Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை
Thipaan / 2015 ஜூலை 09 , பி.ப. 04:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
-தெ.ஞாலசீர்த்தி மீநிலங்கோ
உலகத்துக்கு ஜனநாயகத்தை அறிமுகப்படுத்திய கிரேக்க நாட்டு மக்கள், கடந்த ஞாயிற்றுக்கிழமை ஓர் உறுதியான செய்தியை உலகுக்கு சொல்லியிருக்கிறார்கள். ஆனால், அந்தச் செய்தி பலர் கேட்க விரும்பிய செய்தியல்ல. அச்செய்தி வலியது. உலகின் மிகப் பெரிய சுரண்டற்காரர்களுக்கெதிரான கலகக்குரலாக இதைக் கொள்ளமுடியும். இந்நிலை ஏன் ஏற்பட்டது, கிறீஸில் என்ன நடக்கிறது என்பதைப் புரிந்து கொள்ள ஒரு முன்கதைச் சுருக்கம்.
அமெரிக்காவில் 2008இல் லீமன் பிரதர்ஸ் முதலீட்டு வங்கியின் வீழ்ச்சியோடு தொடங்கிய அமெரிக்கப் பொருளாதார நெருக்கடி, மிகக் குறைந்த காலத்தில் உலகப் பொருளாதார நெருக்கடியாக மாற்றமடைந்தது.
முதலாளித்துவமும் பொருளியல் வல்லுனர்களும் இது தற்காலிக நெருக்கடிதான் என்று தொடர்ந்து சத்தியம் செய்து வந்தாலும் இது முடிவற்ற சுழலின் தொடக்கம் என்பதை உலக மக்கள் உணர நீண்டகாலம் எடுக்கவில்லை.
இந்த பொருளாதார நெருக்கடியின் அடுத்த கட்டத்தை நாம் நெருங்கியிருக்கிறோம் என்பதை கிறீஸின் திவாலாகும் தன்மை 2010இல் தெளிவுறுத்தியது. 2002இல் தனது சொந்த நாணயத்தை விட்டுவிட்டு யூரோவைப் பயன்படுத்தத் தொடங்கியதன் விளைவாக கிறீஸ் தனது பொருளாதார அலுவல்களில் தன்னிச்சையாக முடிவெடுக்க இயலாமல் ஐரோப்பிய ஒன்றியத்தில் தங்கியிருக்கவும் ஐரோப்பிய மத்திய வங்கியின் ஆணைகளுக்குச் செவிசாய்க்கவும் தலைப்பட்டது.
உலகப் பொருளாதார நெருக்கடி என்ற புயல் ஐரோப்பியக் கரைகளை அடைந்தபோது ஒரு கூட்டில் வலுக்குறைந்த கண்ணியாக எதுவிருக்கிறதோ அதுவே முதலில் பாதிக்கப்படும். அவ்வகையில் ஐரோப்பிய ஒன்றிய கூட்டிணைவுக்குப் பின் தொடர்ச்சியான தாக்குதலுக்குள்ளாகியிருந்த கிறீஸின் பொருளாதாரமானது மோசமான சரிவைச் சந்தித்தது.
தனது பாரம்பரிய வருவாய் ஈட்டும் துறைகளான விவசாயம் மற்றும் மீன்பிடி மீதான கவனக் குறைவும் ஐரோப்பிய மத்திய வங்கியின் ஆலோசனைப்படி உல்லாசப் பயணத்துறை மீதான புதிய கவனமும் கிறீஸ் பொருளாதாரத்தை பாழாக்கியதில் பங்குவகித்தன. சரிவைச் சந்திக்கும் நேரங்களில்; பிற ஐரோப்பிய ஒன்றிய நாடுகளும் சர்வதேச நிதி நிறுவனமும் 'பிணையெடுத்தல்' என்ற போர்வையில் கடன்களை வழங்கி அதற்கான சிக்கன நடவடிக்கைகளைக் கோரின.
சிக்கன நடவடிக்கைகள் என்பதன் பெயரில் மக்கள் நலத் திட்டங்கள் குறைக்கப்பட்டன. ஓய்வூதியங்கள் குறைக்கப்பட்டன. மருத்துவ மானியங்கள் இல்லாமல் செய்யப்பட்டன. பொருளாதார நெருக்கடி வறுமைக் கோட்டுக்கு கிழே உள்ளவர்களின் தொகையை அதிகரித்தது. நலத்திட்டங்கள் குறைக்கப்பட்டமை இந்நிலைமையை மேலும் மோசமாக்கியது.
ஒருகட்டத்தில் நாட்டின் மொத்த உற்பத்தியைவிட அதிகமான கடனைக் கொண்டிருக்கும் நாடு என்றவகையில் கிறீஸினால் கடனைத் திருப்பிச் செலுத்த முடியவில்லை. ஆனால், கிறீஸ் திவாலானால் அது ஐரோப்பிய ஒன்றியத்தையும் வங்கிகளையும் பாதிக்கும் என்பதால் கிறீஸினால் மீளச் செலுத்த முடியாது என்று தெரிந்தும் தொடர்ந்து கடன் வழங்கப்பட்டது.
இது ஊக வணிகத்தின் கோரப்பிடியில் இருக்கும் ஐரோப்பிய முதலாளித்துவப் பொருளாதாரத்தை மிகமிகத் தற்காலிகமாகக் காப்பதற்கான ஏற்பாடன்றி மக்கள் நல நோக்கிலான நடவடிக்கை அல்ல. இதை தற்போதைய கிறீஸ் நிலைமை தெளிவாக விளக்கியுள்ளது.
இவ்வாறு பிணையெடுப்பை ஐரோப்பிய ஒன்றியம் செய்வதன் நோக்கம் பொருளாதார நெருக்கடி காரணமாக கிறீஸ§க்குக் கடன் வழங்கிய வங்கிகள், நிதி நிறுவனங்கள் பெரும் சரிவை எதிர்நோக்கியிருந்தமையே. அவர்களைக் காப்பாற்றுவது மிகவும் முக்கியமானது.
இந்த இடத்தில் அமெரிக்காவில் வங்கிகள் திவாலாகி மக்கள் தெருவுக்கு வந்தபோது, மக்களுக்கு எந்தவித நிவாரணமும் வழங்காது, சரியும் வங்கிகளைக் காப்பாற்ற அமெரிக்க அரசு இதேபோன்றதொரு பிணையெடுப்பை செய்ததை நினைவுறுத்தல் பொருத்தம்.
ஐரோப்பிய நாடுகளின் பொருளாதாரங்களோ இன்னும் கடுமையான வீழ்ச்சியை சந்தித்துக் கொண்டிருக்கின்றன. மக்களது வாங்கும் சக்திக் குறைவினால் தோன்றிய உற்பத்தித் தேக்க நெருக்கடியைச் சமாளிப்பதற்காக செயற்கையாக வாங்கும் சக்தியை அதிகரிக்கும் விதத்தில் வங்கிகளின் கடன் தருவதற்கான வட்டி வீதத்தைக் குறைத்துப் பணப்புழக்கத்தை அதிகரிக்கும் நடவடிக்கைகளைப் பல ஐரோப்பிய நாடுகளின் அரசுகள் மேற்கொண்டன.
அதன் விளைவாகப் பணவீக்கம் அதிகரித்து அரசுகள் மிகக்கடுமையான பற்றாக்குறை நிதிநிலை அறிக்கைகளை சமர்ப்பிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன. அதாவது முதலாளித்துவச் சந்தை நெருக்கடி, நெருக்கடி நிலையிலும் அதிகபட்ச லாபம் ஈட்ட விரும்பி சூதாட்ட நடவடிக்கைகளில் ஈடுபட்ட நிதி நிறுவனங்களின் மீள முடியாத நெருக்கடியாக மாறி, அதனைச் சமாளிக்க நடவடிக்கை எடுத்த முதலாளித்துவ அரசுகளின் பொருளாதார ரீதியிலான செல்லுபடித் தன்மையையே கேள்விக்குரியதாக்கும் அதிதீவிர நெருக்கடியாகத் தற்போது மாறியுள்ளது. இதன் விளைவே தற்போதைய கிறீஸ் நிலைவரத்துக்கான பின்புலம்.
இச் சிக்கலின் முக்கிய அரங்காடியான ஐரோப்பிய ஒன்றியம் பற்றி இங்கு சொல்வது தகும். ஐரோப்பிய ஒன்றியம் என்பது ஐரோப்பிய அமைப்பு ஒன்றினை ஏற்படுத்தி அதற்குள் உள்ள நாடுகள் அனைத்திலும் சமச்சீரான வளர்ச்சி ஏற்படுவதற்குத் திட்டங்கள் தீட்டி, அதன்மூலம் சமச்சீரான வளர்ச்சியை உறுதி செய்து அதைக் காட்டிலும் வலுவானதாக இருக்கும் அமெரிக்கப் பொருளாதாரத்தை எதிர்கொள்வது என்ற நோக்குக்காக உருவாக்கப்படவில்லை.
