Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை
Thipaan / 2015 ஜூலை 09 , பி.ப. 04:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ப.தெய்வீகன்
தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளிகள் குழு ஒன்றிணைந்த கட்சி ஒன்று ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றது.
இந்த கட்சி எதிர்வரும் தேர்தலில் போட்டியிடப்போவதாகவும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த கட்சியில் யார் அங்கம் வகிக்கிறார்கள்? தேர்தலில் யார் போட்டியிடவுள்ளார்கள்? இந்த கட்சியின் வெற்றிவாய்ப்பு என்ன என்பவற்றுக்கெல்லாம் அப்பால் இந்த கட்சித் தோற்றத்தின் பின்னணியில் தமிழ் தேசிய அரசியல் சமூகம் கருத்திற்கொள்ளவேண்டிய முக்கியத்துவம் பற்றிய ஆய்வாக இந்த பத்தி விரியவுள்ளது.
தமிழ்த் தேசிய அரசியல் வெளியில் இன்றைய காலகட்டம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை முதன்மை அரசியல் சக்தியாக முன்னிறுத்தி, சிங்கள தேசத்துடன் ஈழத்தமிழரின் அரசியல் போராட்டத்தை முன்னெடுத்துவருகிறது என்பதில் யாருக்கும் மாற்று கருத்து இருக்கமுடியாது.
உள்ளூராட்சி சபை மட்டத்திலிருந்து நாடாளுமன்றம் வரை ஏன் ஜனாதிபதி தேர்தலில்கூட தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தீர்மானமே தமிழ் மக்களின் அரசியல் வேட்கையாக பதிவு செய்யப்படுகிறது. இதற்கு சாட்சியமாக கூட்டமைப்புக்கும் மக்களுக்கும் இடையிலான பரஸ்பர அரசியல் உறவுநிலை கடந்து வந்த சகல தேர்தல்களிலும் உறுதிசெய்யப்பட்டிருக்கிறது.
ஆனால், கூட்டமைப்பின் அரசியல் கொள்கைகள் குறித்தும் அது பயணம் செய்யும் பாதை குறித்தும் மாற்றுக் கருத்துக்களை முன்வைத்த ஒரு தரப்பு, கடந்த 2010இல் தனியாக பிரிந்துசென்று தமிழ்த் தேசிய முன்னணியாக பரிணமித்தது.
அதாவது, 2001இல் விடுதலைப் புலிகளின் ஆசீர்வாதத்துடன் நான்கு கட்சிகளின் கூட்டமைப்பாக உருவாக்கப்பட்ட தமிழ்த் தேசிய கூட்டமைப்பு, 2009 போரின் முடிவுக்கு பின்னர் கடைப்பிடித்த மிதவாத அரசியல் போக்கு, சிங்கள தேசத்துடனான அரசியல் போராட்டத்துக்கு சரியான அணுகுமுறையாக அமையாதென்று அறுதியிட்டுக்கூறிய தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, மக்கள் முன் தமது முடிவை அறிவித்துவிட்டு பிரிந்துசென்றது.
தமிழ் அரசியல் பரப்பில் சுமார் எட்டு வருடங்களாக விடுதலைப் புலிகள் ஏற்படுத்திவைத்திருந்த ஒற்றுமை ஒரு வருடத்திலேயே எவ்வாறு வெற்றிடமாகியது என்பதற்கு இந்த பிரிவு உதாரணமாகியது மட்டுமல்லாமல், போருக்கு பின்னான காலப்பகுதியில் தமிழ்த் தேசிய அரசியல் களம் சந்திக்கவேண்டிய புதிய அரசியல் சூத்திரத்தையும் முன்வைத்தது.
ஆனால், விடுதலைப் புலிகளால் ஆரம்பிக்கப்பட்ட தமிழ்த் தேசிய கூட்டமைப்பு மேற்கொள்ளும் முடிவை - அது சரியோ பிழையோ இன்றுவரை தமிழ் மக்கள் தொடர்ச்சியாக ஆதரித்துக்கொண்டே வருகிறார்கள். முன்னர், விடுதலைப் புலிகளினால் வாக்களிக்கும்படி மக்களிடம் கோரப்பட்ட அரசியல்வாதிகள்கூட தமிழ்த் தேசிய கூட்டமைப்பிலிருந்து பிரிந்து சென்றபின்னர், முன்னிருந்த மக்கள் ஆதரவை முற்றாக இழந்தனர். இது வரலாறு.
ஆனால், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பிரிவு என்பது கூட்டமைப்பின் மீதான தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சியின் காரணமாக ஏற்பட்டது என்று கூறமுடியாது. அது கொள்கை ரீதியான பிரிவு என்றே கூறவேண்டும்.
