழ்ப்பாணத்தில் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனுக்கும் அவருக்கும் இடையிலான பகிரங்க விவாதத்தின் போதும், தாங்கள் 6,000 வாக்குகளை மட்டுமே பெற்ற தரப்பு என்று குறிப்பிட்டார்.

ஆனால், பெரும் அச்சுறுத்தலான சூழ்நிலைக்குள் நடத்தப்பட்ட அந்தத் தேர்தலில் 6,000 வாக்குகளைப் பெற்றமை என்பது குறிப்பிடத்தக்க அம்சம். அது, எள்ளல் தொனியில் முன்வைப்பதற்கான விடயமல்ல. மாறாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்கிற விடுதலைப் புலிகளினால் ஒருங்கிணைக்கப்பட்ட தரப்பிடமிருந்து பிரிந்து வந்து, கட்சியாக மக்களிடம் தங்களை முன்னிறுத்தி சில மாதங்களே ஆகியிருந்த நிலையில் கிடைத்த வாக்குகள்.  

2010இல் இடம்பெற்ற பொதுத் தேர்தலில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினருக்கு மக்கள் அளித்த குறிப்பிட்டளவான அங்கிகாரத்தை வைத்துக் கொண்டு தமிழ் மக்களிடம் நம்பிக்கை பெறும் நடவடிக்கைகளை அவர்கள் முன்னெடுத்தார்களா? என்கிற போது அதற்கு சாதகமான பதில்கள் இல்லை.  

ஏனெனில், மக்களை ஒருங்கிணைத்து இலங்கை அரசுக்கு எதிராக நடத்திய  சில எதிர்ப்புப் போராட்டங்களைத் தாண்டி தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர், அதன் பின்னர் வந்த தேர்தல்களை எதிர்கொள்ளாது தவறிழைத்துவிட்டனர்.  

மக்களோடு இணைந்திருத்தல் என்பது தேர்தல் காலங்களிலும் மக்களின் அபிமானங்களைப் பிரதிபலிக்கும் புள்ளியில் இருந்திருக்க வேண்டியது. இல்லையெனில், மக்கள் தவறான முடிவை எடுக்கின்றார்கள் என்றால், அதை தேர்தல்களை சரியான வடிவில் எதிர்கொண்டு விளங்கப்படுத்தியிருக்க வேண்டும்.

மாறாக, தேர்தல் புறக்கணிப்பு என்கிற கோசம், பல நேரங்களில் பௌத்த சிங்கள தரப்புக்கு சாதகமான தன்மையை வழங்கும் உள்ளக சூழ்நிலைகளைப் பிரதிபலிக்கும் தன்மையோடு ஒத்திசைவது போல உணரப்பட்டது. அது எதேற்சையானது என்று வைத்துக் கொண்டாலும், அது, அந்தத் தருணத்தில் தவிர்க்கப்பட்டிருக்க வேண்டியது.  

'ஒரு நாடு இரு தேசங்கள்' என்கிற கோட்பாட்டினை முன்னிறுத்தும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, சிங்கள தேசத்தின் ஜனாதிபதியைத் தேர்ந்தெடுக்கும் ஜனாதிபதித் தேர்தலை தமிழ் மக்கள் புறக்கணிக்க  வேண்டும் என்று முன்வைத்த கோசம் சரியானது அல்ல. அல்லது, அவர்களின் கோட்பாட்டின் அடிப்படையிலும் அதை நிராகரிக்கலாம்.

ஏனெனில், இரண்டு தேசங்கள் என்கிற கோட்பாட்டுக்குள் இருந்தாலும் ஒருநாடு என்கிற நிலையில், அந்த நாட்டின் தலைவரை தேர்ந்தெடுக்கும் பொறுப்பும், உரிமையும் எமக்கும் வழங்கப்பட்டிருக்கின்றது.

அப்படியான நிலையில், அச்சுறுத்தல் குறைந்த எதிரியை தேர்ந்தெடுப்பதற்காக தமிழ் மக்கள் வாக்களிக்க வேண்டும் என்கிற நிலைப்பாட்டை அவர்கள் முன்மொழிந்திருக்க வேண்டும். ஆனால், அப்போதும் மக்களின் விருப்பத்துக்கு மாறாக செயற்பட்டார்கள்.