அமெரிக்கப் பொருளாதாரத்தை எதிர்கொள்வதற்காக என்ற பெயரில் ஏற்படுத்தப்பட்டாலும் ஒன்றை ஒன்று ஏப்பம்விடுதல் என்ற முதலாளித்துவ போட்டியே முக்கியத்துவம் பெறுகிறது. இதனால் தான் ஐரோப்பிய ஒன்றியத்தின் சிறிய அங்கத்துவ நாடுகளான கிரேக்கம், அயர்லாந்து போன்றவை குறி வைக்கப்படுகின்றன.
இந்த ஐரோப்பிய நிதி நெருக்கடியில் ஐரோப்பிய ஒன்றியத்தின் பெரிய நாடுகளான ஜெர்மனி, பிரான்ஸ் ஆகியவையிடையே இதைத் தீர்ப்பதற்கான ஒருமித்த கருத்துக் கிடையாது. இவை இரண்டும் தங்கள் நாட்டுப் புற பொருளாதாரத்தைக் காப்பாற்றுவதற்காக அடுத்து எந்த ஐரோப்பிய நாட்டைப் பலியிடலாம் என்பதில் போட்டி போடுகின்றன. இன்றைய முதலாளித்துவம் பொய்யான நம்பிக்கைகளை உருவாக்கிப் பராமரிப்பதை அடிப்படையாகக் கொண்டே இயங்கிக் கொண்டிருக்கிறது.
அந்த நம்பிக்கையை எந்த அடிப்படையும் இல்லாது பராமரித்துப் பேணிக் காப்பதற்காக முன்வைத்துக் கொண்டிருக்கும் முழக்கம் முதலீட்டாளர் நம்பிக்கையை பராமரிப்பது மிகவும் அவசியம் என்பதாகும். இந்தப் பொய்யான நம்பிக்கைகள் முடிவுக்கு வருவது உறுதி என்பதை நடக்கும் நிகழ்வுகள் உறுதிப்படுத்துகின்றன.
இச்சூழலில் கிறீஸ், சர்வதேச நிதி நிறுவனத்துக்கு ஜூன் 30ஆம் திகதிக்குள் கடன்களைத் திருப்பிச் செலுத்த வேண்டிய நிலையில் மேலும் கடன்களைப் பெறுவதைத் தவிர வேறு வழியற்ற நிலையில் ஐரோப்பிய ஒன்றியம், ஐரோப்பிய மத்திய வங்கி, சர்வதேச நாணய நிதியம் ஒன்றிணைந்த 'முக்கூட்டு', மோசமான சிக்கன நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்த கிறீஸ் உடன்பட்டால் மேலும் கடன்களை வழங்கத் தயாராகவிருப்பதாக அறிவித்தது. இவ்வறிப்பு கோரி நிற்கிற சிக்கன நடவடிக்கைகள் 'பூவுலகில் நரகமொன்றை உருவாக்குவதற்கான முன்னறிவிப்பு' என எச்சரிக்கப்பட்ட நிலையில், தற்போதைய கிறீஸ் அரசாங்கம் செய்வதறியாது இம்முக்கூட்டின் நிபந்தனைகளை ஏற்பதா இல்லையா என்ற தீர்மானத்தை மக்களே எடுக்குமாறு பொதுஜன வாக்கெடுப்புக்கு அழைப்பு விடுத்தது.
இந்நிபந்தனைகளை கிறீஸ் மக்கள் ஏற்க மறுத்தால் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து கிறீஸ் வெளியேற்றப்பட்டு யூரோ நாணயத்தைப் பயன்படுத்த முடியாமல் போகும் என்றெல்லாம் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளாலும் ஊடகங்களாலும் அச்சுறுத்தப்பட்ட நிலையிலேயே இவ்வாக்கெடுப்பு நடந்தது. இந்த வாக்கெடுப்பில் 60 சதவீதத்துக்கும் மேலான கிறீஸ் மக்கள் இந்நிபந்தனைகளை ஏற்க முடியாதென வாக்களித்திருக்கிறார்கள். இவ்வலுவான செய்தி ஐரோப்பிய ஒன்றியக் கூட்டையே நெருக்கடிக்குள்ளாக்குகிறது.
இவ்வாறு மக்கள் வாக்களித்ததற்குப் பின்னால் வலுவான ஆனால், மறைக்கப்படுகின்ற உண்மைகள் இருக்கின்றன. 2010ஆம் ஆண்டிலிருந்து கிறீஸின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 25 சதவீதம் வீழ்ச்சியடைந்துள்ளது. வேலையற்றோர் தொகை மொத்த வேலைத் திறனில் 26 சதவீதமாக உள்ளது. 56 சதவீத இளைஞர்கள் வேலையில்லாமல் இருக்கிறார்கள். ஓய்வூதியம் பெறுபவர்களில் 45 சதவீதமானவர்கள் வறுமைக்கோட்டுக்குக் கீழே இருக்கிறார்கள். கடந்த ஐந்து ஆண்டுகளாக கிறீஸில் நடைமுறைப்படுத்தப்பட்ட சிக்கன நடவடிக்கைகளின் விளைவுகள் இவை.
இந்த மக்கள் தீர்ப்பு ஐரோப்பிய ஒன்றியத்துக்கு நெருக்கடியைத் தோற்றுவித்துள்ளது. கிறீஸ், ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து விலகும் அல்லது விலக்கப்படும் பட்சத்தில் கிறீஸ், யூரோ நாணயத்திலிருந்து ஒதுங்கி தங்களுக்கான தனியான நாணயத்தை மீள் அறிமுகப்படுத்த வேண்டும்.
இவை குறுகிய காலத்துக்கு சிக்கலை உருவாக்கினாலும் நீண்டகாலத்தில் பொருளாதார ரீதியில் வலுவான ஒரு நாடாக கிறீஸ் மாற வழிவகுக்கும். ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறுவது ஐரோப்பிய மத்திய வங்கியின் கட்டுப்பாடுகளில் இருந்தும் ஐரோப்பிய வங்கியின் நிதி ஒழுங்குபடுத்தல்களிலிருந்தும் விலகி நாட்டுக்கென தனியான நிதிக் கொள்கைகளை உருவாக்க வழி வகுக்கும். இவை நாட்டுக்குப் பொருத்தமான கொள்கை முடிவுகளை யாருடைய கட்டுப்பாடோ அழுத்தமோ இன்றி எடுக்க உதவும்.
ஐரோப்பிய ஒன்றியத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் இரண்டு வீதத்தைக் கூட பங்களிக்காத கிறீஸ் ஒன்றியத்திலிருந்து வெளியேறுவது, கிறீஸ் நாட்டின் வளமான எதிர்காலத்துக்கு நன்மையளிக்கும். அவ்வாறு நிகழ்வது ஐரோப்பிய ஒன்றியத்துக்கு சவாலானது. குறிப்பாக கிறீஸ் போன்று நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் அயர்லாந்து, போத்துக்கல், ஸ்பெயின், இத்தாலி போன்ற வலுவற்ற பொருளாதாரங்களைக் கொண்டுள்ள நாடுகளும் யூரோவில் இருந்து வெளியேறுவதற்கான உந்துதலைக் கொடுக்கும். இது பரந்த ஜரோப்பாவின் பொருளாதார ஒன்றிணைப்பு என்ற திட்டத்தின் அடித்தளமாக இருக்கின்ற 'ஒரே நாணயம்' என்ற பரிசோதனையே தோல்வியடையச் செய்யும்.
இப்போது கிறீஸ் மக்கள் பொருளாதாரச் சுரண்டல்காரர்கள் தங்கள் மீது ஏவுகின்ற தாக்குதல்களுக்கு பதிலளித்திருக்கிறார்கள். எவ்வளவுதான் மிரட்டினாலும் ஐரோப்பிய ஒன்றியம் தனது கண்ணிகளில் ஒன்று கழன்று போவதை அனுமதிக்கப்போவதில்லை. கடன் கொடுத்தவர்கள் கிறீஸ் 'நல்ல முன்மொழிவுகளுடன்' கடனை மீளச் செலுத்தும் என எதிர்பார்ப்பதாக தெரிவிக்கிறார்கள்.
அதேநேரம் கிறீஸின் தற்போதைய அரசாங்கம் ஐரோப்பிய ஒன்றியத்துடன் 'நல்ல' அடிப்படையில் கடன் பெறுவதற்கான பேச்சுவார்த்தைகளை முன்னகர்த்த இவ்வாக்கெடுப்பு முடிவுகள் பயன்தரும் என்று சொல்கிறது. இருவரும் சொல்கிற 'நல்ல' என்பது மக்களுக்கு நல்லது என்ற அர்த்தத்தில் அல்ல.
மாறாக கடன் கொடுத்தவர்களுக்கு நன்மையானது என்ற அடிப்படையிலேயே. மக்கள் எதிர்பார்த்த முற்போக்கான திசையில் இந்த நெருக்கடி முன்னேறுவதற்கான வாய்ப்புக்கள் மிகக் குறைவாகவே தென்படுகின்றன.
ஆனால், வாக்களிப்பின் மூலம் ஒருமித்த குரலாக அவர்கள் வெளிப்படுத்திய செய்தியும் எதிர்ப்புணர்வும் முக்கியமானவை.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
7 hours ago
7 hours ago