இந்த கொள்கைகள் குறித்த விரிவான ஆராய்ச்சிகளுக்குள் போவதைவிட, அது ஒரு மிதவாத அரசியலுக்கு எதிரான பிரிவாக அமைந்தது என்று கூறுவது பொருத்தமானதாக இருக்கும்.
அந்த பிரிவை சரியென்று வாதிடமுடியாது என்று எவ்வளவுக்கு காரணங்களை கூறமுடியுமோ அவ்வளவுக்கு பிழை என்றும் கூறிவிடமுடியாது. ஏனெனில், கூட்டமைப்பின் கடந்த ஐந்தாண்டு கால அரசியல் நகர்வுகள் தமிழ்த் தேசிய முன்னணியின் பல வாதங்களுக்கு வலுச்சேர்ப்பவையாகவே இருந்து வருகின்றன.
அதாவது, சிங்கள தேசத்தினதும் சர்வதேசத்தினதும் நிகழ்ச்சி நிரல்களுக்குள் அகப்பட்டு அவர்களின் நலன்களுக்கு சாமரம் வீசும் சமரச அரசியலை கூட்டமைப்பு இன்னமும் கடைப்பிடித்துவருகிறது. இதை தட்டிக்கேட்டால், 'படகை கவிழ்க்காதீர்கள். எமது சாணக்கிய சாதனைகள் எல்லாம் நேரம் வரும்போது தெரியவரும். நாங்கள் மக்களுக்கு துரோகம் இழைக்க மாட்டோம்' என்கிறார் கூட்டமைப்பின் பிரமுகர் சுமந்திரன்.
ஆனால், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் வாதமெல்லாம், கூட்டமைப்பின் இந்த தொடர்ச்சியான மிதவாத அரசியல்போக்கு நிரம்பிய அடுத்தவர் நலன்சார் அரசியலின் மூலம் எதையும் நாங்கள் அடைவதாக தெரியவில்லை. இனி அடையவும் போவதில்லை என்பதுதான்.
சுருக்கமாக கூறப்போனால், கூட்டமைப்பு கூறும் அரசியல் தந்திரோபாயம் மிக்க அதன் நகர்வுகள் மக்களுக்கு சுத்தமாக விளங்கவில்லை. சரி, அதே களத்தில் போராடும் கட்சிகளுக்காவது புரிகிறதா என்றால், அவர்களுக்கும் புரியவில்லை.
இந்த இடத்தில்தான், இந்த தொடர்ச்சியான அரசியல் முரண்போக்கின் எதிர்காலம் குறித்து மக்கள் கரிசனை கொள்ளவேண்டிய தேவை எழுகிறது.
ஏனெனில், அரசியல் துணிவுள்ள இளைஞர்களின் உணர்வுகளுக்கும் மித வாத அரசியல் தலைவர்களின் முடிவுகளுக்கும் இடையில் ஏற்பட்ட விரிசல் மற்றும் இரண்டு தரப்புக்களும் பரஸ்பரம் கொண்டிருந்த நம்பிக்கைகள் அவநம்பிக்கைகளாக மாறிய சந்தர்ப்பங்கள் ஆகியவை கடந்த காலங்களில் தமிழ்த் தேசிய அரசியலில் எவ்வளவுதூரம் இரத்தம் படிந்த வரலாறுகளாக எழுதப்பட்டது என்பது அனைவரும் அறிந்ததே.
இந்தியாவின் அரவணைப்பில் ஈழத்தமிழர் தீர்வொன்றை பெற்றுக்கொள்ளவேண்டும் என்று தொடர்ச்சியான வேட்கையுடன் செயற்பட்ட அமிர்தலிங்கம், பின்னர் ஈழத்துக்கு வந்த இந்திய இராணுவம் திருப்பி அனுப்பப்படக்கூடாது என்ற கடும் கொள்கை பிரகடனத்தை வெளியிடும் நிலைக்கு வந்தபோது - மிதவாத தலைவர் ஒருவரே பிடிவாத நிலைக்கு மாறியதால் - அது பின்னர் எவ்வாறான முடிவுகளுக்கு இட்டுச்சென்றது என்பதை இங்கு கூறத்தேவையில்லை.
தற்போதைய அரசியல் களத்தை எடுத்துநோக்கினால், கூட்டமைப்பின் சம்பந்தர் பிடிவாதம் கொள்ளவேண்டியவர்களுடன் மிதவாதப்போக்கையும் மிதவாதப்போக்கை கடைப்பிடிக்கவேண்டியவர்களிடம் பிடிவாதம் பிடிக்கும் அதே முரண்நிலையை காணலாம்.
கடந்த ஐந்து வருடங்களாக தமிழ்த் தேசிய அரசியல் பரப்பில் பரிணமிக்கும் இரண்டு பிரதான அரசியல் கட்சிகளிடையே தொடர்ந்துவந்த முரண்பாடு இம்முறை தேர்தலில் மிகவும் கூர்மையடைந்திருப்பதை பார்க்கமுடிகிறது.
இதில், தமிழ் தேசிய மக்கள் முன்னணியானது மக்கள் பிரச்சினைகளையும் தமது அரசியில்கொள்கைகள் குறித்தும் பேசுவதைவிட கூட்டமைப்பின் மீதான விமர்சனங்களை முன்வைப்பதில் காண்பிக்கும் சிறுபிள்ளைத்தனம் பொதுவெளியில் சகிப்புத்தன்மையை சோதிக்கும் செயற்பாடாக தொடர்கின்றபோதும் - சில தருணங்களில் அந்த எதிர்ப்பு அரசியிலில் இருந்துதான் மக்களுக்கும் நடப்பு விவகாரங்களை கட்டுப்பாட்டு பரிசோதனைமுறையில் தெரிந்துகொள்ளவும் முடிகிறது.
(இந்த இருகட்சிகளின் அரசியல் - கொள்கை முரண்பாடுகள் நீண்ட விவாதங்களுக்குரியவை. ஆனால், அதனை விரிவாக நோக்குவது இந்த பத்தியின் நோக்கமல்ல. ஆனால், மேலோட்டமாகவேனும் அலசிக்கொண்டதன் காரணம், இனி முன்வைக்கப்போகின்ற கருத்தோட்டத்தை தெளிவுபடுத்துவதற்கு ஆகும்)
இவ்வாறான சூழ்நிலையில்தான் முன்னாள் போராளிகளின் கட்சி இன்று உதயமாகியிருக்கிறது.
இந்தக்கட்சியின் கொள்கையோ தேர்தல் விஞ்ஞாபனமோ எதுவும் வெளிவராதநிலையில், சில கருத்துக்களை அக்கட்சிவிடுத்துள்ள அறிக்கையில் காணக்கூடியதாகவிருந்தது.
ஆயுதக்குழுக்கள் அரசியல்பாதையில் காலடி எடுத்துவைப்பது தமிழ் அரசியல் தளத்தை பொறுத்தவரை புதிய விடயமல்ல. ஆனால், முப்பதாண்டு காலமாக தனியரசுக்கான போரில் ஈடுபடுத்திக்கொண்ட ஓர் அமைப்பில் இதயசுத்தியுடன் இணைந்துசெயற்பட்டவர்கள், அரசியல் பாதையில் காலடி எடுத்துவைக்கின்றபோது, மக்களுக்கான அரசியல் தீர்வாக முன்வைக்கவுள்ள விடயங்களை மிதவாத அரசியல் தலைவர்களின் முடிவுகளுடன் சமாந்தரமாக பார்த்துவிடமுடியாது. அதேநேரம் அதற்கு அடுத்தபடியில் உள்ள தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பாதையில் சந்திப்பவர்களாகவும் இவர்களை வகைப்படுத்தமுடியாது. இந்த போராளிகளின் கட்சியை பொறுத்தவரை இரண்டு கட்சிகளுமே மிதவாத கட்சிகளாகவே பார்க்கப்படுகின்ற சாத்தியங்கள் உள்ளன.
தமிழ்த் தேசிய அரசியல் அலைவரிசையில் ஆரோகணிக்கும் இந்த தீவிரத்தன்மை, தென்னிலங்கையில் இரு பிரதான கட்சிகளின் பின்னர் ஜே.வி.பியும் அதன் பின்னர் சிஹல உறுமயவும் அதன் பின்னர் முன்னையதைவிட தீவிர இனவாதம் கொண்ட வேறு கட்சிகளாகவும் தோற்றம் பெற்ற படிநிலையை உணர்த்துவதை காணலாம்.
இந்தநிலையில், புதிதாக பிறந்துள்ளதாக கூறப்படுகின்றன போராளிகளின் கட்சியின் நம்பகத்தன்மை, தொடர்பயணம், வெற்றிவாய்ப்பு, மக்களாதரவு என்பவற்றுக்கெல்லாம் அப்பால், மிதவாத அரசியல் கோட்பாட்டுக்கு எதிரான தீவிர சிந்தனுடையை இளைஞர்களின் அணி களத்தில் இறங்கக்கூடிய சாத்தியம் உண்டு என்ற கருத்துருவாக்கத்தை எதிரொலித்திருக்கிறது.
ஆக, தமிழ் தேசிய கூட்டமைப்பு கூறுகின்ற 'படகுப்பயணம்' இன்னும் எவ்வளவு காலத்துக்கு என்று இனியாவது கூறுமா?
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
7 hours ago
7 hours ago