 வடக்கு மாகாண சபையை தமிழ் மக்கள் தமது அதிகார கோரலுக்கான தீர்வாகக் கொண்டு வாக்களிக்கவில்லை. மாறாக, தமது போராட்டத்தின் அடுத்த கட்டம் நோக்கிய நகர்வுக்கான குறியீட்டு நடவடிக்கையாகவே வெளிப்படுத்தினார்கள். அந்தத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பெரும் வெற்றிபெற வைத்ததற்கும் அதுதான் காரணம். வடக்கு மாகாண சபையை அதிகார பங்கீட்டின் போக்கில் ஏற்றுக்கொள்ளாவிட்டாலும், அந்தத் தேர்தலில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி போட்டியிட்டிருந்தால், தமிழ்த் தேசிய அரசியலரங்கு  ஓரளவுக்கு ஆரோக்கிய நிலையை நோக்கி நகர்ந்திருக்கும்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆட்சியமைத்திருந்தாலும், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி எதிர்க்கட்சியாக இருந்திருக்கலாம். அதற்கான வாய்ப்புக்கள் இருந்தது. அது, ஆரோக்கியமான விவாதங்களை மக்களின் பிரதிநிதிகளாக முன்னெடுக்க உதவியிருக்கும்.  

அத்தோடு, தமிழ்த் தேசியத்தை தூய்மைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளின் போக்கில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி கடந்த தேர்தல்களை எதிர்கொண்டிருக்க வேண்டும். மாறாக, அவற்றை புறக்கணித்தல் என்பது (தாயகத்திலுள்ள) தமிழ் மக்கள் மத்தியில் நம்பிக்கையிழப்பை அவர்கள் மீது விதைத்திருக்கின்றது. ஏனெனில், புலம்பெயர் தமிழ் மக்களிடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைத் தாண்டி பாரிய ஆதரவு அலை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினருக்கு உண்டு.

ஆனால், அந்த அலை, இங்கு பாரிய அதிர்வுகளை ஏற்படுத்த வல்லமை அற்றவை. அதுபோக, அது, தாயகத்திலுள்ள தமிழ் மக்களுக்கும்- புலம்பெயர் தேசங்களிலுள்ள தமிழ் மக்களுக்கும் இடையில் யதார்த்த அரசியலை உள்வாங்குவது தொடர்பிலான ஒப்புநோக்கு பிரச்சினைகளின் போதும்  இடைவெளியின் அளவை அதிகரிப்பதாக இருந்திருக்கின்றது.

மாறாக, புலம்பெயர் தமிழ் மக்களின்- அமைப்புக்களின் ஆதரவுள்ள தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, தாயகத்திலுள்ள தமிழ் மக்களின் எண்ணங்களையும் குறிப்பிட்டளவில் உள்வாங்கி தேர்தல்களினூடும் பிரதிபலித்திருந்தால், இடைவெளியின் அளவை குறைத்துக் கொண்டிருக்க முடியும்.

 எதிர்வரும் பொதுத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைத் தாண்டி பாரிய வெற்றிகளை நிகழ்த்தும் வல்லமை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கு இல்லை. அதிக பட்சம் இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களைப் பெற்றுக்கொள்ள முடியும்.

அதுதான் கள யதார்த்தம். ஆனால், எதிர்கால ஆரோக்கியமான அரசியலுக்கான நகர்வாக இந்தத் தேர்தலைப் பயன்படுத்திக்கொள்ள முடியும். அதுதான், தமிழ்த் தேசிய அரசியலுக்கும் நல்லது. ஏனெனில், கீரைக்கடைக்கும் எதிர்க்கடை வேண்டும். அதுபோல, தமிழ்த் தேசியத்துக்குள்ளும் எதிர்க்கடை அரசியல் அத்தியாவசியமானது. அது, தேர்தல் புறக்கணிப்புக் கோசங்களைத் தாண்டி இயங்க வேண்டும்!

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .